முக கவசம் அறிவோம்

author
0 minutes, 43 seconds Read
This entry is part 7 of 11 in the series 5 ஜூலை 2020

முனைவர் ஜி.சத்திய பாலன்

உலகம் முழுவதும் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டியுள்ளது  நோய் பாதிப்பில்  உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையும் பல லட்சங்களை கடந்துள்ளது சீனாவில் கடந்த ஆண்டின் இறுதியில்   தொடங்கிய இந்த பெரும் கொள்ளை நோயானது இன்று உலகம் முழுவதும் பரவி விட்டது இந்நிலையில் புதிய மருந்துகளுக்கான  ஆய்வுகளை அனைத்து நாடுகளும் தீவிரமாக ஆராய்ந்துகொண்டுள்ளது ஆனால்  தற்சமயம் மனிதர்களிடம்  இந்த நோயிடமிருந்து காப்பதற்க்கு உள்ள  பிரதான ஆயுதங்கள்  முக கவசம், தனிமனித இடைவெளி மற்றும் உடல் தூய்மையே மட்டுமே.   இனி வரும் காலங்களில் முக கவசம் ஆனது மனிதனின் உடைகளோடும் வாழ்வியல் முறைகளோடும்  ஒரு பிரதான இடத்தை தக்கவைத்துகொள்ளும். தலைக்கவசம் ஆனது எப்படி பயணத்தின்போது பாதுகாப்பானதாக இருக்கிறதோ அதேபோல் இனி வாழ்வியலோடு முகக்கவசம்  கலந்துவிட்டது ..
முக கவசத்தின் வரலாறு:
மனித நாகரிக வரலாற்றில் முகக்கவசம் மனிதனுக்கு போர்முனையிலும்,விளையாட்டு மற்றும்  கேளிக்கைகளிலும் பயன்பட்டது பின்பு கிபி 5 முதல் 7 ஆம் நூற்றாண்டு முதல் சமண மதமும் பௌத்த மதமும் தோன்றிய பின்பு கொல்லாமை , அகிம்சை போன்ற அறநெறியின் அடிப்படையில் முகக்கவசம் பயன்பாட்டிற்கு வந்தது சமணத்துறவிகள் காற்றில் கலந்துள்ள நுண்கிருமிகள்  தங்கள் சுவாசத்தின் காரணமாக அழிந்து விடக்கூடாது எனவும் சில சமயம் பூச்சிகள் மற்றும் புழுக்கள்  வாய் வழியாக சென்று விடக்கூடாது என்ற ஜீவகாருண்ய சிந்தனை அடிப்படையில் முகக்கவசம் பயன்படுத்தப்பட்டது இந்த முகக்கவசம் 16ஆம் நூற்றாண்டு வரையிலும் அறம்சார்ந்த பார்வையிலேயே பயன்படுத்தப்பட்டு வந்தது பின்பு 1750 முதல் 1850 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் உலகில் ஏற்பட்ட மிகப்பெரிய தொழிற்புரட்சியின் காரணமாக தொழிற்சாலை கழிவுகள், தூசிகள் ,விஷ வாயுக்கள் மற்றும் நுண் கிருமிகளிடமிருந்து பாதுகாத்துக்கொள்ள முக கவசம் உருவாக்கப்பட்டது அதேபோல்  ஜப்பானின்  அணுஆயுத பேரழிவுகளில் பாதிக்கபட்டதனால்   அவர்களின்  வாழ்வியலோடு முக கவசம் இரண்டற கலந்து விட்டது.
 முக கவசத்தின் வகைகள்:
பயன்பாட்டின் பார்வையில் பார்ப்போமாயின் முகக்கவசம் மறு உபயோகத்திற்க்கு  தகுந்தது எனவும் ஒரு குறிப்பிட்ட கால அளவிற்கு மட்டும்  பயன்பாட்டிற்கு தகுந்தது எனவும்  பிரிக்கலாம் சாதாரண துணிகள் , பேப்ரிக்  உறைகள்,காட்டன் நார்களால் ஆன  லேயர்கள் மற்றும் பேப்ரிக் மெல்லிய நார்களால் ஆன  முகக் கவசங்கள் பயன்படுகிறது உபயோகத்தின் அடிப்படையில்  தொழிற்சாலைகள், அலுவலகங்கள், சாலைப் பயணங்கள், மருத்துவமனை உபயோகம் என பலதரப்பட்ட முகக் கவசங்கள்  பயன்பாட்டில் உள்ளது.இந்த கொரோனா   கொள்ளை நோயிலிருந்து  பாதுகாக்க அரசு முக கவசம் அணிய வேண்டும் என்பதை கட்டாயமாக்கிய நிலையில்  மக்களுக்கு எந்த முக கவசம் பாதுகாப்பானது? அத்தோடு எளிய மக்கள் பயன்படுத்தும் வகையில் பயன்படும் முக கவசம் எது? என பல கேள்விகள் எழுந்துள்ளது மனிதர்கள் இருமும்  போதும் தும்மும் போதும் வரும் நீர் திவளைகளை  தடுக்க சாதாரண துணியிலான முக கவசம் போதும் என்றாலும் அதிக கூட்டங்கள் சிறு வணிக நிறுவனங்கள்  மருத்துவமனைகள் ,நோய் தொற்று நபர்கள் வருகின்ற இடங்களுக்கு  செல்பவர்களுக்கு சற்று தரம் கூடிய முக கவசம்  தேவைப்படுகிறது சாதாரண துணி கவசங்கள் 1 மைக்ரான் அளவில் உள்ள பாக்டீரியாவை மட்டுமே  தடுக்கவல்லது ஆனால் கொரோனா வைரஸ் 0.12 மைக்ரான் அதாவது பாக்டீரியாவின் அளவில் பத்தில் ஒரு பங்கு உள்ளது   ஆதலால் கொரோனா கிருமிகளிடமிருந்து பாதுகாத்து கொள்வதற்க்கு சற்று தரமான  பாதுகாப்பான முக கவசம் மிகவும் அவசியமாகிறது.
 N95 என்றால் என்ன?
இன்று முக கவசம்  பயன்பாட்டிற்க்கு பின்னர் N95 என்ற பெயர்  பிரசித்தம் பெற்றுள்ளது..அமெரிக்காவைச் சேர்ந்த தொழில் பாதுகாப்பு உடல்நல நிறுவனம்(    National Institute for Occupational Safety and Health)  முக கவசத்தை காற்றில்  படிந்துள்ள நுண்துகளை பிரிக்கும்   திறனை அடிப்படையாகக் கொண்டு தரம்பிரித்துள்ளது.இதை சுவாசக்கருவி (Respirators) என அழைக்கப்படும் அதன் அடிப்படையில் தூசு படலம், நச்சு வாயுக்கள் மற்றும் நீராவி போன்றவற்றை பிரிக்கும் திறனைக் கொண்டு அவற்றிற்கு முன் அடையாளமாக N,R மற்றும் P என்ற குறியீடுகளை கொடுத்துள்ளது அதன் அடிப்படையிலேயே N95 கவசத்தில்  N என்பது  எண்ணெய்  பொருள்களை தடுக்கும் ஆற்றல் அற்றது (Non resistance to oil) உதாரணமாக திரவ நிலையில் உள்ள கிளிசரின் உள்ளிட்ட பல்வேறு எண்ணெய் திவளைகளை   தடுக்கும் ஆற்றல் அற்றது மற்றும் R எண்ணெய் திவளைகளை பகுதியாக  தடுக்கும் ஆற்றல் உள்ளது  P என்பது எண்ணெய் திவளைகளைகளில்  இருந்து முற்றிலும் தடுக்கும் ஆற்றலை  அமையப்பெற்றது இதன் அடிப்படையில் தான் முன் குறியீடு வரையறுக்கபட்டுள்ளது.  தற்சமயம் சந்தையில்சுவாச கருவிகள்  N95 ,R95 ,P95,N99,R 99 ,N100,R100, P100 ஆகிய சுவாச கருவிகள்  கிடைக்கின்றன அதேபோல் KN தர சுவாச கருவிகளும் கிடைக்கின்றன இந்த KN என்பது சீன தரத்தை மையமாகவைத்து வடிவமைக்க பட்டது இந்த இரண்டு அமெரிக்க மற்றும் சீன தரநிர்ணய சுவாச கருவிகளும்  95% 0.3 மைக்ரான் அளவிலான கிருமிகளையும் துகள்களையும் தடுக்கவல்லது..  அதனால் நச்சு வாயு மற்றும் நீராவியின் தாக்கத்தை தடுக்காது இந்த N95 சுவாசக்கருவிகள் செயற்கை பாலிமர் நார்கள் மற்றும் பாலி புரோப்லின் பேப்ரிக் இழைகளாலும் வடிவமைக்கப்பட்டவை உலகெங்கும் இந்த N95 சுவாச கருவிகள் எபோலா ,சார்ஸ், காச நோய்கள் ஆகிய கிருமிகளிடமிருந்து தடுக்கும்வகையில் பயன்படுத்தபட்டதுஆதலால் இந்த கொரோனா  நோயிடமிருந்து பாதுகாப்பதற்கும்  , நோயாளிகளை கையாளும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கும் N95 சுவாசகருவியே  பரிந்துரைக்கப்படுகிறது. N95  வால்வு (சிறு அடைக்கபட்ட துவாரம்) சுவாச கருவிகள்  இருதய  மற்றும் நுரையீரல் நோயாளிகளுக்கு  சற்று வசதியாக இருக்கும் ஏனெனில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை அற்ற  உட்புகும் காற்றைப் அனுமதிக்கிறது ஆனால் வெளியேற்றும் தன்மையில் அதே அளவு பாதுகாப்பு  தன்மை உள்ளதா என்பது சந்தேகமே ஆதலால் பல ஆய்வுகள் மருத்துவ பணியாளர்களுக்கு வால்வு  பொருத்திய சுவாச கருவி பாதுகாப்பானது அல்ல என்கிறது.. ஆனால் இருதயம் மற்றும் நுரையீரல் நோயாளிகளுக்கு முகத்தின்  உட்புறமுள்ள ஈரப்பதத்தை பாதுகாப்பதற்கும் சுவாசத்தை  மேலும் எளிமையாக்குவதற்க்கும் மருத்துவர் பரிந்துரையின் பேரில் சரியான சுவாச கருவிகளை  பயன்படுத்தலாம்..
உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதல்:
உலக சுகாதார நிறுவனத்தில் வழிகாட்டுதலின்படி அனைவரும் பேப்ரிக்  இழைகளால் தயாரிக்கப்பட்ட முகக்கவசம் அணிய பரிந்துரைக்கப்படுகிறது சாதாரண துணிகளால் ஆன கவசங்கள் சுய தூய்மைக்கேட்டிற்க்கு   சாத்தியக்கூறுகள் உள்ளதாக குறிப்பிடுகிறது. ஆதலால் அடிக்கடி சுத்தம் செய்து பயன்படுத்த வேண்டும் என்றும். துணிகளால் ஆன கவசமாயின் அவை  மூன்று இழைகளால் தயாரிக்கப்பட்டிருக்க  வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது..மேலும்  இந்த கொள்ளை நோயின் தாக்கம்  2022 வரை தொடரகூடிய வாய்ப்பிருப்பதாக கூறியுள்ளது அதனால் தனிமனித விலகல், தூய்மை ,முக கவசம் ஆகியவற்றை அனைத்து நிலைகளிலும் தொடர வேண்டும் எனவும் உலக சுகாதார நிறுவனம் குறிப்பிடப்பட்டுள்ளது…
பயன்படுத்தும் முறைகள்:
  அதை தயாரித்த நிறுவனங்களால்  மூலப்பொருட்கள் தரத்தை கொண்டு சில வழிகாட்டுதலை கொடுத்திருக்கும் அல்லது அதன் நிறம் மாறாமல் ஒரே நபர் ஒன்றுக்கு மேற்பட்ட முகக் கவசங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் பயன்படுத்தலாம்,கறைகள், அதிகமானால் முக கவசத்தை  மாற்ற வேண்டும்.ஆனால் மருத்துவ பணியாளர்களுக்கான சுவாச கருவிகள் பெரும்பாலும் 48 மணி நேரத்திற்குள் பயன்படுத்தி அப்புறபடுத்தவேண்டியவையே ஆகும்.. சில சுத்தம் செய்யும் முறைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன அதன்படி ஹைட்ரஜன் பெராக்சைடு, அல்ட்ரா வயலட் கதிர்கள் மற்றும் சூடான நீர் ஆவியின் வழியின் மூலம் 60 முதல் 70 டிகிரி செல்சியஸ் வெப்பமும் 80% ஈரப்பதத்துடன் சூடாக்கி அதன் மூலம் முககவசத்தையும், சுவாசகருவிகளையும்  சுத்தப்படுத்தலாம் என பல ஆய்வுகள் கூறுகின்றன.
முக கவசம் மற்றும் சுவாச கருவிகளின் வணிகம் :
 முக கவச உற்பத்தி அமெரிக்க டாலரில் 7.24 பில்லியன் டாலராக 2019 இருந்தது இன்று 2020 வர்த்தகம்  153 .90 சதவீதம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது முக கவச உற்பத்தியில் இதுவரை சீனா தான் முதலிடத்தில் இருந்தது என்று உலக மக்கள் தேவையை 50சதவீதம் பூர்த்தி செய்தது இனி எதிர்காலத்தில் ஒவ்வொரு தனி மனிதனுக்கும்  உடைகளை போல முக கவசம் மிகவும் தேவையான ஒன்றாகும் நவீன அறிவியல் மூலம் புதிது புதிதாக கவசங்களை தயாரிக்கும் பணியும் ஆய்வுகளும் நடந்து கொண்டுதான் உள்ளன அதன் அடிப்படையில் மருத்துவமனை முககவசம், தொழிற்சாலை முகக்கவசம், பல்மருத்துவ கவசம், விலங்குகள் பராமரிப்பு முறைகளுக்கு , அன்றாடம் மனிதர்கள் அணியும் சாதாரண முக கவசம் ,மருந்தகங்களில் பயன்படுத்தும்  முகக்கவசம், பெரும் வணிக வளாகங்களில் பயன்படுத்தத்தக்க முக கவசம் என புதிய வடிவங்களில் முக கவசம் மிகப்பெரிய வர்த்தகத்தை தன்னில் நிலைநிறுத்திக்கொள்ளும் 
முக கவசத்தின் எதிர் காலம்
அறிவியல் ஆய்வாளர்கள் ஜேக்குளின் மற்றும் அன்ரி எழுதிய பிரெஞ்சு அறிவியல் ஆய்வு நூல் “ஏன் இந்த கொள்ளை நோய் “அந்த நூலில் கொள்ளை நோய்களை பற்றிய அறிவியல் பார்வையும் இந்த சமூகம் கடந்து வந்த பாதைகளையும் குறிப்பிட்டுள்ளனர்  கொள்ளை நோய்கள் குறித்து குறிப்பிடுகையில் இது இடைக்காலத்தில் வந்த நோய்கள் அல்ல எதிர்காலத்திலும் வரக் கூடிய ஒரு நோய் அதை எதிர்கொள்ள மனித சமுதாயத்திற்கு அறிவியல் அணுகுமுறை தேவை என்று குறிப்பிட்டுள்ளனர் அதனடிப்படையில் இனி வருங்கால சூழலில் மனிதன் காலணிகளை அணிந்து செல்வது போல முக கவசம் அணிந்து செல்ல வேண்டிய சூழல் உருவாகியுள்ளது வணிகரீதியில் முக கவசம் முக்கிய பங்கு வகிக்கும் நமது  இந்தியாவில் இந்திய கலாச்சாரத்திற்கும்  பாரம்பரியத்திற்கும் தொடர்பான  மருத்துவ குணமுள்ள வெட்டிவேர்,மஞ்சள் மற்றும்  நாவல் மர இழைகள் போன்ற மருத்துவ குணமிக்க நூல் இழைகளால் ஆன முகக் கவசங்கள் வணிகத்தில் முக்கிய இடம் பிடிப்பதற்கு சாத்திய கூறுகள்  உள்ளன .இதே நேரத்தில் அரசு முக கவசத்தை பொதுமக்கள் பயன்பாடு, வணிகப் பயன்பாடு, மருத்துவமனை பயன்பாடு என தனித்தனியாக  தரமுத்திரைகளின் அடிப்படையில்  வித்தியாசபடுத்தி எளிய மக்கள் அறியும் வகையில்  அறிவிப்பது காலத்தின் தேவையாகும் இனிவரும் காலங்களில் முகக் கவசம் ஒரு  உயிர்க்கவசம் என்பதை அனைத்து மக்களும் உணரவேண்டும் ….
கட்டுரையாளர்முனைவர் ஜி.சத்திய பாலன்உதவி பேராசிரியர்மருந்தியல் கல்லூரி.மதுரை மருத்துவ கல்லூரி..தொடர்பு எண்:9443040082

Series Navigationகவிதைகள்தனிமை
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *