மாவோவால் உருவான கொரோனா வைரஸ் நோய்கள்.

This entry is part 12 of 12 in the series 15 மார்ச் 2020

covid-19 அல்லது coronavirus-19 (2019) என்று அழைக்கப்படும் வைரஸ் சீனாவில் வுஹான் நகரத்தில் உள்ள காட்டு விலங்கு கறிவிற்கும் சந்தையில் மனிதரிடம் தொற்றியதாய் அறியப்படுகிறது. இது இன்றைய உலகத்தின் முக்கிய செய்தியாக உள்ளது. இதனால் சீனா, ஈரான், இத்தாலி போன்ற நாடுகளில் பெரும் உயிரிழப்பு உருவாகியிருக்கிறது. இது மற்ற நாடுகளிலும் பரவி கடுமையான செயல்பாடுகளை பல்வேறு அரசாங்கங்கள் கைக்கொள்ள ஏதுவாகியிருக்கிறது.

ஆசியன் ஃப்ளூ என்ற வைரஸ் நோய் 1957-1958 இல் தோன்றி சுமார் 11 லட்சம் பேர்களை கொன்றது. இது h2n2 என்ற வைரஸ். இது பன்றிகளிடமிருந்து மனிதர்களுக்கு தொற்றியது என்று அறியப்படுகிறது.

ஹாங்காங் ஃப்ளூ என்ற நோய் 1968-1970 இல் தோன்றி சுமார் 10 லட்சம் பேர்களை கொன்றது. இது h3n2 என்று அறியப்படுகிறது.

2002-3 இல் சார்ஸ் என்ற கொரானா வைரஸ் இதே போன்றதொரு சந்தையில் தெற்கு சைனாவில் தோன்றியது. இது 29 நாடுகளில் பரவி சுமார் 770 பேர்களை கொன்றது,.

மெர்ஸ் MERS வைரஸ் 2015இல், ஒட்டகங்களிடமிருந்தும், வவ்வால்களிடமிருந்தும் தோன்றி சுமார் 850 பேர்களை கொன்றது.

2009-2010 ஸ்வைன் ஃப்ளூ என்ற நோய் h1n1 வைரஸ் பன்றிகளிடமிருந்து பரவி சுமார் 2 லட்சம் பேர்களை கொன்றதாக அறியப்படுகிறது.

இப்போது இதே போன்றதொரு வைரஸ் தோன்றி இதுவரை 4700 (மார்ச் 12, 2019) பேர்களை கொன்றிருக்கிறது.

ஏன் இது போன்ற வைரஸ்கள் சீனாவில் தோன்றுகின்றன?

மனிதர்களை நோய்வாய்ப்படுத்தும் பல்வேறு வைரஸ்கள் மிருகங்களிடமிருந்தே தோன்றுகின்றன.

இன்புளூயென்ஸா என்ற ஃப்ளூ கோழிகளிடமிருந்தும் பறவைகளிடமிருந்தும் மனிதர்களுக்கு தாவுகின்றன.
ஒரு சில ஃப்ளூ வைரஸ்கள் பன்றிகளிடமிருந்து மனிதர்களுக்கு தொற்றுகின்றன
ஹெச் ஐ வி /எய்ட்ஸ் வைரஸ் சிம்பன்ஸியிடமிருந்து மனிதர்களுக்கு தொற்றின
எபோலா வைரஸ் பெரும்பாலும் வவ்வால்களிடமிருந்து மனிதர்களுக்கு தொற்றியதாக கருதப்படுகிறது.

இந்த கொரானாவைரஸ் 2019, பெரும்பாலும் வவ்வால்களிடமிருந்து, அழுங்கு என்னும் எறும்புண்ணிக்கு (pangolin) தாவி அதிலிருந்து மனிதர்களுக்கு தாவியதாக அறியப்படுகிறது.

இந்த விலங்குகள் எங்காவது மனிதர்களும் வவ்வால்களும் அழுங்குகளும் ஒரே இடத்தில் சந்திக்க வேண்டும். அதுதான் வுஹானில் உள்ள காட்டுவிலங்கு கறிக்கடை சந்தை. இங்கே விலங்குகள் கூண்டில் அடைக்கப்பட்டு ஒன்றன் மீது ஒன்றாய் அடுக்கி வைக்கப்படுகின்றன. மேலே இருக்கும் விலங்கிலிருந்து ஒழுகும் வேர்வை, ரத்தம், சீழ், மூத்திரம், மலம் ஆகியவை கீழே உள்ள விலங்குகளின் மீது விழுகின்றன. அவற்றிலிருந்து ஒழுகும் அனைத்து கழிவுப்பொருட்களும் இன்னும் கீழே உள்ள விலங்குகள் மீது விழுகின்றன. அவற்றை வெட்டி கறியாக்கி விற்பனை செய்யும் மனிதர்களின் மேல் இவை அனைத்தும் படிகின்றன. இந்த கறிகளை வாங்கிச்செல்லும் மனிதர்கள் இவற்றை தொடுகிறார்கள். இவற்றின் மீதுள்ள வைரஸ்கள் இவற்றை கழுவும் பயன்படுத்தும் மனிதர்கள் மீது தொற்றுகின்றன.

வைரஸ் தொற்றப்பட்ட மனிதர்கள் மற்றவர்களிடம் வைரஸ்களை பகிர்ந்து நோயை பரப்புகிறார்கள்.

இது உஹான் சந்தையில் உள்ள கடையில் ஒரு உதாரண விலைப்பட்டியல் . இவை பல்வேறு நாடுகளிலிருந்து கடத்தப்பட்டும் உள்ளூரிலேயே பிடிக்கப்பட்டும் இங்கே விற்பனைக்கு கொண்டுவரப்படுகின்றன.

அதுசரி, ஏன் சீனாவில் இந்த காட்டுவிலங்கு கறி சந்தைகள் தோன்றின?

1949இல் மா சேதுங்கின் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வந்ததும், அதன் முட்டாள்தனமான திட்டங்களா, சீன மக்கள் பஞ்சத்திலும் பட்டினியிலும் சிக்கி தவித்தார்கள். ஹெனான் பகுதியில் மட்டுமே 10 லட்சத்துக்கும் மேலான மக்கள் பட்டினியில் இறந்ததாக அறியப்படுகிறது. அதாவது அந்த பகுதியில் இருந்த எட்டு பேர்களில் ஒருவர் அரசு அடக்குமுறையாலும் பட்டினியாலும் கொல்லப்பட்டார். பிரம்மாதமான விவசாய உற்பத்தி செய்ய கிராமங்கள் கட்டளையிடப்படுகின்றன. விளையவில்லை என்று உண்மையை சொன்னவர்கள் கொல்லப்படுகிறார்கள். அதிகாரிகள் உற்பத்தியை காட்டுவதற்காக எல்லா தானியங்களையும் எடுத்துகொண்டு சென்றுவிடுகிறார்கள். ஒரு கிராமத்திலிருந்த 45 பேரில் 44 பேர்கள் இறந்தார்கள். மீதமிருந்த 60 வயதான ஒரு பெண்ணுக்கு பைத்தியம் பிடிக்கிறது. தனது 4 வயது தம்பியை அண்ணன் கொன்று தின்கிறான்.

இந்த உண்மைகள் இன்றைய சீனாவில் மறைக்கப்படுகின்றன. அதை ”கஷ்டங்கள் நிறைந்த மூன்று வருடங்கள்” என்று மேம்போக்காக குறிப்பிடப்படுகின்றன.

மாசேதுங்க் உருவாக்கிய இந்த பஞ்சங்களால், சுமார் 3 கோடியே 60 லட்சம் மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று இன்றைய கம்யூனிஸ்டு கட்சியும் ஒப்புகொள்கிறது. ஃப்ராங் டிகோடர் இந்த எண்ணிக்கை சுமார் 4 கோடியே 50 லட்சம் இருக்கும் என்று மதிப்பிடுகிறார்.

இது செயற்கையாக உருவாக்கப்பட்ட பஞ்சம்தான் என்று நான்ஸி கியான் (Xin Meng Nancy Qian ) அமார்த்திய சென் ஆகியோர் வலியுறுத்துகிறார்கள். விவசாய உற்பத்தி சீனர்களுக்கு போதுமானதாக இருந்தது என்றும், வினியோகமும், விவசாய மக்களிடம் அவர்களுக்கு தேவையான தானியத்தை விட்டுவிட்டு அதிகமாக இருப்பதை கொள்முதல் செய்யும் முறையை விட்டுவிட்டு, அவர்களிம் இருந்த அனைத்து தானியத்தையும் அவர்களது உணவுக்கு கூட விட்டுவைக்காமல் அனைத்தையும் கொள்முதல் செய்ததுமே இந்த பஞ்சம், பட்டினி உருவாக காரணம் என்றும் பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இன்னும் மாவோவின் முட்டாள்தன “ நான்கு பீடைகள் அழிக்கும் போராட்டம்” (four pests campaign) என்ற திட்டத்தின் காரணமாக எலிகள், கொசுக்கள், குருவிகள், பூச்சிகள் அழிக்க விவசாயிகள் கிராமப்புறத்தினர் பணிக்கப்பட்டார்கள்.

இதில் ஏராளமான குருவிகள் அழிக்கப்பட்டன. தானியத்தை அழிக்கும் பூச்சிகளை தின்னும் குருவிகள் கொல்லப்பட்டதால், வெட்டுக்கிளி பூச்சிகள் கட்டுக்கடங்காமல் பெருகி பயிர்களை படுநாசம் செய்தன. தைரியமுள்ள யாரோ மாவோவிடம் சொன்னதால், குருவிகளை கொல்லவேண்டாம் என்று திருவாய் மலர்ந்தருளி, குருவிக்கு பதிலாக படுக்கையில் இருக்கும் மூட்டைப்பூச்சிகளை அழிக்கலாம் என்று ஆணையிட்டார் மாவோ. ஆனாலும் என்ன செய்வது பெரும் அழிவு நிகழத்தான் செய்தது. குருவிகள் காணாமல் போய்விட்டன என்று சொன்னதால் இரண்டரை லட்சம் குருவிகளை சோவியத் யூனியனிலிருந்து சீனா இறக்குமதி வேறு செய்தது.

https://en.wikipedia.org/wiki/Great_Chinese_Famine
https://www.theguardian.com/world/2013/jan/01/china-great-famine-book-tombstone

இந்த காலத்தில்தான் சீன மக்கள் பசி பட்டினி பஞ்சத்திலிருந்து தப்பிக்க காட்டு விலங்குகளை, பாம்பு பல்லி பூரான், எலி என்று எது கிடைத்தாலும் சாப்பிட ஆரம்பித்தார்கள். இதற்காக கள்ள சந்தைகள் உருவாயின. ஏனெனில் உணவு உற்பத்தி சீன அரசாங்கத்தாலும், சீன கம்யூனிஸ்ட் கட்சியாலும் கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

பஞ்சத்தின் அடிபட்டு, பல கோடி பேரை இழந்த பின்னால், சீன கம்யூனிஸ்டு கட்சி, உணவு உற்பத்தியை அரசாங்கமே கட்டுப்பாடு செய்வதிலிருந்து விலகிகொள்ளவேண்டும் என்று யோசித்து, உணவு உற்பத்தியை பொதுமக்களே செய்யலாம் என்று அனுமதித்தது.

1978இல், அரசாங்கம் முழுமையாக அழிய இருந்த நேரத்தில்தான், அரசாங்கம் விவசாயத்தை, தனியார் செய்யலாம் என்று அனுமதித்தது. பெரிய கம்பெனிகள் உருவாயின. சிறு விவசாயிகள் வீட்டுக்கு பின்னால், விலங்குகளை வளர்த்துவியாபாரம் செய்ய ஆரம்பித்தார்கள். கூடவே காட்டு விலங்குகளை பிடித்துகொண்டு வந்து விற்பனை செய்தும் தங்கள் வறுமையை போக்கிகொள்ள முனைந்தார்கள்.

உங்கள் வறுமையை போக்கிக்கொள்ள எதுவேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள் என்று சீன கம்யூனிஸ்டு கட்சி அனுமதி அளித்தது.

1988இல், உலக அழுத்ததால், சீன அரசாங்கம் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வந்தது. ஆனால், இந்த சட்டத்தின்படி வனவிலங்குகள் அனைத்தும், “இயற்கை வளங்கள்” என்று வரையறுக்கப்பட்டது. அதாவது யாரேனும் இந்த விலங்குகளை பிடித்து அவற்றை உண்பது அனுமதிக்கப்பட்டது. கூடவே காட்டு விலங்குகளை பிடித்து வீட்டில் வளர்த்து விற்பதும் அனுமதிக்கப்பட்டது. இது கட்டுப்பாடற்ற வனவிலங்கு கறி சந்தைகளை சீனாவில் தோற்றுவித்தது.

கரடிகள், ஓநாய்கள், மயில்கள், பாம்புகள், வவ்வால்கள், ஆமைகள், மான்கள், எறும்புண்ணிகள், எலிகள், முதலைகள் ஆகியவை பெரிய பண்ணைகளில் வளர்க்கப்பட்டு விற்பனை ஆக ஆரம்பித்தன. பல நூற்றுக்கணக்கான கரடிகளை உணவுக்காகவே வளர்க்கும் பண்ணைகள் சீனாவில் தோன்றின. இத்தோடு கூட சீனாவில் வளர்க்கப்படாத விலங்குகள் உலகெங்குமிருந்து இங்கே கடத்திவரப்பட்டு விற்பனை செய்யப்பட ஆரம்பித்தன.

இதன் விளைவு உடனே தெரிய ஆரம்பித்தது.
2003இல் சார்ஸ் வைரஸ் மனிதர்களுக்கு தொற்றியது. இதில் சீனாவிலும் உலகெங்கும் பல ஆயிரக்கணக்கானவர்கள் இறந்தார்கள். இந்த வைரஸ் சிவிக் பூனைகளிடமிருந்து மனிதர்களுக்கு தொற்றியது என்று அறியப்பட்டதும், சீனா இந்த காட்டுவிலங்கு கறிக்கடை சந்தைகளை மூடியது. ஆனால், ஒரு சில மாதங்களுக்கு பிறகு, மீண்டும் இந்த கடைகள் சீனாவால் திறக்கப்பட்டன. 54 வனவிலங்குகள் இவ்வாறு விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டன. இதில் முன்பு தடை செய்யப்பட்ட சிவிக் பூனைகளும் அனுமதிக்கப்பட்டிருந்தன.
ஏனெனில் சீனாவில் இந்த காட்டுவிலங்கு கறிக்கடைகளின் மொத்த உற்பத்தி 140 பில்லியன் டாலரிலிருந்து 180 பில்லியன் டாலர்களாக உயர்ந்தது. இதில் பயனடையும் வியாபாரிகள் கொடுத்த அழுத்ததால், இந்த அனுமதி தொடர்ந்தது.
இந்த வனவிலங்கு கறிக்கடை சந்தை இந்த வனவிலங்குகளை டானிக் என்றும், மருத்துவ குணங்கள் நிறைந்தது என்றும், பாலுறவு வேட்கையை அதிகரிக்கும், நோய்களை தீர்க்கும், உடல் வலிமையை அதிகரிக்கும் என்பது போன்ற போலி வியாபார தந்திரங்கள் மூலம் விற்பனையை அதிகரிக்கிறது. இந்த வனவிலங்குகளை சாப்பிடுபவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ள பெரிய தலைவர்கள், அவர்களின் உறவினர்கள் போன்றவர்கள். இவர்கள் எண்ணிக்கையில் சிறுபான்மையாக இருந்தாலும், கம்யூனிஸ்டு கட்சியில் பலமுள்ளவர்களாக இருப்பதால், இவர்கள் செய்வதே சட்டமாக ஆகியிருக்கிறது.

ஆனால் உலகமெங்கும் இந்த வனவிலங்கு கறிக்கடை சந்தைகளை சீனா முழுமையாக மூட வேண்டும் என்று கோரிக்கை வலுத்துவருகிறது.

ஆனால், இந்த சந்தைகள் நிரந்தரமாக மூடப்படாது என்பதே உண்மை. இந்த சந்தைகள் மூடப்படும் வரை, சீனாவிலிருந்து தோன்று வைரஸ் நோய்கள் நிற்காது என்பதும் உண்மை.

Series Navigationஞானக்கண் மானிடன்
author

கோபால் ராஜாராம்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *