முக்கோணக் கிளிகள் [2]

This entry is part 20 of 25 in the series 25 ஆகஸ்ட் 2013

 

triple-parrots

 

இனம் தெரியவில்லை எவனோ என் அகம் தொட்டு விட்டான்!

அன்று காலை முதல் பீரியட் கணக்கு வகுப்பில் ஏகப்பட்ட கலவரம். அப்போது தென்னக மாநிலங்கள் தனியாகப் பிரியாத காலம் அது! நூறு பேர் கொண்ட முதல் வகுப்பில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு மொழி மாணவர்களும் கலந்திருந்தனர். அவர்களில் பெண்கள் மட்டும் பத்துப் பேர். முதல் வகுப்பு மலையாள மாணவர்களுக்கு சிவநாதனை ஏனோ பிடிக்கவில்லை! பின் பெஞ்சிகளில் அமர்ந்த மலையாளிகள் பலர் கணக்குப் பாடத்தில் கவனம் செலுத்தாமல் வேண்டு மென்றே கலாட்டா செய்தனர். பொறுமையையிழந்த சிவா, கணக்குப் போதிப்பதை நிறுத்தி, இராமாயணத்தைப் பற்றி ஆங்கிலத்திலே உரையாட ஆரம்பித்தார்.

“கவியோகி வால்மீகி தான் எழுதிய இராம காவியத்தில் தென் கோடியில் வாழ்பவரை வானரங்களாய் காட்டியிருக்கிறார்! நான் அதை நம்புவதில்லை! வடக்கே அயோத்தியா புரியில் நாகரீக மனிதர் வாழும் சமயத்தில், தெற்கே மட்டும் எப்படி வானரங்கள் வாழ்ந்தன? வால்மீகி சொல்லியிருப்பது டார்வின் நியதிக்கு முரணாக இருக்கிறது! இதுவரை நம்பாத நான் வால்மீகி சொல்லி யிருப்பது உண்மை என இப்போது நம்புகிறேன்” என்று சிவா சொல்லி முடித்த போது, வகுப்பில் சிரிப்பு வெடிகள் வெடித்தன! மலையாள மாணவர்களுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது! சிவா மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆனால் ஒன்றும் நடக்க வில்லை! உடனே அனைவரும் வகுப்பறையை விட்டு வெளியேறினர்! பிறகு வகுப்பில் கணக்குப் பாடம் ஒழுங்காக நடந்து முடிந்தது.

சிவா வெளியே வந்ததும் காத்துக் கொண்டிருந்த சித்ரா புன்னகை மலர, “கணக்கு வகுப்பில் அனுமார் கதையைச் சொல்லி எல்லாரையும் வயிறு வலிக்கச் சிரிக்க வைத்து விட்டீர்களே! ஸார் உங்களுக்காக மாடி அறைக் காத்துக் கொண்டிருக்கு! இன்று மாலை வரலாம். சிவப்புக் கம்பளம் விரிக்கவா? அல்லது பச்சைக் கம்பளம் விரிக்கவா? அறையில் ஏர் கன்டிஷன் இல்லை. வேண்டுமானால் மாட்டித் தருகிறோம். ஆனால் வீட்டு டியூஷனில் ராமர் கதா காலட்சேபத்தை ஆரம்பித்து விடாதீர்கள்” என்று நக்கல் புரிந்தாள்.

“உங்க அம்மா ஒரு மாதத்துக்குச் சம்மதம் தெரிவித்தார்களா?”

“ஒரு மாதமா? இல்லை. ஆறு மாதங்கள் வாங்கி விட்டேன், அம்மாவிடம் சண்டை போட்டு! எனக்கு மட்டும் நன்றி சொல்லுங்கள், முதலில்” என்றாள்.

“உனக்கு நூறு நன்றி! உன் அம்மாவுக்குக் கோடி நன்றி”

“எனக்கு ஒரு நன்றி போதும்! அம்மாவின் நன்றியை என்வழியாக அனுப்பாமல், நேராகச் சொல்லிக் கொள்ளுங்க” என்று கூறி விட்டு அடுத்து கெமிஸ்டிரி கூடத்துக்குள் நுழைந்தாள். சிவா அடுத்த கணக்கு வகுப்புக்கு நேரமாகவே சென்றான்.

பொங்கிவரும் பெருநிலவு போன்ற ஒளி முகத்தாள்!

அன்று மாலை சிவா, சித்ரா வீட்டு முன் அறையில் வந்து அமர்ந்தான். சுவரில் ஜனாதிபதி பதக்கத்தை அளிக்கும் ஒரு பெரிய படம் தொங்கியது! கம்பீரமான தோற்றமுடன் இராணுவ உடையில் நின்றார், ஆனந்த் குல்கர்னி. சித்ரா சிவாவுக்கு மாடி அறைகளைக் காட்டி விட்டு, அம்மாவிடம் கீழே அழைத்து வந்தாள். புனிதா சிறிது கடுமையான முகத்துடன் சிவாவை வரவேற்றாள். காபி கொண்டு வந்த சித்ராவுக்கு சிவா நன்றி சொன்னதும், வாடகையைப் பற்றி புனிதா பேச ஆரம்பித்தாள். அறைக்கு மாத வாடகை 400 ரூபாய். இரண்டு மாதங்களுக்கு முன்பணம் தர வேண்டும். ஆக முதலில் 1200 ரூபாய் வேண்டும். ஆறு மாதத்திற்குள் அவன் வேறோரு இடம் பார்த்து அறையைக் காலி செய்ய வேண்டும்.

கல்லூரி நாட்களில் மாலை ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் சித்ராவுக்கு டியூஷன் சொல்லிக் கொடுத்தால் மாதம் 100 ரூபாய் தருவதாகச் சொன்னாள். சிவா உடனே ஒப்புக் கொண்டான். ஆனால் முன்பணமும், முதல் மாத வாடகையும் தற்போது தன்னால் தர இயலா தென்றும், முதல் மாதச் சம்பளம் கையில் கிடைத்ததும், சேர்த்துத் தருவதாக சிவா சற்று பரிதாபமாகக் கூறினான். அதற்குப் புனிதா ஆட்சேபம் தெரிவிக்கவில்லை. அவனது நிலை புனிதாவுக்குப் புரிந்தது. ஹோட்டல்காரன் பணமில்லாத சிவாவை ஒருநாள் கூடத் தங்க விடமாட்டான்! கனிவாக சிவாவைப் பார்த்தாள், புனிதா. அவளது பாசமலர்க் கண்களில் சிவாவின் இதயம் சிக்கிக் கொண்டது. சிவா புறப்பட எழுந்தான்.

“சில நிபந்தனைகள், மிஸ்டர் சிவா! மாடி அறையில் எந்தக் கேளிக்கைப் பார்டிக்கும் அனுமதியில்லை! குடிச்சுக் கூத்தடிக்க அனுமதியில்லை! புகை பிடிக்க அனுமதி இல்லை! உங்க பெற்றோர், உறவினர் வரலாம். குடிப் பழக்கம் இருக்கும் நண்பர்களை இங்கு அழைத்து வர வேண்டாம்! இரவில் பின் வழியாக மாடியில் ஏறிச் செல்லும் போதும், இறங்கும் போதும் சத்தமோ சந்தடியோ உண்டாக்கி வீட்டில் தூங்குபவரை எழுப்பி விடக் கூடாது”

“நான் குடிப்பதில்லை” என்றான் சிவா. நிபந்தனைகளுக்கு உடன்படாக சிவா தலையை ஆட்டினான். பிறகு தன் பெட்டி, படுகையைக் கொண்டு வர ஆட்டோ ரிக் ஷாவைத் தேடிச் சென்றான். போகும் போது புனிதாவின் மிடுக்கான கண்களும், எடுப்பான தோற்றமும் சிவாவின் நெஞ்சையே வட்டமிட்டுக் கொண்டிருந்தன!

கண்ணில் தெரியுதொரு காட்சி, அதை
வண்ணப் படமெடுக்கும் நெஞ்சம்!

அன்று தீபாவளி. கல்லூரியில் கிடைத்த ஒரு நாள் விடுமுறையில் மதுரைக்குச் சென்று வர சிவா விரும்பவில்லை. காலையில் புத்தாடை கட்டி இனிப்புப் பலகாரம் தின்ன அமரும் போது, மாடியில் நடமாடும் காலடிச் சத்தம் கேட்கவே, சிவாவை அழைத்து வரும்படி புனிதா சித்ராவை அனுப்பினாள். கீழே வந்த சிவா புத்தாடை புனைந்து, பூவும் பொட்டும் இட்டுப் புது மணப்பெண் போல் காட்சி அளித்த புனிதாவைக் கண்டதும் அவளது அழகில் மயங்கினான். அவன் நெஞ்சில் கனல் பற்றி இதயத் துடிப்பு அதிகமானது! இளமை பொங்கும் சித்ராவும் அழகாய் அணிந்து அன்று பூத்த மலர் போல் தோன்றினாள். அவளது வாலைமீன் கண்கள் சிவாவைக் கவர வலை விரித்தன! அவள் தன் அழகிய சிரிப்பிலே அவனை மயக்கினாள். சிவாவின் கண்கள் சித்ராவின் சிலந்தி வலையிலிருந்து தப்பி, புனிதா விரிக்காத வலையில் சிக்கிக் கொண்டன!

புனிதா புன்னகை மலர சிவாவை நாற்காலியில் அமரச் சொன்னாள். கைப் பொன் வளையல்கள் ஆட தாமரை அரும்புகள் போன்ற பளிங்கு விரல்கள் பலகாரங்களைப் பரிமாறும் அழகைச் சிவா ரசித்தான்! தின்னும் பலகாரங்களின் சுவையை ரசிக்காது சித்ராவின் கண்ணிமைகள் சிவாவின் முகத்தைப் பார்த்தும், பார்க்காமலும் விட்டு விட்டுப் படமெடுத்துக் கொண்டிருந்தன! புனிதா தயாரித்த தீபாவளிப் பலகாரங்கள் எல்லாம் சுவையாய் இருந்தன. அதைவிடப் புனிதாவின் குரல் சிவாவின் காதில் தேனாய் இனித்தது! வருடத்தில் தீபாவளி இப்படி ஒரு தடவைதான் வர வேண்டுமா என்று சிவாவின் மனம் கேட்டது! தேவலோக ரம்பை போன்ற புனிதா அன்று அன்புடன் தீபாவளித் தின்பண்டங்களைப் பரிமாற அவன் கொடுத்து வைத்தவன்! பல முறைத் தடுமாறி நன்றி சொல்லி சிவா இதயத்தை அவர்களிடம் விட்டு விட்டு மாடிக்குச் சென்றான். சித்ரா, புனிதா இருவரும் அவர்களது இதயத்தை அவன் பறித்துச் செல்ல சிலையாய் நின்றனர்!

தோயும் மது நீ எனக்கு! தும்பியடி நான் உனக்கு!

நாட்கள் சென்றன! டியூஷன் பாடங்கள் தினமும் நடந்தன! சித்ரா தினமும் டியூஷனில் கற்றுக் கொள்வது குறைவு! தனக்கு நன்றாகத் தெரிந்த விபரங்களையும் தனக்குத் தெரியாதது போல் திருப்பித் திருப்பி கேள்வி கேட்டு சித்ரா காலத்தைக் கடத்தினாள்! அவன் கவனத்தை கவர்ந்தாள்! தினமும் தரிசனம் தந்து சிவா தன்னையே நினைக்கும்படி செய்ய பல உபாயங்களைக் கையாண்டாள். நெருங்கி ஒட்டிக் கொள்ளத் துடிக்கும் சித்ராவை வெட்டி விட முடியாமல் தன்னைக் கட்டுப்படுத்த சிவா மிகவும் சிரமப் பட்டான்! காந்தக் கனல் வீசும் அவளது வாலிப மேனியைப் பற்றிக் கொள்ள எழும் இச்சையைக் கட்டுப் படுத்த சிவாவின் மனம் படாத பாடு பட்டது! என்னதான் கற்றாலும், எதற்குத்தான் கட்டுப் பட்டாலும் ஐம்புலன்கள் ஆட்சி செய்யும் தோல் போர்த்திய உடம்பு வேறு! அகத்தே உறங்கிக் கிடக்கும் உள்ளம் வேறுதான்! உடற்பசி வேறு! உள்ளப்பசி வேறு! உடல் வேண்டுவதை உள்ளம் தடுக்கும்!  உள்ளம் வேண்டி யதை உடல் தடுக்கும்! உடலும், உள்ளமும் ஒன்றுக்கொன்று பகையாளி! கண்ணிருந்தும் உடல் குருடானது! கண்ணில்லா உள்ளம் ஒளி கொண்டது! சித்ராவை அணைத்துக் கொள்ள உடல் விரைந்தது! ஆனால் சிவாவுக்கு உள்ளம் தடை உத்தரவு போட்டது!

அன்று சித்ராவுக்குப் புரியாத பிஸிக்ஸ் கணக்குளைச் சொல்லிக் கொடுக்க தியரியை விளக்கப் போய் இரவு பத்து மணி ஆகிவிட்டது! சாப்பிடும் ஹோட்டலில் இரவு ஒன்பது மணிக்கு மேல் உணவு கிடைக்காது! சித்ரா மட்டும் சாப்பிட உட்கார்ந்தவள், அம்மாவைக் கெஞ்சினாள்! “அம்மா! என்னால் இன்றைக்கு அவரது இரவுச் சாப்பாடு போச்சு! நம் வீட்டில் சாப்பிட அழைக்க லாமா” என்று கேட்டாள் சித்ரா. தாயும் சம்மதம் தரவே, சித்ரா ஓடிப் போய் சிவாவை அழைத்து வந்தாள். நாற்காலியில் அமரச் சொல்லி அவனைச் சிரித்த முகத்துடன் வரவேற்றாள், புனிதா. மேஜை மேல் பாதிப் பக்கங்கள் திறந்தபடிக் கிடந்த வி.ஸ. காண்டேகரின் நாவல் “கிரௌஞ்ச வதம்” அவன் கவனத்தைக் கவர்ந்தது. தள்ளி உட்கார்ந்த சிவாவை, அம்மா பரிமாற வசதியாக இருக்கும் என்று பக்கத்தில் அமரச் சொன்னாள் சித்ரா. அவன் கேளாமல் போகவே சித்ரா போய் அவன் அருகில் உட்கார்ந்தாள். இடது புறத்தில் சித்ரா! வலது புறத்தில் நின்று, தட்டில் பரிமாறியவள் புனிதா! இரண்டு அணங்குகளின் கவர்ச்சியான மேனியில் எழுந்த காந்த மண்டலத்தில் அகப்பட்டுக் கொண்டு இருபுறமும் சிவா ஈர்க்கப் பட்டுத் திண்டாடினான்!

 

​[தொடரும்]​
Series Navigationசாகச நாயகன் – 4. ஷீ தாவ் – ஸ்டண்ட் ஒருங்கிணைப்பாளராகநாவற் பழம்
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Comments

  1. Avatar
    Mahakavi says:

    கண்ணில் தெரியுதொரு காட்சி, அதை
    வண்ணப் படமெடுக்கும் நெஞ்சம்! Jeyabhaarathan

    கண்ணில் தெரியுதொரு தோற்றம்–அதில்
    கண்ணன் அழகு முழுதில்லை —-Mahakavi Bharathi

    Partial plagiarism?????

Leave a Reply to Mahakavi Cancel reply

Your email address will not be published. Required fields are marked *