விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்தி ரெண்டு

This entry is part 41 of 42 in the series 25 மார்ச் 2012

1927 ஃபெப்ருவரி 27 அக்ஷய மாசி 15 ஞாயிறு

நான். நான் தான். மகாலிங்கய்யன். வரதராஜ ரெட்டி. எவனுமில்லை.

ஸ்திரி சம்போகத்திலும், ஜெயிலிலும், பிச்சை எடுப்பதிலும், தெய்வம் தொடங்கி நான் தெண்டனிட வேண்டிய, பிரியம் காட்ட விதிக்கப்பட்ட, இக்கிணியூண்டாவது எனக்கு வேண்டப்பட்டவர்களாக நான் நினைக்கிற மனுஷர்கள் வரை அநேகம் பேருக்குக் கடுதாசி எழுதியும் ஒரு ஜீவிய காலம் முழுசையும் போக்கினவன்.

இன்னும் இது பாக்கி இருக்கா, எப்போ எப்படி முடியும் என்பதொண்ணும் தெரியாது. தெரிஞ்சு என்ன ஆகப் போறது? காகிதத்தைப் பார்த்தால் மட்டும் எழுது எழுது என்று மனசு படபடக்கிறதும் கை துருதுருக்கிறதும் மட்டும் நிற்கவில்லை. சைனா பஜாரில் இதற்காகவே ரெண்டு பெருமாள் செட்டி பென்சில் வாங்கிக் கொண்டேன். ஆமா, நான் மெட்ராஸ் வந்தாகி விட்டது. யாருக்கு இதைக் கடுதாசி எழுதிச் சொல்ல வேண்டியது? தெரியலே. எனக்கே எனக்காக இருக்கும்.

பெண்ட்வில் ஜெயிலில் இருந்து என்னை மேளதாளம் இல்லாமல், மாலை மரியாதை கிட்டாமல், நாலஞ்சு சுமங்கலிப் பொண்டுகள் ஆரத்தி எடுத்து சோபானம் சோபானம் பாடாமல் வெளியே போடா புழுத்த நாயே என்று துரத்தி விட்டது நாலு வருஷம் முந்தி. உள்ளே போகும் போது போட்டுக் கொண்டு போன கால் சராயையும், குளிருக்கு இதமாகப் போர்த்தியிருந்த கம்பளித் துண்டு, பொத்தல் குடை, அழுக்கான நீளக் கோட்டு, ஓரத்தில் கிழிந்த தொப்பி ஆகிய ஆஸ்தி பூஸ்திகளையும் என்னை காராக்ரஹத்தில் கொலைகாரன் என்று அடைத்து வைத்திருந்த காலம் முழுசும் போற்றிப் பாதுகாத்து பத்திரமாக ஒப்படைத்து ஏழெட்டு ரிஜிஸ்தரில் ரேகை புரட்டிக் கைநாட்டு வாங்கிக்கொண்டார்கள்.

ஜெயிலில் அதுவும் இதுவும் செய்து சம்பாதித்த வகையில் இருநூறு பவுண்ட் பணத்தையும் ராஜா தலை போட்ட காகித உறையில் வைச்சுக் கொடுத்தார்கள்.

அப்போ நான் கேட்டேன். இந்தக் கோட்டுப் பையில் பத்து பவுண்ட் பணம் காசு ஒரு தோல்பையில் முடித்து வைத்திருந்தேனே. அது கிட்டுமா.

சாமி, நீ மகா பெரிய கள்ளனடா. இன்னொரு நிமிஷம் என் முன்னால் அற்ப வார்த்தை சொல்லிக் கொண்டு நிற்காதே. நிற்கிற பட்சத்தில் சூப்ரண்ட் துரையைக் கொலை செய்ய யத்தனித்ததுக்காக உன்னை உடனே கைதாக்கி திரும்ப அடைச்சு தூக்கு மாட்ட வழி செஞ்சுடுவேன்.

போலீஸ்காரன் சிரிப்பும் நையாண்டியுமாகச் சொன்னபடி தோளில் கையை வைத்து வெளியே உந்தித் தள்ளினான். டெபுடி சூப்ரண்ட் துரை என்னைத் திரும்பக் கூப்பிட்டு என் சட்டைப் பையில் ரெண்டு பவுண்ட் காசுகளைப் போட்டுத் திருப்தியா என்று கேட்டார். கேட்கிறது யார் கல்யாணியா, லோலாவா – பரம திருப்தி, இன்னொரு தடவை ஆரம்பிக்கலாமான்னு இந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல? மஞ்சள் காரை படிந்த பல்லோடு சிரிக்கிற நெஞ்செலும்பு தெரிகிற வெள்ளைக்காரன். பிச்சைக்காரனுக்கு ரெண்டு பவுண்ட் தர்மம் செய்த துரை.

ஆனாலும் இவன் கொடுத்த ரெண்டு பவுண்டுக்கு உரித்தான ஈஸ்வர கிருபை கிட்டட்டும். என் பத்து பவுண்டில் ரெண்டைக் கழித்துக் கொண்டு மீதி எட்டு பவுண்ட் இந்த தடியன்களுக்கு நேர்ந்து விட்டதாகப் போய்த் தொலையட்டும். இங்கே கிட்டிய இருநூறு பவுண்ட் இருக்கட்டும். பத்து வருஷம் லண்டன் பாலத்துக்கு அடியில் பிருஷ்டம் தேய உட்கார்ந்து யாசகம் கேட்டு நான் சேர்த்து வைத்த பணம் காசு என்ன ஆச்சு?

ஒரு ஷில்லிங்குக்கு ரொட்டி, வெறும் ரொட்டி மாத்திரம் வாங்கி அரண்மனைக்கு முன்னால் கிரீன்பார்க் பாதாள ரயில் நிலைய வாசலில் உட்கார்ந்து மொச்சு மொச்சு என்று முழுக்கத் தின்று தீர்த்தேன். எதிர்த்த தோட்டத்தில் செடிக்கு விட்டுக் கொண்டிருந்த குளிர்ந்த ஜலத்தைக் கையைக் குவித்து வாங்கிக் குடித்தேன். மகாராஜா சவுக்கியமா என்று அரண்மனை ஜன்னலைப் பார்த்துக் கேட்டேன். சவுக்கியமாகத் தான் இருப்பார். நான் கஷ்டப் படுகிறேனே அதனால்.

ஊரே ஒரு யுத்தம் முடிந்த ஆயாசம் தீரும் முன்னால் அடுத்த யுத்தத்துக்குத் தயாராகிக் கொண்டிருந்ததது. அது இந்த லோகம் முழுசையும் பாதிக்கும் என்றும் யுத்தம் நிற்கிறபோது பாதி பூமி மண்டலமும் அங்கே சுவாசித்துக்க் கொண்டிருக்கிற ஜனங்களும் இருந்த இடம் தெரியாமல் அடைந்து போவார்கள் என்றும் காப்பிக் கடையில் பேசிக் கொண்டதை கேட்டபடி பாதாளரயில் பிடிக்க இறங்கினேன். பிக்காடலி கடந்து டெர்மினஸ், அங்கேயிருந்து டவர் பிரிட்ஜ் போய் இறங்க வேண்டும்.

என்னமோ பிறவியிலேயே வெள்ளைக்காரத் துரையாக இங்கேயே பிறந்து இப்படி சுற்றித் திரிந்து சுகபோகமாக ஜீவித்துக் கொண்டிருப்பது போல் நினைப்பு. துரை எதுக்கு பாதாளரயிலைப் பிடிக்கணும்?

சரி வேண்டாம். லண்டன் பட்டணத்தில் போக்கு வரத்து இத்தனை வருஷம் இருட்டு ஜெயிலில் கிடந்தாலும், வெளிச்சத்துக்கு வந்ததும் இதோ இதோ என்று மறக்காமல் மனசில் ஓடி வந்து நிக்கறதே. அந்த கர்வமாவது இருந்துவிட்டுப் போகட்டும் என்று நினைத்தபடி என் பழைய பேட்டைக்கு வந்து சேர்ந்தேன்.

ஊர் உலகம் எல்லாம் மாறும்போது டவர் பிரிட்ஜ் குச்சு குடிசைப் பிரதேசம் மட்டும் மாறாமல் இருக்குமா என்ன? நாலைந்து தடவை பிரதட்சிணமாகவும் அப்பிரதட்சணமாகவும் அங்கே திரிந்து இடத்தைக் கண்டுபிடித்தேன்.

புதுசாக நாலைந்து சர்க்கார் ஆபீஸ் அங்கே எழுப்பி காகிதத்தை ரொப்பிக் காசு பார்த்துக் கொண்டு துரைமார்கள் சுகஜீவனம் நடத்தி வந்திருப்பதாகத் தெரிந்தது. நல்ல வேளையாக நான் இருந்த அந்த முடுக்குச் சந்தில் ஒரு சும்பனும் ராஜாங்க மர ஜாமானைத் தேய்க்கிறேன் பேர்வழி என்று பேப்பரும் பேனாவும் ராஜா தலை முத்திரை போடுகிற அரக்கு சீலுமாக வந்து வழித்துக்கொண்டு உட்காரவில்லை.

என் வீடு. அதென்ன வீடா, எலியும் பெருச்சாளியும் இருக்கப்பட்டது போல் பொந்து. பூட்டி வைத்திருந்தது.

வீடு இருக்கே, அதுவே எதேஷ்டம். பூட்டை நாலு தடவை பேனாக் கத்தியால் நெம்பினால் கையோடு வந்துவிடும்.

பேனாக் கத்திக்கு எங்கே போக? சடசடவென்று டவர் பிரிட்ஜ் பக்கம் உட்கார்ந்து கை நீட்டி விட்டு அடுத்த வேளை ரொட்டி, பேனாக் கத்தி, மேலே போட்டுக் கொள்ள பழசாக இருந்தாலும் ஒரு சட்டை இதெல்லாம் ஃப்ளீ மார்கெட்டில் வாங்கி வந்தால் என்ன? மனசில் கணக்குப் போட்டேன்.

அது சரி, இந்தப் பொந்தில் வேறே பெருச்சாளி ஏதாவது புகுந்து சொந்தம் கொண்டாடிக் கொண்டிருந்தால்? அதுவும் வெள்ளைப் பெருச்சாளி. நாலு தலைமுறையாக நான் தான் இங்கே இருக்கேன் என்று அவன் சொன்னால், நாலு இல்லே, அஞ்சு என்று திருத்திக் கொடுத்து சுயஜாதி அபிமானத்தோடு சுற்றுக் காரியம் செய்ய ஒரு பெரிய ஜனக் கூட்டமே இங்கே உண்டே. பூட்டை நெம்பினால் பிரளயமே ஏற்பட்டு விடக் கூடும்.

நான் யோசனையில் நிற்கும் போது யாரோ பின்னால் இருந்து ரெட்டி ரெட்டியென்று கூப்பிடுகிற சத்தம். பெண் குரல். உடனே திரும்பிப் பார்த்தேன்.

மரியா.

நீ இன்னும் இங்கே தான் இருக்கியா பெண்ணே? உன் ஒத்தக் கை வீட்டுக்காரன் எனக்குப் பண்ணின அநியாயத்துக்கு இன்னேரம் அழுகிப் புழுத்து அழிஞ்சு எந்த மாதாகோவிலில் ராவோடு ராவாகக் கொள்ளை அடிச்சானோ அதே கோவில் சமாதித் தரையில் ஒடுங்கி இருப்பானே? அந்த டமாரச் செவிடு மாமியார்க் கிழவி இன்னும் தெருவோடு போகிற ஒவ்வொருத்தனையும் நிறுத்தி நேரம் கேட்டுக் கொண்டிருக்கிறாளா? அவளுடைய கடிகாரம் நின்று போயிருக்க வேணுமே.

மரியாவை இதெல்லாம் கேட்க முடியுமா? சும்மா பார்த்து சிரித்தேன். அவள் முன்னைக்கிப்போ ஒரு சுற்று பெருத்திருந்தாள். வயிறு கொஞ்சம் முன்னால் சரிந்திருக்கிறது கண்டேன். ஒத்தைக்கையன் இன்னும் மும்முரமாக இருக்கிறான் போல இருக்கிறது. கை இல்லாவிட்டால் என்ன, பொய் சொல்லவும், ராத்திரியில் கூடப் படுத்துப் பையை ரொப்பவும் அவனுக்கு துரைத்தனத்து பூரண அனுமதி உண்டு. வெள்ளைத் தோல் ஆச்சே? என் போல அட்டுப் பிடித்த கறுப்பனா என்ன?

எப்போ திரும்ப வந்தே ரெட்டி?

மரியா கேட்டாள். அவளுக்கு நான் ஜெயிலில் அடைபட்டிருந்தது தெரியும். அவளுக்கென்ன, ஊருக்கே தெரியும். எதுக்காக என் முட்டியில் தட்டி உள்ளே போட்டிருந்தான்கள் என்பதும் தெரியும். அந்த ஒத்தைக் கையன் கைவரிசை பற்றியும் தெரிந்துதான் இருப்பாள்.

என்ன செய்யறான் அந்த இழவெடுத்த தேவிடிச்சி மகன்? உள்ளே விதைக்கொட்டைக்கு எண்ணெய் போட்டு ஜொலிக்க வச்சுக் கொண்டிருக்கானா?

உங்க வீட்டுக்காரர் சௌக்கியமா அம்மா?

உதடு ஒட்டாமல் கேட்டேன். அவள் சிரித்தபடி உள்ளே திரும்பிக் கூப்பிட்டாள்.

முன் வழுக்கையும் தொப்பையுமாக ஒரு வெள்ளைக்காரன் கோழி உரித்துக் கொண்டிருந்தது கையில் பிடித்தபடி நடந்து வந்தான்.

கோழியோடு சேர்த்து அவன் நீட்டிய கையைக் குலுக்கினேன். கோழி நாட்டுக் கோழி. பிடித்திருக்கிற மனுஷன் யார் என்று தெரிந்தால் நன்றாக இருக்கும்.

என் வீட்டுக்காரன் என்று அந்த மரியாப் பெண்டு சொன்னாளே பார்க்கணும்.

உள்ளபடிக்கே எனக்கு சந்தோஷமாக இருந்தது. ஜேம்ஸ் கடன்காரனைத் தலை முழுகி விட்டாளே. சுபாவமாகவே நல்ல புத்தி வந்து சேர்ந்ததோ, இல்லை, பந்து ஜனமும் சிநேகிதர்களும் நாசுக்காகவும் நயந்தும் பயந்தும் சொன்ன படிக்கோ.

டேவிட் இத்தனை நாள் இங்கே தான் பிக்கடலி தையல் கடையில் வேலை பார்த்தான். இப்போ யார்க்ஷையரில் கப்பல் கம்பெனியிலே உத்தியோகமாகிப் போயிருக்கான்.

முகம் எல்லாம் பெருமை எழுதி இருக்க மரியா சொன்னாள்.

க்ஷேமமாக இருக்கட்டும். கப்பல் கட்டுற வழுக்கையன் பாதிரி வேஷத்தில் நாடகக் கொட்டகையில் குடித்து விட்டு ரெண்டு நிமிஷம் தலை காட்டி விட்டு படுதா விழுந்ததும் இன்னும் குடிக்கப் போக மாட்டான். மாதா கோவிலைக் கொள்ளையடிக்க மாட்டான். துரை வீட்டுக்குள் ராத்திரி நுழைந்து வெட்டிப் போட்டுக் காசும் நகையும் கவர்ந்து கொண்டு போக மாட்டான். அப்பிராணி கறுப்பு சிநேகிதன் மேல் மொத்தப் பழியையும் தூக்கிப் போட்டு விட்டு ஓட மாட்டான்.

இவர்?

அவன் நான் யாரென்று புரியாமல் மரியாவைப் பார்க்க அவள் சொன்ன பதில் திருப்திகரமானது.

இங்கே தான் பத்து வருஷம் முந்தி இருந்தார். கஷ்ட ஜீவனம் தான். பிரான்ஸுக்குக் கிளம்பிப் போனார். அங்கேயும் இப்போ நிலவரம் சரியில்லையாம். பழைய நினைப்போடு திரும்பியாச்சு. இங்கே மட்டும் என்ன வாழுதுன்னு சொல்லு.

ஆக, நான் போகாத பிரான்சில் இருந்து வந்திருக்கேன். என் வீட்டுச் சாவி எங்கே பெண்ணே? அதில் வைத்த காசு பணம் என்ன ஆச்சு? யார் இப்போ இருக்கா அங்கே? பணத்தை தரையைக் குழித்துத் தான் இரும்புப் பெட்டிக்குள் கண்ணாடி பாட்டிலை வைத்து அதற்குள் சுருட்டி சுருட்டி ஆசனவாயில் நுழைக்கிற கவனத்தோடு திணித்து வைத்திருந்தேன். இருக்குமில்லையோ அதெல்லாம்?

டேவிட் கோழிக்கு கதி மோட்சம் கொடுக்க திரும்ப வீட்டுக்குள் நடந்தான். மரியா என் பக்கத்தில் வந்தாள்.

அந்த அயோக்கியனைத் தொலச்சுத் தலை முழுகிட்டேன். இவன் கொஞ்சம் வயசானவன் ஆனாலும் ரொம்பவே கவுரவமானவன்.

தெரியுமே. காட்ட வேண்டியதைக் காட்டி, கொடுக்க வேண்டியதைக் கொடுத்து, உனக்கு வடிச்சுக் கொட்டி கோழி பொறிச்சு மீன் வறுத்து சேவகம் பண்ண ஏற்பாடு செஞ்சு வச்சுட்டே. பிரமாதம்டி பொண்ணே.

மனசுக்குள் நினைச்சபடி அச்சாபிச்சமாக ஈ என்று இளித்தேன்.

அவன், அந்த கொலைகாரன் ஜேம்ஸ் உனக்குச் செஞ்ச துரோகத்துக்கு பீஜம் இல்லாம நரகத்திலே தலைகீழாத் தொங்குவான்.

அவள் கையை நெறிக்காமல் சாபமிட்டாள். இல்லேடி மரியாளே. கருட புராணத்திலே அதை விட உக்ரமான தண்டனை எல்லாம் இருக்குனு நெனச்சுண்டேன். தமிழ் புஸ்தகம் கையால் தொட்டு எத்தனை வருஷம் ஆச்சு.

போகட்டும். எங்கே போய்த் தொலைஞ்சான் ஜேம்ஸ்? இங்கே தான் சுத்தி வந்துண்டு இருக்கானா?

அவனுக்கு என்ன பைத்தியமா? உன்னை மாட்டி விட்டதுமே ஓடிட்டான் நாய் மாதிரி. போற போது என்ன பண்ணினான் தெரியுமா?

உங்கம்மாளையும் இழுத்துண்டு போயிருப்பான். என்ன பண்ணினான்னு சொன்னாத்தானேடீயம்மா பரதேவதை தெரியும் எனக்கு?

உன் வீட்டுக்குள்ளே பூட்டை உடச்சு உள்ளே போய் தரையெல்லாம் கொத்திப் போட்டு போயிருக்கான். என்ன வேலையோ எழவோ?

எனக்குத் திக்கென்று இருந்தது. ஆக நான் ஒரு பென்னியும் ரெண்டு பென்னியுமாக சும்பாதிசும்பன்களின் காலைப் பிடிச்சு உருவி வாங்கினதை இந்த வல்லாரவோழி வழிச்சு எடுத்துண்டு ஓடிட்டான். தப்பு என் பேர்லே தான். ஏர்ள்ஸ் கோர்ட் சாராயக் கடையில் அவனோடு கூட உட்கார்ந்து சுதி சேர்த்துண்ட போது என்னை அறியாமல் எல்லாத்தையும் உளறித் தொலைச்சிருக்கேன்.

ஆக கையில் இருந்த இருநூறு பவுண்டும் சில்லறையும் தான் ஐவேஜி இந்த ரெட்டிக்கு. இன்னும் என்னத்துக்கு ரெட்டியும் ரொட்டியும்? மகாலிங்க ஐயனுக்கு.

வீட்டுக்குள்ளே சுத்தம் பண்ணித் தரட்டா ரெட்டி? நீ காலாற டவர் பிரிட்ஜ் போய்ட்டு வா. முடிச்சுத் தரேன்.

மரியா சிநேகிதமாகச் சொன்னாள். ஒத்தைக் கையன் ஜேம்ஸ் எனக்குச் செய்த மகா துரோகத்துக்கு எதாவது ஒரு வழியில் பிராயச்சித்தம் செய்யணும் என்று அவள் தயாராக இருந்ததாகத் தோன்றியது. வயத்தில் தலைச்சன் பிள்ளை உள்ள வீட்டுக்கடக்கமான வெள்ளைக்காரி. க்ஷேமமாக இருக்கட்டும். எனக்கு ஒரு புத்ரி இருந்தால் இவள் வயசு இருக்கும். வைத்தாஸை விட சின்னவள் இந்தக் குட்டி.

அவள் உள்ளே போய்ச் சாவி எடுத்து வந்து கதவைத் திறந்தாள். உள்ளே தரையில் தார்ச்சீலை போட்டு மூடி இருந்த இடத்தை எனக்கு ரொம்பவே நன்றாகத் தெரியும். அங்கே இருந்த துட்டு எல்லாம் ஐயா துரையே தர்மவானே என்று இன்னும் எங்கேயாவது அழுது புலம்பி கெஞ்சிக் கொண்டிருக்கும். எடுத்தவன் விளங்குவானா?

இங்கே தங்கி, திரும்ப டவர் பிரிட்ஜ் கீழே உட்கார்ந்து பிச்சை எடுத்து.

எதுக்கு? யாருக்கு அதெல்லாம் சம்பாதிக்கணும்? அறுபது வயசுக்கு மேலே ஆச்சு. இந்த பரதேச பூமியில் என்ன பண்ணிக் கொண்டிருக்கேன்? எது வரைக்கும் இங்கே இருக்கணும்? ஏன் இருக்கணும்?

ஊருக்குப் போய்விடலாமா?

லலிதாம்பிகை காலில் சுருணையும் இடுப்பில் பிரஷ்டையாக சிவப்பு வஸ்திரமும் முடிந்து கொண்டு கொல்லைக் கிணற்றடியில் இருந்து கூப்பிட்டாள்.

வந்துடுங்கோ. திருக்கழுக்குன்றம் போகலாம். நானும் வரேன்.

நான் மரியாவை நிமிர்ந்து பார்த்தேன்.

டேவிட் யார்க்ஷயரில் எந்தக் கப்பல் கம்பெனியில் வேலை பார்க்கிறான்?

ஏன்? பிரிட்டீஷ் இந்தியா நேவிகேஷன். மிடில்ஸ்பர்க் வட்டாரத்தில் இருக்கப்பட்டது.

இந்தியாவுக்குக் கப்பல் விடற கம்பெனி தானே?

நான் அவசரமாக விசாரித்தேன்.

நான் என்னத்தக் கண்டேன் ரெட்டி? டேவிட்டைக் கேக்கறேன். ஆமா, தெரிஞ்சு என்ன செய்யப் போறே?

ஆத்துக்குத் திரும்பணும். ரொம்ப நாழியாச்சு நான் வந்து. லலிதா காத்துண்டிருக்கா.

சொன்னது புரியாமல் உதட்டைப் பிதுக்கியபடி அவள் உள்ளே போனாள்.

(தொடரும்)

Series Navigationதாகூரின் கீதப் பாமாலை – 5 காதல் பித்துவாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 5
இரா முருகன்

இரா முருகன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *