வியாசனின் ‘ காதல் பாதை ‘

This entry is part 19 of 45 in the series 4 மார்ச் 2012

பரோட்டா சூரி, இந்தப் படத்திற்கு கதை எழுதியிருக்க வேண்டும். அவர்தானே அத்தனை பரோட்டாக்களையும், ஒரே வாய்க்குள் தள்ளுபவர். அப்படித்தான் இருக்கிறது படம். முடிச்சுகளாகப் போட்டு, அவிழ்க்க முடியாமல் திணறும் இயக்குனர்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால் வியாசனுக்கு முடிச்சுகளே இல்லை அவிழ்க்க. எல்லாம் அம்மன் கோயில் வேப்ப மரம்போல, ஏராளமான கயிறுகள். நேர்ந்து கொண்டு கட்டிய கயிறுகள் என்ன ஆயிற்று என்று எந்த பக்தையும் மரத்தைப் போய் பார்ப்பதில்லை. அப்படியே இயக்குனரும்.
சாலையில் பங்க் வைத்து, செருப்பு தைக்கும் தனசேகர் ( வினோத்குமார்), கல்லூரியில் படிக்கும் பவித்ரா ( வித்யா) வுக்கு அவன் மேல் கண்டவுடன் காதல். ஏகத்துக்குக் குழந்தைத்தனமாக, அவன் குடித்த டீயைக் குடிக்கிறாள். அவனது மதிய உணவைச் சாப்பிடுகிறாள். காரணம்? சித்தியைக் கலியாணம் பண்ணிக்கொண்டு, அவளை பாட்டி வீட்டில் வளரச் செய்யும் தந்தையின் செயல். கதையில் எக்கச்சக்க திருப்பங்கள். தனாவை வெட்டச் செல்லும் முறைமாமன், அவனது நல்ல குணத்தைக் கண்டு உடனே திருந்தி, பவித்ராவை அவனுக்கே கலியாணம் செய்து வைக்கச் சொல்கிறான். இடைவேளைக்கு முன் ஆஸ்பத்திரி படுக்கையிலிருந்து ஒருவன் எழுந்து கீச்சு குரலில் ( அவனை தனசேகர் மண்டையில் அடித்ததால் அப்படி ஆகிப்போனதாம்) கத்திக் கொண்டு, தனசேகரை வெட்ட அடியாட்களுடன், காரில் துரத்துகிறான். அவனிடமே பவித்ராவின் தந்தை ( தலைவாசல் விஜய் ), பணம் கொடுத்து, தனாவைக் கொல்லச் சொல்கிறார். ஆனாலும், அன்னை சொல்லுக்காக உடனே மாறி, தனாவுக்கே பவித்ராவை கலியாணம் செய்ய சம்மதிக்கிறார். இடையில் பவித்ரா தனசேகருடன் ஊரை விட்டு ஓடி, சைக்கிளிலேயே ஆந்திரா வழியாக டெல்லி போய், தாஜ்மகால் வாசலில் தாலி கட்டச் சொல்லி தனாவை எழுப்ப, அவன் வயிற்றில் கத்தி குத்துடன் இறந்து போனது தெரிகிறது. பவித்ராவும் பட்டென்று உயிரை விடுகிறாள்.
‘ அடுத்த ஜென்மத்தில் உன் பாதம் நடக்கையில் நான் செருப் ‘ பூ ‘ வாக இருப்பேன்’ என்று கார்டு போட்டு கதையை முடிக்கிறார்கள்.
தனாவைத் துரத்தும் வில்லன் மற்றும் அடியாட்கள் அத்தனை பேரும் காமெடி பீஸ்கள். ஆனாலும் கடைசியில், கொடூரமாக அவனைக் குத்திக் கொன்று விடுகிறார்கள்.
என்ன தலை சுற்றுகிறதா? படித்ததற்கே தலை சுற்றினால், பார்த்த எனக்கு கோமாதான்.
பூ படத்துக்குப் பிறகு, எங்கேயோ போயிருக்க வேண்டிய எஸ் எஸ் குமரன், தேனீர் விடுதி என்று படம் இயக்கித் தேய்ந்து போனார். அதனால்தான் இம்மாதிரியான படங்களுக்கு இசை அமைக்க வேண்டிய கட்டாயம். கிடைத்த சான்ஸை முழுமையாகப் பயன்படுத்துகிறேன் பேர்வழி என்று, இண்டு இடுக்கிலெல்லாம் வாசித்து விடுகிறார். ஒன்றும் நினைவில் இல்லை.
ஒளிப்பதிவில் குறையில்லை. ஆனால் ஒலிப்பதிவு? எல்லோரும் முக்கடைத்தாற்போலவே பேசுகிறார்கள். அதுவும் புறநகரில் பார்த்தால், பாதி புரியவே இல்லை. அது சரி.. இம்மாதிரி லோ பட்ஜெட் படங்களுக்கு ரசூல் பூக்குட்டியையா வைக்க முடியும்.
தினமும், பத்து பொழுது போகாதவர்கள் பார்க்கும் படம், என்ன வசூல் செய்யும். என்ன லாபம் கிடைக்கும்?
படத்தின் ஒரே ஆறுதல் மன்சூர் அலிகான். கதை நாயகனின் தந்தையாக, குடிகாரராக வரும் அவர் செந்தமிழிலும் இங்கிலீஷிலும் பிச்சு உதறுகிறார். எல்லாம் ஷேக்ஸ்பியர் கோட்ஸ். ஆனால் அவரும் பாதியில் திருந்திக் காணாமல் போய்விடுகிறார். மக்கள் ரசிப்பது எதையும் தொடர மாட்டார் போலிருக்கிறது இயக்குனர்.
படத்தில் எந்த ஸ்டாரும் இல்லை. படத்துக்கும் தான்.
#
கொசுறு
அன்னை கருமாரியில் போஸ்டரை ஒட்டக்கூட இல்லை. அப்படியே பின் பண்ணியிருக் கிறார்கள். அவர்களுக்கே நம்பிக்கையில்லை படம் எவ்வளவு காட்சி ஓடும் என்று. அதனால் எடுக்க வசதியாக ஒட்டவேயில்லை.
படத்திற்கு காதல் (உ)பாதை என்று பெயர் வைத்திருக்கலாம். வியாசனுக்கு காதல். ரசிகனுக்கு உபாதை.
#

Series Navigationமலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை – 16கணையாழி பிப்.2012 இதழ் ஒரு பார்வை
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *