மானுடம் போற்றுதும்

This entry is part 1 of 34 in the series 28அக்டோபர் 2012

மானுடம் போற்றுதும்

மானுடம் போற்றுதும்

இருக்கின்றார் இவர்களெல்லாம்

இவ்வுலகில் என்பதினால்

மானுடம் போற்றுதும் எம்

மானுடம் போற்றுதும்.

இன்னாரைப் போல நீயும் இதெல்லாம் செய்ய வேண்டும்

இப்படித்தான் வாழ வேண்டும்

என்றெல்லாம் அடையாளம் காட்ட நம்முடன் யார் இருக்கிறார்கள்:?

அரசியலாகட்டும் சமூக வாழ்வியலாகட்டும்

ஆன்மிகமாகட்டும்\

ஊடகங்களாகட்டும்

கல்வி துறையாகட்டும்

எங்கேயும் எவருமி;ல்லாமல் இருக்கின்ற வெற்றிடம் நம்மைப் பயமுறுத்திக் கொண்டு இருக்கிறது.

சரியானவர்களுக்கு/தகுதியானவர்களுக்கு அங்கீகாரம்

கிடைக்காமல் இருப்பதை விட ஆபத்தானது

தவறானவர்களுக்கு/ தகுதியில்லாதவர்களுக்கு

கிடைக்கும் அங்கீகாரம் என்பது என் கருத்து.

நாம் நல்லவர்களை சந்திக்கவே இல்லையா?

யோசிக்கும் போது முகமும் முகவரியும் தெரியாத எத்தனையோ பேர்

நினைவுக்கு வருகிறார்கள்!

அவர்களைப் பற்றியும் அவர்களின் மிகச்சிறந்த அற விழுமியம் பற்றியும்

போற்றவும் கொண்டாடவும் நாம் ( முக்கியமாக நான்) தவறிவிட்டோம்

பத்திரிகைகளில் எப்போதாவது ஒர் ஓரத்தில் எவ்விதமான பரபரப்புகளும் இன்றி இம்மாதிரி செய்திகள் வெளிவருவது உண்டு. ஆனால் அந்தச் செய்திகளுக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்க நாம் அனைவரும்

தயாராக இல்லை என்பது தான் உண்மை. ஏனேனில் அந்தச் செய்திகளில்

இடம் பெறுபவர்கள் அனைவரும் மிக மிக சாதாரண மனிதர்கள்.

ஆனால் அவர்களிடம் தான் நாம் போற்ற வேண்டிய கொண்டாட வேண்டிய

வாழ்க்கையின் விழுமியங்கள் இன்றும் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றன.

அவர்கள் தான் மனித நேயத்தையும் மானுட மாண்பையும் தலைமுறை

தலைமுறையாக இந்த மண்ணில் வாழ வைத்துக் கொண்டிருக்கிறார்கள்

தொடர்ந்து இம்மாதிரியான உண்மைச் செய்திகளை ஊடகங்கள் வெளிச்சம்

காட்ட முன்வாராத செய்திகளை நாம் பகிர்ந்து கொள்வோம்.

மானுடம் போற்றுதும் :

செய்தி எண் : 1

இது கேரளாவில் கொச்சியில் நடந்த சம்பவம். பீட்டர் பெட்டிக்கடையில்-

பத்தி-ரிகைகள் விற்பவர். அவருடைய கடை வுட்லண்ட்ஸ் ஜங்ஷனில்

எம். ஜி ரோட் பகுதியில் இருக்கிறது. பத்திரிகை விற்பனையுடன்

சேர்ந்து லாட்டரி டிக்கெட் விற்பனையும் செய்பவர்.

பீட்டரின் வாடிக்கையாளர் முருகன், தமிழ்-நாட்டிலிருந்து

கொச்சி நகரத்திற்கு பிழைப்பு தேடி வந்திருப்பவர். பீட்டரின்

லாட்டரி டிக்கெட் வாடிக்கையாளர்களில் ஒருவர். எப்போதும்

முருகன் காலையில் கடைக்கு வந்து குறிப்பிட்ட லாட்டரி டிக்கெட்டுகளை

எடுத்து வைத்துவிட்டு மாலையில் காசு வந்தவுடன் பீட்டரிடம்

கொடுத்து தான் எடுத்து வைத்திருக்கும் லாட்டரி டிக்கெட்டுகளை

வாங்கிக்கொள்கின்ற பழக்கம் உள்ளவர். முருகன் துணிகளை இஸ்திரி

போட்டு கொடுக்கும் தொழிலாளி என்பதால் மாலையில் தான் அவர்

கையில் காசு கிடைக்கும்.

அப்படித்தான் அந்த வெள்ளிக்கிழமையும் காலையில் முருகன் கடைக்கு வந்து

ஐந்து லாட்டரி டிக்கெட்டுகளை எடுத்து வைத்துவிட்டுப் போனார். வழக்கம் போல மாலையில் வந்து லாட்டரி டிக்கெட்டுக்கான பணத்தைக் கொடுத்துக்

கொள்ளலாம் என்ற எண்ணத்தில். ஆனால் அந்தக் குலுக்கலில்

மாலையில் முருகன் எடுத்திருந்த இரண்டு டிக்கெட்டுகளுக்குப் பரிசு

விழுந்திருந்தது.

ஒரு டிக்கெட்டுக்கு ரூபாய் 40 லட்சத்துடன் ஒரு இன்னோவா கார் பரிசு.

இன்னொரு டிக்கெட்டுக்கு ரூபாய் பத்தாயிரம் பரிசு.

பரிசு விழுந்த டிக்கெட்டுக்கான பணத்தை இன்னும் லாட்டரி டிக்கெட் விற்பனை செய்த பீட்டர் வாங்கவில்லை. பீட்டர் நினைத்திருந்தால்

முருகன் எடுத்து வைத்திருந்த டிக்கெட்டுக்குத் தான் இந்தப் பரிசு

விழுந்திருக்கிறது என்பதை வெளியில் தெரியாமல் மறைத்திருக்க

முடியும். ஏனேனில் எடுத்து வைத்திருக்கும் லாட்டரி டிக்கெட்டின்

எண் பற்றிய எந்த விவரமும் முருகனிடமும் இல்லை.

ஆனால் பரிசு விழுந்திருப்பது என்னவோ முருகன் எடுத்து

வைத்திருந்த டிக்கெட்டுக்குத்தான்.

ரூபாய் 40 லட்சம் என்பதும் இன்னோவா காரும் பீட்டருக்கும்

பெரிய தொகைதான். எந்த மனிதனுக்கும் கொஞ்சம்

ஆசையைத் தூண்டும் சூழல் தான் . அதற்கான நியாயங்களை

பீட்டர் சொன்னால் முழுவதும் நிராகரிக்க முடியாது.

ஆனால் பீட்டர் மனசில் சலனமே எழவில்லை.

முருகனைத் தேடி பரிசு விழுந்ததைச் சொன்னபோது

முருகனும் தான் லாட்டரிக்கான பணத்தைக் கொடுக்காததால்

பீட்டருக்கு பரிசுத் தொகையை எடுத்துக் கொள்ளும் உரிமை

இருக்கிறது என்று சொல்லி இருக்கிறார். பீட்டர் மறுத்துவிட்டார்.

மீண்டும் முருகன் பாதி பாதி”50 ” “50” எடுத்துக் கொள்ளலாம் என்று

பகிர்ந்து கொள்ள முன்வந்ததையும் பீட்டர் ஏற்றுக்கொள்ளவில்லை.

பீட்டரும் முருகனும் நம்முடன் நாம் வாழும் காலத்தில் தான்

வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

செய்தி 2:

——————————————-

பகவந்தாஸ் என்ற ரயில்வே கடைநிலை ஊழியர் வழக்கம்போல அன்று

டிரெயினில் வேலை செய்துக் கொண்டிருந்தப் போது பயணி ஒருவர்

தன் கைப்பையை மறந்து விட்டுவிட்டு சென்றிருப்பதைக் கண்டெடுக்கிறார்.

அந்தக் கைப்பையில் இருந்தது ரூபாய் 15 லட்சம். கைப்பைக்குச் சொந்தக்காரர்

டில்லியின் முதல்வர் ஷீலா தீட்சித்தின் மகன். இந்தச் செய்தி ஊடகங்களுக்குப் பரவி புகைப்படக்காரர்கள் பகவன் தாஸைப் புகைப்படம் எடுக்க வந்தப் போது

புகைப்படக்காரர்களிடன் போஸ் கொடுக்க மறுத்துவிட்டார்.

என்ன பெரிய சாதனை என்று படம் எடுக்க வந்துவிட்டீர்கள்?

எப்போதும் செய்வது போலவே இப்போதும் இதைச் செய்திருக்கிறேன்

என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டார்.

இப்படியும் சிலர் நம் காலத்தில் நம்முடன்.

செய்தி 3

—————–

செப்டம்பர் 24, 2012 ஜீதேந்திர வாக் தன் விலை உயர்ந்த கைபேசியை

தான் பயணம் செய்த ரிக்ஷாவில் மறதியாக விட்டுவிட்டு இறங்கிவிட்டார்.

தொடர்பு கொண்ட போதெல்லாம் தொலைபேசி ஒலித்துக் கொண்டே

இருந்தது. வீட்டிற்குப் போய் மனைவியிடம் சொன்னார். மனைவியும்

வீட்டு எண்ணிலிருந்து தொடர்பு கொண்டார். சிறிது நேரத்தில் அவருக்கு

தொலைபேசி வந்தது. ரிக்ஷா டிரைவர் தன்னுடைய ரிக்ஷாவில் பயணம் செய்தவர் மறதியாக விட்டுச் சென்றதையும் கைபேசி ஒலிக்கும் போதெல்லாம்

விலை உயர்ந்த அந்தக் கைபேசியில் எப்படி அழைப்பை எடுத்துப் பேசுவது

என்பது தெரியாமல் தான் அவதிப்பட்டதையும் நேரில் சந்திக்கும் போது

சொல்லி இருக்கிறார். டிரைவரின் கைபேசியிலிருந்து அழைத்தவருக்குப் போன்

செய்ய போதிய அ:ளவு இருப்பு இல்லாமல் இருந்ததால் 10 ரூபாய்க்கு

தன் கைபேசியில் கையிருப்பை அதிகரித்துக் கொண்டு அதன் பின்

தொடர்பு கொண்டதையும் சொல்லி இருக்கிறார்.

செய்தி 4

—————–

இச்செய்தி எந்தப் பத்திரிகையிலும் வரவில்லை. நானும் வாசித்து அறிந்த செய்தியல்ல!

1987 ஜூன் முதல் வாரத்தில் மும்பையில் முதல் மழைக் கொட்டிய ஒரு

நாளிரவு 9 மணிக்கு, மருத்துவமனைக்குப் போய்விட்டு தன் வீட்டுக்குத் திரும்பிய கணவனும் மனைவியும். கொஞ்சம் டென்ஷனாக இருந்த நிலையில்

அந்த நிறைமாதக் கர்ப்பினிப் பெண் தன் கைப்பையை டாக்சியில் விட்டுவிட்டு இறங்கிவிட்டாள். வீட்டுக்குப் போன பிறகுதான் கைப்பை நினைவு வந்தது.

கைப்பையில் ரூபாய் 25000. + கொஞ்சம் சில்லறை. சயானில் அன்றைக்குப் புகழ்பெற்ற டாக்டர் மெர்ச்சண்ட் சிசரியன் செய்துதான் ஆகவேண்டும் என்று

உறுதியாக சொல்லிவிட்டதால் டாக்டரிடம் போய்விட்டு வீட்டில் எப்போதும் வரப்போகும் மருத்துவச்செலவுக்கு எந்த நேரத்திலும் தேவைப்படலாம் என்று

எடுத்த வந்தப் பணம் .

அந்த தொகை அன்றைக்கு அந்தப் பெண்ணுக்கு பெரிய தொகைதான்.

பணத்தை தொலைத்தாகிவிட்டது, கணவனும் மனைவியும் அதைப்பற்றி

எதுவுமே பேசிக்கொள்ளவில்லை, எப்போதும் போல “யு ஆர் கேர்லஸ்”

என்று கணவன் திட்டி இருந்தால் கூட அந்தப் பெண்ணுக்கு நிம்மதியாக

இருந்திருக்கும். ஆனால் அவருடைய அந்த மவுனம் அவள்

தூக்கத்தை தின்று துப்பிக்கொண்டிருந்தது. மறுநாள் பகல் 11 மணியளவில்

அவள் வீட்டுக்கு அருகில் இருக்கும் டாக்டர் குரேஷியின் கிளினிக்கில்

வேலைப்பார்க்கும் ஒருவர் வந்து கைப்பையை ஒரு டாக்சி டிரைவர்

டாக்டரிடம் வந்து கொடுத்துவிட்டு சென்றிருப்பதாகச் சொன்னார்.

குரேஷி டாக்டரின் க்ளினிக் இப்போதும் தாராவியில் இருக்கிறது.

தன் முதல் குழந்தைக்கு அந்தப் பெண் எப்போதும் அருகில் இருக்கும்-

டாக்டர் குரேஷியிடம் தான் போய்வருவது வழக்கம். அந்தப் பெண்ணின்

கைப்பையில் குரேஷி டாக்டரின் மருந்து எழுதிக் கொடுத்த ரசீது

இருந்ததால் பாந்திரா கலாநகரில் வாழ்ந்த டாக்சி டிரைவர்

முதல் நாளிரவு வீட்டுக்குத் திரும்பும் வழியில் பாந்திரா தாராவி

ரோட்டில் இறக்கிவிட்ட பயணியின் கைப்பை என்று சொல்லி

பையிலிருந்த ரசீதைக் காட்டவும் குரேஷி டாக்டரும் அடையாளம் கண்டு

வீட்டுக்கு ஆள் அனுப்பி இருக்கிறார். அந்த டாக்சி டிரைவரும்

கலாநகரிலிருந்து குரெஷி டாக்டர் க்ளினிக் வரை எவ்வளவு

மீட்டர் சார்ஜ் உண்டோ அதற்கு மேல் வாங்க மறுத்துவிட்டார்.

அந்தப் பெண்ணின் உறவினர் கைப்பையை வாங்கிவந்து கொடுத்தப் பின்

அந்தப் பெண்ணால் நம்பவே முடியவில்லை. பேங்க் கவரில் இருந்தப்

பணம் அப்படியே இருந்தது. இன்றுவரை அந்த டாக்சி டிரைவரின்

முகத்தை தன் நினைவில் கொண்டு வர பிரயத்தனம் செய்தும்

அவரால் அந்த மனிதனின் முகத்தை நினைவுக்கு கொண்டுவர

முடியவில்லை. ஒவ்வொரு நாளும் காக்கி யுனிபார்ம் அணிந்து

கற்பனையில் முகம் காட்டும் அந்த மானுடன் வாழ்க என்று

கண்ணில் நீர் மல்க… அந்த மானுடன் வாழ்ந்த திசைநோக்கி..

இன்றும்.. இதோ உங்களுடன் அதைப் பகிர்ந்து கொண்டும்.

மானுடம் போற்றுதும்

மானுடம் போற்றுதும்.

===================================================—————-===

Series Navigationஇலக்கியப்பயணம்: —கனவு இலக்கிய இதழுக்கு வெள்ளிவிழா —- கனவு 25
author

புதிய மாதவி

Similar Posts

2 Comments

  1. Avatar
    இளங்கோ says:

    நல்ல செய்திகள் கண்ணில் பட்டதும், வாழ்வின் மீதும், மானுடத்தின் மீதும் ஒரு புதிய நம்பிக்கை பிறக்கிறது. நன்றி..

  2. Avatar
    நிலாவண்ணன் says:

    இந்தப் பத்திகளைப் படித்தபோது என வாழ்க்கையில் நடைபெற்ற ஒரு சம்பத்தையும் பதிக்க வேண்டுமென மனம் தூண்டியது. 3 ஆண்டுகளுக்கு முன்னாள் எனது மகன் ஒரு விடிகாலை வேளையில் பெரிய விபத்தில் சிக்கி 4 நாட்களுக்குப் பிறகே மருத்துவர்களின் தீவிர சிகிச்சையில் உயிர் பிழத்தான். பாதி மண்டை ஒட்டுக்குப் பதில் செயற்கை ஓடு பொருத்தப் பட்டுள்ளது. அந்த விபத்தில் சிக்கிய என் மகனை முகம் தெரியாத மனிதரோ மனிதர்களோ கொண்டு வந்து கிள்ளான் மருத்துவமனையில் சேர்த்து விட்டு சொல்லிக்கொள்ளாமல் போய்விட்டார்கள். சில மணிகளில் சேர்க்கதிருந்தால் என் மகன் இன்று உயிரோடு இருந்திருக்கமாட்டான். மனிதத்தை வாழவைத்த அந்த மனிதர்களுக்கு அவர்கள் இருக்கும் திசை நோக்கிக் கும்பிட இப்போது எனக்கொரு வாய்ப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *