முத்தொள்ளாயிரத்தின் அறவியல் நோக்குநிலை

author
2
0 minutes, 6 seconds Read
This entry is part 17 of 25 in the series 2 ஆகஸ்ட் 2015

முனைவர் சு.மாதவன், உதவிப் பேராசிரியர்,

இந்தத் தலைப்பில் முத்தொள்ளாயிரத்தை நோக்கி என்ன கண்டறிய முடியும் என்று தோன்றும். ஆனால், “அறம் இன்றி இலக்கியமில்லை@ அறமில்லாதது இலக்கியமில்லை” என்னும் நோக்குநிலையில் எல்லா இலக்கியங்களுக்குள்ளும் அவ்வவ் இலக்கியப் படைப்பாக்கப் பின்னணிக்கேற்ற ஓர் அறவியல் அறிவுறுத்தல் நிலை அறிவித்தல் நிலை அறிவுணர்த்தல் நிலைப் பார்வை ஊடாடிநிற்பது இலக்கிய இயங்கியல் இயற்கையாகும். எனினும், அறத்தை அறிவுறுத்தும் முதன்மைநோக்கப் போக்கு இல்லாத முத்தொள்ளாயிரத்தின் அறவியல் நோக்குநிலை எத்தகையதாக அமைந்துள்ளது என்பதை இக் கட்டுரை ஆராய முன்வருகிறது.
தமிழ் இலக்கிய அறவியல் போக்கு
சங்ககால அகவாழ்க்கையின் பரத்தமைச் சீரழிவுப் போக்கும் புறவாழ்க்கையின் போரியல் பேரழிவுப் போக்கும் அறங்களை மிகுதியாகப் பேச வேண்டிய தேவையை ஏற்படுத்தியது. சங்க இலக்கியத்தில் ஊடாடிநின்ற அறநெறியுணர்த்தல் போக்கு, தமிழ் அறஇலக்கியக் காலமென பதினெண்-கீழ்க்கணக்குக் காலத்தில் அறநெறியறிவுறுத்தல் நோக்கை வளர்த்தெடுத்தது. பக்தி இலக்கியங்கள் வழிபாட்டை – சரணாகதியைத் தங்களின் அறநெறியாகப் பரப்பின. சிற்றிலக்கியங்கள் தனிமனித அறநெறிச் சிதைவிலிருந்து சமூக, அரசநிலைச் சீரழிவுவரைக்குமான எதையுமே கண்டுகொள்ளாமல் இன்பத்தேட்டக் கிளர்ச்சி, போருக்குத் தேவையான வீறுணர்ச்சி முதலியவற்றை ஊட்டுவதே தங்களின் நோக்காகவும் போக்காகவும் கொண்டிருந்தன. இத்தகைய போக்கைக் கொண்டிருந்த காலகட்டத்தில் முத்தொள்ளாயிரம் தோன்றியிருத்தல் கூடும். அதனால்தான், தமிழ் இலக்கியப் போக்கினுள் சிற்றிலக்கியப் போக்கின் சாயலைஃசார்பை முத்தொள்ளாயிரம் கொண்டிருக்கிறது எனலாம்.

அறவியலின் சமூக உறவுநிலை
சமூக உறவுநிலைகளில் ஏதேனும் ஒரு ஃ இரு ஃ பல உறவுநிலைகளே இலக்கியங்களாக வெளிப்படுகின்றன. இத்தகைய உறவுநிலைகளையும் உணர்வுநிலைகளையும் சமன்மைப்படுத்துவதையே அறவியல் தன் பெரும்பங்காகக் கொண்டு செயல்பட்டுவருகிறது. சமூகம் இருவேறு வர்க்க நிலையில் ஃ தகவமைப்பு நிலையில் முரணியலைக் காண்கிறது@ அதிலிருந்து தன் அறனியலை வார்க்கிறது. இவ்வாறு, கட்டமைக்கப்படும் அறவியல் ஏதேனும் ஒரு சார்பு; கருத்தியலை விதைப்பதை இலக்காகக் கொண்டு பரப்பப்பட்டு வருகிறது. வேறுவிதமாகச் சொன்னால், அறவியல் கொள்கைகள் உற்பத்தி உறவுகளிலிருந்து உருவாக்கப்படுகின்றன. எனவே, அறவியலானது பொதுநிலையில் பின்வரும் மூன்று நோக்குநிலைகளின் அடிப்படையில் கட்டமைக்கப்படுகிறது:
1. வர்க்கச் சமனிலை அறம் (ஊடயளள உழஅpசழஅளைநன நுவாiஉள)
2. வர்க்கச் சார்பறம் (ஊடயளள ழுசநைவெநன நுவாiஉள)
3. உயிர் அறம் (காமம்) (டீழை – நுவாiஉள)
இம்மூன்று நோக்குநிலைகளில், ‘உயிர்அறம்’ என்பது மானுடப் பொதுமை, ‘வர்க்கச் சமனிலை அறம்’ என்பது இருக்கும் வர்க்க முரண்களுக்குள் – அதன் மோதல்களுக்குள் சமரசத்தை ஏற்படுத்தும் முயற்சி. ‘வர்க்கச் சார்பறம்’ என்பது முரண்களை நியாயப்படுத்தும் போக்கு, முரண்களே இல்லாமலாக்கும் போக்கு ஆகிய இருநிலை. இம் மூன்றில் ‘உயிர் அறம்’ நிலைத்த பண்பைக் கொண்டது@ பிற இரண்டும் சமூகப் போக்குக்கு ஏற்ப மாறும் தன்மையன. இவற்றில், முத்தொள்ளாயிரம் எந்தப் போக்கைக் கொண்டது என்பது ஆராய்ச்சிக்குரியது.
சேரன் பாடல்களில் அறம்
அச்சமின்றிக் குடிகள் வாழும் நாடாகச் சேரநாடு இருந்தது.
“அள்ளற் பழனத் தரக்காம்பல் வாயவிழ
வெள்ளந்தீப் பட்ட தெனவெரீஇப் – புள்ளினந்தங்
கைச்சிறகாற் பார்ப்பொடுக்குங் கவ்வை யுடைத்தரோ
நச்சிலைவேற் கோக்கோதை நாடு” (மு.தொ.3)
சேரனின் பேரரசுக்கு உட்பட்ட மன்னர்கள் கொடுக்க வேண்டிய வரியைக் கொடுத்து உயிரைக் காத்துக் கொள்ளுமாறு எச்சரிக்கப்பட்டார்கள்.
“பல்யானை மன்னர் படுதிறை தந்துய்ம்மின்
மல்லல் நெடுமதில் வாங்குவிற் பூட்டுமின்
வள்ளிதழ் வாடாத வானோரும் வானவன்
வில்லெழுதி வாழ்வர் விசும்பு” (மு.தொ.5)
சேரமன்னனை எதிர்த்த நாடுகளில் முள்ளிச்செடிகள் முளைத்தன@ பின்னர் அவையும் கருகின:
“கரிபரந் தெங்குங் கடுமுள்ளி பம்பி
நரிபரந்து நாற்றிசையுங் கூடி – எரிபரந்த
பைங்கண்மால் யானைப் பகையடுதோட் கோதையைச்
செங்கண் சிவப்பித்தார் நாடு” (மு.தொ.8)
பாழ்பட்டு கிடந்தன:
“வேரறுகை பம்பிச் சுரைபடர்ந்து வேளைபூத்
தூரறிய லாகா கிடந்தனவே – போரின்
முகையவிழ்தார்க் கோதை முசிறியார் கோமான்
நகையிலைவேல் காய்த்தினார் நாடு” (மு.தொ.9)
இவை சேரமன்னின் ஆட்சிச் சிறப்புகளாகச் சொல்லப்படுவன. சேரமன்னனைப் பாடும் 23 பாடல்களில் மேலே கண்ட குறிப்புக்களோடு செய்யுள் உத்தியாகவும் அன்றைய அரசசமூகம் மக்களைப் பார்த்த பார்வையுமாக உள்ளது கைக்கிளைப் பாடல்முறை ஆகும். மன்னனால் விளைந்த ஆக்கம் ஏதும் பாடல்களில் இல்லை@ மாறாக, இழிவு பேசப்பட்டிருக்கிறது உயர்வு நவிற்சியாக. அத்தனை நாடுகளின் அழிவு மகிழ்வாகப் பேசப்படுவது நல்லறநெறியன்று. அதேபோல், யாரை வெற்றிகொண்டு இவன் உலாப் போனான் என்னும் குறிப்பு கிடைக்காவிட்டாலும் உலாப் போனபோது அந் நாட்டு இளம்பெண்கள் இவன்மீது கைக்கிளையாய்க் காதல் கொண்டனர் என்று புலவர் பாடியிருப்பது குடிமக்களை இழிவுபடுத்துவதாகும். இதில் இலக்கிய ரசனை காண்பது மலம்வாரி இறைக்கப்பட்டதில் அழகியலைக் காண்பதற்குச் சமம்.
இருப்பினும், சமூகத்தின் மனசாட்சியாய் ஒலிப்பவன் படைப்பாளி என்தற்கான சில கூறுகள் இப்பாடல்களில் தென்படுகின்றன:
1. மக்கள், நீரும் நிழலும்போல் அருள் உள்ளமுடையவர்களாய்த் திகழ்ந்தார்கள்:
“நீரும் நிழலும்போல் நீண்ட அருளுடைய
ஊரிரே யென்னை யுயக்கொண்மின் – போரிற்
புகலுங் களியானைப் பூழியர்கோக் கோதைக்
கழலுமென் னெஞ்சங் கிடந்து” (மு.தொ.13)
2. செல்வம் படைத்தவர்களிடம் பொருள்கேட்கச் செல்லும் வறுமையுற்றவர் மீதான கழிவிரக்கம்:
“ஆய்மணிப் பைம்பூண் அலங்குதார்க் கோதையைக்
காணிய சென்று கதவடைத்தேன் – நாணிப்
பெருஞ்செல்வர் இல்லத்து நல்கூர்ந்தார் போல
வருஞ்செல்லும் பேருமென் னெஞ்சு” (மு.தொ.16)
3. உயர்ந்தவர்களிடம் நம்முடைய துன்பத்தைக் கண்டுகொள்ளாமல் இருக்கும் குணம் வாய்த்திருக்கிறது. இது உலக இயல்பாகும்:
“மல்லனீர் மாந்தையார் மாக்கடுங்கோல் காயினுஞ்
சொல்லவே வேண்டும் நம்குறை – நல்ல
திலகங் கிடந்த திருநுதலா யஃதால்
உலகங் கிடந்த இயல்பு” (மு.தொ.21)
இவற்றில், நீரும் நிழலும் அருள் எனும் அறத்திற்குரிய குறியீடுகளாகப் புலவனால் கையாளப்பட்டுள்ளன. பணக்காரர்கள் என்றும் ஏழைகளின் துன்பத்தைக் கண்டுகொள்ளமாட்டார்கள் என்ற உலக இயல்பைப் புலவன் நன்கு பதிவுசெய்துள்ளான். போரால் பல நாடுகள் அழிந்து போயின என்று குறிப்பிடும் புலவன், போரில்லாச் சமூகம் தேவை என்பதை உணர்த்துகின்றான். இவை புலவனின் அறவியல் உட்கிடக்கைகளாக உள்ளன.
சோழன் பாடல்களில் அறம்
கிள்ளி வளவன், கருநாடக மன்னனுடன் செய்த போரால் போர்க்களத்தில்p உடைந்த தலை, மூளை, நிணம், தசை, எலும்பு, குடல் என எங்கும் இறைந்து கிடக்கப் பெருகியோடும் இரத்தம் அவற்றை இழுத்துச் சென்றது:
“உடைதலையும் மூளையும் ஊன்தடியும் என்பும்
குடருங் கொழுங்குருதி யீர்ப்ப – மிடைபேய்
பெருநடஞ்செய் பெற்றித்தே கொற்றப்போர்க் கிள்ளி
கருநடரைச் சீறும் களம்” (மு.தொ.37)

போருக்குக் கிளர்ந்தெழும் கிள்ளிவளவனின் யானையின் சங்கிலிப் பிணைப்பு மட்டுமா அறுபடும்? பகை மன்னர் மனைவியரின் மங்கல நாணும் அல்லவா அறுபட்டுவிழும்:
“கானிமிர்த்தால் கண்பரிப வல்லியோ புல்லாதார்
மானனையர் மங்கலநாண் அல்லவோ – தான
மழைத்தடக்கை வார்கழற்கால் மானவேற் கிள்ளி
புழைத்தடக்கை நால்வாய்ப் பொருப்பு” (மு.தொ.32)
கருவுற்ற பெண்கள் ஈன்றெடுக்கும் குழந்தைக்குக் கூகைக் குழறலே தாலாட்டாகும்:
“இரியல் மகளி ரிலைஞெமலு ளீன்ற
வரியிளஞ் செங்காற் குழவி – அரையிரவின்
ஊமன்பா ராட்ட வுறங்கிற்றே செம்பியன்றன்
நாமம்பா ராட்டாதார் நாடு” (மு.தொ.39)
இவை சோழ மன்னன் நிகழ்த்திய போரால் நிகழ்ந்தவை எனப் புலவனால் பாடப்பட்டுள்ளன. 46 பாடல்களில் கைக்கிளைப் பாடல்கள் போக, இதர பாடல்களில் போரின் கொடூரக் காட்சிகள் பாடப்பட்டுள்ளன. எனினும், ஆங்காங்கே புலவனின் அறவியல் மனம் சிலவற்றைப் பாடியுள்ளது.
1. குற்றம் செய்தவர்களை விடுத்துக் குற்றம் செய்யாதவர்களைத் தண்டிப்பது அரசு முறையாகுமா?
“கண்டன வுண்கண் கலந்தன நன்னெஞ்சந்
தண்டப் படுவ தடமென்றோள் – கண்டாய்
உலாஅ மறுகில் உறையூர் வளவற்
கெலாஅ முறைகிடந்த வாறு” (மு.தொ.50)
2. மரக்கண்ணோ மண்ணாள்வார் கண்:
மரக்கண்போல் இரக்கமின்றி இருக்கலாமா?
“வரக்கண்டு நாணாத வல்லையா னெஞ்சே
மரக்கண்ணோ மண்ணாள்வார் கண்ணென் – றிரக் கண்டாய்
வாளுழுவை வெல்கொடியான் வண்புனல்நீர் நாடற்கென்
தோளழுவந் தோன்றத் தொழுது” (மு.தொ.63)
3. ஆறிலொன்றான்றோ புரவலர் கொள்ளும் பொருள்:
ஆறில் ஒரு பங்குதான் வரியாகப் பெறவேண்டும் என்பதுதானே அரசமுறை?
“என்னெஞ்சு நாணு நலனு மிவையெல்லாம்
மன்னன் புனனாடன் வெளவினான் – என்னே
அரவக வல்குலாய் ஆறிலொன் றன்றோ
புரவலர் கொள்ளும் பொருள்” (மு.தொ.51)
ஆட்சியில் அரசியல் அறம் செழிக்க வேண்டும் என்ற புலவனின் வேட்கை இவற்றின்வழிப் புலனாகின்றது.
பாண்டியன் பாடல்களில் அறம்
பகைநாட்டு மன்னர்தம் மனைவியற் தீயில் முழ்கினர் உடன்கட்டை அதைக் கண்ட பாண்டியன் கண்களை மூடிக் கொண்டான்:
“ஏனைய பெண்டி ரெரிமூழ்கக் கண்டுதன்
தானையாற் கண்புதைத்தான் தார்வழுதி – யானையெலாம்
புல்வார் பிடிபுலம்பத் தாங்கண் புதைத்தவே
பல்யானை யட்ட களத்து” (மு.தொ.87)
முறைப்படி திறைப் பொருள்களைக் கொடுக்காதவர்களின் நாடு, ஒன்றன்பின் ஒன்றாகப் பசுக்கூட்டங்களும் பெண்களும் போர்செய்ய இயலாத ஆடவர்களும் நீங்கச் சென்றுவிட, தாய்ப்பேய்கள் பெற்றெடுத்த இளம் பேய்கள் தூங்குகின்ற இடமாக விளங்கும்:
“பறைநிறை கொல்யானைப் பஞ்சவர்க்குப் பாங்காய்த்
திறைமுறையி னுய்யாதார் தேயம் – முறைமுறையின்
ஆன்போ யரிவையர்போ யாடவர் யாயீன்ற
ஈன்பே யுறையு மிடம்” (மு.தொ.89)
இவை பாண்டியனைப் பாடும்போது புலவன் குறிப்பிட்டுள்ள காட்சிகளாகும். 60 பாடல்களில் பாடப்பட்டுள்ள பாண்டியன் ஒப்பீட்டளவில் சேரன், சோழனைவிட நல்லவன் என்ற எண்ணம் தோன்றப் பாடப்பட்டுள்ளான்.
இப்பாடல்களில் ஆங்காங்கே இடம்பெறும் அறவியல் சிந்தனைகள் சில:

1. மன்னன் தன் பிறந்தநாளன்று போர்செய்யான்:
“கண்ணார் கதவந் திறமின் களிறொடுதேர்
பண்ணார் நடைப்புரவி பண்விடுமின் – நண்ணாதீர்
தேர்வேந்தன் றென்னன் திருவுத்தி ராடநாட்
போர் வேந்தன் பூச லிலன்” (மு.தொ.75)
2. அறக்கோட்பாட்டில் விலகாமல் நின்று பரந்த தமிழ்நாடு ஐந்தையும் தான் கடைப்பிடித்து வந்த குலமரபுப்படி ஆட்சிசெய்பவன் பாண்டியன்:
“நறவேந்து கோதை நலங்கவர்ந்து நல்கா
மறவேந்தன் வஞ்சியான் அல்லன் – துறையின்
விலங்காமை நின்று வியன்தமிழ்நா டைந்தின்
குலங்காவல் கொண்டொழுகுங் கோ” (மு.தொ.127)
3. எல்லா உயிர்களையும் சமமாய் நடத்தும் நடுவுநிலைமைப் பண்பு பாண்டியனுக்கு வேண்டும்:
“மன்னுயிர் காவல் தனதான அவ்வுயிருள்
என்னுயிரும் எண்ணப் படுமாயின் – என்னுயிர்க்கே
சீரொழுக செங்கோற் செழியற்கே தக்கதோ
நீரொழுகப் பாலொழுகா வாறு” (மு.தொ.124)
தொகுப்புரையாக
சேர, சோழனைப் பாடும் பாடல்களில் ஆங்காங்கே போர்வெறி, போரில் நிகழும் கொடூரக் காட்சிகளைப் பெருமிதமாகச் சித்தரிக்கும் பாங்கு ஆகியன காணப்படுகின்றன. ஆனால், பாண்டியன் பாடல்களில் இத்தகைய போக்கு இல்லை. மாறாக, கைக்கிளைப் பாணிப் பாடல்களின் இலக்கிய அழகும், கற்பனையும், நளினமும், இரசனையும் தூக்கலாக உலா வருகின்றன.
இவ்வாறு, பாடப்பட்டிருப்பதிலிருந்து சேர, சோழர்களைத் தாழ்த்தி, பாண்டியனை உயர்த்தும் நோக்கோடு முத்தொள்ளாயிரம் படைக்கப்பட்டுள்ளது கண்கூடு.

“நறவேந்து கோதை நலங்கவர்ந்து நல்கா
மறவேந்தன் வஞ்சியான் அல்லன் – துறையின்
விலங்காமை நின்று வியன்தமிழ்நா டைந்தின்
குலங்காவல் கொண்டொழுகுங் கோ” (மு.தொ.127)
இத்தகைய நோக்குநிலையே முத்தொள்ளாயிரத்தின் படைப்பியல் நோக்குநிலையாக விளங்குகிறது. முத்தொள்ளாயிரத்தின் அறவியல் நோக்குநிலைகளாகப் பின்வருவனவற்றைத் தொகுக்கலாம்:
1. மன்னன் இறைவனுக்கு நிகரானவன் (சிவன், திருமால், முருகன்)
2. மன்னன் செங்கோல் ஆட்சி செலுத்தவேண்டும்.
3. மன்னன் போன்ற உயர்நிலையில் உள்ள ஆடவரிடம் பெண்டிர் சிலர் மயங்குவர்.
4. மன்னன் வரி, திறைகளை அளவறிந்து பெறவேண்டும்.
5. காமம் என்பது உயிர்அறம்@ அதில் அறம் மீறுவது உயிரன்று.
ஆக, முத்தொள்ளாயிரம் ஆதிக்க வர்க்கச் சார்பறத்தையும், உயிர் அறத்தையும் குழைத்த அறவியல் நோக்குநிலையைக் கொண்டிலங்குகிறது.


முனைவர் சு.மாதவன், உதவிப் பேராசிரியர்,
தமிழாய்வுத் துறை, மா.மன்னர் கல்லூரி (தன்னாட்சி),
புதுக்கோட்டை – 1
பேச : 9751 330 855
மின்னஞ்சல் : semmozhi200269@gmail.com

Series Navigationஎண்வகை மெய்ப்பாட்டு நோக்கில் புறநானூறு பயிற்றுவித்தல்கலாம் நினைவஞ்சலி
author

Similar Posts

2 Comments

Leave a Reply to Mari Cancel reply

Your email address will not be published. Required fields are marked *