மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 16

This entry is part 38 of 38 in the series 20 நவம்பர் 2011


ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா
தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா

“என் வணிகத்தைப் பாருங்கள்.  பீரங்கி, வெடிமருந்து தயாரிக்கிறேன்.  விற்ற பணத்தை நான் தர்மத்துக்கு அர்ப்பணம் செய்கிறேன்.  இதில் எனக்கில்லை குற்ற உணர்வு.  பணம் பணம்தான் !  அது விஸ்கி விற்று வந்தால் என்ன ?  வெடி மருந்து விற்று வந்தால் என்ன ?  பணத்தின் நதி மூலத்தைப் பார்த்தால் பலர் சாவடியில் பட்டினி கிடந்து சாக வேண்டியது தான் !  நல்ல பணம் ! தீய பணம் என்று இரு வடிவம் இல்லை பணத்துக்கு.  பணம் உள்ளூரச் சுத்தமானது !  பாடுபட்டுச் சேமித்த என் பணத்தைப் பெற்றுக் கொள்வதில் பாவமில்லை !  தவறில்லை ! தீங்கு எதுவும் இல்லை !  மாறுபட்ட வெறுப்புணர்வு இருப்பது உங்கள் மனத்தில்தான் !”

ஜார்ஜ் பெர்னாட் ஷா (ஆன்ரூ அண்டர்ஷாஃப்ட்)

மேஜர் பார்பரா நாடகத்தைப் பற்றி :

இந்த நாடகம் ‘ஏழ்மைக் காப்பணிச் சேவகி’ மேஜர் பார்பரா (Major of Salvation Army) வாழ்வில் நேர்ந்த வெற்றி, தோல்வியைப் பற்றியது.  அவள் புரிந்த அரிய சமூகத் தொண்டில் இயற்பாடுக்கும், மெய்ப்பாடுக்கும் (Idealism & Realism) இடையே ஏற்பட்ட ஒரு போராட்டத்தைப் பற்றியது.  அந்தத் தொண்டுக்கு ஆதரவாக நிதி உதவி செய்யும் அவளது இராணுவ ஆயுத உற்பத்தித் தந்தை ஆன்ரூ அண்டர்ஷா·ப்ட் (Andrew Undershaft) மற்றும் பார்பராவை மணக்கப் போகும் கிரேக்கப் பேராசியர் அடால்·பஸ் குஸின்ஸ் (Adolphus Cusins) ஆகியோருடன் பார்பரா போராடுவதை விளக்குவது. “நமது கொடுமைகளில் கோரமானது, குற்றங்களில் கொடூரமானது மானிட ஏழ்மை.  மற்ற தேவை ஒவ்வொன்றையும் நாம் தியாகம் செய்து, நமக்கு முதற் கடமையாக இருக்க வேண்டியது மனிதர் ஏழ்மையை இல்லாமல் நீக்குவதே,” என்று மேஜர் பார்பரா நாடகத்தின் முன்னுரையில் பெர்னாட் ஷா கூறுகிறார்.  மேஜர் பார்பரா நாடகப் படைப்பின் அழுத்தமான குறிக்கோளும் அதுவே.

வறுமையைப் போக்காது வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் மனித இனம் வெறுக்கத் தக்கது என்று சாடுகிறார் பெர்னாட் ஷா.  ஏழ்மை நீக்கப் பாடுபடும் காப்புப் படைச் சேவகி மேஜர் பார்பராவைச் சமூகம் ஆதரிக்க வேண்டுமா அல்லது அவளை ஒதுக்கி விட வேண்டுமா என்று நம்மைக் கேட்கிறார் பெர்னாட் ஷா !  ஆயுத உற்பத்தியில் கோடிக்கணக்கானப் பணச் சேமிப்பையே மதமாகக் கருதும் அவளது தந்தை, ஏழ்மைக் காப்பணிக்கு நிதி உதவி செய்வது நியாயமா அல்லது தவறா என்ற முரணான ஒரு வினாவை எழுப்புகிறது நாடகம் !  போருக்கு  ஆயுதங்கள் உற்பத்தி செய்து செல்வம் பெருத்து வலுவாக, பாதுகாப்பாக, நலமாக மனித இனம் ஆடம்பரத்தில் வாழ வேண்டுமா அல்லது அன்பு, மதிப்பு, சத்தியம், நியாயம் என்ற அடிப்படை அறநெறியில் எளிமையாக மனிதர் வாழ வேண்டுமா என்று நாடகக் கதா நாயகர் நம்மை எல்லாம் கேட்கிறார்.

ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Salvation Army Major) மேஜர் பார்பரா, தனக்குத் தெரியாமல் அவளது கிறித்துவக் குழுவினர், இராணுவ ஆயுதங்கள் உற்பத்தி செய்யும் அவளது தந்தையிடமிருந்து நிதிக் கொடை ஏற்றுக் கொண்டதைக் கேட்டுப் பெருங் குழப்பம் அடைகிறாள்.  ஆரம்பத்தில் ஏழ்மைக் காப்பணி ஆயுத வணிகரிட மிருந்து ஏராளமான நிதியைப் சன்மானமாகப் பெற்றுக் கொள்வது முற்றிலும் தவறென்று பார்பரா கருதுகிறாள்.  ஆனால் அப்படி நாடக வாசகர் கருத வேண்டுமென்று பெர்னாட் ஷா விரும்பவில்லை !  அவர் முன்னுரையில் அறக் கட்டளையாளர் நிதிக் கொடையைத் தூய சேமிப்பாளர் மூலம்தான் பெற வேண்டும் என்னும் கருத்து நகைப்புக்குள்ளானது என்று தள்ளி விடுகிறார்.  எந்த வகைச் சேமிப்பாயினும் அற நிலையங்கள் பெற்றுக் கொள்ளும் நிதிக் கொடைகளை மக்கள் நல்வினைகளுக்குப் பயன் படுத்தலாம் என்று பெர்னாட் ஷா ஆதரவு தருகிறார். “பிசாசுவிட மிருந்து கூட நன்கொடையைப் பெற்றுக் கொண்டு கடவுளின் கரங்களில் கொடுக்க வேண்டும்”, என்று ஆலோசனை கூறுகிறார்.  நாடக முடிவில் வறுமையில் வாடுவோர் கைவசம் நிரம்பப் பணம் இருந்தால் பசி, பட்டினியின்றி நிம்மதியாய் வாழ இயலும் என்று மேஜர் பார்பரா அமைதி அடைகிறாள்.

மிஸ் பார்பரா பீரங்கி உற்பத்திச் செல்வந்தர் ஆன்ரூவுக்குப் பிறந்த ஓர் பூரணப் பண்பியல் புதல்வி (An Idealistic Daughter).  சல்வேசன் ஆர்மிக்கு மேஜரான (Major in the Salvation Army) பார்பரா தன் தந்தை போன்ற பண முதலைகளுக்கு எதிராகப் போராடுவதில் தீவிரமாக ஈடுபடுபவள்.  அவளை வழிபடும் காதல் ரோமியோ அடால்·பஸ் (Adolphus) ஒரு கிரேக்கப் பேராசிரியர்.  அடால்·பஸின் மோகப் பொழுது போக்கில் பங்கு கொள்ள பார்பராவுக்கு நேரமில்லை,  சல்வேசன் ஆர்மி உறுப்பினர் சிலர் அவளது பணக்காரத் தந்தையிடமிருந்து பெருந் தொகையைச் சன்மானமாகப் பெற்றதை அறிந்து பார்பரா அதிர்ச்சி அடைகிறாள்.

சிந்திக்க வைக்கும் முரணான இத்தகைய பிரச்சனைகளே மேஜர் பார்பராவில் புத்துணர்வோடு இன்பியல் நாடகமாக உருவெடுக்கிறது.  தீப்பறக்கும் தர்க்க வசனங்கள் இங்குமங்கும் மின்னல்போல் அடிக்கின்றன,  பெண்மணி மேஜர் பார்பரா நாடக மேதை ஜார்ஜ் பெர்னாட் ஷா ஆக்கிய உன்னத படைப்புப் தலைவி, உள்ளத்தைத் தொடும் நாயகி என்று ஆங்கில நாடக விமர்சகர் பலர் கூறுகிறார்.  ஆங்கில நாடக உலகிலே சிந்தனையைத் தூண்டும் சமூகச் சேவகி மேஜர் பார்பரா நாடகப் படைப்பைப் போற்றுபவர் பலர் இருக்கிறார் என்பது தெரிய வருகிறது.

**********************

நாடக உறுப்பினர்:    

1.  மேஜர் மிஸ். பார்பரா அண்டர்ஷாஃப்ட் (Major Ms. Barbara Undershaft).  ஆன்ரூவின் மூத்த மகள்.

2.  ஆன்ரூ அண்டர்ஷாஃப்ட் (Andrew Undershaft) : இராணுவ ஆயுத உற்பத்தித் தொழிற்சாலையின் அதிபர்.

3.  மேடம் பிரிட்னி அண்டர்ஷா·ப்ட் (Lady Britomart Undershaft) : ஆன்ரூவின் விலக்கப் பட்ட மனைவி (வயது 50)

4.  ஸ்டீ·பன் அண்டர்ஷா·ப்ட் (Stephen Undershaft) (வயது 25) ஆன்ரூவின் இளைய மகன்.

5.  மிஸ். சாரா அண்டர்ஷா·ப்ட் (Ms. Sara Undershaft) : ஆன்ரூவின் இரண்டாவது மகள்.

6.  அடால்·பஸ் குஸின்ஸ் (Adolphus Cusins) : பார்பராவின் காதலன்

7.  சார்லஸ் லோமாக்ஸ் (Charles Lomax) (வயது 35) : சாராவின் காதலன்.

8.  பணியாள் மாரிஸன் (Bulter Morrison) வயது 45

9.  ஓபிரைன் பிரைஸ், ரம்மி மிட்சென்ஸ், ஜென்னி ஹில், பீடர் ஷெர்லி, பில் வாக்கர் – சல்வேசன் ஆர்மியில் உண்டு உறங்கி வந்து போகும் பழைய / புதிய சாவடி வாசிகள்.மிஸிஸ் பெயின்ஸின் வயது 40.

மற்றும் பலர்.

************************

ஏழ்மைக் காப்பணிச் சேவகி
(மேஜர் பார்பரா)

(இரண்டாம் அங்கம்)

அங்கம் – 2 பாகம் – 16

இடம் :  இங்கிலாந்து லண்டன் நகரம்.  வெஸ்ட் ஹாம் ஏழ்மைக் காப்பணிச் சாவடி (West Ham Shelter of the Salvation Army)

நிகழும் ஆண்டு : ஜனவரி 1906

நேரம் : காலைப் பொழுது.

அரங்க அமைப்பு :  ஏழ்மை மனிதரை ஜனவரிக் கடுங்குளிர் நடுக்கத்தில் பாடுபடுத்தும் ஒரு பழைய சத்திரக் கூடம் சல்வேசன் ஆர்மிச் சாவடி.  புதிதாக வெள்ளை அடிக்கப் பட்டுள்ளது.  கறைபடிந்த மேஜை, நாற்காலிகள், பெஞ்சுகள் அங்கு மிங்கும் தெரிகின்றன. அறைக் கதவுகள் ஜன்னல்கள் திறந்துள்ளன.  முன்னறையில் ஓர் ஆணும், பெண்ணும் நடமாடி வருகிறார்.  மேஜையில் சாவடி வாசிகள் சாப்பிட்ட தட்டுக்களை மூதாட்டி ஒருத்தி எடுத்துக் கொண்டிருக் கிறாள்.  உலவும் ஆடவன் வேலை இல்லாத வாலிபன்.  வாயாடி மனிதன்.  பெண் நடுத்தர வயது மூதாட்டி.  அவரது உடையிலும், நடையிலும் ஏழ்மை தெரிகிறது.  கடுங்குளிர் நடுக்கத்தைப் பொருட் படுத்தாமல் நாற்காலில் சிலர் அமர்ந்திருக்கிறார்.  காலை உண்டி சாப்பிட்டு அவர் இருவரும் தெம்புடன் இருக்கிறார்.  ஆடவன் குவளையில் உள்ள ஆறிப்போன சூப்பைச் சுவைத்துக் கொண்டிருக்கிறான்.  மேஜர் பார்பரா தன் சகபாடிகள் பலரோடு வாத்தியத் தம்பட்டம் கொட்ட அணிவகுத்துக் கொடி உயர்த்தி நடந்து வருகிறாள்.  மூதாட்டியும், வாலிபனும் வாதாடிக் கொண்டுள்ள போது ஜென்னி ஹில்லும், பீட்டர் ஸெர்லியும் நுழைகிறார்.  பீட்டருக்கு உணவு கொண்டு வருகிறாள் ஜென்னி.  அப்போது மூர்க்கன் வில்லியம் வாக்கர் [William Walker] சல்வேசன் சாவடிப் பின் தோட்டத்தில் வேகமாய் நுழைகிறான்.  ஜென்னியைக் கண்டதும் வெகுண்டு அவள் கூந்தலைப் பற்றி இழுக்கிறான்.  ஜென்னியைக் காப்பாற மேஜர் பார்பரா உடனே அழைத்து வரப் படுகிறாள்.  புதிய நபர்களைப் பார்பரா பதிவு செய்கிறாள்.  அப்போது மேஜர் பார்பராவின் செல்வீகத் தந்தை காரில் வருகிறார். தந்தையை அறிமுகம் ஆகிறார்.  இடையே பார்பராவின் காதலன் அடால்·பஸ் நுழைகிறான்.   அடுத்து மிஸிஸ். பெயின்ஸ் வருகிறாள்.

(சென்ற வாரத் தொடர்ச்சி)

ஆன்ரூ:  என் வணிகத்தைப் பாருங்கள்.  பீரங்கி, வெடிமருந்து தயாரிக்கிறேன்.  விற்ற பணத்தை நான் தர்மத்துக்கு அர்ப்பணம் செய்கிறேன்.  இதில் எனக்கில்லை குற்ற உணர்வு.  பணம் பணம்தான் !  அது விஸ்கி விற்று வந்தால் என்ன ?  வெடி மருந்து விற்று வந்தால் என்ன ?  பணத்தின் நதி மூலத்தைப் பார்த்தால் பலர் சாவடியில் பட்டினி கிடந்து சாக வேண்டியது தான் !  நல்ல பணம் ! தீய பணம் என்று இரு வடிவம் இல்லை பணத்துக்கு.  பணம் உள்ளூரச் சுத்தமானது !  பாடுபட்டுச் சேமித்த என் பணத்தைப் பெற்றுக் கொள்வதில் பாவமில்லை !  தவறில்லை ! தீங்கு எதுவும் இல்லை !  மாறுபட்ட வெறுப்புணர்வு இருப்பது உங்கள் மனத்தில்தான் !

மேஜர் பார்பரா:  சமாதானத்துக்கு உங்கள் பீரங்கிகள் வேண்டுமா ?  பீரங்கியும், வெடி மருந்தும் தயாரித்து விற்றால், வாங்கும் நாடுகள் அண்டை நாடுகளைப் பயமுறுத்தும் ! அவற்றை ஆக்கிரமிக்கப் பாயும் !  போரில் ஆயிரம் ஆயிரம் நபர் மடிவார் ! பல்லாயிரம் பேர் காய மடைவார் !  அந்த வருமானம் குருதியில் விளைந்தது !  அப்பா அதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீரா ?

ஆன்ரூ:  அண்டை நாடுகளுக்கு உள்ளிருக்கும் பொறாமை வெறுப்பு போட்டிகளை யாரும் நிறுத்த முடியாது.  போரும் சமாதானமும் மாறி மாறி வரும் உலகிலே !  அமைதியோடு வாழ ஆயுதங்கள் தேவை.  இல்லாவிட்டால் பெரிய சுறாமீன்கள் சிறிய மீன்களை விழுங்கி விடும்.        நான் ஒரு செல்வந்தக் கோமான் இல்லை !  மெய் வருந்தி தொழிற்சாலை மேற்பார்த்து நூற்றுக் கணக்கான பாட்டாளிகளுக்கு வேலையும், ஊதியமும் தருகிறேன்.  என் பணம் இல்லாவிட்டால் உங்கள் சாவடி ஏழைகள் போல் தொழிற்சாலை ஊழியரும் பட்டினியால் மடிவர் !  நான் இன்று உமக்குப் பணம் தந்து என் தொழிற்சாலை நாசமடைய முன்வருகிறேன்.

(செக்கில் கையெழுத்திட்டு ஆன்ரூ கொடுக்கிறார் மிஸிஸ் பெயின்ஸிடம்)

பார்பராவின் காதலன் அடால்·பஸ்:  (குறும்புத்தனமாய் ஆடிக் கொண்டு மேடை மேல் ஏறி) இந்த நூற்றாண்டு கொண்டாடப் படும் குதூகலமாய் சுயநலமற்ற இரு கொடை வள்ளல் களுக்கு !  முதலில் விஸ்கி வேந்தர் பாட்ஜருக்கு !  அடுத்து வெடி மருந்துக் கோமான் ஆன்ரூ அவர்களுக்கு !

மிஸிஸ் பெயின்ஸ்:  (செக்கை வாங்கிக் கொண்டு)  சல்வேசன் ஆர்மிக்கு இந்த செக் கிடைத்தது என் பணிக்குக் கிடைத்த அன்பு வெகுமதி !  என் ஆன்மீகக் கனவின் பெரு வெற்றி !  யார் நினைக்க முடியும் விஸ்கி மதுவும், வெடி மருந்தும் நமக்கு உணவு தரும் என்று ?  அவற்றில் கிடைக்கும் லாப வரவு சல்வேசன் சாவடிக்கு ஆசிகள் வழங்கும் என்று யார் நினைத்தார் ? (கண்களில் நீர் பெருகுது)

ஜென்னி:  (மிஸிஸ் பெயினை அணைத்து)  அழாதீர் அன்னையே ! உங்கள் பரிவுக் குணத்துக்குக் கிடைத்த பரிசு இது !  இது ஆனந்தக் கண்ணீர் அம்மா !

அடால்·பஸ்:  இந்தத் தருணத்தை நாம் கொண்டாட வேண்டும்.  வாருங்கள் யாவரும் சாவடி மேடைக்கு !  (ஓடிச் சாவடி மேடையில் ஏறுகிறான்)

மிஸிஸ் பெயின்ஸ்:  மிஸ்டர் அண்டர்ஷா·ப்ட் !  ஆயிரம் பேர் மண்டியிட்டு ஒரே துடிப்பில், ஒரே ஓசையில் சொல்லிச் சாவடியில் வழிபடுவதைக் கேட்டிருக்கிறீரா ?  எங்கள் கூட்டு மேடைக்கு வாருங்கள்.  பார்பரா அறிவிப்பாள் இந்த மகத்தான வெகுமதியை !  சல்வேசன் ஆர்மி காப்பாற்றப் பட்டதைச் சொல்வாள் !  அது மிஸ்டர் ஆன்ரூ அண்டர்ஷா·ப்ர் அவர்களால் என்று முழக்குவாள்.

அடால்·பஸ்:  (பெரிய டிரம்மை அடித்துக் கூட்டம் சேருது.  கொடி  உயர்த்திப் பலர் அணிவகுப்புக்கு வருகிறார்)  மிஸிஸ் பெயின்ஸ் !  கொடியை நீங்கள் ஏந்தி முன்னே செல்வீர் ! அணி வகுப்பு உங்கள் பின்னே செல்லட்டும் !

ஆன்ரூ:  நானும் உம்மோடு இன்று அணியில் வருகிறேன்.  டிரம் அடிக்கலாம் ! யாராவது எனக்குத் தர வேண்டும்.

அடால்·பஸ்: இது திருமணக் கொட்டு மேளம். சற்று நான் மாற்றி அடிப்பேன்.  டும், டட டும் டும் டும் !

மேஜர் பார்பரா:  (மிரண்டு போய்)  என்ன நடக்குது இங்கே ?  எனக்கு எதிராய் ஒரு புரட்சி எழுகிறது ! மிஸ்டர் ஆடால்·பஸ் குஸீன் !  என்ன வேடிக்கை செய்கிறாய் ?  இப்போது எனக்கு எதிராய் நீயும் கிளம்பி விட்டாயா ?  நீ என் நெஞ்சை முறிக்கிறாய் நண்பா தெரிந்தோ தெரியாமலோ !


அடால்·பஸ்:  உன் ஒரு இதயம் முறிந்தால் என்ன ?  நூறு இதயங்கள் இப்போது செழிக்கப் போகுது !  மிஸ்டர் அண்டர்ஷா·ப்ட் ஒரு தெய்வீகக் குமாரன் !  கடவுள் ஆசிகள் அவருக்குக் கிடைக்கும்.

மிஸிஸ் பெயின்ஸ்:  வா வா மேஜர் பார்பரா !  நீ வந்து என்னுடன் இணையாகக் கொடி பிடித்து முன்னே நட !

(எல்லாரும் அணி வகுப்பில் போகும் போது, தனியே மேஜர் பார்பரா அதிர்ச்சி அடைந்து மிரண்டு போய் நிற்கிறாள்.)

(தொடரும்)      

***********************

தகவல் :

Based on The Play : Major Barbara By : George Bernard Shaw, – Penquin Books (Editorial Supervision of Biographer : Dan. H. Laurence) (1960)

(a) The Portable Bernard Shaw By : Stanley Weintraub (1977)

(b) Writers & Critics – Shaw By A. M. Gibbs (1969)

(c) The Oxford Dictionary of Quotations (New Edition) (1992)

(d) The Wicked Wit of Oscar Wilde (1997)

(e) The Great Quotations Compiled By : George Seldes (1967)

(f) DVD Video Classics – Bernard Shaw’s Major Barbara Released in August 2007 (2 Hours)

(g) Major Critical Essays By : Bernard Shaw Penguin Classics (1986)

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (November 18, 2011)

http://jayabarathan.wordpress.com/

Series Navigationமியன்மார் பாரம்பரிய இசை
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *