மனிதக்கழிவுகளை மனிதனே அகற்றும் அவலம்

author
2
0 minutes, 0 seconds Read
This entry is part 21 of 26 in the series 22 பெப்ருவரி 2015
 manual_sca
வைகை அனிஷ்
சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகள் ஆகியும் மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் அவல நிலை உள்ளது. இந்தியா வல்லரசுக்கு இணையாக நவீன தொழில்நுட்பத்தையும் தொலைதூரத்தில் எதிரிகளை இனம் கண்டு தாக்கும் ஏவுகனைகளை தயாரித்தாலும் மனிதனின் மான்பை இழிவுபடுத்தும் வகையில் கையினால் மலம் அள்ளுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு இருக்கிறது. நகரப்பகுதிகளில் திரையரங்குகள், அடுக்குமாடி வீடுகள், வணிக வளாகங்கள், உணவகங்கள் மற்றும் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிப்பகுதிகளில் இயந்திரங்களைக்கொண்டு கழிவுகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இவை தவிர கொடைக்கனால், ஊட்டி போன்ற சுற்றுலா மையங்களிலும் கோயில் திருவிழாக்கள், அரசியல் கட்சிகளின்  மாநாடுகள், முதல்வர், பிரதமர் கலந்து கொள்ளும் திடல்களில் தற்காலிக கழிப்பறைகள் அமைக்கப்பட்டு அதனையும் அகற்றும் பணியில் மனிதர்களை இயக்குகின்றனர். இதனை மனதில் கொண்டு பாரதியார் ஒரு பாடலை பாடினார்.
பறையருக்கும் இங்கு தீயர்
புலையருக்கும் விடுதலை
பரவரோடு குறவருக்கும்
மறவருக்கும் விடுதலை
திறமை கொண்ட தீமையற்ற
தொழில்புரிந்த யாவரும்
தேர்ந்த கல்வி ஞானம் எய்தி
வாழ்வோம் இந்த நாட்டிலே
என அருந்ததியினருக்கு விடுதலை பற்றி பாடல் ஒன்றை பாடினார். அதன் பின்னர் சினிமாக்களில் தெருத்தெருவாய் கூட்டுவது பொதுநலத்தொண்டு, ஊரார் தெரிந்து கொள்ள படம் பிடித்தால் சுயநலமுண்டு என்று கவிஞர் ஒருவர் பாடினார். இவ்வாறு காலங்களை கடந்தும் கவிஞர்கள் எழுத்துக்கள் உயிரோட்டமாய் திகழ்கின்றது.
தற்பொழுது இணையதளங்களிலும், பத்திரிக்கைகளிலும், தொலைக்காட்சிகளிலும் தூய்மை இந்தியா என்ற திட்டத்தை பாரதப்பிரதமர் மோடி ஒன்பது நபர்களை வைத்து காந்தி பிறந்தநாளன்று பிரபல நடிகர்கள், நடிகைகள், கிரிக்கெட் வீரர்கள், தொழிலதிபர்கள், சாமியார்கள்  என அனைவரையும் வைத்து இத்திட்டத்தை கோவா கடற்கரையில் துவக்கினார். இத்திட்டம் வரவேற்கத்தக்கது என அனைவரும் பாராட்டி வருகிறார்கள். ஆனால் குஜராத்தில் நரேந்திரமோடி முதல்வராக இருந்தபோது இத்திட்டத்தை அறிவித்து முதன்மை மாநிலமாக மாற்றியிருக்கலாம். ஆனால் தூய்மையான மாநிலமாக சிக்கிம் அறிவிக்கப்பட்டது. மேற்கு கடற்கரை பகுதியில் அமைந்துள்ள குஜராத்தில் அலங் துறைமுகத்தில் கப்பல் உடைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் உலகில் உள்ள அனைத்து கழிவுகளும் மேற்குகடற்கரையை பாழ்படுத்தி வருகிறது. இதே போல கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள காயல்பட்டினத்தில் ஆலைக்கழிவுகளினால் மாசுபட்டு அப்பகுதியில் சுமார் 80 சதவீதம் மக்கள் புற்றுநோயால் அவதிப்பட்டு வருகின்றனர். நிலை இவ்வாறிருக்க, மனிதன் மலத்தை மனிதனே அகற்றும் அவலம் இன்னும் நீடித்துக்கொண்டு தான் இருக்கிறது. வளர்ந்த நாடுகளான பிரிட்டன், ஜப்பான், சீனா, சிங்கப்ப+ர், ஐரோப்பா, அமெரிக்கா, ஹாங்காங் போன்ற அனைத்து நாடுகளிலும் மனித கழிவுகளை மனிதனே அகற்றும் நிலை இருந்தது. பிரிட்டனில் நைட் சாயில் என்ற பெயரில் அழைக்கப்பட்ட மலத்தை அங்கும் மனிதர்கள் வெறும் கைகளால்தான் சுத்தம் செய்தார்கள். ஆதிக்க சக்தியினர் கடும் குளிரில் வெளியில் செல்வதை தவிர்க்க வீடுகளில் கழிப்பறை கட்டிக்கொண்டார்கள். கழிவுகளை எடுத்துச்செல்வதற்கு டிரம்களிலும், வாளிகளிலும் எடுத்துச் சென்ற மலத்தில் உரத்தை தயாரித்தார்கள். மேட்டுக்குடியினரின் ;மலத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட உரத்திற்கு அதிக கிராக்கி இருந்தது. தற்பொழுது மேலைநாடுகளில் அனைத்து வீடுகளிலும் கழிப்பறை கட்டப்பட்டு மனிதக்கழிவுகளை மனிதனே அகற்றும் நிலை அடியோடு நிறுத்தப்பட்டது. இந்திய சுதந்திரப்போராட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட முக்கிய வீரர்களுக்கு அதிகபட்ச தண்டனையாக தலையில் மலச்சட்டியை சுமந்து கழிவு அகற்றும் வேலை வழங்கப்பட்டது.
கடந்த காங்கிரஸ் ஆட்சியில் மத்திய ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஸ் ஒரு நிகழ்ச்சியில் நாட்டில் எத்தனை கோயில்கள் இருப்பது என்பது முக்கியல்ல. எத்தனை கழிப்பறைகள் இருக்கிறது என்பதுதான் முக்கியம் என அக்கறையோடு பேசினார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது கர்மயோக் என்ற நூலை எழுதி வெளியிட்டார். அந்நூலில் மலம் அள்ளுவதும் சாக்கடைகளையும் குப்பைகளையும் அகற்றும் பணியில் ஈடுபடுவது புனிதமானது என்றும் அத்தகைய பணியில் ஈடுபடுபவர்கள் யோக நிலையை அடைவார்கள் என்ற குறிப்பிட்டார்.மலம் அள்ளும் தொழிலை நியாயப்படுத்தினார் என்று பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்தது. ரயில்வேத்துறை, உள்ளாட்சி அமைப்புகளில் இன்றளவும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த துப்புரவு பணியை அனைத்து சமூகத்தினரும் செய்ய முன்வருவதில்லை. ஆனால் அருந்ததியின மக்கள் மட்டுமே இந்த தொழிலை காலம் காலமாக செய்து வருகின்றனர். தோட்டி என அழைக்கப்படும் இவர்களை மாற்று வேலைக்கு யாரும் அழைப்பதில்லை. சமூகத்தில் தாழ்த்தப்பட்டவர்களாக இன்றளவும் சமூகம் ஒதுக்கி வைத்துள்ளது.
இதனை 1917 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி சபர்மதி ஆசிரமத்தில் தங்களது கழிப்பறையை தாங்களே சுத்தம் செய்யவேண்டும் என்ற கொள்கையை உருவாக்கினார். அதன் பின்னர் 1948 ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் அரிசன சேவா சங்கம், மனிதக் கழிவுகளை மனிதனே அகற்ற எதிர்ப்பு தெரிவித்தது. அதன் பின்னர் 1957 ஆம் ஆண்டு பார்வே கமிட்டி மனிதக் கழிவுகளை மனிதன் தலையில் சுமக்கச் செய்வதை முற்றிலும் ஒழித்தது. 1968 ஆம் ஆண்டு தொழிலாளர்களுக்கான தேசிய ஆணையம், தரையை சுத்தப்படுத்துவோர் துப்புரவு தொழிலாளர்களின் நிலை பற்றிய அறிக்கையை ஒரு கமிட்டியை நியமித்தது. உலர் கழிவறை கட்டமைப்பு (தடுப்பு) சட்டம் 193-ன் படி சரியான வழியில்லாமல் கழிப்பறைகளைக் கட்டவும் மனிதக் கழிவுகளை அகற்ற ஆட்களை நியமிப்பதும் தடுக்கப்படவேண்ம் என்றும் இச்சட்டத்தை மீறுபவர்களுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும் அல்லது இரண்டாயிரம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும் என தெரிவித்தது. 2003 ஆம் ஆண்டு மத்திய கணக்கு தணிக்கையாளர் அளித்த அறிக்கையின்படி 16 மாநிலங்கள் இந்த சட்டத்தை ஏற்றுக்கொண்டது. 2007 ஆம் ஆண்டிற்குள் மனிதக் கழிவுகளை அகற்றும் பணியை முற்றிலும் ஒழிப்பதை குறிக்கோளாகக் கொண்டு செயல்படவேண்டும் என்று சொல்லப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டது. அதில் இந்திய ரயில்வே ஒருங்கிணைந்த ரெயில்வே நவீனமயமாக்கல் திட்டத்திற்காக 2,40,000 கோடி ரூபாய் ஒதுக்கியது. அதில் மனிதக் கழிவுகளை அகற்றும் பணியை ஒழிப்பதற்கு நிதி ஒதுக்கப்படவில்லை. தேசிய மனித உரிமை ஆணையமும், மனிதக் கழிவுகளை அகற்றும் பணிக்கு ஆட்களை நியமிப்பது மற்றும் உலர் கழிப்பறையை கட்டமைப்பது(தடுப்பு) சட்டம், 1993 ஐ நடைமுறைப்படுத்த அரசை வலியுறுத்தியது. அதன் பின்னர் 2003 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட ஒரு மனு மீது உச்சநீதிமன்றம் 2005, ஜனவரியில் ஒரு தீர்ப்பை வழங்கியது. அதன் படி இந்தியாவில் மனிதக் கழிவுகளை அகற்றும் பணியாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என கண்டறியப்பட்டது. உலர் கழிப்பறை அகற்றும் துப்புரவு பணியாளர்களின் பிரச்சினைகளை தெளிவாக கூறியிருந்தாலும் அச்சட்டம் செயல்படுத்தப்படவில்லை. சட்டம் நிறைவேற்றப்பட்டு 18 ஆண்டுகள் ஆகியும் இன்றும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அந்தத் தொழிலில் ஈடுபடுகின்றனர். அதன் பின்னர் 2011 ஆம் ஆண்டு மன்மோகன் சிங் தலைமையில் உள்ள அரசு ஒரு சட்டம் இயற்றியது. அச்சட்டத்தில் மனிதக் கழிவுகளை அகற்றுதல், சாக்கடை சுத்தம் செய்தல், கழிவு நீர் தொட்டிகளைச் சுத்தம் செய்தல் போன்றவற்றைச் செய்யும் சுகாதாரப் பணியாளர்களை விடுவிக்க முழுமையான சட்டம் தேவை என கருத்து தெரிவிக்கப்பட்டது.
1993 ஆம் ஆண்டு மனிதக் கழிவுகளை அகற்றும் பணியாளர்களை விடுவிக்கவும், மறுவாழ்வு அளிக்கவும் தேசியத் திட்டம் ஒன்று கொண்டுவரப்பட்டு அதனை சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் செயல்படுத்தவேண்டும் என்று சுட்டிக்காட்டப்பட்டது.  1993 சட்டம் உலர் கழிப்பறைகள் மற்றும் தண்ணீர் இல்லாத கழிப்பறைகள் பயன்பாட்டைத் தடை செய்தது. இத்தகைய கழிப்பறைகள் ஏறத்தாழ 12,91,000 இந்தியா முழுவதும் உள்ளன. இவற்றில் மனிதர்கள் மட்டும் அல்லாமல் விலங்குகளும் சுத்தம் செய்யப்படுகின்றன. மேலும் 1993 ஆம் ஆண்டு அறிக்கையின் படி 1.16 லட்சம் மனிதக் கழிவுகளை அகற்றும் பணியாளர்களே இருப்பதாக கூறப்படுகிறது. 2007 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்த, மனிதக் கழிவுகளை அகற்றுவோருக்கான மறுவாழ்வு திட்டத்திற்கு 1,18,474 நபர்கள் அல்லது அவர்களைச் சார்ந்தோர் கண்டறியப்பட்டுள்ளனர். 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி நாட்டில் 26 லட்சம் குடியிருப்புகளுக்கு சுகாதாரமற்ற கழிப்பறையே இருக்கிறது. அதனை கையினால் துப்புரவு பணியாளர்கள் சுத்தப்படுத்துகின்றனர். இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 13 லட்சம் மக்கள் மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
இவ்வாறு இயந்திரங்களை கொண்டு மனிதக்கழிவுகளை துப்புரவு செய்தாலும் பாழடைந்த கிணறுகள், கழிப்பறைகளில் இருந்து வெளியேறும் நச்சினால் விஷவாயு உற்பத்தி செய்யப்பட்டு விஷவாயு தாக்கி அரசுக்கு தெரிந்தவரை இறந்தவர்களின் எண்ணிக்கை கடந்த பத்தாணடுகளில்  ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இவ்வாறு இறந்தவர்களின் வாரிசுகளுக்கு அரசுவேலை 350 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் நாராயணன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். விஷவாயு தாக்கி இறந்த துப்புரவு பணியாளர்கள் குறித்து திட்டவட்டமான புள்ளி விவரம் இல்லை. பணியின்போது இறக்கும் பணியாளரின் வாரிசுதாரர் வேலை பெறுவது தென் மாநிலங்களில் அதிக அளவில் உள்ளன. இதிலிருந்து துப்புரவு பணியாளர்கள் இறப்பது உறுதிப்படுத்தப்படுகிறது. துப்புரவு பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய சிறப்பு சலுகைகள் அனைத்தும், அரசானைகளில் மட்டுமே உள்ளது. நடைமுறைக்கு வருவதில்லை என்று குற்றம் சாட்டினார். இவை தவிர துப்புரவு பணியாளர்கள் நியமனத்திலும் முறைகேடுகள் நடைபெறுகிறது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிப்பகுதிகளில் துப்புரவு பணியாளர்கள் பணிக்கான அரசு வேலைக்கு பல துப்புரவு பணியாளர்கள் ரூஸ்டர் என்ற முறையில் வேலையில் அமர்த்தப்படுவர். அதற்கு முன்னுரிமையாக தாழ்த்தப்பட்ட சமூகத்தைச்சேர்ந்தோரும், அதற்கு பிறகு தாழ்த்தப்பட்ட சமூகத்தில் உள்ள ஊனமுற்றோர், அடுத்தபடியாக மற்ற சமூகத்தில் இருந்து பணிக்கு நியமனம் செய்வார்கள். இதுதான் நடைமுறை. தற்பொழுது துப்புரவு பணியாளர்களுக்கு மற்ற சமூகத்தை சேர்ந்தவர்கள் இந்தப்பணியில் சேர்ந்து வேலைக்கு அமருகிறார்கள். ஆனால் அவர்கள் ஆதிக்க சமூகத்தைச்சேர்ந்தவர்கள். ஆனால் இவர்கள் துப்புரவு பணிகளை மேற்கொள்வதில்லை. உள்ளாட்சி அமைப்புகளில் குழாய்வரி, குழாய் இணைப்பு துண்டிப்பது, அலுவலக வேலைகள் மட்டுமே பார்ப்பார்கள். ஆனால் பணியில்சேரும்போது துப்புரவு பணியாளர்கள் என்று சேருவார்கள். ஆனால் ஒரு நாள் கூட கழிப்பறையை துடைக்கும் துடைப்பதைக்கூட கையில் தொடுவது கிடையாது.
தற்பொழுது பாதாள சாக்கடை அடைப்பை அகற்ற தூர்வாரும் ஜெட் ரோடிங் இயந்திரம் உள்ளது. இதில் பணிபுரிவோர் பாதுகாப்பு உடைகள், கருவிகள், ஆக்ஸிஜன் சிலிண்டரோடு கூடிய முகக் கவசம், கம்ப+ட், ரிப்லெக்சன் ஜாக்கெட் வைத்திருக்கவேண்டும். பிளாஸ்டிக் கழிவுகளை எக்காரணத்தைக் கொண்டும், கழிவு நீர் குழாய்கள் மூலம் அப்புறப்படுத்துவதை தவிர்க்கவேண்டும். உரிய வழிமுறைகளின் படி சுத்தம் செய்யும் போது எடுக்கப்படும் நீரினை அருகிலுள்ள சுத்தகரிப்பு நிலையில்தான் சேர்க்கவேண்டும் என்ற விதி உள்ளது. இந்த விதிமுறையை யாரும் கடைப்பிடிப்பதில்லை.
இவ்வாறு மனிதக்கழிவுகளை மனிதனே அகற்றும் தொழிலாளர்களுக்கு ஆஸ்துமா, தோல்வியாதி, நுரையீரல் பாதிப்பு, இதயக்கோளாறு, மது அருந்தும் பழக்கம் என பல உள்ளது. இன்றும் மனிதக்கழிவுகளை மனிதன் அகற்றும் பணியில் ஈடுபடுபவர்கள் பணிமுடிந்த பின்பு வீட்டினுள் உள்ளே நுழைய அனுமதிப்பதில்லை. வீட்டினுள் ச+டான தண்ணீரில் தங்கள் துணிகளை போட்டுவிட்டு குளித்த பின்னரே வீட்டிற்குள் அனுமதிக்கப்படுவார்கள். ஆனாலும் தாங்கள் பசியை உடனடியாக போக்கிடமுடியாது. பசிவந்தாலும் அந்த துர்நாற்றம் அவர்களுக்கு அடித்துக்கொண்டிருப்பதால் அவர்கள் உணவு உண்ணாமல் பசியினால் தூங்கும் நிலை இன்றும் பல தொழிலாளிலாளர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
மனிதக் கழிவுகளை, மனிதர்களே அகற்றும் அவலம் இன்னும் ரயில்வேத்துறை, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. இத்தொழில் தற்பொழுது நவீன மயமாக்கினாலும் எந்தப் பாதுகாப்பு சாதனமும் இன்றித்தான் வேலையை செய்கின்றனர். இதுபற்றிய விழிப்புணர்வும், போர்கால அடிப்படையில் மக்களிடையே கொண்டு செல்லவேண்டும். தூய்மை இந்தியா  என்று விளம்பரத்திற்காக செலவிடப்படும் தொகையினை துப்புரவுத்தொழிலாளர்களுக்கு மேலை நாடுகளில் நவீன இயந்திரங்களை வாங்கிக்கொடுத்து அவர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கலாம். எந்த சுபநிகழ்ச்சிகளையும் காணாமல் அருவருப்பை மட்டுமே நிகழ்வாக கொண்டு அனுபவித்து வரும் அருந்ததியின மக்களுக்கு விடுதலை வேண்டும். அந்த விடுதலை அருந்ததியின மக்கள் மாற்றுத்தொழிலில் ஈடுபட்டால் தான் மாற்றமுடியும்.
வைகை அனிஷ்
3.பள்ளிவாசல் தெரு
தேவதானப்பட்டி-625 602
Series Navigationவிதைபோடும் மரங்கள்மண்ணில் புதைந்து கிடக்கும் வரலாற்று ஆவணங்கள்
author

Similar Posts

2 Comments

  1. Avatar
    ஷாலி says:

    //தூய்மை இந்தியா என்ற திட்டத்தை பாரதப்பிரதமர் மோடி ஒன்பது நபர்களை வைத்து காந்தி பிறந்தநாளன்று பிரபல நடிகர்கள், நடிகைகள், கிரிக்கெட் வீரர்கள், தொழிலதிபர்கள், சாமியார்கள் என அனைவரையும் வைத்து இத்திட்டத்தை கோவா கடற்கரையில் துவக்கினார்.//…

    “ நாட்டுக்கு நல்ல தொரே வந்தாலும் தோட்டிக்கு சொமே எறங்காது.” என்னும் பழமொழிதான் நினைவுக்கு வருகிறது.சுதந்திரம் பெற்று அறுபது ஆண்டுகள் கடந்தும் அருந்ததிய மானிடர்கள் மல விடுதலை பெறவில்லை.வல்லரசு இந்தியாவுக்காக உருவாக்கப்படும் “அக்னி” ஏவுகணை எதற்காக? மல நாற்றமெடுக்கும் சமூக அவலத்தை மண் மூடி மறைக்கவா? அக்கினிக்குஞ்சு களால் இந்த அசிங்கத்தை எரிக்க முடியுமா? “சூத்திலே கெட்டத் துணியில்லாதவனுக்கு கூத்தியா ரெண்டு பேறாம்.”எனும் சொலவடைதான் சொல்லத்தோன்றுகிறது.

    இந்தியாவில் ஓடும் ரயில்களில் கழிக்கும் மலக்கழிவு தண்டவாள பாதையெங்கும் பயணப்பட்டு நாடே பொதுக்கழிப்பறையாக மாற்றப்பட்டு விட்டது.ரயில் பாதைகளா? அல்லது வியாதிகளா? நாடெங்கும் நோய் பரப்பும் நரம்பு மண்டலமாகி பின்னிப்பிணைந்து உள்ளன. ஆளுவோருக்கும் வெட்கமில்லை,அப்பாவி பொது மக்களுக்கும் அக்கறையில்லை.
    “தூ(ய்)மை இந்தியா!” என்ற கோஷம் நல்லாத்தான் இருக்கு!….”வாய்மையே வெல்லும்” என்பதை மாற்றி “தூய்மையே வெல்லும்” என்பதை மக்கள் மனங்களில் திணிக்க வேண்டும்.

  2. Avatar
    BS says:

    கட்டுரை இறுதியாக, அருந்ததியினருக்கு விடுதலை வேண்டும். அவ்விடுதலை அவர்கள் மாற்றுத்தொழிலில் ஈடுபட்டால்தான் முடியும் என்கிறது.

    விடுதலை எதிலிருந்து அல்லது எவரிடமிருந்து?

    இத்தொழிலிலிருந்தா? இப்போது அவர்கள் இத்தொழிலைத்தான் செய்யவேண்டுமென்று கட்டாயப்படுத்தப்பட்டனரா? இல்லை அரசே சொன்னதா? கிடையாது.

    அவர்கள் விரும்பினால் இத்தொழிலை விட்டுவிடலாமே? ஓர் ஊரில் உள்ள அருந்ததியினரெல்லாம் சேர்ந்து இத்தொழில் நாங்கள் செய்யமாட்டோமென்றால், அவ்வூரினர் அவர்களைக் கட்டாயப்படுத்த முடியுமா இக்காலத்தில்? முடியாது.

    ஆக, விடுதலை என்ற பேச்சு பொருளற்றது. அவர்கள் வேண்டாமென்று விட்டால், தன்னாலேயே அரசும் ஊரும் வேறுவழிகளைப்பார்த்துத்தானே தீரவேண்டும்? அப்போது நவீனமயமக்காலைத்தவிர வேறுவழி?

    அருந்ததியினரே காரணம். அப்படி இத்தொழிலை விட்டுவிட அவர்கள் மறுக்கக்காரணம். அல்லது விரும்பாக்காரணம் – அதை ஆராய்ந்திருந்தால் கட்டுரை வெறும் கற்பனைக்கிடங்காக இல்லாமல், கசப்பான உண்மைகளில் களனாக ஆகியிருக்கும்.

    மாற்றுத்தொழில் என்ன அவர்களுக்கு? கூலித்தொழில் கிடைப்பதென்ன இலகுவா? அங்கு நிலவும் போட்டி தெரியுமா? கூலித்தொழிலை இன்று எல்லாருமே செய்கிறார்கள். அப்படியிருக்க மாற்றுத்தொழில் என்று எது வரும்?

    தீதும் நன்றும் பிறர் தர வாரா!

Leave a Reply to BS Cancel reply

Your email address will not be published. Required fields are marked *