வரலாற்றின் தடம் தமிழ்க்கவியின் ‘ஊழிக்காலம்’

This entry is part 1 of 22 in the series 2 மார்ச் 2014

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் படித்த ஜெயமோகனின் விஷ்ணுபுரம்’ புதினத்தின் இறுதிப்பகுதியாக இடம்பெற்றிருந்த பிரளயத்தின் காட்சிகளை ஒருபோதும் என்னால் மறக்க முடிந்ததில்லை. அக்காட்சிகள் பல நாட்கள் என் கனவில் தோன்றித்தோன்றி என்னை அச்சுறுத்திக்கொண்டே இருந்தன, இடைவிடாது பொழியும் மழை. கடல்போல வெள்ளம் பொங்கி வந்து விஷ்ணுபுரத்தையே சூழ்ந்துகொள்கிறது. வயல்வெளிகள், தோப்புகள், சின்னச்சின்ன குன்றுகள் எல்லாமே மெல்லமெல்ல வெள்ளத்தில் மூழ்கி மறைகின்றன. கால்நடைகளின் பிணங்கள் மிதந்து செல்கின்றன. மனிதர்களின் பிணங்கள் மரக்கிளைகளில் சிக்கி வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு கரையுள்ள இடங்களில் ஒதுங்கிக் கிடக்கின்றன, தெருக்களில் புகுந்த வெள்ளம் வீடுகளையும் பெரிய பெரிய மாளிகைகளையும் மூழ்கவைத்துவிடுகிறது. தப்பித்து திசைக்கொருவராக ஓடும் சிறுவர்களும் வயதானவர்களும் பெண்களும் எங்கெங்கோ சிக்கி தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழக்கிறார்கள்.  நகரம் அழிந்த பிறகும் அந்நகரத்தின் பெருமையை நாட்டுக்கெல்லாம் அறிவித்தபடி விண்ணை முட்டும் கோபுரங்களைக் கொண்ட ஆலயமும் மூழ்கத் தொடங்குகிறது. கலசங்களும் மூழ்கி, வெள்ளக்காடாகிவிட்ட நகரிலிருந்து விலகி, மீட்சியைத் தேடி மலையை நோக்கி நடக்கும் நீலி மட்டுமே உயிர் பிழைக்கிறாள். நடந்துபோன அழிவுக்கும் எஞ்சியுள்ள வாழ்க்கைக்கும் அவள் ஒருத்தியே சாட்சி. புனைவான அந்தக் காட்சிகள் இலங்கை மண்ணில் இன்று உண்மையாகிவிட்டன. கையறு நிலையில் மனிதகுலமே மெளனசாட்சிகளாக நிற்க, மானுட வரலாற்றில் அழிக்கமுடியாத ஒரு பெருங்கறையாக ஒரு பேரழிவு நிகழ்ந்துவிட்டது. வலிமிகுந்த அந்த வரலாற்றின் காட்சிகளை ’ஊழிக்காலம்’ நாவலாக எழுதியுள்ளார் தமிழ்க்கவி. விஷ்ணுபுரம் நாவலைப் படித்து பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு, ஊழிக்காலம் நாவலிப் படித்ததும் மீண்டும் என் இரவுப்பொழுதுகள் மீண்டும் தூக்கமற்றவையாக மாறிவிட்டன. அடிக்கடி மூளும் கொடுங்கனவுகளின் துயரத்திலிருந்து மீளமுடியவில்லை. கனவிலிருந்து எழும் ஒவ்வொரு தருணத்திலும் உடலும் மனமும் நடுங்கத் தொடங்கிவிடுகின்றன.

 

ஊழிக்காலம் என்பது எவ்வளவு பொருத்தமான சொல். இனி ஒருபோதும் திரும்பமுடியாத வரலாறாகிவிட்டது அந்த வாழ்க்கை. எல்லாமே பொய்யாய் பழங்கதையாய் கனவாய் மாறிவிட்டது. கசப்பான உண்மையாக ஈழத்தின் வரலாறு செதுக்கப்பட்டுவிட்டது. பிரளயத்துக்குப் பதிலாக இங்கே நிகழ்ந்திருப்பது போர். ஒருபுறம் அரசு ராணுவம். மறுபுறம் போராளிகளின் துப்பாக்கிகள். கணந்தோறும் மரணங்கள். ஓலங்கள். அழிவுகள். வாழ்வதற்காக இடம்பெயர்ந்து செல்லும் ஒவ்வொரு இடமும் போர்க்களமாக மாறிவிடுகிறது. ஒவ்வொரு குடும்பத்திலும் தினந்தோறும் மரணம் நிகழ்கிறது. ஒருநாள் தந்தை. இன்னொருநாள் மனைவி. ஒரு இரவில் குழந்தைகள். மற்றொரு இரவில் பெரியவர்கள். இலைகள் உதிர்வதுபோல எங்கெங்கும் பிணங்கள் விழுகின்றன. அடக்கம் செய்யக்கூட ஆளின்றி ஒவ்வொரு உடலும் அனாதைப்பிணங்களாகக் கிடக்கின்றன. தெருவோரங்களிலும் மரத்தடியிலும் பள்ளங்களிலும் கரையோரங்களிலும் என பார்வை படரும் இடங்களிலெல்லாம் பிணங்கள் மட்டுமே குவியல்குவியலாகக் கிடக்கின்றன. ஊரே பிணக்காடாக மாறிவிடுகின்றது. அழக்கூட நேரம் இல்லாமல் மக்கள் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். விமானத்திலிருந்து பொழியப்படும் குண்டுகளும் ஷெல்களும் அவர்களைத் துரத்தியபடியே உள்ளன. உயிர்பிழைக்க பதுங்குகுழிகளில் ஒளிந்துகொண்டவர்களைத் தேடிவரும் ராணுவத்தினர் காக்கை குருவிகளைச் சுடுவதுபோலச் சுட்டுத் தள்ளுகிறார்கள். ராணுவத்தின் பாதுகாப்பிடம் தேடி ஓடத் தொடங்குகிற்வர்களை, சொந்த மக்களென்றும் பாராமல் போராளிகள் சுட்டுக் கொல்கிறார்கள்.  யார் சுட்டாலும் சுடவல்லவைதாமே இந்தத் துப்பாக்கிகள். முள்ளிவாய்க்காலில் முற்றுப் பெற்ற இந்தப் பிரளயத்திலிருந்து நீலிபோல பிழைத்துவரும் பார்வதியம்மாளின் நினைவோட்டங்களே ஊழிக்காலம் என்னும் நாவலாக மாறியுள்ளது. இந்த நாவலை எழுதியவர் தமயந்தி சிவசுந்தரலிங்கம் என்னும் பெயரைக் கொண்ட தமிழ்க்கவி.

 

ஆன்றி என்றும் மம்மி என்றும் சகமனிதர்களால் அன்புடன் அழைக்கப்படும் பார்வதி அம்மாள் அறுபது வயதைத் தாண்டிய பெண்மணி. அவருடைய வானொலிப்பேச்சாலும் நாடக நடிப்பாலும் கவரப்பட்ட விரிவான நட்புவட்டத்துடன் வாழ்பவர் அவர். அனைத்துக்கும் மேலாக அவரும் ஒரு போராளி. தாயக விடுதலையைக் கனவாகக் கொண்டு களத்தில் உழைத்தவர். தன் இரண்டு பிள்ளைகளை களப்பலியாக இழந்தவர். அசைக்கமுடியாததாகக் கருதப்பட்ட கிளிநொச்சியை ராணுவம் சூழ்ந்து கைப்பற்றி அழிக்கத் தொடங்கியதும் அவருடைய நம்பிக்கை தளரத் தொடங்குகிறது. மருமகளையும் பெண்ணையும் பேரப்பிள்ளைகளையும் நடக்கவியலாத கணவனையும் காப்பாற்றும் பொறுப்பைச் சுமந்தாகவேண்டிய நெருக்கடிக்கு ஆளாகிவிடுகிறார். அவர்களிடம் இருப்பதோ இரண்டு உந்துருளிகள்மட்டுமே. மிக அவசியமான துணிமணிகள், அவசியமான சமையல் பாத்திரங்கள், உணவுப்பொருட்கள், அடையாள அட்டைகளோடு அவர்கள் தோட்டமும் வீடும் கொண்ட பெரிய வசிப்பிடத்திலிருந்து வெளியேறத் தொடங்குகிறார்கள். கிளிநொச்சி, கோட்டைகட்டியகுளம், விசுவமடு, கண்டாவளா, சுதந்திரபுரம், தேவபுரம், இரணிப்பாலை, பொக்கணைக்களப்பு, முல்லைத்தீவு, வட்டுவாசல், முள்ளிவாய்க்கால் என ஒவ்வொரு இடமாக அவர்கள் இடம்பெயர்ந்தபடியே இருக்கிறார்கள். செல்லும் இடங்களிலெல்லாம் துப்பாக்கிச்சூடும் விமானத்திலிருந்து வீசப்படும் கொத்துக்குண்டுகளும் உயிர்களைப் பலிவாங்கியபடியே இருக்கிறது. இடைவிடாது பொழியும் மழை இன்னொரு பக்கத்தில் வதைக்கிறது.

 

கூடாரம் அடிப்பது, பதுங்குகுழி அமைப்பது, குழிக்குள் விரிக்க தார்ப்பாய்க்கும் உரப்பைகளுக்கும் தேடி அலைவது, மணற்பைகளை அரணாக வைப்பது, கழிப்பிடக்குழி வெட்டுவது, குடிநீருக்கும் பால் பவுடருக்கும் மாவுக்கும் அலைவது என ஒவ்வொரு இடத்திலும் வதைமிகுந்ததாக வாழ்க்கை மாறிவிடுகிறது. ஏற்கனவே வீட்டுக்கு ஒருவர் நாட்டுக்கு வேண்டும் என அழைத்துச் சென்றுவிட்ட போராளிகள் களப்பணிகளின் பற்றாக்குறையைச் சமாளிக்க, கூடாரங்களில் புகுந்து இளஞ்சிறுவர்களையும் சிறுமிகளையும் வலுக்கட்டாயமாக ஏற்றிச் செல்லும் கொடுமையும் நடக்கிறது. இப்படி அழைத்துச் செல்லப்பட்டவர்கள் எல்லோரும் எங்கே இருக்கிறார்கள், எப்படி இருக்கிறார்கள் என்னும் தகவலே தெரியாமல் பெற்றவர்களும் உறவினர்களும் தவித்துக் கொண்டிருக்கும்போது, என்றோ ஒருநாள் வானொலிச் செய்தியில் வாசிக்கப்படும் தியாகிகள் பட்டியலில் அவர்களுடைய பெயர்கள் படிக்கப்படுகின்றன. ஒவ்வொரு காட்சியும் நெஞ்சை உலுக்குகிறது.

 

ஒரு காட்சி. பதுங்கு குழிக்குள் குடும்பத்தோடு உடலைக் குறுக்கிக்கொண்டு எல்லோரும் ஒளிந்திருக்கிறார்கள். இடைவிடாது பொழிந்த மழையால் குழிக்குள்  நீர் தேங்கி சேறாக இருக்கிறது. சேற்றின்மீது உரச்சாக்குகளை விரித்து, அவற்றின்மீது உட்கார்ந்திருக்கிறார்கள். எதிர்பாராத கணத்தில் விமானத்திலிருந்து வீசப்படும் கொத்துக்குண்டுகள் அந்த வட்டாரத்தில் மழையாகப் பொழிகின்றன. குண்டுமழை நின்று விமானம் வெளியேறிப் போன சத்தத்தைக் கேட்ட பிறகு குழியிலிருந்து எட்டிப் பார்க்கிறார்கள். பத்தடி தொலைவில் இருந்த மற்றொரு பதுங்குகுழிக்குள் குண்டு விழுந்து, அதற்குள் ஒளிந்திருந்தவர்கள் அனைவரும் துண்டுதுண்டாகச் சிதறி மரணத்தைத் தழுவிவிடுகிறார்கள். கழுத்தோடு சீவப்பட்டு தனியாகக் கிடந்த உடல் கண்முன்னால் துடித்து அடங்குகிறது.

 

இன்னொரு காட்சி. தினந்தோறும் இடம்பெயர்ந்து வாழும் சிக்கலில் நடக்கவியலாத நிலையில் உள்ள கணவனை மறுநாள் வந்து அழைத்துச் செல்வதாகச் சொல்லிவிட்டு புதிய இடம் தேடி நடக்கிறது குடும்பம். புதுக்கூடாரம் அமைத்துவிட்டு அவரை  அழைத்துச் செல்ல அதற்கடுத்த நாள் வந்தபோது அவர் காணாமல் போய்விடுகிறார். தேடித்தேடி களைத்துப் போன மனைவி, விசாரணை அலுவலகத்தில் சொல்லி வைக்கிறாள். எந்தத் தகவலும் அவளுக்குத் தரப்படுவதில்லை. பல கூடாரங்கள் மாறிய பிறகு, அங்கிருந்த விசாரணை அலுவலகத்தில் சென்று கையில் இருந்த புகைப்படத்தைக் காட்டி, கண்டுபிடிக்க முடிந்ததா என்று கேட்கிறாள். தகவல் மையத்தில் இருந்தவன், ‘இவர் ஷெல் அடித்து இறந்துபோனார். நான்தான் எடுத்து அடக்கம் செய்தேன்’ என்று சொல்கிறான். நெஞ்சு பதற கூடாரத்துக்குத் திரும்பிய மனைவி என்றோ இறந்த கணவனுக்கு இறுதிச் சடங்கு செய்கிறாள்.

 

மற்றொரு காட்சி. ஒரு தற்காலிக மருத்துவமனையின் முன்னால் கூட்டம் கூட்டமாக ஈரத்தரையில் படுத்துக் கிடக்கிறார்கள். ரத்தம் ஒழுகும் உடல்கள். கையும் காலும் அறுந்துபோனவர்கள்.  ஏற்கனவே இறந்துபோய் அப்புறப்படுத்தப்படாத உடல்கள் ஒருபுறம். குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடப்பவர்கள் மறுபுறம். தமக்கு மருத்துவம் செய்யப்படுமா அல்லது மறுக்கப்படுமா என்று புரியாமல் ஏங்கிய கண்களோடு காத்துக் கிடக்கும் மக்கள் இன்னொருபுறம்.

 

இப்படி ஏராளமான காட்சிகள். கர்ப்பிணிப்பெண் கதறியழ குண்டடிபட்டு இறந்துபோகும் கணவன். கால் அறுந்துபோன குழந்தையையும் தலை சிதைந்துபோன குழந்தையையும் தோள்களில் சுமந்தபடி ‘கடற்கரைக்குச் செல்ல எது வழி? கடற்கரைக்குச் செல்ல எது வழி?’ என்று தப்பித்துச் செல்ல பார்வையில் பட்டவர்களிடமெல்லாம் வழி கேட்கும் தந்தை.  மனைவியிடமிருந்து வலுக்கட்டாயமாக போர்முனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சில நாட்களிலேயே உயிரிழந்துபோன கணவன். உயிரோடு இருந்தால் ஏதோ ஓர் இடத்தில் சந்திப்போம் என்று சொல்லிவிட்டு பெற்றவர்களிடமிருந்து விடைபெற்றுச் செல்லும் சிறுவர்கள். பயிற்சியில்லாதவர்களை முனைமுகத்துக்கு அனுப்பிவிட்டு பாதுகாப்பான பதுங்குகுழி வீட்டுக்குள் குடும்பத்துடன் வசிக்கும் தளபதிமார்கள். நிவாரணத்துக்கு என வழங்கப்பட்ட உணவுப்பொருட்களை முறையாக வினியோகிக்காமல் போர்முனைக்குத் தேவைப்படுகிறது என எடுத்துச் செல்லும் போராளிகள். சொந்த மக்களையே இரக்கமில்லாமல் சுட்டுத் தள்ளும் வீரர்கள். எரிந்த வீட்டில் பிடுங்கியதுவரை லாபம் என மிக அதிக லாபத்தில் உணவுப்பொருட்களை விற்றுப் பணம் சம்பாதிக்கும் கயவர்கள். அணிமாறி கூட்டாளிகளையே காட்டிக் கொடுக்கும் துரோகிகள். எல்லோருடைய சித்திரங்களும் அடங்கிய தொகுப்பாக இருக்கிறது இந்த நாவல்.

 

மே மாதம் பதினேழாம் தேதி. வட்டுகாலைக் கடந்தபோது தடுத்து நிறுத்தப்பட்ட கூட்டத்தில் அந்த அம்மம்மா பார்வதியும் நிற்கிறார். சோதனைச் சாவடிக்கு அழைத்துச் செல்லப்படும் அவர்களில் போராளிகளையும் அவர்களுடைய குடும்பத்தாரையும் அடையாளம் காட்டிப் பிரித்து ராணுவத்திடம் ஒப்படைக்க அங்கே ஒரு துரோகி நின்றிருக்கிறான். அவனால் அடையாளம் கண்டுபிடிக்கப்படும் அம்மம்மா விசாரணைத் தனியறைக்கு அனுப்பப்படுகிறார். படல்களாலும் மணல்மூட்டைகளாலும் சுற்றி அடைக்கப்பட்ட தனித்தனி கூடுகள். அதன் பின்புறத்தில் துப்பாக்கியுடன் குறிபார்த்தபடி நிற்கும் ஒரு பெண் சிப்பாய். அந்தக் கூடாரத்தின் சிறிய துவாரத்தின் வழியே தன் துப்பாக்கி முனையை கூடாரத்துக்குள் நீட்டிப் பிடித்திருக்கிறாள். ஒருபுறம் விசாரணை மேசை. மறுபுறம் துப்பாக்கிமுனை. இரண்டுக்கும் இடையில் நின்றிருக்கும் அம்மம்மா பல வாரங்களுக்கு முன்னால் கிளிநொச்சியிலிருந்து  கிளம்பிய தருணத்திலிருந்து சோதனைச் சாவடிக்கு வந்து சேர்ந்த கணம் வரைக்குமான நிகழ்ந்த சம்பவங்கள் ஒவ்வொன்றையும் நினைத்து பார்க்கிறார். அந்த நினைவுகளின் தொகுப்பே நாவலாக மலர்ந்திருக்கிறது. இன்னும் விசாரணை நிகழவில்லை. விசாரணைக்குப் பிறகு அம்மம்மாவின் முடிவு என்ன என்பதை வாசகர்களின் ஊகத்துக்கே விட்டுவிடுகிறார் தமிழ்க்கவி.

 

தமிழ்க்கவியின் எழுத்தாளுமை, ஒவ்வொரு காட்சியையும் எவ்விதமான உணர்ச்சி வேகத்துக்கும் இடம் கொடாமலும் தன்னிரக்கத்துக்கு இடம் கொடாமலும் புகார்களை முன்வைக்கும் குரலுக்கு வழிகொடாமலும் ஒரு தகவல் தெரிவிப்பதுபோன்ற தொனியில் முன்வைத்தபடி செல்லும்  தன்மையில் வலிமை பெற்றிருக்கிறது. ஒருவகையில் இந்த நாவல் சிதைந்துபோன ஒரு சரித்திரத்தின் ஆவணம். ஒரு வாக்குமூலம்.

 

காலம்காலமாக துன்பங்களைக் கடந்து வருவதே பெண்களின் வரலாறாக உள்ளது. அசோகவனத்துச் சீதை. புகார் நகரத்துக் கண்ணகி. பிள்ளையைப் புதைக்க சுடுகாட்டுப் பணமின்றி, வெட்டியானிடம் தாலியைக் கழற்றித் தரும் சந்திரமதி. பட்டினியால் தவிக்கும் பிள்ளைகளுக்கு உணவு கொடுக்க இயலாத துயரோடு, ஒவ்வொரு பிள்ளையையும் கிணற்றுக்குள் தள்ளிக் கொல்ல முடிவெடுத்த நல்லதங்காள். இப்படி கோடிக்கணக்கான பெண்களின் கதைகளாகவே நம் புராணங்களும் வரலாறுகளும் எழுதப்பட்டுள்ளன. அவ்வரிசையில் வைத்துப் பார்கக்த்தக்கவரே பார்வதி அம்மாள் என்கிற அம்மம்மா. அவருடைய வரலாற்றை எழுதி நமக்கு நாவலாக அளித்துள்ளார் தமிழ்க்கவி. வாழ்க்கையும் வரலாறும் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும் காட்டாறு. அதைக் கடந்துவர அடியெடுத்து வைத்தவர் ஆன்றி என்கிற அம்மம்மா என்கிற பார்வதி அம்மாள். சொல்லப்பட்ட பார்வதி அம்மாளின் வரலாற்றுக்குப் பின்னே சொல்லப்படாத லட்சக்கணக்கான பார்வதி அம்மாள்களின் வரலாறுகளும் புதையுண்டு கிடக்கின்றன.

 

(ஊழிக்காலம். நாவல். ஆசிரியர் தமிழ்க்கவி. தமிழினி பதிப்பகம் வெளியீடு. 25-ஏ, தரைத்தளம், முதல் பகுதி, ஸ்பென்சர் பிளாசா. 769, அண்ணா சாலை, சென்னை-2. விலை. ரூ.270)

Series Navigationமருத்துவக் கட்டுரை உயர் இரத்த அழுத்தம்மருமகளின் மர்மம் 18நீங்காத நினைவுகள் – 36கொலுஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-24 துரோணரின் வீழ்ச்சிபுகழ் ​பெற்ற ஏ​ழைகள் – 48அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் குவின்ஸ்லாந்து மாநிலத்தில் பிரிஸ்பேர்ணில் நடத்தும் கலை – இலக்கிய சந்திப்பு
author

பாவண்ணன்

Similar Posts

2 Comments

  1. Avatar
    வளவ.துரையன் says:

    பாவண்ணனின் விமர்சனம் அந்த நூலை வாசிக்கவேண்டும் என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கிறது. ஆனால் மனம் அந்தத்துயரைத் தாங்குமா என்று தெரியவில்லை. அவ்வளவு துன்பம் தரும் என்பதைப் பாவண்ணன் நன்கு உணர்த்துகிறார்

  2. Avatar
    ஷாலி says:

    //அசோகவனத்துச் சீதை. புகார் நகரத்துக் கண்ணகி. பிள்ளையைப் புதைக்க சுடுகாட்டுப் பணமின்றி, வெட்டியானிடம் தாலியைக் கழற்றித் தரும் சந்திரமதி. பட்டினியால் தவிக்கும் பிள்ளைகளுக்கு உணவு கொடுக்க இயலாத துயரோடு, ஒவ்வொரு பிள்ளையையும் கிணற்றுக்குள் தள்ளிக் கொல்ல முடிவெடுத்த நல்லதங்காள். இப்படி….//

    இப்படி காட்சிப்படுத்தப்படும் பெண்கள் அனைவரும் கற்பனை கதை மாந்தர்களே! நடந்த வரலாறு என்று உறுதிபட எவரும் கூற முடியாது.இந்த கற்பனை பெண்கள் பட்ட கஷ்டத்திற்க்காக கண்ணீர் விடுபவர்கள் நாம்.வைரமுத்து வார்த்தையில்… “ஊமை வெயிலுக்கு உருகி விட்ட வெண்ணைகள்.” உண்மையில் “அக்கினி மழைக்கு அழுத கணக்கு” பார்வதி அம்மாக்களுக்கே உரியது. தமிழீழத்திற்க்காக போராளிகளை பெற்றுக்கொடுத்த தாய்மார்கள் இறுதியில் அம்மக்களாலே கொல்லப்படுவது கொடுமையிலும் கொடுமை!
    “ஒருபுறம் வேடன் மறுபுறம் நாகம்
    இரண்டுக்கும் நடுவில் அழகிய கலை மான்”.என்று சொல்வதுபோல் புலிக்கும் சிங்க(ளன்)த்திற்கும் இடையில் சிக்கிய புள்ளிமான்களாக பெண்கள்,சிறுவர்கள் சிக்கி சின்னாபின்னமாகி சிதைந்து சீரழிந்தனர்.இவர்கள் முள்ளிவாய்க்கால் கொள்ளியில் தள்ளப்பட்ட “சதி” மாதாக்கள்.

    தமிழ்நாட்டு சாதித் தமிழனுக்கு இதையெல்லாம் விட,அவன் அழுது வடிக்க, ஆயிரம் திரைப்பட…. சீரியல்கள் தயாராக உள்ளன.தயவு செய்து தமிழனை அழ விடுங்கள்!

Leave a Reply to வளவ.துரையன் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *