வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 39

This entry is part 14 of 26 in the series 9 டிசம்பர் 2012

 

நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர்

பண்பறிந் தாற்றாக் கடை.

 

 

உலகில் உயிரினங்கள் தோன்றிய நாள் முதலாக வாழ்வியல் வரலாறும் தொடங்கி விட்டது. காலங்கள் சுழற்சியில் மாறுதல்களும் இருந்து கொண்டே இருக்கின்றன. அதனால்தான் பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பதனை இலக்கணமாகக் கொண்டுள்ளோம். என்னதான் மாறுதல்கள் வந்தாலும் பல அடிப்படையான விஷயங்கள், இயற்கையைச் சார்ந்து தன் இயல்புடன்  பயணிக்கின்றது. வாழ்வியலின் வரலாறு முழுமையும் எழுதப் புகுந்தால் மகாபாரதத்திற்கு மேல் நீட்சியான படைப்பாகிவிடும். எனவே வாழ்வியலில் இன்றியமையாத சில பக்கங்கள் மட்டும் எழுதப்படுகின்றது.

வாழ்வியலில் அச்சாணியாக இருப்பவர் உயிர் சுமந்து படைக்கும் பெண். பின்னர் புதிய பிறப்புகள் சுய பலம் பெற்றுப் பறக்கும் வரையுள்ள காலம். குழந்தைகள், சிறுவர்கள், இளம் காளைகள், இவர்களின் வாழ்க்கை முறைகள், பிரச்சனைகள், எல்லாம் அலசப் பட்டது.. வெறும் பிரச்சனைகளை மட்டும் கூறாமல், அதன் காரணங்களையும், அவைகளைச் செப்பனிடும் சில வழி முறைகளையும் இத்தொடரில் எழுதப்பட்டது.. இது வரை இவர்கள் நலனுக்கான சட்டங்கள், திட்டங்கள் ஒரளவு விரிவாக எழுதப்பட்டன. இன்னும் ஒரு திட்டம் குறித்தல் வேண்டும். அதனைப் பார்க்கலாம்

பெண்கள் தன்னார்வத் தொண்டு.

WOMEN VOLUNTARY SERVICE

அன்று இத்திட்டத்தை டபிள்யூ.வி. எஸ் என்று அழைப்பர். இதனை அறிமுகப்படுத்தியவர் மறைந்த முன்னால் பிரதமர் திருமதி இந்திராகாந்தி அவர்கள்.

அந்த அம்மையாரின் புகைப்படம் பார்க்கவும் அரசியல் எழுதப்போகின்றேன் என்று எட்டிப் பார்க்கலாம். அரசியல், சாதி, மதங்கள், இலக்கிய ஆய்வுகள் பற்றி ஏற்கனவே நிறைய எழுதப்பட்டு வருகின்றன.. வாழ்வியல் வரலாற்றில் அரசியல் வராதா என்று ஒருவர் சுட்டிக் காட்டியதை நான் மறக்கவில்லை. ஓர் குறிக்கோளுடன் எழுதிக் கொண்டிருக்கின்றேன். என் எண்ணங்களை, எழுத்தை திசை மாற்றும் விவாதங்களில் நுழைவதைத் தவிர்க்கின்றேன். அவ்வளவுதான். தொடர் முடிவில் அரசியலும் வரும் ஆன்மீகமும் வரும். இத்தொடருக்கு சம்பந்தப்பட்டவைகள் மட்டும் வரும். தற்போது வரலாறு என்று மட்டு மில்லாமல், வாழ்க்கையைச் செப்பனிடும் திட்டங்களையும், அவைகள் சீராக நடக்க, முடிந்த அளாவு ஆலோசனைகளையும் எழுதுகின்றேன். பல திட்டங்களில் பணியாற்றிய அனுபவங்களும், நான் பெற்ற பல பயிற்சிகளும் இதற்கு உதவியாக இருக்கின்றன. இந்த திட்டத்தையும் பார்க்கலாம்.

இத்திட்டத்திற்கு திட்டமிட்ட வடிவமைப்பு கிடையாது. அரசு நிதி உதவியும் கிடையாது.  தனி நபராகவோ அல்லது கூடியோ பணிகளைச் செய்யலாம். செய்யும் பணி பயனுள்ளதாக இருக்க வேண்டும். ஆக்க பூர்வமான சிந்தனையை எழுப்பும் திட்டம்.

மாநில அளவில் அந்தந்த மாநில ஆளுனரின் துணைவியார் இதற்குத் தலைவியாவார். தமிழகத்தில் செயலாளராக இயங்குபவர் சமூக நலத் துறை இயக்குனர்.

மாவட்ட அளவில் அந்தந்த மாவட்ட ஆட்சியாளரின் துணைவி தலைவியாக வழி நடத்துவார்கள். அவர்களுக்குத் துணையாக செயல்படும் செயலாளர் அந்தந்த மாவட்ட சமூக நலத்துறை அலுவலராகும். புத்திசாலித்தனமான அமைப்பு. மாவட்ட ஆட்சியாளரின் மனைவி என்று இருப்பதால் பல பெண்கள் தாங்களே வந்து அறிமுகம் செய்து கொண்டு ஒன்று சேர்வர். வணிகர்கள் முதல் கல்வி யாளர்கள் வரை தங்கள் பங்கீடும் இருப்பதை மாவட்ட ஆட்சியாளருக்குத் தெரிய வேண்டும் என நினைத்து மனைவிக்கு வேண்டிய உதவிகளைச் செய்வார்கள். உளவியல் முறையில் அமைந்த ஓர் அமைப்பு. சுதந்திரமாக ஊர்களின் தேவை களுக்கேற்ப செயல் திட்டங்கள் வரைந்து கொள்ளலாம். ஆனால் எதற்கும் அரசு நிதியை எதிர்பார்க்கக் கூடாது. இது மக்கள் பணி.

கோயில்களுக்குப் போகின்றோம். வலம் வந்து கும்பிடுகின்றோம். சிலர் உண்டியலில் காசும் போடுவர். இவைகளைச் செய்யச் சொல்லி யாரும் நிர்ப்பந்தம் செய்யவில்லை. தொடர்ந்து வரும் ஓர் பழக்கம்.

பிறந்த நாட்கள் கொண்டாடும் பழக்கம் சில வீடுகளில் இருக்கும். அவர்கள் வீட்டாருடன் கொண்டாடுவர்.ஏதாவது இனிப்பு பலகாரம் இருக்கும். புத்தாடை புனைந்து கூடி மகிழ்வர். சில வீடுகளில் உறவுகள் வரலாம். நண்பர்கள் வரலாம். இத்திட்டத்தில் ஆதரவற்ற குழந்தைகளையும் மகிழச் செய்வர். அதாவது அந்த இல்லங்கள் செல்வர். பணமாக இல்லத்திற்குத் தருதல் இல்லை. வீட்டில் செய்த பலகாரங்கள், அல்லது வெளியில் வாங்கியவைகளை பிள்ளைகளிடம் நேரில் கொடுத்து உண்ணச் செய்வர். மகிழ்வுடன் குழந்தைகள் சாப்பிடும் பொழுது அவர்கள் முகங்களின் மலர்ச்சிதான் பிறந்த நாள் பரிசு.

வீட்டில் இறந்தவர்களுக்கு மரியாதை செய்யும் நாளுக்கு முன் தினமோ அல்லது பின் தினமோ முதியோர் இல்லம் சென்று அவர்களுக்கு விருந்தளிப்பர் .விருந்து தருகின்றவர்கள் கையால் உணவு தரப்படும் இதுபோன்று பொறுப்புகளை அவர்களே ஏற்றுக் கொண்டு செய்வதால் நேரிடையாகப் பலனைக் காணலாம். பணம் கொடுத்துச் செய்வதில் இந்த திருப்தி கிடைக்காது. பணமாகக் கொடுத்தால் சில இடங்களில் மெதுவாக ஊழலுக்கு இழுத்துச் செல்லப்படலாம்.

வீட்டில் உபயோகிக்கப்பட்ட ஆடைகள் அதுவும் கிழிசல் இல்லாத ஆடைகள் சேகரிக்கப்பட்டு இல்லவாசிகளுக்குத் தருவர். பண்டிகை நாட்களில் புது ஆடைகளும் சில இல்லங்களில் தரப்பட்டன..

ஆஸ்பத்திரிகளுக்குச் சென்று நோயாளிகளைச் சந்தித்து நலன் விசாரிப்பர். ஏழைகளுக்கு முடிந்த அளவு சில உதவிகளும் செய்வர். சிலருக்கு அவர்கள் உறவினர்களுக்குக் கடிதங்கள் எழுதித்தருவதும் உண்டு. கூட்டமாக எல்லோரும் போக வேண்டும் என்பதில்லை. பொறுப்புகளைப் பகிர்ந்து கொண்டு செய்வார்கள்.

வீட்டின் மாடியில் தொட்டிகள் வைத்து காய்கறிச் செடிகள் வளர்த்தனர்.

சில வீடுகளில் கூட்டுப் பிரார்த்தனை நடைபெறும்.

தேவை ஏற்படும் பொழுது சமூக நலத்துறை ஊழியர்கள் உதவி செய்வார்கள். .

இத்திட்டம் தோன்றிய காலத்தில் நான் செங்கை மாவட்ட சமூக நல அலுவலராக இருந்தேன். எல்லாப் பணிகளுக்கும் ஊக்கமளித்து வழி காட்டினேன். அப்பொழுது எங்களுக்கு இருந்த மாவட்ட ஆட்சியாளர். திரு. ஜே.ஆர். ராமனாதன் அவர்கள். தலைவியாக இருந்தவர் திருமதி தங்கமணி அவர்கள். இத்திட்டம் செயல்படும் பொழுதுதான் காஞ்சிக்கு வருகை புரிந்தார் மறைந்த முன்னால் பிரதமர் திருமதி இந்திராகாந்தி அவர்கள். காஞ்சிபுரத்து உறுப்பினர்கள் அவர்களை வரவேற்றோம். எங்கள் திட்டப்பணிகளைப்பற்றி அறிக்கை தயாரித்து அவர்களிடம் தந்தோம். அவர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதில்களும் சொன்னோம். அச்சமயத்தில் நான் மொழி பெயர்ப்பாளராக இருந்தேன். அவர்கள் முகத்தில் கண்ட மகிழ்ச்சியில் இருந்து எங்கள் பணிகள் அவர்களுக்குத் திருப்தியைக் கொடுத்திருக்கின்றது என்பது புரிந்தது. உறுப்பினர்களின் விருப்பப்படி அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டோம். இது நிகழ்ந்தது அவர்கள் காஞ்சிப் பெரியவரைப் பார்க்க வந்த பொழுது நடந்தது.

இத்திட்டத்தில் பணி செய்யக் கிடைத்த சுதந்திரம் எனக்கு அதிக ஊக்கத்தைக் கொடுத்தது. அரசு கொடுக்கும் பட்டியல் பார்த்து அது மட்டும் செய்வது சமூக நலப் பணியல்ல.  தனிமனிதர் என்றாலும் சமுதாயம் என்றாலும் பலனளிக்கும் செயல்கள், அவர்களுக்கு உற்சாகமும் ஊக்கமும் அளிக்கும் பணிகள் எதையும் செய்யலாம் என்ற உணர்வு உள்ளத்தில் ஆழமாகப் பதிந்தது. இதன் பின்தான் விடுப்பு எடுத்து மும்பாய் சென்றதும், தாராவி, சிகப்பு விளக்குப் பகுதி, நடையோரப் பாதைகள் பக்கம் சென்று மக்களின் வாழ்க்கையைப் பார்த்தேன். அப்பொழுது கிடைத்த படிப்பினைகள் பின்னால் எனக்கு உதவின.

காஞ்சியிலிருந்து எனக்கு சேலத்திற்கு மாற்றலாயிற்று. ஒவ்வொரு மாவட்டத்திலும் எனக்குப் புதிய அனுபவங்கள் கிடைத்தன. அதனால் சலிப்பின்றி உற்சாகத்துடன் பணியாற்ற முடிந்தது. சேலத்தில் இயங்கி வந்த பன்னாட்டு சங்கங்களுடன் பழகினேன். அரிமா சங்கம், ரோட்டரி சங்கம், ஜே.சி சங்கம் இவைகளுடன் தொடர்பை வளர்த்துக் கொண்டேன்.

ஜே.சி கிளப் 40 வயதிற்குக் கீழுள்ளவர்கள். நான் சேலத்தில் பணியாற்றும் பொழுது அந்த சங்கத்தில் அப்பொழுது மிகவும் சுறுசுறுப்பாக இருந்தவர் பெருமாள். அவரும் நானும் சேர்ந்து வித்தியாசமாக சில பணிகள் செய்தோம். வேலையில்லா படித்த பெண்களின் பட்டியல் தயாரித்தோம். அக்காலத்தில் வீடுகள் சென்று விளம்பரம் செய்வது பிரபலமாகவில்லை. நாங்கள் இந்தப் பெண்களுக்கு தனியார் கம்பெனிகளில் வேலை பெற்றுதந்தோம். விளம்பர வேலைகளில் ஈடு படுத்தினோம். பன்னாட்டு சங்க உறுப்பினர்களில் பெரும்பாலானோர் ஏதாவது தொழில் செய்பவர்களாக இருப்பார்கள் எனவே இப்பணியைச் செய்ய முடிந்தது. நம் தேவை அதிகம். முடிந்த மட்டும் உதவி செய்தோம்.

ஒரு தலைப்பை பத்திரிகையில் அறிவித்து அத்தலைப்பில் கவிதைகள் அனுப்பச் சொன்னோம். ஆண், பெண் என்று பிரிக்கவில்லை. மாவட்ட அளவில் இந்த போட்டி. வந்த கவிதைகளை படித்துப் பார்க்க முன்று பெண்களைத் தேர்ந்தெடுத்தேன். வல்லரசி, தெய்வானை, பிரேமா இந்த மூவரும் இப்பணியைச் செய்தனர். தேர்ந்தெடுத்தவைகளுக்குப் பரிசு கொடுத்தோம். அதற்கு ஒரு கூட்டம் ஏற்பாடு செய்து உலகக் கவிஞர்கள் சங்கத்தில் தலைவர் திரு கிருஷ்ணா ஶ்ரீனிவாஸ் அவர்களும் அதன் செயலாளர் திரு சையது அமிரூதீன் ஆகியோரை வரவழைத்திருந்தோம். இளைஞர்களுக்கு உற்சாகம் அளித்தது இந்த நிகழ்ச்சி. பின்னர் சமுதாயப் பணிகளுக்குக் கூப்பிட்டால் தயங்காமல் வர ஆரம்பித்தனர்..

சேலத்தில் ஒரு பெண் அழகாக ஓவியங்கள் வரைவார். அவரது ஓவியங்களை மட்டும் சேகரித்து ஓர் கண்காட்சி அமைத்தோம். இவ்வாறு திறமையை வளர்க்கவும் சில பணிகள் செய்தோம்.

அரிமா சங்கமும், ரோட்டரி சங்கமும் குழந்தைகளுக்கு  health check up , தடுப்பூசி போடுதல், பூச்சி மருந்து கொடுத்தல் போன்ற பணிகளைச் செய்தனர்..

வல்லரசியைப் பற்றி சில வரிகள் எழுதியாக வேண்டும். அவள் தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றவள்.ஏழைக் குடும்பம். அவளிடம் தமிழ் விளையாடும். வேலை கிடைக்காமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தாள். சேலத்திற்கு மணியன் வந்திருந்தார். அவருடன் இன்னும் சிலரும் வந்திருந்தனர்.. மலை நாடுகளைப் பார்த்து விகடனில் எழுதுவதற்காக வந்தவர்கள். என்னுடன் பழகிய எழுத்தாளர்கள் யாராயினும் நான் பணியாற்றும் இடம் வந்தால் என்னைப் பார்க்காமல் செல்ல மாட்டார்கள். அவர்கள் ஏற்காடு போன பொழுது நானும் உடன் சென்றேன். அப்பொழுது என்னுடன் வந்த பெண்மணிகள் வல்லரசி, தெய்வானை, பிரேமா, ராஜேஸ்வரி ஆகியோரும் உடன் வந்தனர். ஏற்காட்டில் எங்களைப் படம் பிடித்து அதனை விகடனில் வெளியிட்டார்கள். பெண்களுக்கு மிக்க மகிழ்ச்சி. மணியன் சேலம் வந்ததில் இருவகைப் பயன்கள் ஏற்பட்டன.

நாங்கள் கொல்லிமலைக்கும் போனோம். நான் ஓர் ஊர்சுற்றி. வரலாற்று பிச்சி. கொல்லிமலை செய்திகளைக் கூறினேன். அறப்பளிச்வரர் கோயில் வரலாறு சொன்னேன்.. சங்க காலத்தில் கட்டப்பட்டது என்ற செவிவழிச் செய்தியுண்டு. பின்னர் செம்பியன்மாதேவி அவர்கள் அக்கோவிலைச் செப்பனிட்டுள்ளார்கள். கல்வெட்டு அங்கே இருந்ததைக் காட்டினேன். அங்கு ஒரு வழக்கம் உண்டு.. பிள்ளையில்லாதவர்கள் அந்த நீரோடையில் துள்ளித் திரியும் மீன்களுக்கு முள்ளால் மூக்கு குத்திவிட்டால் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கை கிராமத்தில் இருப்பதைக் கூறி அதனைப் பத்திரிகையில் போட வேண்டாம் என்றும் சொன்னேன். பத்திரிகையில் இச்செய்தி பரவினால் மீன்களுக்குத் தொல்லை. இதனைச் சுற்றுலாத் தலமாக மாற்ற முயற்சி எடுக்கச் சொன்னேன். மீன் செய்தி தவிர மற்ற செய்திகள் அனைத்தும் விகடனில் எழுதியிருந்தார். பின்னால் அதனைச் சுற்றுலாத் தலமாக மாற்றவும் முயன்று வெற்றி பெற்றார்.

இன்னொரு உதவியைப் பற்றியும் கூறுகின்றேன். வல்லரசியின் ஏழ்மை நிலையைக் கூறி, அவளின் திறமைகளையும் கூறினேன். அவளைப் பற்றிய குறிப்புகள் கொடுத்தேன். வல்லரசிக்கு அண்ணாமலை யுனிவெர்சிட்டியில் உதவிப் பேராசிரியை வேலை கிடைத்தது. மணியன்தான் இந்த உதவி செய்தார். வல்லரசியுடன் இப்பொழுதும் தொடர்பு தொடர்கின்றது. . மற்ற பெண்களுக்கும் உள்ளூரில் வேலை கிடைத்தது,

சேலத்தில் இன்னொரு அமைப்பை ஏற்படுத்தினேன்.

சிந்தனையாளர் மன்றம்.

அதற்குத் தலைவராக இருந்தவர் டாக்டர் சூடாமணி. அவர் ஒரு சர்ஜன். அவரைப்போன்று ஒவ்வொரு துறையிலிருந்து ஒருவரைத் தேர்ந்தெடுத்து சேர்த்தோம். இளைஞர்களில் ஒரு ஆணும் ,ஒரு பெண்ணும் சேர்த்தோம். மாதம் ஒரு முறை கூடிப் பேசுவோம். கிராமங்களுக்குச் செல்வொம். விழிப்புணர்வை ஏற்படுத்தக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.

மாவட்ட அளவில் பெண்களுக்கு ஓர் மாநாடு ஏற்பாடு செய்தோம். இப்பொழுதும் என்னால் மறக்க முடியாது. கேள்விகளைத் தயாரித்தவள் நான்.  என் துறையில் பணியாற்றும் கெட்டிக்கார பெண்களுக்குப் பயிற்சி கொடுத்து ஒவ்வொரு குழுவிலும் அமர்த்தினேன். கிராமத்துப் பெண்மணிகள் மனம் விட்டுப் பேசினார்கள். அங்கே ஆண், பெண் என்று பிரித்து பார்க்காமல் சமுதாயப் பிரச்சனைகளை அலசினோம்.  அன்று இவர்கள் ஊடகங்களுக்கு அடிமையாகாத நிலை. நாகரீகம் மூலம் நல்லதை விட இருக்கும் நல்லதும் கரைபட்டு விட்டதே. கற்பதற்கு முடிவில்லை. இந்த மாநாட்டிலிருந்தும் பல படிப்பினைகள் கற்றேன்.. இந்த மாநாடு நடக்கும் பொழுதே நிகழ்ந்த ஓர் சம்பவம் கூறுகின்றேன்

கண்மணி என்று ஓர் பெண். பட்டதாரிப் பெண். ஏழைக் குடும்பம். இன்னும் அவளுக்கு வேலை கிடைக்கவில்லை. அவளுக்கு ஓர் பள்ளித் தோழி உண்டு. அந்த தோழிக்கு ஓர் அண்ணான். அவன் இவளுக்கு வேலை வாங்கிதருவதாகக் கூறியிருப்பதாகச் சொன்னாள். பாசமுள்ளவனாம். அவன் வெளியூரில்  மிகப் பெரிய இடத்தில் பணியாற்றி வந்தான். இவளுக்கு அடிக்கடி கடிதம் எழுதுவானாம். ஒரு நாள் அவன் எழுதிய கடிதத்தைக் கொண்டு வந்து காட்டினாள். அதைப் படித்து முடிக்கும் பொழுது அக்கடிதத்தில் நான் கண்ட ஓர் முரண்பாடு உறுத்தியது. பாசமழை பொழிந்தவன் முடிக்கும் பொழுது எழுதி யிருந்தது சரியாகத் தோன்றவில்லை.

“இது அண்ணன் செய்யும் காரியமா?” கண்மணியிடம் கேட்டேன். அவளுக்கும் ஓர் அண்ணன் உண்டு. அவன் இப்படி ஏதாவது செய்திருக்கின்றானா என்று கேட்டேன். இல்லையென்று தலையாட்டினாள். கடிதத்தில் ஒலித்த அபஸ்வரத்தைக் கூறிக் கண்டித்தேன். நான் சொல்லச் சொல்ல அவள் எழுத வேண்டும். அதாவது அவனுக்குப் பதில்.

அம்மாவுக்கு உங்கள் கடிதத்தில் கடைசியில் எழுதியிருந்தது பிடிக்கவில்லை. உஙகளுக்கு என் மேல் விருப்பம் என்றால் நாம் திருமணம் செய்து கொள்ளலாம். அல்லது நாம் இனிமேல் பழக வேண்டாம். கடிதம்  எழுத வேண்டாம்.

அவள் கையெழுத்தை வாங்கி போஸ்ட்டும் செய்துவிட்டேன்

ஒரு நாள் ஒரு வாலிபன் என் அலுவலகம் வந்தான். கோபமான பார்வை. மெது வாகத் திட்டினான். அவன் அவளை சகோதரியாகத்தான் நினைக்கின்றானாம். இப்பொழுது பிரித்து விட்டதால் என்னைக் கத்தியால் குத்தப் போகின்றானாம். எனக்கு சிரிப்பு வந்தது. அவன் நிற்பது என் அலுவலகம். அது போகட்டும். இந்த சவால் முதன் முறையாகக் கேட்கவில்லை. என்று பணிக்கு வந்தேனோ பல சவால்கள் கேட்டுவிட்டேன்

என்னைக் குத்தப்போகின்றேன் என்று சொன்னவர் பலர்

இன்னும் எத்தனை சவால்கள் ?!

என் சிரிப்பைப் பார்த்துவிட்டு முறைத்துப் பார்த்துவிட்டு வெளியேறினான். நேராக கண்மணி வீட்டிற்குச் சென்று பயமுறுத்தியிருக்கின்றான். வேலை வேண்டி கல்லூரிச் சான்றிதழகளை அவனிடம் கொடுத்து வைத்திருந்தாள். அவைகளைக் கிழித்துப் போடப் போவதாகச் சொல்லிவிட்டுப் போயிருக்கின்றான். அவள் என்னிடம் சொன்ன பொழுது எல்லாவற்றையும் நான் கவனித்துக் கொள்வதாகத் தைரியம் சொன்னேன்..

மாநாடு நடந்து கொண்டிருக்கும் பொழுது ஒர் பையன் ஒரு கடிதத்துடன் வந்தான். கண்மணிதான் கடிதம் கொடுத்தனுப்பியிருந்தாள். அவளை அந்த அற்புத அண்ணன் ஒரு இடத்திற்கு வரச் சொல்லியிருக்கின்றான். வெளி நாட்டிற்கு அவளைக் கடத்தப் போவதாகவும் மிரட்டி இருக்கின்றான். எனக்கு கடிதம் அனுப்பி விட்டு அவனைக் காண அவன் சொன்ன இடம் புறப்பட்டிருக்கின்றாள். அதற்கு முன் இப்படி ஒரு கடிதம் எழுதி அனுப்பியிருக்கின்றாள்.

மாநாட்டில் 800 பெண்கள் கலந்து கொள்ள வந்திருந்தனர். அங்கே அலசப்படுவது பெண்களின் பிரச்சனைகள். இங்கே பேச்சு நடந்து கொண்டிருக்கும் பொழுது வேறு ஓரிடத்தில் ஒரு பெண் பிரச்சனையில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தாள். மாநாடு இல்லாமல் இருந்திருந்தால் நானே போயிருப்பேன். என்னால் போக முடியவில்லை. ஒருவரிடம் பிரச்சனைகளைக் கூறி, போலீஸ் பின்னால் வந்து கொண்டிருக்கின்றது என்று சொல்லச் சொன்னேன். இவன் அங்கு போய் சொன்னவுடன் மேலும் கத்திவிட்டு சென்றிருக்கின்றான். கண்மணி என்னிடம் வந்தாள். அவள் தோற்றத்தில் சாதாரணமாக இருப்பாள். எந்த நாட்டிலும் அவளை விலைக்கு வாங்க மாட்டார்கள் என்று சொன்னேன் அவள் சிநேகிதியின் வீட்டிற்குச் சென்று நடந்த எல்லாவற்றையும் கூறினேன். அவர்கள் வருத்தப் பட்டார்கள். அவனுடைய அலமாரியில் கண்மணியின் கல்விச் சான்றிதழ்கள் இருந்தன எடுத்துக் கொடுத்தார்கள். மேலும் தொல்லை கொடுத்தால் நானும் பெரியவர்கள் மூலமாக அவனுக்கு வேலை இல்லாமல் செய்துவிடுவேன் என்று கூறிவிட்டு வந்தேன்.

அவளுக்கு ஒரு வேலை வாங்கிக் கொடுத்து, அவள் வீட்டில் சொல்லி ஒரு மாப்பிள்ளை பார்த்து திருமணமும் நடத்தி முடித்தேன். ஒரு பெண்ணின் அசட்டுத்தனம். அறியாமையிலும் அவசரத்திலும் வாழ்க்கையைக் கெடுத்துக் கொள்ளும் பெண்களும் இருக்கின்றனர் என்பதற்கு கண்மணி ஓர் எடுத்துக்காட்டு.

அறுவை சிகிச்சை மருத்துவர் சூடாமணி பின்னர் அரசியலில் சேர்ந்ததும் சேலம் நகராட்சிக்குத் தலைவரானதும் தனிக் கதை.

இத்திட்டத்தின் மூலம் பெற்ற உற்சாகத்தில் புதிது புதிதாக போகும் இடங்களில் சில நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்வது தொடர்ந்தது.  மதுரைக்குச் சென்ற பொழுது சித்திரைக் கண்காட்சியில் ஒரு நாள் மட்டும் இந்தியாவின் பல மாநிலத்தைச் சேர்ந்த பெண்களால் அந்தந்த மாநில சிறப்பு உணவைத் தயார் செய்யப்பட்டு விற்பனை செய்தோம். இதற்கும் அரிமா சங்கத்தின் உதவி கிடைத்தது..

சென்னையில் நகரச் சேரிப் பகுதியில் டி. பி. சத்திரத்தில் ஓர் விளையாட்டுப் போட்டி நடத்தினோம். 6 மாதக் குழந்தைகள் முதல் 60 வயது கிழவிகள் வரை விளையாட்டு போட்டிகள். குழந்தைகளுக்கு ஏற்பாடு செய்திருந்தது தவழும் போட்டி. போட்டியில் கலந்த எல்லாக் குழந்தைகளுக்கும் பரிசு உண்டு. வென்றவர்களுக்கும் சிறப்புப் பரிசு உண்டு. இவ்விழாவிற்கு எழுத்தாளர் திருமதி இந்துமதியும், குமுதம் அரசியல் நிருபர் திரு. பால்யூவும் வருகைதந்தனர். குமுதத்தில் இந்நிகழ்ச்சிபற்றிய செய்தியும் வெளிவந்தது. இதுவும் அரிமா சங்கத்தின் உதவியுடன் நடத்தப்பட்டது.

எதற்கும் அரசுதான் நிதி உதவி செய்ய வேண்டும் என்பதை மாற்றி ஏற்கனவே இயங்கிவரும் பல தொண்டு நிறுவங்களையும், பன்னாட்டு சங்கங்களையும் ஒருங்கிணத்து, பல நிகழ்ச்சிகளை, மக்களுக்குப் பலன் தரும் செயல்களையும் செய்தோம்.

இத்திட்டத்தின் கீழ் ஓர் இல்லம் திருமதி சரோஜினி வரதப்பன் அவர்களால் சென்னையில் தொடங்கப் பட்டது. இப்பொழுதும் அந்த இல்லம் சென்னையில் இயங்கி வருகின்றது.

இந்த திட்டத்தில் பங்கு கொள்ளும் பொழுது ஓர் உற்சாகமும் தன்னம்பிக்கையும் ஏற்பட்டதை நினைவுத் திரையினின்றும் அகற்ற முடியாது.

1967க்கு முன்னும் பின்னும் நடந்தவைகளை முடிந்தமட்டும் தொகுத்து எழுதி விட்டேன்.

1967 ல் திராவிட முன்னேற்றகட்சி ஆட்சிக்கு வந்தது.

எங்களுக்குப் பெரிய சோதனையும் வந்தது.

அடுத்து பார்க்கப் போவது ஒர் வரலாற்று நிகழ்வு

“மனதை அடக்க நினைத்தால் அலையும். ஆனால் அறிய முயன்றால் அடங்கிவிடும்.

உறுதியும் ஒழுங்கும் இருந்தால் எண்ணியது நிறைவேறும். எண்ணம், சொல், செயல் மூன்றாலும் பிறருக்கு நல்லதை மட்டுமே செய்ய வேண்டும்.

அறியாமையால் மனிதன் கவலைக்கு உள்ளாகிறான். திறமையின்மை, அச்சம் ஆகிய இரண்டும் கவலை என்னும் நோயை ஏற்படுத்துகின்றன. செய்யும் செயலில் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டால் கவலைக்கு வழியே இல்லை “

வேதாத்ரி மகரிஷி

தொடரும்

 

 

Series Navigationசந்திப்புமேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் அங்கம் -4 பாகம் -6
author

சீதாலட்சுமி

Similar Posts

Comments

  1. Avatar
    Dr.G.Johnson says:

    வாழ்வியல் வரலாறு எனும் இப்பகுதியை தொடர்ந்து சுவைபடவும் பயனுள்ள வகையிலும் எழுதிவரும் சீதாலட்சுமி அவர்கள் இந்த வாரம் மறைந்த முன்னாள் இந்தியப் பிரதமர் திருமதி இந்திரா காந்தி அவர்கள் உருவாக்கிய பெண்கள் தன்னார்வத் தொண்டு பற்றி விளக்கமாகவும் உதாரணங்களோடும் அழகாக சித்தரித்துள்ளார்
    அத்திட்டம் எவ்வாறு மாவட்டங்கள்தோறும் சிறப்புடன் செயல்பட்டது என்பதும் சொல்லப்பட்டுள்ளது. இதில் சிறப்பு அம்சம் என்னவெனில் இதற்கு அரசு உதவி இல்லாமல் முழுதும் தன்னார்வமிக்கோரும், பன்னாட்டு தொண்டு நிறுவனங்களும் ஆர்வமுடன் செயல்பட்டதேயாகும். இன்று அரசு மான்யம் இல்லையேல் திட்டங்கள் இதுபோன்று நடைபெறாது. சொந்தப் பணம் போட்டு அடுத்தவருக்கு உதவவேண்டுமா என்று பலரும் விலகிவிடுவார். இருப்பினும் இன்னும் சில தொண்டு நிறுவனங்களும் பன்னாட்டு அமைப்புகளும் இதுபோன்று சமுதாய முன்னேற்றப் பணிகளில் ஈடுபட்டுவருவது பாராட்டுதற்குரியது. அதுபோன்றே திருமதி சரோஜினி வரதப்பன் துவக்கிவைத்த ஓர் இல்லம் இன்னும் தொடர்ந்து நடந்துவருவதும் போற்றுவதற்குரியது. பெண் வாழ்வியல் வரலாற்றின் அச்சாணி என்று அருமையாகச் சொல்லி இதுபோன்று சமுதாயப் பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திகொண்டபோது அதில் எதிர்நோக்கிய வெற்றி தோல்விகளை நம்முடன் பகிர்ந்துவரும் சமுதாயநல எழுத்தாளர் சீதாலட்சுமி அவர்களுக்கு பாராட்டுகள். இனி தி. மு. க. ஆட்சிக்கு வந்தபின் நடந்த புரட்சிகரமான மாற்றங்கள் குறித்து எழுதுவார் என்று ஆவலுடன் காத்துள்ளேன். அத்துடன் நீங்கள் இந்திரா காந்தியுடன் நிற்கும் உங்களின் அழகான இளமை தோற்றத்தையும் கண்டு மகிழ்ந்தேன்!…..டாக்டர் ஜி.ஜான்சன்.

Leave a Reply to Dr.G.Johnson Cancel reply

Your email address will not be published. Required fields are marked *