மருத்துவக் கட்டுரை துரித உணவும் ஒவ்வாமையும்

This entry is part 9 of 23 in the series 16 ஜூன் 2013

 

டாக்டர் ஜி.ஜான்சன்.

இன்று துரித உணவு ( fast food ) உண்ணுவது பரவலாக உலகெங்கும் வழக்கில் உள்ளது. இதனால் ஒவ்வாமை உண்டாகலாம் என்பது ஆய்வுகள் கூறுகின்றன.

இந்த பழக்கம் சிறு பிள்ளைகளிடையே அதிகமாகக் காணப்படுகின்றது.

பல வேளைகளில் சிறு பிள்ளைகளின் தோலில் சிவந்த நிறத்தில் பொறி பொறியாக தோன்றி அரிப்பை உண்டுபண்ணும். அல்லது அடிக்கடி சளி பிடிக்கும். கண்கள்கூட சிவந்து வீங்கி வலிக்கும். மருத்துவர் இதை ஒவ்வாமை ( allergy ) என்று சொல்லி மருந்து தருவதுண்டு.சிறு பிள்ளைகளுக்கு ஆஸ்த்மா வியாதியும் அதிக அளவில் பெருகி வருகிறது. இதற்கு பரம்பரை, மரபணு, சுற்றுச் சூழல் தூய்மையின்மை  என்று பல காரணங்கள் கூறினாலும் உண்ணும் உணவும் முக்கிய பங்கு வகிக்கின்றது.

           சிறு பிள்ளைகளுக்கு பல காரணங்களால் ஒவ்வாமை உண்டாகலாம்.

வயிற்றுப் புழுக்கள் இருப்பது முக்கிய காரணமாகலாம் .இதனால்தான் 6 மாதத்திற்கு ஒரு முறை பூச்சி மருந்து தரப்படுகின்றது.

வயிற்றில் புழுக்கள் எப்படி உருவாகின்றன என்பது பற்றி தெரிந்து வைத்திருப்பது நல்லது. பெரும்பாலானவை உணவு நீர் வழிதான் பரவுகின்றன .உணவைக் கையாளும் உணவக சிப்பந்தி அல்லது வீட்டு வேலைக்காரி கழிவறைக்குச் சென்றபின் கையை சரிவர சோப்பு போட்டு கழுவாமல் திரும்பி உணவு வகைகளைக் கையாளும்போது அதன் வழியாக புழுக்களின் முட்டைகள் உண்ணும் குழந்தையின் வயிற்றினுள் செல்கிறது. அங்கு அவை பெருகி குடல் புழுக்களை உருவாக்குகின்றன.

இரத்தத்தைக் குடித்து இரத்த சோகையை உண்டுபண்ணும் கொக்கிப் புழுக்கள் ( hook worms ) நேரடியாக கால்களின் தோல் வழியாகப் புகுந்து இரத்த ஓட்டம் மூலமாக குடலுக்குள் சென்று தஞ்சம் புகுகின்றன. இதனால்தான் வெளியில் செல்லும் போது கட்டாயமாக காலணிகள் அணிந்து செல்ல வேண்டும். கிராமப் புறங்களில் அதிகமாக இரத்தச் சோகை உண்டாவது இதனால்தான்.

இவை அனைத்தும் சுகாதாரமற்ற காரணங்களால் ஏற்படுபவை. இதனால் வயிற்றில் உள்ள புழுக்களில் தோலுக்கு ஒவ்வாமை உண்டாகி குழந்தையில் தோல் சிவந்து அரிப்பு உண்டாகலாம்.

அனால் இப்போது இந்த நவநாகரிக காலத்தில் சுகாதாரம் பேணி வாழும் நிலையிலும் குழந்தைகளுக்கு ஒவ்வாமை எவ்வாறு, எதனால் ஏற்படுகிறது என்பதயும் ஆராய்ந்து வருகின்றனர்.

ஒவ்வாமையின் ஒரு பிரிவாகிய ஆஸ்துமா வியாதி பெருகி வருவதற்கு, சுற்றுச் சூழல் மாசு முக்கிய காரணம் எனலாம். குறிப்பாக நகர்ப்புறங்களில் பெருகிவரும் தொழிற்சாலைகளும் வாகனங்களும் அளவுக்கு அதிகமான புகையையும் இரசாயனத்தையும் வெளியேற்றி சுற்றுச் சூழலுக்கு சீர்கேடு விளைவிப்பதோடு குழந்தைகளின் உடல் நலத்தையும் கெடுக்கின்றன. நகர்ப்புறங்களில் குழந்தைகள் அதிக அளவில் ஆஸ்த்மா போன்ற நுரையீரல் வியாதிகளால் பாதிக்கப் படுவது இதனால்தான். இதே ஒவ்வாமையால் தோல் வியாதிகளும்கூட உண்டாகின்றன.

இதுவரை சுகாதாரமற்ற பழக்க வழக்கத்தினாலும், சுற்றுச் சூழல் தூய்மையின்மையினாலும் குழந்தைகளின் தோல்கள் பதிக்கப் படுவதைக் கண்டோம்.

இவை தவிர இன்னொரு அதிர்ச்சியூட்டும் காரணமும் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது துரித உணவு ( fast food ).இது நாகரீகத்தின் உச்சம் எனலாம். இந்த அவசர உலகில் உண்பதற்கும்கூட அவசர உணவு எளிதில் விற்பனையாகிறது.

அடிக்கடி இந்த துரித உணவை உட்கொள்ளும் குழந்தைகளுக்கும் பிள்ளைகளுக்கும் ஆஸ்த்மா , ஒவ்வாமை , தோல் அரிப்பு ( eczema ) போன்றவை உண்டாகிறது என்று சர்வதேச ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.இந்த கண்டுபிடிப்பின் மூலம் இதுதான் காரணம் எனில், உலகளாவிய நிலையில் துரித உணவு உண்ணும் நிலை பெருகி வருவதால் ,இது பொது நல ஆரோக்கியத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது..( The findings could have major public health significance owing to the rising consumption of fast foods globally , if they turn out to be causal .)

இதில் பங்குபெற்ற ஆய்வாளர்கள் சிங்கப்பூர், நியூ ஜீலாந்து , இங்கிலாந்து, ஸ்பெயின் , ஆஸ்திரேலியா , ஜேர்மனி நாட்டைச் சேர்ந்தவர்கள்.

இந்த ஆய்வின் பெயர், ” பிள்ளைகளுக்கான ஆஸ்த்மா , ஒவ்வாமை பற்றிய சர்வதேச ஆய்வு ” என்பதாகும்.( International Study of Asthma and Allergies in Childhood )

இதில் 13 முதல் 14 வயதுள்ள 319,000 பிள்ளைகளும் , 6 முதல் 7 வயதுள்ள 181,000 பிள்ளைகளும் கலந்துகொண்டனர்.

இவர்களிடம் உணவு பழக்கவழக்கம் பற்றியும், ஒவ்வாமை தொடர்புடைய வியாதிகளான ஆஸ்த்மா, , தோலில் சொறி ,சளி, கண்வலி போன்றவை பற்றியும் கேள்விகள் அடங்கிய ஆய்வுத்தாள் தரப்பட்டது. குழந்தைகளுக்கு பெற்றோர் உதவினர்.குறிப்பாக ஒரு வாரத்தில் தின்ற உணவுவைகள், எத்தனை முறை பழங்கள் காய்கறிகள் உண்டனர், எப்போதெல்லாம் ஹேம்பெர்கர் ( hamburgers ) உட்கொண்டனர் என்று கேட்கப்பட்டது. இவ்வாறு ஆய்வு ஒரு வருடம் நடத்தப்பட்டது.

39 சதவிகித பெரிய பிள்ளைகளுக்கும், 27 சதவிகித சிறு பிள்ளைகளுக்கும் ஆஸ்த்மா அதிகம் காணப்பட்டது. இவர்கள் வாரத்தில் மூன்று முறையாவது ஹேம்பர்கர் , இதர துரித உணவு உட்கொள்பவர்கள் என்பது தெரிய வந்தது.இவர்களுக்கு தோல் அரிப்பும்,சளி, கண்வலியும் அதிகம் காணப்பட்டது.

இதற்கு மாறாக, வாரத்தில் மூன்று தடவை பழவகைகளை உட்கொண்ட பிள்ளைகளுக்கு ஆஸ்த்மா, அரிப்பு, சளி , கண்வலி போன்ற ஒவ்வாமை தொடர்புடையவை 11 முதல் 14 சதவிகிதம் குறைவாகக் காணப்பட்டது.

இதன்மூலமாக பழவகைகள் நிறைந்த உணவுவகைகள் ஒவ்வாமைக்கு எதிரான பாதுகாப்பைத் தருவது தெரிய வந்துள்ளது. ( ( Conversely , diets containing fruits , seemed to be protective against allegic disease ,according to the study .)

துரித உணவுகளில் நிறைசெறிவடைந்த கொழுப்புகள் ( saturated fatty acids ) அதிகம் உள்ளதால், அவை உடலின் எதிர்ப்புச் சக்தியை ( immunty ) பாதிக்கின்றன.

ஆனால் பழவகைகளில் ஊயிர் வளியேற்ற எதிர்ப்பிகள் ( antioxidants ) அதிகம் உள்ளதால் அவை உடலின் எதிர்ப்புச் சக்தியைக் கூட்டுகின்றன.

குழந்தைகளையும் பிள்ளைகளையும் ஆஸ்த்மா, தோலில் சொறி சிரங்குகள் இல்லாமலும், அடிகடி சளி, கண்வலி போன்ற ஒவ்வாமை வியாதிகள் இல்லாமலும் பதுகாகவேண்டியது பெற்றோரின் தலையாயக் கடமையாகும். இதில் முக்கியமானது துரித உணவு வகைகளைக் குறைத்துக் கொண்டு , காய்கறி, பழவகைகளை அதிகம் உட்கொள்ள ஊக்குவிப்பதாகும்.

( முடிந்தது )

Series Navigationமனதை வருடும் பெருமாள் முருகனின் “எருமைச் சீமாட்டி” (ஆனந்தவிகடன் சிறுகதை)ஒரு நாள், இன்னொரு நாள்
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *