மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை – 10

This entry is part 22 of 30 in the series 22 ஜனவரி 2012

கூரை எரவானத்தில் ஒரு கையும் இடுப்பிலொரு கையுமாக கமறி கமறி இருமியபடி நின்றுகொண்டிருந்த மருமகன் வேண்டா வெறுப்பாக பதிலிறுத்தார்
12. நள்ளிரவு பூசை முடிந்ததன் அடையாளமாக கோவில் பிரகாரத்திலிருந்து வெளியேறிய இரண்டொருவர்களைதவிர்த்து வீதியில் மனிதர் நடமாட்டமில்லை. தில்லை நகரம் உறங்கத் தம்மை தயார் படுத்திக்கொண்டிருந்தது. ஜாதிமல்லி பூக்கள் இருளை அள்ளி முகத்தை துடைத்துக்கொண்டிருந்தன. தெற்கு திக்கிலிருந்து வீசிய காற்றினால் அதன் மணம் தெருக்கோடிவரை வீசியது. நகரின் உப்பரிகைகளும், கோபுரங்களும், வீட்டுக் கூரைகளும், மரங்களின் மேற்பகுதிகளும் பனியுடன் கலந்த பிறைநிலா ஒளியில் சாம்பல் பூத்ததுபோலிருந்தது. தில்லைக்குக் கிருஷ்ணபுரமன்னர் வர இருக்கிறார் என்பது காரணமாக தெருச்சந்திகளில் நிறுத்தியிருந்த விளக்குக் கம்பங்களின் தீபங்கள் வழக்கத்திற்குமாறாக அணையாமல் எரிந்தன. ஏய்..ஏயென்று மாடுகளை அதட்டும் ஒலியும், அதனைத் தொடர்ந்து கடக் முடக்கென்று வண்டிசக்கரங்கள் எழுப்புமொலியும் தூரத்தில் கேட்டது.

பட்டுக் கிழவி உறக்கம் வராமல் தவித்தாள். தலைமாட்டில் துணிமூட்டை ஒரு சிப்பம்போல கிடந்தது. அதில் பெரிதாக ஒன்று மில்லை. இரண்டொரு பழம் புடவை. பெருமூச்சு வந்தது. சீக்கிரம் போய்ச்சேர்ந்தால் தேவலாம் போலிருந்தது. சாத்தமங்கலத்திலிருந்து கால்நடையாகவே புறப்பட்டு சிதம்பரம் வந்திருந்தாள். வழியில் ஒன்றிரண்டு வண்டிகாரர்கள் பரிதாபப்பட்டு ஏற்றிக்கொண்டனர். அவர்களை சிதம்பரம் வரை வரவேண்டுமென்றா ஆணையிடமுடியும். இந்தமட்டும் அவர்கள் உதவிசெய்ததே பெரும் புண்ணியம். வயது ஆக ஆக எல்லாம் மறந்து போகிறது, வெற்றிலை உரலையே நாளொன்றுக்கு இரண்டுமுறை தேடவேண்டியிருக்கிறது. இரண்டு கணத்திற்கு முன்னால் என்ன செய்தோம் என்று கூட அவளுக்கு நினைவில்லை. வாயில் சோற்றைக் கொண்டுபோனால் அதைக் குதப்பி விழுங்கித் தொலைப்பதற்கு முன்னால் பத்து ஆண்டுகளுக்கு முன்னால் கோபித்துக்கொண்டு தேசாந்தரம் போன கிழவர் ஞாபகம். ஒவ்வொரு நாளும் இன்றைக்கு வருவார் நாளைக்கு வருவார் என எதிர்பார்த்து பின்னர், ‘திமிர் பிடித்த மனிதர், எங்கேயாவது செத்து தொலையட்டும்’ என பிள்ளையிடத்தில் வீம்புக்குப் பேசியபோதிலும், இரவுநேரங்களில் எழுந்து உட்கார்ந்துகொண்டு புறாகுரலில் முனகுவாள். ‘பாவி மனிதா! ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் உடன் புறப்பட்டு வந்திருப்பேனே, என மார்பிலும் அடித்துக்கொள்வாள். அவ்வளவும் மணலில் விழுந்த மழைதுளிபோல அமுங்கிப்போகும். கிழவர்கூட அவளது தினசரி சஞ்சலங்களில் புதைந்துபோகிறார்.

சிதம்பரத்தில் வாழ்க்கைப்படும் மகளிடத்தில் கழட்டிக்கொடுத்த பவழமாலை மறந்துபோனதற்கும் அவள் வயது காரணமாக இருக்கலாம். சிதம்பரத்தில் மூத்தவள் வீடு. இளையவள் திருமுல்லைவாசலில் இருக்கிறாள். போனவருடம் மார்கழிமாதம் திருவாதிரை விழாவுக்குச் சிதம்பரம் வந்திருந்தாள். குறுவை சாகுபடிக்குப் கைமுடையென்று மருமகன் அங்குமிங்கும் பணத்திற்கு அலைந்தபோது இவளுக்கு பொறுக்கவில்லை. இவளுக்குக் கிண்ணியில் சோற்றைப்போடும்போதெல்லாம் பிரச்சினைகளைச் சொல்லி மகள் மூக்கைச் சிந்திக்கொண்டிருந்தாள். கழுத்திலிருந்த பவழ மாலையை கழட்டிக்கொடுத்தாள். “திருவிழா முடிந்து சாத்தமங்கலம் புறப்படும்போது, மகசூல் முடிந்ததும் பவழமாலையுடன் உன் மருமகனை அனுப்பிவைக்கிறேன், கவலைப்படாமல் புறப்பட்டு போ” என்று அனுப்பிவைத்தாள். ஆனால் மருமகள் இவள் தலைவாசற்படியில் கால்வைத்ததுமே கவனித்திருக்கவேண்டும். ‘பவழமாலை’ என்ன ஆயிற்று? என்ற கேள்வி, குடிக்கத் தண்ணீர் கொடுத்த மறுகணம் அவளிடம் வந்தது. மகளிடம் கழட்டிக்கொடுத்த விவகாரத்தை ஏன் மறைப்பானேன், என உண்மையைச் சொல்லிவிட்டாள். ‘திருவிழாவில்’ களவு போயிற்று என்று கூறியிருக்கலாம். இவள் மறந்திருந்த விவகாரத்தை மகனும் மகளும் நினைவூட்டினார்கள். தங்கள் வீட்டிலும் பணமுடை யென்றும் உடனே மாலையைக் கொண்டுவந்தால்தான் ஆயிற்றென தினந்தோறும் நச்சரிக்க மகள் வீட்டிற்குப் வந்திருந்தாள். கிழவி வந்த காரணம் முகத்தைப் பார்த்ததும் மகளுக்கு புரிந்துபோயிற்று. “பவழமாலை’ என்ன பெறும், வந்துவிட்டாய். எங்களுக்கு என்ன செய்தாய். அப்பா நஞ்செய் புஞ்செய் என்று நாலுகுழி வைத்துவிட்டுத்தானே போனார். அதிலேயா பங்குக்கு வந்தோம். ஏதோ எங்கள் பொல்லாத காலம், இல்லையென்றால் உன்னிடம் அதை கேட்டிருப்போமா? நான் கேட்கமாட்டேன், உங்கள் மருமகன் வந்தால் நீயே அவரிடம் கேட்டுக்கொள்!”, என இரைந்தாள். மருமகனும் கிழவி வந்த காரணத்தைப் புரிந்துகொண்டவர்போல பகல் முழுக்க வீட்டுக்கு வரவில்லை. பட்டுகிழவி முந்தானையை உதறிக்கொண்டு வெற்றிலை பாக்கை உரலிலிட்டு இடிக்கத் தொடங்கினாள். இரும்புலக்கை ணங் ணங்கென்று விழுபோதெல்லாம் மார்பு அடித்துக்கொண்டது.

– இந்த நேரத்தில் வெற்றிலை போடத்தான் வேண்டுமா? எனக்கேட்டுகொண்டே மருமகன் வெளியில் வந்தார். அவரிடம் எப்படி ஆரம்பிப்பதென்று தெரியாமல் கிழவி தயங்கினாள் பின்னர் மெதுவாக பேச்சை ஆரம்பித்தாள்

– ஏங்க பெரிய வீட்டுலே என்னதான் நடக்கிறது? தீட்சதர்கள் அவ்வளவுபேரும் அங்கே கூடியிருக்கிறார்களே?

கூரை எரவானத்தில் ஒரு கையும் இடுப்பிலொரு கையுமாக கமறி கமறி இருமியபடி நின்றுகொண்டிருந்த மருமகன் வேண்டா வெறுப்பாக பதிலிறுத்தார்.

– செஞ்சி ராஜா சிதம்பரம் வருகிறாராம்.

– என்னவாம்?

– கோவிந்தராஜர் சன்னதி திருப்பணி வேலையை அருகிலிருந்து பார்க்கபோகிறாராம்.

– தீட்சதர்கள் என்ன சொல்கிறார்கள்.

– அவர்கள் என்ன சொல்வார்களென்று தெரியாதா? வழக்கம்போல கூடாதென்கிறார்கள்.

– இதென்ன வம்பு, அத்தனை பெரிய கோவிலில் கோவிந்தராஜரும் கொஞ்சம் வசதியாக இருக்கட்டுமே, எதற்காக இவர்கள் இப்படி மாரைத் தட்டிக்கொண்டு திரிகிறார்கள்.

– மெதுவாய்ப் பேசுங்கள். நமக்கேன் வம்பு. சுவருக்கும் காதுண்டு என்பார்கள், தீட்சதர்களே பரவாயில்லை. வீர சைவர்கள் காதில் விழுந்தால் ஆபத்து.

– அக்காளைப் பழித்து தங்கை எதற்காக அபசாரியாகவேண்டுமென்று கூறினேன். தவறா?

– தவறென்று யார் சொன்னது; ஆனால் நமக்கென்னெவந்தது. கோவிந்தராஜருக்கு கிருஷ்ணப்ப நாயக்கரா சீர் கொண்டு வரப்போகிறார். அதையும் நம்மைப்போன்ற குடிகள்தானே கொண்டுபோகவேண்டும். ஏற்கனவே எழுந்தால் வரி, உட்கார்ந்தால் வரி. போனவருடம் கொள்ளிடத்தில் வெள்ளம் வந்து நட்ட நடவுகளனைத்தும் வெள்ளத்தில் முழ்கிப்போனது. மறுபடியும் நாற்றுவிட விதை நெல்லின்றி ரங்கசாமி செட்டியாரிடம் கலத்திற்கு பதக்கு நெல் கொடுப்பதாக வாங்கிவந்தேன். உங்கள்பேத்தி அங்கயற்கண்ணிக்கு தை பிறந்தால் பன்னிரண்டு வயது, நல்ல இளைஞனாக கிடைத்தால் திருமணத்தை முடித்துவிடலாம். பின்கட்டில் தூலம் இறங்கியிருக்கிறது. அதைத்தூக்கி நிறுத்தி விழலிடவேண்டும். என்ன செய்வது ஏழைகுடியானவனுக்கு உடலுள்ளவரையில் கடல்கொள்ளாத கவலை.

– காவேரி ஏதாவது தெரிவித்தாளா?

– நாளை கருக்கலில் எழுந்திருக்கவேணும். வயலில் தண்ணீர் எவ்வளவு கட்டினாலும் நிற்பதில்லை, வடிந்துபோகின்றது. என்னவென்று பார்க்கவேணும்.

திரும்பி விடுவிடுவென்று நடந்த மருமகன் உள்ளே நுழைந்ததும் கதவைத் தாளிட்டார். மூடிய கதவையே சிறிது நேரம் வெறித்துப்பார்த்தாள். தெருசுவரில் சாய்த்துவைத்திருந்த கலப்பைகளைப் பார்த்தாள். அடுக்கிவைத்திருந்த தானிய மூட்டைகளைப் பார்த்தாள். எரவாணத்தைப்பார்த்தாள். தன்னை மகிழ்ச்சியில் திளைக்கவைக்க ஏதாவது தட்டுப்படுகிறதாவென்று நினைவுகளைக் கிண்டினாள். தெருவில் திடீரென்று மனிதர் அரவம். பச்-பச்சென்று காலடிகள் சீலைத் தலைப்பை இழுத்து முக்காடாகப் போட்டுக்கொண்டு இளம்பெண்ணொருத்தி நடந்துபோனாள். இரண்டு காவலர்கள் உடன் போனார்கள்,பெண்னைப்பார்க்க புலவன் பச்சையப்பன் மகள் செண்பகம் போலிருந்தது. தாசி மீனாம்பாள் வீட்டில் வேலை செய்கிறேனென்று ஒரு முறை கோவிலில் வைத்து கூறிய நினைவு. வியப்பாக இருந்தது. அதை கிழவியால் ஞாபகப் படுத்த முடிந்திருந்தது. மாலையில் அப்பெண் இதே தெருவழியாகத்தான் ஒற்றையாகப்போனாள். அவளை சற்றுமுன் அழைத்துபோனவர்கள் கொள்ளிடத்துப் பாளையக்காரன் ஆட்கள்போலிருந்தது. இனி அந்தப்பெண்ணும் தனது கிழவர்போன்றே திரும்பாமல் போகலாம்.

– பட்டம்மா!

இந்த அர்த்தராத்திரியில் யார் கூப்பிடுகிறார்கள். அதுவும் பட்டம்மா என்று கிழவர் குரலில். அவர் இளைஞராக இருந்தபோது ஆசையாக கூப்பிடும் குரல்.

கிழவி கணத்தில் இளமைக்குத் திரும்பியதைபோல உணர்ந்தாள். மீசையை முறுக்கிக்கொண்டு, புடைத்த நெற்றியில் காலணா அளவிற்கு குங்குமம் வைத்துக்கொண்டு, பத்தாணடுகள் இடைவெளிக்குப்பிறகும் அவர்தானென அனுமானிக்க முடிந்தது. மேலுதடை ஒதுக்கி முன் தள்ளிய இரண்டு பற்களையும் நமட்டுச்சிரிப்பையும் ஞாபகப் படுத்த முடிந்தது. இவள் உடல் சிலிர்த்தது.

– எழுந்துவா என்றார்.

– மகளிடம் ஒருவார்த்தை சொல்லிவிட்டு வருகிறேனே.

– அதற்கு அவசியமில்லை. உறவுகளுக்கெல்லாங்கூட வயது போலவே மூப்புதட்டிவிடும். உனக்கு நான் எனக்கு நீ வா போகலாம் என்றார்.

அவர் கிழவி பின்தொடர்ந்து வருவாள் என்ற நம்பிக்கையில் திரும்பி நடப்பதுபோலிருந்தது. துணிசிப்பத்தை கையிலெடுத்துக்கொண்ட பட்டு கிழவி வீதியில் இறங்கி நடந்தாள்.

Series Navigationஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara)மூவங்க நாடகம்(மூன்றாம் அங்கம்)அங்கம் -3 பாகம் – 7திருப்பூர் முத்தமிழ்ச் சங்கம் வழங்கும் மு வ நூற்றாண்டு விழா
author

நாகரத்தினம் கிருஷ்ணா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *