மருத்துவக் கட்டுரை பித்தப்பைக் கற்கள்

This entry is part 8 of 19 in the series 13 ஏப்ரல் 2014

பித்தப்பைக் கல் பரவலாக 30 வயதுக்கு மேல் ஏற்படக்கூடியது. பெண்களுக்கு ஆண்களைவிட மூன்று மடங்கு அதிகமாகக் காணக்கூடியது. நாற்பது வயதுக்கு மேல், உடல் பருமன் அதிகமான, மணமாகி குழந்தைகள் பல பெற்ற தாய்மார்களுக்கு பித்தப்பைக் கற்கள் அதிகமாகக் காணப் படுகின்றது.

           பித்தப்பைக் கற்கள் இரண்டு வகையானவை.
           1. கொலஸ்ட்டரால் கற்கள் ( Cholesterol Gall Stones ) – 80 சதவிகிதத்தினருக்கு இத்தகைய கற்களே உருவாகின்றன. நாம் உண்ணும் உணவிலிருந்து கொலஸ்ட்டரால் இரத்தத்தில் கலப்பதோடு, கல்லீரலும் கொலஸ்ட்டராலை உற்பத்தி செய்கிறது. பித்தப்பையில் தேங்கி நிற்கும் பித்தத்திலிருந்துதான் கற்கள் உருவாகின்றன.
           2. பித்தக் கலவைக் கற்கள் ( Bile Pigment Stones ) – இவை கேல்சியம் அதிகமாகவும், கொலஸ்ட்டரால் குறைவாகவும் உள்ள கற்கள். இவை கருப்பு அல்லது சாம்பல் நிறமுடையவை.
                                                    அறிகுறிகள்
           பித்தப்பைக் கற்கள் பலருக்கு எவ்வித அறிகுறியும் இன்றி ஒருவரின் வாழ்நாள் முழுதும் கூட இருக்கலாம். ஒரு சிலருக்கு வயிற்றை எக்ஸ்ரே அல்லது அல்லது ஸ்கேன் செய்யும்போது தெரியவரும். 10 முதல் 15 வருடத்தில் 20 சதவிகிதத்தினருக்குதான் கல் இருப்பதால் அறிகுறிகள் தோன்றலாம். 10 சதவிகிதத்தினருக்கு அதனால் கடுமையான பின் விளைவுகள் உண்டாகலாம். அறிகுறிகள் வருமாறு:
           * வயிற்று வலி – இதுவே முக்கிய அறிகுறி. இந்த வலி தொடர்ந்து இருக்கலாம். இதைத்தான் பெரும்பாலோர் கேஸ்ட்ரிக் வலி என்று சொல்வதுண்டு. இந்த வலியை உணவுடன் தொடர்பு படுத்திக் கூறுவர். கொழுப்பு அதிகம் உள்ள உணவை உட்கொண்ட பின்பு வலி வருவதாகக் கூறுவர். வலி வயிற்றின் நடுப் பக்கத்திலோ அல்லது வலது பக்கத்திலோ வருவதாகக் கூறுவர் மாலையில் வலிக்கத் தொடங்கி இரவு முழுதும் தொடர்ந்து வலித்து விடியற்காலையில் குறையலாம்.
           * வலது பக்கத் தோள் பட்டையில் வலி பரவும். வலது பக்க முதுகிலும் வலி உண்டாகலாம்.
           * குமட் டல்
           * வாந்தி.
           * காய்ச்சல் ( பித்தப்பை அழற்சி உண்டான பின்பு )
                                          பரிசோதனைகள்
           * இரத்தப் பரிசோதனை Serum Bilirubin , Alkaline Phosphatase, Amino Transferace ஆகியவற்றின் அளவு உயர்ந்து காணப்படும்,
            * அல்ட்ராசௌண்ட் பரிசோதனை – இதுவே மிகவும் பயன்மிக்க பரிசோதனை. பித்தப்பையின் வீக்கம், அதனுள் உள்ள கற்கள், அவற்றால் அடைப்பு உள்ளதா என்பதையும் எளிதில் தெரிந்து கொள்ளலாம்.
                                          சிகிச்சை முறைகள்
           * அறுவைச் சிகிச்சை.- அறிகுறிகள் உள்ள எல்லாருக்கும் அறுவைச் சிகிச்சை மூலம் பித்தப்பை கற்களுடன் அகற்றப்படுகின்றது. வலி இல்லாதவர்கள் இதைச் செய்து கொள்ள வேண்டியதில்லை. தற்போது லேப்பரோஸ்கோப் பயன் படுத்தி பித்தப்பையும் கற்களும் அகற்றப்படுகின்றன. இதைச் செய்துகொள்ள அரசு அல்லது தனியார் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்
           * கற்களை கரைக்கும் மருந்துகள் ​- இந்த மருந்துகளைப் பயன் படுத்தினால் கற்கள் கரைய பல மாதங்கள் ஆகும். கற்கள் மீண்டும் தோன்றலாம். இத்தகைய பின்னடைவுகளால் இந்த முறை பரவலாகப் பயன்படுத்தப் படவில்லை.
              * அதிர்ச்சி அலை சிகிச்சை ( Shock Wave Lithotripsy ) அல்ட்ராசவுண்ட் கதிர் அலைகள் மூலமாக வெளியிலிருந்து கற்களை உடைத்து விடும் முறை இது. இந்த முறையானது நல்ல பலன் தந்தாலும் இதை அனைவருக்கும் பயன் படுத்த முடியாது. கல்லின் அளவு 10 செண்டி மீட்டர் அளவுக்குப் பெரிதாக இருக்க வேண்டும். அதோடு கல்லீரல் நல்ல நிலையில் இருக்க வேண்டும். இதனால் இது குறிப்பிட்ட ஒரு சிலருக்கே பயன் படுத்தப் படுகின்றது.
( முடிந்தது )
Series Navigationநீங்காத நினைவுகள் – 42
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *