ரஞ்சினியும், இஞ்சி கசாயமும்

author
0 minutes, 0 seconds Read
This entry is part 13 of 42 in the series 25 நவம்பர் 2012

கலைச்செல்வி

காலையில் எழுந்துக்கொள்ளும் போதே ரஞ்சனிக்கு தூக்கம் வந்தது. ஆனாலும் அம்மாவின் இடைவிடாத குரல் அவளை படுக்கையிலிருந்து எழ வைத்து விடுகிறது.
“ரஞ்சு.. கீசர் போட்டு வச்சாச்சு.. எழுந்திரிச்சு போய் குளி..” சமையலறையிலிருந்து அம்மாவின் குரல் கேட்டது. வேகவேகமாக எழுந்து, நேரே குளியலறைக்குச் சென்றாள் ரஞ்சினி. அவள் யூனிஃபார்முடன் குளியலறையிலிருந்து வெளியே வருவதற்குள் அம்மா லஞ்ச் கட்டி ரெடியாக வைத்திருந்தாள். தட்டில் நூடுல்ஸ்ஸ{ம், ஸ்பூனும் ரெடியாக இருந்தது. பக்கத்தில் ஹார்லிக்ஸ் ஒரு டம்ளரில் காத்திருந்தது. இரண்டு வாய் கூட முழுமையாக சாப்பிட முடியவில்லை அவளால். வாந்தி வருவது போல இருந்தது. சொல்ல வாயெடுத்தாள். திறந்த வாய்க்குள் அம்மா நூடுல்ஸை திணித்தாள். வாசலில் ஆட்டோகாரனின் ஹார்ன் சத்தம். அவசரமாக ஹார்லிக்ஸ் கலந்த பாலை விழுங்கி விட்டு ஆட்டோவில் ஏறிக்கொண்டாள். எதிரில் வாக்கிங் சூட்டில் அப்பா வீட்டுக்கு திரும்பிக்; கொண்டிருந்தார். இவளைக் கண்டதும் நின்று மெல்லிய சிரிப்புடன் கையசைத்தார். அவர் சொன்ன ‘பை’ செல்போனில் அப்பாவுடன் பேசிக் கொண்டிருந்தவருக்கா, இவளுக்கா என்ற புரிதலின்றி ‘பை’ சொல்லியவாறே கிளம்பினாள் ரஞ்சினி.
பத்து மணி சுமாருக்கு அலுவலகம் வந்து சேர்ந்திருந்த அம்மா, நகரின் அத்தனை அசதிகளையும் உடலில் தாங்கியவாறு அலுவலக வேலைக்கு தயார்ப்படுத்திக் கொள்ள எத்தனித்தாள். செல்போனின் திரையில் மின்னிய எண்களை நோட்டமிட்டாள். ‘ரஞ்சினி ஸ்கூல் நம்பர் தானே இது’ யோசனையோடு ஹலோ சொல்ல, எதிர்முனை பேச தொடங்கியது, ‘ரஞ்சினிக்கு உடம்பு சரியில்ல.. உடனே வந்து கூட்டிட்டு போங்க..” எனக்கு பதிலாக வேறு யாராவது ஃபோனை எடுத்திருந்தாலும் இப்படி தான் பேசியிருப்பார்களோ..? என்று வந்த எண்ணத்தை அம்மாவால் தடுக்க முடியவில்லை. ‘ரஞ்சினிக்கு உடம்பு சரியில்லைன்னு ஸ்கூல்லேர்ந்து ஃபோன் வந்துச்சு… அவளை கூட்டுட்டு வர்றீங்களா..?” கணவனுக்கு போன் செய்து கேட்டாள்.
“என்ன விளையாடுறியா…? இன்னிக்கு ஹெட்ஆபிஸ்லேர்ந்து சிஇ வர்றாங்கன்னுதானே நான் காலையிலேயே கிளம்பி வந்தேன்.. என்னால போக முடியாது.. நீ உடனே கௌம்பி போயி அவளை கூட்டிட்டு வந்துடு…”
ஆபிசரின் முகத்தை பார்க்காமலேயே அனுமதி கேட்டுக்கொண்டு கிளம்பினாள் அம்மா. ஆட்டோவை காத்திருப்பில் போட்டு விட்டு தலைமையாசிரியை அறைக்கு சென்றாள். “நான் ரஞ்சினியோட பேரன்ட் மேடம்..” அந்த அம்மாள் இவளை நிமிர்ந்து பார்க்காமல் அருகிலிருந்த நாற்காலியை நோக்கி கைக்காட்டியவாறு பஸ்ஸரை அமுக்கினாள். “ஸிக்ஸ்த் ஸ்டேண்டர்ட் ரஞ்சினியை கூட்டிட்டு வா..”. ஆயாவுடன் வந்த ரஞ்சினி மிகவும் களைத்திருந்தாள். பினோஃபார்ம் வெகுவாக நனைந்திருந்தது. தலைமையாசிரியர் நீட்டிய நோட்டில் கையொப்பமிட்டு விட்டு, மகளுடன் வெளியே வந்தாள்.
“ரொம்ப வாந்தியெடுத்துட்டாம்மா பாப்பா…” அம்மாவின் கேள்விகளுக்கு ஒரே வரியில் பதிலளித்து விட்டு புத்தகப்பையை அம்மாவிடம் கொடுத்து விட்டு நகர்ந்தாள் அந்த ஆயா. ஆட்டோவின் வேகத்தில் முகத்தில் மோதிய வெளிக்காற்று ரஞ்சினியை நிமிர்ந்து உட்கார வைத்தது. அவள் அம்மாவிடமிருந்து நகர்ந்து வெளியில் பார்வையை ஓட்டினாள். காலை நேர பரபரப்புகள் இல்லாத தெருக்கள் அவளுக்கு புதிதாக தோன்றியது. “ரஞ்சினி… வெளிய எட்டிப்பார்க்காதே.. திரும்ப வாந்தி வரும்.. வா.. வந்து அம்மா மடியில வந்து படுத்துக்கடா..” மகளை மடியில் படுக்க வைத்துக் கொண்டாள். அவளின் கைகள் மகளின் தலையை வருடிக் கொடுத்துக் கொண்டேயிருந்தது. ரஞ்சினிக்கு இப்போது தெருக்கள் படுக்கைவசத்தில் தெரிந்தது.
ஆட்டோ இன்னும் காத்திருப்பிலேயே இருந்தது. “ஒழுங்கா சாப்டாதானே.. சும்மா தீனியா கொறிச்சுட்டு கெடந்தா இப்டி தான் வாந்தி வரும்…” என்றவாறு ஜெலுசிலை அவள் வாயில் ஊற்றினாள். மாத்திரையை கொடுத்து படுக்க வைத்தாள். தயாராக வாங்கி வைத்திருந்த பிரெட் பாக்கெட்டை ரஞ்சனியின் பெட் அருகில் வைத்தாள். “காய்ச்சின பால் ஃபிரிட்ஜ்ல இருக்கு.. லைட்டா அடுப்புல வச்சு சூடு பண்ணிக்கிட்டு பால்ல பிரெட்டு தொட்டு சாப்புடு..” தண்ணீர் பாட்டிலையும் அருகில் வைத்து விட்டு மகளை எழுப்பி சொல்லிவிட்டு, வீட்டை வெளிப்புறமாக பூட்டி கொண்டு ஆட்டோவில் ஏறிக்கொண்டாள் அம்மா.
ரஞ்சினிக்கு இது ஒன்றும் புதிதல்ல. பள்ளி விடுமுறை தினங்களில் இப்படி தனிமையாக இருப்பது பழகி போய் விட்டது. முன்பெல்லாம் அக்கா இருப்பாள். இப்போது அவள் திருமணமாகி சென்றதிலிருந்து தனிமை பழகி விட்டது. ரஞ்சினிக்கும், அக்காவுக்கும் பன்னிரண்டு வயசு வித்தியாசம். இவள் பிறக்கும் போதே அக்கா ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள். அதுவரை ஒற்றை பிள்ளையாய் அத்தனை சந்தோஸங்களையும் அனுபவித்த அக்காவுக்கு குட்டிப்பாப்பாவின் வரவு சந்தோஸத்தை தரவில்லை. ரஞ்சு பள்ளியில் காலடி வைக்கும் போது அக்கா பத்தாம் வகுப்பில் இருந்தாள். ரஞ்சினிக்கு கார்ட்டூன் சேனல்; இல்லை. வருடாந்திர டூர் இல்லை. ஏன்.. லீவுக்கு கூட கிராமத்துக்கு போகவில்லை. ஜுஸ், வேகவைத்த பயறு என்று வீடு அமர்க்களப்பட்டது. ரஞ்சனியைக் கொஞ்சுவதுக் கூட திருட்டுத்தனமாகவே நடந்தது. மூன்று வருடங்களாக பழகி விட்ட வாழ்க்கை முறை அக்கா கல்லூரி சேர்ந்த பிறகு திடீரென்று தளர்த்தி கொள்ளப்பட ரஞ்சினிக்கு புதுவாழ்க்கை புரியவில்லை. அவளது ஹோம்வொர்க் நேரத்தில் டி.வி. சிரீயல்கள் புகுந்தன. கார்ட்டூன் கதாபாத்திரங்கள் ஓடின. நாட்டு நடப்புகள் அலசப்பட்டன. கிராமத்துக்;குக்; கூட போனார்கள்.
ரஞ்சினியின் பாட்டி வீட்டுக்கு பக்கத்து வீட்டில் அவள் வயதையொத்த காமாட்சி இருந்தாள். காமாட்சியின் பாட்டியிடம் அம்மா ஏனோ சரியாக பேசுவதில்லை. காமாட்சியின் அம்மா ஒரு நாள் ‘அந்த டவுன்காரி ரொம்ப திமிர்புடிச்சவ’ என்று சொல்லிக் கொண்டிருந்தாள். இவள் வருவதை கவனித்ததும் சட்டென பேச்சை மாற்றி “காமாச்சி… உன் கூட்டாளி வந்துருக்கா பாரு…” என்றாள்.
இவளும் காமாட்சியும் குட்டிக்குட்டியான சொப்பு சாமான்களில் சோறாக்குவார்கள். சொப்பு சாமானில் கேஸ் அடுப்பும் இருந்தது. அது வேண்டாம் என்று விறகடுப்பு சொப்பை வைத்துக் கொண்டாள் ரஞ்சினி. வீட்டுக்கு தெரியாமல் கொஞ்சம் அரிசி எடுத்து வந்தார்கள். முருங்கைக்கீரையை பறித்துத்தர சொல்லி தண்ணீர் ஊற்றி அதை குழம்பு என்பார்கள். தண்ணீரில் மஞ்சள்பொடி கலந்து ரசம் என்றார்கள். ரஞ்சினி ஃப்ராக்கில் மறைத்து எடுத்து வந்த கடுகை அதில் போடுவார்கள். சொப்பு தட்டுகளில் பரிமாறிய சாப்பாட்டினை இருவரும் சாப்பிடுவார்கள். அம்மா சாப்பிட அழைக்கும் போது ரஞ்சினிக்கு வயிறு நிறைந்திருக்கும். “நீ சாப்பிடறதுக்கு இப்டி அடம் பிடிச்சீன்னா இனிமே கூட்டிட்டு வர மாட்டேன்..” அம்மா பயமுறுத்திய பிறகு அள்ளி அள்ளி சாப்பிட்டாள் ரஞ்சினி.
பாட்டியுடன் வயலுக்கு போகும் போது மறக்காமல் காமாட்சியையும் கூட்டிக் கொள்வாள் ரஞ்சினி. இருவரும் தபதபவென்று கொட்டும் தண்ணீரில் கை வைத்து விளையாடுவார்கள். ‘ரஞ்சினி.. உங்கம்மா பாத்தா கத்துவா..” பாட்டி கையை பிடித்து தரதரவென்று இழுத்து வருவாள். காமாட்சிக்கு தானாகவே வர வழி தெரிந்திருக்கிறது. வீட்டிற்கு வந்தவுடன் அம்மா வேறொரு ஃபிராக் மாற்றி விட்டாள். சாப்பாடு பிசைந்து ஊட்டினாள். காமாட்சி நினைப்பாகவே இருந்தது ரஞ்சினிக்கு. ‘ரஞ்சிக்கு இதெல்லாம் சாப்டுட்டு பழக்கமில்லம்மா…” பாட்டியிடம் முணகலாக சொல்லிவிட்டு அம்மா நூடுல்ஸ் கிளறி கொடுத்தாள். ஊருக்கு கூட்டிச் சென்று விடுவாள் என்ற பயத்தில் வேகவேகமாக வாயை திறந்து ஊட்டிக் கொண்டவளுக்கு வாந்தி வரும் போல் இருந்தது.
காமாட்சி ரெண்டொரு நாளில் நன்கு பழகி விட்டாள். காலையிலேயே ரஞ்சினியை பார்க்க வந்து விட்டாள். ரஞ்சினிக்கு இன்னும் தூக்கமே கலையவில்லை. “பாட்டீ.. ரஞ்சினி எங்க…?” என்ற காமாட்சியைப் பார்த்து “உஸ்.. மெதுவா பேசு.. பாப்பா எழுந்துக்குவா…” என்றாள் அம்மா. “புதுசா பாப்பா வந்துருக்கா அத்தை…?” என்றாள் காமாட்சி. “ரஞ்சினிய தான் சொல்றா..” என்றவாறு பாட்டி அவளை தள்ளிக்கொண்டு வெளியே வந்தாள். அதற்குள் சத்தம் கேட்டு வந்தாள் ரஞ்சினி. “அய்.. காமாட்சி.. ரெண்டு பேரும் இப்ப பல்லாங்குழி வெளையாடுலாமா…?” என்றாள் ஆர்வமாக.
“ரஞ்சூ.. காலையிலேயே என்னா விளையாட்டு…? போய் டாய்லெட் போயிட்டு பிரஸ் பண்ணிட்டு வா..” என்றாள் அம்மா அதட்டலாக. காமாட்சியின் அருகில் வந்த ரஞ்சினி “நான் பிரஸ் பண்ணிட்டு ஃபேஸ் வாஸ் பண்ணிட்டு வர்றேன்…” என்று சொல்லி விட்டு பின்கட்டில் இருந்த பாத்ரூம்க்கு விரைந்தாள். ரெடியாக அம்மா கையில் வைத்திருந்த ஹார்லிக்ஸை கையில் வாங்கியவள், டம்ளரோடு காமாட்சியின் வீட்டுக்கு போனாள். காமாட்சியோட அம்மா சோற்றை வடித்துக் விட்டு, அந்த அலுமினிய சோற்றுப்பானையில் சாம்பல் பட்டையை பூசிக் கொண்டிருந்தாள். “அய்… ஆன்ட்டீ… ஏன் ரைஸ் பாட்ல விபூதி பூசுறீங்க…?” என்றாள். அவள் கையிலிருந்த டம்ளரை எட்டிப் பார்த்தாள் காமாட்சி. “என்னா குடிக்கிறே.. சோத்து கஞ்சியா…?” என்றாள். “இல்ல… ஹார்லிக்ஸ்”
இருவரும் பல்லாங்குழி, சில்லி ஆடினார்கள். காமாட்சியின் அப்பா ஆட்டை இறுக்கமாக பிடித்துக் கொள்ள அதை மெதுவாக தொட்டுப் பார்த்தாள் ரஞ்சினி;. ஆடு சிலிர்த்துக் கொண்டது. மூடியிருந்த கோழி கொடாப்பை ரஞ்சினி திறந்து விட அன்று அடிப்பதற்காக வைத்திருந்த கோழி விர்ரென்று வெளியே ஓடியது. “ஏன் பாப்பா.. தொறந்து வுட்ட…?” என்றவாறு காமாட்சியின் அம்மா அதை ஓடி ஓடி பிடிக்க முயன்றாள். வெற்றுடம்போடு வந்த காமாட்சியோட தம்பியின் இடுப்பு அரைஞானில் தொங்கிக் கொண்டிருந்த தாயத்துகளை தொட்டுப் பார்த்தாள். அவன் வாயில் ஏதோ இருந்தது. “என்னடா சாப்டுற..? ஆ காட்டு…?” என்ற ரஞ்சினியை பார்த்து சிரித்துக் கொண்டே ‘ஆ’ காட்டினான் குட்டித்தம்பி. அந்த மாதிரி காயை அவள் பெரிய டிபார்ட்மெண்ட் ஸ்டோரின் காய்கறி செக்ஸனில் பார்த்திருக்கிறாள். அம்மா அதை கூஸ்பெரி என்பாள். காமாட்சி அதை ‘நெல்லிக்கா’ என்று சொன்னாள். அவளது ஃப்ராக் இப்போதெல்லாம் ரொம்ப அழுக்காகி விடுவதாக அம்மா வேலை செய்யும் கிழவியிடம் சொன்னாள்.
ஊருக்கு போகும் நாளும் வந்தது. அப்பா கார் எடுத்துக் கொண்டு வந்திருந்தார். பாட்டி காரின் டிக்கியில் ஊறுகாய் பாட்டில்கள், சாம்பார் பொடி, பச்சை வேர்க்கடலை செக்கில் ஆட்டப்பட்ட எண்ணெய்கள் என பார்சல்களை உள்ளே திணித்தாள். வயிறு வலிக்கும் என வேர்க்கடலையும், சன்ஃப்ளவர் எண்ணெய் தான் சிறந்தது என எண்ணெய் கேன்களும், கண்ட எண்ணெயை தடவினால் முடிக்கொட்டும் என தேங்காய் எண்ணெயும், மாங்காய் ஊறுகாய் தேவையில்லை என ஊறுகாய் பாட்டில்களும் நிறுத்தி வைக்கப்பட துணிமணிகளுடன், சாம்பார்பொடி மட்டுமே பயணப்பட்டது.
கதவை திறந்துக் கொண்டு அம்மா உள்ளே வந்தாள். “ரஞ்சூ.. ரஞ்சூ… தூங்கீட்டீயா கண்ணு… அய்யய்யோ.. பிரெட்டெல்லாம் அப்டியே கெடக்கு..” மகளை தொட்டுப் பார்த்தாள். “கடவுளே.. ஃபீவர் நெருப்பா அடிக்குதே…” ஏசியை ரிமோட்டில் அணைத்தாள். “அம்மா.. காமாட்சி வர்ல…?” என்றாள் அம்மாவை கண்டதும் ரஞ்சு.
“கொஞ்சம் கூட பொறுப்பேயில்ல உங்களுக்கு.. எப்பப்பாரு ஆபிஸ் ஆபிஸ்ன்னு கெடந்தா குடும்பத்தை யாரு பாக்கறது…? நானும் தானே வேலை செய்றேன்.. இவளை வீட்ல விட்டுட்டு நான் ஆபிஸ் போகும்போதே மணி பன்னெண்டு ஆயிடுச்சு.. திரும்பவும் அஞ்சு மணிக்கு பர்மிஸன் கேட்டு, வாங்கி கட்டிக்கிட்டு தான் வீட்டுக்கு வந்தேன்… இவ என்னடான்னா ஒண்ணுமே சாப்பிடாம தூங்கி போயிட்டா… உடம்பு நெருப்பா கொதிக்குது..” டாக்டரின் போகும்போது அம்மா அப்பாவை திட்டிக் கொண்டே வந்தாள். ரஞ்சினியை அப்பா தோளில் சாய்த்திருந்தார். இருட்டில், தூரத்திலிருந்து வரும் வண்டியின் வெளிச்சம் அருகில் வந்து பின் கடந்துச் செல்வது அவளுக்கு வேடிக்கையாக இருந்தது. சில வெளிச்சம் வேகமாக அருகில் வந்து வேகமாக கடந்து சென்றது. சில மெதுவாக கடந்தது. சில இரட்டை வெளிச்சங்களாக கடந்தன. சில வெளிச்சங்கள் தொடர்ந்து வந்தன. சீக்கிரமே கிளீனிக் வந்து விட்டது. நேற்று சாப்பிட்ட ஜங்க் ஃபுட் அலர்ஜியாகி விட்டதாக சொல்லி டாக்டர் அந்த பிரிஸ்கிரிப்ஸன் முழுவதும் மருந்து எழுதிக் கொடுத்திருந்தார்.
“ஏன் வாந்தி வந்துச்சாம்…” அப்பாவிடம் ரஞ்சு கேட்டாள். “ஃபுட் பாய்ஸன் ஆயிடுக்காம்டா..” என்றாள் அம்மா. “டைஜெஸன் பிராப்ளம்…” என்றார் அப்பா. “இதே மாதிரி தான் நம்ப பாட்டி வீட்டுக்கு போகும் போது கூட காமாட்சிக்கு டைஜெஸன் பிராப்ளம் வந்துடுச்சுப்பா… அவங்கம்மா ஜிஞ்ஜர்ல கசாயம் வச்சுக் குடுத்தாங்க..” என்றாள் ரஞ்சனி. “கொஞ்சம் இருடா.. மெடிக்கல்ல டேபிளட்ஸ் வாங்கிட்டு வந்துட்டு அப்பா உங்கிட்ட பேசறேன்..” மகளை தூக்கி ஆட்டோவில் உட்கார வைத்து விட்டு அந்த ஆஸ்பத்திரியிலேயே வைக்கப்பட்டிருந்த மெடிக்கல் சாப்பில் நுழைந்தார் அப்பா.
படுத்திருக்கும் மகளையே பார்த்துக் கொண்டிருந்தாள் அம்மா. சிறிய வயதிலேயே திருமணமானதால், இன்று நாற்பதை தொடும் வயதிலேயே பெரிய மகளை திருமணம் செய்து கொடுத்தாகி விட்டது. ஏதோ ஒரு பலகீன தருணத்தில் தரித்து விட்ட இவள் தான் இப்போதைய வாழ்வின் பிடிமானமாகி போனாள். மிக சிறந்த கல்லூரியின் பொறியியல் சீட்டை விலைக்கு வாங்கி, பெரிய மகளை படிக்க வைத்தாகி விட்டது. அவளது புகுந்த வீட்டார் இப்போதைக்கு வேலைக்கு செல்ல வேண்டாம் என்று சொல்லி விட்டாலும், அரசுத்துறை தேர்வுகளெல்லாம் அவள் எழுதிக் கொண்டு தான் இருக்கிறாள். கணவனும் இவளுக்கு உடந்தையாதலால், நிச்சயம் ஒரு நல்ல வேலையில் அமர்ந்து விடுவாள். போட்ட பணமும், எந்தவித பொழுதுபோக்கும் இல்லாமல் பத்தாம் வகுப்பிலிருந்து, பனிரெண்டாம் வகுப்பு வரை ரஞ்சினி உட்பட அனைவரும் செய்த தியாகமும் வீணாகி விடுமா என்ன..? தன்னை போல அவளும், திருமணத்திற்கு பின் வேலைக்கு செல்வாள் போலும்.
“அம்மா.. ஏன் டல்லாயிருக்க..” ரஞ்சினி தான் கேட்டாள். “ஒண்ணுமில்லைடா… நீ நைட் என்ன சாப்டுற..? டேப்ளட் வேற போடுணும்..” என்றாள் அம்மா. “காமாட்சி அம்மா மாதிரி எனக்கு ஜிஞ்சர் போட்டு கசாயம் செஞ்சு குடுங்கம்மா..” வீட்டுக்குள் நுழைந்ததுமே ரஞ்சினி படுத்துக் கொண்டாள்.
“ரஞ்சு.. ரஞ்சும்மா… எழுந்திரி.. இந்த பிரெட்ட முதல்ல சாப்டு..” வெளியே சென்றுவிட்ட வந்த அப்பாவின் கையில் ஃபிரஸ்சான பிரெட் பாக்கெட் இருந்தது. ரஞ்சனி சுவர்ப்பக்கம் திரும்பிக் கொண்டாள்.
காலையில் தூங்கி எழும் போது அக்கா வந்திருந்தது தெரிந்தது. “யோகேஸ் நல்லவர்தாம்பா.. ஆனா அவங்க பேரண்ட்ஸ் தான் டென்ஸன் பண்றாங்க.. அவங்கள்ளாம் ரெண்டு ஜெனரேஸன்னா சிட்டியிலயே குடியிருக்கறவங்களாம். நீங்க ரெண்டு பேரும் கிராமத்துலேர்ந்து வேலைக்காக டவுனுக்கு வந்தவங்களாம். அதுனால உங்க பொண்ண கிராமத்து பேக்கிரவுண்டல வளர்த்திருப்பீங்கன்னு நினைச்சாங்களாம்.. ஆனா நான் ரொம்ப மாடர்னா இருக்கேனாம்.. குடும்பப்பாங்கா இல்லையாம்.. இதெல்லாம் கேட்டுக்கிட்டு அங்க இருக்க எனக்கு பிடிக்கல.. அதுனால யோகேஸ்கிட்ட நான் வேணும்னா நீ எங்க வீட்டுக்கு வான்னு ஃபோன் பண்ணி சொல்லிட்டு வந்துட்டேன்…” அக்கா பேசிக் கொண்டிருந்தாள்.
ரஞ்சினி அக்காவின் அருகில் போய் உட்கார்ந்துக் கொண்டாள். கிச்சனில் டப் டப் என்று ஏதோ தட்டும் சத்தம் கேட்டது. “ஏய்.. அங்க என்னா செய்ற..?” என்றார் அப்பா.
“இஞ்சி கசாயம் வைக்கிறேன்..” என்றாள் அம்மா.

***
shanmathi1995@live.com

Series Navigationபாமாவின் ‘கருக்கு” – தலித் பெண்ணியப் பார்வைவாயுள்ள கன்றும் பிழைக்கும்…!
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *