வாய்ப்பு

author
0 minutes, 15 seconds Read
This entry is part 11 of 24 in the series 8 பெப்ருவரி 2015

இலக்கியா தேன்மொழி

மேஜை மீது வைக்கப்பட்டிருந்த அந்த மொபைல் ஃபோன் சிணுங்கியது. வாலாட்டியபடி அறையின் ஓரமாக தனது கால்மேல் தலைவைத்து வெறுமனே அறையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த, புசுபுசு, ஜானி, அதிர்ந்து எழுந்து, ஒரே தாவாக மேஜை மீதேறி, மொபைலை கொஞ்சமாய் முகர்ந்து பார்த்தது.

சிந்துஜா இன்னமும் குளித்துக்கொண்டிருந்தாள். கிரிஜா சட்டென அந்த மொபைலை எடுத்துப் பார்த்தாள். வாட்ஸாப்பில் வினய் ‘முத்தமிடவா?’ என்று கேட்டிருந்தான். முரளி ‘எப்போது தனிமையில் சந்திக்கலாம்?’ என்று கேட்டிருந்தான்.

சிந்துஜா ஃபோனை படுக்கையில் வீழி எறிவதற்கும், குளியல் அறையில் ஷவர் நிற்பதற்கும் சரியாக இருந்தது. ஜானி இப்போது மேஜையிலிருந்து, படுக்கைக்கு தாவி, மீண்டும் மொபைலை முகர்ந்து பார்க்கத் துவங்கியது. இரண்டு வினாடி தாமதத்திற்கு பிறகு சிந்து ஒரு நைட்டியில் வெளியே வந்தாள். கூந்தலுடன் டவல் பாம்பெனெ பின்னிக்கிடந்தது. படுக்கையில் ஜானி வாலாட்டியபடி ஆர்வமாக கால்களால் எத்திக்கொண்டிருந்த மொபைலை எடுத்துப் பார்த்துவிட்டு, மீண்டும் மொபைலை படுக்கையிலேயே எறிந்தாள்.

பார்த்துக்கொண்டிருந்த ஜானி, திடுக்கென துள்ளி படுக்கையை விட்டு அவசரமாக இறங்கி, மேஜையின் கீழே, பூகப்பத்துக்கு நடுங்கி நிறபது போல நின்றுகொண்டு ‘அவ்’ என்றது.

சிந்துஜா கண்ணாடி முன் நின்றாள். டவளைக் களைந்து தலைமுடி துவட்டத்துவங்கினாள்.

‘நீ என்ன சொல்லப்போற சிந்து?’ என்றாள் கிரிஜா.

‘எதுக்குடீ’

‘அந்த பசங்களுக்கு தான்’

‘என்ன சொல்லலாம்? நீயே சொல்லேன்?’

‘நான் என்ன சொல்றது? அந்த வினய் அழகா இருக்கான்.. அந்த முரளி சுமார்தான்..’

‘ஆனா, முரளி அடாமிக் பிஸிக்ஸ் தெளிவா சொல்லித்தருவான். வினய்க்கு ஸ்டைல் தவிர வேற ஒண்ணும் தெரியாது.’

‘ஆமா.. நாலு சுவத்துக்குள்ள அடாமிக் பிஸிக்ஸ் தெரிஞ்சா என்ன ? தெரியாட்டா என்ன?’

சிந்து மெளனமாக தலைகோதிக்கொண்டிருந்தாள். ஜானி இப்போது பெண்களுக்கிடையில் வந்து வாலாட்டி அண்ணாந்து பார்த்தது.

‘வினய் சூப்பரா இருக்கான்.. செவப்பா அழகா.. உயரம் என்ன ஒரு அஞ்சரை இருக்குமா? செம ட்ரஸ்ஸிங் சென்ஸ்.. அவனோட முடிய கோதிவிட்டுக்கிட்டே இருக்கணும் போல இருக்கும்.. அவன் யமஹாவுல வரும்போது அது பறக்கும் பாரு..ச்சே செம ஸ்டைலுடீ.. நீ அதிர்ஷ்டக்கட்டை தான்.. ‘

சிந்து இதற்கும் ஏதும் சொல்லவில்லை.

‘என்னடீ சிந்து, நான் சொல்லிட்டே இருக்கேன்.. நீ எதுவும் பேச மாட்டேங்குற?’

‘நான் என்ன சொல்ல? நீ உன் ஒபினியன் சொல்லிட்டு இருக்க. நான் கேட்டுட்டு இருக்கேன்’

‘என் ஓபினியனா? அப்போ உனக்கு இதெல்லாம் தோணலையா?’

சட்டென்று திரும்பிய சிந்து, சீப்பை ட்ரெஸ்ஸிங் டேபிளில் வைத்துவிட்டு, கிரிஜாவை இழுத்துவந்து படுக்கையில் அமர வைத்து தானும் அமர்ந்தாள். ஜானி இப்போது இல்லக்கில்லாமல் அங்குமிங்கும் உலாத்திவிட்டு, மீண்டும் படுக்கை மீது தாவி ஏறி, தலையணையை முகர்ந்தது.

‘கிரி, நாம பொண்ணுங்க. நாம தான் ஆம்பளைங்களை தேர்ந்தெடுக்கணும். சரியான ஆளுக்கு நாம வாய்ப்பு தரணும். இப்போ நீ சொல்ற மாதிரி, வினய்க்கு வாய்ப்பு குடுத்தா என்னாகும்? எப்படா பொண்ணு கிடைப்பான்னு திரியிற பசங்களுக்கு பைக்கும், ஸ்டைலும் இருந்தா போதும்ங்குற எண்ணம் வந்துடாதா? அப்படி வந்துடுறதுனால தான், அதுமட்டும் போதும்ன்னு சுத்துறானுங்க.. இவனுங்க அத்தனை பேருக்கும் நாளைக்கு கல்யாணம் ஆகும்.. இவனுங்க இப்படி ஸ்டைலு, பைக்குன்னு சுத்தினா, வாழ்க்கை மேல தன்னம்பிக்கை எப்படி வரும்? இவனுங்க தான், தன்னோட தன்னம்பிக்கையின்மையை மறைக்க, பொம்பளையை குத்தம் சொல்வாங்க. அவ‌ சுதந்திரத்தை கெடுப்பாங்க‌. அடக்குமுறை பண்ணுவாங்க ‘

‘அதுக்காக?’

‘கொஞ்சம் யோசிச்சு பாரு. வினய் ஸ்டைலு தான். லுக் தான். ஆனா, முரளிக்கு நாளைக்கு வேலையே கிடைக்கலைன்னாலும் , அவன் தெரிஞ்சு வச்சிருக்குற பிஸிக்ஸ், மேத்ஸ வச்சு எப்படி வேணாலும் பொழைக்கலாம்.. ட்யூஷன் சென்டர் வைக்கலாம். படிப்பு சொல்லிக்கொடுக்கலாம். இவ்ளோ கஷ்டமான விஷயத்தை புரிஞ்சிக்கிறவன், நாளைக்கு பொண்ணு மனசையும் புரிஞ்சிக்குவான். அவனுக்கு நாளைக்கு கல்யாணம் ஆனா, அவனுக்கு பொண்டாட்டியா வரவ‌ பணத்துக்காக நிச்சயமா கஷ்டப்படமாட்டா..’

‘அப்போ பணம் தான் எல்லாமுமா, சிந்து?’

‘கட் தட் க்ராப்.. சோஷியல் மோடிவேஷன் கிரி. நான் ஒரு உலகம் சொல்றேன் அதை கற்பனை பண்ணு. அந்த உலகத்துல இருக்குற எல்லா பொண்ணுங்களும் முரளி மாதிரி சரியான ஆண்களுக்கு மட்டும் வாய்ப்பு குடுக்கிறாங்க. அப்போ என்னாகும்?’

‘என்னாகும்?’

‘கிரி, நீ ரொம்ப அப்பாவியா இருக்க. சரித்திரத்தை புரட்டிப் பாரு. துவக்கத்துல நாய்ன்னு ஒரு இடம் இல்லவே இல்லை. ஓநாய் இனம் தான் இருந்துச்சு. கொஞ்சம் ஏமாந்தா மனுஷனையே சாப்டுடும். அதை கொஞ்சம் கொஞ்சமா மனுஷன், தான் வேட்டையாடுர மாமிசத்தை தூக்கிப் போட்டு வளர்த்தான். மனுஷன் வீசுற மாமிசத்துக்கு பழகின ஓநாய்கள்ல ஒரு பகுதி, வேட்டை குணம் மறைஞ்சு நாய் இனமா ஆயிடிச்சு. இன்னிக்கு நாம தூக்கிக் கொஞ்சுற ஜானி, அப்படி உருவான ஒண்ணு தான்.’

‘என்ன சொல்ல வர, சிந்து?’

‘நாம பழக்கப்படுத்தணும் கிரி. நமக்கு வேண்டியதுக்கு, ஆம்பளைங்களை நாம பழக்கப்படுத்தணும். அவனுங்க நம்மளை பழக்கப்படுத்தலை? ஜீன்ஸ் போடாத.. இதை செய்யாத..அதை செய்யாதன்னு.. அவனுங்க தெளிவாதான் இருக்காங்க. நாம தான், அவனுக்கு நம்மளை புடிக்கணுமேன்னு நம்மளை நாமே மாத்திக்கிட்டு அவங்களையும் குழப்பி, நாமும் குழம்பறோம்.. நாம தெளிவா இருக்கணும். எவ்ளோ தான் நம்ம கிட்ட சீன் போட்டாலும் நாம முரளி மாதிரி ஆளுங்களைத்தான் தேர்வு பண்ணுவோம்ன்னு தெரிஞ்சிட்டா, அவனுங்க ஏன் சீன் போடப்போறாங்க. நாம வழி மாறி போய்டுவோமோன்னு பயந்துதான் ஒரு பாதுகாப்புணர்வுக்காகத்தான் அவங்க நம்மளை அடக்குறாங்க. நாம வழி மாறி போகமாட்டோம்ன்னு தெரிஞ்சா, அவங்களும் நம்மளை கட்டுப்படுத்த மாட்டாங்கன்னு தோணுது. ட்ரிக்கர் நம்ம கிட்ட தான் இருக்கு கிரி’

கிரிஜா சிந்துஜாவையே பார்த்துக்கொண்டிருக்க, சிந்து தொடர்ந்தாள்.

‘பெண்கள் நாம தான் தேர்ந்தெடுக்கணும் கிரி. நாம உபயோகமான ஆம்பளையை தேர்ந்தெடுத்தாதான், நமக்கு வேண்டாதது, தானாவே பொழைக்க வாய்ப்பில்லாம அழிஞ்சிடும். என்னைக்கேட்டா அரை மணி நேர சந்தோஷத்துக்கு கூட எந்த பொண்ணும், ஸ்டைலு, அழகுன்னு ஒரு ஆம்பளைக்கு வாய்ப்பு கொடுக்கக்கூடாது. அப்படி குடுக்க குடுக்க தான், நம்மகிட்டயே வாழ்ந்துட்டு நம்மளையே பின்னால ஏய்க்கிறானுங்க. அடக்க ட்ரை பண்றானுங்க. ஸ்டைலு, அழகு வேற. தன்னம்பிக்கை, திறமை வேற. யோனியோட சக்தின்னா என்னன்னு காமிக்கணும் கிரி இவனுங்களுக்கு. என்னோட தேர்வு முரளி தான். முரளிக்கு தான் நான் வாயப்பளிக்கப்போறேன்’ என்றாள் சிந்து தெளிவாக.

இப்போது ஜானி, அவரகள் இருவருக்குமிடையே வந்து, சிந்துவின் கால்களின் மேல் தனது முன்னங்கால்களை பரப்பி வைத்து எம்பி, முகத்தருகே வந்து சிந்துவுக்கு ஒரு பறக்கும் முத்தம் தந்தது.

– இலக்கியா தேன்மொழி
ilakya.thenmozhi@gmail.com

Series Navigationகோசின்ரா கவிதைதொடுவானம் 54. எனக்காக ஒருத்தி.
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *