முளையைச் சுற்றும் மூங்கை மாடுகள்

This entry is part 15 of 20 in the series 23 மே 2021

 

        ஜோதிர்லதா கிரிஜா

(26.6.1980 நாகமணி-யில் வந்தது. கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன் மனசு எனும் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.)

     தங்கம் காய்கறிக் குப்பையைக் கொட்டுவதற்காக முறத்துடன் வீட்டு வாசல் பக்கம் இருந்த குப்பைத் தொட்டியை நோக்கி நடந்துகொண்டிருந்த போது எதிர் மைதானத்தில் புல் மேய்ந்துகொண்டிருந்த இரண்டு பெரிய மாடுகளைக் கண்டாள். மாடுகள் என்றாலே சிறு வயதிலிருந்தே அவளுக்கு ரொம்பவும் அச்சம். காரணம் மிகச் சிறிய வயதில் அவளை ஒரு காளை மாடு துரத்தி வந்ததுதான். நல்ல வேளையாக எதிர்ப்பட்ட ஒரு பெரிய மனிதர் அவளைத் தூக்கிக்கொண்டுவிட்டார். அன்றிலிருந்து தாம் பாட்டுக்குத் தெருவில் நடந்து செல்லும் மாடுகளைப் பார்த்தால் கூட அவளுக்கு அச்சம்.  அதிலும் கொம்பு சீவிய மாடுகளைக் கண்டாலோ ஒரே மிரட்சி. தன்னுடன் நடந்து வருபவர்களுக்குப் பின்னால் மறைந்துகொண்டுவிடுவாள்.

      எதிர் மைதானத்தில் புல் மேய்ந்துகொண்டிருந்த மாடுகளைப் பார்த்துக்கொண்டே அவள் குப்பையைக் கொட்டிய போது பாதிக்குப்பை தொட்டிக்கு வெளியே விழுந்து சிதறியது. அவள் அஞ்சியதற்கு ஏற்றாற்போல் அந்த இரண்டு மாடுகளில் ஒன்று ஓடத் தொடங்கிற்று. அது ஒரு குறிப்பிட்ட வழியில் ஓடாமல், தாறுமாறாகச் சுற்றவே, தங்கம் பயந்து போனாள். அது எந்த நேரத்தில் தன் வீட்டுப் பக்கம் திரும்பி ஓடி வருமோ என்று பதறிப் போய் அவள் விரைவாக நடந்தாள். அதற்குள், மாட்டுக்குச் சொந்தக்காரன், “ஏண்டா, கந்தசாமி, முளையடிச்சு வச்சிருக்குறேனே? மாடுங்களை அதிலே கட்டிப் போடாம அங்ஙன நின்னுக்கிட்டுப் பராக்குப்  பார்த்துக்கிட்டுருக்குயேடா?” என்று அதட்டியவாறு ஓடி வந்து மாட்டை வளைத்துப் பிடித்தான். அதைப் பார்த்ததும் தங்கத்தின் இதயத்துடிப்புக் கொஞ்சம் அடங்கியது.

      கந்தசாமி என்பவன் ஓடிவந்து அந்த மாட்டை முளையில் கட்டிப்போட அவனுக்கு உதவியதையும் பிறகு அவள் நின்று பார்த்துவிட்டுத்தான் உள்ளே போனாள்.  கட்டிக்கொண்டே, “இனிமே கட்டாம மேய விடாதே, கந்தசாமி. முரட்டு மாதுங்க. தெறிகெட்டு ஓடத் தொடங்கிருச்சுன்னா அப்புறம், வம்பு வந்து சேரும். ..” என்று அந்த ஆள் சொன்னதைக் காதில் வாங்கிக்கொண்டே அவள் உள்ளே போனாள். அந்தச் சொற்கள் அவள் சிந்தனையைப் பெரிதும் பாதித்துத் தூண்டியும் விட்டன.

       ‘நானும் ஒரு மாடுதான். முளையில் கட்டிய மாடு. வாயில்லாத மாடு. … வாய்க்கென்ன பஞ்சம்? வாய் இருந்தும் பேச முடியாத மாடுன்னு வேணும்னாச் சொல்லலாம். பேசத் தெரியாமயா வாயை மூடிக்கிட்டிருக்கேன்? … பேசி எதுனாச்சும் லாபம் இருந்தாவில்ல பேசணும்கிறதால நான் வாயை மூடிக்கிட்டிருக்கேன். … இந்த வீட்டுக்கு  மூத்த மருமவளா வந்தேன். அப்பா இருவது பவுன் நகை போட்டிருந்தாரு. வைரக் கம்மல் போட்டிருந்தாரு. கெழங்கு கெழங்கா இந்தக் கைக்கு நாலு அந்தக் கைக்கு நாலுன்னு எட்டுப் பவுன் வளையல் போட்டாரு. இப்ப கழுத்துல தாலிக் கயிறு மட்டுந்தான் இருக்குது. கையிலெ ரெண்டே ரெண்டு வளையல் கெடக்குது. வைரக் கம்மல் ரெண்டும் காணாமப் போயிருச்சுன்னு சொல்லித் தலையணைக்குள்ளாற திணிச்சுத் தெச்சு வச்சிருக்குறேன். நல்ல வேளையா வீடு சொந்தக்காரங்க கும்பல் தாங்காம பிதுங்கி வழிஞ்சுக்கிட்டிருந்த அன்னிக்குக் கம்மல் ரெண்டையும் கழட்டி வெச்சேன். காணோம்னு ஒரு அடி அடிச்சுப் போட்டேன்.  யாரையும் சோதனை போட முடியல்லே. ஆனா, அவங்களாவே பொட்டி சட்டிங்களைக் கவுத்துப்போட்டுக் காட்டினாங்க. ஆனா, அவங்க எடுத்தாவில்ல? … சமயத்துக்கு இருக்கட்டும்னு நானில்ல பதுக்கி வெச்சுட்டேன்? … தலையணையிலெ சின்னதா ஒரு பொத்தல் போட்டுக் கம்மல் ரெண்டையும் நல்லா அடியில தள்ளி மூடிட்டேன். இன்னி வரைக்கும் யாருக்கும் சந்தேகம் இல்லே எம்மேல. எங்கம்மலை நானே ஏன் திருடணும் …? நான் மட்டும் அன்னிக்கு அப்படிச் செய்யாம இருந்திருந்தா அதுவும் குடிகாரன் கையிலேயோ தேவடியா வீட்டிலேயோ பறி போயிருக்குமே? …’

      தங்கம் நெடிய மூச்சொன்றை ஆயாசத்துடன் வெளிவிட்டவாறு தன் அலுவல்களில் ஆழ்ந்தாள். கைகள் வேலை செய்து கொண்டிருந்தாலும், மனம் பழையனவற்றை வரிசையாக நினைத்துப் பார்த்துக்கொண்டிருந்தது. பிறந்த இடத்திலும் அவள் மூத்த மகள்தான். அதனால்தான் அவள் அப்பாவும் அம்மாவும் அவளுக்குச் சீரும் சிறப்புமாகத் திருமணம் செய்து வைத்தார்கள். ஊர் முழுக்கச் சாப்பாட்டுக்கு அழைத்தார்கள். அந்தக் காலத்தில், அவர்கள் இனத்தில், வரதட்சிணை என்று வாய்விட்டுப் பெருந்தொகையைக் கேட்கும் வழக்கம் இல்லாவிட்டாலும், நகைநட்டில் இத்தனை பவுன் என்று பேரம் பேசும் வழக்கம் இருந்தது. அவள் அப்பா செயலுள்ளவராக இருந்ததால் மறுப்பு எழுப்பாமல் அவர்கள் போட்ட நிபந்தனைகளை யெல்லாம் ஏற்றார். ஏனென்றால் அவள் புகவிருந்த இடம் பெரிய இடம் என்கிற அந்தஸ்து அப்போது இருந்தது. நல்ல மனிதர்கள் என்கிற பெயர் வேறு இருந்தது. எனவே தம் மூத்த மகளின் வாழ்க்கை நன்றாக அமைய வேண்டும் என்கிற நல்லெண்ணத்தில் ராமு செட்டியார் நன்றாகச் செலவு செய்தார்.

      அவளுக்குப் பிறகு வரிசையாக நாலு பெண்களுக்கும் அவர் திருமணம் செய்வித்தார். ‘அந்தப் பெண்ணுக்கு அவ்வளவு செய்தீர்களாமே?’ என்று கேட்டு மற்ற சம்பந்திகள் அவரை நன்றாக மொட்டையடித்தனர். ஐந்தாம் பெண்ணுக்காக அவர் கடன் வாங்கும்படி ஆயிற்று. அவருக்கும் வயதாகிக் கடையைக் கவனிக்க முடியாமல் போனதால் வேலையாள்கள் சுரண்டத் தொடங்கி இழப்பு வரலாயிற்று. இதனால் ராமு செட்டியார் கை நொடித்துப் போனார். 

      தங்கத்தின் நகைகள் ஒவ்வொன்றாக அழியத் தொடங்கியதால், தங்கச்சிகளின் திருமணங்களுக்குப் போகும் போது மட்டும் அவள் கணவன் கொண்டுவந்து கொடுக்கும் ”ரோல்டு கோல்டு” நகைகளைப் போட்டுக்கொண்டு புதிதாய்ப் பண்ணியது என்று பொய் சொல்லிச் சமாளித்தாள். கணவனை விட்டுக்கொடுத்துப் பேச அவள் விரும்பாததோடு, அதனால் தனக்குத்தான் அசிங்கம் என்பதாலுமே ஆவள் புகுந்த வீட்டில் தான் கணவனின் கைகளில் தொல்லைப்படுவதைச் சொல்லிக் கொள்ளாமல் இருந்தாள்.

      அவளுடைய தீவினையோ என்னவோ அவளுக்குக் குழந்தைகளும் இல்லை. இதனால் அவள் கணவன் இரண்டாம் திருமணம் செய்துகொண்டு அடுத்த தெருவில் அவளைக் குடிவைத்திருந்தான். அவளை அவன் மணந்து பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன. அவளுக்கும் குழந்தை இல்லை.

      அவள் வாழ்க்கையில் நடந்துள்ள இத்தனை அசிங்கங்களில் ஒன்றையும் அவள் தாய்தகப்பன் அறியார். மகளுக்குக் குழந்தை இல்லையே என்று கவலைப்பட்டதோடு சரி.

      தங்கம் ஜன்னல் வழியாக மைதானத்துப் பக்கம் பார்த்தாள். முளையில் கட்டப்பட்டிருந்த அந்த மாடுகள் கயிற்றின் சுற்றளவுக்குள் மேய்ந்து கொண்டிருந்தன.  ‘அன்பற்ற கணவன், ஆதரவற்ற புகுந்த வீடு, வாயைத் திறந்தால் அடி என்கிற நிலை ஆகியவற்றிலிருந்து கண்காணாத இடத்துக்குத் தப்பி ஓடிப் போய்விட வேண்டும் என்று அவ்வப்போது எனக்குத் தோன்றுவது போல் அந்த மாடுகளுக்கும் முடிந்தால் கயிற்றை அறுத்துக்கொண்டு ஓடிவிட வேண்டும் என்று தோன்றத்தானே செய்யும்?’ என்று அவள் நினைத்துக் கொண்டாள்.  முளையில் கட்டிப் போட்டிருக்கும் அந்த மாடுகளுக்கும் தனக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது என்று யோசித்துப் பார்த்த போது, அவள் மனம் கசப்பால் நிறைந்தது. அந்த மாடுகள் கூட ஒரு நாள் அறுத்துக்கொண்டு ஓடிப் போய்ச் சொந்தக்காரனால் கண்டுபிடிக்கப்படும் வரையில் தலைமறைவாகவும் சுதந்திரமாகவும் இருந்துவிட்டு வருவதற்கான சாத்தியக்கூறு இருந்தது. அப்படி அவை திரும்பக் கொண்டுவரப்படும் போது, சொந்தக்காரன் ஏதோ இந்த மட்டும் திரும்பி வந்தனவே என்று மகிழ்ந்து அவற்றை ஒன்றும் செய்யாமல் இருந்து விடுவதுண்டு. ஆனால் இவள் அது மாதிரி ஓடிப் போய்ச் சுதந்திரமாக இருந்துவிட்டு வர முடியுமோ என்று நினைத்துப் பார்த்த போது, அவளது வேதனையையும் கடந்து அவள் சிரித்துவிடுவாள் போலிருந்தது. அப்படியே வந்தாலும் அடியும் உதையும் அல்லவா மிஞ்சும்? அது மட்டுமா? வீட்டுக்குள் நுழைய விடுவார்களா? ‘உன் சங்காத்தமே வேண்டாம்’ என்று ஒரேயடியாக விட்டுவிட்டுப் போகத் துணிந்தாலும் சும்மா விட்டுவிடுவார்களா அவளை?

      அவள் பெருமூச்சுக்கு மேல் பெருமூச்சாக உதிர்த்தபடி இருந்தாள். …

      அன்றைய அஞ்சலில் அவள் அப்பாவிடமிருந்து அவளுக்குக் கடிதம் வந்தது. அவள் நலம், மருமகனின் நலம், மாமானர்-மாமியாரின் நலம் ஆகியவற்றை யெல்லாம் வழக்கம் போல் விசாரித்துவிட்டு அந்தக் கடிதம் இதுகாறும் அவர் எழுதியிராத  ஒன்றைப் புதிதாகச் சொன்னது. அவருக்கு ஓர் ஐயாயிரம் கடன் வேண்டுமாம். கடன் பத்திரம் எழுதித் தருவாராம். இரண்டு ஆண்டுகளுக்குள் எப்படியாவது திருப்பி விடுவாராம். புகுந்த வீடின் நிலை என்னவென்பதை நோட்டமறிந்து தமக்கு அவள் எழுதினால் அதற்குப் பிறகு அவர் அவர்களுக்கு எழுதிக் கேட்பாராம். அவளுக்குப் பாவமாக இருந்தது. எப்படி இருந்த அப்பா என்பதை நினைத்துப் பார்த்த போது அழுதுவிடுவாள் போலிருந்தது. கடன் கேட்கிற அப்பாவா அவர்? கேட்டவர்களுக்கெல்லாம் பத்திரம் கூட வாங்கிக் கொள்ளாமல் அள்ளி அள்ளிக் கொடுத்தவராச்சே? படிக்கிற ஏழைப் பிள்ளைகளுக்கு – பிராமணப் பையன்களிலிருந்து அரிசனப் பையன்கள் வரையில் – எந்த வித்தியாசமும் பாராமல் தான தருமங்கள் செய்த கைகள் அல்லவா அவருடையவை? அவருக்கு இப்படி ஒரு நிலைமை வரலாமா?

      தன் மாமனாரிடமோ கணவரிடமோ அவர் உதவி கேட்பதை அவள் விரும்பவில்லை. கேட்பதால் உதவி கிடைக்காது. வெறும் அவமானம் மட்டுமே மிஞ்சும். மற்ற மாப்பிள்ளைகள் தலைக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்திருப்பதாகவும் எழுதியிருந்தார். இன்னும் ஐயாயிரம் இருந்தால் வீடு கடனில் மூழ்காமல் தடுக்கலாம் என்று எழுதியிருந்தார். கோட்டை மாதிரிப் பெரிய வீடு கைவிட்டுப் போவதா? அப்பாவும் அம்மாவும் தாங்குவார்களா என்று நினைத்து மலைப்பும் கவலையும் கொண்டு அவள் உருகினாள். தனது ஏலாமை அவளைக் குத்தியது. அவமானப் படுத்தியது. தான் ஒரு பெண்ணாய்ப் பிறந்து  அப்பாவுக்குச் செலவு வைத்ததால்தானே இப்படியெல்லாம் ஆயிற்று என்று வருத்தமடைந்தாள். தன் மீதே அவளுக்கு எரிச்சல் வந்தது. புகுந்த வீட்டில் உதவ மாட்டார்கள் என்று தானே முடிவு செய்வதற்குப் பதிலாக அவர்களையும் ஒரு வார்த்தை கேட்டால் என்ன என்றும் தோன்றியது.

      அவள் கணவன் நமச்சிவாயம் எங்கேயோ வெளியே போயிருந்தான். அவனைக் கேட்பதில் அர்த்தமில்லை என்பதால் அவள் தன் மாமனாரிடம் தகப்பனாரின் கடிதம் பற்றிச் சொன்னாள்.

      “ஏங்கிட்ட ஏதும்மா காசும் பணமும்?” என்று அவர் ஒரே கேள்வியில் அவளது கோரிக்கையை நிராகரித்து விட்டார். தமது வீட்டை அவள் அப்பா அடமானம் வைத்திருந்ததால், கடனுக்கு ஈடாக எழுதிக்கொடுக்க அவரிடம் பெரிய சொத்தாக எதுவும் இல்லை என்பதே காரணம் என்பது தங்கத்துக்குப் புரியாமல் இல்லை. எதற்கும் கணவன் வந்ததும் மரியாதைக்கு ஒரு வார்த்தை அதைப்பற்றி அவனிடமும் கேட்டுவிட அவள் எண்ணினாள்.

      மதியம் சாப்பாட்டுக்கு அவன் வந்தான். சோற்றைப் போட்டுவிட்டு, அவன் கைகழுவிக்கொண்டு வந்ததும், அவள் சேதியைச் சொன்னாள். நமச்சிவாயம் பெரிதாகச் சிரித்தான். அதில் சிரிப்பதற்கு என்ன இருந்தது என்பது புரியாமல் அவள் நின்றாள்.

       “ஐயாயிரம்! அடி ஆத்தே! … மாப்பிள்ளை கிட்டக் கையேந்துறது மரியாதை இல்லைன்னு கூட உங்கப்பனுக்குத் தெரியலியே?” என்று சொன்னான். தங்கத்துக்குச் சுருக்கென்றது. ‘மாமனார் கிட்ட மாப்பிள்ளை கெயேந்தலாம். ஏன்? கையேந்த அவசியமே இல்லாம அவர் பிச்சைக்காரனுக்குப்  போடுற மாதிரி என்ன குடுத்தாலும் வாங்கி முடிஞ்சுக்கிறலாம். அதொண்ணும் அசிங்கமில்லையாக்கும்?’என்று எண்ணித் தனக்குள் அவள் வெகுண்டு போனாள்.

      அவன், மேலே பேச்சுக்கு இடமில்லை என்பது போல் ஒரு நீண்ட ஏப்பத்தை விட்டுவிட்டு, ஈரக்கையை வேட்டி முனையில் துடைத்தவாறு அகன்றான். நெடிய அவனது உருவத்தைப் பார்த்து, ‘உருவம்தான் ஒசரமாயிருக்கு. மனசு ரொம்பச் சின்னது. … மனசு வெச்சா யாரிடமாச்சும் வாங்கிக் குடுக்க முடியாதா என்ன? … ‘அப்பன்’னு மரியாதக் கொறச்சலாப் பேசுறதப் பாரு. எங்கப்பன் போட்ட அத்தனை நகைகளையும் அழிச்சுக் குடிச்சுக் கூத்தடிச்சது நீங்கதானே?’ என்று அவள் குமைந்தாள். அவளுக்கு ஆத்திரம் வந்தது. மற்ற தங்கைகளின் கணவன்மார்கள் தலைக்கு ஆயிரம் வீதம் கொடுத்திருக்கையில் தான் மட்டும் கையை விரிக்கலாமா என்று யோசித்தாள். அந்த மாப்பிள்ளைகள் அந்த ஆயிரங்களைத் தானமாகவே கொடுத்திருக்க வேண்டும் என்று அவளுக்குத் தோன்றிற்று. தன் அப்பாவை ஓட்டாண்டியாக்கியதே தங்கள் கல்யாணங்கள்தானே என்கிற உறுத்தல் ஏற்பட்டது.

      அவளுக்கு இனிமேல் குழந்தை பிறக்காது. அவள் கணவனோ வேறொருத்தியை வைத்துக்கொண்டிருக்கிறான். கணவனே கதி என்று அவள் ஏன் கிடந்து அவஸ்தைப்பட வேண்டும்?

      அவள் வாசல் கதவைச் சாத்தித் தாளிடுவதற்காகக் கணவனின் பின்னால் போனாள். இங்கொரு காலும் அங்கொருகாலுமாக நீண்ட தப்படிகளில் அவன் தெருவில் இறங்கி நடந்து சென்ற தோரணையில் அவனது இயல்பு – யாரையும் சட்டை செய்யாத – அந்தத் திமிர்த்தனம் – வெளிப்பட்டதாக அவளுக்குத் தோன்றியது. அவள் வெறுப்புடன் கதவைச் சாத்திய போது, “ஹை… ஹை…டுர்ரி” என்று கந்தப்பன் மாட்டை விரட்டும் சத்தம் கேட்டுத் திரும்பினாள். முளையைச் சுற்ரிக்கொண்டு மாடுகளில் ஒன்று கயிற்றை அறுத்துக்கொண்டு ஓடி விட்டதும் அவன் அதைத் துரத்திக்கொண்டு ஓடியதும் தெரிந்தன. அவள் சிந்தனையுடன் நின்றாள்.

      தன்னையும் அப்படித்தான் சிறைப்படுத்தி வைத்திருப்பதாக அவள் உணர்ந்தாள். கேவலம் ஒரு மாட்டுக்கு இருக்கும் துணிச்சல் கூட மனிதப் பிறவியான தன்னிடம் இல்லையே என்று நாலு கால் பாய்ச்சலில் ஓடிக்கொண்டிருந்த அந்த மாடு அவளை நினைத்துப் பார்க்க வைத்தது. தோளில் கிடந்த துண்டு கணுக்கால் வரை புரளத் தெரு முனையில் திரும்பிக்கொண்டிருந்த நமச்சிவாயத்தை முதன் முறையாக வெறுப்பைக் கக்கிய கண்களால் முறைத்தாள். பிறகு உள்ளே போனாள்.

      பிற்பகலில் மாமனாரும் மாமியாரும் கண்ணயர்ந்ததும், அவள் உக்கிராண அறையில் கதவைச் சாத்திக்கொண்டு என்றோ கிழித்துத் தைத்த தலையணையைத் திரும்பவும் கிழித்து அதன் பஞ்சுக்குள் துழாவி வைரத் தோடுகளை நடுங்கிய கையால் எடுத்தாள். தூசியும் தும்புமாக இருந்த தோடுகளைத் துடைத்துவிட்டுப் பார்த்தாள்.  அதன் கற்கள் சிந்திய ஒளி அவளுக்கே ஒளியளிப்பதாக இருந்தது. அவள் வாசற்கதவைச் சாத்திக்கொண்டு தெருவுக்கு வந்தாள். பேருந்து நிறுத்தம் நோக்கி நடந்து போனாள்.

      தெரு முனைக்கு வந்ததும், சற்றே கலங்கிய கண்களால் தன் புகுந்த வீட்டை ஒரு பார்வை பார்த்தாள். பிறகு கால்களை வீசி நடந்தாள்.

சற்றுத் தொலைவில், மாட்டைத் துரத்திக்கொண்டு போன கந்தப்பனும் மாட்டுக்குச் சொந்தக்காரனும் எதிர்ப்பட்டனர். “சனியன்! அடிக்கடி அறுத்துக்கிட்டு ஓடிப்போயிடுது …” என்று கந்தப்பன் சலித்துக்கொண்டது அவள் செவிகளில் விழுந்தது.

        ‘இந்தத் தங்கம் ஒரே ஒரு தரம்தான் ஓடுவா. ஓடினா திரும்ப மாட்டா.  ஏன்னா அவ மாடு இல்லே; மனுஷி …’ என்று மனத்துள் முனகிக்கொண்டு அவள் மிக விரைவாக நடந்தாள்.

…….

Series Navigationசிலையாகும் சரித்திரங்கள் : வீரபாண்டிய கட்டபொம்மன் – சிவாஜி – கி.ராநூல் அறிமுகம்-பா.சேதுமாதவனின் “சிறகிருந்த காலம்”
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *