முன்னணியின் பின்னணிகள் – 30

This entry is part 35 of 45 in the series 4 மார்ச் 2012

சாமர்செட் மாம்
தமிழில் எஸ். ஷங்கரநாராயணன்
>>>
மறுநாள் காலை குளிராக பாந்தமற்றமாகவே இருந்தது. மழை வேறு பிடித்துக் கொண்டது. மேட்டுத் தெருவில் விகாரேஜை நோக்கி நடந்தேன். வழியில் தென்பட்ட கடைகளின் பெயர்கள் எனக்கு ஞாபகம் இருந்தது. அந்த கென்ட் பிரதேசத்துக்கேயான பேர்கள், கால காலமாக, நூற்றாண்டு காலமாகப் புழங்கி வரும் பெயர்கள் அவை… கான். கெம்ப். கோப். இகல்தன்… ஆனால் கடைகளில் எனக்கு அடையாளந் தெரிகிறாப் போல யாரும் சிக்கவில்லை. அட இங்கே ஒரு காலத்தில் ஒருத்தர் பாக்கியில்லாமல் எல்லாருக்குமே என்னைத் தெரிந்திருந்தது. இப்ப என்னவோ அன்னியப்பட்டேன், பேயாய் உலவுகிறேனா என்ன? பேசாட்டியும் பரவாயில்லை, பார்வைக்காவது தெரிந்த முகம் தட்டுப்… படக்கென்று ஒரு காயலான் மாடல் சின்னக் கார், என்னைத் தாண்டிப் – நின்றது. பின்வாங்கியது. யாரோ உறுத்துப் பார்க்…
”ஏய் நீ வில்லி ஆஷெந்தன் தானே?”
இப்போது எனக்கு அவரை, அவனைத் தெரிந்தது. அது டாக்டரின் பிள்ளை. என்னுடன் பள்ளியில் ஒன்றாகப் படித்தவன். வகுப்பு வகுப்பாக கூடவே தாண்டி வந்தோம். அப்பா காலமானதும் இப்போது அவனும் மருத்துவத் தொழிலுக்கு வந்திருந்ததை அறிவேன்.
”ஹலோ, எப்பிடி சௌரியம்லாம்?” என்றுகேட்டான். ”இப்பதான் விகாரேஜ் வரை போய் என் பேரப்பிள்ளையை விட்டு வந்திட்டிருக்கேன். இப்ப அவன் ப்ரி-கே.ஜி. இந்த டேர்ம் ஆரம்பத்தில் இருந்து பள்ளிக்கூடத்தில் போட்டிருக்கிறேன்.”
ஆள் உடையே கன்னாபின்னா. தலையே காமாசோமா. ஆனால் முகம் வசிகரமாய் இருந்தது. வாலிபத்தில் மகா அழகனாய் இருந்திருப்பான். ஹா, அதை அப்போது நான் கண்டுக்கிட்டதே இல்லை.
”ஏ தாத்தா ஆயிட்டியா என்ன?” நான் கேட்டேன்.
”எனக்குப் பிறகு மூணாவது தலைமுறையே தலையெடுத்தாச்சி” என்றான்.
எனக்கு அதிர்ச்சிதான். பிறந்தான், தவழ்ந்தான், வளர்ந்தான், கிரகஸ்தனாகி, இப்ப பார், அவனது மகன் மகளுக்கே குழந்தை. ஆளைப் பார், காலம் பூராவும் வறுமை வறுமைதவிர வேறில்லை. நாட்டு வைத்தியனின் விநோதங்கள் அவனிடம் இருந்தன. குண்டாய், வெளிப்படையான மனுசனாய், பேச்சில நாசூக்கற்றவனாய். வாழ்ந்தும் முடித்திருந்தான்.
எனக்கு இன்னும் மூளைக்குள் எழுதவேண்டிய புத்தகங்கள், நாடகங்கள் என்று ஓடிக்கொண்டிருக்கின்றன. எதிர்காலமும், அதற்கான திட்டங்களும் உள்ளே உருண்டுகொண்டிருக்கின்றன. இன்னும் வாழ்க்கை அதுசார்ந்த சுவாரஸ்யங்கள் நுரையடங்கவில்லை. இருந்தாலும் பார்க்கிறவர் என்னையும் அவனைப் போலவே தான் முதியவனாகச் சொல்லுவார்கள்.
அவனது நிலையைப் பார்த்து நான் சிதறுண்டு போனதில் அவனது அண்ணன் தம்பிகள் பற்றி கேட்கவே விட்டுவிட்டது. அவர்களோடு நான் சின்ன வயசில் விளையாடியிருக்கிறேன். எனது பழைய மற்ற சகாக்கள், அவர்களைப் பற்றியாவது ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம்…. என்னவோ கண்டதைப் பேசிவிட்டு அவன் ஆளை விட்டுவிட்டேன்.
விகாரேஜுக்குப் போனேன். என் மாமனைவிட மெனக்கிட்டு வேலை செய்கிற வேறு யாரோ ஒருத்தர் இப்போது அங்கே. அவரது நாகரிக மாற்றங்கள் அளவுக்கு அந்த வீடு ஈடு கொடுக்கவே இல்லை. இப்பத்திய விலைவாசிக்கு அந்த அளவு பெரிய வீட்டில் யாரும் இருக்க மாட்டார்கள். குட்டி குட்டியா வகிர்ந்து குடக்கூலிக்கு விட்டு விடுவார்கள். பெரிய தோட்டத்தின் உள்ளே இருந்தது வீடு. சுற்றிலும் வயல். வேலிப்படலுக்கு மேலே தெரிந்தது அறிவிப்புப் பலகை. ஆயத்தப் பள்ளி. உயர்குடி மக்களுக்கானது என்ற குறிப்பு. கூடவே தலைமை ஆசிரியர் பெயரும் பட்டங்களும். தோட்டமும் பராமரிப்பில்லாமல் கிடந்தது. அந்தக் குளம், அதில் மீன் பிடிப்பேன்… வறண்டு கிடந்தது. கோயில் நிலம் வயல் அழிந்து இப்போது துண்டு துண்டாய் மனைகளாய் ஆகிவிட்டன. சின்னச் சின்ன செங்கல் வீடுகள். நடுவே புதிதாய், மேடும் பள்ளமுமாய் சாலை.
ஜாய் சந்து வழியே நடந்தேன். இங்கேயும் புதிதாய் வீடுகள். கடல் பார்த்தவாக்கில் பங்களாக்கள். தனியார் சொத்து என்கிறதாய்த் தெருவில் குறுக்கே கழியால் மறிப்பு கட்டிய வீடு முன்பு இருக்கும். அது இப்போது வெறும் டீக்கடையாக மாறிவிட்டது. இப்படி அப்படி திரிந்து பார்க்கிறேன். மஞ்சள் செங்கல் எடுத்த ஏராளமான வீடுகள் வந்து குவிந்து விட்டன. இதிலெல்லாம் யார் குடியிருக்கிறார்கள் என்றே எனக்குத் தெரியாது. எங்கேயும் வெளியே ஆட்கள் நடமாட்டமில்லை. கடற்கரை படகுத்தளம், அதுவும் ஜிலொன்னு கிடந்தது. கடலுக்குள் படகுவரை போகிற பாலத்தில் யாரோ படுத்திருக்கிறான். தளவாடப் பக்கமாய் ரெண்டு மூணு மீனவர்கள் உட்கார்ந்திருந்தார்கள். நான் தாண்டிப்போக ஒரு பார்வை வெறித்துப் பார்த்தார்கள். இங்கே கரி வியாபாரம் படுத்து விட்டது. கூலிக்காரர்கள் இப்போது பிளாக்ஸ்டேபிளை விட்டுப் போய்விட்டார்கள்.
ஆ, ஃபெர்ன் கோர்ட் போகவேண்டும். நாழியாகி விட்டது. திரும்ப பியர் அன்ட் கீ வந்தேன். விடுதிக்காரர் தன்னிடம் ஒரு டெய்ம்லர் (பழைய வகை ஜெர்மன் கார்.) வாடகைக்கு இருக்கிறதாய்ச் சொல்லியிருந்தார். சரி விருந்துக்கு நான் போக அதை ஏற்பாடு செய்யச் சொல்லியிருந்தேன். நான் திரும்பி வரும்போதே வாசலில் தயாராய் நின்றிருந்தது. கனமில்லாத ஆனால் அரதப் பழசு. அதன் உதிரி பாகங்கள் அநேகமாக எல்லா ஒரிஜினலையும் மாற்றியிருக்கக் கூடும். இல்லாத பொல்லாத சப்தமெல்லாம் போட்டது அது. சில சமயம் முனகல். சில சமயம் குமுறல். சில சமயம் உருமல். எலேய் இதல நாம போற இடத்தை அடைவமான்னே கவலை வந்தது.
எங்க மாமன் ஒவ்வொரு ஞாயிறு காலையும் சர்ச்சுக்குப் போக ஒரு பழைய லாண்டௌ கார் வாடகைக்கு எடுப்பார். அது தரும் அதே பழைய வாசனை இதிலும் வந்தது. ஒரு லாயத்தின் நெடி அது. கோச்சுப்பெட்டி யடியே பழைய வைக்கோல் கிடந்தால் வரும் நாற்றம். அட இத்தனை வருடங் கழித்தும், அதும் ஒரு மோட்டார் காரில் கோச்சுப்பெட்டியா?… என விநோதமாய் உணர்ந்தேன். ஆனால் பழைய ஞாபகங்களைக் கிளர்த்த ஒரு வாசனையோ, உக்ர நெடியோ போல வல்லது வேறொன்றில்லை. அதும் நான் இப்போது ஊடறுத்துப் போகும் இந்த கிராமாந்தரத்துக்கு நெடி முத்திரையான ஒன்று.
இப்போது என் மனசில் காட்சிகள் விரிகின்றன. முன் இருக்கையில் நான் சிறுவனாக. என் பக்கமாய் எங்கள் சமூகப் பலகை வண்டியில் பொறித்திருக்கிறது. என் எதிரே அமர்ந்திருக்கிறாள் அத்தை. சுத்தமான லினன் உடையின் வாசனை. யு டி கோலோன். கருப்புப் பட்டாடை. நாடாவைத்து நாடியில் கட்டிய பானட் வகைத் தொப்பியில் சிறகு. மாமன் கசாக் என்கிற பாதிரி அங்கியில். இடுப்பில் பெரிய பட்டையாய் பட்டுநாடா. வயிறுவரை தொங்கும் தங்கச் சங்கிலி. அதில் தங்கச் சிலுவை.
”கேட்டியா வில்லி, சமத்தா நடந்துக்கணும்டா. அப்பிடி இப்பிடி நெளியாமல் நல்லா நிமிர்ந்து உட்காரப் பழகிக்க. பிரபு இல்லம்ன்றது கோலியாடற இடம் இல்லை. அதை மறக்கப்டாது. உன்னளவுக்கு வாழ்க்கை வசதி பத்தாத மத்த பிள்ளைங்களுக்கு நீ ஒரு ஆதர்சம், உதாரண புருஷனா இருக்கணும். கேட்டியா? மண்டைய மண்டைய ஆட்டாதே, சொன்னபடி கேட்கணும். அதான் முக்கியம்.”
ஃபெர்ன் கோர்ட். ராயும் திருமதி திரிஃபீல்டும் தோட்டத்தில் நடைபயின்று கொண்டிருந்தார்கள். நான் காரில் இருந்து இறங்க என்னைப்பார்க்க வந்தார்கள்.
”பூச்செடிகளை ராய்க்குக் காட்டிட்டிருந்தேன்” என்றாள் திருமதி திரிஃபீல்ட். என்னுடன் கைகுலுக்கினாள். சின்னதாய் மூச்செடுத்தாள். ”ஹ்ம். இப்ப என்னிடம் இருக்கிறதெல்லாம் இவைதான்.”
ஒரு ஆறு வருஷம் முன்பு நான் பார்த்த அதேபடி தான் இருந்தாள். முகத்தில் வருடங்கள் கடந்த முதுமையின் உழவு இல்லை. உடையில் ‘வீட்’ என்கிற அலங்காரப் பொத்தான் அவளது தனி அடையாளம். கழுத்தில் வெள்ளையாய்ப் பட்டை. மணிக்கட்டிலும் வெள்ளைப் பட்டி. பொதுவாக ஒரு கனம் பொருந்திய பிரமுகர் வீட்டில் அவரது மரணத்துக்குப் பிறகு அணிகிறாப் போல ராய் உடையணிந்திருந்தார். முழு நீல சூட். கருப்பு டை.
”எனது தோட்டத்தை ஒருதரம் காட்டிறட்டுமா? பிறகு சாப்பிடப் போகலாமே?” என்றாள் திருமதி திரிஃபீல்ட்.
நாங்கள் சுற்றிப் பார்த்தோம். ராய்க்கு நிறைய விவரங்கள் தெரிந்திருந்தன. அந்த ஒவ்வொரு பூவுக்கும் அவர் பெயர் சொன்னார். அவற்றின் லத்தீன் பெயரைக் கூட நாக்கு சுளுக்கிக்கொள்ளாமல் சொன்னார். சிகரெட் தயாரிக்கும் யந்திரம் இப்பிடித்தான் சரசரவென்று சிகரெட் துப்பும். திருமதி திரிஃபீல்டிடம் அவர் சில விசேஷமான புஷ்பச்செடிகளை எங்கேயிருந்து தருவிக்கலாம் என்று சொன்னார். அட அதெல்லாம் நீங்க கண்டிப்பா இங்க வளர்க்கணும். இதுங்க ஒண்ணொண்ணும் அருமை. அவையும் இருந்தால் பிரம்மாதமா இருக்குமே?
”எட்வர்ட்டின் வாசிப்பறைக்கு நாம போகலாமா?” என்று யோசனை சொன்னாள் திருமதி திரிஃபீல்ட். ”அவர் இருந்தப்ப எப்பிடி இருந்ததோ, அதேபோலவே அதை நான் பராமரிக்கிறேன். ஒரு சாதனத்தையும் இடம் மாற்றவில்லை. அடாடா எத்தனை பேர் இவர் இருந்த வீட்டைப் பார்க்க வந்து போறாங்க தெரியுமா? அதிலும் அவர் எழுத உட்கார்ந்து வேலை செஞ்ச இந்த அறையை ரொம்ப ஆவலோட வளையவராங்க.”
ஒரு பெரிய வாசல் வழியே உள்ளே நுழைந்தோம். எழுது மேஜைமேல் ஒரு கோப்பையில் கொத்தாய் ரோசா மலர்கள். ஒரு வட்ட மேசை. அதற்கு ஒரு கைவைத்த நாற்காலி. மேசைமேல் ஸ்பெக்டேட்டர் இதழ் ஒன்று கிடந்தது. சாம்பல் கிண்ணங்கள். அந்த மேதை பயன்படுத்திய புகைக்குழாய்கள். மரச்சட்டத்தில் மைப்புட்டி. அவர் தவிர எல்லாமே, அவர் இருக்கிற பாவனை கொண்டாடின. கச்சிதம். ஏனோ தெரியவில்லை, எனக்கு அங்கே ஒரு விசித்திரமான சாவுக்களை தட்டியது. ஒரு பழங்கலைக் காட்சியகத்தின் முடைநெடி.
திருமதி திரிஃபீல்ட் புத்தக அலமாரிகளுக்குப் போனாள். சிறு புன்னகை. வேடிக்கை போலவும், சிறு ஆதங்கமான சோகம் போலவும், நீல அட்டையில் கட்டமைத்த அரை டஜன் தொகுதிகளை (என் எழுத்துகள்!) அவள் கைகள் பரசி அளைந்தன.
”உங்களுக்குத் தெரியுமா? எட்வர்ட் உங்க எழுத்தை ரொம்ப விசேஷமா நினைச்சார்,” என்றாள். ”உங்க புத்தகங்களை திரும்பத் திரும்ப வாசிப்பார்.”
”ரொம்ப சந்தோஷம்” என்றேன் அடக்கமாய். நான் போனமுறை இங்கே வந்திருந்தபோது அவை அங்கே இல்லை. என்னுடைய புத்தகங்களில் ஒன்றை சட்டென எடுத்து உள்ளே பிரித்து எதும் தூசி இருக்கிறதா என்று விரலை ஓட்டிப் பார்த்தேன். சுத்தமாகவே இருந்தது. இன்னொரு புத்தகம், சார்லஸ் பிரான்ட்டுடையது, இதைப் பார்க்கலாம்… அதிலும் தூசி இல்லை. நான் அறிந்து கொண்டேன். திருமதி திரிஃபீல்ட் வீட்டை துடைத்துத் துடைத்து சுத்தமாய் வைத்துக்கொள்கிறாள். வீட்டைச் சீராக்குவதில் கில்லாடி தான்.
சாப்பாட்டுக் கூடத்துக்கு வந்தோம். அருமையான பிரித்தானிய உணவு. வறுத்த மாட்டுக்கறி. யார்க்ஷைர் வகை பச்சடி. ராய் தற்போது ஈடுபட்டிருக்கும் எழுத்து வேலை பற்றிப் பேசினோம்.
”நம்ம ராய்க்காக…’ என்றாள் திருமதி திரிஃபீல்ட். ”அவருக்கு உதவுகிறதான விஷயங்கள் என்னால் எத்தனை திரட்டித் தர முடியுமோ முயற்சி செய்துகொண்டிருக்கிறேன். கடுமையான முயற்சிதான். ஆனால் சுவாரஸ்யமானது. அவரது பழைய படங்கள் நிறைய கிடைத்தன. ம், அதெல்லாம் நீங்க பார்க்கணும்…”
உணவு முடிந்து, கூடத்துக்கு வந்தோம். அந்த அறையையும் அத்தனை நேர்த்தியாய் ஒழுங்குபடுத்தி யிருந்தாள் திருமதி திரிஃபீல்ட். என்னே பதிவிரதா சிரோன்மணி. மனைவியாக அவள் இருந்ததை விட இப்போது அவரது விதவையாக பரிமளித்தாள். சீன அலங்கார சாதனங்கள். கிண்ணங்களின் விதவிதமான சேகரங்கள். கிழக்கு ஜெர்மானிய திரெஸ்தன் பகுதியின் சைனாக் களிமண் பொம்மைகள். அதிலும் பூர்விகப் பெருமையின் சன்னமான சோகம். திரெஸ்தன் 1845ல் பிரித்தானிய வானப்படையெடுப்புகளில் அழிந்தே போனதே. ஆக அதிலும் ஒரு மரண வாசனை தட்டியது.
குளிரான நாள்தான். ஒரு கணப்பு மூட்டியிருக்கலாம். ஆனால் அது இங்கே இந்த மாதத்தில் வழக்கமில்லை. வித்தியாசமான ஆங்கிலேயர்கள், வந்தவருக்கு வசதி குறைவு என்றாலும், வசதிக்காக வழக்கத்தை விட்டுக்கொடுக்க மாட்டார்கள். அக்டோபர் வரும்வரை திருமதி திரிஃபீல்ட் கணப்பு மூட்டவே மாட்டாள், என்பது திண்ணம். திரிஃபீல்டுடன் மதிய விருந்து என்று என்னை கடைசியாக அழைத்து வந்த அந்தப் பெண்மணியை அப்புறம் சந்தித்தேனா, என்று என்னிடம் திருமதி திரிஃபீல்ட் கேட்டாள்.
எனக்குப் புரிந்தது. அவளது அருமை பெருமையான கணவர் இறந்ததும், மரியாதைக்குரிய யாருமே அவளை வந்து பார்ப்பது இல்லை. இறந்து போனவர் பற்றி உரையாட என்று நாங்கள் தயாரானோம். ராயும், திருமதி திரிஃபீல்டும் வசிகரமான பல கேள்விகளை பல்வேறு கோணங்களில் என்னிடம் தொடுத்து என் நினைவுகளை மலர வைக்க முடியுமா என்று பார்த்தார்கள். எனக்குத் தெரிந்த சில முக்கிய விவரங்களை நான் அவர்களிடம் சொல்லாமல் தவிர்க்க முன்பே முடிவு செய்து வந்திருந்தேன். நான் பேசிக்கொண்டே யிருந்தாலும், அந்த விஷயங்கள் வெளிவந்து விடுமோ என்றே கவனத்தை நான் குவிக்க வேண்டியிருந்தது. அத்தோடு நான் மறைப்பதை அவர்கள் அறியாமல் மறைக்க வேண்டும். உற்சாகம் குறைந்தாப்போல காட்டிக்கொள்ள மாட்டிக்கொள்ளக் கூடாது… என்று நினைத்துக்கொண்டிருக்கும் போதே ஒரு மிடுக்கான வேலையாள் தாம்பளம் ஒன்றில் இரண்டு முகவரி அட்டைகள் கொணர்ந்தாள்.

”ரெண்டு பேர் காரில் வந்து வெளியே காத்திருக்கிறார்கள், அம்மா. உள்ளே வந்து வீட்டையும் தோட்டத்தையும் பார்த்துவிட்டுப் போக விரும்புகிறார்கள்.”
”அடாடா, என்ன இம்சை…” என அரற்றினாள் திருமதி திரிஃபீல்ட். ஆனால் அதில் ஒரு பெருமிதம்… ”இப்பதானே சொல்லிட்டிருந்தேன். அவர் வாழ்ந்த வீட்டைப் பார்க்க வந்திட்டே இருக்காங்கன்னு… பாத்தீங்களா? எனக்கு அக்கடான்னு உட்கார ஒழியவே ஒழியாது.”
”சாரி, உங்களால அவங்களைப் பார்க்க முடியாதுன்னு சொல்லிறலாமே?” என்று கேட்டார் ராய். அதுவும் சும்மா ஒரு ‘பதில் பாவ்லா’ கேள்விதான்.
”அது என்னால முடியல்ல. அப்பிடி வர்றாளுங்களைத் நான் திருப்பி அனுப்பினால் எட்வர்ட்டுக்கு அது பிடிக்காது.” அந்த பெயர்ச்சீட்டுகளைப் பார்த்தாள். ”ச், கண்ணாடி இல்ல.”
என்னிடம் அவற்றைத் தந்தாள். ஒன்றை வாசித்தேன். ஹென்ரி பியாட் மெக்தௌகல். வர்ஜினியா பல்கலைக்கழகம். கூடவே பென்சிலில் எழுதியிருந்தது. ஆங்கில இலக்கிய உதவிப் பேராசிரியர். மற்றதையும் வாசித்தேன். ழீன் பால் அந்தர்ஹில். கீழே முகவரியில் இடம் நியு யார்க் என்றிருந்தது.
”அமெரிக்கர்கள்” என்றாள் திருமதி திரிஃபீல்ட். ”அவங்களைப் பார்க்கறதுல சந்தோஷம்னு நான் சொன்னதாச் சொல்லி உள்ள வரச்சொல்லு.”
வேலையாள் புதியவர்களை உள்ளே அழைத்து வந்தாள். இருவருமே நல்ல உயரம். தடந் தோள்கள். மழுமழுப்பான அழுத்தமான முகம். கவர்ச்சியான கண்கள். மெலிந்த பட்டை கண்ணாடி அணிந்திருந்தார்கள். நெற்றியில் இருந்து பின்னோக்கி வாரப்பட்ட அடர்ந்த கருமையான சிகை. புத்தாடை, ஆங்கில மோஸ்தர் சூட் அணிந்து வந்திருந்தார்கள். லேசான கூச்சத்துடன் உள்ளே வந்தார்கள். ஆனால் கலகலப்பாக நாசூக்காக நடந்து கொண்டார்கள்.
இங்கிலாந்தில் ஒரு இலக்கியப் பயணம் வந்திருந்தார்கள். எட்வர்ட் திரிஃபீல்டின் எழுத்தில் வசியப்பட்டவர்கள். ரை வரை ஹென்ரி ஜேம்சின் வீட்டுக்கு அவர்கள் போய்க் கொண்டிருந்தார்கள். அங்கேயும் ஹென்ரி ஜேம்சின் புழக்கத்தில் இருந்த சாதனங்கள் சாமான்களோடு அந்த இடத்தைப் பார்க்கிற பாக்கியம் கிடைக்கும் என்று நம்புகிறார்கள். வழியில் திரிஃபீல்ட் இல்லத்தையும் எட்டிப் பார்க்கலாமென்று பட்டதால் வந்திருக்கிறார்கள்… ரை என்ற வார்த்தை திருமதி திரிஃபீல்டை முகம் மாற வைத்தது.
”ம். அவங்களுக்கு அமெரிக்காவில் இருந்து ஜேம்சுடன் நிறைய தொடர்பு இருந்திருக்கும்” என்றாள் திருமதி திரிஃபீல்ட்.
அந்த அமெரிக்கர்களை ராய்க்கும் எனக்குமாக அவள் அறிமுகம் செய்வித்தாள். அட அப்ப ராய் படமெடுத்தார் பாருங்க, ஆஹ்ஹா. வர்ஜினியா பல்கலைக்கழகத்தில் அவர் முன்பு போய் விரிவுரை தந்திருக்க வேண்டும். பல்லைக்கழக வித்தகர் ஒருவருடன் தங்கியிருக்கவும் வேண்டும். ஆ, அது விலைமதிக்க முடியாத, மறக்கவொண்ணாத அனுபவமாகவும் அமைந்திருக்கலாம் அவருக்கு. அடாடா, வர்ஜினியர்கள் எத்தனை தாராளமாய் விருந்தோம்புகிறார்கள்… கலையிலும் இலக்கியத்திலும் அவர்களுக்குதான் எத்தனை அபரிமிதமான ‘ஆ’-ர்வம்.
வர்ஜினியா பல்கலைக்கழகத்தில் அன்னார் சௌக்கியமா, இன்னார் எப்பிடி இருக்கிறார் என ஒரே குசலோபரி. அவர்கள் எல்லாரும் என் வாழ்நாள் தோழர்கள் ஆச்சே, ரயில் சிநேகிதர்கள் அல்ல அவர்கள். அங்கே அவர் சந்தித்த யாருமே சோடை இல்லை. எல்லாருமே அன்பான, அறிவான ஆசாமிகள். ராய் எதிர்பார்த்தபடி அடுத்த விஷயம் நடந்தது. அந்த இளம் பேராசிரியன் அடுத்த கொஞ்ச நேரத்தில், ராயின் புத்தகங்களை அவன் எத்தனை விரும்பினான் என்று ஆரம்பித்து விட்டான். உடனே இவர் இந்தப் புத்தகத்தை நான் ஏன் எழுதினேன், அதை எப்பிடி எழுதினேன், என்று தனக்கே விசிறிக்கொள்ள ஆரம்பிச்சாச். எழுத்தில் ரொம்ப கவனமா இயங்கணும், அதனாலதான் இத்தனை சுருக்க எனக்கு இந்த ஸ்தானம் கிடைச்சிருக்கு, இல்லாட்டி எப்பிடி முடியும் சொல்லுங்க.
வந்த இடத்தில் ராய் மாப்ளையாகி யிருந்ததை, ஒரு இருள் பூசிய முகத்துடன் திருமதி திரிஃபீல்ட் கேட்டுக்கொண்டிருந்தாள். ராயும் அதை கவனித்து விட்டார். அவர் முகமும் சட்டென மூட்டங் கொடுத்தது. பேச்சை நிறுத்தினார்.
”ஐய நீங்க உங்க வேலையா வந்த இடத்ல நான் என் கதையைச் சொல்லி உங்களை வெறுப்பேத்தறேனா?” என்று கணீரென்று அமெரிக்கையாய் எடுத்தார். ”இப்ப நான் பெரிய வேலை ஒண்ணில இருக்கிறேன். மேடம் என்னிடம் ஒரு மகத்தான பணி தந்திருக்காங்க. எட்வர்ட் திரிஃபீல்டின் வாழ்க்கை சரிதத்தை நான் எழுதிட்டிருக்கேன்.”
இதில் அந்த விருந்தாளிகள் ஆர்வம் காட்டினார்கள்.
”சரியான பணி பாத்துக்கங்க” என்றார் ராய். பேச்சில் விளையாட்டாக ஒரு அமெரிக்க பாணியைக் கைக்கொண்டார். ”இதுல என் அதிர்ஷ்டம், திருமதி திரிஃபீல்ட் எனக்கு வேணப்பட்ட உதவிகள் செஞ்சி தராங்க. கச்சிதமான மனைவி அவங்க. அவங்க குறிப்பு எடுக்கறதுல மன்னி. அருமையான உதவியாள். எனக்கு அவங்க தந்திருக்கிற விவரக் குறிப்புகள் அடேயப்பா அற்புதம். எனக்கு வேலை எதுவுமே இல்லை போல அத்தனை கச்சிதம். அவளது கருவூலத்தில் முத்துக்குளித்து நீச்சலடிக்க வேண்டியதுதான் நான். அந்த அன்பும் ஊக்கமும்…”
சட்டென முகம் பெருமையில் வீங்க தரைவிரிப்பைப் பார்த்து அவள் குனிந்து கொண்டாள். அந்த ரெண்டு அமெரிக்கர்களும் தங்கள் பெரிய கண்களால் அவளை ஒரு பார்வை. அவர்கள் மரியாதையையும் ஆர்வத்தையும் காட்டிக்கொள்ளும் பாவனை அதில் இருந்தது. தொடர்ந்து கொஞ்சம் இலக்கிய உரையாடல். சிறிது கோல்ஃப். ரை போனால் அவர்கள் ஓரிரு ரவுண்ட் கோல்ஃப் ஆட இருந்ததாகத் தெரிந்தது. ராய் இப்போதும் உடனே பிரகாசமானார். சாதனங்கள் வேணுமானால், இந்த பங்கரைப் போய்ப் பாருங்கள். அவர்களும் லண்டன் திரும்ப வந்தால் ராயுடன் கூட ஒரு சுற்று சன்னிங்தேல் திடலில் விளையாட ஆசைப்பட்டார்கள். இப்போது திருமதி திரிஃபீல்ட் எழுந்துகொண்டாள். வாங்க, எட்வர்ட்டின் வாசிப்பறை, ஓய்வறைகளைப் பார்க்கப் போவமா? அப்பிடியே தோட்டம் பக்கமும் போய்ப் பார்க்கலாம். ராய் உடனே எழுந்து அவர்களோடு கிளம்பத் தயாரானார். ஒரு அழுத்தமான சிரிப்போடு திருமதி திரிஃபீல்ட் அவரை அப்படியே நிறுத்தினாள். அருள் பாலிக்கும் அபய ஹஸ்தம் போல, இது அபாய ஹஸ்தம். அதுக்கும் அடங்க மாட்டாரோன்னு யோசித்தாளா தெரியவில்லை. சொல்லவே சொல்லிவிட்டாள்.
”நீங்க சிரமப்பட வேண்டாம் ராய்” என்றாள் கத்தி வீச்சு போல. ”நான் அவங்களுக்கு சுத்திக் காட்டிக்கறேன். நீங்க திரு ஆஷெந்தன்கூட பேசிட்டிருங்க.”
”ம். அதுவும் சரிதான்…”
வந்தவர்கள் எங்களைப் பார்த்து தலையசைத்துவிட்டுப் போனார்கள். ராயும் நானும் பூவேலைப்பாடு போட்ட உறையிட்ட கைநாற்காலிகளில் திரும்ப அமர்ந்துகொண்டோம்.
”ரொம்ப இதமான அறை இது, இல்லியா?” என்றார் ராய்.
”ரொம்ப” என்றேன்.
”இந்த வீட்டை இப்பிடித் தயார்செய்ய அமி ரொம்பப் போராடினாள். அவங்களுக்குக் கல்யாணம் ஆறதுக்கு ரெண்டு மூணு வருஷம் முன்னால் திரு திரிஃபீல்ட் இதை வாங்கினார். இதை வித்துறலாம்னு அவள் எவ்வளவோ சொன்னாள். மு-ட்.டியவே முடியாதுன்னு அவர் பிடிவாதமா இருந்திட்டாரு. சில விஷயங்கள்ல அவரு ஏனோ அத்தனை பிடியிறுக்கமா நடந்துக்கறாரு. யாரோ திருமதி உல்ஃபோடது இது. அவங்க ஐயா அவகிட்ட நீதிமன்ற குமாஸ்தா. சின்ன வயசில் அவருக்கு ஒரு ஆசை. இந்த வீட்டப் பார்க்கிறபோதெல்லாம், இதை நாமளே வாங்கிறலாமான்னு ஒரு இது. இப்ப கிடைச்சிட்டது, அதைப்போய் விக்கலாமா? அவருக்கு என்ன ஒரு இதுன்னா, தன் கடைசி மூச்சை அவர் விடற இடத்தில் அவர் பிறந்து வளர்ந்த வாழ்ந்த இடமெல்லாம் எல்லாருக்கும் ஞாபகம் வர்றா மாதிரி இருக்கணும். அமி வீட்டு வேலைக்குன்னு ஒரு பெண்ணை கிட்டத்தட்ட ஏற்பாடு பண்ணியாச்சி, கடைசில பார்த்தால் அவள் திரிஃபீல்டோட ஒண்ணுவிட்ட பேத்தி உறவுன்னு கண்டுபிடிச்சி விலக்கினாள்.
… அவ இங்க குடிவந்தபோது இந்த வீட்டில், நிலவறை முதல் முழுசுமே, எல்லா சாமானும் தாத்தன்ஹாம் கோர்ட் தெரு மோஸ்தரில் இடம் பிடிச்சிருந்தது. அந்த மாதிரி அலங்காரம் பாத்திருப்பீங்கள்லியா, துருக்கி தரைவிரிப்புகள். அலமாரிகள் மகோகனி மரச்சட்டங்கள். சிறு சிறு காபின் தடுப்பு எடுத்த பிரம்மாணடமான கூடம். இந்தக்கால அளவில், கசகசன்னு உள்ளே ஒரே இணைப்புகளா இருக்கும்.
… இந்த மாதிரிதான் இருக்கணும்னு நம்மாளுக்கு ஒரு இது. பெரிய மனுசா வீடுன்னா இப்பிடியல்லவா இருக்கணும்ங்கறாரு. அழகாத்தான் இருக்குன்னு சொல்வாள் அமி. அதில் ஒரு சாமானை இடம் மாத்தி வைக்க அவர் விடமாட்டார். துடைக்க கொள்ளன்னு எதை எடுத்தாலும் பதமா எடுத்து துடைச்சிட்டு பத்திரமா திரும்ப வைக்கணும்.
…. இந்த வீடு அவளுக்கு ஒட்டவே இல்லை. எதுவுமே இங்க சரி கிடையாதுன்னு அவளுக்கு. அவர் மனசிலயே பதியாமல் சின்னச் சின்னதா மாற்றங்களைக் கொணர்ந்தாள். அந்த எழுதற மேசை, அதை சீராக்கறதுதான் ஆகச் சிரமம் அப்பான்னாள் என்னிடம். இப்ப அவரது வாசிப்பறையில் இருக்கே, அந்த மேசையைப் பாத்தீங்களா? சரித்திரஅடையாளப் பழசு. எனக்கே அப்பிடி ஒண்ணு கெடைச்சால் தேவலாம். ஆனால் அவர் வெச்சிருந்தது இது இல்ல, ஒரு அமெரிக்க பாணி ரோல் டாப் மேசை. மேலே நீட்டி மடக்கிக்கொள்கிற சுருள்கள் கொண்டது. அதில் புத்தகங்கள் அடுக்கிக்கொள்ளலாம்.
… வருஷ வருஷமா அதைதான் வெச்சிருந்தார். ஒரு டஜன் புத்தகங்கள் அதில் எழுதியிருப்பாரு. ஐயோ இதை என்னால விட்டுக்கொடுக்க முடியாதுன்னிட்டிருந்தார். என்ன ரொம்ப வருஷமா இருக்கே, இருந்திட்டுப் போட்டுமேன்னு அவருக்கு. எதையும் மாத்திக்கறதுல அவருக்கு ஆர்வம் இல்லை. கடைசியா அவர் கிட்டேயிருந்து அந்த மேசையை ஒழிச்சி வேற மேசையை வைக்கிறதுக்கு அமி பட்ட பாட்டை அவள் சொல்லிக் கேட்கணும் நீங்க. பாவம் அமி, என்னமா அவரோட போராடியிருக்கிறாள். சரியான பெண் அவள், அவளுக்குன்னு தனி வழி, பாதை இருக்கு.”
”ஆமாமா, பாத்தேன்…” என்றேன்.
அவருக்கே பேசியது போரடித்தது முதன் முறையாக. சட்டென எழுந்துகொண்டு வந்தாட்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்க்கப் போனார். என்னை ஒரு பார்வை. சிரித்தார். அவர் முட்டாள் ஒன்றும் அல்ல. புரிகிறது எல்லாமும்.
”ஏ உங்களுக்கு என்னளவு அமெரிக்கா தெரியாதும்பேன்” என்றார். ”அவங்க செத்த சிங்கத்தை விட, ஓடிட்டிருக்கும் சுண்டெலி, மேல் என்பார்கள். அதனாலதான் எனக்கு அமெரிக்காவைப் பிடிக்கும்.”
>>>
தொடரும்
storysankar@gmail.com

Series Navigationஅமீரகத் தமிழ் மன்றத்தின் 12-ஆம் ஆண்டு விழாவிஸ்வரூபம் – அத்தியாயம் எழுபத்தொன்பது
author

எஸ். ஷங்கரநாராயணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *