வடக்கு வளர்கிறது! தெற்கு தேய்கிறது! அணுமின் உலை எதிர்ப்பாளிகள்! அணு உலை அபாய எதிர்பார்ப்புகள்!

This entry is part 2 of 53 in the series 6 நவம்பர் 2011


(Anti-Nuclear Power Activists in India)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா


முன்னுரை: ‘வடக்கு வளர்கிறது! தெற்கு தேய்கிறது! ‘ என்று முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரை நேரு காலத்தில், தமிழகம் புறக்கணிக்கப் படுவதை அடுக்கு மொழியில் முழக்கித் தமிழருக்குச் சுட்டிக் காட்டினார்! இந்தியாவிலே தலைசிறந்த ஆய்வுத் தளங்களில் ஒன்றான, இந்திரா காந்தி அணுவியல் ஆராய்ச்சி மையம், கல்பாக்கத்தில் பலருக்குப் பணி அளித்துத் திறமை மிக்க விஞ்ஞானிகளை, பொறிநுணுக்க வல்லுநர்களை உற்பத்தி செய்து வருகிறது! அணு உலை எதிர்ப்பாளிகள் ஞாநி, டாக்டர் இரமேஷ், புகழேந்தி போன்ற தமிழக அறிவாளிகள் இப்போது கல்பாக்கம், கூடங்குளம் அணுமின் நிலையங்கள் யாவும் புற்றுநோய் உற்பத்திக் கூடங்கள் என்றும் அவை தமிழகத்துக்குத் தேவை யில்லை என்றும் அவற்றை நிரந்தரமாக நிறுத்தி மூடிவிடப் பறைசாற்றி வருகிறார்கள்!

பாதுகாப்பான பாரத அணு உலைகளின் கதிர்வீச்சால் எந்தப் புற்று நோயும், அல்லது சந்ததி ஊனமும் பணியாளருக்கு இதுவரை உண்டான தில்லை! செர்நோபிள் அணு உலை போன்றோ அல்லது அணு ஆயுதங்கள் போலவோ, பாரத அணுமின் உலைகள் ஒருபோதும் வெடித்து மக்களுக்குப் பேரழிவை உண்டு பண்ண மாட்டா! அச்ச மின்றி பாரத அணு உலைகளில் ஆக்க உணர்வோடு பணி புரியக் கூரிய அறிவும், சீரிய திறனும், ஓங்கிய வல்லமையும் தமிழர் வசம் களஞ்சியம் போல் செழித்துக் கிடக்கிறது!

மூர்க்க யானையைப் பார்க்கப் போன ஆறு குருடர்கள்!

யானையின் பூத வடிவையும், மூர்க்கப் பண்பையும் கண்டு அஞ்சிய ஒருவர் அது எப்படி இருக்கிற தென்று பார்த்து வர ஐந்து குருடர்களை அனுப்பினார்! கால்களை நெருடி மிரண்ட குருடன் கோயில் தூணைப் போலிருக்கிறது யானை என்று கூறினான்! தும்பிக்கையை வருடிய ஒருவன் ‘ஐயோ! மலைப் பாம்பு போலிருக்கிறது யானை என்று அஞ்சி ஓடினான்! மூன்றாவது குருடன் முன்னும் பின்னும் அசையும் காதுகளைத் தடவி, வெஞ்சாமரை விசிறிகளைப் போன்றது யானை என்று வியந்தான்! படுத்துக் கிடந்த போது அதன் பூத உடலைத் தடவிய ஒருவன் பெரிய பாறாங்கல் போல இருக்கிறது யானை என்று மனம் பூரித்தான்! ஐந்தாவது குருடன் நீட்டிக் கொண்டிருக்கும் தந்தங்களை நீவி, யானைக் கூரிய ஈட்டியைப் போன்றது என்று வெகுண்டு ஒதுங்கினான்! யானையின் முழுத் தோற்றத்தையும், குணத்தையும் அவர்களில் ஒருவர் கூடக் கண்டு கொள்ள முடிய வில்லை! அதன் மூர்க்கக் குணத்தை மட்டும் அறிந்து தூரத்தில் நின்று நோக்கிய ஆறாவது நபருக்கு, யானையின் உறுப்புகளைப் பற்றியோ, பயிற்சி மூலம் அதன் வீரிய பண்பைத் திருத்த முடியும் என்ற அறிவோ அல்லது முறையுடன் பழகினால் அதனைப் பணி புரிய வைக்கலாம் என்றோ எதுவும் தெரியாமல் போனது!

அனுப்பிய ஆறாவது நபர் ஐந்து குருடர்கள் கண்டு பிடித்துத் தந்த முரண்பாடான விளக்கங்களில் எதை எடுத்துக் கொள்வது என்று குழப்பம் அடைந்தார்! தனக்கு விருப்பான ஒருதிசைக் கருத்துக்களை மட்டும் எடுத்துக் கொண்டு, தன் கண்ணோட்டத்தில் இவ்விதம் எழுதி வெளியிட்டார்:- ‘மூர்க்கமான யானை மாந்தரை விழுங்கி விடும் மலைப் பாம்பு! அதன் அருகில் எவரும் செல்வது ஆபத்தானது! மனிதரைக் குத்திக் கொன்று விடும் கூரிய ஈட்டிகள் இரண்டு யானையிடம் உள்ளன! அருகில் நடமிடும் நபர்களைக் கனத்த காலால் மிதித்து நசுக்கி விடும்! ‘ ஆறாவது அறிவாளி அனைத்தையும் சேர்த்து யானையைப் பற்றி வெளியிட்ட விபரங்களில் சில உண்மைகள் இல்லாமல் இல்லை! அதே சமயம் அவரது கூற்றில் பல தவறுகள் இருக்கின்றன!

அணுமின் உலை எதிர்ப்பாளிகளின் குறுகிய பார்வைகள்

அணுமின் உலை எதிர்ப்பாளிகள் கறுப்புக் கண்ணாடி அணிந்து, தூரத்தில் அஞ்சி நின்று கொண்டு பூதக் கண்ணாடி மூலமாகப் பார்த்து அணு உலைகளை ஆராய்ந்து வருகிறார்கள்! அல்லது அணு உலை நிகழ்ச்சிகளைக் காதால் கேட்ட இரண்டாவது நபர் வடிகட்டி எழுதிய சில சக்கைகளை எடுத்துக் காட்டுகிறார்கள்! அல்லது தெளிந்த பாலை விட்டு மேலாக மிதக்கும் மேலாடையை மட்டும் எடுத்துக் கொண்டு, அணுமின் உலைகளை எதிர்க்க வந்து விடுகிறார்கள்!

பூகம்பத்தில் கூடங்குள ரஷ்ய அணு உலை பிளந்து விடும் என்று ஒருவர் கூச்சலிடுகிறார்! கடந்த முப்பது ஆண்டுளாக உலகில் இயங்கி வரும் 438 அணுமின் உலைகளில் எதுவும் பூகம்பத்தில் இதுவரைத் தகர்ந்து போக வில்லை! அடுத்தவர் கல்பாக்கம் அணு உலையில் விபத்தென்றால் சென்னை நகரமே அழிந்துவிடும் என்று அச்ச மூட்டுகிறார்! மற்றொருவர் கல்பாக்கம் அணு உலையில் பணி புரிவோருக்கும் அவரது குடும்பத்தாரும் புற்று நோய் தொற்றிக் கொள்கிறது என்று பயங்காட்டுகிறார்! அணு உலைக் கருகில் வாழ்பவருக்கும் அவரது சந்ததிகளுக்கும் ஆறு விரல்கள் முளைக்கும் என்று இன்னொருவர் வட்டாரப் பட்டியலைக் காட்டுகிறார்! இவை அனைத்தும் அணுமின் உலைகளில் உண்டாகும் கதிர்வீச்சால் ஏற்படும் உடற் தீங்குச் சம்பவங்களா என்பது ஐயப்பாட்டுக்கு உரியன!

ஞாநி தனது ‘கான்சர் கல்பாக்கம் ‘ கட்டுரையில் வட்டாரப் பணியாளிகள் 15,025 பேரைச் சோதித்ததில் 167 நபர்கள் [1%-2%] புற்றுநோய் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்! புற்றுநோய்ப் புள்ளி விபரம் எடுக்கும் புத்திசாலிகள் முக்கியமான ஒரு விபரத்தைக் காட்ட வில்லை! அதை விட்டு விட்டார்கள்; அல்லது மறைத்து விட்டார்கள்; அன்றி அதைச் சேமிக்க மறந்து விட்டார்கள்! கல்பாக்க அணு உலை கட்டுவதற்கு முன்பாக அந்த வட்டாரத்தில் வாழ்ந்த 15,000 மாந்தரில் எத்தனை பேருக்கு அல்லது எத்தனை சதவீதம் புற்றுநோய் வந்திருந்தது என்று காட்டி யிருந்தால், இரண்டு சதவீதங்களின் கழித்தல் எண் கல்பாக்க அணு உலையால் உண்டானது என்று நிரூபித்துக் காட்டலாம்! அதுதான் முறையான, துல்லிய புற்றுநோய்ப் புள்ளி விபரம்! அவ்விதம் அவரது புள்ளி விபரங்கள் ஏனோ காட்டப்பட வில்லை!

வட அமெரிக்க நாடுகளில் வழக்காட விழித்திருக்கும் ஓநாய்க் கூட்டம்

சமீபத்தில் குறிப்பிட்ட சில ஃபயர்ஸ்டோன் டயர்கள் [Firestone Tires] அவற்றைப் பூட்டிய கார் வாகனங்கள் ஓடும் போது வெடித்து, வட அமெரிக்காவில் ஆயிரக் கணக்கான நபர்கள் மரண மடைந்தது வெளியானது. உடனே வாய்ப்புகளைப் பயன் படுத்தி ஓநாய்களைப் போல் தாவிய வழக்கறிஞர்கள் ஃபோர்டு மோட்டர் கம்பெனியின் [Ford Motor Company] மீது வழக்குப் போர் தொடுத்து பல மில்லியன் டாலர் நஷ்ட ஈட்டுத் தொகையைக் கறந்து விட்டனர். அது போல் அணு உலைகளால் புற்று நோய் மரணங்கள் பணியாளிகளுக்கு ஏற்படுவதாகத் தெரிய வந்தால், அவற்றின் உரிமை யாளர்களை நீதி மன்றத்திற்கு இழுத்துப் போரிட்டு வழக்கறிஞர் கூட்டம் உறிஞ்சிக் குடித்து சக்கை யாக்கிவிடும்!

தற்போது [2000 முடிவு வரை] அமெரிக்க நாட்டில் 104 அணுமின் உலைகள், கனடாவில் 12 அணுமின் உலைகள், பிரான்ஸில் 59 அணுமின் உலைகள், பிரிட்டனில் 35 அணுமின் உலைகள், ஜெர்மனியில் 19 அணுமின் உலைகள் [20-30] ஆண்டுகளாக இயங்கி மின்சாரம் பரிமாறி வருகின்றன. மேற்கூறிய மேலை நாடுகளில் பணி செய்வோர் எவருக்கும் அணு உலைக் கதிர்வீச்சால் புற்று நோய்களோ அன்றி வேறெந்த நோய் நொடிகளோ வருமாயின் அங்குள்ள வழக்கறிஞர்கள் உரிமை நிர்வாகத்தின் மீது வழக்குப்போர் தொடுத்து, பல மில்லியன் டாலர் நஷ்ட ஈடுத் தொகையைப் பறித்து விடுவார்கள்! அப்படிப்பட்ட வழக்குப் போர்கள் அமெரிக்காவிலோ, கனடாவிலோ, ஐரோப்பிய நாடுகளிலோ எந்த அணுமின் உலையின் கதிர்வீச்சால் தூண்டப் பட்டதாக இதுவரை அறியப்பட வில்லை!

மரணப் புள்ளி விபரப்படி, அமெரிக்காவில் ஐந்தில் ஒருவர் தற்போது புற்றுநோயில் மாண்டு போகிறார்! 1970 முதல் 2000 ஆண்டு வரை கடந்த முப்பது வருடங்களில் சுமார் 12 மில்லியன் நபர் புற்று நோயில் மடிவார் என்று மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது! அதாவது ஆண்டு ஒன்றுக்கு 400,000 பேர் புற்று நோயுக்குப் பலியாவார்கள்! அவற்றில் இயற்கை, மற்றும் மானிடச் செயற்கைக் கதிர்வீச்சுப் புற்று நோய்களால் மாள்பவர் மட்டும் [3%] 10,000 பேர்கள்! அந்த 10,000 பேர் மரணத்தில் 104 அணுமின் உலைகளில் பணிபுரிபவரில் 40 பேருக்கு புற்றுநோய் வரலாம் என்று மதிப்பீடு அட்டவணை காட்டுகிறது. இதில் முக்கியமாகத் தெரிய வேண்டியது: ஏற்படும் புற்றுநோய் மரணங்களில் 97% அணு உலைக் கதிர்வீச்சால் உண்டானவை அல்ல!

அணுவியல் துறைகள் வளர்ச்சிக்கு எதிர்ப்பாளிகள் முட்டுக்கட்டை!

‘வடக்கு வளர்கிறது! தெற்கு தேய்கிறது! ‘ என்று முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரை நேரு காலத்தில், தமிழகம் புறக்கணிக்கப் படுவதை அடுக்கு மொழியில் தமிழருக்குச் சுட்டிக் காட்டினார்! தற்போது பாரதத்திலே இரண்டாவது பெரிய அணுவியல் ஆராய்ச்சிக் கூடம், இரட்டை அணுமின் நிலையம், வேகப் பெருக்கி சோதனை அணு உலை கல்பாக்கத்தில் இயங்கி வருகின்றன! பாரதத்திலே மிகப் பெரும் 2000 MWe ஆற்றல் கொண்ட இரட்டை அணுமின் நிலையங்கள் கூடங்குளத்தில் உருவாகி வருகின்றன! ஞாநி, டாக்டர் இரமேஷ் போன்ற தமிழக அறிஞர்கள் தற்போது கல்பாக்கம், கூடங்குள அணுமின் நிலையங்கள் யாவும் கான்சர் உற்பத்திக் கூடங்கள் என்றும் அவை தமிழகத்துக்குத் தேவை யற்றவை என்றும் பறைசாற்றி வருகிறார்கள்! கல்பாக்கம், கூடங்குளம் மின்சக்தி அளிப்பதோடு, ஆயிரக் கணக்கான தமிழருக்கும், மற்ற மாநில மாந்தருக்கும் நிரந்த, தற்காலிக வேலைகளை அளித்துக் கொண்டிருக்கின்றன!

பாரதத்தின் அணுவியல் விஞ்ஞானத்தின் முன்னேறத்தையோ, விண்வெளி ஏவுகணை வீச்சுகளையோ பழைமை வாதிகள் யாரும் முட்டுக்கட்டை போட்டு நிறுத்த முடியாது! அணுயுகமும், அண்ட வெளியுகமும் உலகெங்கும் ஓங்கி வளரும் போது, பாரதம் மாந்தரும் அவற்றில் சிறிதளவு பங்கெடுக்காமல் போனால், இந்தியா பின்தங்கிய நாடாக தாழ்ந்து போய்விடும்! அணுமின் உலைகளை எதிர்ப்பாளிகள் புறக்கணித்தாலும், அணுவியல் துறையில் முன்னணியில் நிற்கும் பாரதம், இன்னும் பல்லாண்டுகளுக்கு அணு மின்சக்தியை உற்பத்தி செய்யத்தான் போகிறது!

யந்திர வாகனங்களில் ஏற்றுக் கொள்ளும் அபாய எதிர்பார்ப்புகள்

மனிதர் தயாரித்த எந்த யந்திர சாதனமும், வாகனமும் மக்களுக்கு முழுப் பாதுகாப்பு அளிக்கும் என்று எவரும் உத்திரவாதம் தர முடியாது! கடந்த நூற்றைம்பது ஆண்டுகளில் ஆக்கப்பட்ட நீராவி எஞ்சின் அல்லது டாசல் எஞ்சின் கப்பல்கள், ரயில் வண்டிகள், சுழற் தட்டு அல்லது ஜெட் விமானங்கள், ராக்கெட் எஞ்சின் விண்வெளிக் கப்பல்கள் ஆகியவற்றில் சில வாகனங்கள், எப்போதா வது மனிதத் தவறாலோ அல்லது யந்திரப் பழுதாலோ விபத்துக் குள்ளாக நேரும்! அவைத் தரக் கட்டுப்பாடு முறையில் தயாரிக்கப் பட்ட உறுப்புகளால் அமைக்கப் பட்டாலும் அபாயங்களைக் குறைக்கும் குறிக்கோளில் வடிவாக்கப் பட்டவை! உதாரணமாக அமெரிக்காவில் பெரு வீதிகளில் காரில் பயணம் செய்வோர் அபாய எதிர்பார்ப்பு 3000 இல் 1. கடல் பயணத்தில் கப்பலில் செல்வோர் அபாய எதிர்பார்ப்பு 100,000 இல் 1. தீவிபத்துக்களில் மரணம் அடைபவர் அபாய எதிர்பார்ப்பு 25,000 இல் 1. தொடர் வண்டி ரயில் பயணத்தில் அபாய எதிர்பார்ப்பு 250,000 இல் 1. ஆகாய விமானப் பயணங்களில் ‘ஏற்கும் அபாய எதிர்பார்ப்பு ‘ [Acceptable Risk] 100,000 இல் 1 [1 in 100,000 chance of fatality per year].

 

அனுதினமும் ஒரு மணி நேரத்தில் நூற்றுக் கணக்கான வாணிபத்துறை விமானங்கள் குறைந்தது (300-400) நபர்களைத் தூக்கிக் கொண்டு வானத்தில் ஐந்து மைல் உயரத்தில் பறக்கின்றன! எப்போதாவது மனிதத் தவறாலோ, யந்திரப் பழுதாலோ அன்றிக் காலநிலை முறிவாலோ விமானம் விழுந்து மாந்தர் பலர் உயிரிழக்கிறார்! ஆனால் அடுத்து விமானங்கள் பறக்காமல் போகின்றனவா ? அல்லது மக்கள் விமானத்தில் ஏறிப் பயணம் செய்ய அஞ்சுகிறார்களா ? இல்லை!

மனிதருக்குப் பயன்படும் அல்லது மனித ஆராய்ச்சிக்குத் தேவைப்படும் ஆகாய விமானம், அண்டவெளிக் கப்பல், அணுமின் உலை ஆகியவை யாவும் ‘பூஜியப் பழுதுகள் ‘ அல்லது ‘ஏற்கும் பழுதுகள் ‘ [Zero or Acceptable Defects] என்னும் தரக் கட்டுப்பாடு நெறியில் [Quality Control & Assurance] தயாரிக்கப் பட்ட சாதனங்களைக் கொண்டு உருவாக்கப் பட்டவை! ஆகவே பணம் கொடுத்துப் பயணம் செய்ய ஒருவர் விமான ஆசனத்தில் அமரும் போது, விமானம் ஆக்கப்பட்ட ‘ஏற்பு அபாய எதிர்பார்ப்புக்கு ‘ [Acceptable Risks] உடன்படுகிறார்! அதே சமயம் விமான ஏற்பு அபாய எதிர்பார்ப்பை நம்பாதவர், ஏற்றுக் கொள்ளாதவர் விமானத்தில் பறக்க வேண்டியதில்லை! பதிலாக மெதுவாக ஊர்ந்து செல்லும் கப்பலில் செல்லலாம்! கப்பல் பயணத்தின் அபாய எதிர்பார்ப்பை நம்பாதவர், கடல் பயணத்துக்கு அஞ்சுபவர் எங்கும் போகாமல் பாதுகாப்பாக வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கலாம்!


பணியாளருக்கு அளிக்கும் உயர்ந்த பயிற்சிகள், பாதுகாப்பு முறைகள்

இந்திய அணுசக்தி நிர்வாகம் முதலில் தேர்ந்தெடுக்கும் போதே சிறந்த விஞ்ஞானிகளையும், உயர்தர எஞ்சினியர்களையும் பாரத மெங்கும் தேடிச் சலித்து எடுக்கிறது. 1957 ஆண்டு முதல் கடந்த 45 ஆண்டுகளாக ஒவ்வோர் ஆண்டிலும் குறைந்தது 250 நபர்களைத் [50 எஞ்சினியர், 50 பெளதிக, 50 இரசாயன, 50 உயிரியல், 50 உலோகவியல் விஞ்ஞானிகள்] தேர்ந்தெடுத்து தனித் தனியாக ஓராண்டுக்குப் அணுவியல் விஞ்ஞானம், அணுவியல் இரசாயனம், அணுக்கருப் பொறியியல், கதிரியக்கத்தின் நன்மை தீமைகள், பாதுகாப்பு முறைகளில் கல்வி புகட்டப் படுகிறது. கல்லூரி போல் தேர்வுகளும் வைக்கப்படும். 2002 ஆண்டு வரைப் பயிற்சி பெற்ற 11250 [45×250=11250] வல்லுநர்களைப் ‘பம்பாய் அணுசக்தி பயிற்சிக் கூடம் ‘ [Atomic Energy Training School, Bombay] பாரத அணுவியல் துறைகளில் பணி செய்யத் தயாரித்துள்ளது. அவர்களே அனைத்து அணுவியல் துறைச்சாலைகள், அணு உலைகள், அணுமின் உலைகள், வேகப் பெருக்கி அணு உலை, புளுடோனியம், யுரேனியம் இரசாயனத் தொழிற்சாலைகள் ஆகியவற்றை இப்போது இயக்கி வருகிறார்கள்.

அத்துடன் ஒவ்வொரு அணுமின் உலைகளிலும் தனியாகக் குறிப்பிட்ட பயிற்சிகளைப் பணியாளிகளுக்கு அளித்து மனிதத் திறமைகள் கூர்மை யாக்கப் படுகின்றன. கதிரியக்கத்தைக் கையாள, அணு உலையின் தளங்கள் நான்கு கதிர்வீச்சு அரங்கு களாகப் [Zone-1, Zone-2, Zone-3, Zone-4] பிரிக்கப் பட்டுள்ளன. அரங்கு-1 நிர்வாகத் துறையினர் நடமாடும் தூய தளங்கள்; உணவு அருந்தும் அறைகள். அரங்கு-2 மிதமான கதிர்வீச்சு கொண்ட தளங்கள். ஆட்சி அறை, பராமரிப்புத் தளங்கள் இந்த ரகத்தைச் சேர்ந்தவை. வீரிய கதிர்வீசும் சாதனங்கள் பராமரிக்கப் படும் தளங்கள் அரங்கு-3 நிலையைப் பெறுபவை. அரங்கு-4 இல் அணு உலை, தீய்ந்த எரிக்கோல்கள் சேமிப்புத் தடாகம் [Spent Fuel Storage Pool] ஆகியவை அமைக்கப் பட்டுள்ளன. அரங்குகளின் எல்லைகளில் அழுத்தமான நிறக் கோடுகளில் தரையில் வரையப் பட்டு, அணிய வேண்டிய பாதுகாப்பு உடைகள், கவசங்கள் ஆகியவை அறிக்கைப் பலகையில் குறிக்கப் பட்டு, எச்சரிகை விதிகள் காணப்படும்.

அணுமின் உலை அணுகுண்டைப் போல வெடித்துப் பேரழிவை உண்டாக்குமா ?

ஜப்பான் ஹிரோஷிமா, நாகசாக்கி நகரங்களில் வெடித்த அணு குண்டுகளுக்கும், மின்சாரம் பரிமாறும் அணு உலைகளுக்கும் பெருத்த மாறுபாடுகள் உள்ளன! செர்நோபிள் ரஷ்ய அணு உலையில் உண்டான வெடிப்பு அணு குண்டுகள் போல நியூட்ரான் பெருக்கம் மீறி அணுக்கருப் பிளவுகளால் ஏற்பட வில்லை! அணு உலையின் தணிப்பு நீர் மூலக்கூறுகள் கடும் வெப்பத்தால் நீராவி ஆகி, உலோகத்துடன் கலந்து மின்னியல் பிரிவு பட்டு, ஏராளமான ஹைடிரஜன் வாயு கிளம்பி, எப்போதும் தீக்கனலாய்ச் சிவக்கும் கரித்திரள் கட்டியின் உஷ்ணத்தில் ஆக்ஸிஜனுடன் மூர்க்கமாய் இணைந்ததால் பயங்கர வெடிப்பு ஏற்பட்டது! அணுகுண்டு போல அணு உலைகள் வெடித்து வீடுகளையும், கட்டடங்களையும் தகர்த்துப் பேரழிவை உண்டாக்க மாட்டா! அணுகுண்டில் கட்டு மீறிப் பெருகும் அணுக்கரு இயக்கங்கள் வேக நியூட்ரான்களால் தூண்டப் படுபவை! கல்பாக்கம் வேகப் பெருக்கி அணு உலையைத் தவிர, பாரதத்தின் மற்ற எல்லா அணுமின் உலைகளும் மெது வேக நியூட்ரான் இயக்கங்களால் வெப்ப சக்தியை ஆக்குபவை!

அணுகுண்டுகளில் யுரேனியம்235 [Close to 100% purity] அல்லது புளுடோனியம்239 ஆகிய அணுப்பிளவு உலோகங்கள் [Fissionable Materials] உபயோகமாகி, எந்த வித மிதவாக்கியும் [Moderator to reduce Neutron Energy] இல்லாது வேக நியூட்ரான்கள் அவற்றைத் தாக்கிப் பேரளவு வெப்ப சக்தி, வெடிப்பு, கதிரியக்கப் பொழிவுகளும் பொங்கிப் பேரழிவு உண்டாகுகிறது!

ஆனால் வேகப் பெருக்கியைத் [Fast Breeder Reactor] தவிர மற்ற பெரும்பான்மை யான வெப்ப அணு உலைகளில் [Thermal Nuclear Reactor] பயன்படும் எரிபொருள்: [(0.7%-3%) Fissionable Uranium235 or (2%-3%) Plutonium]. எளிய நீர் அல்லது கனநீர் மிதவாக்கியாக [Light Water or Heavy Water Moderator] உபயோகமாகி வேக நியூட்ரான் சக்தி மிதமாக்கப்பட்டு வெப்பப் பிளவு இயக்கத்தில் [Thermal Fission Reaction] மட்டுமே சக்தியை உண்டாக்குகிறது! வேகப் பெருக்கி அணு உலைகளில் மிதவாக்கி இல்லாது வேக நியூட்ரான் இயக்கம் நிகழ்ந்தாலும், எரிபொருளின் செறிவு (2%-3%) புளுடோனியம்239 அல்லது (2%-3%) யுரேனியம்233 மிகக் குறைந்த அளவில்தான் பயன்படுகிறது! ஆதலால் பாரதத்தின் எந்த அணு உலையிலும் அணுகுண்டு போல் நியூட்ரான் இயக்கத்தால் பெரு வெடிப்போ அன்றிக் கதிர்வீச்சுப் பொழிவால் சுற்றுப்புற பேரழிவோ எதுவும் நிகழவே நிகழாது!

இந்திய அணுமின் உலைகளில் பணி செய்யப் பாதுகாப்பு உறுதி

பாரத அணுவியல் துறைகளின் உள்ளே பணிபுரியும் நபர்களுக்குக் கதிர்வீச்சுப் பாதுகாப்பு அளிப்பதுதான் நிர்வாகிகளின் முதல் பணி! முக்கியப் பணி! அடுத்த இரண்டாம் பணி, அணுவியல் துறைகளைச் சுற்றி வாழும் பொது மக்களைக் கதிர்வீச்சு தாக்குதலிலிருந்து காப்பது! சூழ்மண்டலக் காற்று, நீர்வளம், நிலவளம், தாவரங்கள் ஆகியவற்றைக் கதிர்க் கசிவுகளிலிருந்து காப்பது! இவ்விரண்டு பணிகள் சரிவரச் செய்யப் பட்டு வருகின்றனவா என்று அனுதினம் 24 மணி நேரமும் கண்காணித்து மேற்பார்ப்பது, ‘உடல்நலப் பெளதிக வாதிகள் ‘ [Health Physicists]. உடல்நலப் பெளதிகக் குழுவினர்தான் பிலிம் பாட்ஜ்களை [Film Badges] பணியாளிகளுக்கு அளித்துச் சோதித்து வருபவர். அனுதினமும் சூழ்மண்டலக் காற்று, நீர், நிலத்தின் கதிர்த் தீண்டல்களைச் சோதித்து வருபவர். பணி புரியும் உடல்நலப் பெளதிக வாதிகள் நிலையத்தைச் சேர்ந்தவராயினும், அவரது தலமை அதிகாரிகள் தனிப்பட்ட நிறுவகத்தின் குழுவினர்!

பம்பாய், சென்னை, ஹைதராபாத், ராஜஸ்தான், தாராப்பூர், குஜராத், கர்நாடகா, நரோரா போன்ற பல இடங்களில் இயங்கி வரும் அணு உலைகள், அணுமின் உலைகள், அணுவியல் ஆய்வுத் துறைகள் ஆகியவற்றில் அநேக இந்திய ஆடவர், பெண்டிர் பணி புரிந்து வருகிறார்கள்! அவர்களில் 98 சதவீதம் வரையறைக்கு உட்பட்ட கதிரடி பெற்று உடல் நலமோடு வாழ்ந்து வருகிறார்கள். அவர்களின் சந்ததியில் யாருக்கும் ஆறாவது விரல் முளைக்க வில்லை! அறிந்தோ அறியாமலோ வரையறை அளவோ, அதற்கும் சற்று மிகையான அளவோ கதிர்வீச்சுப் பெற்றவர்களும் புற்று நோயால் தாக்கப் படவில்லை! அவரது பிள்ளைகளுக்கும் ஆறாவது விரல் தோன்ற வில்லை!

பம்பாய் கனடா இந்திய அணு ஆய்வு உலையில் நான் தணிந்த கதிரடிகள் பெற்று ஆறு ஆண்டுகள் பணி செய்த பின், பிறந்த என் இரண்டு புதல்விகளில் யாருக்கும் என் கதிரடியால் எந்த நோயும் உண்டாக வில்லை! கைகளில் ஆறாவது விரலும் முளைக்க வில்லை! தற்போது கனடாவில் யந்திரவியல் எஞ்சினியர்களான என் இரண்டாவது புதல்வியும் அவளது கணவரும் அணுமின் நிலையங்களில் கடந்த நான்கு ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார்கள். 4000 MWe [8×500 MWe] ஆற்றல் கொண்ட வட அமெரிக்காவின் மிகப் பெரிய பிக்கரிங் அணுமின் நிலையத்தில் [Pickering Nuclear Generating Station] மகள் பணி செய்கிறாள். எனது மருமகன் வேறொரு அணுமின் உலையில் 3200 MWe [4×800 MWe] ஆற்றலுடைய டார்லிங்டன் அணுமின் நிலையத்தில் [Darlington Nuclear Generating Station] பணி புரிகிறார். அவர்கள் இருவருக்கும் அணு உலைக் கதிரடியால் எந்த வித நோயும் இல்லை! அவர்களுக்கு பிறந்த இரண்டு குழந்தைக்கும் ஆறாவது விரல் முளைக்க வில்லை

தமிழக மாந்தருக்கு ஓர் வேண்டுகோள்! பாதுகாப்பான அணு உலைக் கதிர்வீச்சால் எந்தப் புற்று நோயும், அல்லது சந்ததி ஊனமும் பணியாளருக்கு உண்டாவ தில்லை! செர்நோபிள் அணு உலை போன்றோ அல்லது அணு ஆயுதம் போலவோ, பாரத அணுமின் உலைகள் ஒருபோதும் வெடித்து மக்களுக்குப் பேரழிவை உண்டு பண்ண மாட்டா! பாரத அணு உலைகளில் ஆடவர், பெண்டிர் யாரும் அஞ்சாமல் நிரந்தரமாகவோ அன்றித் தற்காலிகமாகவோ பணி செய்து அறிவுக்கும், திறனுக்கும், வயிறுக்கும் உணவு அளித்து வரலாம்! ஆக்க உணர்வோடு பணி புரிய கூரிய அறிவும், சீரிய திறனும், ஓங்கிய வல்லமையும் தமிழர் வசம் களஞ்சியம் போல் செழித்துக் கிடக்கிறது!

தகவல்:

1. World Nuclear Status Report, Nuclear Europe WorldScan [July-Aug 2001]

2. Safety of Candu Nuclear Power Stations By: V.G. Snell [Jan 1985]

3. Nuclear Power in Canada, Canadian Nuclear Association Report [1975]

4. Nuclear Risk Prevention & Mitigation, First Civil Protection Forum [Nov 29, 2002]

5. Radiation Protection Qualifications, Access Limits & Working Rights [July 2000]

6. Nuclear Power Safety & Understanding Ionizing Radiation [Aug 1992]

7. Nuclear Power in USA- A Rational Approach By: Robert W. Deutsch [1987]

Series Navigationவெண்வெளியில் ஒரு திருவாலங்காடு(ALAN GUTH’S INFLATION THEORY)கதையல்ல வரலாறு 3-1:ஸ்டாலின் மரணத்தின் பின்னே…
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

10 Comments

  1. Avatar
    ஜெயபாரதன் says:

    கூடங்குளம் விஷயத்தில் அச்சம் வேண்டாம்: நேரில் ஆய்வு செய்த டாக்டர் அப்துல் கலாம் பேட்டி

    பதிவு செய்த நாள் : நவம்பர் 06,2011,23:27 IST

    திருநெல்வேலி : “”கூடங்குளம் அணு மின் நிலைய பாதுகாப்பில் எனக்கு முழு திருப்தியுள்ளது. கூடங்குளம் விஷயத்தில் பொதுமக்களுக்கு அச்சம் வேண்டாம்,” என, அணுமின் நிலையத்தை ஆய்வு செய்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் உறுதிபட தெரிவித்தார்.

    கூடங்குளம் அணு உலைக்கு எதிராக, நெல்லை மாவட்டம் இடிந்தகரையில் போராட்டம் நடக்கிறது. ஒரு தரப்பினரின் இந்த போராட்டத்தால், அணு மின் நிலைய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. “அணு உலையால் உயிருக்கே ஆபத்து’ என, போராட்டக் குழு பிரதிநிதிகள் கூறுவதைக் கேட்டு, மக்கள் பீதியடைந்துள்ளனர். இந்நிலையில், நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு நேற்று காலை, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் வந்தார்.அங்கு பணிமுடிக்கப்பட்ட அணு உலை 1, 2 ஆகியவற்றை பார்வையிட்டு, விஞ்ஞானிகள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    பின்னர், நிருபர்களிடம் அப்துல் கலாம் கூறியதாவது: கூடங்குளம் அணுமின் நிலையம் மூன்றாம் தலைமுறைக்கான அதிநவீன பாதுகாப்பு வசதிகளைக் கொண்டுள்ளது. இங்கு மின்தடை ஏற்பட்டாலோ அல்லது குளிர்விப்பானில் தடை ஏற்பட்டாலோ, நீராவி மூலம் வெப்பம் குளிர்விக்கப்படும் தானியங்கி வசதி உள்ளது. இந்த வசதி, இந்தியாவிலேயே முதல்முறையாக இங்கு மட்டுமே உள்ளது. கதிர்வீச்சு அபாயமில்லை: அணு உலையில் எரிபொருள் உருகி கீழே விழுந்தால், அதன் அடிப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள தொட்டி போன்ற அமைப்பு, அந்த எரிபொருளிலிருந்து கதிரியக்கத்தை செயலிழக்கச் செய்யும். மேலும், கதிர்வீச்சு வெளியாவதை தடுப்பதற்காக, இரட்டை சுவர் முறையில் அணுஉலை நவீனமாக அமைக்கப்பட்டுள்ளது. இதனால், கதிர்வீச்சு அபாயமும் இங்கில்லை. இந்த அணுஉலை பாதுகாப்பில் எனக்கு முழு திருப்தியுள்ளது.

    ஏன் பயம்? அணுமின் நிலையத்திற்கு எதிராக போராடுபவர்களுக்கும், மத்திய அரசிற்கும், இப்பிரச்னையில் சமரசம் செய்வதற்கான தூதராக நான் இங்கு வரவில்லை. அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் தெரிந்ததன் காரணமாகவே இங்கு வந்துள்ளேன். இந்த அணுமின் நிலையத்தைப் பற்றி பொதுமக்கள் பயப்பட வேண்டாம். எனக்கு பயிற்றுவித்த சிவசுப்பிரமணிய ஐயர் உள்ளிட்ட ஆசிரியர்கள், எதிலும் குறைகாணக்கூடாது என்றே கூறியுள்ளனர். பொது விஷயங்களில், அதன் படியே நான் நடக்கிறேன்.

    பாதிப்பு வராது: இங்கு யுரேனியத்தில் வரும் 25 சதவீத கழிவு, கடலில் கொட்டப்படாது. உலகளவில் அணு உலையில் இதுவரை மொத்தம் ஆறு விபத்துகள் நடந்துள்ளன. ஆனால், இந்தியாவில் ஒன்று கூட நடக்கவில்லை. ஆயினும், அதுபோலவோ அல்லது அதைவிட பெரிதாகவே விபத்து நடந்தாலும், இங்கு எந்த பாதிப்பும் வராது. ஏனெனில், கூடங்குளம் அணுமின் நிலையம், கடல் மட்டத்திலிருந்து 13.5 மீட்டர் உயரத்தில் உள்ளது. மேலும், பூகம்பம் ஏற்படாத பாதுகாப்பான 2வது இடத்திலுள்ளது. இதனால், பூகம்பம், சுனாமியால் இந்த அணு மின் நிலையம் எவ்வகையிலும் பாதிக்கப் படாது.

    நெல்லை நெல்லையப்பர் கோவில், 1,000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. அதுபோலத்தான் தஞ்சை பெரிய கோவிலும் கட்டப்பட்டது. அவை, இன்றும் நிலைத்து நிற்கின்றன. கடல் அலை அரிப்பால் ஆபத்து ஏற்படுமென நினைத்திருந்தால், கல்லணையை கரிகாலன் கட்டியிருக்க மாட்டார். எனவே, எல்லாவற்றிலும் நம்பிக்கைதான் நல்லது.

    இங்கு என்னை சந்தித்த 15 கிராமங்களைச் சேர்ந்த 40 பேர், மின்சாரம் மிக முக்கியம். ஆகையால், இங்குமின் உற்பத்தியை விரைந்து துவக்க வேண்டும் என்றனர். நாங்கள், 1979ல் பி.எஸ்.எல்.வி., -3, ராக்கெட் தயாரித்தபோது, விபத்து ஏற்பட்டதில், எட்டு பேருக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது. அப்போது ஒருவர் என்னிடம் நிச்சயம், இந்த ராக்கெட்டை அடுத்தாண்டு விண்ணில் ஏவுவோம் என்றார். அதன்படி, ராக்கெட்டும் ஏவப்பட்டது. எனவே, நம்பிக்கை அவசியம். அதுபோல, இந்த அணுமின் நிலைய பாதுகாப்பையும் பொதுமக்கள் நம்ப வேண்டும். புயல், சூறாவளி ஏற்பட்டாலும் இந்த அணுமின் நிலை யத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. இந்தாண்டு, கடைசியில் இங்கு 1,000 மெகாவாட், அடுத்த ஆறு மாதத்தில் 2,000 மெகாவாட், அடுத்தபத்து ஆண்டில் 4,000 மெகாவாட் மின்சாரம் இங்கு உற்பத்தி செய்யப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.மொத்தத்தில், கூடங்குளத்தை அணுஉலைப் பூங்காவாக மாற்றவேண்டுமென்பது எனது விருப்பம். இவ்வாறு அப்துல் கலாம் நிருபர்களிடம் கூறினார்.

    பேட்டியின் போது, இந்திய அணுசக்தி கழக தலைவர் எஸ்.கே.ஜெயின், கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குனர் காசிநாத் பாலாஜி, அதிகாரிகள் உடனிருந்தனர்.

    ரகசியமாக வைக்கப்பட்ட கலாம் வருகை :*பாதுகாப்பு கருதி அப்துல் கலாமின் கூடங்குளம் பயணம், நிகழ்ச்சி விவரம் மிக ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது
    *நேற்று முன்தினம் நள்ளிரவு 1.30 மணிக்கு, கூடங்குளம் அணுமின் நிலைய குடியிருப்பிற்கு கலாம் வந்தார்
    * நேற்று காலை சரியாக 9.30 மணியளவில், காரில் அணுமின் நிலைய வளாகத்திற்குள் நுழைந்தார். அவருடன், இந்திய அணுசக்தி கழகத்தலைவர் எஸ்.கே.ஜெயின் வந்தார்.

    * அணுமின் நிலையத்தில் அதிகாரிகள், விஞ்ஞானிகளின் ஆலோசனை நடத்திவிட்டு, அணுஉலை 1, 2ஐ ஆய்வு செய்த கலாம், அணுமின் நிலைய ஆதரவாளர்களையும் சந்தித்தார்.

    * அப்துல் கலாமிடம் பேட்டியெடுக்க தமிழ், ஆங்கிலம், மலையாள பத்திரிகை நிருபர்கள், “டிவி’ நிருபர்கள் ஏராளமானோர் இங்கு குவிந்தனர்

    *மதியம் 1.15 மணிக்கு நிருபர்களை சந்தித்த கலாம், முக்கால் மணி நேரம் பேட்டியளித்தார். அணுஉலை குறித்த நிருபர்களின் சரமாரியான கேள்விகளுக்கு, ஆசிரியர் போல் விளக்கமாக பதில் கூறினார்.
    *பிரச்னை தவிர்ப்பதற்காக கூடங்குளம் அணுமின் நிலையம், சுற்றுப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    * அணுஉலை ஆய்விற்கு கலாம் சென்றபோதும், அணு உலை ஆதரவாளர்கள் அவரை சந்தித்தபோதும், அதை படமெடுக்க பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

    “சந்ததிகள் வாழ கூடங்குளம் அவசியம் தேவை’: கலாமிடம் நிருபர் ஒருவர், “”கனவு காணுங்கள் என்கிறீர்கள். தங்களின் எதிர்கால சந்ததிகள் நன்றாக இருக்க வேண்டுமென்ற கனவில் தானே, போராட்டக் காரர்கள் இந்த கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்க்கிறார்கள்,” என, கேட்டார்.

    இதற்கு பதிலளித்த கலாம்,”ஒரு விஞ்ஞானி என்ற முறையில் மின்சாரத்தின் தேவையை நன்கு அறிந்தவன் நான். எனவே, இப்பகுதி மக்களின் சந்ததிகள் சிறப்பாக வாழ இந்த அணுமின் நிலையம் அவசியம் தேவை. இங்கிருந்து, இந்தியா முழுமைக்கும் மின் சப்ளை செய்யும் நிலைமை வரவேண்டும். பொதுமக்கள் பயப்படுவதுபோல, இங்கு விபத்து நடக்காது,” என்றார்.

    அவசியம் இல்லை: மின்உற்பத்தியை துவங்க வலியுறுத்தி அணுமின் நிலையத்திற்கு மனு கொடுக்க வந்தவர்களை சந்தித்த கலாம், போராட்டக்கார்களை சந்திக்க செல்ல வில்லை. இதுகுறித்து கலாமிடம் கேட்டபோது,”” இந்த அணுமின் நிலையம் குறித்து பொதுமக்கள் பயப்படத் தேவையில்லை. ஏனெனில், மின்தேவை நமக்கு அவசியம். அது முக்கியம். மின் உற்பத்தி துவங்க வலியுறுத்தி இங்கு என்னிடம் மனு கொடுக்க வந்தவர்களை நான் சந்தித்தேன். அதேபோல, போராட்டக்காரர்களும் இங்கு வந்தால் அவர்களையும் சந்திப்பேன். மாறாக, நான் அவர்களைத் தேடிச் சென்று சந்திக்க வேண்டிய அவசியமில்லை. அவர்கள் தங்களின் கருத்துக்களை என்னுடைய apj@abdulkalam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்,” என்றார்.

    “இந்த அணுமின் நிலையத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது. இதுகுறித்த என்னுடைய கருத்தை பொதுமக்களிடம் வெவ்வேறு வழிகளில் தெரிவிப்பேன். டில்லியில் நடக்கவுள்ள அணுசக்தி மாநாட்டிலும் இதுகுறித்து பேசுவேன். இந்த அணுமின் நிலையம், இப்பகுதி மக்களின் வரப்பிரசாதம். மக்களின் நல்வாழ்வுக்கு உழைப்பும், நல்லொழுக்கமுமே முக்கியம். இந்த அணுமின் நிலையத்தால் பொதுமக்களின் எதிர்கால வாழ்க்கை பிரகாசமாக அமையும் என்றும் அவர் மேலும் கூறினார். பின்னர், காரில் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் சென்று, அங்கிருந்து விமானம் மூலம் அவர் சென்னை சென்றார்.

    நன்றி :ஹிந்து நாளிதழ், அய்யாசாமி ரங்கநாதன்

  2. Avatar
    பொன்.முத்துக்குமார் says:

    போராட்டக்காரர்களும் கலாம் அவர்களை சந்தித்திருக்க வேண்டும்.

    இரு தரப்புகளும் விளக்கமாக பொதுமக்கள் முன்னிலையில் உரையாடவேண்டும். போராட்டக்காரர்கள் தரப்பில் இன்னும் கேள்விகள் உள்ளன. முக்கியமாக குமரியில் வள்ளுவர் சிலை உயரத்திற்கு அலைகள் எழும்பின, எனவே அதே போல நிகழ்ந்தால் 15 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கும் அணு உலைக்கும் பாதிப்பு நிகழ வாய்ப்பு உண்டு என்கின்றனர்.

    1. Avatar
      நாஞ்சில் சுதீந்த்ரர் says:

      “குமரியில் வள்ளுவர் சிலை உயரத்திற்கு அலைகள் எழும்பின” ==
      இது தவறான தகவல்
      வள்ளுவர் சிலை 133 அடி உயரம் உடையது. வள்ளுவர் நிற்கும் பீடம் மிகப்பெரிய பாறையின் மேல் சமபடுதப்பட்டு அமைக்கபட்டுள்ளது.
      சுனாமி நிகழ்வின் பொழுது சாதாரண கடல் மட்ட அளவிலிருந்து சுமார் ஒன்னரை அடி உயரம் வரை உயர்ந்த கடல் மட்டம் வள்ளுவர் பீடம் அமைந்த சரிவான பெரிய பாறையின் மேல் மிக வேகமாக மோதியதன் காரணமாக கடல் நீர் வள்ளுவரின் மார்பு பகுதிவரையான உயரத்திற்கு கடல் நீர் பொங்கி எழுந்தது. இது சம்பத்தப்பட்ட வீடியோக்கள் youtube ல் உள்ளது. போராட்டக்காரர்கள் கூற்றுப்படி வள்ளுவர் சிலை உயரத்திற்கு அலைகள் எழும்பியுருந்தால் கன்னியாகுமரி அழிந்து போயிருக்கும். பொது மக்களே உண்மையை உணர்ந்து தெளியுங்கள்

  3. Avatar
    Subramanian R. says:

    Good explanation. But convince the majority pople who will
    fear about the neuclear power project.Thats most important.Otherwise it will become a strong war against
    this project. I think Sri. Abdul Kalaam must be explain
    to the Majority people.

  4. Avatar
    suvanappiriyan says:

    ஆக்கபூர்வமான கட்டுரை. இதை தமிழக மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். சிறந்த தகவல்களை தந்தமைக்கு நன்றிகள்.

  5. Avatar
    GovindGocha says:

    அனுமாங்களில் அடிப்படையிலான பயத்தை ஊதி விடுகிறார், உதயகுமார். எடுத்த எடுப்பிலேயே அப்துல்கலாமிடம் பேச மறுத்தது அவரது நிலையை சந்தேகத்திடமாக்குகிறது. ஜெயபாரதனுக்கு நன்றி…

  6. Avatar
    Karthikeyan says:

    Udayakumar giving the reports from the rumors of the foreign countries . The government should check the background of the culprits doing the protest against the nuclear plant. If he is perfect well wisher he should to meet the genius like mr.Kalam . we don’t know the when the people know real face of the culprits .

  7. Avatar
    quanbk says:

    ஞாநி பதில்:
    ஜெயபாரதனுக்குப் பொதுவாக நான் பதில் சொல்ல விரும்புவதில்லை.காரணம் அவர் தொடர்ந்து அரசாங்க அறிக்கைகளையும் அணூலை தயாரிப்பாளர்களின் மேனுவல்களையும் மறுபிரதி செய்துவருபவர்.

    அவருடைய ஒரு கட்டுரையில் என்னை திட்டுகிறபோது கூட அவர் என்னுடைய நான்கு கருத்துகளில் மூன்றை உண்மை என்று ஒப்புக் கொண்டாகவேண்டியிருக்கிறது.

    ”1.பல தலைமுறைகளுக்கு ஆபத்தான கழிவுகளைத்தான் உற்பத்தி செய்யும். [இது மெய்யானது]”

    ”2. வல்லரசு வேடங்கட்டி ஆடுவதற்காக அணு ஆயுதத்துக்கான புளுடோனியத்தை எடுத்து, அணுகுண்டு தயாரிப்பவர்கள்தான் உண்மையான பயங்கரவாதிகள். [இது மெய்யானது]”

    3. கல்பாக்கம் அணு உலகளைக் கட்டி முடிக்கவே 15 ஆண்டுகள் ஆகின. இயங்கத் தொடங்கிய முதல் ஐந்து ஆண்டுகளில் 200 முறை பிரச்சினைகளினால் நிறுத்தப் பட்டன. [அதாவது ஆண்டுக்கு 40 தடவை நிறுத்தம், மாதம் ஒன்றுக்கு 3-4 நிறுத்தம்]. [முன்னோடி அணுமின் உலைகளில் இத்தனை நிறுத்தங்கள் ஒன்றும் பெரிதல்ல!”

    அவர் மறுக்கும் ஒன்று கூட முழுமையான் மறுப்பு அல்ல.

    “3. கல்பாக்கம் அணு உலைகள் நிரந்தர ஆபத்தாக இருந்து அங்குள்ள ஊழியர்களுக்கு உடல்நல விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. [இது தவறானது. ஞாநி குறிப்பிடும் விபத்து எரிக்கோல் மீள்சுத்திகரிப்புத் தொழிற்கூடத்தில் நிகழ்ந்தது. கல்பாக்க அணு உலைகளில் நிரந்தர ஆபத்துக்கள் இல்லை]” என்கிறார் ஜெயபாரதன். அவர் சொல்லும் தொழிற்கூடம்தான் குண்டு தயாரிக்க புளுடோனியத்தை பிரித்து தரும் இடம். அதுவும் கல்பாக்கம் வளாகத்தில்தான் இருக்கிறது. கல்பாக்கம் உலைகள் என்று சொல்லும்போது மொத்தமாக சொல்லுகிறோம். ஜெயபாரதன் நியூக்ளியர் ஃபிஷ்ஷன் நடக்கும் இடத்தை மட்டும் உலை என்று பிரித்துச் சொல்கிறார்..

    இதிலிருந்து என்ன தெரிகிறது ? பல தலைமுறைகளை பாதிக்கக்கூடிய ஆபத்தான அணுக்கழிவுகள் உண்டு. ரயில் விபத்து, சாலை விபத்து மாதிரி இதை எப்படி ஏற்றுக் கொள்ளமுடியும் ? பத்திரமாக பாதுகாப்பதாக சொல்வதை எப்படி ஒப்புக் கொள்ளமுடியும் ? உலகத்தில் பல இடங்களில் பூமியில் புதைத்த கழிவுகலிலிருந்து கதிரியக்கம் நிலத்தடி நீரை பாதித்துள்ளன. இந்தியாவிலேயே யுரேனியம் சுரங்கங்களுக்கு அருகில் இருக்கும் கழிவுகளைக் கையாண்ட குப்பை பொறுக்குவோர் செத்துப் போயிருக்கிறார்கள். டெல்லி காயலான் கடையில் கதிரியக்கப் பொருள் கலந்து வந்து பலரை பாதித்தது. கேட்டால் அது மருத்துவமனையிலிருந்து வந்தது என்றார்கள். அதற்கும் பொறுப்பு அணுசக்தி துறைதானே?

    ஜெயபாரதன் ஒரு கட்டுரையில் சொல்வது இதோ : “செர்நோபில் அணுமின் உலை இயக்குநர் போன்று, அரைகுறை அறிவுடன் நெறிகள் பலவற்றை முறித்த, போதுமான பயிற்சி யில்லாத பணியாளரைப் பாரத அணுமின் நிலையங்களில் காண்பது வெகு அபூர்வம்.அவரே இன்னொரு கட்டுரையில் சொல்வது இதோ: உலக நாடுகளில் இயங்கும் அணுமின் நிலையங்களில் விபத்துகள் நிகழ்ந்ததுபோல், இந்திய அணு உலைகளிலும், அணுஎருச் சுத்தீகரிப்புத் தொழிற் கூடங்களிலும் சில அபாயங்கள் நேர்ந்துள்ளன! மனிதர் கவனமின்மை, மனிதத் தவறுகள், பாதுகாப்புப் பணிநெறிகளைப் பின்பற்றாமை, சீரான மேற்பார்வை இன்மை, கண்காணிப்பு இன்மை ஆகிய ஒழுங்கீனங்களால் தொழிற்சாலைகளில் விபத்துகள் உண்டாகும். அவற்றைத் தவிர்ப்பது, தடுப்பது அல்லது குறைப்பது இயக்குநரின் முக்கிய கடமையாக இருத்தல் அவசியம். அணு உலைகளில் பெரும்பான்மையான விபத்துகள் மனிதத் தவறுகளால் ஏற்படுகின்றன. மனிதத் தவறுகள், கண்காணிப்பட்டு குறைக்கப்பட வேண்டும். குறைந்து குறைந்து மனிதத் தவறுகள் பூஜியமாக்கப்பட வேண்டும். விபத்துகளின் மூல காரணங்கள் ஆழ்ந்து உளவப்பட்டு, மீண்டும் அவை ஏற்படாதிருக்க தடுப்பு முறைகள், பாதுகாப்பு நெறிகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும். அணு உலைகளின் பிரச்சனைகளைக் கண்டு மிரளாமல், அவற்றைத் தீர்க்க வழிகள் வகுக்கப்பட வேண்டும். ”

    அதாவது இப்போது இதெல்லாம் இப்படி ஒழுங்காக இல்லை. இனிமேல்தான் இவையெல்லாம் செய்யப்பட வேண்டும், வேண்டும், வேண்டும் என்கிறார். அணு சக்தி நிர்வாகம் இத்தனை ஆண்டுகளாக செய்யத் தவறியிருக்கிறது என்பதுதான் எங்கள் குற்றச்சாட்டு.

    அது மட்டுமல்ல அணு உலைகள் தொடர்பாக ஊழியர்களிடம் நடத்திய கண் துடைப்பு மருத்துவ பரிசோதனை பற்றியெல்லாம் ஜெயபாரதன் பதிலே சொல்வதில்லை. கதிரடி வாங்கினால் சிகிச்சை செய்துவிடலாம் என்கிறர். இதை செர்னோபில்லில் போய் சொல்லிப் பார்க்கட்டும். கனடாவில் பத்திரமாக உட்கார்ந்துகொண்டு சொல்வது எளிது.

    உணமையில் பூச்சாண்டி காட்டி பீதியை ஏற்படுத்தி ஏமாற்றுவது நாங்கள் அல்ல. ஜெயபாரதன், கலாம், அரசாங்கக கும்பல்கள்தான்.
    அணுமின்சாரம் இல்லாவிட்டால் என் கட்டுரையே வெளிவராது, பத்திரிகையே நடக்காது என்று ஜெயபாரதன் மிரட்டுகிறார். அணுமின்சாரம் இதுவரை எவ்வளவுகிடைத்திருக்கிறது என்ற கணக்கை இத்தனை கிலோவாட், இத்தனை யூனிட்டுகள் என்று சொல்லி பிரும்மாண்டமாகக் காட்டி ஏமாற்றுகிறார்கள். அத்தனையும் இந்தியாவின் மொத்த மின் உற்பத்தியில் வெறும் இரண்டரை சதவிகிதம்தான். இவர் நிராகரிக்கும் காற்றும், சூரியசக்தியும்தான் இப்போதே ஐந்து சதவிகித மின்சாரம் தருகின்றன.”காற்றிலிருந்தும், கடல் அலைகளிலிருந்தும், மாட்டு சாணத்திலிருந்தும், பரிதியின் வெப்பத்திலிருந்தும், நமக்குத் தேவைப்படும் மாபெரும் 200 MWe, 500 MWe, 1100 MWe மின்சார நிலையங்களைக் கட்ட முடியாது! ” என்று மிரட்டுகிறார். எதற்குக் கட்டவேண்டும்? சிறு மின் நிலையங்கள் மூலம் பத்து கிராமங்களுக்கொரு மாற்று எரிசக்தி நிலையம் மூலம் கிராமத்தேவையை பூர்த்தி செய்யமுடியும். பொது கிரிட்டிலிருந்து அவற்றை பிரித்துவிடலாம்.மாற்று எரிசக்தி முயற்சிகளுக்கு வருடந்தோறும் அணுசக்திக்கு ஒதுக்கும் தொகைக்கு நிகரான தொகை ஒதுக்கியிருந்தால் அவை நமக்கு 15, 20 சதவிகித மின்சாரத்தை எப்போதோ கொடுத்திருக்கும். ஆனால் இவர்கள் ஒதுக்கியது அணுசக்தி தொகையில் பத்தில் ஒரு பங்கு கூட இல்லை.

    எல்லாவற்றுக்கும் மேலாக அணுமின்சாரம் மிக மிக விலை அதிகமானது. கல்பாக்கம் 200 முறை மூடிக்கிடந்த செலவு, 15 வருடம் கட்டுமானத்துக்கு ஆன செலவு எல்லாவற்றையும் உற்பத்திச் செல்வில் சேர்த்தால் ஒரு யூனிட் மின்சாரம் விலை வானத்துக்கு எகிறும். இப்போதும் அணுமின்சாரத்தின் விலை என்று அரசு சொல்வது பொய்க் கணக்கு முப்பது வருடங்களுக்குப் பின் உலையை மூடிவிட்டு அதன் பின் நிரந்தரமாக அதை பராமரிக்கும் செலவெல்லாம் கணக்கில் காட்டுவதில்லை. இப்போதே தயாரிப்புச் செலவுகளை முழுமையாக் சொல்வதில்லை. உதாரணமாக தினசரி சுமார் ஆறு லட்சம் லிட்டர் நல்ல குடி நீரை எடுத்துப் பயன்படுத்துபவர்கள் அதற்கான அசல் விலை என்ன என்று கணக்கில் காட்டுவதில்லை. ஒரு லிட்டருக்கு அவர்கள் போடும் கணக்கு காசுகள் மட்டும்தான் ரூபாயில் அல்ல.

    எல்லாவற்றுக்கும் மேலாக உலகத்தில் எந்த நாட்டிலும் அணுமின் உலைகளுக்கு இன்ஷ்யூரன்ஸ் கிடையாது. ஏன் ? விபத்து ஏற்படால் ந்ஷ்ட ஈடு கொடுத்து மாளாது என்பதால்தான். அதனால்தான் மன்மோகன்சிங்கின் அமெரிக்க அடிமை ஒப்ப்ந்தத்திலேயே உலை விற்கும் தனியார் தரவேண்டிய நஷ்ட ஈட்டுக்கு உச்சவரம்பு கோரினார்கள். மீதி நஷ்ட ஈட்டை அரசே தரவேண்டுமாம். இதுதான் சொந்தக் காசில் சூன்யம் வைத்துக் கொள்வது. கட்டும் செலவும் ந்மது. விபத்து ஏற்பட்டால் நஷ்ட ஈட்டுச்செலவும் நமது? உலை விற்றவன் லாபத்தோடு போய்விடுவானாம்!

    இந்தியாவில் ஒரு பெரிய அணு உலை விபத்து ஏற்பட்டு பெருவாரியாக மக்கள் பாதிக்கப்பட்டாலொழிய இவர்களுக்கு புத்தி வராது என்றே தோன்றுகிறது. அப்படி ஒன்று நடந்துவிடக் கூடாதே என்ற கவலையில்தான் நாங்கள் குரல் எழுப்புகிறோம். அரசாங்க புள்ளிவிவர கேடயங்களுக்கு பயந்து ஓடமாட்டோம். முதலில் இதுவரை என்னென்ன விபத்துகள் நடந்தன என்ற அறிக்கையை வெளியிடட்டும்.. அணு சக்தி ‘துரை’யை கண்காணிக்க அதிலிருந்தே பிரமோஷனில் ஆளைப் போட்டு கண்காணிப்புக் குழு ஏற்படுத்தும் மோசடியை நிறுத்திவிட்டு, உச்ச நீதிமன்றம், தணிக்கைத் தலைவர் போல சுயேச்சையான அமைப்பை ஏற்படுத்தி எல்லா உலைகளின் செயல்பாட்டையும் ஆராயட்டும். அதுவரை புது உலை எதையும் தொடங்கக் கூடாது என்பதே எங்கள் கோரிக்கை.

    எல்லா தரப்பு கட்டுரைகளையும் ஆழமாக படியுங்கள். உங்கள் பகுத்தறிவு, மனசாட்சி அடிப்படையில் முடிவுக்கு வாருங்கள். இனி இவ்வாறு துண்டு துண்டாகப் பதில் சொல்லப் போவதில்லை. என் பிரதானப் பணிக்கு தேவைப்படும் நேரமும் ஆற்றலும் போக எஞ்சிய நேரத்தில்தான் நான் இணைய வேலையை கவனிக்கிறேன். நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *