மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (முதலாம் அங்கம்) அங்கம் -1 பாகம் – 5

This entry is part 16 of 41 in the series 10 ஜூன் 2012

 


ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா
தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா


பரத்தைமைத் தொழிலுக்கு மெய்யான காரணம் பெண்டிரின் சீர்கெட்ட பாதையல்ல !  ஆடவரின் ஆதிக்கப் போதையல்ல !  ஏழ்மை, வறுமை, இல்லாமை, பசி பட்டினி, தனிப்படுதல், வேலையின்மை, முறிந்த குடும்பம், சமூகப் புறக்கணிப்பு, பெற்றோர் புறக்கணிப்பு, வன்முறைக் கற்பழிப்பு, கட்டாய அழுத்தம் போன்ற சமூக இடையூறுகளே அப்பாவிப் பெண்டிரை மீளாத பரத்தைமைச் சிறையில் தள்ளி விடுகின்றன.

பெர்னாட் ஷா (Preface to Mrs. Warren’s Profession Drama)


ஜார்ஜ் பெர்னாட் ஷா அயர்லாந்தின் தலைநகர் டப்ளினில் 1856 ஆம் ஆண்டில் ஜார்ஜ் கார் ஷா & லுஸிண்டா எலிஸபெத் ஷா இருவருக்கும் பிறந்தவர்.  அவரது அன்னை ஆப்ரா (Opera) இசையரங்குப் பாடகி, வாய்க்குரல் பயிற்சியாளி. தந்தையார் தோல்வி யுற்ற வணிகத்துறையாளர். வறுமையிலிருந்து குடும்பத்தை விடுவிக்க முடியாத பெருங் குடிகாரர்.  இருபது வயதில் பெர்னாட் ஷா அன்னையுடன் லண்டனுக்குச் சென்றார்.  அங்கே தாயார் இசைத்தொழில் மூலம் ஊதியம் பெற்றுக் குடும்பத்தை நடத்திக் கொண்டு வந்தார்.  நிரம்ப இலக்கிய நூற் படைப்புகளைப் படித்து வந்த பெர்னாட் ஷா, முதலில் ஐந்து தோல்வியுறும் நாடகங்களை எழுதினார்.  பிறகு நாடக மேடை உலகில் புகுந்து மற்றவர் நாடகங்களை விமர்சனம் செய்து 1894 இல் “சனிக்கிழமை கருத்திதழில்” (Saturday Review) நாடகங்களைப் பற்றித் திறனாய்வு செய்து வந்தார். அப்போது பொதுவுடைமைக் கோட்பாடில் ஈடுபாடு மிகுந்து பிரதம மேடைப் பேச்சாளாராகவும் உரைமொழி ஆற்றினார்.

அவர் எழுதிய சிறப்பான நாடகங்கள்: பிக்மாலியன் (Pygmalion), ஜோன் ஆ·ப் ஆர்க் (Saint Joan), மனிதன் & உன்னத மனிதன் (Man & Superman), ஆப்பிள் வண்டி (The Apple Cart), டாக்டரின் தடுமாற்றம் (The Doctor’s Dilemma), மெதுசேலாவுக்கு மீட்சி (Back to Methuselah), மேஜர் பார்பரா (Major Barbara), கோடீஸ்வரி (Millionairess), இன்பியல் நாடகங்கள் (Plays Pleasant), துன்பியல் நாடகங்கள் (Plays Unpleasant), தூயவருக்கு மூன்று நாடகங்கள் (Three Plays for Puritans), நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House), ஆயுத மனிதன் (ஊழ் விதி மனிதன்) (The Man of Destiny) (1898), மிஸிஸ் வார்ரனின் தொழில் (Mrs. Warren’s Profession) (1893) போன்றவை.  ஐம்பது ஆங்கில நாடகங்கள் எழுதிய பெர்னாட் ஷாவுக்கு 1925 இல் இலக்கிய நோபெல் பரிசு அளிக்கப்பட்டது.

மேடம் மோனிகா வார்ரன் நாடகத்தைப் பற்றி :

[தமிழில் எழுதப் பேசும் வசதிக்காக பெர்னாட் ஷாவின் நாடகப் பெயர்கள் சிலவற்றை நான் எளிதாய் மாற்றி இருக்கிறேன்.]

பெர்னாட் ஷா நாடகத்தின் அடிப்படைக் கருத்து இதுதான் :  ஏழ்மையாலும், சமூகப் புறக்கணிப்பாலும், தனிப்படுவ தாலும், இல்லாமையாலும், வேலையின்மையாலும் சில மாதர் பரத்தையர் தொழில் சிக்கிக் கொள்கிறார் என்பதாக பெர்னாட் ஷா தன் நாடக முன்னுரையில் கூறுகிறார்.  மிஸிஸ் மோனிகா வார்ரன் ஒரு நடுத்தர வயது மாது.  உயர்தரப் பரத்தையர் மாளிகையை மேற்குடிச் செல்வந்தருக்கும், சமூகச் செல்வாக்கு மாந்தருக்கும் நடத்தி வரும் உரிமையாளி. நளினமும், நாகரீகமும் கவர்ச்சி மேனியும் கொண்டவள். மோனா லிஸா போன்று பார்க்க ஓர் அழகிதான். அவளுக்கு விவியன் என்றொரு வாலிபப் புதல்வி. மகள் கேம்பிரிட்ஜ் யுனிவெர்சிட்டி பட்டதாரி. அவளது கல்லூரிப் படிப்புக்குத் தொடர்ந்து பணத்தை அனுப்பிய அவளது அன்னை எப்படிப் பணம் சம்பாதிக்கிறாள் என்று தெரியாமல் இருக்கிறாள்.  அந்த இரகசியம் தெரிந்ததும் விவியன் வெகுண்டு, வெடித்து அன்னையைத் திட்டி அறவே வெறுக்கிறாள்.  தாய் சிறு வயதில் வறுமைப் பிடியில் பட்ட துயர்களைக் கூறிப் பரத்தையர் தொழிலில் தான் தள்ளப் பட்ட காரணத்தை விளக்குகிறாள்.  மகளால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தர்க்கத்தின் முடிவில் உடன்பட ஒருவரும் இயலாது இருவரும் தாம் விரும்பும் தனித்தனிப் பாதையில் போகிறார்.  மோனிகா தன் பரத்தையர் தொழிலைத் தொடர்கிறாள்.  தாயைப் போல பிள்ளை என்பார் சிலர். ஆனால் விவியன் ஒரு விதி விலக்கு மங்கை.  அவள் அன்னையைப் போலின்றி ஒரு கௌரவத் தொழிலில் உழைத்துச் சம்பாதிக்க ஈடுபடுகிறாள்.

மிஸிஸ் வார்ரனின் தொழில் நாடகத்துக்குத் தடை உத்தரவு

1893 இல் எழுதிய பெர்னாட் ஷாவின் நாடகம் 1925 ஆண்டுவரை அடுத்தடுத்துத் தடை செய்யப்பட்டு இங்கிலாந்தில் அரங்கேறாது முடங்கியே மூலையில் கிடந்தது. பிரிட்டனின் அக்கால அரங்க மேடை அதிபரரான லார்டு சேம்பர்லின் “மிஸிஸ் வார்ரனின் தொழில்” நாடகத்தை எந்த நகரிலும் அரங்கேற்றக் கூடாது என்று தடை உத்தரவு போட்டார்.  காரணம் அந்த நாடகம் பரத்தையர் தொழிலைப் பற்றிக் காட்டி ஆடவரையும், மாதரையும் இழிவு செய்கிறது.  பரத்தையர் தொழில் நாட்டில் ஊன்றி வளர்வதற்கு மூல காரணமே சமூகம் தான் என்பது நாடகக் காட்சியாக வெளியாவது அப்போது வரவேற்கப் படவில்லை.  1902 ஆண்டில் லண்டனில் உள்ள “நியூ லிரிக் கிளப்” தன் உறுப்பினர் மட்டும் பார்க்க அந்த நாடகம் முதலில் அரங்கேறியது.  1905 இல் நியூ யார்க்கில் “மிஸிஸ் வார்ரன் தொழில்” நாடகம் முதன்முதல் அரங்கேறிப் பாதியில் போலீசார் குறுக்கிட்டு நடிகர் குழுவினர் கைது செய்யப் பட்டனர். பொதுநபர் ரசிக்க 1925 ஆண்டில்தான் அதை லண்டன் நாடக அரங்குகள் மேடையில் காட்ட முன்வந்தன.

பரத்தைமைத் தொழில் (Prostitution) பற்றி பெர்னாட் ஷாவின் கருத்துகள்

பெர்னாட் ஷா 1893 இல் “மிஸிஸ் வார்ரனின் தொழில்” என்னும் நாடகத்தை எழுதினார்.  அது பரத்தைமைத் தொழலில் ஈடுபட்டு ஊதியம் சம்பாதிக்கும் மிஸிஸ் வார்ரனைப் பற்றியது. அந்த வெறுப்புத் தொழிலில் கிடைத்த பணத்தை மகளுக்குத் தெரியாமல் சேர்த்து மகளைப் பட்டப் படிப்பில் ஏற்றி வளர்த்த நிகழ்ச்சியே நாடகத்தின் ஆணிவேராய் அமைந்துள்ளது.  இறுதியில் அதை அறிந்து கொண்ட மகள் ஆவேசம் கொண்டு அன்னையைப் பிரிவதே நாடக உச்ச முடிவாக எழுதப்பட்டுள்ளது.

மிஸிஸ் வார்ரன் உட்பட பரத்தைமைத் தொழிலில் பங்கு கொண்ட மற்றவரும், அவளது ஆசை நாயகரும் கண்ணியமாக காட்சி அளித்துப் போவதாய் பெர்னாட் ஷா காட்டி இருக்கிறார்.  இந்த கசப்பு நாடகத்தை தடை செய்யத் தகுதியுள்ள ஆபாச நடைப் போக்குகள், முரண்பாடுகள் எதுவும் வசனங்களில் இல்லை.  பரத்தைமை பற்றிய ஆபாசக் காட்சிகள், அமங்கலச் சொற்கள், அதிர்ச்சி வரிகள் எவையும் நாடகத்தில் எங்கும் காணப் படவில்லை. நாடக வசனங்களை இரட்டைப் பொருளில் பெர்னாட் ஷா எழுதி இருப்பது திறமையான நவீன நடைப் போக்காக திகைக்க வைக்கிறது.

 

பரத்தையர் தொழில் மாளிகை வைத்து நடத்தும் மிஸிஸ் வார்ரன் முரண்பாடு நாடகத்தை பெர்னாட் ஷா எழுதியதின் நோக்கம் என்ன ?  பரத்தைமைத் தொழிலின் மெய்யான காரணம் பெண்டிரின் சீர்கெட்ட நெறிகள் அல்ல !  ஆடவரின் ஆதிக்க வன்முறை வெறிகள் அல்ல !  வறுமை, ஏழ்மை, பசி, பட்டினி, தனிமை, வேலையின்மை, சமூகப் புறக்கணிப்பு, முறிந்த குடும்பம், வன்முறைக் கற்பழிப்பு, கட்டாயத் தொழில் அழுத்தம் போன்ற சமூக இடை யூறுகளே அப்பாவிப் பெண்டிரை மீளாத பரத்தைமைச் சிறையில் தள்ளி விடுகின்றன என்று பெர்னாட் ஷா தன் நாடக முகவுரையில் கூறுகிறார்.

**********************

நாடக  உறுப்பினர்

1. மேடம் மோனிகா வார்ரன் [Mrs. Kitty Warren] (45 வயது)

2. மிஸ் விவியன் வார்ரன் – [Ms. Vivie Warren] மோனிகாவின் ஒற்றை மகள் (வயது : 22)

3. பாதிரியார் சாமுவெல் கார்டுநர் [The Rev. Samuel Gardner] (வயது : 52)

4. பிராங்க் கார்டுநர் [Frank Gardner], விவியனின் காதலன் & சாமுவெல் பாதிரியாரின் மகன் (வயது : 20)

5. வில்லியம் பவல் [Praed] (நடுத்தர வயது) : மேடம் மோனாவின் கூட்டாளி

6. ஜார்ஜ் வாலஸ் (Sar George Crofts) (50 வயது) : மேடம் மோனாவின் தோழன்.

************************

 

மேடம் மோனிகாவின் வேடம்

(Mrs. Warren’s Profession)

நான்கு அங்கங்கள்

(முதலாம் அங்கம்)

அங்கம் -1 பாகம் -5


இடம்:  ஹாஸ்லிமியர், ஸுர்ரி, இங்கிலாந்து

நடந்த ஆண்டு : 1893

காலம் :  வேனிற் காலப் பிற்பகல்


அரங்க அமைப்பு:  தோட்டத்தில் அமைந்திருக்கும் வேனிற் குடில் மாளிகை. பின்புலத்தில் மரம் செடிகள் நிறைந்த ஒரு குன்று.  மரம் ஒன்றில் ஒரு சைக்கிள் சாத்தப்பட்டிருக்கிறது.  மர நிழலில் கட்டியுள்ள ஒரு தூரியில் இள நங்கை ஒருத்தி கையில் புத்தகத்தைப் படித்த வண்ணம் ஒருபுறம் சாய்ந்து முகமத்தைக் காட்டிப் படுத்திருக்கிறாள்.  குடிசையின் பின்புறத்திலிருந்து ஒரு நடுத்தர வாலிபர் (Praed] இளமாதை நோக்கி வருகிறார்.  வழி தவறிய வாலிபர் வாசல் அருகில் நின்று இள நங்கையிடம் பேசுகிறார்.  வாலிப கோட் சூட் அணிந்து குறுந்தாடியோடு காணப் படுகிறார்.  இள நங்கையின் வயது 20 மேல் இருக்கலாம். கவர்ச்சி அழகி, உறுதியான உடற்கட்டு, எடுப்பன தோற்றம். நளினமோடு பேசும் நடுத்தர வகுப்பு மங்கை. கணிதம்,விஞ்ஞானம் படித்த கல்லூரிப் பட்டதாரி. வில்லியமும், விவியனும் உரையாடிக் கொண்டு வரும் போது தாய் மோனிகாவும் அவளது நெடுங்கால நண்பர் ஜார்ஜ் வாலஸும் வருகிறார்கள்.  விவியனைச் சந்தித்த வாலஸ் அவள் தன் மகளோ வென்று சந்தேகப் படுகிறார்.  அப்போது விவியனின் காதல் ரோமியோ ஃபிராங் கார்டுநர் சைக்கிளில் வருகிறான்.

 

(சென்ற வாரத் தொடர்ச்சி)

 

வாலஸ்:  விவியனின் தந்தை நானென்று நிச்சயமாகச் சொல்ல முடியாது.  வேறு யாராயினும் இருக்கலாம்.  நான் ஏன் இந்த பொறுப்பை ஏற்க வேண்டும் ?  ஆனால் நிச்சயம் மோனிகாவுக்குத் தெரியும். கேட்டால் சொல்ல மாட்டாள்.  யாரென உனக்குத் தெரியுமா ?

வில்லியம்:  (கோபமாக) எனக்கு இதைப் பற்றி யெல்லாம் எதுவும் தெரியாது.  விருப்பமும் இல்லை தெரிந்து கொள்ள.  ஆனால் கூர்ந்து நோக்கினால் தாயிக்கும் மகளுக்கும் முகம் ஒற்றுமை இல்லையே !

வாலஸ்:  ஆமாம் நீ சொல்வது சரிதான்.  மோனிகாவுக்குப் பிறந்தவள்தான் விவியன்.  அதில் ஐயமில்லை.  மகளுக்குத் தந்தை யார் என்பதுதான் புதிராய் இருக்கிறது.  நீயும் சில மாதங்கள் மேடம் மோனிகாவுடன் உறவு கொண்டிருந்தாய் அல்லவா ?  விவியன் உன் மகளாய் இருக்கலாமா என்று சந்தேகப் படுகிறேன்.  நீ அப்படி எண்ணுவதில்லையா ?

வில்லியம்:  (சட்டென) அப்படி இருக்க முடியாது.  என்னை விட நீதான் மேடம் மோனிகாவுடன் பல்லாண்டுகளாய்ப் பழகி வருகிறாய்.  விவியன் உன் மகள் என்பதில் நீ ஐயம் கொள்ள வேண்டாம்.

வாலஸ்:  மோனிகா ஒருத்திக்குத்தான் விவியன் தந்தை யாரெனத் தெரியும்.  நாம் ஒருவர் மீது ஒருவர் புகார் செய்ய கொள்ள வேண்டாம்.  விவியன் நிச்சயம் மோனிகாவின் புதல்வி.  அதில் நமக்குள் வேறுபாடு இல்லை.  அவள் தந்தையைப் பற்றி மோனிகாவைக் கேட்க வேண்டும் ஒருநாள்.  மிகவும் நாசுக்கான கேள்வி ! திக்குமுக்காடச் செய்யும் வினா !

வில்லியம்:  நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன்.  மோனிகாவுடன் நான் பழகி வந்தாலும் அந்த வழியில் நான் செல்ல வில்லை.  எங்கள் நட்பு அந்தரங்க உறவில் முடிய வில்லை.  ஓரழகிய மாதுக்குத் தன்னைச் சுற்றிவர சில விட்டில் பூச்சிகள் தேவைப்படும்.  அவை ஒட்டாமல் சுற்றி வரும்.  அந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவன் நான். நீ மோனிகாவுடன் நெருங்கி உறவாடியவன்.  நீ கேட்கலாம் மோனிகாவிடம்.

வாலஸ்:  நாசுக்காக நானதைப் பலமுறை நளினமாகக் கேட்டிருக்கிறேன்.  நான் மோனிகாவிடம் தன் மகளைப் பற்றிக் கேட்டால் அவள் மௌனமாகி விடுவாள்.  யார் விவியன் தந்தை என்றால் பதில் சொல்ல மாட்டாள்.  எனக்கு சலித்துப் போய் விட்டது அவளிடம் கேட்டுக் கேட்டு.

வில்லியம்:  நமக்கு வாலிப வயது தாண்டி நாம் தந்தை இடத்தில் இளம்பெண் விவியனுக்குப் பெற்றோர் நிலையில் இருவரும் இருக்கிறோம்.  அதில் எனக்கு உடன்பாடுதான்.  தந்தைப் பொறுப்பில் நாமிருவரும் அவளைப் பாதுகாத்து உதவி செய்யக் கடமைப் பட்டவர் இல்லையா ?  அதற்கு என்ன சொல்கிறாய் நீ ?

வாலஸ்:  நான் ஒன்றும் உன்னை விட வயதினன் இல்லை.  நீ சொன்னது போதும் எனக்கு.

வில்லியம்:  என்னருமைத் தோழனே !  நீ வயதில் மூத்தோனைப் பிறந்து விட்டாய்.  நானோர் இளஞனாய்ப் பிறந்து விட்டேன்.  நான் முதுமையானவன் என்று என்னால் நினைக்க முடியவில்லை.

 

மேடம் மோனிகா:  (வெளியே வந்து)  வாலஸ், வில்லியம் வாருங்கள், டீ தயார். வாருங்கள்.

வாலஸ்:  மோனிகா நம்மை அழைக்கிறாள். நாம் போவோம். (விரைவாக வாலஸ் முன் செல்ல, வில்லியம் பின்னால் வீட்டுக்குள் நுழைகிறார்)

(அப்போது ஓர் வாலிபன் சைக்கிளில் வந்து கையசைத்து வில்லியத்தை விளிக்கிறான்.  வாசலில் நுழைந்து நிற்கிறான்.  20 வயதிருக்கும்.  துள்ளும் இளமை குலுங்க சுறுசுறுப்பானவன்.  கையில் ஒரு துப்பாக்கியோடு வருகிறான்)

வாலிபன்:  ஹலோ வில்லியம்.

வில்லியம்:  ஓ ஃபிராங்க் கார்டுநரா ?  என்ன செய்தி ? எதற்கு இங்கு வந்தாய் ?

ஃபிராங்க் கார்டு்நர்:  என் ஃபாதரைத் தேடி இங்கு வந்தேன்.

வில்லியம்:  ரோமன் காத்தலிக் ஃபாதர்தானே உன் தந்தை ?

ஃபிராங்க்:  ஆமாம்.  இந்த ஊர் கிறித்துவப் பாதிரியார் என் தந்தை.  நான் என் நண்பரோடு தங்கி யுள்ளேன் பணத்தைச் சிக்கனமாய்ச் செலவழிக்க.  ஜூலை மாதத்தில் சற்று பண முடக்கம் ஏற்பட்டது. என் ரோமன் ஃபாதரே கடனைத் தீர்த்து காப்பாற்றினார்.  பண இழப்பில் முறிந்துபோய்க் கிடக்கிறார்.  இந்தப் பக்கமாய் நீங்கள் ஏன் வந்தீர் ?  இந்த இல்லத்தில் இருப்பவரைப் பற்றி உமக்குத் தெரியமா ?

வில்லியம்:  வாலிப மங்கை மிஸ் விவியன் வார்ரனுடன் ஓர் இரவு இங்கு தங்க வந்திருக்கிறேன்.

ஃபிராங்க்:  (ஆர்வமோடு)  உங்களுக்கு அழகி விவியனைத் தெரியுமா ?  அவள் நல்ல நளின மங்கை இல்லையா ?  நான் அவளுக்குத் துப்பாக்கியால் சுடச் சொல்லிக் கொடுக்கிறேன்.  உங்களுக்கு அவளைத் தெரியும் என்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்குது.  உமது தோழமை அவளுக்குத் தேவைதான்.

வாலஸ்:  நான் விவியன் அன்னையின் பழைய நண்பன்.  அவள் அன்னை மேடம் மோனிகா வார்ரன்தான் என்னை வரச் செய்து விவியனைச் சந்திக்க ஏற்பாடு செய்துள்ளார்.

ஃபிராங்க்:  விவியனின் அன்னை இங்கு வந்திருக்காளா ?

வில்லியம்:  ஆமாம்.  நாமெல்லாம் உள்ளே செல்வோம்.  டீ, கேக் தயாராக உள்ளது.  அதற்குள் ஒரு நபர் வந்துவிட்டார்.

மோனிகா:  யார் அவர் ?

வில்லியம்:  ஒரு நண்பர்.

மோனிகா:  அவரையும் அழைத்து வா டீ அருந்த.

 

 

வில்லியம்:  சரி மோனிகா.  (ஃபிராங்கைப் பார்த்து)  வரவேற்பை ஏற்றுக் கொள்கிறாயா ?

ஃபிராங்க்:  யார் அழைப்பது ?  விவியனின் தாயா ?

வில்லியம்:  ஆமாம்.

ஃபிராங்க்:  அந்த எழில் மேடம் என்னை வரவேற்று நேசிப்பாரா ?  நானவளைத் தனியாகச் சந்திக்க விரும்புகிறேன்.  அவளோடு நான் பேச வேண்டும்.  என் இளவயது ஆசைகளைக் கொட்ட வேண்டும்.

வில்லியம்:  உன் திறமையில் நீ யாரையும் ஈர்க்கும் கவர்ச்சி கொண்டவன். மோனிகா உன்னையும் மயக்கி இருக்கிறாள். வா உள்ளே.  எல்லோரையும் சந்திப்பாய்.  (இருவரும் உள்ளே போகிறார்)

 

(தொடரும்)

***************

தகவல் :

 

Based on The Play : Mrs. Warren’s Profession By : George Bernard Shaw, – Plays Unpleasant) (1958)

(a) The Portable Bernard Shaw By : Stanley Weintraub (1977)
(b) Writers & Critics – Shaw By A. M. Gibbs (1969)
(c) The Oxford Dictionary of Quotations (New Edition) (1992)
(d) The Wicked Wit of Oscar Wilde (1997)
(e) http://en.wikipedia.org/wiki/Mrs._Warren’s_Profession
(f) http://www.enotes.com/mrs-warrens-profession
(g) The Great Quotations Compiled By : George Seldes (1967)
(h) BBC DVD Video Limited – Bernard Shaw’s Mrs. Warren’s Profession Released in August 2006 (109 minutes)
(i) A Guide to the Plays of Bernard Shaw By : C.B. Purdom (1964)
(j) Major Critical Essays By : Bernard Shaw Penguin Classics (1986)
(k) http://www.online-literature.com/george_bernard_shaw/mrs-warrens-profession/

 

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (June 8, 2012)
http://jayabarathan.wordpress.com/

Series Navigationபாரதிருத்ராவின் குறும்பாக்கள்
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *