வாழ்க்கை ஒரு வானவில் – 1 (ஜோதிர்லதா கிரிஜா அவர்களின் புதிய தொடர்)

This entry is part 31 of 31 in the series 4 மே 2014

ஜோதிர்லதா கிரிஜா

1.

grija (1)ஊர்மிளா ஊருக்குப் போனதிலிருந்து சேதுரத்தினம் தானே சமைத்துச் சாப்பிட்டு வருகிறான். இன்று சமையல் செய்வதற்குக் காத்திருக்க இயலாத அகோரப் பசியுடன் அவன் அந்த ஓட்டலுக்குள் நுழைந்தான். சின்ன வயசிலிருந்தே சமையல் செய்து அவனுக்குப் பழக்கமாகி யிருந்ததால், அதில் அவனுக்குச் சிரமம் ஏதும் தெரிவதில்லை. ஒரு வகையில் உற்சாகமாய்க் கூட இருந்தது. ஊர்மிளாவுக்கும் அதில் மிகவும் மகிழ்ச்சிதான். ஒரு சமயம், போது என்றால் நெருக்கடியைச் சமாளிக்க அவனுக்குத் தெரிந்திருந்ததால், தனது சுமை குறைந்ததை எண்ணித்தான்! படித்திருந்தாலும் அவள் வேலைக்குப் போகவில்லை. போக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், ஒருகால் தான் ஒரு வேளை, அவன் ஒரு வேளை என்று சமையல் வேலையைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று அடிக்கடி விளையாட்டாய்க் கூறி அவள் அவனைச் சீண்டுவதுண்டு.
‘இன்னும் இரண்டு மாதங்களாவது ஆகும் – அவள் திரும்பி வர’ எனும் நினைப்பால் சோர்வுற்ற அவன் ஒதுக்குப் புறமான மேசையைத் தேடித் தனியாளாக அதன் முன் அமர்ந்தான். எதிர் இருக்கை காலியாக இருந்தால்தான் அவனுக்குப் பிடிக்கும். சிலர் சாப்பிடும் போது ‘மொச்சு மொச்’சென்று வாயிலிருந்து வரும் அருவருப்பான ஓசை சமயங்களில் அவனுக்கு இரத்தக் கொதிப்பையே ஏற்படுத்திவிடும்.
தலைக்கு உயரே அண்ணாந்து பார்த்த அவன் மின்விசிறி சுற்றவில்லை என்று கண்டதும், அதற்காகக் குரல் கொடுக்க எண்ணிய கணத்தில் அது சுழலத் தொடங்கியது. மின்பொத்தானிலிருந்து தன் கையை விலக்கியவாறு ஒரு புதிய பையன் அவனைப் பார்த்தவாறு விரைந்து வந்தான். கடந்த ஒரு மாதமாக, இரவுச் சாப்பாட்டுக்கு மட்டும் வந்து போய்க்கொண்டிருந்ததில், எல்லாப் பணியாள்களையும் அவன் அறிந்திருந்ததால், இவன் புதியவன் என்பதை அவனால் இனங்காண முடிந்தது.
அவனுக்கு எதிரில் வந்து நின்ற இளைஞன், மற்றப் பணியாள்களிடம் தென்படாத அரிய புன்னகை காட்டி, “என்ன, சார், சாப்பிட்றீங்க?” என்றபடி தலை திருப்பி அருகில் இருந்த மெனுப்பலகையில் எழுதியிருந்தவற்றைப் படிக்கலானான்.
“..இட்லி, சாதா தோசை, மசால் தோசை, போண்டா, மெதுவடை, மசால்வடை, ஆனியன் வடை, தவலை வடை, பஜ்ஜி… ” என்று படித்துக்கொண்டே போனவன், சேதுரத்தினம், ‘சூடா என்னப்பா இருக்கு?’ என்று கேட்க எண்ணிய போது, தானாகவே முந்திக்கொண்டு, “தோசை, போண்டா, ப்ஜ்ஜி இந்த மூணையும் சுடச் சுடக் கொண்டுவர முடியும். வெண் பொங்கலும் அடுப்பிலேர்ந்து இறக்கி அஞ்சு நிமிஷந்தான் ஆறது. மத்ததெல்லாம் ஃப்ரிட்ஜ்ல் வெச்ச மாதிரி இருக்கும்…” என்று சிரித்தான். கடைசி வாக்கியத்தை மட்டும் கவனமாய் இரகசியம் போல் உச்சரித்தான்.
இளைஞனின் சிரிப்பு அவனையும் தொற்றிக்கொண்டது. “அப்ப, வெண்பொங்கலும் போண்டாவும் கொண்டு வாங்க. வெண்பொங்கலுக்குச் சட்னி, போண்டாவுக்கு சாம்பார்!”
“ரெண்டுக்குமே சட்னி, சாம்பார் ரெண்டையுமே தொட்டுக்கலாம், சார்” என்று கூறி, குடிப்பதற்குத் தண்ணீர் வைத்துவிட்டு அவன் உள்ளே விரைந்து சென்றான். ஒருவேளை நீண்ட விடுப்பில் இருந்த பின் வேலைக்குத் திரும்பியவனாய்க் கூட இருக்கலாம் என்று சேதுரத்தினம் அவனைப் பற்றி எண்ணினான். ஆனால், மறு கணமே தன் ஊகம் தப்பாகத்தான் இருக்கும் என்னும் முடிவுக்கு வந்தான். ஏனெனில், மெனுப்பலகை அயிட்டங்களை அனுபவப்பட்ட பணியாள்கள் போலின்றி, அவன் திக்கித் திணறிப் படித்தது நினைவுக்கு வந்ததுதான் அதற்குக் காரணம்.
இரண்டே நிமிடங்களில் திரும்பி வந்த அவன் பொங்கலையும் போண்டாவையும் அவனுக்கு எதிரே சட்டினி, சாம்பாருடன் வைத்துவிட்டுப் புன்னகை செய்தான்.
சேதுரத்தினம் சாப்பிடத் தொடங்கினான். ஊர்மிளா போனதிலிருந்தே இரவுகளில் சிற்றுண்டிதான். எப்போதுமே அவனுக்கேன்னமோ சாப்பாட்டில் விடவும் சிற்றுண்டியில்தான் அதிக மயக்கம். சில நாள்களில், ‘இன்னிக்கு சுடச் சுட தோசை வார்த்துப் போடேன். ரெண்டு பேருமே தோசை சாப்பிடலாம். எப்ப பாரு, என்ன சாதம் வேண்டிக்கிடக்கு?’ என்று கூறி அவளைத் தோசை வார்த்துப் போட வைத்திருக்கிறான்.
ஊர்மிளாவுக்கும் சிற்றுண்டி மீது ஆசை. இருந்தாலும், எதைச் சாப்பிட்டாலும் அவளுக்குக் கொஞ்சமாவது மோர்ச்சாதம் கடைசியில் சாப்பிட்டே தீரவேண்டும். இவனுக்கோ, அப்படி மோர்ச்சாதம் சாப்பிட்டால், சிற்றுண்டி யருந்தியதால் கிடைக்கிற மகிழ்ச்சியே பறி போய்விடும் போல் தோன்றும். பக்கத்தில் ஆவி பறக்கும் காப்பியை வைத்துக்கொண்டு, இரண்டு வாய்ச் சிற்றுண்டி ஒரு மடக்குக் காப்பி என்று அருந்துவதில் இருக்கும் சுவைக்கு ஈடு ஏது என்று எண்ணி அவன் தனக்குள் சிரித்துக்கொண்டான்.
அவன் தட்டில் இருந்த சட்டினி காலியாகி விட்டிருந்ததைக் கவனித்த இளைஞன், “இன்னும் கொஞ்சம் சட்னி போடட்டுமா, சார்?” என்றான். அன்று ஓட்டலில் அவ்வளவாய்க் கூட்டம் இல்லாததால், அவனும் ஓய்வாக இருந்தான்.
“கொஞ்சமாப் போடுங்க.”
அவன் சட்டினியை ஊற்றினான்.
“நீஙக புதுசா? உங்க பேரென்ன?”
“ஆமா, சார். இன்னைக்குக் காலையிலதான் வேலையில சேர்ந்தேன். என் பேரு ராமரத்தினம்.”
“அப்படியா?”
“சார் யாருன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?”
“நீங்க ராமரத்தினம், நான் சேதுரத்தினம்!” என்று பதில் சொல்லிவிட்டு அவன் சிரித்தான்.
“இன்னொரு ஒத்துமை கூட இருக்கு, சார்.”
“என்ன?”
“நீங்களும் ஓட்ட்லுக்கு வர்றீங்க, நானும் ஓட்டலுக்கு வர்றேன். ஆனா ஒரே ஒரு வித்தியாசம். நீங்க் சாப்பிட வர்றீங்க. நான் செர்வ் பண்ண வர்றேன்!” – இப்படிச் சொல்லிவிட்டு, ராமரத்தினம் சற்றுப் பெரிதாய்ப் புன்னகை செய்தான்.
குரலில் தொனித்த ஏதோ ஒன்று தன்னைக் கலக்கியதில், சேதுரத்தினம் வாயருகே கொண்டு சென்ற போண்டாவை நிறுத்திக்கொண்டு மெதுவாய்த் தலை உயர்த்தி அவனைப் பார்த்தான்.
அவனது பார்வையின் அகலத்திலிருந்து அதைப் புரிச்துகொண்டு விட்டவன் போல், “என்ன சார் அப்படிப் பார்க்குறீங்க? ஒண்ணும் தப்பிதமா நினைக்காதீங்க!” என்று சொல்லிவிட்டு மேலே கேள்வி கேட்க அவனை அனுமதிக்க விரும்பாதவன் போல் ராமரத்தினம் விருட்டென்று அடுத்த மேசைக்குப் போய்விட்டான்.
சேதுரத்தினம் சிந்தனையில் ஆழ்ந்தான். ‘நீங்களும் ஓட்டலுக்கு வர்றீங்க, நானும் ஓட்டலுக்கு வர்றேன். ஆனா, ஒரே ஒரு வித்தியாசம். நீங்க சாப்பிட வர்றீங்க. நான் செர்வ் பண்ண வர்றேன்….’ – சிரித்த முகமாய்த் தெரியும் அந்த இளைஞனைப் பற்றித் தெரிந்துகொள்ளும் ஆவல் அவனுள் கிளர்ந்தது.
அவசரமாய் அடுத்த மேசைக்கு நகர்ந்த ராமரத்தினமும் தான் கூறிய சொற்களைப் பற்றியே நினைத்துக்கொண்டிருந்தான். ‘கொஞ்சம் அதிகப் பிரசங்கித்தனமாப் பேசிட்டேனோ? இப்பதான் முத முதலா இங்கே வேலைக்கு வந்திருக்கேன். வந்த அன்னைக்கே இப்படிப் பேசி யிருக்க வேண்டாமோன்னு இப்ப தோணுது. அவர் என்ன நினைச்சிருப்பார் என்னைப் பத்தி? இந்தப் பயலுமக்குப் பொறாமைன்னுதானே? என்ன இருந்தாலும் நான் அப்படிப் பேசியிருக்கக் கூடாது’
அவன் அடுத்த மேசைக்காரரை, “என்ன சார் கொண்டு வரட்டும்?” என்று வினவினான்.
“பஜ்ஜி ஒரு ப்ளேட் கொண்டாப்பா. நீ என்ன புதுசா?”
அந்த ஒருமை விளிப்பு அவனை உறுத்தியது. “ஆமா…” என்றுவிட்டு அவன் நகர்ந்தான்.
‘…நீ நீன்னு ஒருமையிலெ பேசுறது என்ன வழக்கம்? அடுத்தாப்ல, சேதுரத்தினம் சார் மரியாதையா ‘நீங்க’ன்னுதான் சொல்றாரு.. ஓட்டல் செர்வர்னா மட்டமா! அது யாராத்தான் இருக்கட்டுமே! அதென்ன வழக்கம், நீ, வா, போன்னு மரியாதை யில்லாமெ பேசுறது! நம்ம ஜனங்க என்னைக்குத்தான் மரியாதை கத்துப்பாங்களோ!…’ –
அவன் பஜ்ஜித்தட்டுடன் திரும்பிவந்து அவர்முன் வைத்த பின் சேதுரத்தினத்திடம் வந்தான்: “காப்பி கொண்டு வரலாமா, சார்?”
“கொண்டு வாங்க. ஸ்ட்ராங்கா இருக்கட்டும். ஆனா அரைச் சர்க்கரை போட்டாப் போதும்.”
”ஏன், சார்? இனிப்புப் பிடிக்காதோ?”
”ரொம்பவே பிடிக்கும். ஆனா காப்பியில ரொம்பவும் சர்க்கரை போட்டா அதோட ருசி கெட்டுடும். பானகம் மாதிரி ஆயிடுமில்லே? அதான்!” என்று கூறிய பின், அவன் கேட்காமல் விட்ட கேள்விக்கும் சேர்த்து, “மத்தபடி எனக்கு சர்க்கரை வியாதியெல்லாம் இன்னும் வரலை!” என்று சேதுரத்தினம் சிரித்தான்.
“வேண்டாம் சார். என்னிக்குமே வர வேண்டாம்,” என்ற பின் ராமரத்தினம் உள்ளே போனான்.
இரண்டே நிமிடங்களீல் திரும்பிய அவன் காப்பித் தம்ப்ளர், வட்டை ஆகியவற்றை அவனுக்கு முன் வைத்துக்கொண்டே, “சார் எப்படிக் குடிப்பீங்க? சுமார் சூட்டிலயா, இல்லேன்னா கொதிக்கக் கொதிக்கவா?” என்று கேட்டான்.
“நல்ல சூட்டில குடிப்பேன். கொதிக்கக் கொதிக்கவும் இல்லே, சுமார் சூட்டிலயும் இல்லே. உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? நம்ம ராஜாஜி கொதிக்கக் கொதிக்கத்தான் குடிப்பாராம். கையால டம்ளரை ஒரு துண்டால சுத்திப் பிடிச்சிண்டு வாயில ஊத்திப்பாராம்! கை பொறுக்காத சூட்டை அவரோட நாக்கு எப்பிடித்தான் பொறுத்துதோ! ஆச்சரியம்! நீங்க அதை வெச்சுடுங்க. நான் ஆத்திக்கிறேன்.”
ஆனால் ராமரத்தினம் தானே அதை ஆற்றி நுரை பொங்க அவன் முன் வைத்தான். ஆற்றிய தினுசில் அவனது கற்றுக்குட்டித்தனம் தெரிந்தது. அனுபவம் மிக்க பணியாள்கள் போலன்றி அவன் தம்ப்ளரை உயரமாய் வீசி வீசி ஆற்றாமல் குட்டை குட்டையாக வீசி ஆற்றியதைச் சேதுரத்தினம் வேடிக்கை பார்த்தான். பின்னர் அதை அவன் கையில் எடுத்துக்கொண்டு பருகலானான்.
“பில் கொண்டு வரலாமா, சார்?”
“உம். கொண்டு வாங்க.”
ராமரத்தினம் உடனே சென்றுவிடாமல், “சர்க்கரை நீங்க சொன்ன மாதிரி திட்டமா இருக்கா, சார்?” என்று கேட்டான்.
“ஓ. கச்சிதமா யிருக்கு. தேங்க்ஸ்!” எனும் சொற்கள் அவனிடமிருந்து உதிர்ந்த பிறகே அவன் கிளம்பிப் போனான்.
பில் வந்ததும், அவன் பெற்றுக்கொண்டான். கல்லாவில் இருக்கும் முதலாளியிடம்தான் பணத்தைக் கொடுக்க வேண்டும் எனும் விதி இருந்ததால் அவன் எழுந்து நடந்தான்
மீதிச் சில்லறையைப் பெற்றுக்கொண்டு அவன் படியிறங்கிய போது தன்னையும் அறியாமல் திரும்பிப் பார்த்தான். ராமரத்தினம் தன்னையே பாத்துக்கொண் டிருந்ததைக்கண்டதும் புன்னகை செய்தான். சிறு தலையசைப்பின் மூலம் விடை பெற்றுக்கொண்டான்.
நடக்கத் தொடங்கிய சேதுரத்தினத்துக்கு வியப்பாக இருந்தது. ‘எனக்கு இவனைப் பிடிச்சிருக்கிற மாதிரியே இவனுக்கும் என்னைப் பிரிச்சிருக்குன்னு தோண்றது. என்னோட முகச் சாயல்லே இவனுக்கு யாராவது சொந்தக்காரனோ, சிநேகிதனோ இருக்கானோ, என்னவோ! நாளைக்கு இவனைப்பத்தி விசாரிக்கணும்…டிப்ஸை யாருக்கும் தெரியாம குடுத்தா வாங்கிப்பானா? நாளைக்குக் குடுத்துப் பார்க்கலாம்….’
அதே நேரத்தில் ராமரத்தினமும் சேதுரத்தினத்தைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தான். ‘சாரைப் பார்த்தா நல்லவராய்த் தெரியறார். ஓட்டல் செர்வர்தானேன்ற அலட்சியமில்லாம, மரியாதையாப் பேசுறார். குரல்லே கனிவு தெரியுது. அடுத்தாப்ல, இன்னைக்குக் காலையில ஒரு பணக்காரப் பையன் – இத்தனைக்கும் வயசுல சின்னவன் -மரியாதையே இல்லாம – இந்தாப்பான்னுல்லே கூப்பிட்டான்! என்னமோ பெரிசா ஒரு ராஜகுமாரன் சேவகனைக் கூப்பிடுற மாதிரியில்லே விரல் சொடுக்கிக் கூப்பிட்டான்! முத நாளேச்சேன்னு என் எரிச்சலை அடக்கிண்டேன். அடுத்த வாட்டி விரல் சொடுக்கிக் கூப்பிட்டான்னா, சொல்லிடப் போறேன், இந்த விரல் சொடுக்கிக் கூப்பிட்ற வேலையெல்லாம் வெச்சுக்காதேன்னு…..சேதுரத்தினம் சார் பார்வையிலதான் எவ்வளவு கனிவு! அவர் கிட்ட நாளைக்கே ‘அந்தப் பேச்சை’ எடுக்கலாமா?… வேணாம். அது சரியா யிருக்காது. ரெண்டொரு நாள் போகட்டும். …’
“இந்தாப்பா, ராமரத்தினம்! அந்த மேசைக்கு ஆள் வந்தாச்சு, பாரு. போய்க் கவனி!” என்று சகப் பணியாள் அவன் தோள் தொட்டுச் சொன்னதும், அவனது சிந்தனை கலைந்தது. அவன் தன் பணியைக் கவனிக்க அகன்றான்.

– தொடரும்

Series Navigation
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *