முன்னணியின் பின்னணிகள் – 21 சாமர்செட் மாம்

This entry is part 38 of 40 in the series 8 ஜனவரி 2012

தமிழில் எஸ். ஷங்கரநாராயணன்

 

… எது எப்பிடியானாலும் நம்ம ஜாஸ்பர் கிப்சன் தான் முதன் முதலில் ஓபரா மற்றும் உச்சஸ்தாயி பாடகரின் முகவரி அட்டைகளிலும் ‘அட் ஹோம்’ என கூட இடம் பிடித்த முதல் எழுத்தாளர்.

ஆக அவர் நமது திருமதி பார்த்தன் திரஃபோர்டின் பிரதம விருந்தாளி என அழைப்பு பெறாமல் எப்படி? அவர் கலந்துகொள்ளும் ஓபரா நிகழ்ச்சிகளின் முன்வரிசையில் அவள் இடம்பிடித்தாள். என்றாலும் அது கௌரவ நுழைவுச்சீட்டு அல்ல, கைக்காசு கொடுத்துப் போய் அமர்ந்தாள். என்ன வித்தாரம் பண்ணினாளோ, என்ன மாயம் நிகழ்த்தினாளோ, எத்தனை வாலாட்டிய குழைவுகளை மேற்கொண்டாளோ… அவர் பரிவைச் சம்பாதிக்க என்ன ஜாலம் நிகழ்த்தினாளோ, எனக்கு கற்பனை பத்தவில்லை, அவள் கில்லாடி என்பதை வியக்கிறேன். ஒத்துக்கொள்கிறேன்… அவள் வலையில் குப்புற வீழ்ந்தார் கிப்சன்.

அடுத்த சில நாளில் அவளது மென் கரங்களால் பரிமாறப்பட்ட விருந்தை அவர் ஏற்றுக்கொண்டார். அவளை அவர் வியக்கும்படி நடந்துகாட்டினாள். சரியான நபர்களை அவர் சந்திக்கும்படி அவள் விருந்துகள் ஏற்பாடு செய்யவும் செய்தாள். இங்கிலாந்தின் முக்கிய பிரமுகர் மத்தியில் அவர் தமது கவிதைகளை வாசித்துக் காட்டியபோது அவள் அங்கே கட்டாயம் இடம் பிடித்தாள். பிரபல நடிகர்களை அவருக்கு அவள் அறிமுகம் செய்ய, அவரை அவர்கள் தங்களுக்கு நாடகங்கள் எழுதித் தரும்படி கேட்டுக்கொண்டு முன்பணமும் தந்தார்கள்.

மட்டுமல்ல, அவரது கவிதைகள் பெரிய இதழ்களில் சரியான கவனத்துடன் வாசிக்கும்படி இடம்பிடிப்பதை அவள் கவனித்துக் கொண்டாள். அவர் சார்பில் அவளே பதிப்பாளர்களை அணுகவும் தயங்கவில்லை. ஒரு மத்திய மந்திரியே மூக்கில் விரல் வைக்கும்படி அவருடைய படைப்புகளின் விற்பனை உரிமை சார்ந்து உடன்படிக்கைகள் செய்து தந்தாள்.

அவள் சொன்னால் அந்த அழைப்புகளை மாத்திரம் அவர் ஒப்புக்கொள்ள வேண்டும். தரக்குறைவான இடங்களில் இருந்து வரும் விருந்து அழைப்புகளை அவள் மறுதலித்தாள். அட, அவர்மனைவியுடன் விவாகரத்தே அவள் வாங்கித் தந்தாள்… அந்த மனுஷியுடன் அவர் பத்து வருஷம் எந்த வில்லங்கமும் இல்லாமல் சந்தோசமாகவே வாழ்ந்தார் என்று சொல்லவேண்டும்… யார் அவர் கவிஞன். தன் நெஞ்சறிவதை அவன் பொய்யாக்கி விட்டு வேறொன்றை எழுதக் கூடாது. மன¬வியுடனான இல்லறத் தளைகள் அவனை அத்தனை நேர்மையுடன் எழுத வைக்காது… கவிஞன் சுதந்திரப் பட்சி அல்லவா, என்பது அவள் கணிப்பு. ஆனைக்கும் அடி சறுக்கும். அவரது வீழ்ச்சி ¢ஆரம்பித்தபோது, அவள் தன்னாலானதை, மனித எல்லைக்கு உட்பட்ட அனைத்தையும் தான் அவருக்குச் செய்ததாகக் கூறியிருப்பாள்… என்று தோன்றுகிறது.

ஆ, வந்தது வீழ்ச்சி. ஜாப்ர் கிப்சன் இன்னொரு கவிதைத் தொகுதி கொணர்ந்தார். முதல் தொகுதியை விட அது மேலானதாகவோ, மொண்ணையாகவோ இல்லை. முதல் தொகுதி அளவுக்கே அதுவும் அமைந்திருந்தது. மரியாதையுடனேயே அது அணுகப்பட்டது. என்றாலும் விமரிசகர்கள் கொஞ்சம் சாக்கிரதையாகவே அதை அணுகினார்கள். சிலர் சில முணுமுணுப்புகளையும் வைத்தார்கள். அந்தப் புத்தகம் சனங்களின் எதிர்பார்பபை பூர்த்தி செய்யவில்லை. அதன் விற்பனையும் கூட ஏமாற்றம் அளித்தது.

துரதிர்ஷ்டவசமாக கிப்சன், படத்தைக் கீழே போட நேர்ந்தது. சாதாரணமாகவே அவரிடம் பெரிய அளவில் பணம் கையோட்டம் இல்லை. அவருக்கு அளிக்கப்பட்ட அந்த பந்தாவான கேளிக்கைகளுக்கு அவருக்கு பழக்கமும் கிடையாது. எளிமையான குடும்பப்பாங்கான மனைவியும் இப்போது கூட இல்லை.

ஓரிரு முறை அவர் திருமதி பார்த்தன் திரஃபோர்ட் வீட்டுக்கு விருந்துண்ண வந்தார். அப்போது, கூட இருந்தவர் எல்லாம் அவர் அளவுக்கோ, அதனினும் ஒரு உப்பு குறைந்தவர்களோ, ஏப்பை சாப்பைகளே. உலகத்தின் பார்வையில் துச்சர்களே அவர்கள். பாடலாசிரியர் அன்றைக்கு அத்தனை சுரத்தாய் இல்லை, என்பதாக அவள் விருந்தினர்களிடம் சமாளித்தாள்.

அவரது மூன்றாவது புத்தகம் தோல்வியடைந்தது. விமர்சகர்கள் அரைக் கிழித்து தோரணங் கட்டிவிட்டார்கள். வீழ்த்தி மேலேறி அமர்ந்து குத்திக் குதறினார்கள். நம்ம எட்வர்ட் திரிஃபீல்டின் பிரியமான ஒரு பாடலில் வருவதுபோல, அவரை ஆளுக்காள¢ பந்தாடி ஏறி மிதித்து முகத்தில் கீறினார்கள். இந்த வசனகவியைப் போய் அமரகவி என தாங்கள் தப்பாக எடைபோட்டு விடடதில் எரிச்சல் பட்டிருந்தார்கள். அவர்கள் பண்ணிய தப்புதான், ஆனால் அதற்கு அவர், கிப்சன் தண்டனை அனுபவித்தே ஆகவேண்டும். எங்களை மாட்டிவிட்ட படுவா, அனுபவி!

நிலைமை எக்கச்சக்கமாகி ஒருநாள் குடித்து கலாட்டா பண்ணியதாக பிகாதிலியில் அவரைக் கைது செய்து, திரு பார்த்தன் திரஃபோர்டு வைன் வீதிக்குப் போய் ஒயின் குடித்த அவரை ஜாமீன் கொடுத்து மீட்டு வரவேண்டியிருந்தது அவரை.

இப்போது திருமதி பார்த்தன் திரஃபோர்ட் ரொம்ப பதவிசாக நடந்துகொண்டாள். அவள் தன் முனைப்புகளில் ஆயாசமுறவெல்லாம் இல்லை. கடுஞ்சொல் ஒருசொல் அவள் உதிர்த்தாளில்லை. அந்தாளுக்காக அவள் அத்தனை செய்ததற்கு அவள் கடிந்துகொண்டிருந்தாலும் தப்புச் சொல்ல முடியாது தான். அதே மென்மையை, இரக்கத்தை, நாகரிகத்தை அவள் கடைப்பிடித்தாள். நிலைமையை அவள் புரிந்துகொண்டாள் என்றே சொல்ல வேண்டும்.

அவள் அவரைக் கைவிட்டாள், சட்டி சுட்டதடா கைவிட்டதடா, என்பதைப் போல அல்ல… அவளுக்கே பிடிக்காத காரியத்தைச் செய்கிற பாவனையில் மென்மையோ மென்மையாய் அவள் பிடியுருவிக் கொண்டாள். கண்ணில் இருந்து கீழே கண்ணீரைச் சிந்துவது போல மெல்ல உதறிக் கட், கடாசினாள். தான் கைவிடப்பட்டதை ஜாஸ்பர் கிப்சனே உணர முடியாத அளவுக்கு பட்டுக்கத்தரிப்பு அது. அவரைப் பத்தி எந்த குறையும் அவள் சொல்லவே இல்லை. அவரைப் பத்திப் பேசுவதையே அவள் விட்டுவிட்டாள், என்றே சொல்ல வேண்டும். எப்பவாவது அவரைப்பற்றி சபையில் பேச்சு வந்தாலும் அவளிடம் சிறு புன்னகை. கொஞ்சம் துக்ககரமான புன்னகை. பின் ஒரு பெருமூச்சு. ஆனால் சிரிப்பா அது, ஆளைக் கழுத்தறுக்கிற வேலை அது. அந்தப் பெருமூச்சு, ஆளையே குழிதோண்டிப் புதைக்கிறது.

திருமதி பார்த்தன் திரஃபோர்டின் கலை ரசனை ரொம்ப நேர்மையானதாக்கும். இப்படி இடையே குண்டக்க மண்டக்க நடந்தால் அது அவளைத் தளர்த்திவிட முடியாது. இடைப்பட்டு எத்தனை ஏமாற்றங்கள்தான் வரட்டுமே, அவளுக்கிருக்கிற திறமைகள், மென்மையான ஆராதனைகள்… அவை அவளைச் சும்மா அடங்கி இருக்க விடாதுதான். அதை அவள் சதா சோதித்து, வெற்றி பெற்றுக்கொண்டே தான் இருப்பாள். தொடர்ந்து அவள் இலக்கிய முகாம்களில் நடமாடிக்கொண்டுதான் இருந்தாள். தேநீர் விருந்துகள், சாய்ரீஸ் எனப்படும் இல்லக் கோலாகலங்கள், அட் ஹோம்ஸ் எனப்படும் முன்னிலை என பிரமுகர்கள் வந்தமரும் அழைப்புகள் என கலந்துகொண்டாள். அதே கவர்ச்சியுடன், மென்மையுடன், அவதானிப்புடன் கேட்டுக்கொண்டு, கவனக்குவிப்பும் விமரிசனப்பாங்குமாய், ஒரு சாக்கிரதையுணர்வுடனுங் கூட! (ரொம்பக் காட்டமாய் எழுதுகிறேனா?) ந.மா.ஒ. சூடு. ஆ இம்முறை ஜெயிக்கிற குதிரையில் பணங் கட்டுவேன்!

இந்த சந்தர்ப்பத்தில் தான் அவள் எட்வர்ட் திரிஃபீல்டைக் கண்டுகொண்டிருக்க வேண்டும். அவரது கொடைகள் பற்றி இப்போது நல்வார்த்தைகள் அவள் பகர பகிர ஆரம்பித்தாள். திடீரென்று தூக்கி இடுப்பில் வைத்துக்கொள்ள அத்தனைக்கு அவர் இளமையானவரும் அல்ல, அது வாஸ்தவந்தான்… ஆனால் இந்த மனுசர் ஜாஸ்பர் கிப்சனைப்போல காலப்போக்கில் அப்படியே உல்டாவாகி உருக்குலைந்து போகிற நபர் அல்ல, என்பது அவளுக்குத் தெரிந்தது. ஆக அவரிடம் நட்புக்கரம் நீட்டினாள் அவள். உங்க படைப்புகள் எல்லாம் சின்ன வட்டத்துக்குள்ளேயே புழங்கிட்டு வருது, அது ஒரு சதி வேலை… அதன் வாசிப்பு எல்லையை விரிவுபடுத்தி யாகணும்… என அவள் தனக்கேயுரிய மென்மையுடன் கருத்து அளித்தபோது அந்தாள் அம்பேல். தன்யனானேன்…. என அவர் நெகிழ்ந்த கணம் அது.

திரு பார்த்தன் திரஃபோர்ட் உங்களைப் பத்தி ஒரு முக்கியக் கட்டுரை குவாட்டர்லி ரெவ்யூவில் எழுதலாம் என்று நினைக்கிறார்… என்று ஒருபோடு போட்டாள். அட, வாங்களேன் ஒரு மதியம் நம்ம வீட்டில் விருந்து உங்களுக்கு. பல முக்கிய பிரமுகர்களையும் அப்படியே நீங்க சந்திக்கலாம்… உங்களுக்கு அது பிற்பாடு பயன்படும். அட இப்ப உங்க தரத்தில் உங்களுக்கு நிகரா அல்லது போட்டியா யாரார் எழுதிட்டிருக்காங்க, நீங்க அவங்களைத் தெரிஞ்சிக்க வேணாமா?

சில சமயம் அவரை செல்சீ மாவட்டப் பகுதியில் தேம்ஸ் நதிக்கரைப் பக்கமாய் ஒரு உலா அழைத்துப் போய்வந்தாள் அவள். மறைந்த, வாழ்கிற கவிஞர்களைப் பற்றியெல்லாம் அவர்கள் நிறைய பேசிக்கொண்டார்கள். காதலை, நட்பைப் பற்றிப் பேசினார்கள். அப்படியே ஏபிசி கடையில் தேநீர் அருந்தினார்கள். ஆ, அவள் லிம்பஸ் தெருவுக்குத் திரும்பியபோது, ஒரு ராணித் தேனியின் சல்லாப சரசத்தின் உச்சத்தில் இருந்தாள்.

திருமதி திரிஃபீல்டுடன் அவள் காட்டிய நட்புக்கும் விகல்பமாய் எதுவும் இல்லை. தன் தரத்தை விட்டுக்கொடுக்காத ஒரு மேல்குடிப் புன்னகையுடன் எட்டவே, ஆனால் பரிவு காட்டியதாய் அமைந்தது அது. தன் வீட்டுக்குள் திருமதி பார்த்தன் திரஃபோர்டை அனுமதித்ததையிட்டு நன்றியும் தெரிவித்தாள் அவள். தான் வரும்போது திரிஃபீல்டோடு அவளும் சேர்ந்தே உரையாடுவதை தான் பெரிதும் பாராட்டினாள். எட்வர்ட் திரிஃபீல்டை அவள் பாராட்டும்போது, ஹா இப்படி ஒரு மனிதருடன் சிநேகம் மற்றும் உறவு என்பது எத்தனை பேறு, என்று பேசினாள். ஏ உன்மேல உள்ள பிரியத்ல பேசறேன் இவளே, உன் கணவரைப் பத்தி உன்னாண்டயே இன்னொரு பெண் பேசறாளேன்னு நீ தப்பா நெனைச்சிக்காதே, என்ன?

திருமதி திரிஃபீல்டிடமும் அவள் பொதுவான விஷயங்கள், அவளைக் குளிப்பாட்டுகிறாப் போல ஒன்றிரண்டு பேசிச் சென்றாள். சமையல் பற்றி, வேலைக்காரர்கள் பற்றி, எட்வர்டின் உடல்நலம் பற்றி… ஏ நீ அவரை நல்லபடியா கவனிச்சுக்கணும் இவளே… என்றாள் அக்கறையுடன். பாரம்பரியம் மிக்க ஸ்காட்ச் குடும்பப் பெண் எப்படி நடந்துகொள்வாளோ அப்படியே திருமதி பார்த்தன் திரஃபோர்ட் அவளிடம் நடந்துகொண்டாள். அவள் ஸ்காட்லாந்துக்காரிதான். பாவம் அந்தப் பெரிய எழுத்தாளர் தடுமாறி விழுந்தாப் போல ஒரு மதுவிடுதிப் பொம்பளையிடம் மாட்டியிருக்கிறார். அந்தப் பெண்ணிடம் என்ன பேசவேண்டும், என்பது தெரிந்திருந்தது அவளுக்கு. பிரியமாய் குறும்பாய், திருமதி திரிஃபீல்ட் தன்னுடன் வேத்துமுகம் காட்டாதபடி பார்த்துக்கொள்ள அவளால் முடிந்தது.

இதில் விநோதமான விஷயம், இதில் எந்தப் பருப்பும் ரோசியிடம் வேகவில்லை, என்பதே. எனக்குத் தெரிந்து அவள் வேறு யாரிடமும் வெறுப்பு பாராட்டியதே இல்லை. இப்போதெல்லாம் பண்பட்ட இளம் நாரிமணிகளே நொடிக்கு நூறு தரம் பிட்ச், பிளடி என்றெல்லாம் கலந்து பேசுகிறார்கள்… அந்தக் காலத்தில் மது விடுதிப் பரிசாரகிகளே அப்படியெல்லாம் பேச மாட்டார்கள். எங்கள் அத்தை சோஃபியை முகம் சுளிக்க வைக்கிற எந்த கெட்ட வார்த்தையையும் இதுவரை ரோசி பேசி நான் கேட்டது இல்லை. யாராவது கொஞ்சம் விரசமாய்ப் பேசினாலே அவளுக்கு உடம்பே வெட்கத்தில் சிவந்துபோகும். ஆனால் அவளே தாள மாட்டாமல் திருமதி பார்த்தன் திரஃபோர்டை ‘கேடுகெட்ட கிழட்டுப் பூனை’ என வைதாள் என்பது ஆச்சர்யம். அவளது நெருக்கமானவர்கள் ”ஏ என்ன இவளே, இப்பிடிப் பேசறே… அவகிட்ட கொஞ்சம் பதவிசா நடந்துக்க,” என்றார்கள்.

”முட்டாத்தனமா எதுவுஞ் செஞ்சி குட்டையக் குழப்பிறாதே ரோசி” என்றார்கள். எல்லாரும் அவளை ரோசி என்றே விளித்துப் பேசிவந்தார்கள். நானும் சிறிது சங்கோஜத்துடனே தான் என்றாலும் அவளைப் பேர் சொல்லியே கூப்பிட்டுப் பேசினேன். ”அவள் நினைத்தால் அவரை கிடுகிடுன்னு மேல கொண்டு வந்திருவாள்டி. அவள் சொல்றதை அவர் கேட்டு நடந்துக்கிட்டாலே போதும், அவர் எழுத்துக்கு வேணுன்ற மரியாதையான ஒரு சூழலை அவள் ஏற்படுத்தி விடுவாள். அதன் நேக் தெரிஞ்சவள் அவள். நமக்கு என்ன தெரியுஞ் சொல்லு.”

திரிஃபீல்ட் வீட்டில் கூடுபவர்கள் கட்டாய முறை என வைத்துக் கொள்வது இல்லை. ஒரு சனி விட்டு அடுத்த சனி, மூணாமத்த சனி, என்று இஷ்டப்படி வந்து போவார்கள். என்றாலும் சிறு கூட்டம் ஒவ்வொரு சனி நாளும் அங்கே சேர்ந்தது. என்னைப் போன்றவர் வாரா வாரம் கூடிவிடுவோம். நாங்கள் எப்பவும் அந்த இடத்தை நிரப்பி வந்தோம். முன்னாலேயே வந்து, எல்லாரும் போனபின் கடைசியாய்ப் பிரிவோம். இதில் என் கூட ஜமா யாரெல்லாம் என்றால், குவன்டின் ஃபோர்ட், ஹாரி ரெட்ஃபோர்ட், மற்றும் லயோனல் ஹிலியர்…

குவன்டின் ஃபோர்ட் கட்டுமஸ்தான சின்ன உருவம். அருமையான முகம். பிற்பாடு சினிமாவில் அவன் பிரபலமானான். நீண்ட மூக்கு. அழகான கண்கள் அவனுக்கு. வெளுத்த முடி சீராக வெட்டிவிட்டிருக்கும். கருத்த மீசை. கொஞ்சம், ஒரு நாலஞ்சு அங்குலம் உயரமாய் இருந்திருந்தால் நாடகங்களில் ஆர்ப்பரிப்பான வில்லனாக பரிமளித்திருப்பான். அவனுக்கு சிநேகிதர்கள் நிறைய. யாரிடமும் சகஜமாய்ப் பழகிவிடுவான். உடல் மண்ணுக்கு, உயிர் கலைக்கு, என்கிற ரகம். புதிய நாடகத்தின் அரங்கேற்ற நாளில் எந்த நாடகமானாலும் அவன் இருப்பான். திரைப்பட பிரத்யேகக் காட்சிகளிலும் அவன் ஆஜர். கலைப்படம் என்று பேருக்கு நாலு பேர் உட்கார்ந்து ரசிக்கிற காட்சிகள் அவை. விடலையின் அதித கவனம் அவனிடம் இருந்தது. சமகால பிற கலைஞர்களிடம் அவனையிட்டு ஒரு ‘காய்ச்சல்’ இருந்தது. எனக்கு ஒரு விஷயம் தெரிந்தது, அட இவன் திரிஃபீல்ட் மகா அறிவாளின்னு வரவில்லை… ரோசி அவன் கண்ணுக்கு அழகாகத் தெரிந்தாள், அவளைப் பார்க்க அவரைப் பார்க்கிறதாக ஒரு சாக்கு.

இப்போது இதையெல்லாம் நினைக்க எனக்குள் ஆச்சர்யம் முட்டுகிறது. முதன் முதலில் நான் அவளைப் பார்த்தபோது, அவள் அழகாய் இருந்தாளா, அத்தனைக்கு தனி ஈர்ப்பு எல்லாம் அவளிடம் இல்லையா?… என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. அப்படி யோசனையே என்னிடம் அப்போது, அந்த நிக்கர் வயசில் இல்லை. அடுத்து தானே தன் காலில் நிக்கற வயசில், ஒரு அஞ்சு வருஷம் தாண்டி அதே பெண்ணைப் பார்க்கிறேன்… அந்த அழகு என்னைக் கிளர்த்துகிறது. இப்போதைய என் வயசின் பார்வை மாற்றமா இது. இது ரொம்ப உள்குறுகுறுப்பான விஷயம்தான் என்றாலும் ரொம்ப மனசை அலைபாய விடவில்லை நான். அட காலகதி இது, வடக்குக் கடலில் சூரிய அஸ்தமனத்தை ரசிப்பதைப் போல, தெர்கன்பரி தேவாலய கோபுரத்தை ரசிக்கவில்லையா, அதைப்போல… என அடக்கி வாசிக்கிறேன். ஆனால் ரோசியின் அழகை மற்றவர்கள் பேசிக்கொள்ளும் போதெல்லாம் எனக்குத் திகைப்பாய் இருந்தது. அதை எட்வர்டிடமே அவர்கள் பேசுவார்கள். அப்போதெல்லாம் அவர் திரும்பி அவளை ஒரு பார்வை பார்ப்பார். கூடவே நானும்!

அடுத்தவன் லயோனல் ஹிலியர் ஒரு ஓவியன். ஒருநாள் அவளையே வரையலாம் என்று வந்து உட்காரச் சொன்னான். தான் அவளிடம் என்ன பார்த்தான் என்பதை என்னிடம் பேசினான் அவன். என் மண்டையில் அது அத்தனைக்கு ஏறவில்லை. என்ன உளர்றான் இவன், என்கிறாப் போல குழப்பமாய் இருந்தது.

மூணாமத்தவன் ஹாரி ரெட்ஃபோர்ட், நவீன புகைப்படக்காரன் ஒருத்தனை எனக்குத் தெரியும், என்றான் அவன். ரோசி பற்றி சாம்பிராணி போட்டு, அவனை வரவழைத்து படம் எடுக்க வைத்தான் அவன். ஒன்றிரண்டு சனி தாண்டி, அதன் அச்சுநகல்கள் வந்தன. நாங்கள் வாங்கிப் பார்த்தோம். அவளை மாலையுடையில் நான் அதுவரை பார்த்ததே கிடையாது. வெள்ளை சாடின். சர்ரென கீழிறங்கியிருந்தது கழுத்துப் பக்கம். கைப்பகுதியில் உப்பியிருந்தது. வழக்கத்தைவிட விசேஷமாய் சிகை ஒப்பனை. அந்தக் காலத்தில், ஜாய் சந்தில் இறுக்கமான போட்டர் தொப்பி, கஞ்சிபோட்டு விரைத்த உடைகளில் பார்த்தேனே அந்தச் சிறு பெண்ணா இவள்? அல்-லவே அல்-ல!

ஆனால் லயோனல் ஹிலியர் கடுப்பாகி படத்தை விசிறியடித்தான். ”கண்றாவி…” என்றான் அவன். ”ரோசியை என்னதான் ஒரு புகைப்படக்காரனால் பிடிச்சிற முடியும்? அவளுடைய விசேஷமே என்ன, வண்ணம் தானே? சரும நிறம் தானே?” அவளைப் பார்க்கத் திரும்பினான். ”ரோசி, உனக்குத் தெரியுமா? இந்தக் காலத்தில் இப்படியொரு சரும வண்ணம்… பேரதிசயம் தான்.”

அவள் அவனைப் பார்த்தாள். பதில் சொல்லவில்லை. ஆனாலும் அந்த முழு சிவப்பான அதரங்கள் குழந்தைத்தனமான, குறும்பான சுழிப்பை வெளிப்படுத்தின.

”அதன் சூட்சுமம் எனக்கு இன்னும் பிடிபடல்ல ரோசி, அது கிடைச்சால் என் ஜென்ம சாபல்யம்…” என்றான். ”அதைப் பிடிச்சி உன்னை வரைஞ்சிட்டேன்னா, நாட்டின் பெரிய பங்குச்சந்தைக் காரர்களின் மனைவிகள் எல்லாம் என் காலடியில் வந்து கெடப்பாங்க, இந்த மாதிரி என்னையும் வரையப்டாதான்னு கெஞ்சுவாங்க.”

பிறகு அவள் அவனுக்காக அவன் எதிரே, பார்த்துவரைய ஒத்துழைப்பு தந்தாள் என்று கேள்விப்பட்டேன். ஒரு ஓவியனின் கூடத்தை நான் அதுவரை பார்த்தது கிடையாது. புது விஷயம். காதல் கூடமாகவும் அது விளங்கக்கூடும் என எதிர்பார்த்தேன்… ஒருநாள் நானும் உன் கூடத்துக்கு வர்றேன் இவனே? அப்பிடியே அந்த ஓவியம் எவ்வளவு வந்துருக்குன்னு தெரிஞ்சிக்கலாம் இல்லே?… என்று அவனிடம்  கேட்டேன். இப்ப காட்ட முடியாது, முடியட்டும், என்றுவிட்டான் அவன்.

ஒரு முப்பது முப்பத்தைந்து வயசுக்காரன் அவன். பார்க்க பிரம்மாண்டமாய் இருப்பான். வான் டைக்கின் ஓவியம் போன்ற உருவம். அதில் உருவத்தை விட, அதைக் கேலியடிச்சாப்போல கோடுகள் இருந்தால் எப்படி யிருக்கும், அப்படியொரு தோற்றம். சராசரியை விட இக்கிணி உயரம். ஒல்லி. அதேசமயம் கருகருவென்ற புசுபுசு தலைமுடி. கீழ்நோக்கி வழியும் மீசை. கூர்மையாய் முடியும் தாடி. உயரமும் பரந்த விளிம்பு கொண்டதுமான சோம்பிரைரோ தொப்பிக்காரன். ஸ்பானிய மோஸ்தரில் குறுங்கோட்டு. ரொம்ப காலம் பாரிசில்தான் வாசம். மோனட், சிஸ்லே, ரேனாயிர் போன்ற ஓவியர்களைப் பற்றி சிலாகித்துப் பேசினான். அவர்களைப் பற்றியெல்லாம் நாங்கள் கேள்விப்பட்டதே கிடையாது. அதைவிட முக்கிய விஷயம், நாங்கள் ஆவெனப் பார்த்த எங்கள் ஓவியர்கள், சர் ஃப்ரடரிக் லீதன், திரு அல்மா ததேமா மற்றும் திரு ஜி. எஃப். வாட்ஸ் எல்லாரையும் அவன் பந்தாடினான்.

 

இவன் என்னதான் மனசில் நினைச்சிக்கிட்டிருக்கான், என்று எனக்கு திகைப்பு. ஒரு சில வருடங்கள் லண்டனில் பொழைப்பாகுதா என்று பார்த்தான். கதையாவல. அப்படியே ஃப்ளாரென்சுக்குத் தாவிவிட்டான். அங்கே ஓர் ஓவியப்பள்ளி வைத்திருந்ததாகக் கேள்வி. பல வருடங்கள் கழித்து அந்த நகரப் பக்கம் நான் போயிருந்தேன்… அவனைப் பற்றி யாருக்குமே எதுவுமே தெரியவில்லை. அங்கயும் கதையாவல போல.

அவனிடம் ஒரு திறமை இருந்ததாய்த்தான் நான் நம்பினேன். இப்பவும் அவன் வரைந்து தந்த ரோசி திரிஃபீல்ட் உருவப்படம் என் மனசை விட்டு அழியாமல் இருக்கிறது. அந்த ஓவியம் இப்ப எங்கே, அதன் கதி என்ன தெரியவில்லை. கிழிக்கப்பட்டு விட்டதா? எங்காவது ஒளித்து வைக்கப்பட்டு விட்டதா? சுவரைப் பார்க்க திருப்பி செல்சியில் எங்காவது மாட்டிக்கிடக்கிறதா? ச், நல்ல ஓவியம் அப்பா அது. எங்காவது மாநிலத் தலைமையக ஓவியத் தொகுப்பில் இடம்பெறும் சிறப்பு அதற்கு உண்டு.

ஒரு வழியாக அந்த ஓவியத்தைப் பார்க்க எனக்கு அனுமதி கிடைத்தது. ஹிலியரின் ஓவியக்கூடம் ஃபல்ஹாம் தெருவில் இருந்தது. மிக கவனமும் மரியாதையுமாய் நான் உள்ளே நுழைந்தேன். கடைகட்டிய வரிசை. அதன் பின்பக்கமாய்ப் போகவேண்டும். கும்மிருட்டும் கடும் நெடியும் கடந்துபோக வேண்டியிருந்தது.

மார்ச் மாத ஞாயிறு மதியம். நிர்மல நீல வானம். வின்சன்ட் சதுக்கத்தில் இருந்து நடந்துபோனேன். கடைகள் பூட்டி வெறிச்சோடிக் கிடந்தது தெரு. தனது ஓவியக் கூடத்திலேயே ஹிலியர் வசித்து வந்தான். பெரிய திண்டு திவானில் தான் அவன் தூங்குவது. பின் பக்கச் சின்ன அறையில் எதும் அவ்வப்போது சிற்றுண்டி தயாரித்துக் கொள்வான். அந்த உள்ளறையிலேயே தன் தூரிகையைக் கழுவி, தன்னையும் கழுவிக் கொள்வானாய் இருக்கும்.

நான் போயிருந்தபோது ரோசி அப்பவும் முதலில் போஸ் கொடுக்க அணிந்திருந்த அதே உடையையே அணிந்திருந்தாள். அவர்கள் தேநீர் அருந்திக் கொண்டிருந்தார்கள். ஹிலியர் எழுந்து வந்து கதவைத் திறந்து, அப்படியே என் கையைப் பற்றி அந்த ஓவியச்சீலைப் பக்கம் அழைத்துப் போனான்.

”பாரங்கே அவளை…” என்றான்.

அது ரோசியின் முழு உருவப்படம். நிஜ உருவத்துக்குச் சற்றே சின்ன அளவு. வெள்ளைப்பட்டாடை மாலையுடை. பெரிய அரங்கங்களில் வைத்திருப்பார்களே அந்த மாதிரி, நான் அதுவரை பார்த்த மாதிரி அது இல்லை. அதைப் பற்றி எனக்குச் சொல்லத் தெரியவில்லை. சட்டென என்ன தோணியதோ அதையே பேசினேன்.

”இது எப்ப முடியும்?”

”அவ்ளதான், இதான் ஓவியம்…” என்றான்.

எனக்கு குப்பென்று ஆகிவிட்டது. மகா மண்டூகமாய் என்னை உணர்ந்த கணம் அது. இந்த நவீன ஓவியர்களின் படைப்புகளை அணுகுதல் போன்ற விவகாரங்களில் நான் அத்தனை தேர்ச்சி கண்டவன் அல்ல. இப்ப சமாளிக்கிற அளவுக்காவது கண்டாயிற்று. அந்த முற்றாத ஓவியனே திருப்தியாகத் தலையாட்டும்படி, அந்த ஓவியத்தை எப்படி ரசிக்க வேண்டும் என்று புட்டுப் புட்டு வைத்துவிடுவேன். படைப்புமனதின் உந்துதல்களை யெல்லாம் விரித்து அதன் பல படிமங்களில் விளக்கிவிட என்னால் முடியும்.

அட கடவுளே, என்ற ஒரு வார்த்தையில் அந்த நுணுக்கமான யதார்த்த ஓவியனை அங்கீகரிக்கலாம். மகா நேர்மையான முயற்சி அப்பா உன்னது, உன்னதம், என்று நமது சங்கடத்தை மறைத்தபடி பேசிவிட்டுப் போகலாம். ஒரு ஊராட்சித் தலைவரின் விதவைப் படத்தையும், அவளது வண்ணப் புகைப்படத்தையும் பக்கத்தில் பக்கத்தில் வைத்து, ஊய், என சின்ன விசில் அடித்து அந்த போஸ்ட் இம்ப்ரஷனிஸ்ட் வகை ஓவியனைப் பாராட்ட வேண்டும். ‘டேங்கய்யா’ என்று கியூபிஸ்ட் வகை ஓவியனைப் பாராட்டுவது பயன் அளிக்கும். ஓ… ஆ… போன்ற வியத்தல் விளிகளும் சாலச் சிறந்தனவே.

”ம்… கிட்டத்தட்ட முடிஞ்சாப்லதான் எனக்கும் பட்டது” என ஒரு நெளிசலுடன் சொன்னேன்.

”அடேய், இவனுக்கு எல்லாத்தையும் முழுசா சாக்லேட் மாதிரித் தரணும்” என்றான் ஹிலியர்.

”அட்டகாசமா வந்திருக்குப்பா” என்றேன் அவசரமான தற்காப்புடன். ”இதை அகாதெமிக்கு எங்கியாவது அனுப்பி வைக்கப் போறியா?”

”அடச்சே, அதெல்லாம் இல்ல… கிராஸ்வேனருக்குத் தான் அனுப்பி வைக்கலாம்னு இருக்கேன்.”

நான் ஓவியத்தில் இருந்து ரோசியை, ரோசியில் இருந்து ஓவியத்தைப் பார்த்தேன்.

”நீ போஸ் குடு ரோசி” என்றான் ஹிலியர். ”அவன் உன்னைப் பார்க்கட்டும்.”

போஸ் கொடுக்கும் மேடையில் எழுந்து நின்றாள் அவள். அவளையே உற்றுப் பார்த்தேன். பிறகு படத்தை உற்றுப் பார்த்தேன். என் இதயத்தில் சிறு குறுகுறுப்பு. யாரோ கூர்மையான கத்தியால் நெருடுகிறார்கள். ஆனால் வலியான, இம்சையான உணர்வு அல்லவே அல்ல அது. வலி என்றால் இதமான வலி. திடுமென என் முட்டிகள் நடுங்கின. ரோசியை சதையுருவமாய்ப் பார்க்கிறேனா, ஓவியமாய்ப் பார்க்கிறேனா என்றே புரிபடாத குழப்பம். இப்போது நான் அவளை நினைத்துப் பார்த்தால், அது அவளை முதலில் பார்த்த அந்த சட்டை, இறுக்கமான போட்டர் தொப்பி உருவம், அது அல்ல அவள் இப்போது. பிற எந்த உடையிலும் அதற்கு முன்போ பின்போ பார்த்த நினைவும் தட்டவில்லை. ஹிலியர் வரைந்த அந்த வெண்பட்டாடை அதன் ஆக்கிரமிப்பு கணிசமாய் என் மூளையில் ஏறியமர்ந்து கொண்டது. கருப்பு வில் வைத்துக் கட்டிய தலைமுடி. அதிலும் அவள் உருவம் மாத்திரம் அல்ல, அவன் வரைந்த அதே காட்சிநிலையே என் மனசில் நங்கூரமிட்டு விட்டது.

ரோசியின் வயதை எப்பவுமே நான் சரியாக அறிந்தது இல்லை. ஆனாலும் கைநழுவி கடந்துபோன வருடங்களை வைத்துப் பார்க்கிறேன்… அப்போது, அந்த ஓவியம் வரைந்த காலத்தில் அவளுக்கு வயது 35 இருக்கவேண்டும். ஆனால் அந்த வயதுக்கும் அவளுக்கும் சம்பந்தமே இல்லைபோல் இளமையாய் இருந்தாள். அந்த முகம் மாசு மருவற்று சுருக்கமோ வரியோ அற்றுக் கிடந்தது. அந்தச் சருமத்தில் இன்னும் குழந்தையின் வழவழப்பு. அவள் அங்கங்கள் செழுமையாய் இல்லை என்றுதான் சொல்வேன். அந்தப் பணக்களை அவளிடம் இல்லை. மற்ற சீமாட்டிகளின் படங்கள் கடைகளில் ஓகோவென விற்றன. ஆனால் அவை எல்லாம் மொண்ணைச் சரக்கு. அவளது சின்ன நாசி கொஞ்சம் அழுத்தமாய் இருந்தது. கண்கள் உடல் அமைப்புக்குக் கொஞ்சம் சின்னவை தாம். பெரிய வாய். சோளப்பூக்களின் நீலம் பாரித்த கண்கள். அவள் சிரித்தால் அதரங்களோடு அவையும் சிரித்தன. ஆ அந்த அதரங்கள் மகா சிவப்பு, அவையே தனி போதையளித்தன அவளுக்கு.

அவள் சிரிப்பில் தனி உற்சாகக் களை சொட்டியது. அபார நேசம் பாராட்டும் புன்னகை அது. எல்லாரையும் அதன் இனிமை கரைத்து இணைத்துக் கொண்டது… அப்படியொரு இனிமை வேறெங்கும் நான் கண்டதே இல்லை. இயல்பிலேயே அவள் எதையும் சட்டைபண்ணாத துள்ளல் கொண்டவள். அந்த முக அமைப்புக்கு அவள் புன்னகைத்தாலே அதன் மந்தகாசம் பலமடங்கு பெருகி ஒளி பொங்கியது. மகா கிளர்ச்சிகரமானது அந்தச் சிரிப்பு. முகத்தில் நல்ல நிறம் வாய்த்தவள் அல்ல அவள். ஒரு வெளிறிய பழுப்பு முகம். கண்கீழே ஓரளவு நீலம். வெளிறிய பொன்வண்ணக் கூந்தல். நாளுக்கு நாள் அப்பத்தைய மோஸ்தருக்கு ஏற்றாப்போல உயரமாய் பலவித விஸ்தார அலைமடிப்புகளுடன் அது உருமாறும்….

”ஓவியம் வரைய கன கச்சிதமான உருவம் அவள்…” என்றான் ஹிலியர். அவன் கண்கள் அவளையும் படத்தையும் ஒருசேரப் மேய்ந்தன. ”பாருடா, அவள் உடம்பே தகதக, அந்த முகம், அந்தக் கூந்தல்… ஆனாலும் அவள் மொத்தத்தில் அத்தனை மின்னுகிறாப்போல தெரியவில்லை இல்லியா? ஒரு வெள்ளிப் பளபளப்பு தருகிறாள் பார்.”

அவன் சொன்னது எனக்குப் பிடிபட்டது. அவளிடம் ஒரு முலாம் இருந்தது, ஆனால் மென்மையான அளவில். சூரியன் அல்ல அவள், சந்திரன். அல்லது சூரியனாக அவளைச் சொன்னால் பனிமூட்டத்துடன் கூடிய வைகறைச் சூரியன். ஓவியச்சீலையின் நடுவில் அவளை வரைந்திருந்தான் ஹிலியர். கைகளைத் தொங்கப் போட்டு, உள்ளங்கைகளை நமக்குக் காட்டி, முகத்தைச் சற்று பின்சரித்து நின்றிருக்கிறாள். என்பதால் அவளது கழுத்தும், மார்பும் அதே வழவழப்புடன் தெரிந்தன. ஒரு அழைப்பை எதிர்கொள்ளும் நடிகை. அவள் மேடையேற திடீரென்று கரகோஷம், அதனால் ஏற்பட்ட சிறு வெட்கம். குழப்பம். ஆனாலும் அதில் ஒரு பரிசுத்தம், இளம் பெண்ணின் கன்னித்தன்மை இருக்கிறது. அவளிடம் இருந்து பிரவாகிக்கும் இளமை. அவளை இதுமாதிரி என்றெல்லாம் ஒப்பு நோக்கி கூறிவிட இயலாத அளவு அதில் ஒரு மகா சுயம் இருக்கிறது.

இந்த கிராமத்துக் கிழங்கு, இதுவரை ஓவிய வண்ணங்களையோ, கால்மாட்டில் ஒளிபாய்ச்சும் விளக்குகளையோ கண்டது கிடையாது. ஒரு கன்னிப்பெண், காதலித்துக் கைப்பிடிக்க சகல அளவிலும் ஏற்ற சிறு பேதை. வெகுளி. இயற்கையின் நியதியொழுங்கில் பூத்துக் காத்திருக்கிறது மலர் ஒன்று. காதலன் தழுவ அவள் காத்திருக்கிறாள். பாரம்பரிய பிராபல்ய அம்சங்களைப் பற்றி அவளுக்குத் தெரியாது. அவளுக்கு அது தேவையாயும் இல்லை. ஒடிசல் உருவம். ஆனால் மார்பகங்கள் செழித்துக் கிடக்கின்றன. இடுப்பு குடம்தான்.

பின்னாளில் திருமதி பார்த்தன் திரஃபோர்ட் அந்த ஓவியத்தைப் பார்த்தபோது அவள் சொன்னாள். ஆ, இவள் கோவிலுக்கு நேர்ந்துவிட்ட கொழுகொழு கன்று!

 

தொடரும்

storysankar@gmail.com

 

Series Navigationபஞ்சதந்திரம் தொடர் 25 முட்டாளுக்குச் செய்த உபதேசம்முடிச்சு
author

எஸ். ஷங்கரநாராயணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *