மிளிர் கொன்றை

author
0 minutes, 2 seconds Read
This entry is part 2 of 12 in the series 8 ஜனவரி 2017

குந்தவை நாச்சியார்  

 

மிளிர்கொன்றை..
சாலை வெறிச்சோடியிருந்தது. தெருவிளக்குகளின்னும் ஒளியூட்டப்பட்டிருக்கவில்லை. அந்தியொரு போர்வையைப்போல கவிழ்ந்திருந்தது. எனது சுண்டுவிரலைப்பற்றியிருந்த சத்யாவின் பிஞ்சுவிரல்கள் வியர்த்திருந்தன. உதிர்ந்திருந்த கொன்றைமலர்களைத் தவிர்த்தபடி நடந்துகொண்டிருந்தோம். எனது வலதுமுழங்காலின் வலிபற்றிச் சிந்தித்துக்கொண்டிருந்தபொழுது சத்யா கேட்டான்.

” மம்மி எப்ப டாடி வருவாங்க?” நடந்தபடியே பேசியதில் அவனுக்கு மூச்சிரைத்தது.

“மம்மி வில் நெவர் கம்பேக் தம்பி” என்றேன்.

“ஈஸ் மாம் வெண்ட் டூ காட் டாடி ?”

“யாரு உங்கிட்ட அப்டி சொன்னாங்க?”

“கிரான்மாதான் டாடி. நிவினோட டாடிகூட சாமிகிட்டதான் போயிருச்சாம். அந்த ஆண்ட்டி செட் டூ மிஸ் வித் கிரை. அப்ப நம்ம மம்மியும் அந்த அங்கிளும் மீட் பண்ணிருப்பாங்கதானே டாடி?”

எனக்கு பதிலளிக்கத்தெரியவில்லை. யூகேஜி படித்துக்கொண்டிருக்கும் அவனுக்கு இத்தனை விபரம் சற்று அதிகமென தோன்றியது. அப்படியே அவன் தாயைப்போல.

பிருந்தாகூட இப்படித்தான். நிறைய புத்தகங்களெல்லாம் வாசிப்பாள். பிரான்ஸ் காப்கா, ஹெமிங்வே என்றெல்லாம் எதேதோ பேசுவாள். அவளுக்கு மிகப்பிடித்தமான சில்வியாபிளாத்தின் கவிதைகளை வெகுவாக சிலாகிப்பாள். மனித இருத்தலின் அபத்தத்தை உணராதிருப்பதுவே நல்லதென்பாள் அடிக்கடி. பத்திரிக்கைகளில் அஅவ்வப்போது அவளது கட்டுரைகளெல்லாம் வெளியாகும்.

எங்கு வெளியில்சென்றாலும் சூழல்களை வெகுவாக கவனிக்கக்கூடியவள். குறிப்பாக கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் ஒன்றுவிடாமல் கவனித்துவிட்டு அவர்களுக்காக நிரம்ப வருந்துவாள்.

“பாவம்பா.. அந்தப்பாப்பாவுக்கு சத்யா வயசுதான். இந்தக்கடவுளுக்கு கொஞ்சங்கூட கருணையேயில்ல பிரகாஷ்” என்பாள்.

சமயங்களில் மணிக்கணக்காக மவுனமாயிருப்பாள். சாளரத்திவழியே தெரியும் அண்டைவீட்டிலிருக்கும் கொன்றைமரத்தையே அசைவின்றியமர்ந்து பார்த்துக்கொண்டிருப்பாள்.

“எதுக்கு டாடி மம்மிய சாமி கூட்டிக்கிச்சு?”

“அது.. மம்மி குட் கேர்ள் இல்லயா ? அதனாலதான் சாமி தன்னோடவே கூப்டுக்கிச்சு”

“ஆமா டாடி. மம்மி குட் கேர்ள். எனக்கு மம்மு ஊட்டிவிடுவாங்க. ஷூ போட்டுவிடுவாங்க. டெய்லி தூங்குறப்ப கதைலாம் சொல்லுவாங்க, எங்கூட வெளையாடுவாங்க”

சாலையிலிருந்து குறுக்குச்சந்து ஒன்றின் திருப்பமொன்றில், மரத்தினடியில் ஒரு காதல்ஜோடி எங்களைக்கண்டதும் விலகி நின்றுகொண்டனர். கூடுமானவரை அவர்கள் திசையில் பார்ப்பதைத் தவிர்த்து நடந்தேன்.

“ஃபக்கிங் ஹிப்போகிரஸிக் சொசைட்டி” என்றாள் ஒருமுறை. பணிமுடிந்து வீட்டினுள் நுழையும்போதே.

“என்னாச்சுடாம்மா ? வரப்பவே ஹாட்டா இருக்க?”

“பார்க்ல ஒரு நாவல் பத்தின கலந்துரையாடல்னு சொன்னேன்ல?”

“ஆமா”

“முடிச்சிட்டு வெளிய வரோம், வாசல்ல ஒரு பையனும் பொண்ணும். காலேஜ் ஸ்டூடண்ட்ஸ். மேபி லவர்ஸ். ரெண்டும் நடுங்கிட்டு நின்னுட்டிருக்கு. ஒரு போலீஸ்காரன் அவங்களை கார்னர் பண்ணி மெரட்டிட்டிருக்கான். ஊட்ல பேரன்ஸை வரச்சொல்லுன்னு. அந்தப்பொண்ணு பாவம் அப்புடி அழுவுது. அப்பறம் நா போயி லெப்ட் ரைட் வாங்கிவிட்டுட்டேன். ஹ்யூமன் ரைட்ஸ், பிரஸ்னு மெரட்டினப்பறந்தான் அவங்களை விட்டான். தப்பு பண்றவங்களை புடிங்கடான்னா, லவ் பண்றவங்களை பாலோவ் பண்ணிட்டிருக்கானுங்க. இடியட்ஸ்”

நான் அவளுக்கு பதில்கூறாமல் சமைப்பதில் கவனமாயிருந்தேன். சத்யா உறங்கியபின் பின்னிரவில் என் கழுத்தைக் கட்டிக்கொண்டு கேட்டாள்.

“ஏம்பா நா செஞ்சது தப்பா?”

“நிச்சயமா இல்ல பிருந்தா.. உன் பக்கதிலருந்து நீ செஞ்சது சரி. பட் ஒரு சிஸ்டம்னு வரப்ப, சிலதைலாம் தவிர்க்கமுடியாதுடாம்மா”

“புல் ஷிட்.. வீ ஜஸ்ட் மேட் தட் சிஸ்டம் பிரகாஷ்”

“அப்கோர்ஸ்.. நானும் அதைத்தான் சொல்றேன். எப்ப சகமனுஷன்மேல நம்பிக்கையிழந்து இந்தமாதிரி ஒரு சிஸ்டத்தை உருவாக்கினோமோ அப்பவே வீ லாஸ்ட் அவர் ரைட்ஸ் டூ”

“டாடி குல்பி”

குல்பி வண்டிக்காரன் குல்பியைச் சுற்றியிருந்த ரப்பரை வெட்டிய நேர்த்தி, பார்ப்பதற்கு அத்தனை அழகாக இருந்தது. சத்யா குல்பியைச் சப்பியபடியே கேட்டான்,

“நா எப்ப டாடி சாமிகிட்ட போவேன்?”

நான் அவனைத் தூக்கிக்கொண்டேன். அவன் எனது சட்டைப்பையிலிருந்த கைபேசியை எடுக்க, அதை அவனிடமிருந்து வாங்கி மறுபடிப் பையிலிட்டபடிக் கூறினேன்.

“பாரு தம்பி.. எவ்ரிபடி வில் கோ டூ காட் ஒன் டே. டாடி, நீ, கிரான்மா எல்லாரும். உனக்கு இன்னமும் நெறைய டைமிருக்கு ஓக்கேவா?”

“நா பர்ஸ்ட் ஸ்டாண்டட் போகும்போதா டாடி?”

“இல்லப்பா”

“ஜாஜி சித்திமாறி காலேஜ் போகும்போதா?”

 

“அதோ அங்க ஒரு தாத்தா போறாங்கல்ல, நீ அதுமாறி ஆனப்பறம்தான் சாமிகிட்ட போவ”

 

“ஏன் டாடி ஒனக்கு மட்டும் மீசையிருக்கு எனக்கு இல்ல?”

 

“நீயும் டாடிமாதிரி பெரிசானதும் உனக்கும் மீசை வரும் தம்பி”

 

“நாளைக்கி நா பெருசாயிருவேனா டாடி?”

எனக்கு சிரிப்பு வந்துவிட்டது. அவனுக்கு பதிலளிக்காமல் சிரித்தபடி நடந்தேன்.

இரண்டுதினங்கள் முன்பாகக்கூட அப்பா ராஜிபற்றிப் பேசினார்.

“ப்ளீஸ் பா.. ஐ நெவர் திங்க் அபவுட் லைக் திஸ். அவ சின்னப்பொண்ணுப்பா”

“ஐ அண்டர்ஸ்டான்ட் பிரகாஷ்.. பட், பாவம் அந்தக்கொழந்தை என்னபண்ணும் சொல்லு. ஹீ ரியலி மிஸ் ஹிஸ் மதர். இல்ல வெளிய வேணும்னாலும் பார்க்கிறோம் தம்பி” என்றவர் சட்டென்று மவுனமானார். அந்த மவுனத்திற்கான காரணம் எனக்குத் தெரியாததல்ல.

 

அவனுக்கு மட்டுமா ? எனக்கும்தான் பேரிழப்பு. ஜுரமெல்லாம் ஒரு உயிரை உருவிச்செல்லுமென நான் நினைத்திருக்கவில்லை.

“என்னடாம்மா என்ன பண்ணுது?”

“என்னன்னு தெரில மதியத்திலருந்தே பீவரிஷ்ஷா இருந்தது. இட்லி பண்ணி ஹாட் பேக்ல வச்சிருக்கேன்பா. நீயே எடுத்துப்போட்டு சாப்டுக்கிறியா ப்ளீஸ்?”

“என்னம்மா இப்டி கொதிக்குது ? நீ வா போயி ஒரு இஞ்செக்‌ஷன் போட்டுட்டு வந்திரலாம்”

“இல்லப்பா.. தூங்கி ரெஸ்ட் எடுத்தா சரியாயிரும். நீ தம்பியை எழுப்பு. ஹோம் ஒர்க் பண்ணிட்டு அப்டியே தூங்கிட்டான். அவனை எழுப்பி ஊட்டிவிட்ரு நா கொஞ்சம் தூங்குறேன்” என்றபடி சுருண்டு படுத்துக்கொண்டுவிட்டாள்.

மறுநாள் காலையும் ஜுரம் விடாமலிருக்க, அருகாமை மருத்துவமனை செல்ல அட்மிட் செய்யும்படிக் கூறிவிட்டனர். இரண்டு தினங்கள் ஏதேதோ பரிசோதனைகளென்று அலைக்கழித்தனர். பிடிபடாத மருத்துவமொழியில் பலவும் கூறினார்கள். ஒன்றுமில்லை விரைவில் குணமாகிவிடுவாளென்று எண்ணிருந்தேன். இரண்டாம்நாள் பின்னிறவில் இறந்துவிட்டதாகக்கூறியபொழுது நம்பவே இயலவில்லை. அதிர்ச்சியைவிட ஆச்சரியம்தான் சூழ்ந்தது என்னை.

சத்யா ஒருபக்கம் ஐஸ்கிரீம் வேண்டுமென அழுது அடம்பிடித்துக்கொண்டிருந்தான். பெற்றோர்கள் ஒருபுறம் தலையிலடித்துக்கொண்டு அழுதார்கள். மருத்துவமனை வாசலில் டிசம்பர் பூக்கள் உதிர்ந்திருந்தன. சத்யாவை யாரோ தூக்கிக்கொண்டார்கள். சாக்கோபாரைச் சப்பியபடி எனக்குப் பழிப்பு காட்டினான்.

இறுதிச்சடங்கின்பொழுதுவரை அவள் எழுந்துவிடுவாளென்று ஒரு முட்டாளைப்போல நிச்சயமாக நம்பிக்கொண்டிருந்தேன். யார்யாரோ சத்யாவை காண்பித்து அழுதரற்றினார்கள். ஒரு எந்திரத்தைப்போலத்தான் சடங்குகளில் கலந்துகொண்டேன்.

ஏடிஎம் இல் இருந்து அப்பொழுது தான் ஒருவர் பணத்தை எண்ணியபடி வெளிவந்தார். சத்யா அந்த எந்திரத்தின் பட்டன்களைத் தொடமுயன்றபொழுது அதட்டினேன். பணத்தை எடுத்துக்கொண்டு வெளியில் வந்தபின்பு சத்யா கேட்டான்.

“அது பூச்சாண்டியா டாடி?”

“யாருப்பா?”

“இப்ப நாம போனமே.. அங்ககூட ஒரு பெக்கர் அங்கிள் இருந்தாங்களே?”

“இல்லப்பா. அப்டிலாம் சொல்லக்கூடாது. அவரும் நம்மளமாதிரிதான்”

“ஓக்கேப்பா”

“இனிமே அப்டி யாரையாச்சும் பார்த்தா பெக்கர்னுலாம் சொல்லக்கூடாது தம்பி. ஹெல்ப் கேக்கிறவங்கன்னு சொல்லனும் சரியா?”

“எல்ப் கேக்குறங்கன்னா?”

“ஆமா”

“ஓக்கே டாடி”

“பிரகாஷ் பிஸியா?”

“உனக்கு மட்டும் எப்பவும் நா ஃப்ரீதாம்மா என்னன்னு சொல்லு”

“ஈவ்னிங் எங்கியாவது கோயிலுக்கு போலாமா?”

“என்ன திடீர்னு?”

“விஷயமிருக்குப்பா”

“சொல்லுடாம்மா என்ன?”

அவள் சற்று மவுனமாயிருந்தாள். அவளது மவுனத்தை கலைப்பதை நான் ஒருபோதும் விரும்புவதில்லை.

“இல்ல.. நாம கோயிலுக்கு போவோம். அங்க வச்சு சொல்றேன்”

“சரிடாம்மா”

சத்யாவும் நானும் வீடுநோக்கித் திரும்பிக்கொண்டிருந்தபொழுது இருள் நன்றாகப் பொழியத்துவங்கியிருந்தது.

“கால் வலிக்கிது டாடி டேக் மீ”

“ப்ளீஸ் தம்பி. கைல சாமான்லாம் இருக்குல்ல ? அதையும் வச்சிக்கிட்டு எப்டி டாடியால உன்ன தூக்கமுடியும் ?”

“போங்கடாடி” என்றபடியே சலிப்புடன் உடன் நடந்துவந்தான்.

அவளுக்குப் பிடித்தமான அதிக கும்பலில்லாத பழங்காலக் கோவில். சத்யா பிரகாரத்தின் தூண்களில் ஒளிந்துவிளையாடிக்கொண்டிருந்தான். ஒன்றிரண்டுதரம் மார்பிள் தரையில் வழுக்கிவிழுவதும், எழுந்து உடைகளைத் தட்டிக்கொண்டு மறுபடி ஓடுவதுமாக இருந்தான்.

“சரி சொல்லு. உனக்கு பையன் வேணுமா பொண்ணு வேணுமா?”

“ஹேய் லூசு.. எப்பப்பா?”

“குருவாயூர் டிரிப் போனமே அப்பன்னு நெனைக்கிறேன்” என்று கண்ணடித்தாள்.

 

தன்னியல்பாக அவள் கைகளைப்பிடித்துக்கொண்டேன்.

“போறப்ப டாக்டரை பார்த்திட்டு போவோம்மா”

“வேணாம்பா. சிம்டம்ஸ்லாம் அப்டித்தான்னு தோணுது. நைட் கார்ட் வாங்கிட்டுவா.. செக் பண்ணிட்டு அப்பறம் டாக்டர்ட்ட போவோம்”

அப்பார்ட்மெண்ட் வாச்மேனிடம் அவருக்கான இரவுணவு பார்சலைக் கொடுக்கும்படி சத்யாவிடம் கூறினேன். சத்யா வெட்கமடைந்தபடியே அவரிடம் கொடுக்க, அவர் ” மவராசனாயிருய்யா” என்றபடி வாங்கிக்கொண்டார்.

 

எனக்குமுன்பாக படிகளில் தாவி வீட்டின்முன்பு நின்றான். சாவியை என்னிடமிடுந்து பிடுங்கி பூட்டைத் திறக்கமுயன்றான் முடியவில்லை. சாமான்களைக் கீழே வைத்துவிட்டுக் கதவைத்திறக்க, அவன் விரைந்துசென்று டீவியை ஆன்செய்து குழந்தைகளுக்கான சேனலொன்றில் ஆழ்ந்தான்.

கழிவறைநுழைந்து வெளிவந்தபொழுது ஹாலில் நிறைந்திருந்த வெறுமை என்னை என்னவோ செய்தது. கைபேசி ஒலிக்க,

“டாடி போன்” என்றபடி மொபைலை எடுத்துவந்துகொடுத்தான் சத்யா.
“சொல்லுடா”

“அப்பா கால் பண்ணிருந்தாரு மாப்ள”

“ம்”

“பாவம்டா. மனுஷன் அப்டி அழறாரு. எனக்கே கஷ்டமாயிருச்சி. நீ அவரையும் கொஞ்சம் கன்ஸிடர் பண்ணுடா ப்ளீஸ். நா சொன்னா நீ கண்டிப்பா கேப்பன்னு ரொம்ப நம்புறாருடா”

எனக்குப்புரிந்தது. மவுனமாயிருந்தேன்.

“உன் பையனுக்காகவாச்சும் நீ யோசிக்கனும்டா மாப்ள. இன்னமும் எத்தனை நாளைக்கு இப்டியே இருப்ப?”

“எனக்கும் தெரில மச்சி. இப்டியே போறவரை போவட்டும். என்னளவுல பிருந்தா இன்னமும் முழுசா என்னவிட்டுப் போவலடா” என்றபொழுது உள்ளிருந்து பீறிட்டுக்கிளம்பிய அழுகையை, படபடவெனத் துடித்த உதட்டினுள்ளாக அடக்கிக்கொண்டேன்.

பிள்ளை டீவியை பார்த்தபடியே நான் ஊட்டிவிட்ட தோசையைத் தின்றான். அடுப்படியெல்லாம் சுத்திகரித்துவிட்டு, டீவியை அணைத்துவிட்டு இருவரும் படுக்கையில் வீழ்ந்தோம். இரண்டாம் கதை முடியுமுன்பாக, தனது சொப்புவாய் பிளந்தபடி சத்யா உறங்கிப்போனான். நான் மெல்ல எழுந்து பிருந்தா வழக்கமாக அமரும் சாளரத்தினருகே அமர்ந்துகொண்டு வெளியில் பார்த்தேன்.

 

தெருவிளக்கின் மஞ்சள்வண்ண ஒளியில் மினுங்கிக்கொண்டிருந்தன கொன்றைமரத்தின் இலைகள்.

*
குந்தவை நாச்சியார்

Series Navigationநோய்வாய்ப்பட்ட ” சுமங்கலிகள் “திரையிலும் மறைவிலும் பாதி உண்மையாகிப்போன கலைஞர் ஓம்புரி
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *