“மாணம்பி…”

This entry is part 7 of 13 in the series 20 ஆகஸ்ட் 2017

சிறுகதை
அந்தத் தெருவின் நடுவும் அல்லாத வரிசையான வீடுகளின் வாசல்படிகள் முடிந்த ஓரப் பகுதியும் அல்லாத இடைப்பட்ட வெளியில் நேரே கோடு போட்டது போல் அவர் நடந்து சென்றார். அளந்து வைக்கும் அடிகள் அவருடைய நடையின் தன்மை என்றே எண்ண வைத்தது. அப்படித் தன்னைப் பழக்கிக் கொண்டிருக்கிறாரோ என்று தோன்றியது. அவரின் மன இயல்பின் அடையாளமோ என்றும் எண்ண வைத்தது. அடுத்தடுத்த வீடுகளைக் கடக்கையில் ஏன் தலை குனிந்தே இருக்க வேண்டும், நடையை அளப்பதுபோல…!
கோயில்களில் அடிப்பிரதட்சிணம் வைக்கும் பெண்களைப் பார்த்திருக்கிறான். வாய் அநிச்சையாய் நாமங்களை முணு முணுக்க கண்ணும் கருத்தும் வைக்கும் தப்படியில் பதிந்திருக்கும்.
ஏதோ குறுகிய மனநிலைக்கு ஆட்பட்டவராய் நினைக்க வைத்தது. சுருக்கிக் கொள்பவராய், யாரும் தன்னுடன் பேசி விடுவார்களோ என்று அஞ்சியவராய், அப்படி வாயெடுக்கும் முன் அந்த இடத்தைக் கடந்து விட வேண்டும் என்கிற உந்துதல் உள்ளவராய்… இந்த இருப்பே எனக்கான அடையாளம் என்று… தனக்கென ஒரு பாதுகாப்பை சிருஷ்டித்துக் கொண்டு, போய்க் கொண்டிருந்தார்.
இறங்கி அவருக்குத் தெரியாமல் தெருவைக் கடந்து பின் திரும்பி நேர் எதிரே வந்து அவரைக் கடக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். அப்படிச் செய்தாலும் எந்தவிதமான சலனமோ, உணர்ச்சி பாவங்களோ வெளிப்படாதுதான். இந்த இருப்புதான் அவரிடம் தனக்குப் படிக்கப் பிடிக்கவில்லையோ என்று எண்ணினான்.
எப்படி இருந்தால் என்ன…. தான் ஏன் கவலை கொள்ள வேண்டும் என்று நினைத்தபோது உண்மையிலேயே அப்படியிருக்கிறோமா என்கிற சந்தேகமும் அல்லது எரிச்சல் படுகிறோமா…. என்று தன்னையே கேட்டுக் கொண்டான்.
ஆசிரியர் விழுந்து வணங்குவது போல் இருக்க வேண்டாமா? என்று மனோகரனிடம் தான் கேட்டதும், வகுப்பு நல்லா எடுக்கிறாரா …அத மட்டும் பாரு….என்று அவன் அவருக்கு சார்பாகப் பேசியது எப்படி இவனால் சகித்துக் கொள்ள முடிகிறது என்கிற கேள்வியைத்தான் இவனிடம் எழுப்பியிருந்தது.
தெருவைக் கடக்கும்பொழுது கூட வலது புறம் சென்று எதிர் வரும் வாகனங்களுக்குள் குறுக்கிடாமல் முந்திக்கொண்டு கடந்து சென்று விடவேண்டும் என்கிற புரிதலில்லாமல் இடது ஓரத்திலேயே நேர் எதிர் வீதியின் முனையில் நிற்பது தெரிந்தது. உள் புகப் போகும் தெருவின் இரு புறங்களையும் திரும்பித் திரும்பிப் பார்த்து எப்போது பாதுகாப்பாகக் கடப்பது என்று புரியாமல் தவித்து நிற்பதாய்த் தோன்றியது.
அப்படியான பொழுதுகளில் ஒரு முறை கூட எதிர்ப்படும் எவரிடமும் ஓரிரு வார்த்தைகள் கூடப் பேசியிருக்காததும், நிமிர்ந்து கூடப் பார்க்காததும், எவரும் இவரை ஒரு பொருட்டாகவே மதிக்காததும், ஏதோ நாயோ, பூனையோ தாண்டிச் செல்வதுபோலான போக்கில் போய்க் கொண்டிருப்பதுமான காட்சிகள் மனதை முழுமையாக நிறைத்திருந்தன.
கூர்மையாகப் பார்வையைக் குவித்து நின்றவனுக்கு அடுத்து வீதியில் புகும் அந்தக் காட்சி சற்றே பதட்டத்தை ஏற்படுத்தியது. சாதாரணமாய் வலது புறம் திரும்புகையில் கட்டியிருக்கும் வேட்டியின் மேல் புறப் பக்க நுனியை இழுத்துப் பிடித்துக் கொள்வதும், மிலிட்டரியில் மார்ச் பாஸ்ட் செய்வது போலச் சட்டென்று வலது புறம் முழுமையாய்த் திரும்பி நடக்க முற்படுவதும்….அவர் செய்வதுபோலவே மனோகரன் எத்தனையோ முறை செய்து காண்பித்து கேலி பண்ணிச் சிரித்திருப்பதும், அவர் முன்னாலேயே ஒரு முறை அப்படி நடந்து காண்பிக்க…. கண்டு கொள்ளாதது போல் வகுப்பு முடித்துக் கிளம்பியதும், இவர் எந்த வகையினன் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியிருந்தது.
எனக்கு இவர்ட்டப் படிக்கவே பிடிக்கலைடா….என்றபோது “பாவம்டா அந்தாளு…கணக்கியல் நடத்தவே நம்ப ஏரியாவுல ஆள் கிடையாதுடா…செல்வம் சாரு…அவரப் பிடிக்க என்ன பாடு பட்டார் தெரியுமா…? ஆள்தான் அப்டியிருக்காரேயொழிய…பயங்கரமான புத்திசாலிடா…. அவரை விட்டா தன் இன்ஸ்டிட்யூட்டே படுத்திருமோன்னுட்டு பயந்திட்டாரு….அவர வச்சுத்தாண்டா ஸ்ட்ரெங்க்த்….! எப்டியிருந்தா என்ன மாப்ள….நல்லாச் சொல்லித் தர்றாரா…அத மட்டும் கவனி…நமக்குத் தேவை பாடம்..ஆளக் கவனிக்காத….என்றான் ரவீந்திரன்.
அதுக்கில்லடா….நம்ம ஊர்ல எக்ஸாம் சென்டரே கிடையாது தெரியும்தானே… மதுரைக்குத்தான் போயாகணும்….இந்தாளோட போயி….எக்ஸாம் எழுதி மீளுறதுக்கா….? ஒரு சந்தோஷமும் ஊக்கமும் வேணாம்…எக்ஸாம் போறப்ப….?
என்.சி.சி. மாணவர்கள் வரிசையாய்ச் செல்வது போல, தேர்வு எழுதுவதற்கு அந்தப் பயிற்றகத்திலிருந்து எல்லோரும் கிளம்புவதாய் இருந்தால் அது எப்படி அமையும் என்று நினைத்துப் பார்த்தான். இரண்டிரண்டு பேராய் ஒன்றன் பின் ஒன்றாய் வரிசை கட்டி நடக்க, முன்னால் அதை வழி நடத்துபவராய் மாது நடந்து சென்று கொண்டிருப்பது போல் கற்பனை செய்து கொண்டான். காட்சியாய் இதை மனதில் கொண்டபோது அவர் பெயரின்பாற்பட்ட கவனமும் அவனுக்குள் வர….என்ன பெயர் இது…முழுப் பெயருமே மாதுதானா…அல்லது மாதவன் என்பதைச் சுருக்கி அப்படி அழைக்கிறார்களா….மாதவனா…மாதேஸ்வரனா….என்பதாக யோசிக்க முற்பட்டு…
அட்டென்டன்ஸ்ல பாருடா….எங்கயாச்சும் பெயர் இருக்குதான்னு என்று ரவீந்திரன் கேட்ட அன்றைக்கு…. இன்னின்ன பாடங்களைப் பயிற்றுவிக்கும் ஆசிரியர் இவரிவர் என்பதாகப் பதிவேட்டில் எங்குமே எந்தப் பதிவுகளும் இல்லாததும்…தேவையில்லாமல் எதற்கு இதைத் தேடிக்கொண்டு பிரின்ஸிபால் சாரிடமே கேட்டு விடலாமே என்று முனைந்தபோது…உங்களுக்கு சதா அவரப்பத்தி யோசிச்சிட்டிருக்கிறதுதான் வேலையா என்று கேட்டதும்…படிக்கிறது முக்கியமா…இல்ல பேரப்பத்தி ஆராய்ச்சி பண்ணிட்டிருக்கிறது முக்கியமா….என்று அவர் பதிலுக்குக் கேட்க…தெரிஞ்சிக்கலாமேன்னுதான் சார்….என்று விடாமல் நின்றபோது…சிரித்துக் கொண்டே சொன்னார்….பிரின்ஸிபால் செல்வம்.
சொல்லுவேன்…ஆனா யாரும் மறந்திறக் கூடாது….திரும்பக் கேட்கக் கூடாது… ….என்றபோது….இவர்கள் ஒருவரையொருவர் ஆழமாய்ப் பார்த்துக் கொண்டார்கள்.
பேரு எதுக்கு சார் மறக்குது…..ஒரே ஒரு வார்த்தைதான அது….பெயர்ச் சொல்…..அதுபோய் மறந்திடுமா சார்…..என்று இவன் கேட்டான்.
உனக்கு தமிழார்வம் ஜாஸ்தின்னு எனக்குத் தெரியும்….உங்கிட்ட விளக்கம்லாம் கேட்டனா நா….. நீட்டிக்கிட்டே போறே என்று சட்டென்று கடிந்து கொண்டார் அவர்.
சாரி சார்…சாதாரணமாத்தான் சொன்னேன்…. என்னன்னு சொல்லுங்களேன்….என்று மூவரும் மீண்டும் வற்புறுத்த…. அந்தப் பெயர் இன்றும் மனதிலிருக்கிறதா என்று நினைவில் கொண்டுவர முயன்றான்.
உன் பேரு முதல் உனக்கு ஞாபகம் இருக்கா…அதச் சொல்லு முதல்ல…என்றான் மனோகரன்.
ஞாபகம் இருக்கிறது இருக்கட்டும்டா…கரெக்டா ஸ்பெல்லிங் எழுதுவானா கேளு…என்றான் ரவீந்திரன்.
எத்தனை வாட்டி உன் பேர எழுதறச்சே…T விட்டிருக்கே….உன்னை மாதிரிப் பேரு…உனக்கு மட்டும்தான் இருக்கும். அதே மாதிரித்தான் அவருக்கும். எங்கயாச்சும் இப்டியெல்லாம் அம்மாப்பா இருப்பாங்களா…? பையன் கஷ்டப்படுவானேன்னு யோசனை வேண்டாம்…? எங்க சொல்லு பார்ப்போம்…உன் பேரை….நாங்க கேட்கணும்…..மனோகரனும் ரவீந்திரனும் கூர்ந்து பார்த்தார்கள்.
இட்சுவாகு…….அவர்களுக்கு நன்றாய்க் கேட்பதுபோல் நிறுத்தி, அழுத்தமாய் உச்சரித்தான் இவன்.
யப்பாடி…இன்னைக்குத்தாண்டா கரெக்டாச் சொல்லியிருக்கான்…
அவசரப்படாதே அதுக்குள்ளாறயும்…ஸ்பெல்லிங் எழுதச் சொல்லு….தப்பில்லாம எழுதறானா பார்ப்போம்…
அப்பா சொல்லியிருந்தது ஞாபகம் வந்தது இவனுக்கு. எங்க…எப்ப எழுதினாலும் ரெண்டு a போடணும். அது நெடில். அப்பத்தான் கரெக்டா படிப்பாங்க…ஒரு a போட்டேன்னு வச்சிக்கோ…..வகு….வகு…ன்னு படிச்சிடுவாங்க…அப்புறம் அவனை நீ வகுந்து போடணும்னு தோணும்…புரிஞ்சிதா….இன்னொண்ணு…..கடைசி …கு…..இருக்குல்ல…அதுக்கு வெறும் gu போடக் கூடாது….ghu போடணும்…பேரை உச்சரிக்கிறபோதே ஒரு கம்பீரம் வரணும். ஞாபகம் வச்சிக்கோ……
சரிப்பா…… – தன்னை மறந்து இவன் சொல்ல…
என்னடா…சரிப்பாவா….? உங்கப்பா எங்கடா இங்க இருக்காரு….அத்தனை பயமா அவர்ட்ட…? இப்டித் தலையாட்டுற….. – சத்தமாய்ச் சிரித்தார்கள் இருவரும்.
பார்த்துக்கிங்கடா… சரியாயிருக்கான்னு….என்றவாறே எழுதினான் இவன்.
I t c h u v a a g h u
ஆஉறா…எம்புட்டு கவனம் பார்த்தியாடா இவனுக்கு. ரெண்டு a ஒரு h எக்ஸ்ட்ராவாத் தெரில……?
அது எம்பேரு….அதை எப்படி எழுதணும்ங்கிறது என்னோட உரிமை. அதை வேறே எவனும் இஷ்டத்துக்கு எழுதிட முடியாது. ஜாக்கிரதை……!
அன்றைய விவாதம் முடிந்தபோது மூவருமே விழுந்து விழுந்து சிரித்தார்கள்.
அப்டீன்னா…ஒண்ணு செய்வோம்….மனோகரன்ங்கிறத….இனிமே நானும் மனோஉறரன்னு எழுதறேன்…தமிழ்ல இல்லடா…இங்கிலீஷ்ல…..k க்குப் பதிலா…h போடறேன்னேன்.
அது உன் இஷ்டம்….நான் எங்கப்பா எனக்குச் சொல்லிக் கொடுத்த ஸ்பெல்லிங்கத்தான் எழுதுவேன். அவர் வார்த்தையை மதிக்கிறதுக்கு அதுதானே அர்த்தம்…
அப்ப நானும் மாத்துறேன்….ரவிந்திரன்ங்கிறதை ரவீந்திரன்னு எழுதறேன்….
இவன் மண்டு…மண்டு….என்றான் அவனைப் பார்த்து.
என்னடா மண்டு…பெரிசா கண்டுட்ட….என்று அவன் முறைக்க…இவன் அழுத்தமாய்ச் சொன்னான்.
இங்கிலீஷ்ல நீ எப்படி எழுதினாலும்… தமிழ்ல அது எப்போதும் ரவீந்திரன்தான். நெடில்தான். ரவிந்திரன் இல்ல…அதைத் தெரிஞ்சிக்கோ முதல்ல….வெறுமே ரவி…ன்னு வச்சிருந்தாங்கன்னா ஓ.கே….கூட ஒரு இந்திரன் சேர்த்திருக்காங்கல்ல…அதனால…ரெண்டும் சேர்ந்து நீளுது…புரிஞ்சிதா…?
ஓ.கே.டா….இங்கிலிஷ் ஸ்பெல்லிங்கத்தான்டா நான் சொன்னேன்…என்று விட்டு இனிமே என் பேரோட ஸ்பெல்லிங்…..Raveendran…..தான். Ravindran…. கிடையாது.
பேர் டிஸ்கஷன் பெயரளவுக்குத் தொடங்கி…..பேரளவுக்கு மாறிப் போனதை எண்ணிக் கொண்டான் இவன். ஆனால் சார் பேர் என்ன…? என்னவோ சொன்னாரே…அடக் கடவுளே…ஊர் உலகத்துல இல்லாத பேர வச்சு…நம்ம கழுத்த அறுக்கிறாங்களே….!
மறந்திட்டயாடா நீ….நா அப்டியே வச்சிருக்கேன்….என்ற மனோகரனை….சொல்லு பார்ப்போம் என்று ரவீந்திரன் கேட்டபோது அவனுக்கும் அது மறந்துதான் போயிருக்கிறது என்று தோன்றியது .
ம்ம்ம்…..சொல்லவா……..மாணாபி…….மாணாபி……ம்…அதான்.ஃ…
என்னது….என்னது…இன்னொருவாட்டி சொல்லு…….வாதாபி.யா…..என்னடா சொல்ற….வாதாபிதான…..-இவன் சொல்வதைக் கேட்டுச் சிரித்துக் கொண்டே நின்ற ரவீந்திரன்…ரெண்டு பேர் சொல்வதும் தப்புதான் என்ற நினைப்பில் பார்க்கிறான் என்பதைப் புரிந்து கொண்டான்.
என்னசொன்னேன்……மாணாபின்னுதானே….ஸாரி…ஸாரி….தப்பு…தப்பு…..மாணாம்பி….மாணாம்பி….ஊறீம்…..ஊறீம்….மாணாம்பி….மாணாம்பி….மாணம்பி…..மாணம்பி…மாணம்பி…
கண்களை மூடிக்கொண்டு மனப்பாடம் செய்பவன் போல் அவன் திரும்பத் திரும்பச் சொன்னதும்…..என்ன எழவு பேருடா….மாணம்பி…கோணம்பின்னு…..என்று ரவீந்திரன் கேலி செய்ததும்….
இந்தக் கணத்தில் கூட அந்தப் பெயர் நினைவுக்கு வராததும் ஒரே ஒரு வார்த்தைதான சார்….என்று பிரின்ஸிபாலிடம் சொன்னதும்….அதிலுமா இந்தத் தடுமாற்றம்….என்று வியக்க வைத்தது இப்போது.
மாணம்பி என்றால் மாட்சிமையுடையவன்….மாண்பாளன். என்று தமிழாசான் அக்கறையோடு எடுத்துரைக்க….. அரசர்கள் காலத்துப் பெயர் மாதிரி இருக்கு……ஏதாச்சும் புலவர் பெயரா இருக்கும்….என்று தங்களுக்குள் சொல்லிக்கொண்டு அத்தோடு அந்தப் பெயரை நினைவுகளிலிருந்து உதறி விட்டார்கள்…
அவரின் உருவமும், நடையும், தலை நிமிராத தன்மையும், இவர் எப்படி ஆசிரியராய் இருக்கிறார் என்று இன்றுவரை யோசிக்க வைத்துக் கொண்டிருக்கிறது.
மாணம்பி சார் இப்போது பயிலகத்திற்குத்தான் போகிறார் என்று தோன்றியது. ஆனால் ஓரிருவர் சேது என்று கூப்பிடுகிறார்கள். அது ஏன், எப்படி…புரியவில்லை. மாணம்பி என்றால் சுருக்கமாக மாணு…மாணு…என்றுதானே அழைக்க வேண்டும். பதிலாக சேது…! ஏதும் முன்னோரை ஞாபகப்படுத்தும் விதமாய் அழைப்பதாயின், இவருக்கு எப்படி அது பொருந்தும்? பெருமை கூற, நினைவு படுத்த…. அப்படியானால் இவரை விரும்புவோரும் இவர் குடும்பத்தில் இருப்பதாகத்தானே அர்த்தம்…? ஒரு மனிதன் யாராலும் விரும்பப்படாதவனாய் இருப்பதற்கு, ஆவதற்கு, சாத்தியமேயில்லையே…!
யோசித்தவாறே தொடர்ந்தான் இட்சுவாகு.
பதினோரு மணிக்கு ஒரு பேட்ச் உண்டு அவருக்கு. லேடீஸ் பேட்ச்.. அதில்தான் அவர் சற்று சகஜமாய் இருப்பதாக இவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். நீண்ட உறாலின் ஓரமாய் உள்ள தடுப்பு மறைப்பில் வகுப்பு நடந்து கொண்டிருந்தது. ஐந்தாறு மாணவிகள் எப்படி அந்த இடுக்கில் குழுமியிருக்கிறார்கள் நடுவே கிடந்த அந்த மேஜையின் நுனிப் பகுதி முழுவதும் சுற்றி அமர்ந்திருந்தவர்களின் வயிற்றுப் பகுதியை, நெஞ்சுப் பகுதியை அழுத்திக் கொண்டிருப்பதும், மாணம்பி சாரும் அவ்வாறே அமர்ந்திருப்பதும், அடியில் அவரது கால்கள் அந்தப் பெண்களின் கால்களோடு அவ்வப்போது படுவதும் மீள்வதுமாய் இருக்க இந்த மாதிரியான வெற்று ஸ்பரிச சுகத்திற்காகத்தான் ஒரு நாள் விடாமல் வகுப்பு எடுக்கிறாரா என்பதாகவும் இவர்களை நினைக்க வைத்தது.
என்னைக்காச்சும் சாரு லீவு போட்டாருன்னா அது மதியமாத்தான் இருக்கு பார்த்தியா…? நாலரை மணி பேட்ச்சை மட்டும் ஏன்டா இப்டி விட்டிட்டு ஓடுறாரு?
சினிமாப் பிரியறருடா…தெரியாதா உனக்கு. அஞ்சரைக்குள்ள போயி டிக்கெட் எடுக்கிற பொந்துக்குள்ள நின்னிடுவாரு…..கூட்டம் இருக்குதோ இல்லையோ….பொந்துக்கு வெளில வரிசைல, ஆளோடு ஆளா என்னைக்காச்சும் நின்னு பார்த்திருக்கியா….. ஏண்டா இப்படித் தன்னை இருட்டிலயே மறைச்சிக்கிறாரு….. இன்னொண்ணு கவனிச்சிருக்கியா…..பெஞ்ச் டிக்கெட்டுல கடைசி வரிசை மூலை முடிஞ்சான்ல போய்த்தான் உட்காருவாரு….அங்கதான் இருட்டாக் கிடக்கும்…எல்லாப் பயலுவளும் வெத்திலையப் போட்டுட்டு துப்பி வச்சிருப்பானுக….அதெல்லாம் அவருக்கு ஒரு பொருட்டில்ல… கொசுக் கடிச்சாலும் கண்டுக்க மாட்டாரு….அந்த இடம்தான் அவரோட யதாஸ்தானம். அதே மாதிரி படம் முடியப்போகுதுங்கிறபோது எழுந்து வெளியேறிடுவாரு…கூட்டம் வெளில வர்றதுக்கு முன்னாடி வீட்டுக்குப் போயிடுவாறுன்னா பார்த்துக்கயேன். அவருடைய செயல்ல எதுலயும் ஒரு நார்மல்ஸி இருக்காது. கூர்ந்து கவனிச்சேன்னா தெரியும். வெறுமே பொம்பளைப் புள்ளைகளுக்கு மட்டுமேன்னு வகுப்பு எடுக்க முடியாதுல்ல… அதனாலதான் நமக்கும் சேர்த்து எடுக்கிறாரு….அவங்களுக்கு இருக்கிற கவனிப்பு நமக்கு இருக்குதோ..? அத நீ கவனிச்சிருக்கியா…? – வாரத்துக்கு ரெண்டு டெஸ்ட் வைப்பாரு….உடனுக்குடனே நோட்டுகளைத் திருத்தியும் கொடுத்திடுவாரு….பைல அள்ளி அடுக்கிட்டுப் போவாரே…கவனிச்சதில்லயா….?
மனோகர் நிறுத்தாமல் சொல்லிக் கொண்டே போனான். எங்களுக்கு அந்தக் கவனிப்பு இல்லைதான். ஒருவேளை எங்கள் மீதான அவநம்பிக்கையாய்க் கூட இருக்கலாம். லேடீஸ்தான் ரிசல்ட். ஜென்ட்ஸைப் பத்திக் கேட்காதீங்க….என்று செல்வம் சாரிடம் சொல்லிக்கொண்டிருந்ததாக ரவீந்திரன் சொல்லியிருக்கிறான்.
நாங்கள் கவனித்துக் கொண்டுதான் இருந்தோம். மாணம்பி சாரிடம் என்னவோ ஒரு ரகசியம் புதைந்து கிடக்கிறது என்று. எங்களோடு பழகுவதற்கு அவர் ஏன் பயப்பட வேண்டும்? பயப்படத்தான் செய்கிறார். இல்லையென்றால் வீதியில் கண்டால் கூட ஏன் விலகி ஓடுகிறார். பாடம் நடத்தும் நேரத்தில் ஒரு நாள் கூட அவர் எங்களிடம் சிரித்ததில்லை. அதே சமயத்தில் கடுகடுப்பாயும் பேசியதில்லை. ஆனால் அவரின் கோபம் எங்க நோட்டைத் திருத்தும்போது தெரிந்து விடும்.
வழிமுறையைப் பின்பற்றி பாலன்ஸ் ஷீட் போடவில்லையென்றால் பார்த்ததுமே கண்டு பிடித்து விடுவார். விடையைக் கண்டு பிடித்தால் போதாது…ஸ்டெப்ஸ் கரெக்டா இருக்கணும்….என்று சொல்லிக் கொண்டே பச்சை இங்க் பேனாவால் பரட்டென்று அடிப்பார். நம் மூஞ்சியில் கீறி விட்டதுபோல் இருக்கும். ஓரிரு சமயங்களில் நீங்கள்லாம் கழுத மேய்க்கத்தான் லாயக்கு என்றே சொல்லியிருக்கிறார். அது ஆரம்பத்தில். அதற்குப் பின்னால்தான் தெருக் கம்பத்தினடியில் நாங்கள் அரட்டை அடித்துக் கொண்டிருக்கையில்….அவர் எங்களைக் கடந்து செல்லும் நிமிடங்களில்….அட்டியீய்ய்யேய்……என்று யாரையோ சொல்வதுபோல் எங்கோ பார்த்துக் கொண்டு மனோகரன் வாய்விட்ட போது அது அவரைப் பயப்படுத்தியிருக்குமோ என்னவோ…அதன் பின் அவர் எங்கள் வம்புக்கே வருவதில்லை. எப்படியாவது அந்த டேர்ம்மை (Term) முடித்துத் தொலைத்து விடுவோம் என்று கடனே என வந்து கொண்டிருப்பதாய்த் தோன்றியது.
அந்த ஏப்ரலில்தான் அவர் எங்களையெல்லாம் முட்டாளாக்கினார். தேர்வுக்காக எல்லோருக்கும் உறால் டிக்கெட் பெற்று ஒப்படைத்துவிட்டு காலை ஒன்பது மணிக்கு சென்டருக்கு வந்து விட வேண்டும் என்று தகவலையும் பகிர்ந்து விட்டு அவர் செய்ததுதான் எங்கள் எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
அது சரிடா….அவங்க வீட்ல எப்டி சம்மதிச்சாங்க…அவ்வளவு நம்பிக்கையா…?
இந்த மனுஷனப் பார்த்தா எவனுக்குத்தான்டா நம்பிக்கை வராது. இந்தப் பூனையும் பால் குடிக்குமாங்கிறதுமாதிரி….
அப்டீன்னா…அவரு அத்தனை பேரையும்ல கூட்டிட்டுப் போயிருக்கணும்….அவள மட்டும் ஏன்….?
அத நீ அவர்ட்ட…இல்லன்னா…அவகிட்டத்தான் கேட்கோணும்…எங்கிட்டக் கேட்டேன்னா…? நானா அவங்க பின்னால சுத்திட்டிருக்கேன்…. ஒரு விதத்துல நாம கோட்டை விட்டோம்னா…அவ ஒரு விதத்துல கோட்டை விட்ருக்கா…! அவரென்ன அவளப் பாஸ் பண்ணவா வைக்க முடியும்? பரீட்சைக்குத்தான் கொண்டு விட முடியும்…! அதப் பத்தி அவளும் சரி…அவரும் சரி….கவலப்பட்டதாத் தெரியலங்கிறதுதான் இங்க நாம கவனிக்கனும் …
இப்டியே அடுத்தவங்க என்ன செய்றாங்கங்கிறதக் கவனிச்சே நம்ம பொழப்புப் போச்சு….அதப் பத்தி நாமளும் கவலைப்படல…அவரும் கவலப்படல….யாரு எப்படிப் போனா என்ன? மாண்பாளர் மாணம்பி அவர்கள் மாதுவைத் தள்ளிக் கொண்டு போய்விட்டார் என்பதுதானே இங்கே கண்டடைந்த உண்மை….! அந்த சேதுவுக்கு இந்த மாது…..! ஆஉறா…எத்தனை தோது…!
நாங்கள் தேர்வு மையம் செல்ல மதுரை சென்றடைந்த போது அந்தப் பெயர் பெற்ற கல்லூரி வீட்டின் தங்குமிடப் பட்டாசாலையிலிருந்து கை கோர்த்துக் கொண்டே வெளியேறிக் கொண்டிருந்தனர் இருவர்.
அது மாணம்பி என்கிற மாண்புடைய ஆசானும், மாயினியாய் நின்று எங்கள் இதயங்களைக் கொள்ளை கொண்ட மாணவி சுப்ரஜாவும்.
அந்த நிகழ்வுக்குப்பின்னர்தான் அவரின் தலை இத்தனை குனிந்து போனதோ? எங்கே தன் குட்டு வெளிப்பட்டு விடுமோ என்று அஞ்சுகிறாரோ சேட்டன்.
நான் அவரைத் தொடர்வதை கவனிக்கவில்லைதான் என்றாலும், அவர் கால்கள் அவளின் வீட்டின் வழியாய்ச் சென்ற அந்தக் கணத்தில் ஒரு முறை…ஒரே ஒரு முறை எப்போதும் குனிந்த அந்தத் தலை சற்றே தன்னை நிமிர்த்திக் கொண்டு உள்ளே பார்வையைச் செலுத்தியதும்…..ஒரு கணம் அந்தக் கால்கள் தயங்கி அடியெடுத்ததும்……
அடேயப்பா…..மாட்சிமை பொருந்திய மாண்புடையவர்தான் இந்த ஆசான் என்று என்னை அந்தக் கணமே எண்ணி வியக்க வைத்தது.
மாணம்பீ…!..நீ பெரிய கோணம்பீடா…..!! – என் உதடுகள் என்னையறியாமல் கோபத்தில் முணு முணுத்தன.

Series NavigationESSAY WRITING COMPETITION IN ENGLISH FOR THE CHILDREN IN GRADES 3 TO 12 AND DRAWING COMPETITION FOR CHILDREN IN GRADES KG TO GRADE 2மலர்களைப் புரியாத மனிதர்கள்
உஷாதீபன்

உஷாதீபன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *