யாதுமாகி நின்றாய்….. !

This entry is part 17 of 26 in the series 17 மார்ச் 2013

 

மலைகளின் இளவரசி கொடைக்கானல். தமிழகத்தில் தேனிலவுத் தம்பதிகளுக்காகவே உருவாக்கப்பட்ட இயற்கை வரம். கோக்கர்ஸ் வாக், கொடைச்சாலையின் தென் புறம், செங்குத்தான சரிவுகளின் விளிம்பில் அமைக்கப்பட்டுள்ள், 1கி.மீ தொலைவுள்ள குறுகிய நடைபாதையின் இரு புறமும் இயற்கை அன்னையின் இன்ப ஊற்று உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும். பனி மூட்டம் இல்லாத நாட்களில் தென்புறம் டால்பினின் மூக்கு, பாம்பர் பள்ளத்தாக்கு பெரியகுளம் மற்றும் மதுரை நகரின் பறவைக்கண் காட்சி, என அனைத்தும் இன்னொரு உலகிற்கே இட்டுச்செல்லும்.

 

”அனாமிகா, என்னம்மா.. பலத்த யோசனையோ?”

 

“ம்ம்ம்ம்.. “

 

அனாமிகாவின் இது போன்ற மௌனமொழி இந்த 10 வருடத்தில் பழகித்தான் போய்விட்டது. அவளுடைய இயற்கையான குணத்தையே முழுவதுமாக மாற்றி, முடக்கிப்போட்ட அந்தக் கொடிய விபத்து நினைக்கவே அச்சமூட்டியது. இந்த கொடைக்கானல்தான் தங்கள் வாழ்வின் எத்தனை, எத்தனை பரிமாணங்களைப் பார்த்துவிட்டது என்ற எண்ணமே ஆச்சரியமாக இருந்தது.

 

***

 

புதுத்தாலியின் பசுமை மஞ்சள் நிறம், காலை இளங்கதிரொளியில் பளபளக்க, கணவனின் கையோடு, கை கோர்த்துக்கொண்டு, தோளில் லேசாக சாய்ந்து கொண்டு வெள்ளி நீர்வீழ்ச்சியின் சாரலில் சுகமாக நனைந்து, கிறங்கிப்போய்க் கிடந்தாள் அனாமிகா..

 

“அனாமிகா, நீ இதுக்கு முன்னாடி எப்ப கொடைக்கானல் வந்த”

 

“ம்ம்ம்… கடைசியா ஸ்டேட்சில இருந்து அக்கா வந்திருப்ப, போன வருசம் எல்லோருமா வந்திருந்தோம்”

 

“நாம் இப்ப எவ்வளவு உயரத்துல இருக்கிறோம் தெரியுமா? கடல் மட்டத்திலிருந்து 5900 அடி உயரத்துல இருக்கோம்… நினைக்கவே மலைப்பா இருக்கு இல்லே”

 

“நான் அதுக்கும் மேலே இருக்கேன்ப்பா……”

 

“என்ன சொல்றே நீ.. எப்படி நீ மட்டும் அதுக்கும் மேல இருப்பியாம்….”?

 

“ம்ம்ம்.. என்னை மாதிரி நீங்களும் அதுக்கு அந்த உலகத்துக்குள்ளேயே போகணுமாக்கும். அப்பத்தான் புரியும் உங்களுக்கும்”

 

“அது சரி, நீ லிட்டரச்சர் ஸ்டூடண்ட் இல்லையா.. அப்படித்தான் பேசுவே.. செல்லியும், கீட்சும் ஷேக்ஸ்பியரும் படிச்சு, கற்பனை உலகத்துல வாழறவங்களாச்சே”

 

“இந்த நீர்வீழ்ச்சி 55 மீட்டர் உயரம் இருக்காம்.. பாரேன் போட்டிருக்காங்க..” என்று போர்டை காட்டினான் கணவன் மனோகரன்…

 

போர்டைப் பார்க்கவும், கணவன் சொல்வதைக் கேட்கும் மனநிலையிலும் இல்லை அவள் என்பதை உணரும் நிலையில் இல்லாத கணவனோ மேலே பேசிக்கொண்டே போக, “மனோ” போதும்ப்பா…. என்று அழகிய பிங்க் வண்ண நெயில் பாலிஷ் பூசிய வெண்டை விரலால் அவன்  இதழைப் பொத்தினாள்.

 

ப்ரயண்ட் பூங்காவில் வகை வகையான, வண்ண, வண்ண ரோஜா மலர்களைக் கண்டதும், அதன் அழகில் மயங்கி  நின்றிருக்கும் நேரம், அங்கிருந்த 150 வயதான போதி மரம் பற்றி அதிசயமாகப் பேசியவனின் வார்த்தைகள் ஏதும் காதில் விழவேயில்லை அவளுக்கு. 20 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடந்த அந்தப் பூங்காவைப் போன்றே அவளுடைய மனமும் வான எல்லையில், பரவசமாக மிதந்து கொண்டிருந்தது.

 

இரவு சுற்றிவிட்டு வெகு நேரங்கழித்து ஓட்டல் அறைக்கு வந்தவர்கள் மிகவும் களைப்பு மேலிட அசந்து தூங்கப் போகும் போது, கணவனின் அன்புக் கட்டளையாக,

 

“அனாமிகா, நாளை காலை 5.30 மணிக்கெல்லாம் எழுந்து கோக்கர்ஸ் வாக்கில் வாக்கிங் போக வேண்டும். எனக்கு தினமும் 5.30 மணிக்கு வாக்கிங் போவது பழக்கம், தெரியுமில்லையா…” என்றது அரைகுறையாகத்தான் காதில் விழுந்தது. “ம்ம்ம்..” என்று சிணுங்கிக் கொண்டே கம்பளிக்குள் இதமாக, கணவனின் அணைப்பில் ஆனந்தமாக உறங்கிவிட்டாள்.

 

காலை சுள்ளென்று வெயில் முகத்தில் அடிக்க, புரண்டு படுத்தவள், அருகில் கணவன் இல்லாதது கண்டு, பாத்ரூமில் இருக்கலாம் என திரும்பவும் தூங்க முயற்சித்தாள். வயிறு பசியில் குடைய ஆரம்பித்த போதுதான், இரவு  சரியாக சாப்பிடாதது நினைவிற்கு வந்தது.; சூடாக ஒரு கப் காஃபி சாப்பிட்டால் தேவலாம் போல இருந்தது. மெல்ல எழுந்து மணியைப் பார்த்தவள், “அட 8 மணி ஆகிவிட்டதே” என்று ஆச்சரியமாக வாக்கிங் போக வேண்டும் என்று சொன்ன மனோ ஒரு வேளை தான் மட்டும் கிளம்பிப் போயிருப்பாரோ என்று யோசித்து மெதுவாக எழுந்தவள் சுற்று முற்றும் பார்த்து, கண்ணாடி வைத்த பெரிய சன்னலின் மொத்தமான திரைச்சீலையை விலக்கி, மெல்லிய சூரிய கிரணங்கள் சுள்ளென்று இதமாக தைத்ததை சுகமாக அனுபவித்து நின்றாள். மெல்லத் திரும்பிப் பார்த்தவள் பாத்ரூம் கதவும் லேசாக திறந்திருக்க, கணவன் வாக்கிங்தான் போயிருக்க வேண்டும் என்று புரிந்து கொண்டு கேண்டீனில் போன் செய்து காஃபி வரவழைத்து குடித்துக் கொண்டிருக்கும்போது கதவைத் திறந்து கொண்டு மனோகரன் உள்ளே நுழையும்போதே, முகத்தில் எள்ளும், கொள்ளும் வெடிக்க,

 

“நான் விடிகாலம் 5.30 மணிக்கு வாக்கிங் போக வேணுமின்னு சொன்னேனே, நீ எழுந்திருக்கவே இல்லையே.. ?” என்று சிடுசிடுத்தபோது, சுள்ளென்று கோபம் வந்தது அனாமிகாவிற்கு..

 

“ அவ்வளவு சீக்கிரம் எழுந்து போக வேண்டும் என்று என்ன சட்டமா?. சுகமா தூங்கிட்டிருக்கும்போது இந்தக் குளிர்ல எழுந்து அப்படி வாக்கிங் போகணுமா.. 8 மணிக்கு மேல போனா என்ன?”

 

“எதிலும் ஒரு சிஸ்டமேட்டிக்கா இருக்கணும்ங்கற பழக்கமே இல்லையா உனக்கு? எப்பவுமே இப்படித்தானா?”

 

சாட்டையடியாக வார்த்தைகள் வந்துவிழ கோபத்தில் நா எழவில்லை. என்ன இது இவன் என்னமோ அடிமையைப் போல நடத்துகிறானே..  இவனுடன் காலம் முழுவதும் சேர்ந்து வாழ முடியுமா என்ற அச்சம் வந்தது. அதற்குப் பிறகு இருவரும் அதிகம் பேசவில்லை. அடுத்து ஊசியிலைக் காடு, கொடைக்கானல் ஏரி என எல்லா இடத்திலும், அவன் மட்டும் பள்ளிப் பிள்ளைகளுக்கு பாடம் எடுப்பது போல லெக்சர் கொடுத்துக் கொண்டே வர அவள் கையைக் கட்டிக் கொண்டு ஒரு வார்த்தையும் பேசாமல் வந்து கொண்டிருந்தாள். உணவு விடுதியில் கூட எதுவுமே பேசாமல் தலையைக் குனிந்து கொண்டு கொரித்துவிட்டு எழுந்தாள். பல்லில் சிக்கிய துணுக்காய் கணவனின் வார்த்தைகள் உறுத்திக்கொண்டேயிருந்தது.

 

சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தவர்கள், எதிரில் வயதான தம்பதியர் இருவர், வடநாட்டுக்காரர்கள் போல இருந்தார்கள்… அவர்களைப் பார்த்தவுடன் எங்கிருந்துதான் அனாமிகாவுக்கு அவ்வளவு உற்சாகம் வந்ததோ, “ஹாய், அங்க்கிள், ஆண்ட்டி” என்று ஓடிச்சென்று கட்டிக் கொண்டவ்ள், அவர்களிடம் வெகு சரளமாக ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும் படபடவென பொரிந்து தள்ளிவிட்டாள். வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த மனோகரன், முதல் முறையாக அவளிடம் இந்த குழந்தைத்தனமான உற்சாகத்தைக் கண்டான். தான் ஒருவன் அருகில் இருக்கும் உணர்வே இல்லாமல் அவர்கள் மூவரும் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள். இறுதியாக அவர்கள் “இதுதான் உன் கணவரா, என்ன செய்கிறார்? ஏன் இப்படி ஒன்றும் பேசாமல் நின்று கொண்டிருக்கிறார்?” என்று கேட்க,

 

இங்கிதமே தெரியாத இந்த மனிதர்கள் யார் என்று கேட்கத் துடித்த நாவை கட்டுப்படுத்த ரொம்பவே சிரமப்பட்டது அவன் கண்களில் தெரிந்தது. இறுதியாக புறப்படும்போது சும்மாப் போகாமல், அவளருகில் சென்று மெதுவாகப் பேசுவதாக நினைத்து  அவன் காதிலும் விழும்படியாக, “ஏன் உன் அப்பா இப்படி உனக்கு கொஞ்சமும் பொருத்தமே இல்லாத மாப்பிள்ளையாக பார்த்திருக்கிறார். எனக்கு ரொம்ப வருத்தமாக இருக்கிறது. உன் அழகிற்கும், அறிவிற்கும் கொஞ்சமும் சமபந்தமில்லாத ஒருவரை ஏன் பார்த்தார்.” என்று சொல்லி அதிர்ச்சியை கிளப்பிவிட்டுச் சென்றார்கள். அத்தோடு நிற்காமல் மனோவைப் பார்த்து, “கிடைத்தற்கரிய பொக்கிசமாக உங்களுக்கு மனைவி வாய்த்திருக்கிறாள். அவள் மனம் கோணாமல் நடந்து கொள்ளுங்கள்” என்று வேறு போகிற போக்கில் சொல்லிவிட்டுப் போய்விட்டார்கள், அதன் பின் விளைவுகள் பற்றிய எண்ணமே இல்லாமல்!

 

அதையே மனதில் வைத்துக் கொண்டு கருவிக் கொண்டிருந்த அனாமிகா தேவையில்லாமல் சண்டையை இழுத்தாள். வாக்குவாதம் வளர, மீதமிருந்த மூன்று நாள் நிகழ்ச்சிகளை ஒதுக்கிவிட்டு ஊருக்குத் திரும்ப வேண்டும் என்று அடம்பிடித்து சாதித்தும் விட்டாள். அதற்குப் பிறகு எத்தனையோ முறை கோபித்துக்கொண்டு தாய்வீடு போவதும், பெற்றோர் சமாதானம் செய்து திரும்ப கொண்டுவந்து விடுவதும் வாடிக்கையாகிவிட்டது.

நினைவுகள் பின்னோக்கிச் சென்றதில் முன்னால் இருப்பது எதுவுமே கண்ணிற்குப் புலப்படவில்லை..குளிர் சற்று அதிகமாக இருக்கவே சால்வையை இறுக்கிக் கொண்டு,  சுயநினைவிற்கு வந்தபோது யதார்த்தம் ரொம்பவே சுட்டது.

 

“அனாமிகா….. என்னடா பலமா யோசனை. உனக்குப் பிடிச்ச சுட்ட சோளக்கதிர் வாங்கிட்டு வந்திருக்கேன் பார்.. சூடா சாப்பிடு. உனக்காக அதிக மசாலா போட்டு வாங்கியாந்திருக்கேன் பாரு” என்றபோது ஏதோ ஆழ்ந்த யோசனையில் இருந்தவளாக,

 

“மனோ, எனக்கு ஒரு சந்தேகம், உன்னோடு வாழ்ந்த இந்த 27 வருட வாழ்க்கையில, ஒரு முறையாவது, ஏதாவது ஒரு சின்ன விசயத்திற்காகவாவது நான் விட்டுக் கொடுத்திருக்கேனாப்பா….  எப்பவுமே நீயேதான் எல்லா விசயத்திற்கும் விட்டுக் கொடுத்திருக்கே இல்லையா?”

 

“ ஏன் திடீர்ன்னு இப்படி ஒரு சந்தேகம் உனக்கு. நம்ம குழந்தைகள் இன்னைக்கு யாருடைய தயவையும் நாட வேண்டியத் தேவை இல்லாமல் சுயமாக நின்று  நல்ல முறையில் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்றால் அதற்கு முழு காரணமும் உன்னோட வளர்ப்புதானே. குழந்தைகள் மட்டுமே வாழ்க்கை என நீ படித்த படிப்பு, தொழில், என அனைத்தையும் தியாகம் செய்யத் துணிந்தாயே. இந்த மனசு யாருக்கு வரும். நல்லதை மட்டுமே நினைக்க வேண்டும். அனாமிகா… ”

 

“இல்லப்பா…  ஒரு சின்ன விசயமாவது உனக்காக நான் செய்ததுன்னு ஏதாவது இருக்கான்னு நானும் யோசிச்சு, யோசிச்சு சலிச்சுப்போச்சு. உனக்கு அப்படி ஏதாவது நினைவில் இருக்கா…?

 

அழகான புன்சிரிப்பை பதிலாக உதிர்த்த கணவனைப் பார்க்கவே பாவமாக இருந்தது.

 

கிட்டதட்ட 15 வருசமா நம்மகூட இருந்த உங்க அம்மா, கடைசி காலத்துல  உடம்பு முடியாமப் போனப்பக்கூட என்னால பாத்துக்க முடியலைன்னு நர்சு போடச் சொன்னேன். நர்சும் ஒழுங்கா வேலைக்கு வரலைங்கறதாலே முதியோர் இல்லத்துல கொண்டுபோய் விடலாம்னு மனசார சொன்னப்போக்கூட நீ என்கிட்ட பெரிசா சண்டையெல்லாம் போடலை. ஆனா, அதற்கப்புறம் உன் அம்மாவிற்கு ஒரு தாயாய் இருந்து அத்தனைப் பணிவிடைகளையும், கிட்டத்தட்ட  ஒரு வருடம் நீ ஒருவனே தனியாவே, என்னை கிட்டயே விடாம செய்தியே.. அப்பக்கூட உனக்கு என்மேல பெருசா கோப்ம் வந்த மாதிரி தெரியல. அவங்கவங்க கடமையை ஒழுங்கா செய்யணும்னு பாடம் சொல்லிக் கொடுத்த நீ, இதையும் உன் கடமையா சுமக்க துணிஞ்சிட்டே இல்லையா?”

 

பழைய நினைவுகளில் ஒன்றுகூட தன்னை ஒரு நல்ல குடும்பத் த்லைவியாகக் காட்டவில்லையே என்ற மனபாரம் அனாமிகாவின் கண் கலங்கலில் தெரிந்தது. . தொலைந்து போன நாட்களை கணக்கிலெடுப்பதைக் காட்டிலும், மீட்டெடுத்த நாட்களை வாழ்ந்துதான் பார்ப்போமே என்ற நம்பிக்கையை ஊட்டிய அந்த சில வார்த்தைகள்……

 

நிற்காமல் காற்றாக ஓடிக் கொண்டிருந்தவள் வாழ்க்கையில் அனைத்துமே இழந்தது போன்ற ஒரு வெறுமை, சொந்த உயிரே பெரும் பாரமாய் ஆகிப்போக, அந்தச் சம்பவம் நடந்த பிறகு யதார்த்தம் புரிய,வெறுப்பின் உச்சத்தில் விடியாத இரவுகளாகவே பொழுதுகள் கழிந்தது.

 

அன்று வழக்கம் போல காலையில் யோகா வகுப்பிற்குச் செல்வதற்காகக் கிளம்பியவள், மனோவிற்குக் காய்ச்சல் இருந்ததால் பணிக்குச் செல்லாமல் அன்று வீட்டில் இருந்தபோதும் கஞ்சி வைத்துக் கொடுத்து, கூடவே ஒரு மாத்திரையும் கொடுத்து தூங்கச் சொல்லிவிட்டுக் கிளம்பினாள். கிளம்புவதற்கு தாமதமானதால் வேகமாக வண்டியை விரட்டிய சமயம், குழந்தை ஒன்று குறுக்கே ஓடிவர செய்வதறியாது கட்டுப்பாடிழந்த நிலையில் தெருவோரத்தில் இருந்த ஒரு பெரிய மரத்தில் மோதி பெரும் விபத்திற்குள்ளானதில் உயிர் பிழைத்ததே பெரும்பாடாகிப் போனது. ஆனாலும், மீதி வாழ்க்கை முழுவதும் சக்கர நாற்காலியிலும், அன்றாடக் கடமைகளையும், இயற்கை உபாதைகளையும் கூட ஒருவரின் உதவியின்றி செய்ய முடியாதவாறு இடுப்பிற்குக் கீழே உள்ள பகுதி மொத்தமாகச் செயலிழந்து போனது பற்றியும், அன்று முதல், எந்த கணவனை மென்மையான காதலை வெளிப்படுத்தத் தெரியாத சடம் என்று நிந்தனை செய்தாளோ, எந்தக் கணவனால் தம் மனைவியை மகிழ்ச்சிப்படுத்த இயலாத கையாலாகாதவன் என்று சொல்லம்புகளால் துளைத்தெடுத்தாளோ, அதே கணவனால் இன்று ஒரு குழந்தையைப்போல அனைத்துத் தேவைகளுக்காகவும் காத்திருந்து கடமையாற்றும் கணவனின் தயாள குணத்தினால் குற்ற உணர்வின் வேதனையால் குமைந்துக் கிடந்தாள்.

 

இதோ இன்றும் கோக்கர்ஸ் வாக்கில் மனோவின் மென்கரங்கள் தம்முடைய சக்கர நாற்காலியின் இரும்புப் பிடியை அழுத்திப் பிடித்து செலுத்திக் கொண்டிருக்க கரைந்து போன நினைவுகளின் பாரத்தின் அழுத்தம் அதிகமாக திடீரென தான் செய்வது பற்றிய உணர்வே இல்லாமல் சக்கர நாற்காலியை கண், மண் தெரியாமல் வேகமாக உருட்டிச் சென்று…… அதள பாதாளத்தில் குதிக்க முயன்றாள். சூழ்நிலையின் அபாயம் உணர சில நொடிகளே ஆன நிலையில் சட்டென்று எட்டிப்பிடித்து, அவளைப் பாதுகாத்த மனோகரன், கண் இமைக்கும் நேரத்தில் கால் தடுக்கி தான் சரிவில் விழுந்ததைக் கண்ட அனாமிகா வீல் என்ற அலறலுடன் மயங்கிச் சரிந்தாள்.

 

மெல்ல கண் திறந்து பார்த்தபோது சுற்றி யார் யாரோ உறவுகள் இருந்தும், பார்வை மட்டும் தீவிரமாக மனோவைத் தேடிக்கொண்டிருந்தது. நான்கு நாட்களாக சுய நினைவின்றி தான் கிடந்திருப்பது அவர்கள் பேச்சில் புரிந்தது. மெல்ல அன்று நடந்தது நினைவிற்கு வர, ஐயோ மனோவிற்கு என்ன ஆனதோ தெரியவில்லையே என, தன்னையறியாமல், ‘மனோ’ என்று கத்திக் கொண்டே எழ முயன்றாள். சகோதரியின் சமாதானம் ஏதும் காதில் விழவேயில்லை அவளுக்கு.

 

மனோவிற்கு என்னமோ ஆகிவிட்டது என்ற அதிர்ச்சியில் உறைந்து கிடந்தவளுக்கு, மீண்டும் கண்கள் செருக எத்தனிக்க அன்பான அந்த ஸ்பரிசம், தலையை வருட, அடுத்த நொடி, மனோ… என்று தேட ஆரம்பித்தாள். கையில் சிறிய கட்டுடன் காலிலும் லேசான காயங்களுடன், மனோ அருகில் நிற்பதைப் பார்த்தவுடன் போன உயிர் திரும்பி வந்தது போல இருந்தது அவளுக்கு. அவள் பார்வையில் இருந்த குழப்பத்தைத் தெளிவாக்கும் விதமாக்,

 

“என்னம்மா.. அப்படிப் பார்க்கிறே. அன்னைக்கு உன்னைப் பிடிக்க எடுத்த முயற்சியில கொஞ்சம் கால் சிலிப் ஆகி அந்தப் பள்ளத்தில நான் விழுந்திட்டேன், ஆனா சரியா ஒரு மரத்தில் மாட்டித் தொங்கியதால் கீழே விழாமல் தப்பிச்சுட்டேன். அதுவும் அப்படி ஒன்னும் பெரிய பள்ளம் இல்லை. ஒருவேளை மரம் என்னைக் காப்பாற்றாமல் கைவிட்டிருந்தால் கை, கால் ஏதாவது போயிருக்கலாம்.. என் செல்லத்தைக் கவனிப்பதில் சிரம்மேற்பட்டிருக்கலாம். நல்ல வேளையாக சின்ன சிராய்ப்புகளுடன் தப்பிச்சுட்டேன். உன்னை விட்டுட்டு அவ்வளவு சீக்கிரமா போயிடுவேன்னா நினைச்சே..? நீ இருக்கும் வரை நானும் இருப்பேன் அனாமிகா..”

 

அலங்காரமில்லாத அவனுடைய அந்த யாதார்த்தமான வார்த்தைகள் அவளை மௌனமாக்கியது. ஒன்றுமே பேசாமல், மெல்ல அவன் கைகளை எடுத்து கண்களில் ஒற்றி, முத்தமிட்ட போது ஓராயிரம் அர்த்தங்கள் அவர்களுக்குப் புரிந்தது. அவள் மனதில் ஏனோ 150 ஆண்டு பழமையான அந்த போதி மரம் நினைவிற்கு வந்தது. அங்கு போய் சுகமாக சிறிது நேரம் இருக்க வேண்டும்போல் தோன்றியது!.

 

இளமைக் காலம் உணர்வுகளுக்கு ஆட்பட்டு குற்றங்குறைகளை காண்பதிலேயே செலவாகிவிட, இன்று ஆத்மார்த்தமான அந்த நெருக்கம் , சாய்ந்து கொள்ள ஒரு தூணாய், நிழல் கொடுக்கும் ஆலமரமாய் விரிந்து நிற்கும் மனோ எனும் அன்பு நெஞ்சம்…..  எங்கோ வானொலியில் பாரதியின் வரிகள் ஒலிப்பது காதில் விழுந்து உடல் சிலிர்த்தது …..

யாதுமாகி நின்றாய்-காளி!

எங்கும் நீதி றைந்தாய்;

தீது நன்மையெல்லாம்-காளி!

தெய்வ லீலை யன்றோ;

பூத மைந்தும் ஆனாய்-காளி!

பொறிக ளைந்தும் ஆனாய்;

போத மாகிநின்றாய்-காளி!

பொறியை விஞ்சி நின்றாய்

இன்ப மாகிவிட்டாய்-காளி!

என்னு ளேபு குந்தாய்

பின்பு நின்னையல்லால்-காளி!

பிறிது நானும் உண்டோ?

அன்ப ளித்துவிட்டாய்-காளி!

ஆண்மை தந்து விட்டாய்;

துன்பம் நீக்கிவிட்டாய்-காளி!

தொல்லை போக்கிவிட்டாய்!!

Series Navigationவாலிகையும் நுரையும் – (15)மூக்கு
author

பவள சங்கரி

Similar Posts

13 Comments

  1. Avatar
    paandiyan says:

    //பெரியகுளம் மற்றும் மதுரை நகரின் பறவைக்கண் காட்சி? //
    இது என்னவென்று கொஞ்சம் விபரம் தர முடியுமா?

    1. Avatar
      பவள சங்கரி says:

      அன்பின் திரு பாண்டியன்,

      வாசித்தமைக்கு நன்றி. Birds eye view of Periyakulam and Madurai city என்பதைத்தான் பறவைக்கண் காட்சி என்று சொல்லியிருக்கிறேன்.பறவைக் கண் காட்சி என்று வந்திருக்க வேண்டுமோ?

      அன்புடன்
      பவள சங்கரி

          1. Avatar
            IIM Ganapathi Raman says:

            நானாக இருந்தால் ஜெயபாரதனுக்கு நன்றி சொல்லியிருக்க மாட்டேன். காரணம். அவரின் விளக்கமும் தவறானப் புரிதலுக்கு வழிகாட்டும்.
            1. முதலில் Bird eye view என்பதைச் சரியாக திருத்தியிருக்கிறார். Bird’s eye view. அதற்குத் தெரியாதவர்கள் நன்றி சொல்லலாம்.
            2. திருத்திய சொற்றொடருக்குப் பொருள் பறவைப் பார்வை என்றால் தவறு.
            Bird’s eye view என்பது ஒரு இடியம். ஆங்கில இடியங்களுக்குப் பொருள் இடியத்தில் காட்டபடும் சொற்களின் நேரடிப் பொருளை எடுக்கமாட்டார்கள். எடுத்தால் நகைச்சுவை. டென்னிஸ் த மினேஸ் கார்ட்டூனில் வரும் டென்னிஸ் ஒரு சின்னப்பையன். அவன் நேரடிப்பொருளை எடுத்துவிடுவான். விலசன் கடுப்படிப்பார்; மார்த்தா சின்னப்பையனுக்கு என்ன தெரியும் எனப் பரிவுகாட்டுவார். இது ஒரு விஞ்ஞான உண்மையாகும். குழந்தைகளிடம் நேரடியாகத்தான் பேச வேண்டும். அவர்களுக்கு உட்பொருளை அறியும் சக்தி கிடையாது.
            Bird’s eye view என்றால் ஒரு பறவை வானில் பறக்கும்போது கீழேயுள்ளவற்றைப் பார்க்கும். குறிப்பாக கழுகைச் சொலல்லாம். ஒரு நகரத்தைப் பார்த்தால், அதன் பார்வையில் அந்நகரம் முழவதும் தெரியும். விமானத்தில் பறக்கும்போது கூட நமக்கோ விமானிக்கோ முழவதும் தெரியாது. ஏனெனில் நமக்கு முழுக்கோணம் கிடைக்காது. கழுகுக்குக் கிடைக்கும்.

            இந்த விஞ்ஞான உண்மையிலிருந்து இடியம் வருகிறது. அதாவது ஒரு இடத்தைப் பொதுவாகப மட்டும் பார்த்தல். அவ்விட்த்தின் நுணுக்கங்களையும் தெளிவுகளும் இங்கு தெரியாது. எனினும் பொதுப் பார்வை நுணுக்கங்களைத் தெரியும் ஆர்வத்தைத் தூண்டும். எனவே முதலில் Bird’s eye view கிடைக்கட்டும் என்பர்.
            கழுகுப்பார்வை என்பது தமிழ் இடியம். இது ஆங்கில இடியத்துக்கு எதிர்பொருளையேத் தரும். அதாவது ஒரு கழுகு வானத்தில் பறந்து நகரம் முழுவதையும் நோட்டமிட்டு அங்கே எங்கே பாம்பு ஒடுகிறது, அல்லது கோழிக்குஞ்சு நிற்கிறது என வெகுதூரத்திலிருந்து கழுகால் பார்க்க முடியும். தெரிந்தவுடன் இறங்கி கவ்விக்கொண்டு பறக்கும். இதையொட்டி தமிழ் இடியம் வந்தது. கழுகுப்பார்வை என்றால், எதுவும் தப்பாது என்று பொருள்.

            இதைப்போலவே பாம்புக்காது. குரங்குப்பிடி. அழுத்தமான பொருட்களைத் தர தமிழில் இந்த இடியங்கள்.

            கதையில் ஆங்கில இடியத்தின்படி பார்த்தால், கொடைக்கானல் மலையில் உச்சியில் இருந்து பார்க்கும்போது வெகுதூரத்தில் மதுரை மாநகர் தெரிவதாக வருகிறது. இது நம்ப முடியாக்கற்பனை. அப்படித்தெரியாது. சிற்றூர்கள் தெரியும். ஆங்கில இடியத்தின் பொருள் இங்கு வராது.

  2. Avatar
    admin says:

    ரிஷ்வன்
    அடுத்த முறை கருத்துக்களை தமிழில் எழுதுங்கள்.

  3. Avatar
    Dr.G.Johnson says:

    இன்றைய இளம் தம்பதியர் சிறு சிறு பிரச்னைக்கெல்லாம் விவாகரத்து நாடும் சூழலில் ” யாதுமாகி நின்றாய் ” சிறுகதையை பவள சங்கரி மிகவும் சாதுரியமான வகையில் படைத்துள்ளது பாராட்டுதற்க்குரியது. கதையின் ஒரு சூழலில் எங்கே அனாமிகாவும் மனோகரனும்கூட பிரித்து விடுவார்களோ என்றே எண்ணத்தோன்றியது. அவனின் சுயநலப் போக்கு அத்தகைத்து ! ஆனால் அவளின் விபத்துக்குப்பின் அவளை அவன் கவனித்த விதம் திருப்புமுனையாக அமைந்துள்ளது.

    அவனின் நடவடிக்கைகள் கரடுமுரடாக ஒருவகையில் அநாகரிகமாக தென்பட்டாலும் அவனின் ஆழ் மனதில் அவள்மீது எவ்வளவு அன்பும் காதலும் இருந்துள்ளது என்பதை எண்ணும்போது உடல் சிலிர்கிறது!

    பாத்திரப் படைப்பு ( character presentation ) அருமை! பாராட்டுகள் பவள சங்கரி! டாக்டர் ஜி.ஜான்சன்.

    1. Avatar
      பவள சங்கரி says:

      அன்பின் திரு டாக்டர் ஜான்சன்,

      வணக்கம். இந்தக் கதையைப் பற்றி மீண்டும் சிந்திக்க வைத்துள்ளது தங்களுடைய கருத்து. பொதுவாக ஆண்கள் திருமணம் ஆன புதிதில் தன் மனைவியை தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற தீவிர ஆர்வம் கொள்வதினால், தன்னை ப்ல விதத்திலும் முன்னிலைப்படுத்தி காட்டிக் கொள்கிறார்கள்.. மனைவி தன்னைக் காட்டிலும் அதிகம் படித்தவளாகவோ அல்லது அறிவுத்திறம் கொண்டிருந்தாலும் கூட அதை ஏற்றுக் கொள்ளாமல் மட்டப்படுத்தியே பழக்க நினைக்கிறார்கள். இது சுயநலப்போக்கு என்று சொல்வதைவிட மனைவி என்றுமே தன்னைச்சார்ந்தே இருக்க வேண்டும் என்ற பேராவல். அடிப்படையில் அதிகப்படியான அன்பும், காதலும் கொண்டிருப்பதே இதற்கான முக்கிய காரணமாகிறது. தனக்கான மதிப்பற்ற சொத்து என்று நினைத்து அதனைக் காக்கவேண்டி தாங்கள் எடுக்கும் முயற்சியாகவும் கருதுகிறார்கள்.இவையெல்லாம் சில காலங்களே.. அதற்குப் பிறகு யதார்த்த நிலைக்கு வரும்போது ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்ளும் போது அவரவர்களின் அடிப்படைக் குணங்களே எஞ்சி நிற்கும் போது அதற்கேற்றார்போல வாழ்க்கையின் போக்கும் அமைந்துவிடுகிறது..

      அந்த வகையில் இந்தக் கதையின் நாயகன் போலிகளற்ற யதார்த்த வாழ்க்கை வாழ்பவனாகிறான்.. நாயகியோ தம் வாழ்நாளின் பெரும் பகுதியை சரியான புரிதல் இல்லாமலே மேலோட்டமான வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு,இறுதிக் காலத்தில் கணவனின் அன்பை புரிந்து கொண்டு தொலைந்த நாட்களை எண்ணி ஏக்கம் கொள்கிறாள்…

      மிக்க நன்றி ஐயா.

      அன்புடன்
      பவள சங்கரி

  4. Avatar
    paandiyan says:

    இந்த கதையில் நான் சந்தேகம் காட்ட காரணம் கோக்கர்ஸ் நடைபாதை, பசுமை பள்ளத்தாக்கு(suicide point) உள்ள வித்தியாசம்தான் . கொடைக்கானல் பசுமைப் பள்ளத்தாக்கு (தமிழில் Suicide Point), அதாவது இந்தப் பசுமைப் பள்ளத்தாக்கில் நிறையப் பேர் தற்கொலை செய்துகொண்ட நிஜம் நிறைய உள்ளது. நெறைய கதைகளும்தான். ஒரு வேலை wheel chair என்று இருப்பதால் கதை கோக்கர்ஸ் நடைபாதை பக்கம் சென்று இருக்கலாம். லாஜிக் இடிக்கவில்லை . வானிலை நன்றாக இருந்தால் இங்கிருந்து பெரியகுளம், மதுரை, டால்பின் மூக்கு, பம்பா ஆறு போன்றவற்றை காணலாம் என்பதில் எந்த சந்தேகம் இல்லை .

    1. Avatar
      பவள சங்கரி says:

      அன்பின் திரு பாண்டியன்,

      வணக்கம். கதையை ஆழ்ந்து படித்து தங்கள் கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கு மனமார்ந்த நன்றி.

      அன்புடன்
      பவள சங்கரி

  5. Avatar
    பவள சங்கரி says:

    அன்பின் திரு கணபதி இராமன்,

    வணக்கம். தங்களுடைய தெளிவான விளக்கம் மொழிபெயர்ப்பாளர்களுக்கு மிகவும் பயந்தரக் கூடியது. எந்த ஒருவார்த்தைக்கும் நேரடியான பொருள்படியான மொழிபெயர்ப்பை செய்வது சரியாக வருவதில்லை. அந்த மொழிக்கேற்ப, அந்தப் படைப்பிற்கேற்ப பொருளை தெரிவுசெய்து போட வேண்டியதன் தேவையை உணர்த்தக்கூடிய தங்கள் கருத்து ஏற்புடையதே. ஒரு வார்த்தை பல பொருள் கொண்டதாக இருக்கும் வேளையில் நம் படைப்பிற்கேற்ற பொருளை சரியாகக் கணித்து வழங்குவதிலேயே அதன் வெற்றி இருக்கிறது என்பதும் உணமை. தங்களுடைய அழகான விளக்கத்திற்கு நன்றிஐயா.

    அன்புடன்
    பவள சங்கரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *