விஸ்வரூபம் – அத்தியாயம் எண்பது

This entry is part 27 of 35 in the series 11 மார்ச் 2012

1916 டிசம்பர் 31 நள வருஷம் மார்கழி 17 ஞாயிறு

பிரம்மஸ்ரீ வைத்தியநாத ஐயர் மற்றும் அவருடைய பாரியாள் மாதுஸ்ரீ கோமதி அம்மாள் இவர்களின் மேலான பார்வைக்கு வேண்டி, க்ஷெயார்களின் புத்ரன் மகாலிங்கய்யன் எழுதுகிற லிகிதம் இது. லண்டன் மகாபட்டணத்தில் ஏற்படுத்திய பெண்டல்வில் ஜெயிலில் இருந்து எழுதுகிறேன்.

என்னைப் பெற்றவளே, எனக்கு எல்லாமுமான தகப்பனாரே. இந்தப் பரிதாபமான சிசு சகல அசுத்தத்தோடும், உடம்பு நோக்காட்டோடும், மனசு பேதலித்தும் உங்கள் ரெண்டு பேரையும் ஆயிரம் தடவை தண்டனிட்டு கிழக்கு நோக்கி நமஸ்காரம் பண்ணி எழுத உட்கார்கிறேன். எனக்கு பிரத்யட்சமான தெய்வங்களாக இருந்தும், இருக்கப்பட்டவரைக்கும் மதிப்பு தெரியாமல், மரியாதை ஏதும் செலுத்தாமல் நான் உதாசீனம் பண்ணினேன் உங்கள் ரெண்டு பேரையும்.

என்னைக் கலாசாலைக்கு உடன்பிறந்தோனோடு அனுப்பினீர்கள். நல்ல வித்யாப்யாசத்தை ஏற்படுத்தி ஸ்வபுத்தியும், படிப்பதால் உண்டான ஞானமும் கூடிவர, ஊர் மெச்ச உன்னதமான உத்யோகத்தில் இருந்து துரைகளுக்கு ஊழியம் பண்ணி உய்யுமாறு எல்லா ஏற்பாடுகளையும் ஒரு குறைச்சலும் இல்லாமல் செய்து கொடுத்தீர்கள்.

சண்டித் தனம் பிடித்து ஒழுங்காகப் படிக்காமல், சகவாச தோஷத்தால் சீரழிந்து ஒன்றுக்கும் உருப்படாமல் நான் போனேன். இந்த சிநேகிதர்களின் உபயத்தால் மதுபானமும் செய்துவிட்டு ஒரு ராத்திரி சகதியில் விழுந்து புரண்ட கோலத்தில் வீட்டுக்கு வந்து சேர்ந்தேன். அம்மா ஒண்ணும் சொல்லாமல் தாரைதாரையாக கண்ணீர் வடித்து அழுதபடிக்கே, ராப்போஜனம் வேண்டாம் என்று தொட்டியில் களைந்து விட்டு கரப்பும் பாச்சையும் ஓடித் திரியும் சமையல்கட்டிலேயே படுத்து என்னைக் குறித்த விசனமே துணைக்கு இருக்க ராத்திரி பூரா விம்மி வெடித்துக் கொண்டிருந்ததை நான் எப்படி மறக்க முடியும்?

பொணம் தூக்கக் கூட லாயக்கில்லாம ஒரு பிள்ளையை பெத்தெடுத்திருக்கேனே என்று அப்பா அரற்றினாலும் என்னைக் கைதொட்டு அடிக்கக் கூட இல்லை. தம்பி நீலகண்டன் மாத்திரம் ஏண்டா பெரியம்பி இப்படி ரகளை பண்றே என்று மர ஸ்கேலால் என்னை முழங்காலில் தட்ட முற்பட்ட போது நான் இன்னும் பெருங்குரல் எடுத்து அவனை காது கூசுகிற வார்த்தைகளில் திட்டித் தீர்த்ததும், வாசல் திண்ணையிலேயே சாக்கடை ஈரவாடை அடிக்கும் வேஷ்டியும், சகதி அப்பிய குடுமியுமாக படுத்து நித்திரை போனதையும் கூட எப்படி மறக்க முடியும்?

நான் செய்த மேற்படி பாதகங்களுக்காகவே எனக்கு ஜீவ பரியந்தம் ஜெயிலில் இருக்க விதித்திருக்க வேண்டும். உங்கள் மனசு உருகி எனக்காக வருத்தப்பட வைத்த பாவத்துக்கு நான் சீக்கிரம் காலமாகும்போது ரௌராவாதி நரகங்கள் தயார் நிலையில் வைக்கப் பட்டிருந்தாலும் ஆச்சரியமில்லை. அத்தனைக்கு கிராதகன் நான்.

பதினேழு வயசுக்கு மேல், படிப்பு வராவிட்டாலும் இந்தப் பிள்ளை மாசம் பத்து ரூபாயோ இருபது ரூபாயோ சம்பாதித்து கஷ்ட ஜீவனத்துக்கு கொஞ்சம் மேலே அடுத்த வேளை சாப்பாடு பற்றி கிஞ்சித்தும் கவலையின்றி இருக்க வேண்டும் என்று நல்ல மனசோடு உத்தேசம் செய்தீர்கள். நம் பெந்துவும் பூஜ்ய தகப்பனாருமான உமக்குத் தாயாதி வழியில் ஒண்ணு விட்ட சகோதரனுமான அரசூர் சங்கரய்யர் மதராஸ் கருப்புப் பட்டணத்தில் ஸ்தாபிதம் செய்த புகையிலைக் கடையில் சிப்பந்தியாக உத்யோகம் பண்ணியும் வைத்தீர்கள். ஆயிரம் நமஸ்காரம் இதுக்கு.

இந்த பொடிக்கடை ஊழியனுக்கு சர்க்கார் உத்யோகஸ்தர், மிட்டா மிராசுதார், ஜவுளி வியாபாரி இப்படியான குடும்பத்தில் பெண் கிடைக்காது என்று உணர்ந்து கழுக்குன்றத்தில் ஏழைப்பட்ட குடும்பத்தில் வெகுளியும், நாலு எழுத்து படிக்காதவளும், அசடும் ஆனால் அத்தனைக்கத்தனை ரொம்ப நல்ல குணமும், சகல கஷ்டத்தையும் சகித்துக் கொண்டு ஜீவிதம் நடத்துவதில் யாதொரு புகார் இல்லாதவளுமான லலிதாம்பிகையைக் கல்யாணம் செய்து வைத்ததுக்கும் மாதா பிதாவான உங்களின் பாதாரவிந்தங்களில் சதா தெண்டனிட்டு எழுந்து நிற்கிறேன்.

எந்த பிரதியுபகாரமும் எதிர்பார்க்காமல் பெற்ற கடனுக்காக இந்த நாயேனைப் பொறுத்துக் கொண்டு சகல வசதியும் செய்து கொடுத்து, நான் கொடுக்கிற கஷ்டத்தையும் உண்டாக்குகிற மனக் கிலேசத்தையும் எல்லாம் பொறுத்துக் கொண்டு, என்னையும் ஒரு மனுஷனாக, சந்தான விருத்தி செய்து நல்லபடிக்கு ஆத்துக்காரியோடு ஜீவித்து அமாவாசையும், ஆவணி அவிட்டமும் கொண்டாடி எள்ளுருண்டை, அதிரசம் சாப்பிட்டு அக்கடா என்று திண்ணையில் சாய்ந்து போகிற நாளை கவலையில்லாமல் எண்ணிக் கொண்டு தாம்பூலம் மெல்ல உங்கள் ஆசீர்வாதத்தால் மட்டுமே எனக்கு வாய்த்தது.

எதைக் கொண்டு உங்களுக்கு இந்த எல்லையில்லாத கடாட்சத்துக்காக நெக்குருகி இதமான வார்த்தை சொல்லப் போகிறேன்? நான் இருக்கிற ஸ்திதிக்கு நீங்கள் மட்டும் இன்னும் உடம்பில் உசிரைத் தக்க வைத்துக் கொண்டு மாடப் புரையிலோ, வீட்டு ரேழியிலோ ஜீவித்திருந்தால் காறி உமிழ்ந்து செத்துப் போக விதிச்சிருப்பீர்கள்.

கட்டின பெண்டாட்டியை தூரமீனாளாக கிழிஞ்ச வஸ்திரத்தோடு கிணற்றடியில் படுக்கவிட்டு, பகலிலே ஒருத்தி, ராத்திரி இன்னொருத்தி, கழுக்குன்றத்திலே ஒருத்தி, கரும்புத் தோட்டத்திலே ஒரு தடிச்சி, அடுத்தவன் பெண்டாட்டியான இன்னொரு குட்டி என்று மோகாவஸ்தையில் மூழ்கி ஜீவிதத்தை சீரழிச்சுக் கொண்டதுதான் நீங்கள் செய்த பேருதவிக்கு உங்களுக்கு நான் தீர்த்த கடன்.

ஒரு தடவை காராகிரஹம் போய், சாவை பக்கத்தில் பார்த்து க்ஷேமலாபம் விசாரித்து விட்டு திரும்ப வந்த இந்த உங்களோட பெரியம்பி மகாலிங்கம் இப்போ தீவாந்தர சிட்சையிலே வெள்ளைக்கார தேசத்துலே ஜெயில்லே கிடக்க ஆரம்பிச்சு இதோட நாலு மாசம் முடியறது. வெள்ளைக்கார துரையைக் கொன்னு போட்டதா குற்றச்சாட்டு. நான் இல்லே அந்த குரூரமான கொலையைச் செஞ்சதுன்னு என்ன மன்னாடினாலும் ஜட்ஜி பிரபுவோ வக்கீல்களோ, போலீஸ் உத்தியோகஸ்தர்களோ காதில் போட்டுக் கொள்ளாமல் இங்கே கொண்டு வந்து தள்ளி விட்டார்கள். அரைக்கிழவன் வயசில் இந்த ஆயுசு முடியணும்னு தலைவிதி.

என் தங்கமான அம்மா, பரதேவதே, ஸ்படிகம் போல தெளிந்த மனசுக்கும், குறைவில்லாத பிரியத்துக்கும் சொந்தக்காரி. நம்பு என்னையம்மா. நான் யாரையும் கொலை செய்யலே. அப்பா, என்னைத் தோளிலும் மார்பிலும் தூக்கிச் சுமந்து வளர்த்து என் பொருட்டு எல்லா அவமானத்தையும் பொறுத்துக் கொண்ட மகா தெய்வமே, என்னை நம்பு. உங்க பிள்ளை குடிப்பான். குட்டிகளோடு கூத்தடிப்பான். ஒண்ணுக்கும் பிரயோஜனமில்லாத பொணம் தூக்கக் கூட லாயக்கில்லாத பிரம்மஹத்தியா, இழவு வீட்டுலே ஒத்தையனா சாப்பிட்டு பிரேதத்தோட பிரதிநிதியா காசு வாங்கிண்டு திரும்பக்கூட அருகதை இல்லாதவன் இவன்.

இன்னும் சொல்லப்போனா, கழுக்குன்றத்துலே ரெட்டியக் கன்யகையை மானபங்கப் படுத்தி மதறாஸ் பட்டிண ஜெயில்லே போட்டு தெய்வாதீனமா வெளியிலே வந்தபோதே உங்க பெரியம்பி மகாலிங்கம் செத்துப் போயிட்டான். கொஞ்ச நாள் ரெட்டியாத் திரிஞ்சான். இப்போ இவனை ஜெயில் ரிஜிஸ்தர்லே சாமின்னு பதிஞ்சு இருக்கு. வெறும் சாமி. புழு மாதிரி, பூச்சி மாதிரி ஒரு ஜீவன்,

பீட்டர் மெக்கன்ஸி துரையை நான் எதுக்காகக் கொல்லணும்? மகாலட்சுமி மாதிரி அவனோட சம்சாரம், இந்தியாக்கார, அதுவும் நம்ம தமிழ்க்கார மாமியைப் பார்த்தாலே ரெண்டு பேரையும் ஒண்ணா நிக்க வச்சு சாஷ்டாங்கமாக் காலில் விழுந்து கும்பிட்டு ஆசீர்வாதம் வாங்கணும் போல இருக்கும். இத்தனைக்கும் ஒரு நாள் தான் அவாளோட பழக்கம். யார் என்னன்னு கேட்டப்போ முழுப் பொய் சொல்லி ஆளே அடையாளம் தெரியாதபடி காட்டிண்டாலும், கல்யாண ஆண்டு நிறைவுன்னு சொல்லி ஒரு குவளை பால்பாயசமும், லண்டன் பட்டணத்திலேயே அதி ஆச்சரியமா, மல்லிப்பூ மாதிரி இட்லியுமாக வயித்துக்கு குளிரக் குளிர ஆகாரம் கொடுத்தாளே அந்த மகாராஜிக்கு நான் கெட்டது நினைப்பேனா?

என்ன செய்ய, அந்த நாள் முடிஞ்சு அடுத்த நாள் ஆரம்பிக்கறதுக்குள்ளே அவளோட ஆத்துக்காரன் உயிர் போயிடுத்து. அவனை வதைச்சவன் இந்த ரெட்டியாகப்பட்ட மகாலிங்கமய்யன்னு லோகமே நம்பிண்டு இருக்கு.

விதி. வேறே என்ன சொல்ல? சின்ன வயசிலே கண்ணாடியிலே கருப்புப் புகை பூசி சூரிய கிரகணம் பார்த்தோமே, அந்தப் பொழுதிலேயே சகல பீடையும் எனக்குள்ளே எறங்கியாச்சு. பாவாடை தரிச்ச பாதிரிகள் சொல்லிக் கொடுத்த சயன்சும், க்ஷேத்ர கணிதமும், பூகோளமும் நாசமாப் போக, நான் நரகத்துக்குள்ளே விழ ஆரம்பிச்சது இன்னும் தலை குப்புறத்தான் உள்ளே போய்ண்டு இருக்கேன்.

கரும்புத் தோட்டத்திலே களவாணித்தனம் பண்ணி தப்பிச்சு ஓட வைச்சது, யுத்தத்திலே மாட்டிண்டு உசிரைக் கையிலே பிடிச்சபடி அலைஞ்சது, சென்னைப்பட்டணம் போகணும்னு கப்பல் ஏறி லண்டன்லே வந்து இறங்கினது எல்லாமே என் தலைவிதிதான்.

விதியில்லாம வேறே என்ன என் அம்மா, தேமேன்னு மணிக் கூண்டு பக்கம் பிச்சை எடுத்துக் காசு தண்டிண்டு இருந்தவனை வியாபாரம் செய்யலாம்னு ஆசை காட்டினது. வியாபாரமும் தனியா செய்ய வேண்டாம்னு கூட்டாளி தேடினேனே. என்ன முட்டாள்தனம்? அதுவும் இந்த ஒத்தக் கையனை எல்லாமுமா நினைச்சு இவனோடு மத்த வேலையை எல்லாம் விட்டுட்டுப் புறப்பட்டேனே. தப்பாச்சே?

கொலைக்கும் அஞ்சாத அந்த கிராதகன் என் கையிலே கத்தியைத் திணிச்சு கொலைகாரனாக்கி எங்கேயோ ஓடிப் போய்ட்டான். அவன் தலையிலே தீர்க்கமா நல்லபடிக்கு இங்கிலீஷ்லே எழுதி வச்சிருக்கும்.

அந்த ஜேம்ஸ் பயலோடு கென்சிங்க்டன் போனேனே. வயிறு நிறையச் சாப்பிட்டு வெளியே வந்தபோது ஜேம்ஸ் ரொம்ப சந்தோஷமாத்தான் என் கிட்டே பேசிண்டு வந்தான். வீட்டுக்குள்ளே இருந்து எஜமானி அம்மா அவனை எதுக்கோ கூப்பிட்டா அப்போ. நீ நில்லு ரெட்டி, என்னன்னு போய்க் கேட்டுட்டு வரேன். கிப்பருக்கோ வெண்ணைக் கட்டிக்கோ இருக்கும்னு சொல்லிட்டு உள்ளே ஓடினான் ஜேம்ஸ். அவன் கதவு மறைவிலே வச்சு சமையல்கட்டு சுத்துக்காரியம் பண்ற கேத்திக்கு நான் பார்த்துண்டு இருக்கறபோதே நாலஞ்சு முத்தம் கொடுத்துட்டான். இன்னும் அரைமணி நேரம் இங்கே இருந்தா. வேண்டாம். பெத்தவாள் கிட்டே பிள்ளைகள் பேசற சமாசாரம் இல்லை அதெல்லாம்.

உள்ளே போய்ட்டு வரும்போது கையிலே பழுப்புக் காகிதத்திலே கட்டின ஒரு மூட்டையோட வந்தான் ஜேம்ஸ். என்னன்னு விசாரிச்சேன். அதுக்கு பதிலே சொல்லாம, ராத்திரி பத்து மணிக்கு வீட்டுலே விருந்து முடிஞ்சு பாத்திரம் பண்டம் கழுவிக் கொடுக்க வரச் சொல்லியிருக்காங்க எஜமானியம்மான்னு சொன்னான்.

அதை ஏன் அவனைக் கூப்பிட்டு அந்தம்மா சொல்ல வேணும்னு புரியலை. நீயும் வந்துடு, ஒத்தைக்கையா, ஒத்தையனா அத்தனை எச்சில் தட்டையும் கழுவறது கஷ்டம். நீதான் பாக்கறியே. இங்கே ஒவ்வொரு துரைத் தடியனும் திங்கற தீனி. ஆளாளுக்கு ஒரு முழுக் கோழியையும், பாதி ஆட்டையும் மென்னு தின்னுட்டு வீடு முழுக்க எலும்பாத் துப்பி வச்சுடுவாங்க. போதாக்குறைக்கு சாராயம். விருந்து நடந்த பிற்பாடு பார்த்தா, யுத்தம் முடிஞ்ச பூமி மாதிரி நாறிக் கிடக்கும்.

வியாபாரத்தில் கூட்டுன்னு அஸ்திவாரம் போட்டது இப்படி குற்றேவல் செய்யறதுலே கூட்டு நிக்கறதா மாறினபோதே நான் முழிச்சுண்டிருக்க வேண்டாமா? என்ன சொல்ல? கொஞ்சம் அசந்துட்டேன் அம்மா. அப்பா சொன்னபடிக்கு ஒழுங்கா பள்ளிக்கூடம் போய் ஒழுங்கா நாலெழுத்து படிச்சிருந்தா இதையெல்லாம் யோஜிச்சு முடிவு எடுக்கற புத்தி இருந்திருக்கும். வாய்க்கலையே.

எட்டு மணிக்குக் கிளம்பி பத்து மணிக்குப் போய் நிக்கலாம்னு சொன்ன அந்தப் பேர்வழி கிளம்பினதோ ராத்திரி பதினோரு மணிக்கு. பாதாள ரயில், சாரட் ஒரு மண்ணாங்கட்டியும் இல்லாத நேரம். தூங்கிண்டு இருந்த என்னை தட்டி எழுப்பி, வா போகலாம்னதும் ஒரு பேச்சு மறுபேச்சு இல்லாம நான் கிளம்பினேன்.விதி விதி.

கோவண்ட் கார்டனுக்கு மூட்டை ஏத்திப் போன வண்டியிலே முட்டைக்கோஸ் மூட்டைக்கு மேலே உக்கார்ந்து ஒரு யாத்திரை. அப்புறம் ஆள் அரவம் இல்லாத ஏர்ள்ஸ் கோர்ட் பாதாள ரயில் ஸ்டேஷன் வாசல்லே அவனோட பிரியமான சிநேகிதன்னு யாரோ ஒருத்தனை பரிச்சயம் பண்ணி வச்சான். அவனும் நம்ம கூட வரப் போறான்னான். என்னடா, புதுசு புதுசா ஆட்களைக் கூட்டிண்டு கென்சிங்க்டன்லே ஒரு பிரபு மாளிகைக்கு அர்த்த ராத்திரிக்குப் போறோமே, இது சரிதானான்னு கேட்டிருக்க வேண்டாமா? எங்கே கேட்க விட்டான்? அந்த ராத்திரியிலும் மட்ட மல்லாக்கத் திறந்து இருந்த ஏர்ள்ஸ் கோர்ட் மதுபானக் கடையிலே என்னையும் முட்ட முட்டக் குடிக்க வச்சுட்டான்.

ஜேம்ஸ் சிநேகிதன் ஓட்டிண்டு வந்த ஒத்தைக் குதிரை வண்டியிலே உட்கார்ந்து ஒரு வழியா கென்சிங்க்டன் வந்து சேர்ந்தபோது இடமே இருளோன்னு கிடந்தது. தூங்கி இருப்பாங்கடா ஜேம்ஸே. போய்ட்டு விடிகாலையிலே வந்து பத்து பாத்திரம் தேச்சுக் கொடுத்துடலாம். தப்பா நினைக்க மாட்டா அந்த புண்யாத்மான்னு சொல்லிப் பார்த்தேன். ஒத்தக் கையன் காதுலேயே வாங்கிக்கலே.

பின்னாடி வாசல் திறந்துதான் இருக்கும். கேத்தியும் மீதி வேலைக்கு இருக்கப்பட்ட சிப்பந்திகளும் வேலையா இருப்பாங்க. நாமளும் போய்க் கை கொடுத்தா சீக்கிரம் முடிச்சுட்டு கிளம்பிடலாம்னான் ஜேம்ஸ், அவனை விட அவன் சிநேகிதன் இன்னும் துடிப்பா இருந்தான். அந்நிய கிரஹத்திலே நுழையறதிலே அப்படி என்ன இஷ்டமோ அந்தக் கடன்காரனுக்கு?

நீ இங்கேயே இரு, வண்டிக் குதிரை ஓடிடாம லகானைப் பிடிச்சுண்டு நில்லு. நாங்க உள்ளே என்ன ஸ்திதியிலே இருக்குன்னு பாத்துண்ணு வந்து உன்னையும் அழைச்சுப் போறோம்னு போகிற போக்கிலே சொல்லிட்டு பின் வாசல் பக்கம் நடந்தான் அந்த ஜேம்ஸ். என் தோள்லே எதோ பல்லி விழுந்த மாதிரி சொத்-துன்னு தட்டிட்டு சிநேகித எழவும் போயாச்சு.

ராத்திரியிலே தூக்கக் கலக்கமும், உடம்பு முழுக்க ஏர்ள்ஸ் கோர்ட் கடையில் ஊத்திக் கொடுத்த பிராந்தி உண்டாக்கி விட்ட போதையுமா நான் குதிரைக்கு காவலா, குதிரை எனக்குக் காவலான்னு தெரியாம நிண்ணுண்டே இருந்தேன். அப்படியே தூங்கிட்டேன் போலே இருக்கு.

கண் முழிச்சுப் பார்த்தா என் கையிலே கத்தி இருக்கு. அது முழுக்க கோழி அறுத்த மாதிரி ரத்தம். இன்னும் உள்ளே விருந்து சமையல் முடியலியா?

திரும்பிப் பார்த்தேன். ஒரே விரட்டா விரட்டிண்டு அந்தக் கருப்புக் குதிரை வண்டி இருட்டுலே ஓடி மறைஞ்சுது. வீட்டுக்குள்ளே எஜமானி கத்தற சத்தம்.

தாமஸ் துரை கத்தியாலே குத்திக் கொலை செய்யப்பட்டார். கத்தியைப் பிடிச்சுண்டு வீட்டு வாசல்லேயே கொலைகாரன். அந்நிய நாட்டுக்காரன். காலையிலே வீட்டுக்கு வந்துட்டுப் போனவன். இவன் தான்.

இந்த ஜெயில் இருட்டுலே வந்து விழுந்தேன்.

போன ஜன்மத்துலேயோ இந்த ஜன்மத்திலே இத்தனை நாள் துராத்மாவா நடந்ததுக்கோ இன்னிக்கு தண்டனை.

ஒரு மாசம் கேஸ் விசாரணை நடந்தது. எஜமானியிலே இருந்து காத்தி வரைக்கும் வந்து சாட்சி சொன்னா. ஜேம்ஸோட பொண்டாட்டி மரியா, அவன் மாமியார் செவிட்டுக் கிழவின்னு எத்தனையோ பேர். யாரும் என்னைப் பத்தி ஒசத்தியா, வேண்டாம் அப்பாவி மனுஷன்னு கூடச் சொல்லலே.

அந்த ஒத்தைக் கையன் ராத்திரி கண்முழிச்சு நாடகமா நடிச்சான்? என்னையும் கூடக் கூட்டிண்டு போய் மாதா கோவில் பூஜைப் பாத்திரத்தை எல்லாம் இல்லே ஜன்னலை ஒடைச்சுத் திறந்து திருடிண்டு வந்தான் போக்கிரி? அபிஷ்டு மாதிரி அவனுக்கு ஜாக்கிரதையா பந்தோபஸ்து கொடுத்தது போறாதுன்னு அவன் திருடின வெள்ளிப் பாத்திர வகையறாவை எல்லாம் மூட்டையாத் தூக்கிண்டு நாடகக் கொட்டகைக்கு அவனோடு போனேனே இப்படியுமா நான் அடிமுட்டாளா இருப்பேன்?

அந்தப் பாத்திரம் எல்லாம் எங்கேன்னு கேட்டு ஆசனத் துவாரத்திலே பழுக்கக் காய்ச்சின இரும்புக் குச்சியைச் செருகினான் போலீஸ்காரன். அம்மா, அம்மான்னு தான் கூப்பிட்டேன். வேறே யாரைச் சொல்லி அழ முடியும்? பாத்திரத்தை அங்கேயா மறைச்சு வச்சிருக்கேன்? உள்ளே எல்லாம் ரணமாப் போனது இன்னமும் வலிக்கறது என் அம்மா. ரொம்ப வலிக்கறது பெரியம்பிக்கு.

என்னமா என் மேலே குத்தம் மேலே குத்தமா அடுக்கினா துரைகள் எல்லாரும்.

இருபத்தஞ்சாவது கல்யாண ஆண்டு நிறைவுக்கு துரை பொண்டாட்டிக்குக் கொடுத்த வைர அட்டிகையை நான் கள்ளத்தனமா ராத்திரியிலே வீட்டுக்குள்ளே அத்து மீறிப் புகுந்து பீரோக்கு உள்ளே இருந்து களவாடி இருக்கேன். அந்த பீரோவை காலையிலே சமையல் கட்டுலே ஒத்தாசை செய்யும்போதே பாத்து வச்சுண்டதாலே சுலபமா திறந்து ஆபரணத்தை எடுத்துட்டேன்.

அதைக் கையிலே எடுத்தபடிக்கு திரும்ப வெளியே போறபோது துரை முழிச்சுண்டு சயன கிரஹத்துலே இருந்து துப்பாக்கியோட வந்துட்டார். அவர் சுடறதுக்கு முந்தி சமையல் கட்டுலே மாமிசம் நறுக்க வச்சிருந்த கத்தியை வச்சு நான் அவர் கழுத்தை அறுத்து போதாக் குறைக்கு நெஞ்சிலும் நாலைஞ்சு தடவை கத்தியைப் பாய்ச்சி கொலை பண்ணிட்டேன். இல்லேன்னா என் சிநேகிதங்கள் இப்படிச் செய்யறதுக்கு வழி பண்ணிக் கொடுத்தேன்.

என் கூட்டாளிகளை நகையோடு அனுப்பிட்டு நானும் தப்பிச்சு ஓடற முந்தி மாட்டியாச்சு. கொலைகாரன். கொலைகாரன். அப்பா, அப்படித்தான் கூப்பிடறா.

பனிரெண்டு வருஷம் ஜெயில் வாசம். கொலை செஞ்சேன்னு நிரூபிக்காவிட்டாலும், அதுக்கு சகல விதத்திலும் உடந்தையா இருந்த குற்றம்.

குறையும்கற பேச்சுக்கே இடமில்லைன்னுட்டார் ஜட்ஜ் பிரபு. கெட்டதிலும் கொஞ்சம் போல நல்ல வேளை. தீவாந்திர சிட்சையா ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பாமல் இருந்ததுக்காக அந்த ஜட்ஜி பிரபு இருக்கப்பட்ட திசைக்கு தினமும் நான் நமஸ்காரம் செய்யறேன்.

ஜெயில்லே என்னை பார்க்க ஒரே ஒரு தடவை எஜமானி வந்தா. அவளைப் பார்த்ததும் கண்ணுலே கண்ணீர் பொங்கிப் பிரவாகமா வந்தது. என்ன வனப்பா, சுமங்கலியா, சிரியும் கும்மாளியுமா இருந்தா. எப்படி ஆகிட்டா இப்போ.

ஏன் என் தாமஸைக் கொன்னே?

அவள் இங்கிலீஷில் கேட்டாள்.

எனக்கு அதுக்கு மேலேயும் வேஷம் போட முடியலே.

எஜமானி, நம்புங்கோ என்னை, நான் கொல்லலே. நான் மதராஸ் பட்டிண பிராமணன். நேவிகேஷன் கிளார்க் வைத்தியநாத ஐயர் சீமந்த புத்ரன். எல்லா அட்டூழியமும் பண்ணி இருக்கேன். கொலை மட்டும் நான் செய்யலே. அதுக்கான மனோதிடமோ, காரணமோ எங்கிட்டே இல்லே.

சீமாட்டி ஒரு நிமிடம் அதிர்ந்து தான் போனாள் அம்மா. கம்பியைப் பிடிச்சபடி என்னையே பார்த்தபடி நின்னா. அப்புறம் மெதுவா தமிழ்லே சொன்னா.

தாமஸை கொன்னிருக்க வேண்டாமே.

அவள் இடத்தை விட்டு கண்ணைக் கைக்குட்டையால் தொடச்சிண்டு போனதைக் கடைசியாப் பார்த்தது அன்னிக்குத்தான்.

ஓய் மகாலிங்கய்யர், சௌக்கியமா? என் அம்மா அஸ்திக் கலசம் என்ன ஆச்சுன்னு விசாரிச்சீரா ஓய்?

யாரோ என் ஜெயில் அறைக்குள்ளேஎ ஓரமா மல்லாந்து படுத்துண்டு எகத்தாளம் பண்ற சத்தம்.

மலையாள பிராமணன். கழுக்குன்றத்துலே இருந்து இங்கே வரைக்கும் என்னையே தொடர்ந்து வந்துண்டு இருக்கப்பட்டவன்.

இப்ப நீயும் நானும் ஒண்ணுதான் ஓய். இருக்கோமா இல்லையான்னு நமக்கும் தெரியாது. நம்மைப் படைச்சவனுக்கும் தெரியாது. போறது படுத்துக்கும்.

அவன் ஓரமாகத் தூங்கிப் போனான்.

அப்பா, அவன் யாரா இருக்கும்? அம்மா, உனக்குத் தெரியுமோ?

கடுதாசு தீர்ந்து போச்சு. கான்ஸ்டபிள் இதுக்கு மேலே தரமாட்டேன்னு கெட்ட வார்த்தை சொல்லித் திட்டறான். அப்பா, அம்மா, நான் எப்படியோ கெட்டொழியறேன். உங்க பேரன், அதான் எனக்கும் லோலாச்சிக்கும் பிறந்த பிள்ளள வைத்தாஸ் நன்னா இருக்கணும்னு ஆசீர்வாதம் மட்டும் பண்ணுங்கோ. தயவாகட்டும். இந்த பாவிக்கு பெத்தவா செய்யற பெரிய உபகாரம் அது. செய்வேளா? முடிச்சுக்கறேன்.

பெரியம்பி மகாலிங்கம்

(தொடரும்)

Series Navigationவாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள் -3வழிச் செலவு
இரா முருகன்

இரா முருகன்

Similar Posts

2 Comments

  1. Avatar
    era.murukan says:

    Pl read லண்டன் மகாபட்டணத்தில் ஏற்படுத்திய பெண்டல்வில் ஜெயிலில் இருந்து as லண்டன் மகாபட்டணத்தில் ஏற்படுத்திய பெண்டன்வில் ஜெயிலில் இருந்து. (Pentonville)

  2. Avatar
    துளசி கோபால் says:

    அச்சச்சோ….. கொலையுண்டது நம்ம தெரிசாவின் புருஷன் என்றால் அவன் பெயர் பீட்டர் இல்லையோ?

    //ஏன் என் தாமஸைக் கொன்னே?// ன்னு கேக்கறாள்?

Leave a Reply to era.murukan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *