ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

0 minutes, 1 second Read
This entry is part 2 of 19 in the series 30 மே 2021

 

1. சகவாழ்வு

மயிலைப் பார்த்துக் காப்பியடிப்பதாய்

வான்கோழியை வசைபாடுவோம்.

வாத்துமுட்டையைப் பரிகசிப்போம்.

நாயின் சுருள்வாலை நிமிர்த்தப்

படாதபாடு படுவோம்.

கிளியைக் கூண்டிலடைத்து

வீட்டின் இண்டீரியர் டெகரேஷனை

முழுமையாக்குவோம்.

குதிரைப்பந்தயத்தில் பின்னங்கால்

பிடரிபட பரிகளை விரட்டித் துரத்தி

யோட்டி

பணம் பண்ணுவோம்.

காட்டுராஜா சிங்கத்தை

நாற்றம்பிடித்த மிருகக்காட்சிசாலையில்

போவோர் வருவோரெல்லாம்

கல்லாலடித்துக் கிண்டலடிக்கும்படி

பாழடைந்து குறுகவிரிந்திருக்கும்

புழுதிவெளியில் உழலச் செய்வோம்.

வாழைப்பழத்தில் மதுபுட்டிக் கண்ணாடித்

துண்டைச் செருகி

யானைக்கு உண்ணத் தருவோம்.

பிடிக்காதவர்களைப் பழிக்க பன்னி என்று

பன்னிப்பன்னிச் சொல்லுவோம்.

அதுபாட்டுக்குப் போய்க்கொண்டிருக்கும்

கன்றுக்குட்டியின் முதுகில்

ஒரு தடித்த கழியால் ஓங்கியடிப்போம்.

எதிரேயுள்ள நடைமேடைச் சுவரின்

விளம்பரத்தாளை வாய்க்குள் இழுக்கப்

படாதபாடுபட்டுக்கொண்டிருக்கும்

தாய்ப்பசுவின் கண்களில்

நீர் ததும்பக்கூடும்.

அதைப்பற்றி நமக்கு என்ன கவலை?

மனம் கசிந்து அழுபவரையும்

பழித்து இழிவுபடுத்த

தினந்தினம் உதாரணம் காட்டுவோமே

யல்லாமல்

மற்றபடி முதலையின் ரணம், சினம் கனம்

அது அதிகமாய்க் காணப்படும் சதுப்புநில

வனம்

அதற்கு இருக்கலாகும் மனம் பற்றி

என்ன தெரியும் நமக்கு?

 

  1. வளர்ந்த குழந்தைகளின் குட்டிக்கரணங்கள்

ஒரு குழந்தை தத்தித்தத்தி நடக்க ஆரம்பிக்கும்போது பார்ப்பவர்கள் பரவசமடைவது வெகு இயல்பு.

இரண்டடிகள் நடந்து பின்பு குப்புற விழுந்து தவழத் தொடங்கினாலும்

திரும்பவும் எழுந்து நிற்க முயற்சி செய்யும் என்று தீர்மானமாய்ச் சொல்வது

வழி வழியாய் வழக்கம்தான்.

எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடிக்கும் கரவொலி யெழுப்பி

குழந்தையை உற்சாகப்படுத்தும் படுத்தலில்

குழந்தை தன்னை மறந்து அகலக்கால் எடுத்துவைக்க

தொபுகடீர் என்று விழுந்து அழ ஆரம்பிக்கும்.

உடனே தூக்குவதற்கு ஒருவர்,

பிஞ்சுப்பாதத்தைத் தடவிக்கொடுக்க ஒருவர்

குழந்தையின் கண்ணீரை உறுத்தாத வழுவழு கைக்குட்டையால்

ஒற்றியெடுக்க ஒருவர்

குழந்தையின் கையில் சாக்லெட்டைத் திணிக்க ஒருவர்

என்று நிறைய பேர் குழந்தையை சூழ்ந்துகொள்வார்கள்.

ஓரிருவரே இருக்கும் நியூக்ளியர் குடும்பத்தில்

அந்த ஓரிருவரே பல பேராக மாறிக்கொண்டு்விடுவார்கள்.

குழந்தையை மகிழ்விப்பதே பெரியவர்களின் குறிக்கோள்.

அப்படித்தான் அவர்கள் இன்றளவும் நம்புகிறார்கள்…..

இன்று பிறந்திருக்கும் குழந்தையொன்று இதுவரையான மிகச்சிறந்த ஓட்டப்பந்தயவீரர்களின் ரெகார்டுகளை யெல்லாம்

இரண்டடி தத்தித்தத்தி நடந்தே முந்திவிட்டதாக முழுவதும் நம்பியும் நம்பாமலும்

வளர்ந்தவர்கள் பத்திபத்தியாய் எழுதிக்கொண்டிருப்பதைப் படிக்கும்போது

எளிதாகக் கலகலவென்று சிரித்து முடித்து தூக்கம்போட்டுவிட

நாம் குழந்தையாக இருக்கக்கூடாதா என்று

ஏக்கமாக இருக்கிறது.

 

 

  1. முறிந்துவிழும் மந்திரக்கோல்கள்



முதலிலேயே சொல்லிவிடத்தோன்றுகிறது _

மகத்தானவை எவை என்று உங்களுக்கு மிக நன்றாகவே தெரிந்திருக்கிறது.

அதற்காக என் மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அதனால்தான் மகத்தானவைகளுக்கே முன்னுரிமையளித்து
மட்டந்தட்டிக்கொண்டிருக்கிறீர்கள்.

முழுநிலவைப் பழுதடைந்த பாதி உடைந்த நியான் விளக்காய்
மூச்சுவிடாமல் பழித்துக்கொண்டிருக்கிறீர்கள்.

மலரின் மென்மடல்களின் மீது அத்தனை மூர்க்கமாய் ஊதியூதி
அவற்றைப் பிய்த்தெறிந்து பெருமிதப்பட்டுக்கொள்கிறீர்கள்.

கைவசப்படா காற்றை கரங்களில் இறுக்கிக்கசக்கிப் பிழிவதாய்
திரும்பத் திரும்ப பாவனை செய்து பரவசப்பட்டுக்கொள்வதோடு
காற்று கதறியழுவதாய் படம் வரைந்து அதைப் பார்த்துக் கண்சிமிட்டிக் கெக்கலிக்கிறீர்கள்.

கங்காருவின் வயிற்றிலிருக்கும் குட்டியின் தலையில் ஓங்கிக் குட்டுகுட்டி
கைகொட்டிச் சிரித்தபடி ஓடிவிடுகிறீர்கள்.

தெளிந்த நீரோடையில் காறித்துப்பி
நீர்வழி என் உமிழ்நீர்வழி
யென்று நெஞ்சுநிமிர்த்திக்கொள்கிறீர்கள்.

நாயின் வாலை நிமிர்த்தியே தீருவேன் என்று
அந்த நன்றியுள்ள பிராணியிடம் உச்சபட்ச நன்றிகெட்டத்தனத்தோடு நடந்து அதற்கு
விதவிதமாய் வலிக்கச் செய்கிறீர்கள்.

கல்லை வணங்குவதாக மற்றவர்களை எள்ளிநகையாடியபடியே
கல்லின் துகள் ஒன்றின் முன் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து பணிந்து
மெய் பொய் பொய் மெய் என்று சொற்சிலம்பமாடித் தீரவில்லை உங்களுக்கு.

அடுத்தவர் கனவை மனநோயென்று பகுத்தபடியே
உங்களுடையதை இலட்சியக்கனவென்று ஆனந்தக்கண்ணீர் உகுக்கிறீர்கள்.

கடலின் கரை மணல், மணலின் கரை கடல் எனில் கடல் நடுவில் தாகமெடுத்தால் இல்லாத நல்ல தண்ணீரின் நிழலில்தான் தாகம் தணிக்கவேண்டும்
என்று ஆயிரத்தெட்டு பேர் ஏற்கெனவே சொல்லிச்சென்றிருப்பதை
பன்னிப்பன்னிச் சொல்லி உங்களுடையதே உங்களுடையதாகப் பண்ணிவிடுகிறீர்கள்.

வில்லியை நல்லவளாக்கி நல்லவனை நபும்சகனாக்கி
என்னவெல்லாம் செய்கிறீர்கள் _
இன்னும் என்னவெல்லாமோ செய்யப்போகிறீர்கள்.

என்றாலும்
மலையடிவாரத்திலிருந்து அண்ணாந்து பார்த்து
அதன் மிகு உயரத்தை மடக்கிப்போட
மலையை எலியாக்கிப் பார்வையாளர்களைக்
கிச்சுகிச்சுமூட்டிச் சிரிக்கவைக்க
கனகச்சிதமாய் நீங்கள் சுழற்றும்போதெல்லாம்
உங்கள் மந்திரக்கோல்தான் முறிந்துவிழுகிறது.

 

 

  1. ஒரு சமூகப் பிரக்ஞையாளர்

    சகல ரோக காரணியாக ஒருவரையும்
    சகல ரோக நிவாரணியாக ஒருவரையும்
    முன்முடிவு செய்துகொண்ட பிறகே
    அவரது சமூகப் பிரக்ஞை
    சுற்றிவரத் தொடங்குகிறது உலகை.
    நான்கு சுவர்களுக்குள்ளான வெளியைப்
    பிரபஞ்சமாக்கி
    நட்சத்திரங்களிடம் உதவிகோருகிறார்
    தன் நாட்டின்
    நலிந்த பிரிவினருக்காக.
    பரிவோடு அவை தரும்
    ஒளிச்சிதறல்களைக் கொண்டு
    தன் அறைகளுக்கு வெளிச்சமூட்டியபடி
    மீண்டும் சகல ரோகக் காரணியாகவும்
    சகல ரோக நிவாரணியாகவும்
    முன்முடிவு செய்திருந்தவர்களைப்
    படம் எடுத்துப்போட்டு
    அவர்களில் முதலாமவரை எட்டியுதைத்தும்
    இரண்டாமவரைக் கட்டித்தழுவியும்
    இன்றைக்கும் என்றைக்குமாய்
    சகல காரணியாக முன்முடிவு செய்தவரை
    கட்டங்கட்டி மட்டந் தட்டியும்
    சகலரோக நிவாரணியாக முன்முடிவு செய்தவரை
    பட்டமளித்துப் பாராட்டியும்
    நோகாமல் இட்ட அடியும்
    கொப்பளிக்காமல் எடுத்த அடியுமாக
    ஆகாகா எப்பேர்ப்பட்ட சமூகப்பிரக்ஞையாளர்
    அவர்
    கட்டாயமாய்
    எம்மைச் சுற்றி உம்மைச் சுற்றி
    தம்மைச் சுற்றி
    வேகாத வெய்யிலிலும்
    தட்டாமாலைத் தாமரைப்பூவிளையாட்டில்….

 

  1. சர்க்கஸ்

 



ஆடு ஆடு ஆடு என்கிறார்கள் கோரஸாக.

மேரியின் ஆட்டுக்குட்டி திருமண மண்டபத்திற்குள் வந்திருக்கிறதா என்று ஆசைஆசையாக நாலாபக்கங்களிலும் திரும்பிப் பார்க்கிறாள் குழந்தை.

அதற்குள் அம்மா
அவளது சின்ன இடுப்பில் ஒரு பக்கமாக
சற்றே நிமிண்டிவிட்டு
‘ஆடு’ என்கிறாள்.

அவளுடைய மாமா அலற விடுகிறார் பாட்டை:
”அப்படிப் போடு போடு போடு போடு போடு……”

எதைப் போடச்சொல்கிறார் என்று
ஒருகணம் புரியாமல் குழம்பி நின்ற குழந்தை
எதுவானாலும் பெரியவர்கள் சொல்வதைக் கேட்டுத்தானே ஆகவேண்டும் என்ற எண்ணம் மேலோங்க
கையில் கிடைத்த தாம்பாளத்தை எடுத்துத்
தரையில் போட
அது ஆங்காரமாய் ரீங்காரமிட்டவண்ணம்
ஆடி அடங்கியது.

அம்மா அவமானத்தில் அடிக்கக்
கையை ஓங்குவதற்குள்
‘ஆ, தாம்பாளத்தில் நின்று ஆடுமா குழந்தை?’
என்று ஆவலாகக் கேட்டபடி ஒருவர்
தன்னுடைய அலைபேசியில் ‘வீடியோப் பகுதிக்கு
வாகாய்ப் போய்நின்றார்.

அந்தக் குட்டி உடம்பை குண்டுகட்டாய்த் தூக்கி தாம்பாளத்தின் விளிம்புகளில்
அதன் பிஞ்சுப் பாதத்தைப் பதித்த பெரியப்பா
குழந்தையும் தெய்வமும் ஒன்று,
குழந்தைக்கு வலியே தெரியாது’ என்று
திருவாக்கு அருள _

வலிபொறுக்காமல் துள்ளித்
தரையில் குதித்த குழந்தை
தாம்பாளத்தை எடுத்துத்
தன் தலையில் கவிழ்த்துக்கொண்டு
அங்கிருந்து ஓட ஆரம்பித்தது.

“அட, இது நல்லாயிருக்கே –
அப்படியே ஓடு ஓடு ஓடு –
இதுக்கொரு பாட்டுப் பாடு பாடு பாடு”
என்று அடுத்தவீட்டுக்காரர்
குழந்தையின் பின்னே ஓட
அவர் பின்னே அங்கிருந்த எல்லோரும் ஓட

அலறியடித்துக்கொண்டு ஓடிய குழந்தை
மண்டபத்தில் விரிக்கப்பட்டிருந்த
விலையுயர்ந்த கம்பளத்தின் கிழிசலில்
குட்டிக் கால் சிக்கித் தடுக்கிவிழ_

தலையிலிருந்த தாம்பாளம்
தெறித்துவிழுந்து
அதன் சின்னக்கையைத் துண்டித்தது.

கண்ணீரோடு தாயும் பிறரும் அலைக்கழிந்துகொண்டிருந்தார்கள்
கண்மூடிக் கிடந்த குழந்தையிடம்
ஒரே கேள்வியை
திரும்பத்திரும்பக் கேட்டபடி _

“என்ன சொன்னாலும் கேட்காம
இப்படி தலைதெறிக்க ஓடலாமா?”

Series Navigationபெண்ணை மதிப்பழித்தலும் அதுசார்ந்த அரசியலும்பூகோளச் சூடேற்ற உஷ்ண எச்சரிக்கை வரம்பு அடுத்து வரும் ஐந்தாண்டில் நேரலாம்.
author

ரிஷி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *