யானைகளும் கோவில்களும் ஆன்மிகப் பாரம்பரியமும் – 8

author
5
0 minutes, 54 seconds Read
This entry is part 3 of 20 in the series 4 செப்டம்பர் 2016

பி.ஆர்.ஹரன்

 

கோவில் தேவஸ்தானங்களும், பக்தர்களும், ஆன்மிக ஆர்வலர்களும் கோவில் பாரம்பரியத்தில் யானைகள் பயன்படுத்தப்படுவது பல நூற்றாண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் வழக்காமாகும் என்றும், யானைகளை கோவில்களிலிருந்து விடுவிப்பது அந்தப் பாரம்பரியத்திற்கு எதிரானதாகும் என்றும் கருத்துத் தெரிவிக்கிறார்கள். விலங்குகள் நலன் என்கிற பெயரில், யானைகளின் நலனைக் காப்பதாகச் சொல்லிக்கொண்டு, ஹிந்து கோவில்களையும், ஆன்மிகப் பாரம்பரியத்தையும் சிறுமைப்படுத்துகின்றன அன்னிய சக்திகள் என்றும் கூறுகிறார்கள் ஆன்மிக ஆர்வலர்களும், ஹிந்து அமைப்பினர்களும். இதற்குச் சான்றாக, ஆதாரமாக, சமீபத்தில் வெளியான ஒரு கட்டுரையையும், ஆவணப்படத்தையும் சுட்டிக்காட்டுகின்றனர்.

Gods in Shackles premier in USA

லிஸ் ஜோன்ஸ் என்கிற ஆங்கிலேயப் பத்திரிகையாளர் “தி மெயில்” பத்திரிகையில் எழுதிய கட்டுரையையும் அதற்கு பிரேம் பணிக்கர், கல்யாண் வர்மா, ஸ்ரீதர் விஜய்கிருஷ்ணன் ஆகியோர் எழுதிய மறுப்புக் கட்டுரைகளையும் சென்ற பகுதியில் பார்த்தோம். லிஸ் ஜோன்ஸ் எழுதிய கட்டுரைப் பெரிதும் பரப்பப்பட்டது, இந்திய ஊடகங்களிலும் அதை மேற்கோள் காட்டிப் பல கட்டுரைகள் வெளிவந்தன. பொதுத்தளத்தில் லிஸ்ஜோன்ஸின் கட்டுரை பிரபலமான அளவுக்கு, அதற்கு மறுப்பு தெரிவித்த மூவரின் கட்டுரைகளும் பிரபலமாகவில்லை.

Mahout Venugopal - Elephant Lakshmi - Sangita Iyer

லிஸ் ஜோன்ஸின் கட்டுரையைத் தொடர்ந்து, சங்கீதா ஐயர் என்பவர் தயாரித்திருக்கும் ஆவணப்படமும் சிறைப்படுத்தப்பட்ட யானைகளின் நலனைப் பற்றிப் பேசினாலும், அதன் கூடவே கோவில்களையும் ஆன்மிகப் பாரம்பரியத்தையும் தாக்கும் தொனி இழையோடுவதை மறுக்க முடியாது. இந்த ஆவணப்படத்தைப் பற்றிப் பார்ப்பதற்கு முன்னால், இதைத் தயாரித்த சங்கீதா ஐயர் பற்றித் தெரிந்துகொளோம்.

 

சங்கீதா ஐயர்

Sangita Iyer-1

சங்கீதா ஐயர் கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்டவர். கனடா நாட்டு குடியுரிமையுடன் அந்நாட்டின் தலைநகர் டொரொண்டோவில் வசித்து வருகிறார். Environmental Science துறையில் M.A பட்டம் பெற்று, பின்னர் PGD in Journalism படித்தவர். 1999 முதல் சுற்றுப்புறச் சூழல் துறையில் ஊடகவியலாளராக இருந்து வருகிறார். டிஸ்கவரி சானலில் (Discovery Channel) பணிபுரிந்துள்ளார். முன்னதாக ABC (American Broadcasting Company) / CBS (Columbia Broadcasting System) ஆகிய நிறுவனங்களுடன் இணைக்கப்பெற்ற பெர்மூடா தீவு நிறுவனங்களுக்காக அந்தத் தீவுகளிலிருந்து நிரூபராகப் பணிபுரிந்துள்ளார். தற்போது ஹஃப்ஃபிங்க்டன் போஸ்ட் (Huffington Post) பத்திரிகையில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வருகிறார்.

(http://www.huffingtonpost.com/author/sangita-iyer )

 

இவர் 2013-ஆம் ஆண்டு தன்னுடைய தந்தையாரின் நினைவு தினத்தை அனுசரிப்பதற்காக இந்தியா வந்துள்ளார். அப்போது தன் பூர்வீகமான கேரளாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டதாகவும், தன்னுடைய நண்பர் கோவில் கோவிலாகத் தன்னை அழைத்துச் சென்றதாகவும், கோவில்களில் யானைகள் கொடுமைப்படுத்தப்படுவதைப் பார்க்க நேர்ந்ததாகவும், அதைப் பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்துடன் ஒரு ஆவணப்படத்தைத் தயாரிக்க முடிவு செய்ததாகவும், அதனைத் தொடர்ந்து, தான் முடிவு செய்தபடியே, “விலங்கிடப்பட்ட கடவுள்கள்” (Gods in Shackles) என்கிற ஆவணப்படத்தைத் தயாரித்துள்ளதாகவும் National Geographic Society நிறுவனத்தின் www.nationalgeographic.org இணையதளத்திற்காக கிறிஸ்டினா ருஸ்ஸோ (Christina Russo) என்கிற நிருபருக்கு அளித்த ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

Sangita Iyer and Temple Priest Akkeramon Kalidasan Bhattathirippad

அந்தப் பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ள சில விஷயங்கள் பின்வருமாறு:

 

கோவில் திருவிழாக்களில் யானைகள் மூன்றுமுறை கோவிலைச் சுற்றி நடத்திவரப்படுகின்றன. பிறகு கோவில் வாயிலை அடைந்ததும் தும்பிக்கையை வளைத்து, கால்களை மடித்து வணங்க வைக்கப்படுகின்றன. அப்போது அதன் மேல் ஒரு அணிகலன் பலகை ஏற்றப்படுகிறது. ஏற்கனவே மேலே 3 அல்லது 4 நபர்கள் அமர்ந்திருக்க இந்த அணிகலன் பலகையும் சேர்த்து அதன் நுண்மையான முதுகுத்தண்டு ஏறக்குறைய 500 பவுண்டு (230 கிலோ) எடையை சுமக்கின்றது. (இந்த ஆவணப்படத்திற்காக நிதி திரட்டுவதற்கென www.indiegogo.com என்கிற இணைய தளத்தை நடத்தி வருகிறார். அதில் டிசம்பர் மாதம் முதல் மே மாதம் வரை 3000 கோவில் திருவிழாக்கள் கேரளாவில் நடப்பதாகவும், அவ்விழாக்களில் கோவில் யானைகள் முதுகில் 1000 கிலோ எடையை ஏற்றிச் சுமக்க வைக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்)

Sangita Iyer-3

ஹிந்து பஞ்சாங்கத்தின்படி, டிசம்பர் மாதம் முதல் மே மாதம் வரை நூற்றுக்கணக்கான திருவிழாக்கள், பண்டிகைகள் கோவில்களில் கொண்டாடப்படுகின்றன. அவை இறுதியாக திருச்சூர் பூரம் திருவிழாவில் முடிவு பெறும். அந்தச் சமயம் யானைகள் திருவிழாக்களில் கலந்துகொள்ள வைக்கப்படுகின்றன. ஒரே நாளில் மூன்று இடங்களுக்கு கடினமான நிலையில் வண்டிகளில் ஏற்றி அனுப்பப்படுகின்றன. உதாரணத்திற்கு, காலை 8 மணிக்கு ஒரு திருவிழா, 11 மனிக்கு ஒரு திருவிழா, மாலை 3 மணிக்கு ஒரு திருவிழா. இவ்வாறு கொண்டு செல்லப்படும்போது அவைகளுடைய அடிப்படைத் தேவைகள் கூட நிறைவேற்றப்படுவதில்லை. ஆனால் ஒவ்வொரு யானை உரிமையாளருக்கும் நல்ல வருமானம் கிடைக்கிறது.

Sangita Iyer - Chennai Screening-1 (1)

திருச்சூர் தெச்சிக்கொட்டுக்காவு பெருமங்கத்து தேவஸ்தானத்துக்குச் சொந்தமான தெச்சிக்கொட்டுக்காவு ராமச்சந்திரன் என்கிற யானை தான் திருச்சூர் பூரம் திருவிழாவை ஒவ்வொரு ஆண்டும் தொடங்கி வைக்கிறது. அது இது வரை 20க்கு மேற்பட்டவர்களையும் 3 யானைகளையும் கொன்றிருக்கிறது. இருந்தும் அந்த யானையைப் பயன்படுத்துகிறார்கள். (2016-ம் ஆண்டு மே மாதம் இந்தப் பேட்டி பிரசுரம் ஆகியுள்ளது. முன்னதாக நவம்பர் 2015ல் தான் Huffington Post பத்திரிகையில் எழுதிய கட்டுரையில் இதே யானை 10 பேரைக் கொன்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்).

 

திருச்சூர் பூரம் திருவிழாவுக்கு கேரளாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து 95 ஆண் யானைகள் திருச்சூருக்குக் கொண்டுவரப்படுகின்றன. வரும் வழியில் அவற்றுக்குச் சரியாக உணவும் குடிநீரும் கொடுப்பதில்லை. வந்தவுடன் 36 மணிநேரத்துக்கும் மேலாக அவைகள் திருச்சூர் தார் சாலைகளில் சுட்டெறிக்கும் வெய்யிலில் நடத்திச் செல்லப்படுகின்றன. இது இரவு நேரமும் தொடர்கிறது. எப்போதும் ஒவ்வொரு யானையின் மீதும் 3 அல்லது 4 பேர்கள் அமர்ந்திருப்பர். அவைகளின் கால்கள் கனமான சங்கிலிகளால் கட்டப்பட்டிருக்கும். அந்த யானைகளுக்கு அருகிலேயே ஆயிரக்கணக்கான மக்கள் கடலெனக் குழுமியிருப்பர். பிறகு வெடிகளும் வாணவேடிக்கைகளும் பயங்கர சத்தத்துடன் நடத்தப்படும். கோவில் கூரைகள் உடைந்து பறக்கின்ற அளவுக்கு வெடிகளின் சத்தங்கள் இருக்கும். ((இந்த ஆவணப்படத்திற்காக நிதி திரட்டுவதற்கென நடத்திவரும் www.indiegogo.com என்கிற இணைய தளத்தில், லக்ஷக்கணக்கான மக்கள் – பெரும்பான்மையானவர்கள் குடித்துவிட்டு – யானைகளுக்கு அருகிலேயே பாடிக்கொண்டும் ஆடிகொண்டும் இருப்பார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்).

 

ஹிந்துக்கள், கிறிஸ்துவர்கள், முஸ்லிம்கள் அனைவரும் யானைகளைப் பயன்படுத்துகிறார்கள். ஹிந்துக்கள் ஆரம்பித்த இந்தப் பழக்கத்தை சமீப காலமாக கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் அவர்கள் திருவிழாக்களில் பின்பற்றுகின்றனர். கோவில் திருவிழாக்களில் யானைகள் அவசியம் என்று ஹிந்து சாஸ்திர நூல்களில் சொல்லப்படவில்லை. (யானைகள் சர்ச்சுகளிலும் கிறிஸ்தவ விழாக்களிலும், மசூதிகளிலும் இஸ்லாமிய விழாக்களிலும் பயன்படுத்தப்படுகின்றன என்பதை இவர் ஆவணப்படத்தில் காண்பிக்கவில்லை. ஹிந்துக் கோவில்கள் மற்றும் ஹிந்து கலாச்சாரம், ஆன்மிகப் பாரம்பரியம் என்கிறபெயரில் யானைகள் துன்புறுத்தப்படுவதாகத்தான் காண்பிக்கிறார்).

Sangita Iyer - Chennai Screening-3

கோவில்கள், தனி நபர்கள் ஆகியோர் யானைகளின் உரிமைதாரர்களாக இருக்கிறார்கள். இவை பெரும்பாலும் அஸ்ஸாம், பிகார் போன்ற மாநிலங்களின் காடுகளிலிருந்து சட்ட விரோதமாகக் கொண்டுவரப்படுகின்றன. ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு கொண்டு செல்லப்படக் கூடாது என்பதும், யானைகளை விலைக்கு விற்பதோ, விலைகொடுத்து வங்குவதோ குற்றம் என்பதும் சட்டம். யானைகள் இல்லாத கோவில்களுக்கு தனியார் யானைகள் வாடகைக்கு விடப்படுகின்றன. இதற்கு யானைத் தரகர்களும் இருக்கிறார்கள். யானை உரிமையாளர்கள், தரகர்கள், கோவில்கள் ஆகிய மூவருக்கும் திருவிழா சமயங்களில் நல்ல வருமானம் கிடைக்கிறது.

 

யானைகள் மதம் கொண்டு ஓடும்போது, அவற்றைப் பிடித்துக் கட்டி காட்டுமிராண்டித்தனமாகச் சித்திரவதைகள் செய்வார்கள். தடைசெய்யப்பட்ட கூர்மையான ஆயுதங்களைப் பயன்படுத்தி அவற்றைக் கட்டுக்குள் கொண்டு வருவார்கள்.

 

மதநீர் சுரக்கும் சமயங்களில் (மூன்றிலிருந்து நான்கு மாதங்கள்) யானைகளுக்கு மதம் பிடித்து அவை ஆக்ரோஷமாக இருக்கும். பெண்யானைகளுடன் சேரத்துடிக்கும் காலம். அந்தச்சமயத்தில் அவற்றைக் கட்டி வைத்து “கட்டி அடிக்கை” என்கிற சம்பிரதாயத்தை நடத்துவார்கள். அப்போது 7, 8 நபர்கள் நன்றாகக் குடித்துவிட்டு, அந்த யானையை 48 முதல் 72 மணிநேரங்கள் அடி, அடியென்று அடிப்பார்கள். இரும்புப்பூண்கள் பூட்டப்பட்ட கழிகள், கூர்மையான இரும்புக் கொக்கிகள் கொண்ட கழிகள் ஆகியவற்றால் அடிப்பார்கள். மதம் பிடித்த சமயத்தில் அவை வழக்கமான உத்தரவுகளை மறந்துவிடும் என்றும், மீண்டும் அவற்றுக்குக் கற்றுத்தர அவற்றைக் கட்டுக்குள் கொண்டுவந்தால்தான் முடியும் என்றும், காரணங்கள் கூறப்பட்டு இந்தச் சம்பிரதாயம் கேரளாவில் இந்தக் காட்டுமிராண்டித்தனம் கடைப்பிடிக்கப்படுகிறது. இப்படித்தான் சமீபத்தில் சிட்டிலப்பிள்ளி ராஜசேகரன் என்கிற யானை இறந்துவிட்டது.

 

இந்த மாதிரியான யானைகளின் இறப்புக்குக் காரணமானவர்கள் யாரும் இதுவரைத் தண்டிக்கப்படவில்லை. யானைகள் பாதுகாப்புக்கான கட்டுப்பாடுகள் 1879-ஆம் ஆண்டு “யானைகள் பாதுகாப்புச் சட்டம்” கொண்டுவந்ததிலிருந்து இருக்கின்றன. ஆயினும் சட்ட விரோதமாக யானைகளை உரிமையாக்கிக்கொள்வது தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. இத்தனைக்கும் ஆசிய யானைகள் அருகிவரும் உயிரினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த அறிவிப்புக்குப் பிறகு சட்ட விரோதமாக யானைகளை உரிமையாக்கிக்கொள்வது அதிகரித்துள்ளது. மார்ச்சு 2016-ல் கேரள அரசு உரிமம் இல்லாத 289 யானைகளைக் கண்டுபிடித்தது. ஆனால் அவற்றின் உரிமையாளர்களுக்கு மன்னிப்பு வழங்கியது. ஆயினும், இந்திய உச்ச நீதிமன்றம் அதை நிராகரித்தது.

 

கோவில் குருக்கள்கள் பலர் கோவில் யானைகளுக்கு இழைக்கப்படும் துன்பங்களைக் கண்டித்து அதற்கு எதிராகப் பேசத்தொடங்கியிருக்கிறார்கள். கேரளாவில் பெரிதும் மதிக்கப்படும் குருக்கள்களில் ஒருவரை என் ஆவணப்படத்திற்காக நானே பேட்டி கண்டுள்ளேன். பல கோவில்கள் யானைகளுக்கும் மனிதர்களுக்கும் ஏற்படும் பேராபத்துக்களைக் கவனத்தில் கொண்டு, யானைகளுக்குப் பதிலாக தேர்களைப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள்.

 

லக்ஷ்மி என்கிற பெண் யானையின் துன்பங்கள் நிறைந்த வாழ்க்கையை என் ஆவணப்படத்திற்காகப் படம் பிடித்துள்ளேன். அவளுடைய தினம் காலை 4 மணிக்கு அவளுடைய உரிமைதாரர் வீட்டில் விழிப்பதிலிருந்து தொடங்குகிறது. அழுக்கும், கிருமிகளும் நிறைந்துள்ள தேங்கிக்கிடக்கும் நீரில் அவளுடைய பாகன் அவளைக் குளிப்பாட்டுகிறார். பின்னர் முதல் நாள் சமைத்து மிச்சம் இருக்கும் ஒரு உருண்டை அரிசிச் சோற்றை உணவாகக் கொடுக்கிறார். பிறகு சங்கிலிகளால் பிணைத்து கோவிலுக்கு நடத்திச் செல்லப்படுகிறாள். அதுதான் அவளுக்குக் கிடைக்கும் ஒரே உடற்பயிற்சி. 7.30க்கும் 9.30க்கும் கோவிலில் அவளுக்குப் பணி. பிறகு மீண்டும் மதியம் 12 மணி முதல் மாலை 4 மணிவரை சொந்தக்காரர் வீட்டில் சங்கிலியால் கட்டப்பட்டிருப்பாள். மாலை 6.30க்கும் 7.30க்கும் மீண்டும் கோவில்பணி. பிறகு மீண்டும் வீடு. இந்த இயந்திரத்தனமான வாழ்க்கையில் தான் அவளுக்குப் பலவிதமான துன்பங்கள் சித்திரவதைகள் இழைக்கப்படுகின்றன.

 

லக்ஷ்மியும் என்னைப் போல் பெண் என்பதாலேயே எனக்கு அவள் மேல் தனிப்பிரியம். என் கண் முன்னால் அவள் சங்கிலியால் கட்டப்பட்டுச் சிறைப்பட்டிருப்பதும், சித்திரவதை செய்யப்படுவதும், நான் அனுபவித்த கலாச்சாரச் சிறையையும், பலவிதமான கட்டுப்பாடுகளையும் எனக்கு நினைவுபடுத்தின. இந்தியாவில் பெண்கள் அடிமைப்படுத்தப்படுகிறார்கள். ஆண்களுக்கு இருக்கும் அதே உரிமைகள் அவர்களுக்குக் கிடையாது. நான் ஒரு பிராம்மணக் குடும்பத்தில் பிறந்து கண்டிப்பான பெற்றொர்களால் வளர்க்கப்பட்டேன். சுதந்திரமே இல்லாமல் வளர்ந்தேன். நான் பெண் என்பதால், என்னிடம் பற்றாக்குறை உள்ளது, ஒரு பெண்ணாக என்னால் வெற்றிபெற முடியாது, சாதிக்க முடியாது, அடிமையாக இருப்பதே என்னுடைய பங்கு என்று நம்பினேன். என்னைத் தத்து எடுத்துக்கொண்ட வீடான கனடா நாட்டிற்குச் சென்ற பிறகு தான் என் சுதந்திரத்தைச் சுவைத்தேன்.

 

நான் லக்ஷ்மியைப் பார்த்தபோது (பேட்டியில் கண்ணீருடன் விசும்புகிறார்) அவளுடைய பெரிய உருவத்தைப் பார்த்தபோது, இவ்வளவு வலிமையுடன் சக்தியுடன் இருப்பவள் சில நொடிகளில் அந்தப் பாகனை நசுக்கிவிடமுடியும்; ஆயினும் ஏன் இப்படி? நீ உன்னுடைய ஆற்றலை மறந்துவிட்டாயா? என்று எண்ணிய போது நான் என்னுடைய உண்மையான ஆற்றலை மறந்தது நினைவு வந்தது. பல விதங்களில் நான் என்னுடைய இயற்கையான குணத்துடன் தொடர்பு கொள்ள லக்ஷ்மி உதவியாக இருந்தாள். இன்னும் சங்கிலியால் கட்டுண்டு துன்பத்தில் தானே இருக்கிறாள் என்று தினமும் அவளை நினைத்துக்கொள்கிறேன்.

 

ஒரு பக்கம் யானையைக் கடவுளின் அவதாரமாக, யானைமுகக் கடவுளான விநாயகரின் உருவமாக வழிபடும் இந்த நாடு, மறு பக்கம் மதம் என்கிற போர்வையில் சுயலாபத்துக்காக அந்த யானைகளைத் துன்புறுத்துகிறது. புனிதமான சாஸ்திர நூல்களில் சொல்லப்பட்டுள்ளவற்றைத் திரித்துக்கூறி தங்களுடைய செயல்பாட்டை நியாயப்படுத்துகிறார்கள். இந்த ஏமாற்று வேலையைப் பற்றிய விழிப்புணர்ச்சியே இல்லாமல், பெரும்பான்மையான சமுதாயம் இந்தியாவில் இருக்கிறது. ஆவணப்படத்தைக் காட்சிப்படுத்தலாம் என்று இந்தியாவின் மத்திய திரைப்படத் தணிக்கை வாரியம் எக்களுக்குப் பச்சைக்கொடி காட்டிவிட்டது. Gods in Shackles (விலங்கிடப்பட்ட கடவுள்கள்) படத்தை இந்திய மக்கள் ஒரு நாள் பார்ப்பார்கள். உண்மை எதுவென அவர்கள் முடிவு செய்வார்கள். அவர்கள் என்ன முடிவு செய்கிறார்கள் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

மேற்கண்டவாறு பேட்டியில் கூறியுள்ளார் சங்கீதா ஐயர். இவருடைய முழு பேட்டியையும் இங்கே பார்க்கலாம்: – http://news.nationalgeographic.com/2016/05/160524-india-elephants-religion-animal-abuse-documentary-film-ganesh/   இந்தப் பேட்டி கடந்த மே மாதம் வெளியிடப்பட்டுள்ளது.

 

ஆனால் 2015 ஜனவரி மாதத்திலேயே, படம் தயாரிப்பில் இருக்கும்போதே, நிதி திரட்டும் முகாந்திரத்தில், www.foodrevolution.org என்கிற இணையதளத்தில் ஒரு கட்டுரையும் எழுதியுள்ளார். கட்டுரையுடன் படத்தின் முன்னோட்டமும் அதில் வெளியிடப்பட்டுள்ளது. அதை இங்கே பார்க்கலாம்: – https://foodrevolution.org/blog/help-us-expose-torture-abuse-temple-elephants-india-gods-shackles-documentary/

 

திரையிடலும் விருதுகளும்

 

சங்கீதா ஐயர் கேரளாவின் சிறைப்படுத்தப்பட்ட கோவில் யானைகளைப் பற்றித் தயாரித்துள்ள Gods in Shackles (விலங்கிடப்பட்ட கடவுள்கள்) ஆவணப்படம் சர்வதேச அளவில் திரையிடப்பட்டுப் பின்வரும் விருதுகளைப் பெற்றுள்ளது.

 

  • Hollywood International Independent Documentary Film Festival Award (2015).
  • The IMPACT Docs – Award of Merit (2016)
  • Golden Award at the World Documentary Awards. (2016)
  • The Los Angeles Cine Fest Award. (December 2015)
  • Nominated for the prestigious International Elephant Film Festival (UN, CITES, Jackson Hole Film Festival) – 2015.

 

இந்திய யானைகளைப் பற்றி இந்தியாவில் தயாரிக்கப்பட்ட படமான இது, இந்தியத் திரைப்படத் தணிக்கை வாரியத்தின் சான்றிதழைக் கடந்த ஃபிப்ரவரி மாதம் பெற்றுள்ளது.

 

கேரள சட்டமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினர்களுக்காக கடந்த ஜூன் மாதம் 29-ம் தேதி திரையிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஜூலை மாதம் திருவனந்தபுரத்திலும், திருச்சூரிலும், கோழிக்கோடிலும் பொதுவில் திரையிடப்பட்டுள்ளது.

 

ஜூலை 16-ம் தேதி தில்லியில் பொதுமக்களுக்காகத் திரையிடப்பட்டது. அடில் மத்திய அமைச்சரும் பிராணிகள் நல ஆர்வலருமான மேனகா காந்தி சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டார். அவர் இந்தியப் பாராளுமன்றத்திலும் அரசுத் தொலைக்காட்சியான தூர்தர்ஷனிலும் திரையிட ஏற்பாடு செய்வதாக உறுதியளித்துள்ளார்.

 

சென்னையில் திரையிடல்

 

Gods in Shackles திரைப்படம் சென்னையில் ஆழ்வார்பேட்டையில் உள்ள C.P.ராமஸ்வாமி ஐயர் நிறுவனத்தின் அரங்கில் கடந்த ஜூலை மாதம் 21-ம் தேதி திரையிடப்பட்டது. பிராணிகள் நலனுக்காக Blue Cross of India அமைப்பை நடத்திக்கொண்டிருக்கும் திரு.சின்னி கிருஷ்ணா மற்றும் திருமதி நந்திதா கிருஷ்ணா ஆகியோரின் முன்னிலையில் சங்கீதா ஐயர் திரைப்படத்தைத் திரையில் வழங்கினார். அரங்கில் நிறைந்திருந்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் பிராணிகள் நல ஆர்வலர்கள் தான். இந்நிகழ்ச்சிக்கு நானும் போயிருந்தேன்.

 

கேரளாவில் உள்ள கவிஞரும் பிராணிகள் நல ஆர்வலருமான சுகத குமாரி, கேரள கோவில் குருக்களான அகீரமோன் காளிதாஸன் பட்டாத்ரிபாட், பாரம்பரிய விலங்குகள் பணிக்குழுவின் செயலாளர் திரு.K.V.வெங்கிடாசலம், யானை மருத்துவர் பேராசிரியர் டாக்டர் ஜேக்கப் V.சீரன், இந்திய அறிவியல் நிறுவனத்தின் பேராசிரியர் டாக்டர் ராமன் சுகுமார், இந்திய விலங்குகள் நலவாரியத்தின் துணைச் செயலாளர் வினோத் குமார், கேரள அரசு கால்நடை மருத்துவர் டாக்டர் P.B.கிரிதாஸ், யானை உரிமையாளர் டாக்டர் சுந்தர் மேனன், திருவிழாக்கள் ஏற்பாட்டாளர் C.A..மேனன், பாகன்கள் வேணுகோபால் மற்றும் முத்து, மஹாராஷ்டிரா ஜோதிபாய் கோவில் யானை சுந்தருக்கு சிகிச்சை அளித்த கால்நடை மருத்துவர் டாக்டர் சனத் கிருஷ்ணா, கர்நாடக விலங்குகள் காப்பக ஆணையத்தைச் சேர்ந்த திரு.R.S.சுரேஷ், PETA அமைப்பின் அறிவியல் கொள்கை ஆலோசகர் டாக்டர் சைதன்ய கோடுரி, WRRC அமைப்பின் இணை நிறுவனர் சுபர்ணா கங்கூலி ஆகியோர் இந்த ஆவணப்படத்தில் பங்குபெற்றுத் தங்கள் கருத்தினைக் கூறியுள்ளனர். (http://www.godsinshackles.com/ )

 

 

இந்திய விலங்குகள் நலவாரியத்தின் துணைத் தலைவரும், பிளூ கிராஸ் அமைப்பின் இயக்குனருமான திரு.சின்னி கிருஷ்ணா சங்கீதா ஐயரை அறிமுகப்படுத்தினார். பின்னர் சங்கீதா ஐயர் ஆவணப்படம் தயாரிக்கப்பட்டதன் பின்னணியைப் பற்றியும், படத்தை அறிமுகப்படுத்தியும் பேசினார். அவருடைய பேச்சைத் தொடர்ந்து ஆவணப்படம் திரையிடப்பட்டது.

 

ஆவணப்படத்தில் குருவாயூர் கோவில், குருவாயூர் கோவில் தேவஸ்தானத்துக்குச் சொந்தமான யானைகளைப் பராமரிக்கும் புன்னத்தூர் யானைகள் கோட்டை, திருச்சூர் பூரம் திருவிழா ஆகிய இடங்களில் யானைகள் துன்பத்திற்கும், சித்திரவதைக்கும் ஆளாவதைக் குறித்துப் பெரும்பாலும் பேசப்படுகின்றது. பிறகு, மஹாராஷ்டிரா மாநில கோலாப்பூர் ஜோதிபாய் கோவிலின் யானை சுந்தர் அனுபவித்த துன்பங்களைப் பற்றியும் ஆவணப்படம் பேசுகிறது.

 

திரைப்படத்தின் பின்னணியில், வசனங்கள் வராத சமயங்களில் “வக்ரதுண்ட மஹாகாய…” போன்ற கணபதி பகவான் மேலான ஸம்ஸ்க்ருத ஸ்லோகங்கள் இசையுடன் பாடப்பட்டுள்ளன. குருவாயூர் கோவில் சூழல் ஒரு “உல்லாச இடம்” (Resort) போல் இருக்கிறது என்று வர்ணிக்கப்படுகிறது.

 

கேரள கோவில் கலாச்சாரம் பற்றியோ அல்லது ஆன்மிகப் பாரம்பரியம் பற்றியோ ஆவணப்படம் பேசவில்லை. ஆனால் கோவில் கலாச்சாரம் என்கிற பெயரில் யானைகள் துன்புறுத்தப்படுகின்றன என்று திரும்பத் திரும்பச் சொல்கிறது. குருவாயூர் கோவிலுக்குச் சொந்தமான புன்னத்தூர் யானைக்கோட்டையில் யானைகள் மிகவும் துன்புறுத்தப்படுவதாகக் காட்டுகிறது.

 

லக்ஷ்மி என்கிற யானையையும், வேணுகோபால் என்கிற பாகனின் பராமரிப்பில் அது அனுபவிக்கும் துன்பங்களையும் விவரிக்கிறது. கோவில்களில் யானைகளின் இருப்பு அவசியம் என்று ஹிந்து மத சாஸ்திர நூல்களில் கூறப்படவில்லை என்று அழுத்தமாகத் தெரிவிக்கின்றது.

 

ஆவணப்படம் பெரும்பாலும் கேரளக் கோவில்களைப் பற்றியதாக இருந்தாலும், மஹாராஷ்டிரா மாநில கோலாப்பூர் மாவட்டம் ஜோதிபாய் கோவில் யானை சுந்தரின் துன்ப வாழ்வை விவரிப்பதன் மூலம், இந்தியா முழுவதும் ஹிந்துக் கோவில்களில் யானைகள் துன்புறுத்தப்படுகின்றன என்கிற தோற்றத்தை ஏற்படுத்த  முயற்சிக்கிறது ஆவணப்படம்.

 

படம் முழுவதும் எதிர்மறைத் தன்மைகள் மட்டுமே காட்சிப்படுத்தப் பட்டிருக்கின்றன. நேர்மறைத் தன்மைகள் எதுவும் காட்டப்படவில்லை. ஆகவே ஆவணப்படம் நடுநிலையான நிலைப்பாட்டை எடுக்கவில்லை என்று சொல்லலாம். கோவில்களில் யானைகள் பராமரிக்கப்படக் கூடாது என்கிற ஒரே நோக்கத்துடன் எடுக்கப்பட்ட ஆவணப்படம் என்றால் அது மிகையல்ல. திரைப்படம் முடிந்தவுடன், பார்ப்பவர்கள் மனதில் ஹிந்துக் கோவில்கள் மீதும் ஹிந்து ஆன்மிகப் பாரம்பரியம் மீதும் வெறுப்பும் கோபமும் ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை. அந்த அளவுக்கு, அளவுக்குத் திறமையுடனும் தேர்ந்த தொழில்நுட்பத்துடனும் தயரிக்கப்பட்ட படம்.

 

ஆவணப்படம்  பற்றிய விவாதம்

 

பிறகு பார்வையாளர்கள் சிலரின் கேள்விகளுக்குப் பதில்கள் தந்தார் சங்கீதா ஐயர். பார்வையாளர்களில் இருக்கும் பிராணிகள் நல ஆர்வலர்களைக் கோவில் யானைகள் மீதும் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொண்டார். பலர் தங்களுக்குப் புதியதாக விழிப்புணர்ச்சி ஏற்பட்டதாகத் தெரிவித்தார்கள். ஒரு இளைய பெண், “நான் தனிப்பட்ட முறையில் இதற்கு என்ன செய்ய வேண்டும்? என்னைப் போன்ற இளையவர்கள் இதற்கு என்ன செய்யலாம்?” என்று கேட்டபோது, சங்கீதா ஐயர் ஒரு நொடிக் கூடத் தாமதிக்காமல், “கோவில்களுக்குச் செல்வதை நிறுத்துங்கள்” (Stop going to Temples) என்றார். அவருடைய உள்நோக்கம் அவரை அறியாமல் உடனடியாக வெளிப்பட்டுவிட்டது போலத் தோன்றியது. கோவிலுக்குச் செல்லக்கூடாது என்று நீங்கள் எப்படிக் கூறலாம் என்று மற்றொருவர் தன் ஆட்சேபணையைத் தெரிவித்தபோது, “நானும் கடவுள் நம்பிக்கையுடைய பக்தியுடைய ஹிந்து தான். நான் சொன்னதைத் தவறான அர்த்தத்தில் எடுத்துக்கொள்ள வேண்டாம். யானைகளை வைத்திருக்கும் கோவில்களுக்குச் செல்லாமல் உங்கள் எதிர்ப்பைக் காட்டுங்கள் என்கிற அர்த்தத்தில் தான் சொன்னேன். அவ்வாறு செய்தால்தான் கோவில் நிர்வாகங்கள் யானைகள் மீது கவனம் செலுத்துவார்கள்” என்று கூறி சமாளித்தார் சங்கீதா.

 

கடைசியாக நான் என்னுடைய கருத்தைத் தெரிவித்தேன், “கோவில் யானைகள் அனுபவிக்கும் துன்பத்திற்கு யானைகளின் உரிமையாளர்களும், பாகன்களும், கோவில் நிர்வாகமும் தான் காரணமே தவிர, ஹிந்து கலாச்சாரமோ ஹிந்து ஆன்மிகப் பரம்பரியமோ அல்ல. இந்த உண்மையை நீங்கள் தெளிவாகக் கூறவில்லை. அவர்கள் செய்கின்ற தவறுகளுக்கு ஹிந்து மதத்தையும் கலாச்சாரத்தையும் குறை கூறுகிறீர்கள். இசைப்பாடல்களாக சம்ஸ்க்ருத ஸ்லோகங்கள் மற்றும் கோவில் காட்சிகளின் பின்னனியில் யானைகளின் துன்பங்களைக் காட்சிப்படுத்தும்போது பார்வையாளர்கள் மனதில் ஹிந்து கலாச்சாரம் மீது வெறுப்பு ஏற்படும் வகையில் திட்டமிட்டு எடுத்துள்ளீர்கள். ஆவணப்படத்தின் பெயரும் அதே நோக்கத்தில் வைக்கப்பட்டதாக நான் கருதுகிறேன். கோவில்களில் இருந்து யானைகளை முழுவதுமாக வெளியேற்றுவது தான் உங்கள் நோக்கம் என்றால் அதை நாங்கள் அனுமதிக்க முடியாது. யானைகளின் நலனும் காக்கப்பட்டு பாரம்பரியமும் தொடருமாறு செய்ய முடியும். அதற்கான தீர்வுகள் உண்டு” என்று நான் பேசிக்கொண்டிருக்கும்போதே, சங்கீதா ஆட்சேபமும் எதிர்ப்பும் தெரிவித்தார். பார்வையாளர்களில் பெரும்பான்மையானவர்கள் பிராணிகள் நல ஆர்வலர்கள் என்பதால் எல்லோரும் கூச்சலுடன் ஆட்சேபம் தெரிவித்தனர். யானைகள் இருக்க வேண்டிய இடம் வனங்கள் தான்; கோவில்கள் அல்ல, என்று கூறினர். அதோடு நிகழ்ச்சி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. அதற்கு மேல் விவாதிக்க சங்கீதாவும் ஏற்பாட்டாளர்களும் தயாராக இல்லை.

 

நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஹரி ராம வர்மா, கணேஷ் நாராயணன் என்கிற கேரள நண்பர்கள் இருவர் என்னிடம் வந்து, “நீங்கள் கூறிய கருத்துதான் எங்களுடையதும். யானைகளின் பிரச்சனைகளை நாங்கள் மறுக்கவில்லை. ஆனால் இவர் காட்டியிருப்பதைப் போல அவ்வளவு மோசமில்லை. குருவாயூர் கோவிலையும் புன்னத்தூர் கோட்டையையும் மிகவும் தவறாகக் காட்சிப்படுத்தியுள்ளார். பல வருடங்கள் முன்பே இந்தியாவை விட்டுச் சென்று கனடா நாட்டில் வாழ்ந்து வருபவர் திடீரென்று வந்து என்னத்தைப் பெரிதாகக் கண்டுவிட்டார்? கேரளப் பண்பாடு பற்றி இவர் நேர்மையான ஆய்வு நடத்தவில்லை. ஏதோ உள்நோகத்துடன் தான் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். இவ்விஷயத்தை நாங்கள் சும்ம விடமாட்டோம்” என்று கூறிச் சென்றனர்.

 

பாண்டிச்சேரி அருகேயுள்ள மரக்காணம் என்னுமிடத்தில் காஞ்சி காமாக்ஷி கோவில் யானைகளை நல்லமுறையில் பராமரித்து வரும் Tree Foundation அமைப்பைச் சேர்ந்த ஒரு பெண்மணி வந்து என்னுடைய கருத்துக்களைக் கேட்டுக்கொண்டார். பின்னர் தொடர்பு கொள்ளுமாறு கூறிச் சென்றார்.

 

சிறைப்படுத்தப்பட்ட யானைகளின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும், கோவில்களுக்கும் ஆன்மீகப் பாரம்பரியத்துக்கும் எந்தவிதமான இழிவும் ஏற்பட்டுவிடக்கூடாது என்கிற உண்மையான நியாயமான எண்ணத்துடன், இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காணவேண்டும் என்று நாம் முயற்சியில் ஈடுபடும்போது, பிராணிகள் நலன் என்கிற பெயரில் நமது கலாச்சாரத்தையும் ஆன்மிகப் பாரம்பரியத்தையும் இழிவு படுத்தும் செயலில் சிலர் இறங்குகிறார்களோ என்கிற சந்தேகம் வருகின்றது. ஆகவே நாம் இன்னும் வேகத்துடனும் ஜாக்கிரதையுடனும் இயங்க வேண்டியிருக்கிறது.

 

(தொடரும்)                    

 

Series Navigationஆஷாதிரும்பிப்பார்க்கின்றேன் பவளவிழா நாயகன் பத்மநாப ஐயரும் கலை – இலக்கிய பதிப்புலகமும்
author

Similar Posts

5 Comments

  1. Avatar
    Radha Rajan says:

    Gods in Shackles is a poignant, factual and brilliant documentary which holds up a mirror to religious Hindus whose religiosity does not include compassion and non negotiable respect for animals we use in our self interest. Why do Hindus whine and cry conspiracy when our enemies occupy the space we refuse to occupy. Very temple going Hindu must begin to accept responsibility for the horrendous state of our tpke goshslas, for the fact that temple bulls and calves are sending up in Kerala’s slaughter houses. We must accept that captive elephants in our temples are krpt n shameful conditions with louts for mahouts for whom elephants are means of livelihood and objects of their msnic desire to keep a large animal under brutal subjugation. Sangeetha Iyer deserves our gratitude for speaking the brutal truth. The author must try to make a documentary which proves Sangeetha wrong. That would be defending culture and tradition. Not simply expressing dissent.

  2. Avatar
    Radha Rajan says:

    The Ahobila Matham and Udipi Pejswara Mutt surrendered their elephants because of their inability to keep them. Both are ancient and traditional mathams and their stature has not diminished because there is no elephant in their temples. If anything such mathams are inspirational and exemplars. Kerala’s Pazhavangadytemple has also given up their elephant. Customs and tradition are sacred but so is jeevdaya or jeevaksrunya which s Aldo a unique Hindu dharmic value.

  3. Avatar
    Jayakumar says:

    யானைகளைப் பற்றி வெளிநாட்டினருக்கு ஏன் தான் இந்த கவலையோ? இவர்கள் அங்கே இருக்கும் நாய் பூனை போன்ற செல்லப்பிராணிகள் வளர்த்தலை எதிர்த்து ஒன்றும் பேச மாட்டார்கள். நாய்களை சங்கிலி இல்லாமல் வெளியில் கூட்டிச் செல்லக்கூடாது என்று சட்டமே இருக்கிறது.அதை கூற மாட்டார்கள்.யானையை சங்கிலியால் கட்டினால் குற்றம. அதே போன்று ஒவ்வொரு ஊரிலும் உள்ள மிருகக் காட்சி சாலைகளைப் பற்றி ஒன்றும் கூற மாட்டார்கள். அந்த மிருகங்களும் காட்டில் வாழவேண்டியவை தானே?

    இவர்கள் எல்லோரும் மேல்நாட்டவர்கள் செய்வது எல்லாம் சரி இந்தியர்கள் அதனைச் செய்தால் அது தவறு என்று வாதிப்பார்கள். அதற்கு நம்மவர்கள் கொடுத்த இடம் தான். கொஞ்சம் கொடுத்தால் மடத்தை பிடுங்குகிறார்கள்.

    Jayakumar

    1. Avatar
      BSV says:

      நாய், பூனை முதலியவை வீட்டு விலங்குகள். மனிதர்களிடையேதான் வாழும். எனவே வீடுகளில் வளர்க்கிறார்கள். நம் வீட்டு நாய் பக்கத்து வீட்டுக்காரரையோ, சாலையில் நடந்துபோவோரையோ கடித்து விடக்கூடாதென்றுதான் அதைக்கட்டிக் கொண்டு போகிறார்கள். நாய் கடித்தால் நாற்பது ஊசிகள் போட்டாக வேண்டுமென்பதை நினைவில் கொள்ளவும். சின்னாட்களுக்கு முன், திருவனந்தபுரத்தில் நடந்து சென்ற ஒரு பாட்டியை ஒர் நாய் கடித்தே கொன்றுவிட்டது.

      ஆனை காட்டு விலங்கு. அதை நாட்டுக்குள் கொண்டு வந்து வீட்டு விலங்கைப்போல சங்கிலியால் கட்டி வளர்க்ககூடாது ஆனை பிள்ளையார். பிள்ளையாரைக் கட்டுப்போட்டு கொடுமைப்படுத்தலாமா?

      மிருகக்காட்சி சாலையே வேண்டாமென்று மேலை நாட்டில் கூட போராட்டங்கள் நடந்து வருகின்றன. நம் நாட்டில் கிடையவே கிடையாது. அதே சமயம், மிருக்காட்சி சாலையிலும் காட்டு விலங்குகளான, சிங்கம், புலி, சிறுத்தை போன்றவைகளை, காட்டு சூழ்நிலையிலேயே வைத்திருக்கிறார்கள். நீங்கள் ஜீப்பில் போய் அவற்றுக்கு இடையூறு இல்லாமல் பார்பதன் பெயர் சஃபாரி. கூண்டுகளில் அடைப்பது கண்டிக்கவேண்டியது.

      எங்கு விலங்கு கொடுமைப்படுத்த்பட்டாலும் அதைக்கண்டிப்பது நமது நாகரிகத்தின் பரிணாம வளர்ச்சி. அதை வெள்ளைக்காரர் செய்தாலென்ன? கருப்பர் செய்தாலென்ன? தடுக்காமலிருந்தால் அது போதும்.

      ஜல்லிக்கட்டுவிற்கும் சர்க்கசுக்கும் கைதட்டும் மனிதர்களல்லவா நாம்? வெள்ளைக்காரகளைப்பற்றி பேசுகிறோம்.

  4. Avatar
    ஷாலி says:

    யானை ஒரு காட்டு விலங்குதான்.ஆடு,மாடு அல்ல நாட்டில் வளர்ப்பதற்கு.யானைக்கு பூரண சுதந்திரம் காட்டில் மட்டுமே கிடைக்கும்.கோயில் கொட்டடியில் அடைத்து நலன் காப்பது என்பது நாடகமே!இந்து மத பாரம்பரியத்தின் ஆரம்பம் அனாதியானது.கோயிலில் யானையை பயன்படுத்தும் பாரம்பரியம் இரு நூற்றாண்டுகள் அண்மையது.இரு நூற்றாண்டுகளுக்கு முன்பு கோயிலும் இருந்தது,தெய்வங்களும் மக்களுக்கு அருள்பாலித்துக் கொண்டுதான் இருந்தார்கள்.ஆனை சேவை இல்லையென எவரும் ஆட்சேபிக்கவில்லை.

    காட்டு யானையை அங்குசத்தால் துன்புறுத்தி… பட்டினி போட்டு பயமுறுத்தி பரமன் சேவைக்கு பயன்படுத்துவது பக்தியில் சேருமா? பாரம்பரியம் என்ற போலி கெளரவத்திற்கு, மிருக வதையை ஆதரிப்பதை கருணாமூர்த்தி கடவுள் கண்டிக்க மாட்டாரா?மனிதனுக்கு மட்டும்தான் இறைவனா?மிருகங்கள் இறைவனின் அருளுக்கு அப்பாற்பட்ட ஜந்துக்களா?இந்து மதம் இப்படித்தான் சொல்கிறதா நிச்சயாக இல்லை.

    யானை இலை,தழை,புல்லு தின்பதால், ஆடு,மாடு லிஸ்டில் சேர்த்து கோயில் கொட்டடியில் அடைப்பதில் என்ன பெருமை கிடைக்கிறது? காட்டு விலங்குகள் அனேகம் தெய்வத்திருமேனிகளின் வாகனங்களாக இருக்கின்றன.சிம்ம வாகனத்தில் தேவியரும்,புலி வாகனத்தில் மணிகண்டன் ஸ்ரீ அய்யப்பனும் வலம் வருவதால் சிங்கம்,புலியை கோயில் கொட்டடியில் கட்டி வைத்து பாரம்பரியத்தை பேணவேண்டியதுதானே! போட்டுத்தள்ளிவிடும் என்ற பயம்.அப்பாவி ஆனையை அடக்கி ஒடுக்கலாம்.அம்பாரி ஏறலாம்!

Leave a Reply to Radha Rajan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *