விலகியிருந்து பார்க்கக் கிடைக்கும் வெற்றி

0 minutes, 3 seconds Read
This entry is part 1 of 8 in the series 10 ஜூன் 2018

 

(லதா ராமகிருஷ்ணன்)

 

உருப்பெருக்கிக்கருவி, காந்தக்கல், ஒரு கணத்தில்

உடைந்த கண்ணாடியை மீண்டும் ஒன்றாக்கிவிடும்

புதுரக ஒட்டுபசை, அதிமதுர சகோதரத்துவ இசை

வேண்டும்போதெல்லாம் பெருகச்செய்யமுடிந்த அன்புவெள்ளம்

ஆங்காரப் புழுதிப்புயல் – இன்னும் ஏராளமானவற்றோடு

வெற்றியாளர்களை வலைவீசித் தேடித்தேடிக் கண்டெடுத்துக்

கொண்டவாறு சிலபலர்…..

 

 

பெற்றெடுத்த பிள்ளையாய் தத்தெடுத்து முத்தம் கொடுக்க

அல்லது குற்றேவல்காரராய் பாவித்து எத்தித் தள்ள.

 

 

இவர்களுடைய குரல்வளைகளிலிருந்தெல்லாம்

இடையறாது துருத்திக்கொண்டு வெளிக்கிளம்பும்

கால்களின் வளைநகங்கள்

கத்தியைக் காட்டிலும் கூர்மையானதும்,

கொடிய விடந்தோய்ந்ததுமாய்….

 

 

வரலாற்றுச்  சின்னமொன்றின் வயிற்றுப்பகுதியில்

படிந்திருக்கும்  சில ஒட்டுண்ணிகள்,

வெவ்வேறு ஊடகங்களில்

வாகாய்த் தெரியும்படியாக…….

 

 

அன்புமழையில் குளிப்பாட்டுவதாய்

ஜன்னியில் தள்ளிப் பிதற்றச் செய்து

சுரவேக உளறல்களையெல்லாம்

பொன்மொழிக்கையேடுகளாக்கி

பெரிய பெரிய அச்சுருக்களில்

சமூக வெளிகளெங்கும்

அமோகமாய் அப்பளம் சுட்டு வடை பொரித்து

வெற்றியாளருக்கு நெட்டி முறித்து

திருஷ்டி கழித்து

காலின் கீழ் குழிபறிப்பவைகளுமாக

விறுவிறுவென இயங்கிக்கொண்டிருக்கின்றன

வேறு சில.

 

 

வருடாவருடம் தண்ணித்துறை மார்க்கெட் கடையில்

கதை கட்டுரை கவிதைப் போட்டிகளில்

வெற்றிபெறுபவர்களுக்கான

பரிசுகளைத் தயாரிக்கச் சொல்லி

முன்பணம் கொடுக்கச் செல்லும் நேரம்

சின்னதும் பெரியதுமாய் அங்கே

அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் கோப்பைகளின்

மங்கிக்கொண்டே போகும் தங்கமுலாம்…….

விற்பனையாகாமலே தங்கிவிட்ட

விதவிதமான வடிவங்களிலான

பதக்கங்கள் ஷீல்டுகளைப்

பார்க்கநேரும் தருணங்களில்

பெறக் கிடைக்கும் போதிமரத்தடி வாசத்தில்

வீசும் தென்றலினூடாய் வெகுதொலைவில்

செல்ஃபி சகிதம் சுற்றுமுற்றும் பார்த்தபடியே

வெற்றியாளர்களைச் சேர்த்தணைத்து

இன்னும் இறுக்கமாய்ப்பற்றிக்கொள்வதில்

முற்றிலுமாய்த் தம்மை யிழந்து

மும்முரமாய், மூழ்கிக்கொண்டிருப்பவர்கள்

மங்கலாய்த் தெரிகிறார்கள்.

 

Series Navigationதிருவிழாக் கூட்டநெரிசலும் தொலைந்துபோகும் குழந்தைகளும்
author

ரிஷி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *