சீஅன் நகரம் -2 யுவான் சுவாங்

This entry is part 2 of 24 in the series 8 பெப்ருவரி 2015

Xuanzang_statue

சீஅன் நகரம் மக்கள் வெள்ளத்தில் மிதந்து நவீன நாகரிகப் பூச்சுடன் பல வகைகளில் மாறியுள்ள போதிலும், இன்னும் பல இடங்களில் பழமைத் தன்மைகள் மாறாமல் பாதுகாக்கப்பட்டு வருவதை நாம் காண முடிகிறது. எங்களது முதல் நாள் பயணத்தை நாங்கள் பகோடா என்று அழைக்கப்படும் உயர் கோபுர அமைப்புடன் கூடிய புத்த மடமான பெரிய காட்டு வாத்து பகோடாவிலிருந்து ஆரம்பித்தோம்.  அதன் ஏழு மாடிக் கோபுரம் உயர்ந்து நிற்பதை உள்ளே நுழையும் முன்னரே காண முடிந்தது.

தா யன் தா என்று அழைக்கப்படும் இந்தக் கோபுரம் உயர்ந்து நிற்பதற்குப் பல காரணங்களை அங்கு சென்ற பின்னர் அறிய முடிந்தது.  சீஅன் நகரின் தென் பகுதியில் பரந்தப் பரப்பில் அமைந்திருந்த மடத்தின் நடு நாயகமாக இந்தக் கோபுரம், புத்தச் சூத்திரங்களையும், புத்தச் சிலைகளையும், புத்தர் நினைவு தாங்கிய பொருட்களையும் வைத்திருக்கும் புண்ணியத் தலமாக விளங்குகிறது.

புத்த மதக் கொள்கைகளில் முரண்பாடுகள் இருந்தததைக் கண்டு, அதன் உண்மைகளைக் கண்டறிய இந்தியாவில் 17 வருடங்கள் பயணம் மேற்கொண்ட பின், தான் கற்றவற்றை, சீன மொழியில் பெயர்த்துக் கொடுத்தவர் யுவான் சுவாங் என்று பள்ளி நாட்களில் விழுந்து விழுந்து படித்தது சீனாவின் வரலாற்றைப் பற்றி எண்ணும் போதெல்லாம் நினைவிற்கு எப்போதும் வரும். யுவான் சுவாங் என்று வெளிநாடுகளில் அழைக்கப்படும் சுவான் ஜங் என்பவர் அமைத்த புத்த மடாலயத்திற்குள் செல்கிறோம் என்று எண்ணிய போது அலாதியான உணர்வு ஏற்பட்டது.

Dacien Templeசுவான் ஜங், சாங்அன் என்று அழைக்கப்பட்ட பழைய சீஅன் நகரத்திலிருந்து கிளம்பி> பட்டுச்சாலையில் பயணம் மேற்கொண்டு> பாலைவனங்களை மலைகளைக் கடந்து, பதினேழு ஆண்டுகள், 100க்கும் மேற்பட்ட நாடுகளைக் கண்டு> திரிபீடகா என்ற புத்த மதச் சூத்திரங்களைக் கொண்ட ஏடுகளைக் கொண்டு வந்ததாகச் சொல்லப்படுகிறது.  அவர் ஊர் திரும்பிய போது பறை கோபுரத்தில் பறைகள் ஒலிக்க, மணிக் கோபுரத்தின் மணிகள் ஒலிக்க, அப்போதிருந்தப் பேரரசர் காவ் சொங் வரவேற்றாராம்.  அப்போது இந்த திரிபீடகா குரு பேரரசரிடம் இந்தச் சூத்திரங்களைப் பத்திரப்படுத்திப் பாதுகாக்க ஒரு இடம் வேண்டும் என்று அனுமதி கேட்டு பெற்ற மடம் இதுவென்று சொல்லப்படுகிறது.

இந்த வரலாற்றையெல்லாம்> கோயிலுக்கு 50 யுவான் கொடுத்து நுழைந்தவுடன் தன்னார்வத்துடன் வந்த ஆங்கிலம் பேசும் வழிகாட்டி ஜூலியா சொல்லிக் கேட்டோம்.  வழிகாட்டிக்கு கட்டணம் என்றால் அதிகம் கேட்பார்கள் என்று எண்ணியிருந்த போது கட்டணம் ஏதுமின்றி எங்களிடம் பேசிய அவரது ஆங்கிலம் பேசும் திறம் எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது என்றே சொல்லலாம்.  ஏன் தன்னார்வலராக இருக்கிறார் என்று கேட்ட போது,  ஆங்கிலம் பேசும் பயிற்சியை இதன் மூலம் பெற விரும்பிச் செய்வதாகச் சொன்னார்,  பல்கலைக்கழகத்தில் வியாபார ஆங்கிலம் பயின்று வரும் ஜூலியா.

முதலில் கோபுரத்தின் மையத்தில் அமைந்த முக்கிய வேண்டுதல் கூடத்திற்குச் சென்றோம். மிகப் பெரிய தங்க நிறத்தாலான அமர்ந்திருக்கும் புத்தர் அக்கூடத்தை அலங்கரிந்திருந்தார்.  அவருக்கு இரு மருங்கிலும் அவரது இரு சீடர்கள் அமைதியாக.  ஹாங்காங்கில் இருக்கும் புத்த மடாலயங்களில் இருப்பது போன்றே அவ்வுருவங்கள் காணப்பட்டன. அமைதியாக சில நொடிகள் பார்த்து விட்டு,  மையக் கூடத்தைச் சுற்றி இருந்த மற்ற கூடங்களுக்குச் செல்ல முனைந்தோம்.

கோபுரத்தைச் சுற்றிப் பல சீனக் கலை அம்சங்கள் கொண்ட பல கூடங்கள் இருந்தன.  அவற்றை ஒவ்வொன்றாகச் சென்று பார்த்தோம்.  ஒவ்வொன்றும் வித்தியாசமாக இருந்தன.

ஒரு கூடத்தில் சிவப்பு நிறத்தாலான பெட்டிகள் பல அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன.  அவை அந்த மடாலயத்தின் குருக்களின் பெயர்கள் அடங்கிய பலகைகளாம். இது வரை  37 குருமார்கள் இருந்திருக்கிறார்களாம்.

ஒரு கூடத்தில் அறிஞர்கள் மூவரின் சிலைகள்.  அறிஞர் கன்பூசியஸ் மட்டுமே நாங்கள் படித்து அறிந்தவர்.

அடுத்தக் கூடத்தில் ஜேட் என்று சொல்லப்படும் மரகதத்தால் ஆன கலைச் சிற்பங்கள்.  நாங்கள் அறிந்த மரகதம் பச்சை நிறம் மட்டுமே.  ஆனால் இங்கு அறை முழுவதுமே பல வண்ண மரகதங்கள். செயற்கை வண்ணங்கள் எதுவும் கலக்காத மரகதங்கள். மாயா தேவியின் வயிற்றிலிருந்து பிறந்தது முதற் கொண்டு, வாழ்க்கைப் பாதையை மாற்றிய இரவு, முக்தி வரையிலான புத்தரின் வாழ்க்கைப் பயணத்தை,  பல வண்ண மரகதக் கற்களால் சிற்பி செதுக்கி இருந்தது கண்களைக் கவர்ந்தன.  பளிங்கினால் செய்தது போன்றே அவை தோன்றிய போதும்,  விலைமதிக்க முடியாத பல வண்ண மரகதங்களால் அவை அழகாக செதுக்கப்பட்டு இருப்பது ஆச்சரியத்தைத் தந்தது.

அடுத்தக் கூடத்தில்,  பல கைகள் கொண்ட புத்தர் சிலை நடுவே அமைக்கப்பட்டிருக்க, சுற்றிலும் புத்தரைப் பற்றியும் அவரது சீடர்களைப் பற்றியும் சித்தரிக்கப்பட்ட அறை முழுமையையும் அடைத்த பளபளக்கும் மரத்தாலான சிற்பங்கள்.

அடுத்து கோபுரத்தை ஏறிச் சென்றுப் பார்க்கும் இடத்திற்கு வந்தோம்.  ஏழு மாடங்களைக் கொண்டு உயர்ந்து காணப்பட்டது.  அது செங்கலாலும் மரத்தாலும் கட்டப்பட்ட கோபுரம்.  முதலில் ஐந்து தளமாக இருந்தது> பத்துத் தளங்களாக மாற்றியமைக்கப்பட்;ட போதும்> பின்னர் வந்த மன்னர்களின் ஆதரவு கிட்டாது> அழிக்கப்பட்ட பின்> அது ஏழு தளம் கொண்ட அமைப்பாக மாற்றம் செய்யப்பட்டு பரமாரிக்கப்பட்டு வருகிறது.  அது பல அழிவுகளிலிருந்துத் தப்பித்தக் கோபுரமாம்.  கீழே நிலத்தடி நீரின் அழுத்தத்தால்> கோபுரம் சற்றே சாய்ந்த வண்ணம் இருக்கின்றதாம்.  பைசா நகரத்து சாய்ந்த கோபுரத்தைப் போன்று> இந்தக் கோபுரமும் நிமிர்ந்து நிற்பது போன்று தோன்றினாலும்> சற்றே சாய்ந்து தான் நிற்கிறதாம்.  அதில் ஏறிச் சென்று வர அரை மணி நேரமாவது வேண்டும் என்று சொன்னதும்> அன்றே நாங்கள் லின் டொங் செல்ல திட்டமிட்டிருந்ததால்> மற்ற பகுதிகளைப் பார்த்து விட்டுச் செல்லலாம் என்று ஏறிச் சென்று பார்க்கும் ஆர்வம் இருந்த போதும்> அதை அப்போதைக்கு ஒதுக்கி வைத்துவிட்டு அவ்விடத்தை விட்டு அகன்றோம். உச்சியிலிருந்து நகரைக் காணும் காட்சி நிச்சயம் கண்கொள்ளாக் காட்சியாகத் தான் இருக்கும். அன்றிரவே விடுதியில் இணையத்தின் மூலம்> உச்சியிலிருந்து பார்த்தால் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்காமல் இருக்கவில்லை. ஒவ்வொரு தளத்திலும் பல அரிய பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கின்றனவாம்.

பிறகு ஜூலியா எங்களை ஒரு தோட்டத்திற்கு அழைத்துச் சென்றார்.  அங்கே பெயர்கள் பதித்த தூண்கள் சிலவற்றைக் கண்டோம்.  இன்று பிள்ளைகளைத் தேர்வு தேர்வு என்று அதிகம் நச்சரித்து வெற்றி பெற வைக்கும் பெற்றோர்கள் பல கோடி. அது பல நூறு வருடங்களுக்கு முன்பும் இரு

பிறகு ஜூலியா எங்களை ஒரு தோட்டத்திற்கு அழைத்துச் சென்றார்.  அங்கே பெயர்கள் பதித்த தூண்கள் சிலவற்றைக் கண்டோம்.  இன்று பிள்ளைகளைத் தேர்வு தேர்வு என்று அதிகம் நச்சரித்து வெற்றி பெற வைக்கும் பெற்றோர்கள் பல கோடி. அது பல நூறு வருடங்களுக்கு முன்பும் இருந்தன போலும்.  பல நூறு வருடங்களுக்கு முன்பு அரசுத் தேர்வு எழுதி> வெற்றி பெற்றவர்கள் பெயர்களாம் அவை.  நான்காண்டுகளில் அறுவர் மட்டுமே தேர்வில் வெற்றி கொள்வார்களாம். அத்தனை கடினமான தேர்வு. அதை எழுதிச் சாதித்தவர்களுக்கு பெருமைச் சேர்க்கும் வகையில் இன்றளவும் அந்தத் தூண்கள் நின்று கொண்டு இருக்கின்றன.  பக்கத்தில் இருக்கும் ஏழு அடுக்குக் கோபுரத்தில் ஏறித் தங்கள் கவிதைகளையும் கருத்துக்களையும் உச்சியில் எழுதவும் அனுமதிக்கப்பட்டதாம்.  இவை சீ’அன் நகரத்தின் பழமையை எடுத்துக் காட்டும் சின்னமாக நிற்கின்றன. இன்று பெற்றோர்கள்> அரசுத் தேர்வு எழுதும் தங்கள் குழந்தைகளை அழைத்துக் கொண்டு இந்த இடத்திற்கு வந்து இந்த நான்கு தூண்களைக் காட்டி வணங்கிச் செல்வார்களாம்.

வலது பக்கக் கூடங்களுக்கு அடுத்துச் சென்றோம். மையமாக தங்க நிறத்தாலான ஒரு பெரிய உருவமும்> அதைச் சுற்றி அதேப் போன்ற ஐநூறுக்கும் மேற்பட்ட சிறு உருவங்களும் அழகிய விளக்கொளியில் அமைக்கப்பட்டு இருந்தன.  பளபளவென்று கூடமே ஜொலித்தது.  அந்த உருவம் தான் இந்த மடாலயத்தை நிறுவிய சுவான் ஜங் துறவி. கோபுரத்தைக் கட்டும் பணியில் முக்கியப் பங்காற்றியவரின் சிலையே அது.

ஒரு கூடத்தில் செல்வத்திற்கான கடவுளின் கூடம்.  பயணிகள் யாரும் தப்பாமல் வந்து செல்லக் கூடிய இடம்.  நாங்கள் மட்டும் விதிவிலக்கல்லவே.  செல்வக் கடவுளை வணங்கினோம்.

அடுத்து சீன வாஸ்துவாகக் கருதப்படும் புங் சுய் முறைப்படி கட்டப்பட்டக் கூடத்தின் முன்பகுதியை விளக்கினார். அந்தக் கூடத்தின் கூரையில் அழகிய வண்ணங்களால் ஆன ஓவியங்கள்.  அதில் ஒரு புறம் அருவி> அடுத்து பறவை> அடுத்து குதிரை> அடுத்து மலை என்று பல விதமான வண்ண ஓவியங்கள் அழகாக தீட்டப்பட்டு இருந்தன.  ஒவ்வொன்றும் குடும்பத்திற்கு ஒவ்வொரு நலனைக் கொண்டு வரக் கூடியது என்று சீனர்கள் நம்புவதாகச் சொன்னார்.

இறுதியில் பாதுகாப்பான கூடம் என்று சொல்லி ஒரு கூடத்திற்கு எங்களை அழைத்துச் சென்றார் ஜூலியா.  அங்கே பழங்காலப் புத்தச் சூத்திரங்கள் எழுதப்பட்ட ஏடு கண்ணாடிக் கூண்டு ஒன்றில் அமைத்து பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தது.  அது பாலி மொழியில் எழுதப்பட்டு இருக்கலாம் என்று எண்ணுகின்றனர்.  சீனாவில் இருந்த மிகப் பெரிய நான்கு புத்த மத சூத்திர மொழிபெயர்ப்புக் கூடங்களில் அதுவும் ஒன்றாம்.  சூத்திர ஏடுகளில் ஒன்றைத் தவிர மற்ற அனைத்தும் கோபுரத்தின் அடியில் பாதுகாப்பாக அமைக்கப்பட்ட அருங்காட்சியகத்தில் இருக்கின்றனவாம். மேலும் வண்ணப்படங்கள் பல அறையின் சுவற்றில் சுற்றிலும் இருந்தன.  அதில் அம்மடத்தின் குருக்குள் பலரும் சீனத் தலைவர்களுடன் எடுத்துக் கொண்ட படங்கள் இருந்தன.

பிறகு அடுத்தக் கூடத்திற்குச் சென்றோம். அங்கு துறவிகள் வரைந்த பற்பல ஓவியங்கள் கொண்ட கண்காட்சி இருந்தது.  ஓவியங்கள் ஒவ்வொன்றும் பொக்கிஷம் என்றே சொல்ல வேண்டும்.  தலைமைத் துறவி வரைந்த ஒரு ஓவியம்> சீன எழுத்தைச் சித்தரித்தாலும்> அதிலேயே ஒரு தாயும் சேயும் உள்ளது போன்று சிறப்பாக வரைந்திருந்தார். நாம் அங்கு சீனர்களின் மையினால் எழுதப்படும் காலிகிரபி என்ற எழுத்துக் கலையின் அம்சங்களைக் காண முடிந்தது.  நாமும் சீன மையினால் எழுத்துக்களை எழுதிப் பார்க்க வசதி இருந்தது.  அதற்கடுத்து மற்ற எல்லாச் சுற்றுலா தலங்களில் இருப்பது போன்று நினைவுப் பொருட்கள் விற்பனைக் கூடம் இருந்தது.

இந்த இடத்திற்கு எதனால் இந்தப் பெயர் என்று கேட்டதற்கு ஒரு கதையைச் சொன்னார். இந்த மடத்தில் இருந்தத் துறவிகள் அனைவரும் உணவாக மாமிசத்தையே உண்டு வந்தார்களாம்.  ஒரு நாள் மாமிசம் ஏதும் கிடைக்காத காரணத்தால்> வருத்தத்துடன் கடவுளை வேண்டிக் கொண்ட போது> அங்கே பறந்து சென்ற பெரிய காட்டு வாத்து திடீரென்று சிறகொடிந்து கீழே விழுந்து இறந்ததாம்.  அதைக் கண்ட துறவிகள்> இறந்த அந்த வாத்தை உண்ண மனம் வராமல்> அதை அங்கே புதைத்து மரியாதை செய்தார்களாம்.  அன்றிலிருந்து மாமிசம் உண்பதையே நிறுத்த முடிவு செய்தார்களாம்.  அது கீழே விழுந்த இடத்தை நினைவு கூறும் வகையில் இந்தக் கோயிலைக் கட்டினார்களாம்.  இதில் எவ்வளவு உண்மை இருக்கும் என்று தெரியாத போதும்> கேட்பதற்கு சுவாரசியமாக இருந்தது மட்டும் உண்மை.

கோபுரத்தின் நேர் முன்னே வெளியே ஒரு பெரிய சிலையாக நிற்கிறார் சுவான் ஜங்.

நாங்கள் காலையில் சென்றதால்> அங்கு இசை நீரூற்று இருப்பதைப் பற்றி மட்டும் அறிந்து கொண்டோம். ஆசியாவிலேயே மிகப் பெரியதாம். குளிர் காரணமாக பயணிகள் அதிகம் வராத டிசம்பர் மாதத்தில் நாங்கள் சென்ற காரணத்தால்> இசை ஊற்று செயல்படவில்லை என்றும் கேள்விப்பட்டோம். நாங்கள் வசித்து வரும் ஹாங்காங் நகரின் ஒரு பகுதியான டான் டாவ் பகுதியில் சிறிய இசை நீரூற்று செயல்படுவதை அடிக்கடி கண்டு ரசித்திருந்த காரணத்தால், அதை நாங்கள் காண முடியவில்லையே என்ற வருத்தத்துடன் தான் அங்கிருந்து கிளம்பினோம்.

இந்த ஏழு தள கோபுரத்தைப் போன்றே உயரத்தில் சற்றே குறைந்த ஆனால் 15 தளங்களைக் கொண்ட சிறிய காட்டு வாத்துப் பகோடாவும் இந்த நகரில் இருப்பதைப் பின்னர் கேள்விப்பட்டோம்.  சென்று காணும் வாய்ப்பு எங்களுக்கு இருக்கவில்லை. இருந்தாலும் இந்தப் பரந்து விரிந்து காணப்படும் பெரிய காட்டு வாத்து பகோடா நிச்சயம் புத்த மதத்திற்கு கட்டியங் கூறும் வகையில் நிமிர்ந்து நிற்பதைக் காண முடிந்தது மகிழ்ச்சியைக் கொடுத்தது.

Series Navigationஆத்ம கீதங்கள் –15 காத்ரீனா காதலனுக்கு எழுதியது.. ! முடிந்தது நம் காதல்சோசியம் பாக்கலையோ சோசியம்.
author

சித்ரா சிவகுமார், ஹாங்காங்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *