“  மேதகு  “ ஏற்படுத்திய எண்ண அலைகள் – திரைமொழிக்கு வரவேண்டிய ஈழத்தமிழினத்தின்   அவலப்பட்ட   கதைகள்  ஏராளம்  உண்டு

author
0 minutes, 8 seconds Read
This entry is part 2 of 15 in the series 1 ஆகஸ்ட் 2021

 

  சட்டத்தரணி   செ. ரவீந்திரன்  –  அவுஸ்திரேலியா

மேதகு  திரைப்படம்   நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது  என்று பலரும் தொலைபேசியிலும் நேரடி சந்திப்பிலும்  சொன்னார்கள்.  அத்துடன்  இந்தத்  திரைப்படத்தை நான் பார்த்துவிட்டேனா எனக்கேட்டவண்ணமிருந்தனர்.

அவர்களது கேள்வியில்,  அந்தப்படம் பற்றிய எனது அபிப்பிராயத்தை எதிர்பார்க்கும் தொனியே இழையோடியிருந்தது. 

மேதகு திரைப்படத்தை நானும்  பார்த்தேன். அதுபற்றி சிலரிடம் பேசினேன்.

அத்துடன் அந்தத் திரைப்படம் தொடர்பான பல விமர்சனங்களையும் படித்தேன்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்,  “ ஏன் இந்தப்படம் பற்றி ஒரு கருத்தும் சொல்லவில்லை?   ஏன் சொல்லாமலிருக்கிறார்? அவர் சொல்லவேண்டும் !  “ என்று பலவாறான கருத்தாக்கங்கள்  கூட  வெளிவந்தன.

தமிழ்மக்கள் இன்றுபடும் அவலங்கள் – சீரழிவுகளுக்கு மத்தியில்,  நாம் தமிழர் சீமான் படத்தைப்பற்றி   “ சொன்னதும் – சொல்லாததும்தானா   “ முக்கியம் என்றும்  சட்டென்று தோன்றியது.

எவ்வளவோ பட்டுத் தெளிந்தும், நாங்கள் தொடர்ந்தும் இப்படித்தான் சிந்திக்கப்போகிறோமா?  என்றும் எண்ணினேன்.

வரலாறுகள் பதியப்படல் வேண்டும். அனைத்துக் கோணங்களிலிருந்தும் அவை நிச்சயமாக பதியப்படல் வேண்டும். அந்த வரலாற்றுப்பதிவுகளில் இருந்து நாம் எமக்குத் தேவைப்பட்ட பயனுள்ள விடயங்களை தெரிந்துகொள்ளவும் அந்தப்பதிவுகள் உதவியாக வேண்டும்.

ஒரு சினிமாப்படத்தின் நெறியாள்கை, உத்திகள் படப்பிடிப்பின் தரம் பற்றியெல்லாம் விமர்சனம் செய்வதற்கு ஏற்ற தகுதியோ அறிவோ என்னிடம் இல்லை என்று சொல்லிக்கொண்டே, மேதகுவின் கருத்தாக்கத்தை கவனித்தேன்.

படத்தில் வந்த சம்பவங்கள்,  யாழ். மேயர் அல்ஃபிரட் துரையப்பாவின்  கொலையின் பின்னணி எனக்குத் தெரிந்ததுதான்.  அதற்காக குற்றம் சாட்டப்பட்டவர்கள் , மற்றும் பிரபாகரன் உட்பட அனைவருமே எனக்கு நன்கு பரிச்சியமானவர்கள்.  உறவாடியவர்கள்.

அந்தக்கோணத்தில்  இப் படத்தின் கருத்தாக்கம்,  எமது வரலாற்றின்  ஆயுதப் போராட்டத்தின் ஆரம்பம்.  எமது இனவிடுதலை நோக்கின் தனிமனிதப்படுகொலைகளின் ஆரம்பத்தையும் , பிறப்பையும் கூட  அதனை நியாயப்படுத்தவும் விழைகிறது.

அல்ஃபிரட்  துரையப்பாவின் கொலையானது இரண்டு கருத்தாக்கங்களை தோற்றுவித்தது. 

முதலாவது: எங்கள் மத்தியில் சிங்கள அடக்குமுறைக்கு எதிராக எதிர்சமர் செய்ய  இளைஞர்கள் தயாராக இருக்கிறார்கள்.

இரண்டாவது: ஶ்ரீமாவோவின் அரசுக்கும் சிங்கள அடிப்படைவாதிகளுக்கும்  இது ஒரு சவாலாக இருந்தது.

அது ஏதோ தனிப்பட்ட குரோதம் என்றே ஆளும்தரப்பு முதலில் நம்பியது. ஆனால், தமிழ் இளைஞர்களில் சிலர் கைதான பின்னர்தான் அவர்களது சிந்தனை மாறியது.

 தமிழர் விடுதலைக்கூட்டணியினர் அனைத்து மேடைகளிலும் துரையப்பா துரோகி என்ற உணர்வையே ஊட்டியிருந்தமையால், தமிழ் உணர்வாளர்களும் தமிழ்த்தேசியவாதிகளும் இக்கொலையை நியாயப்படுத்தி அதனை பெரியவெற்றியாக கருதினார்கள்.

அதன் விளவாக அரசு மேற்கொண்ட தீவிர புலனாய்வினால் 1975 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 21 ஆம் திகதி கிருபாகரனும், அதே ஆண்டு அடுத்த செப்டெம்பர் மாதம் 19 ஆம் திகதி கலாபதியும் கைதானதன் பின்னர்தான் அவர்களின் வாக்குமூலங்களிலிருந்து அக்கொலை  இளைஞர்களின் கூட்டு முயற்சி என்பது தெரியவருகிறது.

அரச பாதுகாப்புத்துறை ஒரு உள்ளுர் வலையமைப்பையும் உருவாக்கி , தீவிரமாகத்  தேடிப்பிடிக்கப்பட்ட  மற்றவர்களையும் மோசமாக நடத்தி சித்திரவதை செய்தது.

கலாபதியை கைதுசெய்து,  அவரை சித்திரவதை செய்வதற்கு காரணமாக இருந்தவர் கருணாநிதி என்ற பொலிஸ் அதிகாரி. கலாபதியின் விசாரணைகளின்போது  அவரைப் பலமாகத் தாக்கியதில்  கலாபதியின்  காதும் சேதமடைந்து செவிப்புலனும் பாதிக்கப்பட்டது.

தனது சகா இவ்வாறு சித்திரவதைக்குள்ளானதறிந்து பிரபாகரன் கடும் கோபமுற்றிருந்தார். ஆகவே கருணாநிதி கொல்லப்படவேண்டும் என்பதில் பிரபாகரன் உறுதியாய் இருந்ததுடன், கருணாநிதி பற்றிய தகவல்களையும் கண்டறிந்து,  அவரை 1977 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி மாவிட்டபுரத்தில் வைத்து தீர்த்துக்கட்ட ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, அந்தப்பொறுப்பு பிரபாகரனிடத்திலும் பேபி சுப்பிரமணியத்திடமும் ஒப்படைக்கப்பட்டது.

பிரபாகரன் குறிபார்த்து சுட்டார். மேலும் கொல்லப்பட்டுக்கிடந்த கருணாநிதியின் அருகில் சென்று, அவரது காதினுள் மீண்டும் சுட்டு பழிதீர்த்துக்கொண்டார். கலாபதியின் காதுக்கு  செய்ததற்கு வழங்கிய தண்டனை எனவும் சொன்னார்.

கருணாநிதிதான் ஈழவிடுதலைக்காக கொலை செய்யப்பட்ட முதலாவது பொலிஸ் அதிகாரி.  பழிவாங்கலாக அவரது காதினுள்ளும் தோட்டாக்கள் செலுத்தப்பட்டன.

1977 இற்குப்பின்னர்  நிகழ்ந்த இப்படியான கொலைகள் பற்றியும், 1983 ஜூலையில் திருநெல்வேலியில் 13 இராணுவத்தினர்  கொல்லப்பட்ட  சம்பவம் தொடர்பாகவும் அதன் எதிரொலியாக 57 தமிழர்கள் யாழ்ப்பாணத்தில் ஆயுதப்படையினால் கொல்லப்பட்ட விவகாரம் பற்றிய பழிவாங்கல்களை  பிறிதொரு சந்தர்ப்பத்தில் பிரபாகரன், உமா மகேஸ்வரன்  போன்றோருடன் பேசியிருக்கின்றேன்.

ஆனாலும், அவர்கள் இப்படியான கொலைகளின் எதிர்வினைகள் எப்படி இருக்கும் என்பதை ஆராய்ந்து முடிவெடுக்கும் வகையில் போதிய அறிவும் அனுபவமும் அற்றவர்களாகவும் உலகை ஆராய்ந்து முன்னேறவேண்டிய தத்துவார்த்த பின்புலம் அற்றவர்களாகவுமே  இருந்தனர்.

நடந்த கொலைகளுக்காக அவர்கள் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த நிலையில்  இடத்துக்கிடம் மறைந்து வாழ்ந்தார்கள்.

அவர்களாகவே   எங்களை வந்து சந்தித்தால் உண்டு. சமூகத்தில் பொதுவெளியில்   எங்களோடு இணைந்து அவர்களால் பழகமுடியாதிருந்தது. இந்தச் சம்பவங்களின் தாக்கங்கள் மறையுமுன்னர்  மற்றும் ஒரு சம்பவமும் நடந்துவிடும்.

இவ்வாறு தொடங்கிய   நடவடிக்கைகள் தொடக்கத்தில் உதயசூரியன் கொடியோடும் பின்னர் புலிக்கொடிகளோடும் உணர்ச்சி அலைகளினால் உந்தப்பட்டு, தமிழ் எழுச்சிப்பாடல்களோடும் கோஷங்களோடும்  வளர்ந்து தமது உயிர் ஈகைகளாலும் அதனையொட்டிய உணர்வுகள்  கடல் கடந்து புலம்பெயர்ந்தும்  சென்று, இறுதியில் நந்திக்கடலில் சங்கமித்ததைத்தான் மேதகு முதலான திரைப்படங்கள் தொடர்ந்தும்  சொல்லுமோ என்றுதான் அங்கலாய்த்தேன்.

ஈழப்போரில் விளைந்த வீரங்கள் போற்றப்படவேண்டியவை. நிலை நிறுத்தி நினைக்கப்படவேண்டியவை. 

ஆனால்,  அதன் அறுவடைகள்…?

அதனிடையே அகப்பட்டு, வாடி வதங்கிய – அழிந்துபோன மக்கள், அவர்களின் அவலங்கள், அந்த வரலாறுகளை உலுக்கக்கூடிய மனிதாபிமானங்களை ஏன் நினைப்பதில்லை.

அதில் வரக்கூடிய வருமானங்கள் போதுமானதாக இருக்காது என்பதனலா..?

 “ மேதகு “ வை ஆராய்ந்தபோது, தமிழர்களின் விடுதலைப்போராட்டத்தை, அவர்களின் தீரங்களை, அவலங்களை,  அரச தரப்பின்  மனிதாபிமானமற்ற இனப்படுகொலைகளை சர்வதேச சமூகத்திற்கு எடுத்துக்காண்பிக்கக்கூடிய தமிழ்த்திரைப்படங்கள் ஒன்றுகூட ஏன் இதுவரையில் வெளிவரவில்லை. ? என்ற ஆதங்கம் வெளிப்பட்டது.

எத்தனையோ புலம்பெயர் தமிழர்களின் தென்னிந்திய திரையுலக தொடர்புகள், ஏன்… பொலிவூட், ஹாலிவுட் சினிமாக்களில்  அவர்களின் முதலீடுகள் இருப்பதான செய்திகள் பரவலாகியிருக்கும்  பின்னணியில் ஏன், ஈழ மக்களின் பிரச்சினைகளை யதார்த்த பூர்வமாக சித்திரிக்கும் உன்னத திரைப்படங்கள் வெளியாகவில்லை..?

இவ்வாறு நான் எண்ணியபோது, சில சிங்கள இயக்குநர்களினால் நெறியாள்கை செய்யப்பட்ட சிங்களத் திரைப்படங்களும் முன்னைய தமிழக திரைப்பட முயற்சிகளும் நினைவுக்கு வந்தன.

1984 ஆம் ஆண்டளவில் தமிழ் தகவல் நிலையத்தில்  ( T. I. C) அதன் நிறுவனர் சட்டத்தரணி கே. கந்தசாமி, இலங்கையில் 1983 வன்செயல்களில் தமிழ்மக்களுக்கு  இழைக்கப்பட்ட அநீதிகள் கொடுமைகளை சித்திரித்து உலகத்தரத்தில் ஒரு தமிழ்த் திரைப்படம் வெளியாகவேண்டும் என்று பெரிதும் விரும்பினார்.

தமிழ் தகவல் நிலையம்  ( T. I. C) சர்வதேசத்தின் ஊடகங்களில் வெளியான ஒரு படத்தின் பின்னணியை மூலக்கருத்தாகக் கொண்டு அந்த ஜூலை 1983 கலவரத்தின் அவலங்களை சித்திரிக்கலாம் எனவும்  அத்தகைய ஒரு படத்தை தயாரிப்பதற்கு ஒரு நிதி  நிறுவனம் உதவுவதற்கு தயாராகவிருப்பதாகவும் சொன்னார்.  அத்தகைய ஒரு வரலாற்று  உண்மைகள் நிறைந்த திரைப்படத்தை தமிழில் எடுத்து, பின்னர்  இந்திய மொழிகள் உட்பட பிறமொழிகளுக்கு மொழிமாற்றம் செய்து வெளியிடும் பட்சத்தில் இந்திய மக்களுக்கும் வெளிநாட்டினருக்கும் எமது பிரச்சினையின் தாற்பரியத்தையும்  சிங்களவரின் மனோபாவத்தையும்  தெரியப்படுத்தலாம் என்றும் கந்தசாமி அபிப்பிராயப்பட்டார்.

அதற்கான சில முன்னேற்பாடுகளுக்காக லண்டனிலிருந்து திரும்பும் வழியில் சென்னை சென்று, அங்கிருந்த தமிழர் தகவல் நிலையத்தின் இயக்குநர் சிவநாயகத்துடனும் மற்றும் சிலருடனும் சென்னை தமிழ் சினிமாத்துறையில் எனக்கு அறிமுகமிருந்த சிலருடனும் கலந்துரையாடினேன்.

அப்போது அங்கே தங்கியிருந்த சுதந்திரன் பத்திரிகை ஆசிரியர் கோவை மகேசன், கவிஞர் காசி. ஆனந்தன் ஆகியோரும் தமிழர் தகவல் நிலையத்துடன் தொடர்பிலிருந்தனர்.

இலங்கைத் தமிழரான  திரைப்பட இயக்குநர் பாலு மகேந்திராவை அணுகி அபிப்பிராயம் கேட்டபோது,  “ அது நல்லதோர் முயற்சி என்றும், மட்டக்களப்பில்  நடந்த சிறையுடைப்பு சம்பவத்தை பின்னணியாகக் கொண்டு தனக்கும் ஒரு திரைப்படம் தயாரித்து இயக்கும் எண்ணம் உண்டென்றும்  “ சொன்னார்.

எனினும்  அவருக்கு அப்போதிருந்த  தனிப்பட்ட பிரச்சினைகளினாலும் உடனடியாக எதனையும் பொறுப்பேற்க முடியாதிருப்பதாகவும் , இயக்குநர் கே. பாலச்சந்தரை அணுகலாம் என்றும்  புத்தி சொன்னார்.  

அப்போது பாலச்சந்தரும் அவரின் சில இந்திப்படங்களின் வெற்றிகளினால்  மிகவும் பிஸியாக,  வேறு இந்தி  திரைப்பட   தயாரிப்பாளர்களோடு  சில முயற்சிகளில் ஈடுபட்டிருந்தார். எனினும் கதைக்குரிய கருத்தாக்கங்களை உடனடியாகத் தந்தால், அதற்கேற்ப வசனங்களை எழுதமுடியும் என்றார்.

பின்னர் அவருடன் நடந்த சந்திப்புகளின்போது, இலங்கைத் தமிழர் பிரச்சினைகளின் தன்மை பற்றியும் தமிழ்நாட்டில் தஞ்சமடைந்திருக்கும் ஈழவிடுதலை இயக்கங்கள் மற்றும் அகதிகள் பற்றியும்  கருத்துப்பரிமாறினோம்.

அவையெல்லாம் அவர் அறியாததுமல்ல !

அத்துடன்  1983 கலவரத்தின்போது ஒரு தமிழ்  இளைஞனை நிர்வாணமாக்கிய  சிங்களவர்கள்  அவனை தீயிட்டுக்கொளுத்தும்  சம்பவம் இடம்பெற்ற புகைப்படத்தில் சிலர் சுற்றி நின்று பைலா பாட்டுப்பாடி ஆடும் காட்சியைப்பற்றியும்  நாங்கள் பேசினோம். அவரும் அதை அறிந்திருந்தார்.  

அக்காலப்பகுதியில் எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதியின் குருதிப்புனல் நாவலின் கதையைத்  தழுவி ஶ்ரீதர் ராஜன் இயக்கி வெளியிட்ட கண் சிவந்தால் மண் சிவக்கும் திரைப்படமும் வெளியாகியிருந்தது.

ஶ்ரீதர் ராஜன்,  நடிகர் காதல் மன்னன் ஜெமினி கணேசனின் ஒரு மகளை மணமுடித்த மருமகனுமாவார். அவருக்கும் தமிழர்களின் அவலங்கள் புரிந்திருந்தது.

குருதிப்புனல்  தஞ்சாவூரில் கீழ்வெண்மணி என்ற விவசாயக் கிராமத்தில் வாழ்ந்த ஏழை விவசாயிகள் பலர் உயிரோடு எரித்து கொல்லப்பட்ட  உண்மைச்சம்பவத்தை சித்திரிக்கும் கதையாகும்.   அந்தத் திரைப்படத்திற்கு இந்திய தேசிய அளவில் விருதும் கிடைத்திருந்தது.

வரலாற்று முக்கியத்துவம் மிக்க இச்சம்பவத்தை பின்னணியாகக்கொண்டு கண் சிவந்தால் மண் சிவக்கும் படத்தை எடுத்திருக்கும் ஶ்ரீதர் ராஜனையும் எமது முயற்சி தொடர்பாக சந்தித்தோம்.

இந்த பேச்சுவார்த்தைகளை சிவநாயகத்திடம் தெரிவித்தேன். அவர் கதைக்கான கருத்தாக்கத்தை கோவை மகேசனிடம் விடுவோம், அவர் விடுதலை இயக்கங்களோடும் பேசி, ஒரு மூலக்கதையை உருவாக்கட்டும் என எண்ணினார். அதனால் அந்தப்பொறுப்பையும் அவரிடமே விட்டிருந்தேன்.

அதன்பின்னர் இயக்குநர்கள் பாலச்சந்தர், ஶ்ரீதர் ராஜன் ஆகியோரிடமிருந்து தொடர்புகள் வந்தன. ஆனால், அவர்கள் கதை கேட்டும் ஒரு மூலக்கதையை கொடுக்கமுடியவில்லை.

சென்னையில் விடுதலை இயக்கப்போராளிகளுக்குள்  இருந்த சூழ்நிலையில் அவர்கள்,  எடுக்கவிருக்கும் திரைப்படத்தில்  தங்களை முன்னிலைப்படுத்தவேண்டும் என விரும்பியிருந்தனர். அது மட்டுமல்ல சிலரைப்பற்றி  சொல்லக்கூடாது என்றும் நிபந்தனை இட்டனர்.

அதனால் இறுதியில் எதுவுமே நடக்கவில்லை.  இந்நிலையில் நாம் அந்த முயற்சியில் ஈடுபட்டால் படம் வெளிவந்தபின்னர் துப்பாக்கிகள் எங்களை நோக்கியும் திரும்பலாம் என்று சிவநாயகம் அபிப்பிராயப்படவே, அந்தத் திட்டத்தையும் கைவிட்டோம்.

இவைகளை வேறு விதமாக சந்தித்த தமிழக திரைப்பட இயக்குநர்களிடம் சொல்லிவிட்டு ஒதுங்கிவிட்டோம்.

பின்னர் புன்னகை மன்னன் ( 1986 ) திரைப்படத்தை கே. பாலச்சந்தர் இயக்கி வெளியிட்டார். அத்திரைப்படம் தமிழர் – சிங்களவர் பின்னணியில் எடுக்கப்பட்டிருந்தாலும், ஈழத்தமிழ் மக்களின் அவலங்களை  சரியாக சித்திரிக்கவில்லை. ஜனரஞ்சகப்  படமாகவே அமைந்தது.

பின்னாளில் சென்னைக்குச் சென்றவேளையில் பாலச்சந்தரை சந்தித்து அதுபற்றிக்கேட்டதும்,  அதற்கு அவர்,  “ நீங்கள்   கேட்டவாறு கருத்தோட்டம் மிக்க கதையே எனக்கு வரவில்லை. இது  தமிழ்நாட்டில் பாதுகாப்பு தேடி வந்தவர்கள் மேற்கொள்ளும்  சம்பவங்களை ஒட்டி ஒரு தயாரிப்பாளருடன் பேசியதிலிருந்து எழுந்த கதை.  அத்துடன் அவர்  படத்திற்காக  போட்ட  முதலையும் பாதுகாக்கவேண்டியிருந்தது,  அதனால் ஜனரஞ்சக படமாக மாறியது என்றார். எனினும் கமல்ஹாசன் இலங்கை சென்றபோது கண்டகாட்சிகள் என சிலவற்றை கதையில் புகுத்தியபோது தணிக்கைக்குழு அவற்றை அனுமதிக்கவில்லை என்றார்.

                                                                                                                                                  “ தான் அதில் சொல்லவிழைந்த கருத்து வன்முறை பயனற்றது என்பதும்,  உயிருக்குப் பாதுகாப்புத்தர அடைக்கலம் தந்தவர்களை  கொச்சைப்படுத்தாதீர்கள்  என்பதும்தான். “  இந்தக்கருத்து தமிழ்நாட்டில் புத்திஜீவிகள் மட்டத்தில் ஈழ விடுதலைப் போராளிகள்  பற்றி எத்தகைய எதிர்வினைகளை ஏற்படுத்தியிருக்கின்றன என்பதை நீங்களே பார்க்கலாம்,  அதனைத்தான்  நானும்   சொல்லியிருக்கின்றேன்  “ என்பதுதான் அவரது வாதம்.   

பின்னாளில் இயக்குநர் மணிரத்தினம் சுஜாதாவின் வசனத்தில் கன்னத்தில் முத்தமிட்டால்  ( 2002 ) என்ற திரைப்படத்தை எடுத்திருந்தார்.

 

அதில் தமிழ் மக்களின் இடப்பெயர்வும் அவர்கள் தொலைத்தவற்றின் உணர்வுகளும் தொலைக்க விரும்பாத உணர்வுகளும் சொல்லப்பட்டிருந்தன.

இந்தப்பின்னணிகளுடன்தான் நாம் இலங்கையில் தயாரிக்கப்பட்ட சிங்களத் திரைப்படங்களை அவதானிக்கவேண்டியுள்ளது.

அவற்றை எடுத்த சிங்கள புத்திஜீவிகள், இனப்பிரச்சினையின் முரண்பாடுகளையும் அனைத்து தரப்பிலும் அப்பாவிப் பொதுமக்கள் பாதிக்கப்படுவதையும் சித்திரித்தனர். அத்தகைய சிங்களத் திரைப்படங்கள் பலவிருந்தாலும் இச்சந்தர்ப்பத்தில் எனது நினைவுக்கு உடன்வரும் சில குறிப்பிடத்தகுந்த திரைப்படங்கள் பற்றியும் இங்கு தெரிவிக்கலாம்.

சுனில் ஆரியரத்னவின்  சருங்கலே ( பட்டம் – Kite  )  , காமினி பொன்சேக்காவின்  கொட்டி வல்கய ,  சோமரத்ன திசாநாயக்கவின்  சரோஜா ,  பிரசன்ன விதானகேயின் புரகந்த கலுவர, மற்றும்  இறமதியம, சந்தோஷ் சிவனின் டெரரிஷ்ட்  முதலான திரைப்படங்கள் கவனத்திற்குரியன.

( சரோஜா )

இவற்றில் முதலாவதாகக்  குறிப்பிட்ட சருங்கலே திரைப்படத்தின் கருத்தாக்கங்களுக்காக அதில் நாயகனாக நடித்த சிங்கள திரையுலகின் பிரபல நட்சத்திரம் காமினி பொன்சேக்காவுக்கு நானும் நண்பர் சந்திரகாசனும் அந்தப் பாத்திரப்படைப்புக்கு மெருகேற்ற உதவினோம்.

( சருங்கலே )

இத்திரைப்படத்தின் கதை 1958 கலவரத்தின் பின்னணியில் நகர்கிறது.

அந்தக் கலவரத்தினால் இனவுறவுகள் எவ்வாறு நலிவடைகின்றன என்பதையே  சருங்கலே திரைப்படம் சித்திரித்தது. இது சிங்களவர்களினால் எடுக்கப்பட்ட திரைப்படமாகவிருந்தாலும் பெரும்பாலான காட்சிகள் இலங்கை வடமராட்சியில் கரவெட்டிப் பிரதேசத்தில் எடுக்கப்பட்டன.  அத்துடன் தமிழ்வசனங்களும் இடம்பெற்றன. யாழ்ப்பாண சராசரி தமிழரான நடராஜா என்ற  ஒரு அரசாங்க ஊழியரின் கதைதான் சருங்கலே.  அதில் வடபுலத்தில் புரையோடிப்போயிருக்கும்  சாதிப்பிரச்சினையினால்  மனம் துவண்டு,  கொழும்புக்கு இடமாற்றம் பெற்றுவரும் நடராஜா               ( காமினி பொன்சேக்கா ) அரசாங்க திணைக்களம் ஒன்றில் சிங்கள ஊழியர்கள் மத்தியில் பணியாற்றுகிறார்.

அத்துடன் ஒரு சிங்கள குடும்பத்தினர் வசிக்கும் வீட்டருகே தனக்கும் தங்குவதற்கு வசிப்பிடம் தேடிக்கொண்டு, அந்த வீட்டுக்குழந்தையுடனும் சிநேகிதமாகின்றார்.

அந்தக்குழந்தையின் கண்களின் ஊடாகவே அக்கால கட்டத்தின் இனமுரண்பாடுகளும் திரைமொழியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. அவர் சிங்களக் குழந்தைக்கு செய்து கொடுத்த பட்டத்தை காற்றில் பறக்கவிட்டு, அவள் மகிழ்ந்தபோது நூலறுந்து பட்டம் கைக்கெட்டாமல் போகிறது. குழந்தை அதனை பிடித்துத்தாருங்கள் எனக்கேட்க,“ அது தூர தூரப் போகிறது என்று சொல்லி, இனவுறவுகளும் எவ்வாறு தூர தூரப்போகிறது  “  என்று முத்தாய்ப்பு வைத்தார் .

காமினி பொன்சேக்காவின் சிறந்த நடிப்பிற்காக இலங்கையில் தேசிய  சரசவிய விருதும் கிடைத்தது. அத்துடன் சருங்கலே திரைப்படம் நாடாளுமன்றத்திலும் விதந்து பேசப்பட்டது.

அதன் பிறகு,  நீண்ட இடைவெளிக்குப்பின்னர் வெளிவந்த சோமரத்ன திஸாநாயக்காவின் சரோஜா,  இனவிடுதலைப்போராட்டம் தொடங்கப்பட்டு,   1983 ஆண்டு நடந்த இனக்கலவரத்திற்குப்பின்னர் வெளிவந்த  சிங்களத் திரைப்படம். இலங்கையில் மட்டுமன்றி அவுஸ்திரேலியா, கனடா உட்பட ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகள் எங்கும் திரையிடப்பட்டு தமிழர்களாலும் பார்க்கப்பட்ட படம்.

தமிழ் – சிங்கள பெண் குழந்தைகள் இருவரை பிரதான பாத்திரமாக்கி இதன் கதை நகர்ந்தது. வன்முறையில் ஈடுபட்ட இளைஞர்களின் பார்வையிலும் இருவேறு மொழிபேசிய குழந்தைகளின் உணர்விலும் இத்திரைப்படம்  மானுடநேய செய்திகளை பேசியது.

புரகந்த கலுவர  (  Death on a Full moon day ) என்ற சிங்களத் திரைப்படம், இனவிடுதலைப்போராட்டத்தை முறியடிப்பதற்காக சிங்கள அரசாங்கம்   சம்பளத்திற்கு அமர்த்தி இராணுவ சேவைக்காக  தென்னிலங்கை சிங்கள இளைஞர்களை  இணைக்கும் கதையையும் சொல்லி, அவர்கள் போரில் கொல்லப்படும்போது அவர்களின் பெற்றோர்களை அரச பாதுகாப்புத்துறை எவ்வாறு ஏமாற்றிவிடுகிறது என்பதையும் யதார்த்தம் குன்றாமல் சித்திரித்திருந்தது.

குடும்ப வறுமையை போக்குவதற்காக சிங்கள இளைஞர்கள் இராணுவத்தில் இணைவதையும்  போர்க்களத்தில் அவர்கள் கொல்லப்படும்போது,  சடலமாக அனுப்ப நேர்கையில் அவர்களின் பெற்றோர்கள் எவ்வாறு ஏமாற்றப்படுகிறார்கள் என்பதையும் இத்திரைப்படம் வெளிப்படையாகச்  சொன்னது.

 சந்திரிக்கா குமாரணதுங்க பதவியிலிருந்த காலப்பகுதியில் போர் உச்சமடைந்திருந்த வேளையில் இராணுவத்தினரை இத்திரைப்படம் சோர்வடையச்செய்துவிடும் என்பதால்  திரையரங்குகளிலிருந்து நீக்கப்பட்டது.

தென்பகுதி கிராமம் ஒன்றில் வாழும்  கண்பார்வை இழந்த ஏழைத்தந்தையின் மகன்,   வீட்டின் ஏழ்மையை போக்குவதற்காக இராணுவத்தில் சேர்ந்து போர்க்களம் சென்றுவிடுகிறான். ஆனால், அவனை திரைப்படத்தில்   காண்பிக்காமலேயே இத்திரைப்படத்தின் கதை தயாரிக்கப்பட்டிருந்தது.

குடும்ப கஷ்டத்தினால் அவனது தந்தையும் இரண்டு சகோதரிகளும் வசிக்கும் குடிசை அமைந்த சிறுதுண்டு நிலம் உள்ளுர் கிராம சேவையாளரிடம் அடமானம் வைக்கப்பட்டிருக்கிறது.

இராணுவத்திற்குச்சென்ற மகன் போரிலே கொல்லப்பட்டு, உடல் சிதறி சின்னாபின்னமாகியிருப்பதனால்,  உடலை கூட்டி அள்ளி சவப்பெட்டியில் வைத்து கொண்டுவரப்படுவதாகவும்.  அத்துடன் அதனை திறக்கமுடியாதவாறு சீல் செய்யப்பட்டிருப்பதாகவும் சொல்லியே அந்த சவப்பெட்டி  இராணுவ வாகனத்தில் கிராமத்துக்கு எடுத்துவரப்பட்டு ஒப்படைக்கப்படுகிறது.

ஒரு மழைக்காலத்தில் வரும் அச்சடலம் இருக்கும் சவப்பெட்டியையும் அந்த குடிசை வீட்டின் ஒழுக்கினால் இடம்மாற்றிவைக்கவேண்டியும் நேர்கிறது. இதன் ஊடாகவும் அக்குடும்பத்தின் ஏழ்மையை இயக்குநர் பிரசன்ன விதானகே சித்திரித்திருப்பார்.

சவப்பெட்டி திறக்கப்படாமலேயே மயானத்தில் அடக்கமாகிறது.  இறந்த மகனுக்காக அக்குடும்பத்திற்கு வரவேண்டிய இழப்பீட்டுத் தொகை ஒரு இலட்சம் ரூபாவைபெற்றால், அந்த வீட்டு நிலத்தின் அடமானப்பணத்தை வட்டியுடன் மீளப்பெற்றுவிடலாம் என்று கிராமசேவகர் நினைத்து வயோதிப தந்தைக்கு அழுத்தம் கொடுக்கிறார்.

அதே சமயம் அந்தப்பணம் கிடைத்தால் பாதியில் நிற்கும் தனக்குத்தந்த சீதன வீட்டின் கட்டுமான வேலையை பூர்த்திசெய்துவிடலாம் என்று ஒரு மகளின் கணவன் எதிர்பார்க்கின்றான்.

எனினும் மகன் போரில் கொல்லப்பட்டிருக்கமாட்டான் என்று அந்த முதிய தந்தையின் உள்மனம் நினைக்கிறது. அதற்கு அவனது சடலம் வந்த சவப்பெட்டி அங்கு வந்து  அடக்கமும் முடிந்த பின்னர் தபாலில் வரும் அவனது கடிதமும் ஒரு முக்கிய காரணமாக விளங்குகிறது.

கையொப்பமும்  இடத்தெரியாத தந்தையின் கைநாட்டுத்தான் குறிப்பிட்ட இழப்பீட்டுத்  தொகைக்கான விண்ணப்ப படிவத்திற்குத்  தேவைப்படுகிறது. ஆனால், மகன் இன்னமும் உயிருடன்தான் இருப்பான் என்ற முதியவரின் திடமான நம்பிக்கை அந்த படிவத்தை புறக்கணிக்கிறது.

குடும்பத்தினரதும் கிராமசேவகரினதும் நச்சரிப்பினை பொறுக்கமுடியாத அந்த  முதிய குடும்பத்தலைவன் ஒரு நாள் பௌர்ணமி இரவின் முடிவில் அதிகாலை   மண்வெட்டியுடன் சென்று புதைகுழியை தோண்டுகிறார்.

இதனைக்கேள்வியுற்று குடும்பத்தினரும் கிராமவாசிகளும் அவ்விடத்திற்கு ஓடிவருகின்றனர்.  அந்த முதியவரின் முட்டாள்தனமான செயல் என்று அவர்கள் நினைத்தாலும், இறுதியில் எதற்கும் புதைகுழியைத்தோண்டி சவப்பெட்டியை வெளியே எடுத்து திறந்து பார்க்க முயலும்போது, அங்கே இரண்டு வாழை மரக்குற்றிகளும் சில கருங்கற்களும் காணப்படுகின்றன.

அந்த முதியவர் தான் எடுத்துவந்த மண்வெட்டியுடன் மௌனமாக திரும்பிச் செல்கிறார். 

முதியவராக நடிக்கும் ஜோ அபே விக்கிரமவின் நடிப்பு சிகரத்தை தொடுகிறது.  அதிகம் வசனம் இல்லாத அதே சமயம் யதார்த்தம் குன்றாத திரைப்படம்தான்  புரகந்த கலுவர  (  Death on a Full moon day )

இவ்வாறு  வெளிவந்த சில திரைப்படங்களிற்குப் பின்னர் வெளிவந்த மேதகு திரைப்படத்தை பார்த்தபோது,  இலங்கையில் நீடித்த போர் அவலங்கள் நந்திக் கடல்வரையில் தொடர்ந்தும் அதற்கு முன்னரான காலப்பகுதியில் நேர்ந்த தமிழின படுகொலைகள், சித்திரவதைகள், பாதுகாப்பு முகாம்களின் அவஸ்தைகள், அகதிமுகாம்களின் துயரங்கள்… என்று எத்தனை எத்தனை ஏராளமான கதைகள்  எம்மவரிடம்  இருக்கின்றன. அவைகள் எல்லாவற்றையும் கூட  வரலாற்றின் அவலங்கள், துன்பங்கள், உணர்வுகள், மனிதநேயங்கள்  என்று ஏன் வெளிப்படுத்தக்கூடாது என்று எண்ணினேன்.

இயக்குநர்  ஸ் ரீஃபன் ஃபீல்ட்பேர்க்,   Schindler’s List  ( 1993 ) என்ற திரைப்படத்தை எடுத்து , யூத மக்கள் நாஜி ஜேர்மனியரின் சித்திரவதை முகாம்களில் பட்ட அவலங்களை காண்பித்து சர்வதேச ரீதியாக மக்களின் மனச்சாட்சியை உலுக்கிவிட்டதை  நன்கு அறிவோம். அந்தப்படத்திற்கு பல ஒஸ்கார் விருதுகள் கிடைத்தன.

அப்பொழுது  பல வருடங்களுக்கு முன்னர்  நாம் நினைத்த படத்தைப் பற்றி யோசித்தேன். அந்த நாட்களில் கந்தசாமியே மறைக்கப்பட்டுவிட்டார். நாம் எதிர்பார்த்தது போலில்லாதுவிட்டாலும் எமது அவலங்களை துல்லியமாக சித்திரிக்கத்தக்க திரைப்படங்களாவது எதிர்காலத்தில் வெளிவருமா?

—0—

raveendran50@yahoo.com.au

Series Navigationபுதல்விக்கு மடல்இந்திய அணு மின்சக்தி உற்பத்தித் திறமை 2031 ஆண்டுக்குள் 22,480 MW ஆற்றலாய் விரிவு பெறும்.
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *