விதை நெல்

author
2
0 minutes, 0 seconds Read
This entry is part 23 of 40 in the series 6 மே 2012

பூமிபாலகன்

திண்ணையில் கால்களை நீட்டி உட்கார்ந்து கொண்டு, முறத்திலிருந்த கம்பில் கல் பார்த்துக் கொண்டிருந்தாள் கிழவி. சந்தைக்குப் போய்விட்டு வந்த தன் மகனை ஏறிட்டுப் பார்த்தாள். பையைத் திண்ணையில் வைத்து விட்டு ஒன்றும் பேசாமல் வீட்டின் உள்ளே சென்று கை, கால்களை அலம்பிக்கொண்டு உட்கார்ந்தான் மகன். அவன் மனைவி சொம்பில் தண்ணீர் கொண்டு வந்து கொடுக்க, அதை வாங்கிக் குடித்தான்.

“ ஏண்டா முத்து, வித்துட்டியா? “ என்றாள் கிழவி.

“ ஆமாம்மா.”

வைகாசி மாசம் முழுக்க புழுக்கம் தாங்கமுடிய்வில்லை. இந்த பூமி குளித்து வெகு நாளாயிற்று. மேகங்களெல்லாம் தம் பிறந்த வீட்டுக்குச் சென்றுவிட்டன. பொட்டிழந்து, பூவிழந்து, நகைகளற்ற கைம்பெண்போல் வெறுமனே காட்சியளித்தது வானம். தூரத்தில் ஏரி வெடித்துக் கிடந்தது, நண்டின் எலும்புக்கூடுகள் அங்கும் இங்கும் கிடந்தன. ஏரியைச் சுற்றி மேட்டுப்பாங்கான இடத்தில் தங்களுக்கென இருந்த கொஞ்சம் நிலத்தில் ஓலைக்குடிசைகளைக் கட்டிக்கொண்டு சிலர் இருந்தார்கள். ஐந்து கிலோ மீட்டருக்கப்பால் சிறிய நகரம். இலைகள் காய்ந்து, உதிர்ந்து மரங்கள் மொட்டையாக நின்றன. தூரத்தில் ஒரு கரிச்சான் குஞ்சு குடிக்கத் தண்ணீர் இல்லாமல் அங்கும் இங்கும் பறந்து கொண்டிருந்தது.

வீட்டில் இரண்டு நாட்களுக்குத் தேவையான கம்பு மட்டுமே இருந்தது. சாப்பாட்டுக்கே வழியில்லை. முத்துவின் மகள் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறாள். பள்ளிக்கூடத்திற்குப் பணம் கட்ட வேண்டும். துணிமணி, நோட்டுப்புத்தகம் வாங்க வேண்டும். முத்துவுக்கு வேறு வழி தெரியவில்லை. அவனது நிலைமையைப் புரிந்து கொண்டாள் அம்மா. மாட்டை விற்று விடும்படி சொன்னாள். அம்மாவுக்குத் தெரியாமல் முத்து எதுவும் செய்ததில்லை.

இந்தக் குடும்பத்திற்காக கிழவி எவ்வளவோ கஷ்டப்பட்டிருக்கிறாள். உடம்பில் தெம்பு இருந்தவரை உழைத்திருக்கிறாள். முடியாமல் போனபோது உட்கார்ந்து ஆலோசனை சொல்லுவாள். கிழவிக்கு மருமகள் என்றால் கொஞ்சம் பெருமைதான். குடும்பத்திற்கு ஏற்றபடி சுறுசுறுப்பாக வேலை செய்வதைப் பார்த்துச் சந்தோசப்படுவாள். கிழவி சும்மா இருக்க மாட்டாள். இருக்கிற சிறிது நிலத்திலேயே வேலை இல்லையென்றால், வெளியே வேலைக்குச் செல்வாள். இப்போது எங்கேயும் போக முடியவில்லை. இரண்டு வருடங்களாக மழை பொய்த்துவிட்டது. ஏரி குளங்கள் வற்றி விட்டன. பலபேர் பிழைக்க வழியில்லாமல் வெளியூர் சென்று விட்டனர். வீட்டிலிருந்த மிச்சம் மீதி நகைகள், பாத்திரங்கள் எல்லாம் அடகுக் கடைக்குப் போய்விட்டன.

கடைசியாக இருந்த மாட்டையும் விற்றாயிற்று. மகளுக்காகப் பள்ளிக்கூடத்திற்குப் பணம் கட்டியது போக, மீதம் உள்ள பணத்தில் அம்மாவுக்கும் மனைவிக்கும் மாற்றிக் கட்டிக்கொள்ள சேலை எடுக்க வேண்டும். சாப்பாட்டிற்கு அரிசியும் மற்ற மளிகைப் பொருட்களூம் வாங்கவேண்டும். எப்படியும் இரண்டு மாதத்திற்கு அரை வயிற்றுக் கஞ்சி குடிக்கலாம். அதன் பிறகு ஏதாவது வழி பிறக்காமலா போய் விடும் என்றெல்லாம் நினைத்தான் முத்து.

கால ஓட்டத்தை யாரால் நிறுத்த முடியும்? நாட்கள் வேகமாக ஓடின. பசியும் பஞ்சமும் அதைவிட வேகமாக வந்து ஒட்டிக்கொண்டன. தன்னைப் பெற்றெடுத்த தாயும், தான் பெற்றெடுத்த குழந்தையும் பசியால் வாடுவதைக் கண்டு முத்து வாடினான்.

நகரத்திற்குப் போனான். கிடைக்கும் வேலை எதையும் செய்யத் தயாரானான். சரக்குக் குடோனில் மூட்டைத் தூக்கி ஏற்றும் வேலை கிடைத்தது. தினமும் கிடைக்கிற கூலியைக் கொண்டு கொஞ்சம் பசியைச் சமாளீத்தது அந்தக் குடும்பம். இரவில் வந்து அசதியில் படுத்துக் கிடக்கும் கணவனைப் பார்த்துக் கண்ணீர் விடுவாள் அவன் மனைவி. உடம்பெல்லாம் வலி. காலை அமுக்கி விடச் சொல்வான். இவள் பிடித்துவிட அப்படியே தூங்கிப் போவான். ‘ நானும் வேலைக்கு வரேங்க ‘ என்றவளைத் தடுத்துவிட்டான் முத்து.

மூட்டைத் தூக்கும் சக தொழிலாளர்கள் கூச்சமில்லாமல் பேசும் பேச்சு, அவனுக்கு அறுவெறுப்பாக இருந்தது. அதுவும் பெண்களைப் பார்த்துவிட்டால் போதும், இன்னும் உற்சாகமாகப் பேசுவார்கள். அந்தக் கூலிப்பெண்களும் இதையெல்லாம் சட்டை செய்வதில்லை. பதிலுக்கு அவர்களும் சிரித்துக் கொண்டே பதில் சொல்லுவார்கள். இந்தச் செயல்கள், நடவடிக்கைகள் எதுவும் முத்துவுக்குப் பிடிக்க வில்லை. எல்லோருக்கும் அவனவன் மனைவி அழகு. முத்துவுக்கு அவன் மனைவி மிகவும் அழகு. எக்காரணம் கொண்டும் தன் மனைவியை அங்குக் கூட்டிவரக் கூடாது என எண்ணினான்.

அம்மா படுத்த படுக்கையாகிவிட்டாள். நல்ல மருத்துவம் பார்க்க முடியவில்லை. கடைசி காலத்தில் கஞ்சிதான் அவளுக்கு. பக்கத்துக் குடிசைகள் ஒவ்வொன்றாகக் காலியாகிக் கொண்டிருந்தன. ஊரைவிட்டுப் போய்விட்டார்கள். புல் பூண்டுகள் எல்லாம் காய்ந்து விட்டன.

ஞாயிற்றுக்கிழமை அம்மாவுக்குப் பக்கத்திலேயே இருந்தான். தட்டுத் தடுமாறிப் பேசினாள் கிழவி. கண்களை உருட்டி உருட்டிப் பார்த்தாள். அன்றைக்குக் காய்ச்சல் வேறு. நகரத்திற்குத் தூக்கிக்கொண்டுபோய், டாக்டரிடம் காட்டலாமா என முத்து நினைத்தான். கையிலே பணம் இல்லை. இன்னும் விற்க வீட்டில் ஏதாவது இருக்குமா என மேலேயும் கீழேயும் பார்த்தான். அலுமினியப் பாத்திரங் கள்தான் இருந்தன. அவற்றை யாரும் அடகுக்கு எடுத்துக் கொள்ள மாட்டார்கள். எப்பவோ கட்டிப்போட்ட அரை மூட்டை விதை நெல் அட்டாலியில் இருந்தது. முத்துவின் கண்கள் அட்டாலியைப் பார்த்தன. அவன் மனைவியும் அதைக் கவனித்தாள்.

கிழவி இருமிக்கொண்டிருந்தாள். முத்து பக்கத்தில் சென்று கேட்டான். “ ஏம்மா! எப்படியிருக்குது? என்னா பண்ணுது? “

“ ஒண்ணுமில்லடா, நான் நல்லாத்தான் இருக்கறேன். மூச்சு விடத்தான் கொஞ்சம் சிரமமா இருக்குது.”

“ தலையணையைத் தூக்கி வைக்கட்டுமா? மூச்சு விட கொஞ்சம் வசதியா இருக்கும். “

“ம்” என்றாள் கிழவி. தலையணை மீது பழைய சேலையை மடித்துப் போட்டு உயர்த்தி வைத்தான் முத்து.

கிழவியின் முகத்தில் ஏகப்பட்ட சுருக்கங்கள். மார்பு வற்றிப்போய், உடம்போடு ஒட்டிக் கிடந்தது. தலைமுடி நரைத்து, பஞ்சு போன்று மிருதுவாக இருந்தது. உடம் பிலே சக்தி இல்லை. நோய் நொடி ஏதும் இல்லை. வயது ஏற ஏற, உறுப்புகள் வலிமையை இழந்துகொண்டே வருகின்றன. தேய்பிறை நிலவைப் போலத் தேய்ந்துகொண்டே வருகிறாள்.

கிழவிக்குச் சந்தோசம். தன்னிடம் கேட்காமல் முத்து எதையும் செய்ததில்லை. சென்ற வருடம் மருமகள் அளவுக்கதிகமாக ரத்தப்போக்கு ஏற்பட்டுச் சாகக் கிடந் தாள். டாக்டரிடம் அழைத்துப் போக பணம் இல்லை.

முத்து அம்மாவிடம் கேட்டான். “ அம்மா! நகையை வித்துடலாமா? “ வேறு வழியில்லை என்பதை அறிந்திருந்தாள் கிழவி. “ வித்துடு “ என்றாள். நகைகளை விற்று மனைவியைக் காப்பாற்றினான்.

இரண்டு வருடமாக மழை இல்லை. மழை இருந்திருந்தால், உழுவார்கள். மானாவாரிப் பயிர் போடலாம். கடலைக்காய் ஊன்றலாம். குச்சிக் கிழங்கு நடலாம். அல்லது துவரை, உளுந்து போடலாம். வேலை கிடைக்கும். நாலுகாசு சம்பாதிக்கலாம். விளைவதில் விற்றது போக, வீட்டுக்கு வைத்துக் கொள்ளலாம். வீட்டுச் செலவுக்குப் பணம் இல்லாதபோது அம்மாவிடம் யோசனை கேட்டான்.

“பாத்திரங்களை விற்றுவிட்டு வா.. அப்புறம் வாங்கிக்கலாம். “ என்றாள் கிழவி. அந்தக்காலத்து பித்தளைக் கொப்பரை அண்டா. இருபது குடம் தண்ணீர் பிடிக்கும். கிழவிக்கு, அவளோட அம்மா சீதனமாகக் கொடுத்தது. எல்லாவற்றையும் விற்றாகி விட்டது. தற்போது விற்பதற்கு எதுவும் இல்லை. அட்டாலி மேல் விதை நெல் கட்டிக் கிடந்தது. அம்மாவுக்கு வைத்தியம் பார்ப்பதற்கென்றே இருந்திருக்குமோ?

அட்டாலிமேல் ஏறி மூட்டையை இறக்கினான். மனைவியும் அம்மாவும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். மூட்டையைத் தூசு தட்டினான்.

“ அம்மா இத வித்துட்டு வரேன். “ “ எதுக்குடா விக்கிற? “ என்று லேசாகக் கேட்டாள் கிழவி.

“உனக்கு வைத்தியம் பாக்கறதுக்கு.. “ “ வேண்டாண்டா, நான் நல்லாத்தான் இருக்கேன்.” முத்துவையும் மருமகளையும் அருகே வரும்படி கிழவி சைகை செய்தாள். இருவரும் அவள் சொல்வதைக் கேட்கக் கட்டிலருகே சென்றார்கள்.

“ எதுக்காகவும் விதை நெல்லை வித்துடாதீங்க.. திரும்பவும் மழை பெய்யும்டா “
——————————————————————————–

(தட்டச்சு உதவி : சிறகு ரவிச்சந்திரன்)

Series Navigationபாரதிதாசனின் குடும்பவிளக்குகால இயந்திரம்
author

Similar Posts

2 Comments

  1. Avatar
    jayashree shankar says:

    மதிப்பிற்குரிய பூமிபாலகன் அவர்களுக்கு,

    இந்தக் கதை மூலம்…வீட்டில் வயதிலும் அனுபவத்திலும்
    மூத்தவர்களிடம் கேட்டு ..செய்யவேண்டும்…என்றும்..
    அத்தனை கஷ்டத்திலும்..தனது தாயின் மருத்துவ
    செலவுக்கு விதை நெல்லையே விற்கத் துணிந்த
    பாசத்தையும்…எடுத்துக் காட்டுகிறது…”விதை நெல்”
    சொல்லிய பாடங்கள் நிறைய…மிகவும் உருக்கமாக
    கதை இருந்தாலும்…உண்மை அது தானே….மழை
    தானே ஆதாரம்….மனிதனுக்கும்…பூமிக்கும்…
    அருமையான நடையில் அமைந்த அர்த்தமுள்ள கதை.

    ஜெயஸ்ரீ ஷங்கர்.

Leave a Reply to லறீனா அப்துல் ஹக் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *