மானுடம் வென்றதம்மா

author
0 minutes, 8 seconds Read
This entry is part 18 of 23 in the series 26 ஜூலை 2020

பிரேமா ரத்தன்


மா மரக் கிளைகள் அசைந்து காற்றை வரவேற்றுக் கொண்டிருந்தன.  நான்கு கிளிகள் பழுத்த மாம்பழத்தைக் கொத்தித் தின்று கொண்டிருந்தன.  போட்டியாக அருகில் ஒரு அணில்,  கிளி கொத்திய பழங்களின் மிச்சத்தைத் தின்று கொண்டிருந்து.. சுனிதா இந்தக் காட்சிகளை எல்லாம் பார்த்தாலும், அவள்   மனம் அதில் லயிக்கவில்லை.பிரேமா ரத்தன்


பக்கத்து வீட்டில் வயதான  தம்பதியர் வசித்தனர்.  அவர்களுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள்.  இருவரும் நல்ல வேலையில் இருக்கிறார்கள். ஒருத்தருக்கு லண்டனில்  இந்திய தூதரகத்தில் வேலை. மற்றொருவருக்கு துபாயில் வேலை.. வருடத்துக்கு ஒரு முறை பெரிய பிள்ளையிடம் மூணு மாசம், சின்ன பிள்ளையிடம் மூணு மாசம் இருந்துட்டு ஆறு மாசம் இந்தியாவில் இருப்பாங்க.


எப்பொழுதும் லண்டனுக்கு ஜூனில் கிளம்புவார்கள். அங்கு மூன்று மாசம் இருந்துட்டு , அங்கிருந்து அப்படியே துபாய் சென்று மூணு மாசம் இருந்துட்டு,  டிசம்பரில் தான் இந்தியாவுக்கு வருவாங்க. இந்த முறை கோவிட்-19 நோய்த்தொற்றின் காரணமாக அவர்களால் லண்டன் செல்ல இயலவில்லை.


பெரியவர் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். சென்னையில் அவர்களுக்கு வசிக்க வசதியான ஒரு அப்பார்ட்மெண்ட்டைப் பிள்ளைகள் வாங்கித் தந்திருந்தார்கள்.


பாவம் அந்த பெரியவருக்கு  கொரானா வந்துவிட்டது என்று சற்று முன்னர் தான் போன் பண்ணி சொன்னார். சுனிதாம்மா, நீ இரண்டு சின்ன குழந்தைகள் வச்சிருக்க. எனக்குக் காய்ச்சல் இருக்குது . தொண்டை வலிக்குது. சளி இருமல் வேறு. நேற்று நமது தெருவில் இருக்கின்ற லேபில் டெஸ்டுக்குக் கொடுத்தேன். காலையில்தான் போனில் கொரானா பாசிட்டிவ் என்று சொன்னாங்க. உடனே கார்ப்பரேஷனிலிருந்து அடுத்த போன் வந்தது. என்னையும் என் மனைவியையும் ஆம்புலன்ஸில் கூட்டிட்டு போய்  அவளுக்கு டெஸ்ட் எடுத்தார்கள். நல்ல வேலை பார்வதிக்கு நோய் தொற்று அறிகுறி  ஒன்றுமில்லை. எனக்கு மருந்து மாத்திரை எல்லாம் கொடுத்தாங்க. இந்த மருந்தை சாப்பிட்டுட்டு , நல்ல ரெஸ்ட் எடுத்துக்கோங்க. வீட்டிலேயே கோரன்டைன் செஞ்சுக்கங்க .  மூச்சுவிட கஷ்டமா இருந்தா உடனே எங்களுக்குப் போன் செய்யுங்க. நாங்க வந்து உங்களை மருத்துவமனைக்குக் கூட்டிச் செல்கிறோம். தைரியமா இருங்க. நாங்க உங்களைத் தினந்தோறும் வந்து பார்த்துக் கொள்வோம் என்று கூறி அனுப்பி விட்டார்கள். பார்வதியைத் தனியா ஒரு அறையில் இருக்க சொல்லியிருக்காங்க.


“அம்மா உனக்கு எதுக்கு நான் போன் பண்ணினேனா . நீதான் எங்க வீட்டுக்குக் குழந்தைகளைக் கூட்டிட்டு அடிக்கடி வருவாய். அம்மா எங்க வீட்டுக்கு இனிமே வராதம்மா. நாங்க சமாளித்துக் கொள்வோம். நீ குழந்தைகளோட  ஜாக்கிரதையா இரும்மா” என்று நான் பேசுவதற்குள் போனை வைத்துவிட்டார்.


ராம் , யார் போன் என்று கேட்டவுடனே அவரிடம் இதைச் சொன்னேன்.


“நல்ல வேலை. உடனே சொல்லிட்டார்.  சுனில்க்கு நாலு வயது. ரேஷ்மாவுக்கு ஒன்றை வயசு. அவர்களை ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். வீட்ட விட்டு வெளியில எங்கேயும் போகாதே. கதவைப் பூட்டியே வை. எதையும் வெளியில போய் வாங்க வேண்டாம். குழந்தைகள் முக்கியம். புரிந்துகொள்” என்றான்.


ராம் சொல்லிட்டு ரூம் கதவை சாத்தி கொண்டான்.  அவனுக்கு வொர்க் ப்ரம் ஹோம். காலையில் பத்து மணிக்கு லேப்டாப்பைத் திறந்தால்
இரவு பதினொரு மணிக்கு தான்  படுப்பான். காலையில் 9 மணிக்கு முன்னால் படுக்கையை விட்டு எழுந்திருக்க மாட்டான்.. சுனிதா மணியைப் பார்த்தாள். பகல் மூன்று மணி. குழந்தைகள் தூங்கிக் கொண்டிருந்தன. எப்படியும் ஒரு மணி நேரம் எழுந்திருக்க மாட்டார்கள். ராம் சாப்பிட்டு விட்டுப் போய்விட்டான். அவனும் இப்போதைக்குக் கதவை திறக்க மாட்டான். ஒரு நிமிடம் யோசனைக்குப் பின், சுனிதா பர்சை எடுத்துக் கொண்டு, கதவை வெளிப்புறமாகப் பூட்டிவிட்டு வெளியில் கிளம்பினாள்.


காரை எடுத்துக்கொண்டு அருகில் உள்ள கடைக்குச் சென்றாள். பால், பிரட், பிஸ்கட், ஹெல்த் ட்ரிங்க்ஸ், பழங்கள் என்று வாங்கிக் கொண்டு வந்தாள். வேக வேகமாக அதைப் பெரியவர் வீட்டு வாசலில் வைத்து விட்டு, வீட்டுக்கு வந்து,கையைக் கழுவிக் கொண்டு வேறு உடை மாற்றிக் கொண்டாள். பெரியவருக்குப்  போன் செய்தாள்.


“அப்பா!  நான் சுனிதா பேசுகிறேன். உங்க வீட்டு வாசலில் ஒரு பையை வைத்துவிட்டு வந்து இருக்கேன். அதில் உங்களுக்குத் தேவையான அனைத்துப் பொருள்களும் இருக்கிறது .எடுத்துக்கொள்ளுங்கள். நாளைக் காலையில் 6 மணிக்கு உங்க வீட்டு வாசல்ல இன்னொரு பை இருக்கும். உங்களுக்கும் அம்மாவிற்கும் காலை டிபன், மத்தியான சாப்பாடு வைத்திருப்பேன். உடம்பு சரி ஆகும் வரைக்கும் நான் உங்களுக்குச் சாப்பாடு தருகிறேன்.  நீங்க தயவு செய்து எடுத்துக்கங்க. வேற ஏதாவது உங்களுக்குத் தேவை என்றால் எனக்குப் போன் செய்யுங்க. அந்தப் பாத்திரம் எல்லாம் உங்க வீட்டிலேயே இருக்கட்டும் . நான் உங்கள் உடல்நலம் சரியான பின் எடுத்துக்கிறேன்.” என்று கூறி முடிப்பதற்குள்


“அம்மா , ப்ளீஸ் வேண்டாம்மா. நீ குழந்தை குட்டி வச்சிருக்க . உனக்குச் சிரமம் வேண்டாம்  . தொற்றும் வந்து விடக் கூடாது.”


“அப்பா, நான் உங்க அருகே வரப் போகிறது இல்லை. உங்களைப் பார்க்க  போவதுமில்லை. குழந்தைகள் எழுந்து கொள்வதற்கு முன் உங்களுக்குச் சாப்பாடு செய்து கொடுத்து விடுவேன். தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள்.”


பக்கத்து முனையிலிருந்து நா தழுதழுக்க “அம்மா, உனக்கு ரொம்ப பெரிய மனசு. நீ ரொம்ப நல்லா இருக்கணும். உன் குழந்தைகளோட நல்லா இருக்கணும். தயவுசெய்து புரிந்து கொள்ளுமா”


“அப்பா ,நீங்க  புரிந்து கொள்ளுங்கள். மறு பேச்சு வேண்டாம். நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று கூறி போனை வைத்து விட்டாள்.
ஒருவாரம் கணவனுக்குத் தெரியாமல் சொன்னபடி செய்தாள். நான்கு மணிக்கே எழுந்து சமையலை முடித்து, அவர்களுக்குச் சாப்பாடு கட்டிக் கொடுத்து விட்டு வந்து, குளித்து விட்டு மற்ற வேலைகளைப் பார்ப்பாள்.


அன்றைக்குப் பக்கத்து வீட்டுப் பெரியவரிடம் இருந்து போன் வந்தது. “சுனிதாம்மா, எனக்குக் காய்ச்சல் சளி எல்லாம் குறைந்து விட்டது. பார்வதியையும் என் பக்கத்தில் விடுவதில்லை. உன் சாப்பாட்டை அவள் சாப்பிட்டு விட்டு எனக்கு அறையின் மூலையில் வைத்து விடுவாள். நான் சாப்பிட்டு விட்டு கழுவி வைத்துவிடுவேன். இன்றையிலிருந்து பார்வதி சமைத்து விடுவாள். முடிந்தால் கொஞ்சம் காய்கறி மட்டும் வாங்கி கொடு மா.”


“அப்பா , ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. நான் நாளை காலை காயை வாங்கி வைத்து விடுகிறேன். நீங்கள் அம்மாவை எடுத்துக்கொள்ள சொல்லுங்கப்பா”என்றாள்.


15 நாள் எப்படி சென்றது என்றே தெரியவில்லை. அன்று பெரியவர்கள் இருவரும் குளித்துவிட்டு, அப்பார்ட்மெண்ட் கீழே இருக்கக்கூடிய விநாயகர் கோவிலுக்குச் சென்று வழிபட்டு வந்ததைப் பார்த்தாள். அவளுக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. இறந்துப்போன தன் அப்பா அம்மாவை நேரில் பார்த்தது போல்  சுனிதா மகிழ்ந்தாள். அவர்களுக்கு வராந்தாவில் இருந்து தன் கையை ஆட்டி  மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டாள்.  பதிலுக்கு அவர்களும் கையசைத்தனர்.


அடுத்து ரெண்டு நாள் சென்றுவிட்டது. சுனிதாம்மா “நான் உன்னை பார்க்க வீட்டுக்கு வரலாமா” என்று பக்கத்து வீட்டு அப்பா பேசினார். நான் அருகில் இருந்த ராம் முகத்தைப் பார்த்தேன். அவரும் வரச்சொல் என்றார். நானும் “வாங்கப்பா” என்றேன்.
சிறுது நேரத்தில் பெரியவர் வந்தார். அவருடன் இரண்டு பேர்  வந்தனர். ராம் அவரை வரவேற்று அமரச் செய்தான். சுனிதா காபியுடன் அவரை வரவேற்றாள். 


“சுனிதா இவர்கள் பத்திரிக்கையாளர்கள்.  கொரானா தொற்றிலிருந்து குணமான என்னைப் பேட்டி காண வந்தார்கள். என்னைப் பேட்டி காண்பதை விட, நான் குணமாவதற்குக் காரணமாக இருந்த உன்னைப் பேட்டி காண்பது தான் சரியானது என்று அவர்களுக்குப் புரிய வைத்து, இங்கு அழைத்து வந்துள்ளேன். உன்னைப் புகைப்படம் எடுத்துக்கொண்டு பேட்டிக்கான வந்துள்ளார்கள். உன்னை போல  ஊரில் பத்து பேர் இருந்தாலே, இந்த நோய் அண்டாதும்மா. ஓடிவிடும்” என்றார்.


ராம் , ஒன்றும் புரியாமல் சுனிதாவை ஏறிட்டுப் பார்த்தான்.


அதற்குள் புகைப்படக்காரர் சுனிதாவைப் படம் எடுத்து தள்ளிக் கொண்டிருந்தார். அவளைக் குழந்தைகளுடனும் கணவருடனும் புகைப்படம் எடுத்தார்கள். பக்கத்து வீட்டுப் பெரியவர்களுடன் சேர்த்து  புகைப்படம் எடுத்தார்கள். பின்பு அவர்கள் சுனிதாவிடம் சில கேள்விகளைக் கேட்க, அதற்கு அவள் தயக்கத்துடன் பதில் சொன்னாள். அவளுக்கு இதெல்லாம் எதற்கு என்று தோன்றியது. எல்லாம் ஐந்து நிமிடத்தில் முடிந்து விட்டது. பெரியவர் வீட்டுக்குச்  செல்வதற்கு முன் சுனிதாவின் கையில் ஒரு கவரைக் கொடுத்தார். அவர்கள் சென்றவுடன் வீட்டைப் பூட்டிவிட்டு அந்தக் கவரைப் பிரித்தாள். அவருடைய மகன்கள் இருவரும் தனித்தனியாக சுனிதாவிற்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியிருந்தார்கள். “எங்களுக்கு சென்னையில் ஒரு தங்கை இருக்கிறாள் என்பது தெரிந்து மகிழ்ச்சி அடைந்தோம். இந்த அண்ணன்கள் நிச்சயமாக உன்னை வந்து பார்ப்போம்.உன்னைச் சந்திக்க போவதில் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி . விரைவில் சந்திப்போம்”என்று அதில் எழுதியிருந்தது. அடுத்த நாள் காலை தொலைக்காட்சிகளில் பத்திரிகைகளில் சுனிதாவின் புகைப்படத்துடன் பெரியவரின் பேட்டியும் வெளியாகியிருந்தது. புது மலர் நாளிதழில், “கொரானாவிற்கு மருந்து மனிதம்” என்ற தலைப்பில் செய்தி வெளியாகியிருந்தது.


ராம் , புதிய அர்த்தத்துடன் மனைவியைப் பார்த்து புன்னகைத்தான். அதிலும் மனிதம் தான் காதலுடன் வெளிப்பட்டிருந்தது.

Series Navigationகுட்டி இளவரசிபட்டியல்களுக்கு அப்பால்…..
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *