ரஸ்ய அதிபர் புதினுடைய சொத்து மதிப்பு என்ன தெரியுமா?

This entry is part 7 of 14 in the series 27 மார்ச் 2022

 


குரு அரவிந்தன்
 
 
ரஸ்ய அதிபர் புதினுடைய சொத்து மதிப்பு என்ன தெரியுமா? 
பிரபல்யமானவர்களின் சொத்துக்களை மதிப்பீடு செய்யும் நிறுவனமான ஹெர் மிட்டேஜ் கப்பிட்டல் என்ற நிறுவனம் சமீபத்தில் புதினுடைய சொத்துக்களை மதிப்பீடு செய்து ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தது. அதன்படி புதினிடம் 15 லட்சம் கோடி அமெரிக்க டொலர்கள் பெறுமதியான சொத்துக்கள் இருப்பதாகத் தகவல் வெளிவந்திருக்கின்றது. கருங்கடற்கரையில் உள்ள சொகுசு மாளிகை மட்டும் 1.4 பில்லியன் அமெரிக் டொலர் பெறுமதியானது. இதைவிட சொகுசு விமானம், சொகுசு படகு, சொகுசு ஹெலிக்கெப்டர்கள், சொகுசு கார்கள் போன்றவையும் இவரது இந்த சொத்தில் அடங்கும். 60,000 அமெரிக்க டொலர் பெறுமதியான பற்றிக்பிலிப்ஸ் நிறுவனத்தின் கைக்கடிகாரம் உட்பட, பல பிரபலமான நிறுவனங்களின் கைக்கடிகாரங்களும் அவரிடம் இருக்கின்றன. இதன் அடிப்படையில் பார்க்கப் போனால் இவர் உலகின் பணக்காரர் வரிசையில் 6வது பெரிய பணக்காரராவார். ஆனால் இவை எல்லாம் உறவினர்களின் பெயர்களில்தான் இருக்கின்றன. அவருடைய வருடாந்த வருமானம்140,000 அமெரிக்க டொலர்கள் வரை இருக்கலாம் என உத்தியோக பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டது. 
 
இதற்கிடையே 69 வயதான ரஸ்ய அதிபருக்கு நெருக்கமான அலினா என்ற பெயர் கொண்ட பெண் சிநேகிதி ஒருவர் சுவிச்லாந்தில் இருப்பதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.ரஸ்யாவின் அரச ஊடகங்களுக்கான பொதுச்சபையின் தலைவியாக நியமனம் பெற்ற இவர், புதினுடன் பல நிகழ்ச்சிகளில் காட்சிதந்தார். உஸ்பெகிஸ்தான் நாட்டில் பிறந்த,  ஒலிம்பிக் தங்கப் பதக்கம் பெற்ற 38 வயதான இவரை ரஸ்யாவுக்கு நாடுகடத்தும்படியும் அவர்கள் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள்.
 
உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோல் நகரத்தின் மீது கருங்கடலில் தரித்து நிற்கும் ரஸ்ய யுத்தக் கப்பல்கள் கடுமையான தாக்குதல்களை புதன்கிழமை மேற்கொண்டன. கருங்கடலில் ரஸ்யாவின் 21 கப்பல்கள் தரித்து நிற்பதாகவும், அசோவ் கடற்பகுதியில் சுமார் 7 கப்பல்கள்வரை நிற்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதைவிட வான்வெளித் தாக்குதல்களும் நடைபெறுகின்றன. யுத்தம் தொடங்கி ஒரு மதமாகிவிட்ட நிலையில் மரியுபோல் நகர் மீது போர் விமானங்கள் சரமாரியாகக் குண்டுகளைப் பொழிந்தன, போதாக் குறைக்கு எறிகணைத் தாக்குதல்களும் இன்று இடம் பெற்றன. குடிநீர், மின்சாரம் போன்றவை தடுக்கப்பட்டதால் மக்கள் தவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது. ஊரடங்குச் சட்டம் நடைமுiறியில் இருப்பதாலும், மும்முனைத் தாக்குதல்கள் தொடர்ந்தும் நடைபெறுவதாலும், சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றது. தன்னார்வத் தொண்டர் நிறுவனங்கள் அகப்பட்டிருக்கும் பொதுமக்களுக்கு உணவு வழங்க முடியாத நிலையில் அந்த நகரம் முற்றுகையிடப் பட்டிருக்கின்றது. முள்ளிவாய்க்கால் முற்றுகையின் போது, கடைசி நேரத்தில் உள்ளே அகப்பட்ட தமிழ் மக்கள் போல, உக்ரைனின் துறைமுக நகர மரியுபோல் மக்கள் குழந்தை குட்டிகளுடன் அகப்பட்டுப் போய் தவிக்கிறார்கள்.
 
 
இதேபோல, உக்ரைனின் தலைநகரான கீவ்வையும், இரண்டாவது பெரிய நகரமான கார்க்கிவ்வையும் முற்றுகையிட்டுள்ள ரஸ்யப்படைகள் தமது தாக்குதல்களை அங்கும் மேற்கொள்கின்றன. இந்த மூன்று முக்கிய நகரங்களும்தான் தற்போது ரஸ்யாவின் முக்கிய குறியாக இருக்கின்றது. இதில் இலகுவாகக் கைப்பற்றக்கூடிய நகரம், துறைமுக நகரமான மரியுபோல்தான். கடற்பரப்பில் இருந்தும் இலகுவாக முற்றுகையிடக் கூடியதாக இந்தத் துறைமுகம் இருக்கின்றது. மும்முனைத் தாக்குதலால், அனேகமான கட்டிடங்கள் தரைமட்டமாக்கப் பட்டிருக்கின்றன. தாக்குதல் பகுதியில் அகப்பட்ட சுமார் 7,000 பொதுமக்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். மரியுபோலைக் கைப்பற்றினால் உக்ரைனின் கடலாதிக்கத்தை முற்றாகத் தடுத்துவிட முடியும் என்ற நம்பிக்கையுடன் ரஸ்யா செயற்படுகின்றது. இந்த நகரத்தின் அழிவைப் பார்க்கும் போது, உலகப் போரில் அழிவுண்ட நகரங்கள் நினைவில் வருவதாக உக்ரைன் அதிபர் குறிப்பிட்டார். உக்ரைனின் கருங்கடல் ஆதிக்கத்தை முற்றாக தடைசெய்து விட்டால், கடல் வழியாக உதவிக்கு நேட்டோ கப்பல்கள் உக்ரைனை நோக்கி வரமுடியாமல் போகலாம். இலகுவாகக் கனரக வாகனங்களை யுத்தமுனைக்குக் கொண்டு செல்லக் கப்பல்களே முக்கிய காவிகளாக இருக்கின்றன. கருங்கடல் மூலம் நேட்டோ நாட்டுப் படைகள் உக்ரைனுக்கு உதவ முன்வந்தால், அதைத் தடுப்பதும், இந்தத் தாக்குதலின் முக்கிய நோக்கமாகும்.
 
மரியுபோல் துறைமுக நகரத்திற்கு அருகே உள்ள இன்னுமொரு துறைமுகமான பேர்ட்ஜாங்ஸ் துறைமுகத்தை ரஸ்ய படைகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தன. இத்துறை முகத்திற்கூடான கனரக வாகனங்கள் உக்ரைன் ஆக்கிரமிப்புக்காகக் கொண்டுவரப்பட்டன. நேற்று உக்ரைன் படைகள் நடத்திய அதிரடித் தாக்குதலில் அங்கு தரித்து நின்ற  மூன்று கப்பல்கள் படைகளால் அதிரடித் தாக்குதல் மூலம் தகர்க்கப்பட்டன. சுமார் 50 கனரக வாகனங்களையும், 400 துருப்புக்களையும் கொண்டு செல்லக்கூடிய வசதிகளைக் கொண்டது இந்தக் கப்பலாகும். இதே போன்றதொரு அதிரடித்தாக்குதல் யுத்த காலத்தில் காங்கேசந்துறை துறைமுகத்திலும் நடைபெற்றது நினைவிருக்கலாம்.
 
 
நேட்டோ நாடுகள் ஆயதங்களை வழங்குவதற்கு தயக்கம் காட்டுகின்றன என்ற உக்ரைன் ஜனாதிபதியின் புகாரைத் தொடர்ந்து பிரித்தானியா கனரக வாகனங்களைத் தாக்கக்கூடிய ஏவுகணைகளைக் கொடுப்பதற்கு முன்வந்துள்ளது. எற்கனவே 4,000 ஏவுகணைகளை அனுப்பி இருந்த பிரித்தானியா மேலதிகமாக இன்னும் 6,000 ஏவுகணைகளைக் கொடுக்க முன்வந்திருக்கின்றது. பிரான்சும், இத்தாலியும் எண்ணெய், எரிவாயு போன்றவற்றுக்கு ரஸ்யாவை நம்பி இருப்பதால், ரஸ்யாவை நேரடியாகப் பகைக்க அவர்களால் முடியவில்லை.
 
வெறும் பேச்சு வார்த்ததைகளோடு மட்டும் எல்லா நாடுகளும் ஒதுங்கிக் கொள்வதில் இருந்து, ஒன்றை மட்டும் எம்மால் புரிந்து கொள்ள முடியும். அதாவது உக்ரைன் நாட்டில் இருந்து எந்த ஒருவித பொருளாதார நன்மையும் இந்த நாடுகளுக்குக் கிடைக்கப் போவதில்லை. ரஸ்யாவைப் போல மூலவளங்கள், அதாவது எண்ணெய், எரிவாயு போன்றவை கிடைக்குமானால் ஏனைய நாடுகளின் பார்வையும், நடவடிக்கைகளும் வேறுமாதிரி இருந்திருக்கும். அதனால்தான் அந்த நாடுகள் தங்கள் இருப்பை நிலை நிறுத்த, அவ்வப்போது அறிக்கைகள் விட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஆற்றாமையின் வெளிப்பாடாய்த்தான், உக்ரைன் அதிபரின் ஜெலன்ஸ்கியின் செய்தி நேற்று வெளிவந்தது. கனடா உட்பட, நேட்டோ நாடுகளை உதவி செய்யுமாறு உக்ரைன் அதிபர் கேட்டிருக்கின்றார். மற்றும் உக்ரைன் வான்பரப்பில் ஏனைய நாட்டு விமானங்கள் பறப்பதையும் தடை செய்யும்படி கேட்டுக் கொண்டார். இதன் மூலம்தான் எதிர்பில்லாமல் ரஸ்யாவின் விமானத் தாக்குதல்களை நிறுத்த முடியும் என்பதையும் குறிப்பிட்டார். பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உரையாற்றும் போது அவர் இதைக் குறிப்பிட்டார். ரஸ்யாவில் இருந்து பிரான்ஸ் நிறுவனங்கள் வெளியேற வேண்டும் என்றும் அவர் அப்போது கேட்டுக் கொண்டார். உக்ரைன் விவகாரம் சம்பந்தமாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சென்ற வாரம் லண்டன், பெர்லின், வார்ஸோ, லட்வியா போன்ற இடங்களுக்கும் சென்றிருந்தார். பெல்ஜியத்தில் நடந்த நேட்டோ நாடுகளின் உச்சி மகாநாட்டில் கலந்து கொண்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதன் பின் பத்திரிகையாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போது, ஜி 20 அமைப்பில் இருந்து ரஸ்யாவை வெளியேற்ற வேண்டும் என்ற தனது கருத்தை வெளியிட்டார்.
 
உக்ரைன் ரஸ்ய யுத்தம் காரணமாக ரஸ்ய வான்வெளி பறப்பு தடைசெய்யப்பட்டிருப்பதால், பயணிகள் விமானங்கள் புதிய பாதைகளால் பயணிக்க வேண்டி இருக்கின்றது. இதனால் பயணிக்கும் நேரம் மட்டுமல்ல, எரிபொருளும் அதிகம் செலவிடவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது. இதன் காரணமாக விமானக் கட்டணங்களும் உயர வாய்ப்புண்டு. குறிப்பாக யப்பானில் இருந்து லண்டனுக்குப் புதிய பாதைவழியாகச் செல்வதற்கு மேலதிகமான இரண்டரை மணி நேரம் எடுக்கின்றது. 
 
உக்ரைன் சிறார் மருத்துமனையில் புற்றுநோய் காரணமாக அனுமதிக்கப்பட்ட 5 குழந்தைகளை மனிதாபமான முறையில் கனடாவுக்குக் கொண்டு வந்து தகுந்த சிகிட்சை கொடுக்கப்பட இருப்பதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்தன. ஏற்கனவே இருவர் கொண்டுவரப்பட்டு சிகிட்சை பெறுவதாகவும், இன்னும் மூவர் சில நாட்களில் இங்கு வரப்பட இருப்பதாகவும் தெரிகின்றது. இதுபோல, உக்ரைனில் உள்ள சுமார் 15 சிறார்களைக் கொண்டு வந்து, கனடாவில் சிகிட்சை கொடுக்க இருக்கிறார்கள்.
 
 
ரஸ்யா – உக்ரைன் யுத்தம் பற்றிப் பொது ஊடகங்கள் சிலவற்றில் பொய்யான செய்திகளும் வரத்தொடங்கி விட்டன. வேறு எங்கோ நடந்த சில பழைய யுத்தக் காட்சிகளையும் சிலர் உக்ரைனில் நடந்ததாக இணைத்திருக்கிறார்கள். உக்ரைனுக்கு ஆதரவாக இருப்பதாக்கூறி ரஸ்யா கூகுள் செய்திகளை ரஸ்யாவில் தடை செய்திருக்கின்றது. கனடாவிலும் உக்ரைன் யுத்தத்தைச் சாட்டிப் பல மோசடிகள் நடப்பதாக கனடிய மோசடி தடுப்புமையம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விட்டிருக்கின்றது. சிலர் தனிப்பட்ட முறையில் நிதி சேகரிப்பதாகவும், சிலர் உக்ரைன் படையில் இணைந்து சேவை செய்வது போன்ற படங்களைப் பிரசுரித்து பொதுமக்களிடம் உதவியை எதிர்பார்ப்பதாகவும், இவர்களிடம் ஏமாற வேண்டாம் என்றும் கனடா மோசடி தடுப்பு மையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
 
 
 
 
 
 
 
 
 
 
Series Navigationஎமிலி டிக்கின்சன் கவிதைகள் – 29தீப்பிடித்த இரவில்
author

குரு அரவிந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *