“வானுயர்ந்து எழுந்துள்ள கட்டிடங்களின் அத்திவாரக்கற்கள் வெளியுலகிற்கு தெரிவதில்லை. “

author
0 minutes, 2 seconds Read
This entry is part 11 of 16 in the series 22 நவம்பர் 2015

       ரஸஞானிஅவுஸ்திரேலியா

 

அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் தமிழ் எழுத்தாளர் விழா 2015

கலை இலக்கிய சமூகக் கருத்துக்களின் சங்கமாகத் திகழ்ந்த எழுத்தாளர் ஒன்றுகூடல்

         ATLAS Festival16         

 

இலங்கை, இந்தியா, சிங்கப்பூர், மலேசியா உட்பட தமிழர் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலிருந்து வருகைதந்து புகலிடம்பெற்ற அவுஸ்திரேலியா ஒரு குடியேற்ற நாடாகவும் பல்லின கலாசார நாடாகவும் உலக அரங்கில் மதிக்கப்படுகிறது. அத்தகைய இந்நாட்டில் வதியும் தமிழ் கலை, இலக்கியவாதிகளையும் ஊடகவியலாளர்களையும் தமிழ் ஆசிரியர்கள்  மற்றும் மூத்த இளம் – தலைமுறையினரையும் ஒன்றிணைக்கும்  இயக்கமாக தோன்றிய அவுஸ்திரேலியா தமிழ்  இலக்கிய கலைச்சங்கத்தின் 15 ஆவது எழுத்தாளர் விழாவில் இதற்கு பலமான அத்திவாரம் இட்டவர்களையும் நாம்  நினைவில் கொள்ளவேண்டும்.”   இவ்வாறு கடந்த 14 ஆம் சனிக்கிழமை மெல்பனில் ஸ்ரீசிவா விஷ்ணு ஆலயத்தின் பீக்கொக் மண்டபத்தில்  நடந்த வருடாந்த தமிழ் எழுத்தாளர் விழாவில் தலைமையுரை  நிகழ்த்திய சங்கத்தின் முன்னாள் தலைவர்   திரு. . ஜெயராம சர்மா  தெரிவித்தார்.

சங்கத்தின்  செயற்குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்விழாவில் சிட்னி, மெல்பன் முதலான நகரங்களிலுமிருந்து பல கலை இலக்கியவாதிகளும்  தமிழ் ஆசிரியர்களும் பொதுஜன அமைப்புகளின்  பிரதிநிதிகளும் ஊடகவியலாளர்களும் கலந்துகொண்டனர்.

அத்துடன் இலங்கையிலிருந்து எழுத்தாளர் டொக்டர் ச.முருகானந்தன், திறனாய்வாளர் திரு. சி. வன்னியகுலம் இங்கிலாந்திலிருந்து  ஊடகவியலாளரும் நாழிகை இதழின் ஆசிரியருமான  திரு. மாலி மகாலிங்கசிவம் ஆகியோரும் கலந்துகொண்டு  உரையாற்றினர்.

திரு. ஜெயராம சர்மா தொடர்ந்தும்  உரையாற்றுகையில் வானுயர்ந்து எழுந்துள்ள கட்டிடங்களின் அத்திவாரக்கற்கள் வெளியுலகிற்கு    தெரிவதில்லை. அதுபோன்றுதான் சுமார் 15 வருடகாலமாக இந்த  எழுத்தாளர் விழா  இயக்கத்திற்காக கடுமையாக உழைத்து இதனை  பலருடனும் இணைத்து முன்னெடுத்தவர்கள் பலர் இருக்கிறார்கள். எந்தவொரு அமைப்பும் பலமான  அத்திவாரத்தில்தான் அமைக்கப்படவேண்டும் என்பதற்கு தொடர்ச்சியாக தங்கு தடையின்றி வருடந்தோறும் தமிழ் எழுத்தாளர்  விழாவை  நடத்திவரும் அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் ஆதாரமாகத் திகழுகின்றது. இந்த அமைப்பில் மேலும் பலர் இணைந்து சங்கத்தையும் தம்மையும் கலை, இலக்கிய ரீதியாக வளர்த்துக்கொள்ளவேண்டும் என்று அன்போடு அழைக்கின்றேன்.” என்று தெரிவித்தார்.

திருமதி சாந்தி ஜெயராம சர்மா விழாவை மங்கல விளக்கேற்றி தொடக்கிவைத்தார்.

உலகெங்கும் யுத்தங்களினாலும் இயற்கை  அநர்த்தங்களினாலும் மறைந்த இன்னுயிர்களின் ஆத்ம சாந்திக்காக ஒரு நிமிடம் மௌனம் அனுட்டிக்கப்பட்டதையடுத்து மெல்பனில் தமிழ் கற்கும் குழந்தைகளின் தமிழ்வாழ்த்து இடம்பெற்றது.

முதல் நிகழ்ச்சியாக இடம்பெற்ற கலை – இலக்கிய கருத்தரங்கிற்கு திரு. சி. வன்னியகுலம்  தலைமைதாங்கினார்.  இவர் முன்னாள் இலங்கை ரூபவாஹினி  தொலைக்காட்சி தமிழ் நிகழ்ச்சிப்பணிப்பாளர்.    வீரகேசரியின் முன்னாள் செய்தி ஆசிரியர்.

ATLAS Festival08

சிட்னியிலிருந்து வருகைதந்த நாட்டியக்கலாநிதி திருமதி கார்த்திகா கணேசர், ” மனிதவாழ்வில் ஆடற்கலைகளின் பரிமாணம்” என்ற தலைப்பிலும், டொக்டர் ச.முருகானந்தன், ” ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் புதிய தலைமுறையினரின் பங்களிப்பு ” என்ற  தலைப்பிலும், திரு. சு. ஸ்ரீநந்தகுமார் ” தமிழ் அரங்குகளில் ஓவியத்தின் பரிமாணம் ” என்ற தலைப்பிலும் உரைநிகழ்த்தினர்.

கடந்த  ஆண்டு சிட்னியில் மறைந்த மூத்த படைப்பாளிகள் காவலூர் இராசதுரை, எஸ்.பொன்னுத்துரை ஆகியோர் தொடர்பான நினைவுப் பேருரைகளும் இக்கருத்தரங்கில் இடம்பெற்றன.

இங்கிலாந்திலிருந்து  வருகை  தந்திருந்த நாழிகை இதழ் ஆசிரியர் திரு. மாலி மகாலிங்க சிவம், ” இதழியல், வானொலி – தொலைக்காட்சி ” என்ற தலைப்பில் – இலங்கை வானொலியில் முன்னர் ஊடகவியலாளராகவும் பணியாற்றிய மறைந்த காவலூர் இராசதுரை குறித்து  நினைவுப்பேருரை நிகழ்த்தினார்.

ATLAS Festival12

எழுத்தாளர் டொக்டர் நடேசன், எஸ்.பொன்னுத்துரையின் வாழ்வையும்  பணிகளையும் இலக்கிய  வளர்ச்சிப்போக்குகளையும் சித்திரித்த  வரலாற்றில் வாழ்தல் என்னும்  இரண்டு பாகங்களைக்கொண்ட சுமார் இரண்டாயிரம்  பக்கங்கள்  கொண்ட நூலை  முன்வைத்து எஸ்.பொ. நினைவுப்பேருரையை நிகழ்த்தினார்.

கலை, இலக்கிய கருத்தரங்கையடுத்து  இடம்பெற்ற  நூல்விமர்சன அரங்கிற்கு அவுஸ்திரேலியா வள்ளுவர்  அறக்கட்டளையின் இயக்குநரும்  இலக்கிய ஆர்வலருமான திரு. நாகை சுகுமாறன் தலைமை  தாங்கினார்.

ATLAS Festival10

சிட்னியில் வதியும் எழுத்தாளர் பேராசிரியர் ஆசி. கந்தராஜாவின் கறுத்தக்கொழும்பான் நூலை    எழுத்தாளர்  திரு. ஜே,கே. ஜெயக்குமாரனும்,    சிட்னியில் வதியும் கவிஞர் செ. பாஸ்கரனின் முடிவுறாத முகாரி நூலை திருமதி சாந்தினி புவநேந்திரராஜாவும், நாட்டியக்கலாநிதி திருமதி கார்த்திகா  கணேசரின் காலம்தோறும் நாட்டியக்கலை,  தமிழர்  வளர்த்த ஆடற்கலைகள் ஆகிய  நூல்களை  இலக்கிய ஆர்வலரும் தமிழ் ஆசிரியருமான திரு. எஸ். சிவசம்புவும்,  கலைவளன் சிசு. நாகேந்திரனின் மொழிமாற்று அகாராதி  நூலை  திரு. சிவசுதனும், டொக்டர் நடேசனின் சிறுகதைத்தொகுதியான மலேசியன் ஏயர் லைன்  நூலை இலக்கிய ஆர்வலர்  திரு. நவரத்தினம் இளங்கோவும், மெல்பன் எழுத்தாளர் திரு. கே.எஸ்.சுதாகரனின்  சென்றிடுவீர் எட்டுத்திக்கும் நூலை இலங்கை கம்பன் கழகத்தின் ஸ்தாபகர்களில் ஒருவரும் இலக்கிய ஆர்வலருமான  திரு. கந்தையா குமாரதாசனும் விமர்சித்தனர்.

   கவிஞனாய் நானிருந்தால் என்ற தலைப்பில் கவிஞர்  திரு. கேதார சர்மாவின் தலைமையில் நடந்த கவியரங்கில் கவிஞர்கள் சி. அஜந்தன், ஆவூரான் சந்திரன், தமிழ்ப்பொடியன், ஒருவன் ஆகியோர் பங்கேற்றனர்.

மகளிர் அரங்கு அவுஸ்திரேலியா தமிழ் ஒலிபரப்புக்கூட்டுத்தாபன மெல்பன் ஊடகவியலாளர்  திருமதி சாந்தினி புவநேந்திரராஜாவின் தலைமையில்  நடந்தது.

இந்நிகழ்வில்  திருமதிகள் சிராணி குமரன், இந்திராணி ஜயவர்த்தன, கீதா  மாணிக்கவாசகம் ஆகியோர் புலப்பெயர்வில் தமிழர் பண்பாடுகள்,  பெண்சுதந்திரம், தமிழர் எதிர்பார்ப்புகள் முதலான தலைப்புகளில் உரையாற்றினர்.

திரு. ஜெயகாந்தன் தலைமையில், வாழ்க்கையில் முன்னேற பெரிதும் தேவையானது துணிவான அணுகு முறையா…? அல்லது பணிவான  அணுகு முறையா…? என்ற தலைப்பில் நடந்த பட்டிமன்றத்தில்  திருவாளர்கள் ருத்ரபதி, ஜனந்தன், பொன்னரசு, சுகந்தன்  ஆகியோர் பங்குபற்றினர்.

அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் முன்னாள் செயலாளர்  திரு. ஸ்ரீநந்தகுமார், விழாவிற்கு வருகை தந்தவர்களுக்கும் ஒத்துழைப்பும் ஆதரவும் தந்தவர்களுக்கும் இவ்விழாவுக்காக  மானிய நிதியுதவி வழங்கிய விக்ரோரியா பல்லின கலாசார ஆணையத்திற்கும் நன்றி தெரிவித்தார்.

சங்கத்தின்  நிதிச்செயலாளரும் மெல்பன் வானமுதம் வானொலியின் ஊடகவியலாளருமான திரு. நவரத்தினம் அல்லமதேவன் விழா நிகழ்ச்சிகளின் அறிவிப்பாளராக இயங்கினார்.

—0—

Series Navigationஅவன் அவள் அது – 11தீ, பந்தம்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *