மொழிவது சுகம் 2017 நவம்பர் 18 : ரஷ்யப் புரட்சி ஒரு நூற்றாண்டு

This entry is part 14 of 14 in the series 19 நவம்பர் 2017

russian

(France – Culture என்ற பிரெஞ்சு வானொலி  நவம்பர் மாதம் முதல் வாரத்தில் நான் கு நாட்கள் ஒரு நாளைக்கு 50 நிமிடம் என்ற கணக்கில் ரஷ்யப் புரட்சியின் நூற்றாண்டினை முன்னிட்டு சிறப்பு ஒலிபரப்பை ஏற்பாடு செய்திருந்த து, அதைக் கேட்டதின் எதிரொலி)

 

ரஷ்யப்புரட்சிக்கு  வயது   நூறு ஆண்டுகள்.  புரட்சி என்ற சொல்லுக்கும் தள்ளாடும் வயது. இன்றைக்கு 1917ஆம் ஆண்டு புரட்சியையும், அதனை முன்னின்று   நடத்திய ஹீரோக்களையும் இன்றைய ரஷ்யாவில் பொதுவுடமைஅபிமானிகளைத் தவிர பிறர் நினைவு கூர்வதில்லை. ரஷ்யப் புரட்சி வைபவ நினைவூட்டல் வேண்டாமென உத்தியோகபூர்வமாக ரஷ்யாவில் அரசு அறிவித்த அன்றே, லெனின் கிராடு இனி எப்போதும்போல செயிண்ட் பீட்டர் பர்க் என அறிவித்த அன்றே, எப்போது ஸ்டாலின் ரஷ்யப் புரட்சி தினத்தை தன்னை முன்னிலைப் படுத்தும் தினமாகப் பார்க்கப் பழகினாரோ அன்றே ரஷ்யப் புரட்சி மறக்கப்பட்டுவிட்டது. புரட்சி  தினத்தில், லெனின் அருங்காட்சியகத்தை பார்க்க மைல் கணக்கில் வரிசையில்  நின்ற முன்னாள் சோவியத் யூனியன் காலம் இன்றில்லை. அதிபர் புட்டின் லெனினை அண்மையில் கடுமையாக விமர்சித்திருக்கிறார். இன்றைய இரஷ்ய இளைஞர்கள், லெனினை ஏற்றுக்கொள்ளத் தயார், ஆனால் ஸ்டாலினை ஏற்கத் தயாரில்லை.போல்ஸ்விக்குகளால் கொலையுண்ட ஜார் மன்னர்  இரண்டாம்  நிக்கோலஸ் இரஷ்ய நாட்டு கிழக்கு மரபுவழி கிறித்துவ திருச்சபையினரால் புனிதராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். இனி அவர் புனிதர் நிக்கோலஸ். ரஷ்யர்களில் 28 விழுக்காட்டினர் திரும்பவும் ஜார் மன்னர் ஆட்சிக்கு ஆதரளிக்க தயார் என்கிறார்களாம்.

 

இந்த நிலைக்கு யார் காரணம் ? 

சிலர் மார்க்ஸ்ஸும் காரணம் என் கிறார்கள். கார்ல் மார்க்ஸ்  நவீன உலகின் மிகப்பெரிய சிந்தனாவாதி என்பதில் மாற்று கருத்து இருக்கமுடியாது. ஒரு பூர்ஷ்வாக இருந்த போதிலும் சம காலத்திய  அறிஞர்கள் அலட்சியம் செய்த இங்கிலாந்தின் தொழிற்புரட்சி விளைவுகளில் அவருக்கிருந்த அக்கறையையும்; உழைத்தும் வறுமையில் உழன்ற ஆலைத் தொழிலாளர்களின் கொடூர வாழ்க்கைதன்னில்  அவர் கொண்டிருந்த பரிவையும்  உதாசீனப்படுத்திவிடமுடியாது. ஆனாலும் கார்ல்மார்க்ஸின் மூலதனம் ஒரு முழுமையான  நூல் அல்ல, அவர்காலத்திய மேற்குலக குறிப்பாக இலண்டன் தொழிலாளர்கள் பிரச்சினைகளின் அடிப்டையில் எழுதப்பட்டதென்ற உண்மை ஒரு பக்கம். தொழிலாளர் வர்க்கம், தொழில் முதலீட்டாளர்களால் மட்டுமிமின்றி,  சமூகம், காலம்காலமாய் ஏற்றுக்கொண்ட நெறிமுறைகள், சமயம், மனிதரின் இயற்கைக் குணங்கள் என்று பல முதலாளிகளால்  சுரண்டப்பட்டவர்கள் என்பது இன்னொரு பக்கம். அனைத்திற்கும் மேலாக மூலதனம் யாருக்காக எழுதப்பட்ட தோ, அந்த அடித்தட்டுமக்களோ, எந்திரம் போல உழைக்கும் பாமர மக்களோ புரிந்துகொள்ளக் கூடியதல்ல என்ற உண்மை. உழைப்பை அதிகம் அறிந்திராத, மேடை, எழுத்து, அரசியல் என்று இயங்கிய, இயங்கும் அறிவு ஜீவிகள், அரசியல்வாதிகள் ஆகியோரை மட்டுமே பெரிதும்  நம்பும் சிந்தனைக் களஞ்சியம் அது. பிரெஞ்சில் மொழி பெயர்க்கப்பட்ட போது, விளங்கிக் கொள்ள முடியாத பகுதிகளை எளிமை படுத்தப்பட்டதாகவும், பல பல பகுதிகளை வேண்டாமென ஒதுக்கியதாகவும் சொல்வதுண்டு.  இன்று உலகின் பலபகுதிகளிளும் புரிந்துகொள்ளபட்டுள்ள மார்க்ஸியம் அந்தந்த பிரதேச மொழிகளில் புரிந்துகொள்ளபட்ட மார்ல்ஸியமேயன்றி, மார்க்ஸ் ஜெர்மன் மொழியில் எழுதிய மார்க்ஸியம் இல்லை, என்ற விமர்சனமும் உண்டு. ரஷ்யாவில் மார்க்ஸியம் பொய்த்துபோனதற்கு இப்படியொரு காரணத்தையும் வைக்கிறார்கள்.

ரஷ்யப் புரட்சி மறக்கப்பட வேறுகாரணங்களென்ன ?

வரலாற்றில் முதன் முறையாக பொதுவுடமை ஆட்சியை லெனின் பெட்ரோகிராட் என ரஷ்யமொழியில் அழைக்கபட்ட செயின்ட் பீட்டர்ஸ் பர்கில் 1917 நவம்பர் 7 ல் கொண்டுவந்தார். மார்க்ஸ் மொழியில் சொல்வதெனில் ப்ரொலெட்டேரியன் புரட்சியினால் அடைந்தது. பிரெஞ்சு பஸ்த்தி சிறை உடைப்பு நிகழ்வோடு ஒப்பிடப்படும் ‘குளிர்கால அரண்மனை மீட்பு ‘, வெகுசனக் கொந்தளிப்பிற்கு சான்றாக முன்வைக்கப்பட்டது.  ஜார்மன்னர்களில் ஈவிரக்கமற்ற ஆட்சியும், மாற்றத்தை கொண்டுவர நினைத்த ஜனவாயகவாதிகள் பலவீனப்பட்டிருந்ததும், புரட்சியின் வெற்றிக்கு உதவின என்பதை மறந்துவிடமுடியாது. உலகெங்குமுள்ள காம்ரேட்டுகள் ரஷ்யப் புரட்சியை மறக்காமல் இருப்பதைப்போலவே, ரஷ்யக் காம்ரேட்டுகளுக்கும் புரட்சிபற்றிய  நோஸ்டால்ஜியாக்கள் நிறையவே இருக்கின்றன. பெருவாரியான ரஷ்யர்களுக்கு  ரஷ்யப் புரட்சி  சகோதர யுத்தத்திற்கு வழிவகுத்த து என்ற ஆதங்கம் இருக்கிறது, காரணம் உயிர்ப்பலிகளை அவர்கள் மறக்கவில்லை. கோதுமை, பெட் ரோல் தொழில் வளர்ச்சி ஆகியவற்றில் பிற ஐரோப்பிய  நாடுகளைவிட மேம்பட்டிருந்த ரஷ்ய நாடு 1922லிருந்து பின்னடைவைச் சந்திக்க லெனின் காரணமானார் என்பது மற்றொரு குற்றச்சாட்டு. ஒரு கட்சி ஆட்சிமுறை, தீவிர மார்க்ஸியக் கோட்பாடு போன்றவை  உடமைப் பறிப்புக்கு வழிவகுத்து அவர்களை அனாதைகளாக தெருவில் நிறுத்தியதும், அதிகாரத்தைக் கட்டிக் காப்பதில் செலுத்திய அக்கறையை உற்பத்தியில் காட்டாததும்  நாட்டைப் பாதித்தது.

அடுத்த தாக போல்ஷ்விக் தலைவர்கள் சொத்துடமையாளர்களை மட்டுமல்ல, கல்வியாளர்கள், அறிவுஜீவிகள், அறிவியல் அறிஞர்கள், பொறியியல் வல்லுனர்கள் ஆகியோரை பிற நாடுகளுக்கு புகலிடம் கேட்டு ஓடவைக்கும் சூழ் நிலையை ஏறோடுத்தினார்கள். பாதிக்கப் பட்ட து சோவியத் யூனியன் அன்றி அந்த பிற நாடுகள் அல்ல.

நிர்வாகப் பொறுப்பிற்கு வந்தவர்கள்,  தலைவர்களுக்கு விசுவாசமாக இருந்தவர்கள், கட்சியின் ஆதரவைப் பெற்றிருந்தவர்கள் அல்லது அப்படி நடித்தவர்கள், அவர்கள் கல்வி, திறமை அடிப்படையில் நியமனம் செய்யப்படவில்லை.

மக்களால் தேர்வுசெய்யபட்ட பிரதி நிதித்துவ சபையை  ஆரம்பத்திலேயே (1918)  கலைத்து, தாங்கள் மக்கள் விருப்பத்திற்கு எதிரானவர்கள் என்பதை த் தெள்ளத் தெளிவாகக் கூறியிருந்தார்கள்.  தங்கள் வாக்குரிமையைத் திரும்பப் பெற 1991வரை ரஷ்யர்கள் காத்திருந்தனர்.  புரட்சியின் எதிரிகள் என்ற பெயரில் தங்களை விமர்சித்தவர்களைத் தண்டிக்க, கொல்ல,  NKVD  என்ற காவல்துறை, மற்றும்  செம்படை வீரர்கள் துணையுடன் நட த்திய அராஜகத்தையும் ரஷ்யர்கள் மறந்தவர்களில்லை. ஸ்டாலின் ஆட்சி நாஜிகளின் ஆட்சிக்கு எவ்வித த்திலும் குறைந்த தல்ல. இறுதியாக ஜெர்மன் ஜன நாயக சோஷலிஸ்டுகள், வைமர் குடியரசு இரண்டிற்கும் எதிராக லெனினும் ஸ்டாலினும் எடுத்த நடவடிக்கைகள் மறைமுகமாக இட்லர் ஜெர்மன் அரசியலில் களமிறங்க காரணம் ஆயிற்று. பிறகு என்ன  நடந்த து என்பதை  நாம் அறிவோம். இரண்டாம் உலகப்போரில் பல்லாயிரக்கணக்கான ரஷ்யர்கள் கொல்லப்பட்டனர். இத்துடன் முடிந்ததா என்றால் இல்லை, கிழக்கு ஐரோப்பிய  நாடுகளுக்கு  நாஜிகளிடமிருந்து விடுதலை என்ற பெயரில், ஸோவியத் மயமாக்கலில்  ரஷ்யா இறங்கியதன்பலனாக சமேலும் பல ஆயிரக் கணக்கான ரஷ்யர்கள் கொல்லப்பட்டனர். அதை மேற்கு நாடுகளும் வேடிக்கைப் பார்த்தன. ஜெர்மன் பாசிசத்திற்கு எதிராக  தோள்கொடுத்த சோவியத் யூனியன் எத்தனை ஆயிரம் பேரைக் கொன்றால் என்ன ? என்பது மேற்கு  நாடுகளின்  நிலை.

 

இறுதியின் ரஷ்யப் புரட்சி உலக  நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது என்ன ?

மார்க்ஸியத்தை பெர்லின் சுவர் இடிபாடுகளில் தவறவிட்டு லெனினிய  ஸ்டாலினிய சர்வாதிகாரச் சிந்தனையை, தங்கள் எதிரே தலைநிமிர்ந்தவர்களையெல்லாம் கொல்லும் கலையை, கிழக்கு ஐரோப்பிய  நாடுகளின் தலைவர்கள் சிலருக்கும், மாவோவின் சீனா,  போல் போட்டின் கம்போடியா, ஆப்ரிக்கா, தென் அமெரிக்கா, மியான்மார், துருக்கி, எகிப்தென ஏற்றுமதி செய்தவர்கள் போல்ஷ்விக் தலைவர்கள். ஜெர்மன் மொழியிலிருந்து ரஷ்ய மொழிக்குப்போன மார்க்ஸியம் பிழையாக புரிந்துகொள்ளப்பட யார்காரணம் ? நிச்சயம் மார்க்ஸாக இருக்க முடியாது.

Series Navigationவானத்தில் ஒரு…
author

நாகரத்தினம் கிருஷ்ணா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *