ரஜினிக்கு ஒரு திறந்த மடல்.

author
4
0 minutes, 7 seconds Read
This entry is part 2 of 19 in the series 31 டிசம்பர் 2017

பி.ஆர்.ஹரன்

அன்புள்ள ரஜினிகாந்த்

வணக்கம்
ஆழ்ந்த ஆலோசனைக்குப் பிறகு, அந்த ஆண்டவனையும் ஆதரவானவர்களையும் நம்பி, அமைதியான முறையில், அழுத்தமான அறிமுக உரையுடன், அரசியலில் நுழைந்திருக்கிறீர்கள்.

வரவேற்கிறேன். பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள்!!
எனக்குத் தேவை “தொண்டர்கள்” அல்ல; “காவலர்கள்” என்று கூறியதன் மூலம் உங்களை வாழவைத்த தெய்வங்களான உங்கள் ஆதரவாளர்கள் தமிழகத்தைக் காவல் காக்கும் தெய்வங்களாக விளங்க வேண்டும் என்று உணர்த்தியுள்ளீர்கள்.
உங்களுடைய மந்திரமாக “உண்மை, உழைப்பு, உயர்வு” என்று உச்சரித்துள்ளீர்கள். உண்மையாக உழைத்தால் உயர்வு கிட்டும் என்று உங்கள் காவல்படைக்கு உங்கள் மந்திரத்தின் பொருளை உணர்த்தியுள்ளீர்கள்.
உங்கள் கொள்கைகளாக, “நல்லதே நினைப்போம்; நல்லதே பேசுவோம்’ நல்லதே செய்வோம்; நல்லதே நடக்கும்” என்கிற நல்ல எண்ணங்களை வழங்கியுள்ளீர்கள். உங்கள் காவல் படையை நல்ல முறையில், நல்வழியில் நடத்திச் செல்ல வேண்டும் என்கிற உறுதி வெளிப்படுகின்றது. அவர்கள் நல்ல நோக்கத்துடன் செயல்பட வேண்டும் என்று குறிப்பால் உணர்த்தியுள்ளீர்கள்.
“அடுத்த கட்சிகளை விமர்சனம் செய்ய வேண்டாம். அதற்கு ஆயிரம் பேர்கள் வெளியில் இருக்கிறார்கள். நாம் நம்மைக் கவனிப்போம்; நம் வளர்ச்சிக்காக உழைப்போம்” என்று சொன்னதன் மூலம் அரசியலில் ஒரு புதிய பண்பாட்டை உருவாக்க முயற்சிக்கிறீர்கள்.
அதே சமயத்தில், “அரசியல் என்கிற குளத்தில் எற்கனெவே நிறைய பேர் நீச்சலடித்துக்கொண்டிருக்கிறார்கள்; நமக்கும் நீச்சல் தெரியும்; ஆனால் நாம் தரையில் இருக்கிறோம்; இன்னும் குளத்தில் இறங்கவில்லை; குளத்தில் இறங்கினால் நீந்தத்தான் வேண்டும்; நீந்தி முன்னேறுவோம்” என்று கூறியதன் மூலம், அடுத்த கட்சிகளை விமர்சிக்கத் தேவையில்லை என்றாலும், அவர்களைக் கண்காணிக்க வேண்டும் என்பதையும் உணர்த்தியுள்ளீர்கள்.
அருமையான தெளிவான ஆரம்பம். மீண்டும் என் வாழ்த்துகள்!
நிற்க…
“ஆன்மிக அரசியல்” என்று ஒரு பதத்தை முன்வைத்துள்ளீர்கள். இதை அந்த ஆண்டவனே எதிர்பார்த்திருக்க மாட்டார். அப்படியிருக்க, ஏற்கனவே அரசியல் வியாபாரம் செய்துகொண்டிருக்கும் கூட்டங்களுக்கு எப்பேர்பட்ட அதிர்ச்சியாக அந்தப் பதம் இருந்திருக்கும் என்பதைக் கற்பனை செய்து பார்த்தால் சுவாரஸ்யமாக உள்ளது.
தங்களை ஆன்மிகவாதியாகக் காட்டிக்கொள்ளும் வேடதாரிகள் நிறைந்த கூட்டத்தில் உண்மையான ஆன்மிகவாதியாக உங்களை முன்நிறுத்திக்கொள்ள நீங்கள் தயங்கியதில்லை என்பதை நன்றாக அறிந்தவன் என்கிற முறையில், எந்த நோக்கத்தில் இந்த “ஆன்மிக அரசியல்” என்கிற பதத்தை நீங்கள் முன்வைத்துள்ளீர்கள் என்பதையும் நான் புரிந்துகொள்கிறேன். தங்கள் நோக்கத்திற்கு என் பாராட்டுகள்.
இருப்பினும், ஆன்மிக அரசியல் பற்றிய எனது புரிதலை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
நமது பாரத தேசம் தர்ம பூமி. நமது தேசத்தைப் பொறுத்தவரை மதம், கலாச்சாரம், ஆன்மிகம், அரசியல் ஆகியவை எல்லாமே “தர்மம்” என்பதன் கீழ் அடங்கிவிடுகின்றன. ஆகவே தான் ஹிந்து மதம் என்பதைவிட “சனாதன தர்மம்” என்பது மிகவும் பொருத்தமானதாக உள்ளது.
இந்த தேசத்தில் ஆன்மிகம் மட்டுமல்ல. அரசியலும் ஆட்சியும் கூட தர்மத்தின் வழிப்படிதான் நடந்துகொண்டிருந்தன. ஏன் யுத்தங்களும் கூட தர்மத்திற்குக் கட்டுப்பட்டு நடந்தன. ஆயினும் அதர்மத்தின் கைகள் ஓங்கிய தருணங்களும் உண்டு. அப்போதெல்லாம் ஆண்டவனே அவதரித்து வந்து அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டினான். நமது இதிஹாசங்களே அதற்கு நல்லுதாரணங்கள்.
அவ்வாறு அதர்மத்தை அழித்துத் தர்மத்தை நிலைநாட்ட வேண்டுமானால் ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் தோஷமில்லை என்கிற உண்மையும் நமது தர்மத்தில் நிலைநாட்டப்பட்ட ஒன்றுதான். நீங்கள் விரும்பும் கிருஷ்ணனின் கீதை காட்டியுள்ள அஹிம்சை அதுதான். கிருஷ்ணனின் கீதை காட்டியுள்ள அஹிம்சையே நமது தர்மம்.
நமது பாரம்பரியத்தில் அரசியலும், ஆன்மிகமும் பிணைந்திருப்பதே தர்மம். அரசர்கள் அரசியல் நடத்தி ஆட்சி புரிந்தது ஆன்மிகக் குருமார்களின் வழிகாட்டிய தர்மத்தின்படிதான். ராமருக்கு வசிஷ்டர், சந்திரகுப்தனுக்கு சாணக்கியர், ஹரிஹர புக்கருக்கு வித்யாரண்யர், சிவாஜிக்கு சமர்த்த ராமதாசர் என்று நமது அரசியல் மற்றும் ஆட்சிமுறைப் பாரம்பரியம் ஆயிரம் வரலாறுகளைச் சொல்லும்.
ஆகவே, நமது ஆன்மிகப் பாரம்பரியத்தில் பற்றும் தெய்வ நம்பிக்கையும் கொண்ட நீங்கள், நமது சனாதன தர்மம் காட்டியுள்ள ஆன்மிக அரசியலைத்தான் முன்வைக்கிறீர்கள் என்று பரிபூரணமாக நம்புகிறேன். என்னைப்போன்றே நமது பாரம்பரியத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ள கோடிக்கணக்கான மக்களும் அதே நம்பிக்கையைக் கொண்டிருப்பார்கள் என்றும் நினைக்கிறேன். அந்த நம்பிக்கையின்பாற்பட்டு, சில முக்கியமான விஷயங்களை உங்கள் முன் வைக்கின்றேன்.

1. சமீப காலங்களாக நமது தேசத்தை நிர்மூலமாக்கும் நோக்கத்துடன் பல பயங்கரவாத, தீவிரவாத, பிரிவினைவாத இயக்கங்களும் அமைப்புகளும் தோன்றி செயல்பட்டு வருகின்றன. தமிழகத்திலும், அவ்வியக்கங்கள் செயல்பட்டு வருகின்றன. அவை அன்னிய தேசங்களின் உதவியுடன் நமது தேசத்தின் இறையாண்மையைக் கெடுக்கும் விதமாக இயங்குகின்றன. ஆகவே நமது தர்மத்தின் படியான அஹிம்சை, கிருஷ்ணன் காட்டிய அஹிம்சை கொள்கை முக்கியமானதாக இருக்கிறது. இந்த அஹிம்சைக் கொள்கையைக் கடைப்பிடித்து, பயங்கரவாதம், தீவிரவாதம், பிரிவினைவாதம் போன்ற அதர்மங்களை அழித்துத் தர்மத்தை நிலைநாட்ட வேண்டும்.

2. நமது பாரம்பரியமான ஜீவ காருண்யம் நமது தர்மத்தின் அடிப்படை. அனைத்து ஜீவராசிகளையும் கருணையுடன் பேண வேண்டும் என்பது நமது தர்மம். ஆகவே, வளர்ச்சி என்கிற பெயரில் வனவுயிரினங்களின் வாழ்வுக்குக் கேடு விளையும்படி காடுகளை அழிப்பதை நிறுத்த வேண்டும். நமது தேசத்தின் முதுகெலும்பாகத் திகழும் விவசாயம் மற்றும் வேளாண்மைக்குப் பயன்படும் கால்நடைச் செல்வங்களைக் காக்க வேண்டும்; நமது தர்மத்தின்படி நாம் தாயாகப் போற்றும் பசுவைக் காப்பாற்ற பசுவதையைத் தடுத்து நிறுத்த வேண்டும். நமது அரசியல் சாஸனத்தில் “அரசுக் கொள்கைக்கான வழிகாட்டுக் கோட்பாடுகள்” (Directive Principles of State Policy) என்கிற கொள்கையின் கீழ் 48வது க்ஷரத்து, “பசுக்கள், கன்றுகள், கறவை மிகுந்த மற்றும் வறட்சி அடைந்த கால்நடைகள் ஆகியவற்றைக் கொல்வதைத் தடுக்கவும், அந்தக் கால்நடை வகைகளைப் பாதுகாத்துப் பெருக்கவும், தேவையான நடவடிக்கைகளை நவீன மற்றும் விஞ்ஞானப் பூர்வமாக எடுத்து, வேளாண்மையையும் கால்நடைப் பராமரிப்பையும் ஒழுங்குபடுத்தி அமைக்கும் முயற்சியை அரசு மேற்கொள்ள வேண்டும்” என்று “வேளாண்மை மற்றும் கால்நடைப் பராமரிப்பு ஒழுங்கமைப்பு” என்கிற தலைப்பின் கீழ் குறிப்பிடுகிறது. ஆகவே, கல்நடைச் செல்வங்களைக் காப்பாற்ற வேண்டியது அவசியமான தார்மீகக் கடமையாகும்.

3. ஆலயங்கள் நமது ஆன்மிகப் பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் சின்னங்கள். அவ்வாலயங்களும் ஆலயப்பாரம்பரியமும் பல சமுதாயத்தினருக்கு வாழ்வாதாரங்களாக இருக்கின்றன. அந்த வாழ்வாதாரங்களைப் பாதுகாத்து அம்மக்களின் முன்னேற்றத்துக்கு வழிவகை செய்தவர்கள் நமது மன்னர்கள். ஆனால், இன்றைய சூழலில் ஆலயங்களை வெறும் வியாபாரத்தலங்களாக ஆக்கி அரசாங்கத்திற்கு வருமானம் பெருக்குவதாகச் சொல்லி, ஆலயங்களைக் கொள்ளை அடித்துத் தங்களின் சுயலாபங்களைப் பெருக்கிக் கொண்டிருக்கின்றனர் ஆட்சியாளர்களும் அரசு அதிகாரிகளும். ஆகவே, அறநிலையத்துறையை ரத்து செய்து, ஆலயங்களை மீண்டும் ஹிந்துக்களிடமே கொடுக்க வேண்டும். தனியார் மற்றும் அன்னிய மதத்தவரின் ஆளுகையில் உள்ள ஆலயங்களின் சொத்துக்களை மீட்டெடுக்க வேண்டும். ஆலயங்களைப் பராமரிக்க குருமார்கள், ஆன்மிகப் பெரியவர்கள், ஹிந்து பக்தர்கள் கொண்ட குழுக்களை அமைக்க வேண்டும். ஆலயங்களைச் சார்ந்துள்ள கலைகளையும் வளர்க்க வேண்டும்.

4. அரசியலிலிருந்து மதத்தைப் பிரிப்பது என்பது மேற்கத்திய, அதாவது கிறிஸ்தவக் கோட்பாடு. Separating Religious Institution (Church) from Government Institution is “Secularism” in western or Christian parlance. ஆனால், நம்முடையது மதமே அல்ல; மதம் என்பது குறுகிய பார்வை; நம்முடையது தர்மம் என்கிற பரந்த கோட்பாடு; ஏற்கனவே சொன்னது போல, தர்மம் என்பதனுள்ளேயே ஆன்மிகம், கலாச்சாரம், அரசியல், ஆட்சி, அனைத்தும் அடங்கிவிடுகின்றன. ஆனால் நமக்குக் கொஞ்சமும் ஒவ்வாத, தேவையில்லாத மேற்கத்திய Secularism என்கிற கோட்பாட்டைத்தான் இங்கே மதச்சார்பின்மை என்று குழப்பிக்கொண்டு, அந்தப் பெயரில் சிறுபான்மையினர் உரிமைகள் என்று கிளப்பிவிட்டு, அந்தக் கோட்பாட்டைப் பின்பற்றி, சமூகத்தையும் நாட்டையும் குட்டிச் சுவராக்கிவிட்டார்கள். அரசியல் சாஸனத்திலேயே கூட, மதச் சுதந்திரம், கல்வி உரிமைகள் என்று பல க்ஷரத்துகள் நேர்மறை அரசியலுக்கு எதிராகவே உருவாகப்பட்டுள்ளன. பிறகு அரசியல் சாஸனத்தின் முகவுரையில் (Preamble of the Constitution) “மதச்சார்பற்ற” (Secular) மற்றும் ”பொதுநல” (Socialist) என்கிற வார்த்தைகளைச் சேர்த்து மேலும் எதிர்மறை அரசியலுக்கு வழிவகுத்து விட்டார்கள். இதன் விளைவாக சிறுபான்மையினரின் மக்கள்தொகைக்குச் சம்பந்தமில்லாமல் அவர்களின் வழிபாட்டுத்தலங்களும், கல்வி நிலையங்களும், அசையாச் சொத்துக்களும் பெருகி வருகின்றன. அவர்கள் பெரிதும் மதமாற்றத்தில் ஈடுபடுகின்றனர். மதமாற்றம் இந்த தேசத்தின் ஆன்மிகப் பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் அழிக்கும் புற்றுநோயாகப் பரவிவருகின்றது. இந்தப் போக்கு நிறுத்தப்பட வேண்டும். அதற்கு முக்கியமாக மதமாற்றங்கள் தடை செய்யப்பட வேண்டும். தடையை மீறி மதமாற்றத்தில் ஈடுபடுபவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். மதச் சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதையும், மதமாற்றத்தில் ஈடுபடுவதையும் நிரந்தரமாகத் தடை செய்ய சட்டம் இயற்ற வேண்டும்.

5. நமது முன்னோர்கள் தேசியத்தையும் தெய்வீகத்தையும் இரு கண்களாகக் கொண்டவர்கள். இந்த தேசத்தையே தெய்வமாக, பராசக்தியின் வடிவாக, பாரத மாதாவாகக் கண்டவர்கள். பல்வேறு மொழிகள், பல்வேறு சமூகத்தினர் என்று பரந்துபட்ட இந்த தேசம், கலாச்சாரம் என்கிற ஒற்றைக் கோட்பாட்டினால் ஒற்றுமையாகத் திகழ்ந்து வருகின்றது. அதன் காரணமாகவே ஆயிரம் ஆண்டுகள் படையெடுப்பையும் சமாளித்து வெற்றி கண்டு இன்னும் ஒருமைப்பாட்டுடன் திகழ்கிறது. ஆனால் சமீப காலங்களில், கருத்துச் சுதந்திரம், கலைச் சுதந்திரம், மதச் சுதந்திரம், என்ற பெயர்களில் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் தேசப் பாதுகாப்புக்கும் பங்கம் விளைவிக்கும் விதமாக தேச விரோத அமைப்புகள் பல்கிப்பெருகி, தேச விரோதச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றன. அத்தகைய அமைப்புகளும், அவற்றின் நிதி ஆதாரங்களும் செயலிழக்கச் செய்யப்பட வேண்டும்.

மேற்கண்ட ஐந்து விஷயங்களும் ஆன்மிக அரசியலில் மிகவும் முக்கியமான அம்சங்கள். அவைகளே ஆன்மிக அரசியலின் அடிப்படை எனலாம். இந்த ஐந்து அம்சங்களும் நிறைவேற்றப்பட்டால், நாட்டின் கலச்சாரமும், ஆன்மிகப் பாரம்பரியமும், இறையாண்மையும், ஒற்றுமையும் பாதுகாக்கப்படும். அப்பேர்பட்ட நிலை உருவானால் நாட்டில் அமைதி நிலவும்; முன்னேற்றமும் வளர்ச்சியும் துரிதமாக நடைபெறும்.

எனவே, உங்களுடைய ஆன்மிக அரசியலில் இந்த ஐந்து அம்சங்கள் மீதும் கவனம் செலுத்துவீர்கள் என்று நம்புகிறேன். திருவருளும், குருவருளும் பெற்று உங்களுடைய முயற்சிகள் வெற்றிபெற வாழ்த்துகள்!

நன்றி, அன்புடன்

பி.ஆர்.ஹரன்
சென்னை. .

Series Navigation2020 – 2025 ஆண்டுகளில் செவ்வாய்க் கோளுக்கு மனிதர் வசிப்புப் போக்குவரத்துக்கு மாபெரும் புதியதோர் அண்டவெளித் திட்டம்.என்சிபிஎச் வெளியீடு சுதந்திரப்போரில் திருப்பூர் தியாகிகள்
author

Similar Posts

4 Comments

  1. Avatar
    smitha says:

    Haran,

    You have very high hopes on rajini. He will never be able to accomplish even a fraction of what you have stated.

    “அடுத்த கட்சிகளை விமர்சனம் செய்ய வேண்டாம். அதற்கு ஆயிரம் பேர்கள் வெளியில் இருக்கிறார்கள். நாம் நம்மைக் கவனிப்போம்; நம் வளர்ச்சிக்காக உழைப்போம்” என்று சொன்னதன் மூலம் அரசியலில் ஒரு புதிய பண்பாட்டை உருவாக்க முயற்சிக்கிறீர்கள்.

    This is nothing but escapism. A person aspiring to becoming a politician must have clear cut views on all topics. He cannot & should not keep quiet.

    Rajini has media hype & nothing else. Ground reality is something different. He will realize it soon.

  2. Avatar
    ஷாலி says:

    பாவம் ரஜினிகாந்த்! இவரின் “ஆன்மீக” அரசியல் எனும் ஒற்றைச் சொல்லை கையில் எடுத்து, கட்டுரையாளர் ஹரன் காமெடி பண்ணுகிறார்.

    உண்மையில் நாமும் மிரண்டுவிட்டோம், தமிழக மக்களின் நல்வாழ்வுக்கு உயரிய திட்டங்கள், காவிரி மேலாண்மை,நதி நீர் இணைப்பு,விவசாயிகளுக்கு வாழ்வாதாரம் காக்க வேண்டுகோள் வைப்பார் என்று பார்த்தால்….உஹூம்

    …அவரது மாமூலான வாயில்லா ஜீவன் தெய்வீக மிருகங்கலான பசு,ஆனைக்கு பாதுகாப்பு கோரிக்கையைத்தான் முதலில் வைக்கிறார்.
    ஏழை,பாழை,விவசாய, தொழிலாளர்கள், விலைவாசி பற்றிய கவலையோ நல்லெண்ணமோ எதுவுமில்லை. “ கெடக்கிறதெல்லாம் கெடக்கட்டும் கெழவியை தூக்கி மனையில் வை!” என்ற கதையாக கணக்குப் போடுகிறார்,

    // நமது சனாதன தர்மம் காட்டியுள்ள ஆன்மிக அரசியலைத்தான் முன்வைக்கிறீர்கள் என்று பரிபூரணமாக நம்புகிறேன். என்னைப்போன்றே நமது பாரம்பரியத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ள கோடிக்கணக்கான மக்களும் அதே நம்பிக்கையைக் கொண்டிருப்பார்கள்..//

    இவர் கூறும் கோடானுகோடி கோடி மக்கள் யார்? சேரியில் கிடக்கும் குப்பனும் சுப்பனும் அல்லவா? ரஜினிகாந்த்தின் ஆன்மீக அரசியல் இவர்களை அக்ரஹாரத்தில் குடி ஏற்றுமா? சொல்லுங்கள் ஹரன்! நிச்சயமாக இல்லை என்றால் எதிர்க்கப்பட வேண்டியதற்கு ஹரனுடன் ரஜினிகாந்தும் தகுதியானவரே!

  3. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    ரஜினி
    ரஜினிதான் !
    ரஜினி
    கஜினிதான் !
    ராமன் ஆண்டாலும்
    ராவணன் ஆண்டாலும்
    எனக்கொரு கவலை இல்லை
    என்று பாடியவர்
    ரஜினி அல்லவா ?
    புதுக்கட்சியின்
    பேரென்ன ?
    வேரென்ன ?
    கொடி வடிவென்ன ?
    தேர்தல்
    சின்னம் என்ன ?
    எத்தனை பேர்
    தேரை இழுக்கப் போறார் ?
    கஜினி
    பதினெட்டு முறை
    படை எடுத்தான் !
    புயல் காற்றில்
    ரஜினியின்
    காயிதப் படகு
    கடலில் மிதக்குமா ?
    நீந்துமா ?
    மூழ்கிப் போகுமா ?

    சி. ஜெயபாரதன், கனடா

  4. Avatar
    Yousuf riwther Rajid says:

    வணக்கம்
    தங்களின் கட்டுரைக்கு பாராட்டுக்கள் மதச்சார்பற்ற நாடாக்பார்க்காமல் இந்துத்துவ நாடாக மட்டுமே பார்ப்பதுபோல்
    தோன்றுகிறது

Leave a Reply to Yousuf riwther Rajid Cancel reply

Your email address will not be published. Required fields are marked *