மாவீரன் கிட்டு – விமர்சனம்

This entry is part 1 of 18 in the series 12 பெப்ருவரி 2017

maaveeran

படத்தில் காட்டப்படும் அத்தனை காட்சிகளுமே உண்மையில் நடப்பவை தான். எந்த காட்சியையும் சினிமாத்தனமானது என்று ஒதுக்கிவிட முடியாது. இந்த படத்தை வைத்து சில கோணங்களை எளிதாக விளக்கிவிடலாம்.

12-ம் வகுப்பில் மாநிலத்திலேயே முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்று கலெக்டருக்குப் படிக்கச் சொல்லி ஊக்கப்படுத்தப்படுகிறான். உடனே ஆதிக்க சாதிகளுக்கு பிடிக்காமல் அதை தடுக்கும் விதமாய் அவன் மீது வீனான கொலைப்பழியை சுமத்திவிடுகிறார்கள்.  அதிலிருந்து மீண்டும் அவன் வந்தானா என்பது கதை.

அதாவது ஒரு கூட்டத்திற்கு கிடைக்கும் படிப்பை,  தொடர விட்டால் ஏவலுக்கு ஆட்கள் கிடைக்க மாட்டார்கள் என்கிற காரணத்தினால்,  அந்த படிப்பை படிக்க விடாமல் தடுக்கிறார்கள். இதை ஒரு பக்கம் குறித்துக்கொள்ளுங்கள். அடுத்ததாக தலைமறைவாக இருக்கும் கிட்டுவை வெளிக்கொணர ஸ்ரீதிவ்யாவின் தந்தை  சொல்லும் வார்த்தை மிக முக்கியமானது “காதல் எது வேணாலும் செய்யும்”. இந்த இரண்டும் நான் கவனித்த மிக முக்கியமான இடங்களாக எனக்கு படுகிறது.

இளவரசன் கொலை வழக்கு நினைவிருக்கலாம். அதை சாக்காக வைத்து மூன்று கிராமங்களை எரித்தார்கள். ஆக மூன்று கிராமங்களில் உள்ள மாணவர்களின் படிப்பு அந்த வருடத்தில் கந்தல். கெடுத்தாகிவிட்டது.

நான் சொல்ல வருவதை தெளிவாக சொல்ல ஒரு உதாரணம் கொடுக்கிறேன்.

இங்கே அமெரிக்காவில் எல்லாவற்றுக்கும் க்ரெடிட் கார்டு தான். அதில் செலவு செய்ய செய்ய க்ரெடிட் பாயின்ட் என்ற ஒன்று வளறும். அது நல்ல நிலையில் இருந்தால் தான் கார் வாங்கவும், வீடு வாங்கவும் லோன் தருவான். அது நல்ல நிலையில் இல்லையெனில்? அப்போதும் லோன் கிடைக்கும் . ஆனால் , மிக அதிக அளவிலான வட்டி விதிக்கப்படும். இங்கே கருப்பர்கள் ஒடுக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள். ரயில்களிலும், பொது இடங்களிலும், ஏன் அலுவலக வாசல்களிலும் கூட இவர்களே கையேந்துவார்கள். காரணம்? இவர்கள் சின்ன பிள்ளைகளாக இருக்கும்போதே குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களாக இருப்பார்கள். அதனால் இவர்களின் க்ரெடிட் எண் மிக மிக மோசமாக இருக்கும். இவர்களால் எங்குமே லோன் வாங்க முடியாது. வாங்கினால் மும்மடங்கு வட்டி கட்டவேண்டும். இத்தனைக்கும் இங்கே கல்வி இலவசம்.  இவர்கள் ஏன் குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார்கள்? இந்த கையேந்தும் சூழல் அவர்க்ளுக்கு ஏன் வருகிறது ?

அமெரிக்கா ஒரு சுதந்திரமான நாடு. சுதந்திரத்தை மெச்சும் நாடு. இங்கே பிள்ளைகள் சுதந்திரமாக இருக்க பழகி வளர்க்கப்படுகிறார்கள். ஆனால் கருப்பர்களுக்கோ ரத்தத்தில் படிப்பு கலந்திருக்காது. போதிய‌ ஆலோசனைகளின்றி மொன்னை படிப்புகளை படித்துவிடுவார்கள். அதற்கு பெரிதாக வேலை வாய்ப்பு இருக்காது.  கூலி வேலைகளில் சட்ட சிக்கல்கள் அதிகம். சில இடங்களில் சட்டத்தை மீறினால் தான் போதிய வருமானம் கிட்டும். மீறுகையில் க்ரெடி எண் போய்விடும். அதனால் லோன் கிடைத்தாலும் அதிக வட்டியை சமாளிக்க முடியாது. மென்மேலும் நெருக்கடிகள் தான். வாழ்க்கைக்கும் பணம் வேண்டுமே? ஆதலால் பிள்ளைகள் தனியே வேலை பார்ப்பார்கள். கல்வி இன்றி நிரந்தரமாக ஊதியம் உள்ள வேலைகள் கிட்டாது. விளைவு? மீண்டும் கூலி. மீண்டும் அத்துமீறல்.

இங்கே நீங்கள் கவனிக்க வேண்டியது, குற்றம் செய்ய அவர்களை உந்தும் அவர்களுக்கிருக்கிற சுதந்திரம். உடன் படிக்கும் வெள்ளை இன மாணவர்களுக்கு சமமாக தாங்களும் இருக்கிறோம் என்கிற நினைப்பில் இயங்குகையில் காதல், சுதந்திரம் என்று குழப்பிக்கொள்கிறார்கள். விளைவு? அதலபாதாளம் தான். இவர்கள் கொஞ்சம் வாலை சுருட்டிக்கொண்டு பல்லை கடித்துக்கொண்டு படித்தால், முன்னுக்கு வந்துவிடலாம். நவீனத்துவ உலகமோ, அதன் கோட்பாடுகளோ அதற்கு அனுமதிப்பதில்லை. அதை குறுகிய மனப்பான்மை என்கிறது. அதைக் கூடாது என்கிறது. சுதந்திரம்!! அது இவர்களுக்கு தரப்படுவதே அவர்களுக்கு விஷம் தான். அதை கட்டற்று அவர்களுக்கு தெருவதே ஒரு வித அரசியல் தான். ஒரு வித அடக்குமுறை தான். அதை அந்த பாதிக்கப்பட்டவர்களே உணராதவரையில், வெள்ளையினத்தவர்களுக்கு கொண்டாட்டம் தான்.

முன்னுக்கு வர கட்டுக்கோப்பு அவசியம். எல்லா நேரமும் சுதந்திரம் குறித்து பேசுக்கொண்டிருக்க முடியாது. கட்டற்ற சுதந்திரம் எப்போதுமே ஆபத்துதான்

இங்கே எல்லோருக்கும் இருப்பதாக சொல்லப்படும் சுதந்திரத்தை தனக்கு இருப்பதாக எண்ணிக்கொண்டு ஒரு தலித் ஆண் திரிந்தால், அதில் சிக்கவைத்து அடிமைப்படுத்த ஒரு ஆதிக்க சாதி கூட்டமே இருக்கிறது என்பதை தலித் மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். ஆனால் இதை இப்படியே வெளியே சொன்னால், சுதந்திரம், ஆணாதிக்கம்” என்று வரிந்து கட்டிக்கொண்டு வந்துவிடும் அந்த கூட்டம். ஒடுக்கப்பட்ட சூழலில், அதிகம் படித்தவர்களின் ஆலோசனைகள் இல்லாத தலித் இளைஞன் சூழல்களில் பிடியில் சிக்கி கோட்டை விட்டுவிடுகிறான். இளவரசன், கோகுல்ராஜை அப்படித்தான் பார்க்கிறேன்.

“ஆணாதிக்க” வாதமெல்லாம் எல்லா இடத்திலும் பேச முடியாது. பேசக்கூடாது. ஆணாதிக்க பேச்சு சில இடங்களில் விஷமாகிவிடலாம். தலித் சமூகம் பின்னடைந்த சமூகம். மற்றவர்கள் தலித் இளைஞர்களை சுதந்திரமாக இருக்க அறிவுறுத்துவதற்கு பின்னால் அழிக்கும் அரசியல் இருக்கிறது.. தலித் குடும்பம் பின்னடைந்து இருக்கும்.பொருளாதார சுதந்திரம் இருக்காது. அதை காரணம் காட்டித்தான் ஆதிக்க சாதிகள் தலித் மக்களை அடிமைப்படுத்துவதே நடக்கிறது. அதை உடைக்க வேண்டுமானால், தலித் இளைஞர்கள் படித்து முன்னேறுவதே ஒரே வழி.

இந்த பின்னணியில், சுதந்திரம் என்பதை விட கட்டுக்கோப்பு என்பதே தலித் இளைஞர்களுக்கு தேவையானது. ஆனால், சுதந்திரம் பார்ததால் கட்டுக்கோப்பில் நெகிழ்வு இருக்கும். அந்த நெகிழ்வை பயன்படுத்தி காதல், இன்ன பிற என திசை திருப்புவதால், படிப்பு தடை படுகிறது. இளவரசன், கோகுல்ராஜ் வழக்குகள், அதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட கிராம அழிப்பு என்பதெல்லாம் இந்த பின்னணியில் புரிந்துகொள்ளலாம்.

இதற்கு ஆதாரம் சரித்திரத்தின் பக்கங்களில் இருக்கிறது. ஒரு சமூகத்தை அழிக்க வேண்டுமானால், அதன் நூலகத்தை அழித்தாலே போதுமானது.  அப்படித்தானே அழித்தார்கள் மாயா இனத்தவர்களை. அதே போல, ஒரு தாழ்த்தப்பட்ட அடிமைச்சமூகத்தை உருவாக்க வேண்டுமானால், கல்வியை மறுக்க வேண்டும். சுதந்திரமடைந்துவிட்ட, உலகமயமாக்கல் உலகில் அதை எப்படி சாத்தியப்படுத்துவது?

கட்டற்ற சுதந்திரம்.

சுதந்திரத்தை தந்துவிட்டால், அடிமை விபரம் தெரியாமல், கண்டதிலும் சிக்கிக்கொண்டு தானே அழிந்துபோவான். மற்றவர்களை காப்பாற்ற அவர்களின் படித்த குடும்ப உறுப்பினர்கள் இருக்கிறார்களே?

இதனால் லாபம் என்ன? யாருக்கு லாபம்? நிச்சயம் ஆதிக்க சாதிகளுக்குத்தான். கொத்தடிமை வேலைகள் பார்க்க, பிணம் தூக்க, சாக்கடை கழுவ ஆதிக்க சாதிகளுக்கு அடிமைகள் கிடைப்பார்கள்.. தலித் குடும்பங்களில்  சுதந்திரம் குறித்து பேசுவதே ஒரு ‘அழிப்பு அரசியல் தான்’ என்பதை இந்த விமர்சனம் வாயிலாக பதிவு செய்கிறேன்..

மேற்குலகம் சுதந்திரம் சுதந்திரம் என்றெல்லாம் உரத்து பேசுவதற்கு பின்னால், திட்டமிட்ட அரசியல் இருக்கிறது. அதில் வியாபாரம், வணிக நோக்கங்கள், ஆட்சி, அடிமைத்தனம் என எல்லாமும்  கலந்திருக்கின்றன.  நம்மூரிலும் பேசுகிறார்கள்.எல்லாவற்றுக்கும் பேசுகிறார்கள். 16 வயது இளம் பெண்ணிடம் சுதந்திரம் பேசுவதில், பெண்ணுக்கான நிஜமான சுதந்திரம் எத்தனை சதம் இருக்கிறதோ, அத்தனைக்கு பெண் உடலை போகப்பொருளாக்க குடும்பம் என்னும் அமைப்பை விட்டு வெளியே வரவைக்கும் நோக்கமும் இருக்கிறது. நான் எல்லோரையும் குறை சொல்லவில்லை. ஆனால் படிக்கிற வயதில் குட்டை பாவாடை அணிய அறிவுறுத்தப்படும் பெண் எதன் குறியீடு என்று நாம் யோசிக்க வேண்டும்.

முடிவாக, ஆணாதிக்கம் எங்கு பேசுகிறோம், எதில் பேசுகிறோம் என்பதிலெல்லாம் ஆழ்ந்த புரிதல் தேவைப்படுகிறது. அதை எல்லோரும் எல்லா நேரங்களிலும், எல்லா மனிதர்களுக்கும் , சூழல்களுக்கும் பொறுத்திவிட‌ முடியாது. இக்காலத்தில் சுதந்திரம் என்று முதலில் பேசுபவனைத்தான் சந்தேகிக்கவேண்டும்.  கட்டுக்கோப்பு குறித்து பேசுபவன் ஒரு அமைப்புக்கு, ஒழுங்குக்கு கட்டுப்படுபவன். இழக்க ஏதேனும் உள்ளவன்.

இன்னொன்றையும் பதிவிட வேண்டும். ஆதிக்க சாதிகளுக்கு தலித் மக்கள் எப்படியோ அப்படித்தான் வெள்ளைக்காரர்களுக்கு நம்மூர் ஆதிக்க சாதிகளும்.

கல்வி என்று பேசத்துவங்கிய மாவீரன் கிட்டு, திடீரென பல்டி அடித்து, சாதாரணமான கோரிக்கை , விடுவிப்பு என்று முடிந்தது அதிர்ச்சிதான். க்ளைமாக்ஸ் நிச்சயம் ஈர்க்கிறதுதான். ஆனால் அது அல்ல இந்த சமூகத்துக்கு சொல்ல வேண்டியது.

Series Navigationநாற்காலிக்காரர்கள்
author

ராம்ப்ரசாத்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *