மறைந்துபோயுள்ள பல விடயங்களை படம்பிடித்துக் காட்டும் ‘கடவுளின் நாற்காலி’ நாவல் – நூல் ஆய்வு

author
0 minutes, 0 seconds Read
This entry is part 13 of 14 in the series 28 நவம்பர் 2021

 

த. நரேஸ் நியூட்டன்

அறிமுகம்

அண்மையில் எனது நண்பர் ஒருவர் மூலமாக ஒரு புத்தகம் கிடைத்தது. அனேகமாக இந்த காலம் முழுக்க முழுக்க  அனேகமானவர்கள் இணையத் தளத்திலேயே முகம்புதைத்து காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு நானும் விதிவிலக்கல்ல எனது நேரத்திலும் குறிப்பிட்ட பகுதி இணையத்திற்குள் தான் முடங்கிப்போய்விடுகிறது. இதற்கு இந்த கொரோனா நோய்த்தொற்று இன்னமும் உரமூட்டிவிட்டிருக்கிறது என்று தான் கூறவேண்டும். இப்படியான சந்தர்ப்பத்தில்தான் அந்த நண்பர் எனக்கு இந்த நூலை அளித்திருந்தார். இணையத்தோடு வாசிப்பு பழக்கம் ஒன்றிப்போய்விட்டதால் புத்தகத்தை பெறும்போது எனது நூலகத்திற்கு மற்றொரு நூல்கிடைக்கிறது என்ற மகிழ்ச்சி ஒருபுறமிருந்தாலும் அதனை படித்து முடிக்க எவ்வளவு நாளாகும் என்ற யோசனை மற்றொருபுறம் என்னை குளப்பியது. காரணம் அது ஒரு நாவல் அதேவேளை 198 பக்கங்களையுடைய பெரிய புத்தகம். தற்போது எல்லாமே கைக்கடக்கமாக பழகிப்போய்விட்டதால் அதனுடைய பக்க எண்ணிக்கை சற்று சஞ்சலத்தை உண்டுபண்ணியது. மேலும் ஒரு விடயம் யாதெனில் அந்த நாவலை எழுதியவர் ஒரு புதிய எழுத்தாளர் அதே வேளை இந்த நாவல் அவரது முதலாவது நாவல் என்ற விடயம் மேலும் அதனை படிப்பதில் தயக்கத்தை உண்டுபண்ணியது. அந்த நூலை படித்து முடித்ததும் உடனடியாகவே இந்த கட்டுரையை எழுததொடங்கிவிட்டேன். அந்த நாவலை படிக்கும்போது என்னுள் ஏற்பட்ட உளக்கிளர்ச்சியே என்னை இந்த ஆய்வை எழுதத் தூண்டிற்று.

நூல் ஆசிரியர்

‘கடவுளின் நாற்காலி’ என்ற இந்த நாவலின் படைப்பாளர் அதியமான் கார்த்திக் அவர்கள். நான் பல கதாசிரியர்களின் படைப்புக்களை படித்திருக்கிறேன் அவர்களுக்குள் இவரது பெயரை நான் இதுவரை கேள்விப்பட்டதில்லை. இவர் ஏற்கனவே மிகப்பிரபலமாக இருக்கும் எழுத்தாளர் சமூகத்துள் அண்மையில் நுளைந்த ஒரு புதிய படைப்பாளியாகவே என்னால் பார்க்கமுடிகிறது. இவரது தந்தை பெயர் ரத்தினம். கார்த்திக் தமிழ்நாடு வேளாண்மைப்பல்கலைக்களகத்தில் வனவியல் பட்டம் பெற்றவர். விவசாயத்தில் அதிக நாட்டமுள்ளவர் என்பது இவரைப்பற்றிய தேடலின் மூலம் என்னால் அறியமுடிந்தவிடயம். இவருடய சொந்த இடம் தர்மபுரி மாவட்டத்தின் கடத்தூர் என்ற ஊர். இவரது பணியின் காரணமாக இந்தியாவிலும் ஆபிரிக்க நாடுகளிலும் மாறி மாறி வசித்து வருகிறார். இவர் ஆபிரிக்காவின் 25ற்கும் மேற்பட்ட நாடுகளில் தொடர்ச்சியாக பயணம்செய்து வருபவர். அதனாலோ என்னவோ தனது பயணங்களின் போது இவர் பெற்ற அனுபவங்களையெல்லாம் ஒவ்வொரு பகுதியாக உருவாக்கி தனது முதலாவது படைப்பாக ‘நாடோடியின் கடிதங்கள்’ என்ற நூலை எழுதி வெளியிட்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து இவரது இரண்டாவது படைப்பாகவும் அதேவேளை முதலாவது நாவலாகவும் ‘கடவுளின் நாற்காலி’ என்ற இந்த நாவலை எழுதி வெளியிட்டிருக்கின்றார். ‘கடவுளின் நாற்காலி’ எனும் இந்த நாவல் மிக அண்மையில் 2021 புரட்டாதி மாதத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. இவற்றைவிட மேலதிகமாக இவரைப்பற்றி அஙிந்துகொள்வதற்காக நான் மேற்கொண்ட முயற்சிகள் ஏதும் பலனளிக்கவில்லை.

கதைத் தலைப்பு

இந்தக் கதையினுடைய தலைப்பாக கதாசிரியர் அதியமான கார்த்திக் ‘கடவுளின் நாற்காலி’ என்ற தலைப்பை தெரிந்தெடுத்திருப்பது தலைப்பை பார்க்கின்றபோது பல கேள்விகளை ஏற்படுத்துவதாக இருக்கும். கதையை நிறைவு வரை படிக்கின்றபோதுதான் எவ்வளவு பொருத்தமாக கதைத்தலைப்பை தேர்ந்தெடுத்திருக்கின்றார் என்பது புரியும். கதைத்தலைப்பு மிகச்சரியானதே என்பதை கதையில் மிகத் தெளிவாக நிரூபிக்கவும் அவர் தவறவில்லை என்று ஆணித்தரமாகக் கூறலாம். கடவுளின் நாற்காலி என்றால் நம்மில் பலருக்கு பல்வேறு வகையான ஊகங்கள் பிறக்கும் அவற்றையெல்லாம் தாண்டி இந்தக்கதையில் எப்படி இந்த கடவுளின் நாற்காலி உருவாகிறது என்பதை பல்வேறு சம்பவங்களை சாதுரியமாக கதைக்குள் கொண்டுவந்து தத்ரூபமாக காண்பித்து தெளிவுபடுத்தியிருக்கிறார். சொல்லவந்த கதையும் கதைத்தலைப்பும் சிறப்பாகவே பொருத்தப் பட்டிருக்கின்றது என்று சொன்னால் அது மிகையாகாது.

‘கடவுளின் நாற்காலி’ கதைச் சுருக்கம்

கதையிpன் கதாநாயகன் கேசவன் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் காலம் தொட்டு பறவைகள் மீது அதிக நாட்டமுடையவன். இந்த ஆர்வம் இவன் பறவைகள் பற்றிய அறிவு பூர்வமான பலவிளக்கங்களையுடையவனாக உருவாக காரணமாயிற்று. ஒவ்வொரு வகையான பறவையினதும் பெயர் முதற்கொண்டு அதன் இனம், வடிவம், நிறம், ஆண்பெண் வேறுபாடு, அவற்றின் செயற்பாடுகள், குரல் ஒலி வேறபாடுகள் மற்றும் அவற்றின் உணர்வுகள் என்று சகலவற்றையும் அக்கு வேறு ஆணிவேறு என்று சொல்வார்களே அதேபோல் அறிந்து வைத்திருந்தான்.

ஒரு தடவை தனது நண்பர்களுடன் தனது ஊராகிய பரதேசிப்பட்டியில் உள்ள நரிக்குட்டைக்கு செல்கிறான். இது அவனுடைய பிரதேசத்தில் இருக்கக்கூடிய ஒரு சமுத்திர அளவிலான நீர்த்தேக்கம், இந்த நரிக்குட்டையை சூழ புதர்களும் பற்றைக்காடுகளுமே மண்டிக்கிடக்கும் அழகான இயற்கை வனப்பு போன்று காட்சிதரும் இடமே இந்த இடம். இங்கும் பல்வேறு வகைவகையான பறவைகள் நிறைந்தே காணப்படும். காரணம் அவற்றுக்கு தேவையான உணவு வகைகளும் பாதுகாப்பும் இங்கு போதுமாக இருப்பதால் பல்வேறு வகையான பறவைகள் இந்த பிரதேசத்தை தமக்கான வாழவிடமாக தேர்ந்தெடுத்துள்ளன. கேசவனும் நண்பர்களும் நரிக்குட்டைக்கு வந்தபோது அங்கு ஒரு பறவையின் குஞ்சுகள் அந்த நரிக்குட்டைக்குள் விழவும் தாய்ப்பறவை குஞ்சுகளை ஒவ்வொன்றாக பாதுகாப்பாக வெளியே தூக்கிவந்து கரையில் சேர்க்கிறது. அதேவேளை நீரிலே மிதந்து கொண்டிருந்த இந்த பறவையின் கூட்டை நீந்திச்சென்று பக்குவமாக எடுத்துவந்த அந்தக்கூடு ஏற்கனவே இருந்த மரத்தில் இருந்த அதே இடத்தை சரியாக அனுமானித்து அதை அங்கே வைக்கிறான். மறுநாள் மீண்டும் அந்தப்பறவைகளுக்கு என்னவாயிற்று என்பதை அறியும் ஆவலில் மீண்டும் அந்த இடத்திற்கு வருகிறான் அங்கே அந்த கூட்டில் அந்த குஞ்சுகள் பக்குவாமாக இருப்பதைக்கண்டு மிகுந்த மகிழ்சியோடு செல்கிறான். அன்று முதல் தினமும் பாடசாலை செல்வதற்கு முன் அந்த பறவைகளை பார்க்க நரிக்குண்டுக்கு சென்றுவிடுவான்.

அவன் நரிகுட்டைக்கு சென்றுவருவதை வழக்காமாககொண்டிருந்ததால் அங்கு அவன் விரும்பும் பல்வேறு வகையான பறவைகளை காண்பதற்கும் அவை பற்றி அறிவதற்கும் அவற்றை ரசிப்பதற்கும் சிறந்த வாய்ப்புக்கிடைத்தது. ஒரு நாள் இவ்வாறு சென்றபோது பல்லாயிரக்கணக்கில் ஒரு புதியவகையான பறவைகூட்டம் அந்தப்பிரதேசத்தை சுற்றி வட்டமிட்டுக்கொண்டிருந்தது. இவனுக்கு அவற்றை பார்த்ததும் அவை இதுவரை தான் கண்டிராத அதேவேளை கேள்விப்பட்டுமிராத ஒரு பறவையினம் என்பதை உணர்ந்தான். உடனே அவை பற்றி அறியும் ஆவல் மேலீட்டால் அங்கிருந்த வயது முதிர்ந்த பெரியவரிடம் அவைபற்றிய விபரத்தை கேட்கிறான். அவருக்கும் அவை பற்றி தெரிந்திருக்கவில்லை. பின்னர் அப்பிரதேசத்தில் கடமை நிமித்தமாக வந்திருந்த வன இலாகாவைச்சேர்ந்த அதிகாரி ஒருவர் இப்பறவைகள் பற்றி விளக்கமளிப்பதை கேட்கிறான். அப்போது தான் இவை ஆமூர் பல்கன் என்று அழைக்கப்படும் சிறியவகை வல்லூறு பறவை இனம் என்பதையும் இவை வடதுருவத்திலிருந்து தென்துருவம் வரை வருடம்தோறும் பயணிக்கும் ஆமூர் ஆற்றுப் படுக்கைகளைப் பிறப்பிடமாகக்கொண்ட பறவைகள் என்பதையும் இவை தற்போது வங்கக் கடலில் புயல் மையம்கொண்டுள்ளதால் திசைமாறி இந்தப்பிரதேசத்திற்குள் புகுந்துள்ளன என்பதையும் அறிந்துகொள்கிறான்.

இவனுக்கு அன்று முதலே இந்தப் பறவைகள் பற்றி மேலும் அறியவேண்டும் என்ற ஆர்வம் மிக ஆழமாக அவனது மனதில் பதிந்துவிடுகிறது. அது அவன் வயதுடன் சேர்ந்தே அவனை பின்தொடர்ந்து வந்துகொண்டே இருந்தது. சிறுவனாக இருந்தபோது அவற்றை பின்தொடர முடியாது தவித்த உணர்வு இப்போ அவன் பெரியவனாகிவிட்டபோது புதிய திட்டத்தை வகுக்க காரணமாகிறது. திடீரென முடிவெடுத்து அந்த பறவைகள் செல்வதாக அவன் அறிந்து வைத்திருந்த நாகாலாந்து நோக்கி தனது பயணத்தை உந்துருளியில் ஆரம்பிpக்கிறான்.

நாகாலாந்தை பல சிரமங்களைக் கடந்து அடைந்த கேசவன் சந்தித்த அனுபவங்கள், அங்கு அவன் முகம்கொடுத்த பிரச்சனைகள்,   அங்கே வாழ்ந்த மக்களால் வாழ்வாதாரத்திற்காக அந்தப் பறவைகளை கொல்லப்பட்டதைக்கண்டு அவனிடம் ஏற்பட்ட கொந்தளிப்பு, அதற்காக அந்தப்பிரதேசத்து விவசாயிகள் தெரிவித்த காரணம் போன்ற பல விடயங்களை தெரிந்து கொண்ட கேசவன் தான் அறிந்தவற்றை வைத்துக்கொண்டு பின்புலக் காரணங்களை தேடத்தொடங்குகிறான். அப்போது அவனுக்கு கிடைத்த பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்களும் இவற்றின் பின்புலத்தில் இருந்து மறைமுகமாக செயற்பட்ட தொண்டு நிறுவனம் பற்றிய விபரங்களும் மேலும் மேலும் இவனை அதிர்ச்சிக்குள்ளாக்க அவன் இவற்றை எதிர்கொண்டு தீர்வுகளை தேட முயற்சிசெய்கிறான். இதற்காக அந்த பறவைகளின் பூர்வீக இருப்பிடம் தேடி செல்ல வேண்டிய தேவையும் ஏற்படுகிறது.

நாகாலாந்தில் இந்த பறவைகள் அவனால் காப்பாற்றப்பட்டனவா? அந்த பிரதேசத்து விவசாயிகளின் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டனவா? அவன் அந்த பறவைகளின் பூர்வீக இருப்பிடத்தை கண்டறிந்தானா? அதற்கான முயற்சியில் அவன் முகம்கொடுத்த பிரச்சனைகளுக்கு தீர்வுகண்டானா? பின்புலத்தில் இருந்து செயற்பட்ட தொண்டு நிறுவனத்தையும் அதன் வலையமைப்பையும் கண்டுபிடித்தானா? ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் அவனுக்கு காத்திருந்த வெவ்வேறு வகையான அதிர்ச்சித் தகவல்கள் யாவை? போன்றவற்றையெல்லாம் கச்சிதமாக காண்பிப்பதே இந்த கதை. கதையை தொடர்ந்து வாசிக்கும் போதுதான் இவற்றையெல்லாம் தெரிந்துகொள்ள முடியும். இங்கு வாசகர்களின் வாசிப்பு ஆர்வத்தை கட்டுப்படுத்தி விடக்கூடாது என்பதற்காக இவற்றையெல்லாம் கேள்விகளாக தொகுத்து இந்த கதையின் சுருக்கத்தை மட்டுப் படுத்தியிருக்கிறேன்.  மொத்தமாக 198 பக்கங்களையுடைய மிக நீளமான நாவலின் கதையை எந்த அளவுக்கு சுருக்க முடியுமோ அந்தளவுக்கு சுருக்கியிருக்கிறேன். இவ்வளவு சுருக்கமாக தந்தமைக்கு காரணம் இக்கதையை ஒவ்வொருவரும் தாமாக முழுமையாக வாசிக்க வேண்டும் அத்தோடு அதை வாசிக்கும்போது கிடைக்கும் சுவாரஸ்யம் கெட்டுவிடக்கூடாதென்பதுமே.

கதை நகர்வும் கதைப்போக்கும்

எழுத்தாளர் அதியமான் கார்த்திக் கதையை தொடங்கி அதனை நகர்த்திச் செல்கின்றபோக்கும் கதையை நிறைவுக்கு கொண்டுவந்துள்ள முறையும் முதன் முதலாக ஒரு நாவலை எழுதும் ஒரு எழுத்தாளரால் இவ்வளவு சிறப்பாக கையாளமுடியுமா என்கின்ற ஆச்சரியத்தையும் ஐயப்பாட்டையும் ஏற்படுத்துகிறது. இவர் ஏற்கனவே பல கதைகளை எழுதிய சிறந்த ஒரு அனுபவசாலியை போலவே அவரது முதலாவது கதையை எழுத கையாண்டுள்ள முறைகள் மூலம் தென்படுகிறார். அதுமட்டுமன்றி நீண்டகாலமாக கதைகளை எழுதிவருகின்ற பிரபல எழுத்தாளர்களோடு ஒப்பிடுகையில் அவர்களுக்கெல்லாம் எந்த வகையிலும் இவர் சளைத்தவரல்ல என்ற வகையில் கதையின் போக்கை ஒழுங்குபடுத்தியிருக்கின்றார். அத்தியாயங்களை இலக்கமிட்டோ உப தலைப்பிட்டோ பிரித்துக் காட்டவில்லையாயினும் 23 பகுதியாக வேறுபடுத்தி காட்டியிருக்கிறார். முதலாவது பகுதியை கேசவன் தனது உந்துருளியில் ஆமூர் பால்கன் பறவைகளை தேடி நாகலாந்தின் பங்கிடி என்கின்ற கிராமத்தை நோக்கி பயணத்தை தொடங்குவதில் ஆரம்பித்திருக்கிறார்.

கடவுளின் நாற்காலி என்ற இந்தக் கதையை நோக்கும்போது கதையில் கூறப்பட்டுள்ள சகலவிடயங்களும் நேரடியாக ரசித்து அனுபவித்து அந்த அனுபவங்களின் வெளிப்பாடாக எழுதப்பட்டது போன்று தொடக்கம் முதல் முடிவுவரை நகர்ந்திருக்கின்றது. ஆயினும் கதையில் கூறப்பட்டுள்ள குறிப்பிடக்கூடிய சில விடயங்களும் சம்பவங்களும் அனுபவத்தோடு ஒன்றித்துப்போகக்கூடிய கற்பனைகளை சாதுரியமாக உண்மை ததும்பும் வகையில் உள்நுளைத்து எழுதப்பட்டிருப்பதாகவே தெரிகிறது. அவற்றை கற்பனைகளாக வாசிப்பவர்களால் சிந்திக்கமுடியாதவாறு நிஜத்தின் பிரதிபிம்பங்களாகத் தெரியும்படி உருவகிக்கப்பட்டுள்ளமை எழுத்தாளரின் கற்பனைத்திறனையும் எழுத்தாற்றலையும் சிறப்பாக வெளிக்கொணர்கிறது.

ஒவ்வொரு அத்தியாயத்திலும் வாசகர்களால் எதிர்பார்க்க முடியாதவகையிலான பல திருப்பங்களையும் ஆச்சரியத்தையும் உள்ளே புகுத்தி கதையின் ஆழத்தை மெருகூட்டிக்கொண்டு சென்றிருக்கிறார். இவர் சொல்ல வருகின்ற பல விடயங்கள் மனதில் நொடிக்கு நொடி ஆர்வத்தை தூண்டிவிடுவதாகவே இருக்கின்றது. அதுமட்டுமன்றி கதக்குள்ளே கதாநாயகன் கேசவன் முகம்கொடுக்கும் பிரச்சனைகள், சவால்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் போன்றவற்றை தானே நேரடியாக கண்டு அனுபவித்ததைப் போன்று எழுதியிருக்கும் அதேவேளை வாசிப்பவர்களையும் நேரடியாக அந்த காட்சிக்குள் நேரடியாக நுளைந்து அனுபவிபக்கும் பாணியில் சுவாரஸ்யப்படுத்தி தனது எழுத்தாற்றலை வெளிப்படுத்தியிருக்கிறார். சில சந்தர்ப்பங்களில் அதியமான் கார்த்திக் தான் இங்கு உருவகிக்கப்பட்டிருக்கும் கேசவன் என்கிற கதாபாத்திரமோ என்றும் எண்ணத்தோன்றுகிறது. படித்துக்கொண்டு போகின்றபோது கேசவனுடன் கூடவே சேர்ந்து நாமும் அவனது கடைசி இலக்குவரை பயணிப்பதை போன்ற பிரம்மை தானாகவே எம்மிடம் தோன்றுவதை உணரமுடிகிறது. பொதுவாக குறிப்பிடுவதானால் சர்வதேச தரத்திலான அண்மைக்காலங்களில் வெளிவந்த அவதார் போன்ற திரைப்படத்தை பார்க்கும் போது எப்படியான உணர்வுகள் தோன்றுமோ அவ்வாறே பல விடயங்களை கண்முன்னால் கொண்டுவந்து நிறுத்தி அப்படியான ஒரு திரைப்படத்தை பார்ப்பதுபோன்ற நிலைமையை இயல்பாகவே தோன்றிவிடும்படியாக கதையை வடித்திருக்கிறார். நாங்கள் முப்பரிமாண திரைப்படமொன்றை திரையரங்கில் சென்று பார்க்கின்றபோது ஏற்படுகின்ற உணர்வுகள் கதையை இரசித்துப் படிக்கும்போது தோன்றுகிறது என்பதை கதையை ஒருமுறை படித்துப்பார்த்தாலே உணர்ந்துகொள்ள முடியும். இந்த நாவலானது நூலை வாசிப்பதற்காக திறந்தால் மீண்டும் அதை நிறுத்தி மற்றொரு பகுதியை பின்னர் படிப்போம் என்று புத்தகத்தை பக்கத்தில் போடும் எண்ணத்தை அறவே இல்லாமல் செய்து தொடர்ந்து படிக்கத்தூண்டுகிறது.

கதையிலே வருகின்ற வசனங்களை ஒழுங்குபடித்தியிருக்கும் முறை, கதைசொல்லும் பாங்கு, சம்பவங்களின் சந்தர்பங்களுக்கமைவாக கூறப்படுகின்ற உருவமைப்புக்கள், சம்பவ விவரணைகள், அனுபவச் செதுக்கல்கள் என்று கதையில் வரும் அனைத்துமே மிகச் சிறப்பாகக் கையாளப் பட்டிருக்கிறது. இதற்கான பல ஆதாரங்களை நூலிலிருந்து எடுத்துக்காட்ட வேண்டுமென என்மனம் தூண்;டுகின்றது ஆயினும் இவரால் நூலில் ஆரம்பத்தில் குறிப்பிட்டுள்ள காப்புரிமை வெளிப்படுத்துகை அதனை செய்யாமல் என்னை கட்டுப்படுத்துகின்றது. இந்தக்கதையில் பிரதான விடயமாக முன்வைக்க முனையும் விடயம் பறவைகளின் வாழ்வுரிமையும் பாதுகாப்பும் இதை சிறப்பாக சொல்வதற்காகவே இவர் பல்வேறு வகையான பறவை இனங்களைப்பற்றியும் மிகத்தெளிவாக கற்றறிந்து வைத்துள்ளமை மிகத்தெளிவாக தெரிகிறது. மொத்தத்தில் நாவலை வாசகர்களிடம் கொண்டுசேர்ப்பதற்கு எடுத்தாண்டிருக்கும் முறை கவர்ச்சிகரமாகவும் சிறப்பாகவும் உள்ளது. இந்த கதையை யாராவது ஒரு திரைப்படமாக எடுக்க முன்வருவார்களானால் அத்திரைப்படமும் திரைப்பட ரசிகர்கள் மத்தியில் ஆளமான இடத்தைப்பிடித்துவிடும் என்பதே எனது கருத்து.

‘தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் கிள்ளிவிடுதல்’ என்ற பழமொழி காலாகாலமாக நாம் அறிந்து வைத்திருக்கும் ஒன்று. இந்த பழமொழியின் உட்கருத்தை தனது கதையிலே பிரதான ஒரு பாத்திரமாக காண்பிக்கும் தொண்டு நிறுவனம் மற்றும் சில பெரும்புள்ளிகளின் செயற்பாடுகளை படம்பிடித்துக் காட்டுவதன் மூலம் அவர்களும் இப்படித்தான் என மறைமுகமாக காண்பித்திருக்கிறார். மேலும் எங்கோ ஒரு பகுதியில் இருக்கும் சில பெரும்புள்ளிகள் தங்களுடைய இலக்குகளை அடைவதற்காக எந்த தொலைவுக்கும் சென்று அங்கு உள்ளவர்களால் தங்களுடைய பின்புல உந்துதல் இருப்பதை விளங்கிக்கொள்ள முடியாத வகையிலேயே தாங்கள் நினைத்தவற்றை என்ன விலைகொடுத்தும் சாதித்துவிடுவார்கள் என்பதையும் இந்தக்கதையில் மிகத்துணிவாக வெளிக்கொணர்ந்திருக்கிறார்.  

ஒருவிடயத்தை இங்கு குறிப்பிட்டேயாகவேண்டும். இக்கதையில் கதாசிரியர் குறிப்பிடும் நாகலாந்தின் பங்கிட்டி கிராமமக்கள் டோயாங் எனும் நீர்த்தேக்கத்தில் மீன்பிடிப்பதில் ஈடுபடுபவர்களாக ஆரம்பத்தில் குறிப்பிடும் எழுத்தாளர் பின்னர் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் ஆமூர் பால்கன் பறவைகளை வேட்டையாடி விற்பனைசெய்ய முனைந்தார்கள் எனக்காட்டும் அதேவேளை ஒருவருடத்திற்கு பின்னர் அந்த மக்கள் விவசாய செய்கைக்கான சாதகமான முடிவுகள் கிடைக்கவே அவர்கள் மகிழ்ச்சியோடு மீண்டும் தங்கள் விவசாயத்தொழிலில் ஈடுபட ஆரம்பித்துவிட்டார்கள் என காண்பிக்கிறார். இந்தவிடயம் ஒரு தெளிவில்லாத தன்மையை வெளிக்காட்டுகிறது.

அதேபோல் மற்றொரு விடயமாக கதாசிரியரால வெளிக்கொண்டுவரப்படும் கதையின் முடிவுப்பகுதி (வாசகர்களின் வாசிப்பு நோக்கத்தை தடைசெய்துவிடக்கூடாது என்ற நன் நோக்கம் கருதி கதையின் முடிவுடன் தொடர்புடைய விடயங்களை இங்கு தருவதை தவிர்த்திருக்கிறேன்) ஒரு கேள்விக்குரிய விடயமாக நம்பகத் தன்மையை சவாலுக்கு உட்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. இந்த முடிவின் மூலமாக அவர் வேறு ஒரு மறைமுகமான விடயத்தை சுட்டிக்காட்ட முனைவதாகவே படுகிறது ஆயினும் அது என்ன என்பது மேலும் தெளிவுபட வழங்கப்பட்டிருக்கலாமோ என்று எண்ணத்தோன்றுகிறது அல்லது அவர் குறிப்பிடுகின்ற முடிவுதான் அவர் உறுதியாக சொல்லும் முடிவாக இருந்தால் அது உண்மைத்தன்மை உள்ளதாக ஏற்றுக்கொள்ள முடியாத அதேவேளை கற்பனையான முடிவாகவே கருதும்படியாக அமைந்துள்ளது.

 

பாத்திர அமைப்புக்கள்

கதையில் பிரதான பாத்திரமான கதாநாயகனாக கேசவன் என்ற பறவைகளையும், பயிர்களையும் மற்றும் பாரம்பாரியங்களையும் விரும்பும் அத்தோடு பாதுகாக்க துணியும் நபர் முதலில் உள்ளே கொண்டுவரப் பட்டிருக்கிறார். அதற்கடுத்து கேசவனின் சிறுவயது நண்பர்களும் பின்னர் நாகாலாந்து நண்பர்களும் அத்தோடு அவர் செல்கின்ற ஊரான நாகலாந்தின் பங்கிட்டி கிராமத்து மக்களும் காண்பிக்கப்படுகிறார்கள். பின்னர் தொடர்ந்து வரும் கதையில் அவர் தேடிச்செல்லும் மற்றொரு இடத்தின் காட்டுவாசிகள் இரண்டு பிரிவினரை அப்படியே பாத்திரங்களாக கதைக்குள் கொண்டுவந்திருக்கிறார். மேலும் சில மிகமுக்கியமான பாத்திரங்களாக தொண்டு நிறுவனங்களின் முக்கிய பிரதிநிதிகள் மற்றும் ஒருசில முக்கிய புள்ளிகள் என்று ஒரு பட்டாளத்தையே கதைக்குள் கதாபாத்திரங்களாக கொண்டுவந்து அத்தனைபேரையும் நாம் கதையைப்படிக்கும்போது நிஜப்பாத்திரங்களாக எம் கண்முன்னே வந்து செல்வதைப்போன்று உருவகித்து நடமாடவிட்டிருக்கிறார். பாத்திர அமைப்புக்கள் அனைத்தும்  மிகச்சிறப்பாகவும் கதை நகர்வுக்கமைவாகவும் சிறப்பாக ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கிறது.

தொகுப்பு

இந்த ஆய்வில் முடிந்தவரை மிகவும் தேவையானதும் தவிர்க்க முடியாதவை என கருதிய விடயங்களையும் நான் மிகச்சுருக்கமாக வெளிக்கொண்டு வந்துள்ளேன். எனது பார்வையில் கதாசிரியரின் இந்த நாவல் அவரது முதலாவது நாவல் என்று கூறமுடியாதளவுக்கு மிகச்சிறப்பாக படைக்கப்பட்டுள்ள கதையாக இந்த கதையை நான் பார்க்கிறேன். இந்த கதை நாவல் பிரியர்களுக்கு ஒரு பஞ்சாமிர்தம். இக்கதையில் மேலே குறிப்பிட்ட சில விடயங்களைத்தவிர வேறு கவனத்திற் குட்படுத்தப்படவேண்டிய விடயங்களாக எதையும் என்னால் உடனடியாக அவதானிக்க முடியவில்லை. சிலவேளை எனது அடுத்த வாசப்பில் மேலும் சில விடயங்களை அவதானிக்க முடிந்தால் மற்றொரு சந்தர்பத்தில் அதனை குறிப்பிட தவறமாட்டேன். ஏற்கனவே இரண்டாவது சுற்று வாசித்து முடித்துவிட்டேன். மொத்தத்தில் இந்த கதையை இரண்டு தடவைகள் படித்தது ஒரு சிறந்த படத்தை இரண்டு தடவைகள் பார்த்தது போன்ற மனத்திருப்பதியை தருகிறது என்பதை மனத் திருப்தியோடு தெரிவித்து இந்த திறனாய்வை நிறைவு செய்வதோடு நீங்களும் படித்து அனுபவிக்க விரும்பினால் டிஸ்கவரி புக் பலஸில் விற்பனைக்கு இருக்கிறது.  

 

Series Navigationகுழந்தையின் சச்சதுரக் கப்பல்களும் சூறையாடுங் கடற்கொள்ளைக்காரர்களும்ஹவாயில் நடந்த புரட்சியின் போது அரசகுடும்பத்திற்கு என்ன நடந்தது?
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *