மிதிலாவிலாஸ்-12

This entry is part 23 of 25 in the series 3 மே 2015

தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி

தமிழில்: கௌரி கிருபானந்தன்

tkgowri@gmail.com

நான்கைந்து நாட்கள் கழிந்தன. அபிஜித் மைதிலி இரண்டு பேரும் பிஸியாக இருந்தார்கள். இந்த நான்கைந்து நாட்களில் அபிஜித் சித்தார்த்திடம் போய் சற்று நேரம் இருந்து விட்டு வந்தான். ஒரு நாள் வந்ததுமே நான்கைந்து பேப்பர்களை மைதிலியின் முன்னால் வைத்தான். எல்லாமே சல்வார், கமீஸ், ஸ்கர்ட், பிளவுஸ் டிசைன்கள். பதினெட்டு இருபது வயது பெண்களை, முக்கியமாக கல்லூரிப் பெண்களை உத்தேசித்து வரையப்பட்டவை. கலர் பென்சில்களால் ஸ்கெட்செஸ் தத்ரூபமாய் இருந்தன. ஓரிரண்டு டிசைன்களுக்குக் கீழே அழகான ஸ்லோகன்கள் இருந்தன.

“யார் போட்டார்கள்? ரொம்ப நன்றாக இருக்கு” என்றாள் மைதிலி.

“சித்தார்த்!”

மைதிலி வியப்படைந்தவளாய் அவற்றை திரும்பவும் கையில் எடுத்துப் பார்த்தாள். “சித்தார்த் வரைந்தானா? கலர் காம்பினேஷன் ரொம்ப நன்றாக இருக்கு. ரைட்டப்பும் நன்றாக இருக்கு.”

“நான் அவனிடம் பத்து மணிக்கு வரப் போவதாக சொல்லியிருந்தேன். கொஞ்சம் தாமதமாகி விட்டது. போன் செய்து பதினெட்டு இருபது வயது பெண்கள் அணிந்துகொள்ளும் படியாக ஆடைகளின் ஸ்கெட்செஸ் வரையச் சொன்னேன். அவனுக்குப் பொழுது போகும் விதமாக ஏதாவது வேலையைக் கொடுக்க வேண்டும் என்பதுதான் என் எண்ணம். போன பிறகு பார்த்தால், அவன் நர்ஸ் மூலமாக கலர் பென்சில்ஸ் வரவழைத்து ஸ்கெட்செஸ் போட்டு, ரைட்டப் எழுதி தயாராக வைத்திருக்கிறான். பார்த்ததுமே என்னால் நம்ப முடியவில்லை. கலர் காம்பினேஷன் பற்றி அவ்வளவு தெளிவு எங்கிருந்துதான் வந்ததோ?” அபிஜித் பேப்பரைக் கையில் எடுத்துக் கொண்டு கூர்ந்து பார்த்துக் கொண்டே “இவனுள் ரசனை இருக்கிறது மைதிலி! இந்தப் பச்சை நிறத்திற்கு லைட் கலர்ஸ் எப்படி இணைத்திருக்கிறான் என்று பார்த்தாயா? பிறவியிலேயே வந்த வித்தையாக இருக்கும் என்று தோன்றுகிறது. பேஷன் டிசைனிங்கில் பட்டம் வாங்கியவர்களை எனக்குத் தெரியும். வர்ணங்களை தேர்ந்தெடுப்பதில் அவர்களிடம் ஒரு இயந்திரத்தன்மை தெரியும். இந்த நீல வண்ணத்தில் இந்த ரோஜா நிற மலர்களைப் பார். வானத்தில் ரோஜாக்கள் பூத்திருப்பது போல் இல்லையா? மை காட்! எனக்குக் கூட கவிதை வந்து விடும் போலிருக்கிறதே.”

மைதிலி அவன் பக்கத்தில் நின்று அவன் கையிலிருந்த பேப்பர்களை எட்டிப் பார்த்தாள். அபிஜித் சொன்னதில் கொஞ்சம் கூட மிகையில்லை. இருபது வயது கூட நிரம்பாத சித்தார்த் இவற்றை வரைந்திருக்கிறான் என்றாள் நம்பத்தான் முடியவில்லை.

அபிஜித் மைதிலியின் கையைப் பற்றிக் கொண்டே சொன்னான். “மைதிலி! மிசெஸ் மாதுருக்கு போன் பண்ணு. இந்த டிசைன்களுக்கு நெருக்கமாக இருக்கும் துணியை வாங்கி வாருங்கள். நம் மாடல் சோனாலி இருக்கிறாள் இல்லையா. இந்த பேட்டர்னில் ஆடைகளைத் தயாரித்து அவளை அணியச் செய்து போட்டோக்கள் எடுக்கச் சொல். நாளை மறுநாள் என் மேஜை மீது அந்த போட்டோக்கள் இருக்க வேண்டும் என்று மிசெஸ் மாதுரிடம் சொல்லிவிடு. ஓ.கே.” என்றான்.

மைதிலி தலையை அசைத்தாள்.

அந்த வேலையில் இரண்டு நாட்கள் மூச்சு விட்டுக் கொள்ளவும் நேரம் இருக்கவில்லை. சோனாலி தானும் சும்மாதான் இருப்பதாகச் சொல்லி ஷாப்பிங்கிற்கு வந்தாள். மிசெஸ் மாதுர், சோனாலி, மைதிலி மூவருமாகச் சேர்ந்து கடைகள் மீது படையெடுத்தார்கள். மிசெஸ் மாதுருக்கு டைலரிங் யூனிட் இருந்தது. அவர்களைக் கொண்டு ஆடைகளை தைக்க வைத்து, சோனாலியை அந்த ஆடைகளை அணிந்து கொள்ளச் செய்தார்கள். கல்லூரிப் பெண்னைப் போல் தோளில் பேக்கை, மாட்டிக் கொண்டு கூந்தலை விரித்தபடி நான்கைந்து போட்டோக்கள் எடுத்தார்கள்.

சோனாலி பர்பெக்ட் மாடல். போட்டோகிராபர் கேட்டதும் கல்லூரிக்குப் போகும் பெண் போல் போஸ் கொடுத்தாள். ஒரிரண்டு ஷாட்களை பஸ் ஸ்டாப் அருகில், கல்லூரி வாசலில் எடுத்தார்கள்.

ஆக மொத்தம் அபிஜித் கேட்டது போல் அன்று மாலை சித்தார்த் போட்ட டிசைன்களில், சோனாலி அணிந்திருந்த போட்டோக்கள் மேஜை மீது வைக்கப் பட்டன. அந்த நேரத்திற்கு அபிஜித் இன்னும் ஆபீசுக்கு வரவில்லை.

மைதிலி சோனாலியை, மிசெஸ் மாதுரை அவரவர்கள் வீட்டில் இறக்கிவிட்டு வந்தாள். இந்த இரண்டு நாட்களை சோனாலியுடன் நிறைய பழகும் வாய்ப்பு கிடைத்தது. அவள் எம்.ஏ. பாலிடிக்ஸ் படித்திருக்கிறாள். தந்தை இஞ்சினியர். சமீபத்தில் இறந்து போய் விட்டாராம். ஒரு தம்பியும், தங்கையும் இருக்கிறார்கள். மாடலிங் துறைக்கு வருவதற்கு தந்தை ஊக்கம் அளித்தாராம். நன்றாக சமைப்பாளாம். அவளுடன் பேசியதில் நேரம் போனதே தெரியவில்லை. மிசெஸ் மாதுர் நடு நடுவில் நிஷாவைப் பற்றிப் புலம்பிக் கொண்டிருந்தாள்.

மைதிலி வீட்டுக்கு வந்து பத்து நிமிடங்கள் பிறகு அபிஜித் போன் செய்தான். “போட்டோக்கள் ரொம்ப நன்றாக வந்திருக்கு. நான் நினைத்ததை விட ஆடைகள் ரொம்ப பிரமாதமாக இருக்கின்றன.”

“சோனாலி கல்லூரி பெண் போல் ரொம்ப பொருத்தமாக இருக்கிறாள் இல்லையா?”

“ஆமாம். நம் ரைட்டப்புக்கு சரியான அர்த்தம் கற்பிப்பது போல் இருக்கிறது. மைதிலி! முதலில் நான் இவற்றை விலை உயர்ந்த ஆடைகளாகவே தயாரிக்கச் செய்வேன். குறைந்த அளவில் மார்கெட்டில் ரிலீஸ் செய்வோம். பப்ளிசிட்டி அதிகமாக இருக்கணும். மக்களுக்கு அதிக அளவில் போய் சேரணும். ஒரு பக்கம் சித்தார்த் இன்னொரு பக்கம் சோனாலி நமக்கு சரியான நேரத்தில் கிடைத்தார்கள். சற்று முன்னால்தான் நர்சிங் ஹோமுக்கு போன் செய்தேன். சித்தார்த்தை நாளைக்கு அனுப்பி விடுவதாக டாக்டர் சொல்லியிருக்கிறார். மைதிலி! எங்கேயாவது வசதியான வீடாகப் பார்க்கச் சொல்லி மிசெஸ் மாதுரிடமாவது, சாரதா மாமியிடமாவது சொல்ல வேண்டும். சித்தார்த் நமக்கு அருகில் இருந்தால் நன்றாக இருக்கும்.”

‘அபிஜித்! அவசரப் படவேண்டாம். மாற்றங்கள் மெதுவாகாவே நிகழ வேண்டும்.”

“அதுவும் உணமைதான். யு ஆர் கரெக்ட். ஓ.கே. வைத்து விடுகிறேன்.” போனை வைத்து விட்டான்.

மைதிலி போனை வைத்து விட்டு பின்னால் சாய்ந்து உட்கார்ந்தாள். அந்த போட்டோக்களின் பிரதிகள் அவளுடைய மேஜை மீது இருந்தன. அந்த ஆடைகளின் டிசைன்கள், வண்ணங்கள் எல்லாமே சிறப்பாக இருந்தன. இவ்வளவு சின்ன வயதில் சித்தார்த்துக்கு இவ்வளவு திறமை எப்படி வந்தது? மைதிலிக்கு ஆச்சரியமாக இருந்தது.

அழகான அந்த ஆடைகள் சொனாலிக்கு மிகவும் பொருத்தமாக இருந்ததால் அந்த படங்களில் முழுமை இருந்தது. சித்தார்த் பற்றி அபிஜித் ஜோசியம் சொன்னது உணமையாகும் அறிகுறிகள் அந்த போட்டோக்களில் தென்பட்டன.

சித்தார்த்தை பார்ப்பதற்கு மறுபடியும் போக வேண்டும் என்ற எண்ணம் மைதிலியின் மனதில் திடீரென்று அலையைப் போல் பொங்கி எழும்பியது. ஆனால் கட்டுப்படுத்திக் கொண்டாள். சித்தார்த் விஷயத்தில் தன்னுடைய மனம் கட்டுபாட்டில் இல்லாமல் போவதை உணர்ந்து தன்னைத் தானே எச்சரித்துக் கொண்டாள்.

அதற்குள் போன் மணி ஒலித்தது. சாரதாம்பாள் செய்தாள்.

“மாமா காலையில் கிளம்பிப் போனவர். இன்னும் வீடு திரும்பவில்லை.”

“வந்து விடுவார். கவலைப் படாதீங்க.”

“வேண்டாம் என்று நினைத்தாலும் வேண்டாத யோசனைகள்தான் வரும். வீடே வெறிச்சென்று இருக்கு.”

“டாக்டர் எங்கே போயிருக்கிறார்?”

“அசோக் நகரில் ஒரு நண்பரைப் பார்த்துவிட்டு வருவதற்காக போனார். அவர்கள் வீட்டில் போன் இல்லை.”

“நீங்க கவலைப் படுவீங்க என்று மாமாவுக்குத் தெரியும். வெளியே இருந்தாவது போன் செய்வார் இல்லையா?”

“கட்டாயம் செய்வார். எந்த தகவலும் இல்லை என்பதால்தான் பயமாக இருக்கு. என்னையும் கூட வரச் சொன்னார். ஜலதோஷமாக இருப்பதால் போகவில்லை. அபிஜித் இருக்கிறானா? அவனுடைய நண்பன் வாசுவின் வீடு அதே தெருவில்தான் இருக்கு. யாரையாவது அனுப்பி விசாரிக்கச் சொல்கிறாயா?”

“அபிஜித் இன்னும் வீட்டுக்கு வரவில்லை.”

“அப்படியா!”

“பயப்படாதீங்க மாமி! உங்கள் அவுட் ஹவுஸ் காலியாகத்தான் இருக்கு. யாருக்காவது வாடகைக்கு விடக் கூடாதா?’ என்றாள் மைதிலி.

“அபிஜித் எப்போதிலிருந்தோ அந்த வார்த்தை சொல்லிக் கொண்டு இருக்கிறான். எங்களுடன் ஒத்துப் போகிறவர்களாக இருக்க வேண்டும். கொடுத்த பிறகு தொல்லை கொடுத்தால் எங்களால் சமாளிக்க முடியாது இல்லையா.”

“எங்களுக்கு தெரிந்த பையன் ஒருவன் இருக்கிறான். ரொம்ப நல்லவன். சின்ன வயசுதான்.”

“உங்களுக்குத் தெரிந்தவன் என்றால் ஆட்சேபணை என்ன இருக்கப் போகிறது? எங்களுக்கும் பிரச்சினை எதுவும் இருக்காது.”

“யாருக்கும் தொல்லை கொடுக்கும் ஆசாமி இல்லை. நாங்களும் விஷயம் தெரியாமல் சொல்ல மாட்டோம் இல்லையா? அபிஜித் வந்து உங்களிடம் பேசுவான்.”

“ஆகட்டும். அதோ .. கார் சத்தம் கேட்கிறது. மாமாதான் வந்து விட்டார் போலும். ஆமாம் மாமாவேதான். மைதிலி! உன்னுடைய உயிரை அடிக்கடி இப்படி எடுத்துக் கொண்டிருப்பேன் நான்.”

“பரவாயில்லை. நீங்கள் அப்படி நினைக்க வேண்டாம் என்று முன்பே சொல்லி இருக்கிறேன்.”

“ஓ.கே. மாமாவிடம் நீ சொன்ன விஷயம் சொல்கிறேன். அவரும் மறுப்பு சொல்ல மாட்டார். வைத்து விடுகிறேன்” மாமி போனை வைத்து விட்டாள்.

மைதிலி யோசித்துக் கொண்டிருந்தாள். சாரதா மாமி வீட்டு அவுட் ஹவுஸ் என்றால் வசதியாக இருக்கும். அவன் அங்கே நிம்மதியாக வேலை பார்க்கலாம். சாரதாமாமியும் பிரியமாக இருப்பாள். ஆனால் அந்த பாட்டி சும்மாயிருப்பாளா? இது அவ்வளவு சுலபமாக நடக்கக் கூடிய விஷயம்தானா? மைதிலிக்கு சந்தேகமாக இருந்தது.

ஆனால் அபிஜித் நினைத்துவிட்டான் என்றால் மட்டும் அது நடக்காமல் இருக்காது. மற்றவர்களுடைய சந்தேகங்களை, பயங்களை போக்கடித்து எந்த விதமாக சம்மதம் வாங்க வேண்டுமென்று அவனுக்கு நன்றாகவே தெரியும்.

சித்தார்த் இங்கே வந்து விட்டால் சாரதா மாமி, சித்தார்த் இருவருக்கும் நன்றாக இருக்கும். முக்கியமாக தங்களுக்கு அருகில் இருப்பார்கள். இந்த ஏற்பாடு நடந்தால் நன்றாக இருக்கும் என்று மைதிலிக்குத் தோன்றியது.

அபிஜித் ஒரு வேலையை ஒப்படைத்தான் என்றால் அது முடியும் வரையில் மைதிலிக்கு நிம்மதியாக இருக்காது. ‘அந்த வேலை என்னவாயிற்று?’ என்று இராண்டாவது முறை அவன் கேட்கும் விதமாக வைத்துக் கொள்ள மாட்டாள்.

 

 

Series Navigationதொடுவானம் 66. இனி சுதந்திரப் பறவைதான்பிரியாணி
author

கௌரி கிருபானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *