ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி – 13

This entry is part 9 of 46 in the series 5 ஜூன் 2011
ramayana

நிறைவாக

இந்தத் தொடரை அன்புடன் வெளியிட்ட “திண்ணை” இணையதளத்தாருக்குக் கட்டுரையாசிரியரின் நெஞ்சார்ந்த நன்றியுடன் நிறைவுப் பகுதியைத் தொடங்குகிறோம்.

‘நியாயத்தின் பக்கம் நாம் இருப்பது வேறு; நம் பக்கம் நியாயம் இருப்பது வேறு ‘ என்பது ஒரு சிந்தனையைத் தூண்டும் முதுமொழி. ‘என் நியாயம், என் தரப்பு’ என்னும் அணுகுமுறை தனிமனித சிந்தனைத் தடத்தில் உச்சமாயிருப்பது தவிர்க்க இயலாது. அதே சமயம் புதியன- சீரியன சிந்தித்துப் பண்பாட்டுக்குச் செழிப்பூட்டியவர்களே சமுதாய சிற்பிகள். சமுதாயத்தின் நெறிகளை, பாரம்பரியங்களை, வழிநடப்பது மற்றும் கண்டிப்பாக்குவது என்னும் வழிகள் மூலமாக சமுதாயத்தின் அங்கமாகச் செயற்படுவோர் மறுபுறம். இவர்களால் சுதந்திர சிந்தனை அல்லது புது ஊற்றுக் கருத்தாக்கம் என்பவற்றைப் பற்றி எண்ணிக் கூடப் பார்க்க முடியாது.

“ஒரு மனிதனின் அடையாளம் எது? தனி மனிதனா? அல்லது சமுதாயத்தின் அங்கமா?” என்ற கேள்விக்கு அமைப்புகளின் தரப்பில் ஒரே விடை தான் – சமுதாயத்தின் அங்கம் மட்டுமே அவன்; தனித்துச் சிந்திக்க, இயங்கத் தேவையில்லை. இந்த இடத்தில் அமைப்பு என்று நாம் குறிப்பிடுவதின் மிகச் சிறிய உதாரணம் குடும்பம். மிகப் பெரியது அரசாங்கம்.

ராமாயண கதாபாத்திரங்கள் பெரும்பான்மையில் சமூக அங்கமாக கட்டுப்பாட்டுடன் செயற்பட்டு விதிவிலக்காகச் சில மீறல்களையும் செய்ததையும் அதன் காரணத்தையும் நம் வாசிப்பில் ஒரு புரிதலுடன் விவாதித்தோம்.

நிறைவாக ராமாயண கதாபாத்திரங்கள் (நாம் தேர்ந்தெடுத்தவர்) எந்த அடையாளத்துடன் நம்முன் வருகிறார்கள் என்பதைக் காண்போம். ராமனையும் சீதையையும் இறுதியாக.

(1) லட்சுமணன்: ராமன் என்னும் தலைவனின் விசுவாசமிக்க தொண்டன் என்னும் நிலைக்குத் ‘தம்பி’ என்னும் உறவுமுறையிலிருந்து தன்னை உயர்த்திக் கொள்கிறான். ராமனின் வழியே ராமனின் கோணத்தில் மட்டுமே அவன் எதையும் அணுகுகிறான். ஆனால் தனித்தன்மையுடன் அவனால் சிந்திக்க இயலும். கைகேயி ராமனை வனவாசம் போகச் சொல்லும் போது ராமன் பணிந்து ஏற்றது போல் லட்சுமணன் அதை ஏற்கவில்லை. பின்னர் ஆரண்ய காண்டத்தில் பரதன் சேனையுடன் வரும் போது முதலில் சந்தேகித்துக் கோபம் கொள்கிறான். இந்த இரு தருணங்களிலுமே அவன் ராமன் அறிவுறுத்தத் தன் நிலையை உடனே மாற்றிக் கொள்கிறான். தலைவன் வழியே என் வழி என்னும் லட்சுமணன் ‘சமுதாய அங்கமே’. ஆனால் விபீடணன் ?

(2) விபீடணன் நிச்சயமாக ‘தனிமனிதன்’ என்னும் அடையாளத்தில் வருகிறான்.
விபீடணன் அந்தக் காலத்து நெறி முறைகளின் படி தலைவன், அரசன் மற்றும் அண்ணன் என்னும் அடிப்படையில் ராவணனுக்குக் கட்டுப்பட்டவனே. ஆனால் தனது தனித்தன்மையை சரியான சந்தர்ப்பத்தில் நிலை நாட்டித் தனது நாட்டிற்குத் தகாத தலைமை இருக்காத படி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறான். அதுவும் அந்த முனைப்பைக் காட்டும் காலகட்டம் மிக முக்கியமானது. இந்தத் தனித்தன்மையும் புதிய பாதையில் செல்லும் மன உறுதியும் கண்டிப்பாக பரதனிடமும் தென்படுகின்றன.

(3) பரதன் தசரதன் கொடுத்த வாக்கின் பின் விளைவுகளைக் கையாள வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறான். அவன் முடிசூட்டிக் கொண்டு ‘பின்னாளில் ராமனிடம் ஆட்சியை ஒப்படைப்பேன். அவன் பெயரால் அவன் வழியில் ஆட்சி செய்கிறேன் என்று கூறியிருந்தாலும் மக்களும் அரசவையினரும் ஏற்றிருப்பர். ஆனால் அவன் ‘பாதுகா பட்டாபிஷேகம்’ என்னும் புதிய ஆட்சி முறையைக் கொண்டு வருகிறான். ராமனுக்கு இணையாக தன்னைப் பற்றிய அவதூறுகளுக்கு பரதன் அஞ்சுகிறான். எனவே இப்படி ஒரு திருப்பத்தை அளித்துத் தன்னை சமூக அங்கமாக, தலைவனின் தொண்டனாக, நியாயவழி நடப்பவனாக நிலைநாட்ட மட்டுமே தனது தனித்தன்மை மிக்க சிந்தனையைப் பயன்படுத்துகிறான். எனவே பரதன் சமுதாய அங்கமென்னும் அடையாளத்தை உவந்து அணிகிறான்.

4.சுக்கிரீவன் விபீடணனுடன் ஒப்பிட வேண்டிய தனித்தன்மை மிக்கவன். அவனை சமுதாய அங்கமென்று சொல்லவே முடியாது. அவன் விபீடணனை ஒப்பிடும் போது தனது மன்னனும் அண்ணனுமானவனால் நேரடியாக பழிக்கப் பட்டவன். அது மட்டுமே வித்தியாசம். வேறு எல்லாமே ஒரே போலத்தான்.

5.அனுமனைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. சமூகத்தின் அங்கமாகச் செயற் பட்டுத் தலைவனுக்கான விசுவாசத்தில் லட்சுமணனைப் போன்றே செயற்படுகிறான். நேர்மறையாக தனித்தன்மையுடன் செயற்பட வேண்டிய வழியைப் பற்றி தலைவியான சீதை அறிவுறுத்தும் போது மட்டுமே விழிப்படைகிறான். தனியான ஒரு விழிப்பையோ தடத்தையோ அவன் தனது வழிமுறையாகக் கொள்ளவில்லை.

6.வாலி ஆற்றல் மட்டுமே உள்ள ஒரு தலைவனாகச் செயற்படுகிறான். சமுதாயத்தின் தலைமை சமுதாய நெறிமுறைகளுக்கு அப்பாற்பட்டது என்னும் அளவு தனித் தன்மையுடனான சிந்தனை உள்ளவன். அதன் முடிவை மட்டுமே அவன் சந்தித்தான். ஏனெனில் மனமாற்றம் அவனிடம் ஏற்பட வாய்ப்பில்லை.

7.ராவணனது தனித்தன்மை தனது பேராற்றலின் அடிப்படையில் தன்னை ஒரு ஆதிக்க சக்தியாய் தன்னிகரும் எதிர்ப்பும் இல்லாதவனாக நிலை நாட்ட முயற்சித்ததாகும். தன்னை வெல்லும் ஒரு மகாசக்திமுன் அவன் வீழ்ந்து விடுகிறான்.

8.மாரீசனும் கும்பகர்ணனும் தனித்தன்மையுடன் நேர்வழி பற்றிய தமது கருத்துக்களை ராவணனின் முன் வைக்கிறார்கள். ஆனால் அவன் அவற்றை நிராகரிக்கும் போது சமுதாய அங்கமாக மன்னனின் வழியில் மன்னனுக்குக் கட்டுப்பட்டு தம் இன்னுயிரையும் தியாகம் செய்கிறார்கள்.

9.கைகேயி மட்டுமே இயல்பான தனித் தன்மையுடன் இயங்குகிறாள். கொடுத்த வாக்கைக் காப்பதும் தர்மமே. மூத்த மகனுக்கு முடி சூட்டுவதும் தர்மமே. இவற்றுள் தனது தரப்பை நிலை நாட்டும் தனித்தன்மையை அவள் வெளிப்படுத்துகிறாள். இதை ராமாயணம் எவ்வாறு எதிர் கொள்கிறது? தனித்தன்மை மிக்க ஒவ்வொரு கதா பாத்திரமும் ஒரு திருப்புமுனையை நிகழ்த்துவதை நாம் காண்கிறோம்.

10.கௌதமரும் விசுவாமித்திரரும் நேர்மறையான தனித்தன்மைமிக்க செயலுக்காக நம் கவனத்தைப் பெறுகிறார்கள். அகலிகை தவறிழைத்திருப்பினும் சாப விமோசனத்துக்குப்பின் அவள் ஏற்கப்பட வேண்டும் என்னும் கருத்தை கௌதமரிடம் விசுவாமித்திரர் முன்வைக்க கௌதமரும் அதை ஏற்கிறார். கைகேயியின் எதிர்மறையான தனிமனித (தன்னிச்சையான) நடவடிக்கையும் விசுவாமித்திரர் மற்றும் கௌதமரின் தனிமனித வழி அல்லது புரட்சிகரமான தனி வழி பற்றி இறுதியில் விவாதிப்போம்.

11. ராமன் ஒரு மன்னனை எப்போதும் எந்தக் காரணத்துக்காகவும் சமாதானமே செய்து கொள்ளாத , சமுதாயக் கட்டங்கள் அல்லது கட்டுப்பாடுகளைத் தாண்டாத நேர்வழி செல்லுவோனாக மட்டுமே கண்டான். இதற்கு ராமன் தசரதனை முன்னுதாரணமாகக் கொண்டிருக்க வாய்ப்பில்லை. வேறு முன்னோர் யாரையேனும் மனதில் கொண்டிருக்கலாம். ஏனெனில் ஏக பத்தினி விரதம் என்பது தசரதன் வழிக்கு முரண்பட்டது. இன்னொரு வேறுபாடு தசரதன் மனைவி தரப்பு வாதங்களைச் செவி மடுத்தார். ராமன் அவ்வாறில்லை. ஒரே ஒரு ஒற்றுமை இருவருமே புதிய பாதைகளைத் தேர்ந்தெடுக்கவில்லை. ராமன் சீதையை மணப்பதற்கு முன்பே விசுவாமித்திரர் அறிவுறையில் கௌதமர் அகலிகையை ஏற்பதைக் கண்ணெதிரில் காணக் கிடைத்தவன். பின்னரும் தனது வழியை சமுதாயப் பாரம்பரிய நிலை நாட்டுதல் என்று கடுமையாகக் கடைப்பிடித்தான். முன்னுதாரணமான ஆணாகவும், கணவனாகவும், மன்னனாகவும் மட்டுமே ராமனால் இருக்க இயலும். அதில் பிறழ்ந்து அதன் பின் விளைவுகளைத் தன் பெயரால் வரலாறு சந்திப்பதை ராமன் கண்டிப்பாக விரும்பவில்லை. ராமனின் கடுமை அரசியல் அல்லது அதிகார மையங்களுக்கு ஒரு வழி காட்டுதலே.

12. சீதை ஆணும் பெண்ணும் தந்தையும் தாயுமாகும் குடும்பத்தில் தம் பங்களிப்பைச் செய்யும் பெண்ணாக மட்டுமே தன்னை உணர்ந்தாள். அதற்கு வழியில்லை என்பது திட்டவட்டமாகத் தெரிந்ததும் ராமனைப் பிரிந்து செல்ல அதற்கும் மேலாகத் தனது இரு குழந்தைகளையும் கூடத் துறந்து செல்லத் தயாராகிறாள். சீதை பூமியில் மறைந்த அற்புதத்தை நீக்கிப் பார்ப்போம். அவள் கணவனையும் குழந்தைகளையும் துறக்கத் துணிந்த அந்த ஒரு கணம் ஒரு நேர்மறையான மீறல் நிகழ்ந்தது. அரக்கிகளைக் காக்கத் தனது அரசி என்னும் நிலையை மீறி இரக்கப்பட்ட சீதையும் இந்த சீதையும் இந்தியப் பெண்களின் குணங்களில் முக்கியப் பங்குள்ளவர்கள்.

பாரம்பரியத்துக்குக் கட்டுப்பட்டு சமுதாய அங்கமாக இயங்கிய அதே சமயம் வரலாறு போற்றும் தனித்தன்மையை நிலைநாட்டிய சீதையைப் போன்று இரு பரிமாணங்களுடன் ராமாயணத்தில் வேறு யாரும் இல்லை. அவச் சொல்லுக்கு சீதையும் அஞ்சவே செய்தாள். அதே சமயம் அநியாத்தைத் தட்டியும் கேட்ட சீதை இந்தியப் பண்பாட்டின் மிகப் பெருமைக் குரிய முன்னோடி. ஒரு பெண்ணின் சங்கடங்களையும் அவளது மன உணர்வுகளையும் புரிந்து கொள்ளாத சமுதாயத்தை உலகின் முன் முதன் முதலாகத் தோலுரித்துக் காட்டிய சீதை வரலாற்று நாயகி.

ராமாயணத்தின் தேர்ந்தெடுத்த 12 கதா பாத்திரங்களில் யார் சமூக அங்கம் யார் தனித்த அடையாளம் காட்டினார் எனக் கண்டோம்.

வாசகர்கள் கைகேயி கெட்டவள் என்றும் அவளது கோரிக்கைக்குப் பிறகு ராமாயணத்தில் சோகமே எஞ்சியது என்றும் வாசித்தால் அது மிகவும் மேம்போக்கான வாசிப்பு. ராமாயண காலத்தில் கைகேயி செய்த எதிர்மறையான மீறலும் முடிவில் பூமியில் மறையும் போது சீதையின் நேர்மறையான மீறலும் வெவ்வேறு பின்னணியிலானவை. வெவ்வேறு திசையிலானவை. என்றாலும் சுதந்திர சிந்தனையின் கூறுகள் அந்தக் காலப் பெண்களிடையே இருந்தது என்பதே நாம் புரிந்து கொள்வது. உத்தர காண்ட இறுதியில் ராமன் தன் தம்பி மகன்கள் மற்றும் தன் பிள்ளைகளுக்கு சமமாக அதிகாரத்தைப் பகிர்ந்து அளிக்கிறான். இதை தசரதன் நினைத்துக் கூடப் பார்க்கவில்லையே? வரலாற்றை எழுதுமளவு கைகேயியின் தனித்தன்மை திறன் பெற்றிருந்தது.

நுட்பமாக கவனிக்கும் போது மனிதனின் எந்த அடையாளம் ராமாயணத்தின் தேர்வு தனிமனிதனா சமூக அங்கமா என்பதில் தனித்தன்மையுடன் இயங்கிய கைகேயி, சுக்ரீவன், விபீடணன் மற்றும் சீதையே ராமாயண வரலாற்றின் திருப்பு முனைகளில், சிக்கல்களின் தீர்வுகளில் பெரும் பங்காற்றினார்கள். மன்னனான ராமனால் இயலாமற் போன பெண்ணுக்குரிய இடத்தை உறுதி செய்யும் பணியை விசுவாமித்திரரும் கௌதமரும் தனித்தன்மையை வெளிப்படுத்தி நேர்மறையான ஒரு மீறலில் நிகழ்த்திக் காட்டினர்.

ராமாயண காலத்தில் ரிஷி முனிவர்- இன்று எழுத்தாளர், ஆசிரியர், பல்துறை அறிஞர் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆகியோரே சமுதாய மாற்றத்துக்கு வழி கோல வேண்டும்.

நமது எளிய தேர்ந்தெடுத்த ஒரு குறிப்பிட்ட திசையிலான வாசிப்பின் வழி ராமாயணத்தின் செய்தி இதுவே. ராமாயணம் சொல்ல வந்ததின் ஒரு பகுதி இது.

ஆனால் அது சொல்லாமலே விட்டு விட்ட ஒரு சோகத்தை பல நூற்றாண்டுகள் கழித்து ‘ஊர்மிளையின் விரகம்” என்னும் ஒப்பற்ற காவியமாக வடித்தார் ஹிந்தி மொழியின் செவ்விலக்கிய காலத்து “மைதிலி ஷரண் குப்த்” என்னும் கவிஞர். ஊர்மிளை லட்சுமணனின் மனைவி. ராமன் இருக்குமிடம் அயோத்தி என சீதை அவனுடனேயே வனம் புகுந்தாள். பரதனின் அல்லது சத்துருக்கினனின் மனைவிகள் தம் கணவரைப் பிரியவில்லை.

ஊர்மிளைக்காக எந்த ராமாயணமும் அவளது தியாகத்தைப் பதிவு செய்யவில்லை. சீதையும் மண்டோதரியும் திர்சடையும் பாடப்பட்டனர். ஊர்மிளையின் தியாகமும் சோகமும் விரகமும் சமுதாயம் காணாதவை.

அதிகார மையமாக அல்லது அதன் பீடமாக இருந்தோரே தனது பாதிப்பின் மூலமாக சமூகத்தின் அங்கமாகத் தன்னை நத்திக் கொள்வோரை கட்டுப்படுத்தியவர் அல்லது மீறலை நோக்கித் தள்ளியவர்.

வரலாறு பெரிதும் இவர்கள் பற்றியதே. ஊர்மிளை போன்று பல சாதிகள், பல நலிந்த பிரிவினர் சமுதாயத்துக்காகப் பங்காற்றிப் பெயரற்றுப் போன தியாகிகள் உள்ளனர். வரலாற்றை மறு வாசிப்புச் செய்யவும் கூர் வாசிப்புச் செய்யவும் நாம் பழக வேண்டும்.

ஊர்மிளையின் உதாரணத்திலிருந்து ராமாயணம் தொடங்கி வைத்த கேள்விகள் ஒன்றுக்கும் மேற்பட்டவை என்று அறிகிறோம். விடைகளை நாம் ஏன் தேடவே இல்லை என்பதே பல தலைமுறைகளாகத் தொடரும் கேள்வி.

Series Navigationஉறைந்திடும் துளி ரத்தம்..எனக்குச் சொந்தமில்லா உன் பெயர்
author

சத்யானந்தன்

Similar Posts