வீடு

This entry is part 4 of 13 in the series 11 செப்டம்பர் 2022

 

 

ஒரு வேலைத்திறன் பயிற்சி வகுப்பில்தான் அலியைச் சந்தித்தேன். முழங்கால் வரையிலான ஜிப்பா தொளதொள கால்சட்டை அணிந்திருந்தார். பாகிஸ்தானியாக இருக்கலாம். எனக்குப் பக்கத்தில்தான் அமர்ந்தார். ‘நல்லாயிருக்கீங்களாண்ணே’ என்றபோது நெஞ்சில் ‘பசக்’ கென்று அப்பிக்கொண்டார். தமிழர்தான். வகுப்பு முழுக்க மென்மையாகப் பேசிக்கொண்டோம். ஊர் தென்காசி என்றார். வகுப்பு முடிந்ததும் சாப்பிடப்போவோம் என்று சொல்லி அல்ஜுனிடில் இருக்கும் அந்த கோபிதியாம் கடைக்குக் கூட்டிச் சென்றார். ஒரு மலாய்க் கடையில் வாழைப்பழ பஜ்ஜி அருமையாக இருக்கும் என்றார். சென்றோம். உட்காரவைத்தார். போகும்போதே ‘பாத்து, படி, வழுக்கும்’ என்று அன்பாக எச்சரித்துக்கொண்டே வந்ததில், மேலும் இறுக்கமாக ஒட்டிக்கொண்டார். இருவருமே அறுபதைத் தாண்டியிருந்தோம். அவருக்குக் கொஞ்சம் பெரிய தாடி. அவர்தான் என்னைவிட முதுமையாகத் தெரிந்தார். ஹெ ஹெ.. அதில் ஒரு திருப்தி. அவரே போய் வாங்கிவந்தார். சர்க்கரை அளவுகேட்டு காப்பியும் அவரே வாங்கிவந்தார். செம ருசி. என் காப்பிக்கோப்பையையும் அவரே எடுத்துப்போய் வைத்துவிட்டு, காசும் தந்துவிட்டு ‘அவசியம் வீட்டுக்கு வாருங்கள்’ என்றார். ‘இன்று ஞாயிறு. புதன்கிழமை வருகிறேன். முடியுமா?’ கேட்டேன். ‘முடியுமாவா, முடியவைப்பேன். ஹஹ்…..’ முற்றுப்புள்ளி வைக்காமல் சிரித்தார்.

அன்று இரவே முகவரியை வாட்ஸ்அப் செய்தார். மிகத் தெளிவான குறிப்புகள். ஜாலான் மரியமில் இருக்கிறாராம். என்னைப்போல் தொகுப்பு வீட்டில் மூவறை நான்கறை வீட்டில் இருக்கலாம். ஊகித்தேன்.

புதன்காலை புறப்பட்டேன். ஜாலான் மரியம். அவர் சொன்ன சாலையில் திரும்பியபோது எல்லா வீடுகளுமே இரண்டுமாடி தரை வீடுகளாக முன்னும் பின்னும் தோட்டங்களுடன் இருந்தன. இங்கேதான் இருக்கிறாரா அல்லது வேறு ஒரு வீட்டுக்கு அழைத்திருக்கிறாரா? ‘ஏன்? உன்னைவிட அவர் வசதியாக இருக்கக்கூடாதா?’ என் ஈகோவின் மண்டையில் நச்சென்று குட்டினேன். ஒரே அமைதி. என் இருசக்கர வாகனத்தின் சத்தம் எல்லாருக்கும் எரிச்சலைத் தந்திருக்கலாம். அவர் சொன்ன வீட்டுக்கு முன் என் வாகனம் ஓய்ந்தது. அலி உள்ளிருந்து வந்தார். அதேமாதிரி ஜிப்பா, பாக்கு நிறத்தில் கைலி. என்னை நெஞ்சோடு  தழுவி சலாம் சொன்னார். அவரோடு சென்றேன். வலப்பக்கம் இருந்த புல்தரை, பூச்செடிகள் என்னை இழுத்தன. ‘உங்கள் தோட்டத்தைப் பார்த்தபிறகு வரலாமா?’ ‘தாராளமாக. டிக்கட்டெல்லாம் இல்லை ஹஹ்….’ முற்றுப்புள்ளி வைக்க மறந்து மீண்டும் சிரித்தார். அந்தப் புல்தரை அழகாக ‘க்ராப்’ வெட்டியிருந்தது. இப்போதுதான் தண்ணீர் தெளித்திருக்க  வேண்டும். எல்லாப் புல்லிலும்  முத்துக்கள். நடுவில் நான்கு பிரம்பு இருக்கைகளும் ஒரு காப்பி மேசையும் இருந்தது. அந்த காப்பி மேசையில் ஒரு ஆலமரத்தை சின்னதாக்கியதுபோல் ஒரு செடி இருந்தது. அது ரொம்ப விலை. மனுஷன் அதை வாங்கி வைத்திருக்கிறார். அந்த இடத்துக்கு காற்று வருவதுபோல் சுவற்றில் ஒரு மின்விசிறி. ‘காற்று வாங்கத்தானே இந்த இடம். இந்த இடத்துக்கு ஏன் மின்விசிறி?’ ‘சிலசமயம் இங்கேயும் காற்று வராது ஹஹ்….’ மீண்டும் அதே சிரிப்பு.

சுவரோரம் இருந்த பூச்செடிகள், குரோட்டன்ஸ்கள். ஒன்றையொன்று ஒட்டிக்கொள்ளாத இடைவெளிகள். ஒரு வெள்ளைப்பூ என்னை அருகில் அழைத்தது. நான்கு இதழ்கள். ஒவ்வொரு இதழிலும் ஒரு முழம் நீளத்துக்கு வெள்ளையாக வால் தொங்கியது. இவ்வளவு அழகான பூவை நான் பார்த்ததே யில்லை. பக்கத்திலேயே இன்னொடு செடி. இலையின் அடிப்பகுதி சிவப்பு, நடுப்பகுதி பச்சை. நுனியில் பச்சையும் மஞ்சளுமாக தெளிப்பு. இலையே பூ மாதிரி. ஏகப்பட்ட  வெள்ளைநிற, மஞ்சள் நிற வண்ணத்துப்பூச்சிகள். அந்த இலையை பூவென்று நம்பி ஏமாந்திருக்கலாம். ‘காலையில் வந்து தோட்டக்காரர் தண்ணீர் ஊற்றிவிட்டு போய்விடுவாரோ?’ என்றேன். ‘இல்லை. உங்கள் முன் நிற்கிறார். ஹஹ்…’

அந்தப் புல்தரைப் பகுதியிலிருந்தே வீட்டுக்குள் சென்றுவிடலாம். முன் பக்கம் முழுதும் கண்ணாடிச்சுவர். வெள்ளையில் பெரிய ஊதாப்பூப் போட்ட திரை. வெளியிலும் உள்ளுமாக மெலிதான நிறமற்ற சட்டையை அணிந்துகொண்டு சீரான சுருக்கத்துடன் அசைவின்றித் தொங்கின. வீட்டுக்குள் நுழைந்தேன்.  ஒரு திரையரங்குத்திரை போல  தொலைக்காட்சி. அதற்கு முன்புறம் ஒரு காப்பி மேசையுடன் மூவர், இருவர் ஒருவர் அமரும் ஒய்யார இருக்கைகள். அந்தக் காப்பி மேசையின் நடுவில் இழுத்துவிட்ட ஸ்பிரிங் வளையம்போல் ஏகப்பட்ட கிளைகளுடன் ஒரு செடி. அந்த வளையத்தில் படாமல் அதன் நடுவே விரலைவிட்டு எடுத்துவிடலாமா என்று ஒரு குழந்தைபோல ஆசைப்பட்டு அடக்கிக்கொண்டேன். ‘இந்தக் கூடத்தை சுற்றிப் பார்க்கலாமா?’ கேட்டேன். ‘தாராளமாக. இதற்கும் டிக்கட் இல்லை ஹஹ்…’ அந்த இருக்கைகளுக்குப் பின்னால் இரண்டு ஆளுயரக் கண்ணாடிகள் எதிரெதிராக. அதன் முன் நின்றேன். என் பிடரியும் முதுகும் தெளிவாகத் தெரிந்தன. அப்பாடா! எவ்வளவு வருஷங்களாகிவிட்டன. என் பின்தோற்றம் பார்த்து. ‘தன் முதுகு ஒருபோதும் தனக்கேதான் தெரியாது’ என்பது பொய். அதற்குப் பக்கத்திலேயே மூன்று விரல்களுடன் இலைகளைக் கொண்ட செடி. தாமரை இலையைவிட பெரிய இலைகளுடன் இன்னொன்று. மனுஷன் ரசித்து ரசித்து வாங்கியிருக்கிறார். எல்லாத் தொட்டிகளுக்கும் ஒரு பித்தளைத் தட்டு பீடம். பித்தளை ஒரு நாள் விளக்காவிட்டாலும் மங்கிவிடும். எப்படி இத்தனை பளபளப்பாக. தினமும் இதை விளக்குவாரோ? மூலையில் பியானோ மேசை மாதிரி ஒன்று. அதில் உட்கார்ந்து ஏதாவது எழுதவாம். அதன்  ஓரத்தில் வெள்ளைவெளேரென்று விசாலமான தொப்பியுடன் ஓர் இரவு விளக்கு. அடுத்த ஓரத்தில் குவளை மலர் போன்ற ஒரு தாங்கியில் ஒரு பேனா. கீழே ஒரு நோட்டு விரிக்கப்பட்டு நடுவில் பேனாவோடு இருந்தது. இல்லாத சாமான்களை அவ்வப்போது அவரும் அவர் மனைவியும் எழுதிவைப்பார்களாம். வாரம் ஒருநாள் தேக்கா போகும்போது வாங்கிவருவார்களாம். அந்த இடத்தில் தடீரென்று எதுவுமே வாங்கமுடியாது. தேவையான முன்னெச்சரிக்கைதான். மொத்தக்கூடத்துக்கும் மேலே ஓர் அலங்கார சரவிளக்கு கூடத்தையே அடைத்துத் தொங்கிக் கொண்டிருந்தது. மனுஷன் எப்படித்தான் கொண்டுவந்திருப்பாரோ? அதைப் போட்டுக்காட்டச் சொன்னேன். போட்டார். தேசியநாள் கொண்டாட்டத்தின் வானத்தை அலங்கரிக்கும் பட்டாசுப் பொலிவு. அது அணைந்துவிடும். இது நாம் அணைத்தால்தான் அணையும். அதை அவரிடமே சொன்னேன். ஏமாற்றாமல் பெரிதாகச் சிரித்தார்.

அடுத்து சாப்பாட்டு மேசைக்கு வந்தேன். அந்த மேசையின்மீது கைவைத்தபடி ‘இந்தப்பலகையைப் பார்த்தீர்களா?’ என்றார். உற்று கவனித்தேன். ஒரு பெரிய தேக்குமரத்தின் அடிப்பகுதியில் மூன்று அங்குல உயரத்துக்கு அறுக்கப்பட்ட ஒரே துண்டு. விளிம்புகள் தேக்குப் பட்டையுடன் இருந்தது. மேல்புறத்தில் கண்ணாடி  மெருகு. அதன் மீது கையை வைத்தேன். இன்னொரு கை உள்ளெயிருந்து வந்து என் உள்ளங்கையோடு ஒட்டிக்கொண்டது. அத்தனை பளபளப்பு. அதன் கீழே செட்டிநாட்டு வேலைப்பாட்டுடன் கால்கள். அதன் நடுவிலும் ஒரு செடி . மெலிதான மடிப்புடன் பனைஓலை மாதிரி நீள்வட்டத்தில். ஏகப்பட்ட இலைகள். அந்தத் தொட்டியும் பளபளப்பான ஒரு பித்தளைப் பீடத்தில். ஒரு ஓரத்தில் பிரம்புக்கூடையில் மூன்று நியூஸிலாந்து ஆப்பிள்கள் ஒரு கொத்துத் திராட்சை. ‘இது நிஜப்பழமா போலியா’ என்றேன். சிரித்துக்கொண்டே ஒரு கையால் லாவகமாகக் கொத்தைப் பிடித்துக்கொண்டு, மறுகையால், ஒரு பழத்தைத் திருகி என்னிடம் நீட்டி ‘நீங்களே சொல்லுங்கள்’  என்று அன்னாந்து சிரித்தார்.

யாரோ சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

‘உண்மையிலேயே மகிழ்ச்சியான மனிதன் என்று யாருமே இல்லை. எல்லாருக்குள்ளும் ஒரு சுமை தூங்கிக் கொண்டிருக்கும்.’

அந்த மனிதரிடம்போய் இந்த அலியை நிறுத்தி, நீ சொன்னது பொய் என்று நிரூபிக்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். சுமை உள்ள மனிதனால் இப்படிச் சுகமாக சத்தியமாய்ச் சிரிக்கமுடியாது.

‘இருங்கள். காப்பி சாப்பிடுவோம்’ என்று உள்ளே சென்றார். ‘வீட்டில் இவர் ஒருவர்தானா? வேறு யாருமே இல்லையா?’ எனக்குள் கேட்டுக்கொண்டேன். ஒரு தங்கமுலாம் தாம்பாளத்தில் ஒரு இடாலியன் சலவைக்கல் குடுவை, இரண்டு சாஸர் கோப்பைகளுடன் அலி வந்தார். அந்தக் கோப்பையில் காப்பியை ஊற்றியபோது ஆவி பறந்தது. ‘சர்க்கரை அளவு தெரியும் ஹஹ்..’ அருந்தினேன். எப்போதாவதுதான் இவ்வளவு ருசியான காப்பி கிடைக்கும். அவரே தொடர்ந்தார்.

‘என் மனைவி பாகிஸ்தானி. அவருக்கு நான்கு சகோதரிகள். எல்லாருமே இதே ரோட்டில்தான். ஒரு நாளைக்கு ஒவ்வொருத்தர் வீட்டுக்கும் அழைத்துச் செல்கிறேன். அவர்களைப் பார்த்துத்தான் வீட்டை எப்படி அழகாக வைத்துக் கொள்வது என்று கற்றுக் கொண்டேன். இப்போது அவர்கள் என்னிடம் கற்றுக்கொண்டிருக்கிறார்கள். ஹஹ்…’ இந்த முறை அவர் முற்றுப்புள்ளி வைக்க வெகுநேரமாகிவிட்டது.

‘வாருங்கள் உள்ளே போவோம்’ என்று சொல்லி ஒரு கதவைத் திறந்தார். ‘இது அடுப்படி’ என்றார். உள்ளே ஒரு குளிர்சாதனப்பெட்டி. முப்பது பலாப்பழங்களை முழுசாக உள்ளே வைக்கலாம். எதிரே பாத்திரம் கழுவும் தொட்டி. பக்கத்திலேயே அழகான தாங்கிகளுடன் ஏகப்பட்ட  தங்கக்கோடுகளுடன் சலவைக்கல் தட்டுகள், கோப்பைகள். பக்கத்தில் ஒரு குவளைத் தாங்கியில் கரண்டி, முள்கரண்டி, கத்தி, சாப்ஸ்டிக் வகையறாக்கள். அதன் பின்னே தொங்கிக்கொண்டிருந்த துண்டில் ஒரு குழந்தை சிரித்தது. அடுப்படி என்றீர்கள், அடுப்பைக் காணோமே’ கேட்டுவிட்டு முகத்தைப் பார்த்தேன். ஏமாற்றாமல் சிரித்தார். பின்னால் அழைத்துச் சென்றார். ஒரு தாழ்வாரம். சுவற்றை ஒட்டிய மேடையில் இரண்டு அடுப்புகள். வேறு ஒரு சாமானும் வெளியே இல்லை. அடுப்புக்குக் கீழே ஏகப்பட்ட கதவுகள். அதற்குள் சமைக்கும் சட்டிபானைகள் தூங்கிக் கொண்டிருக்கலாம். அந்த தாழ்வாரத்தின் தூண் பகுதியில் பணக்கொடி வளைந்து வளைந்து படர்ந்திருந்தது. மனத்துக்கும் பணத்தும் தகுந்தாற்போல் அந்த இலை அளவு இருக்குமாம். எல்லா இலைகளுமே உள்ளங்கை அளவு விரிந்திருந்தன.

‘கழிவறை போகவேண்டும்’ என்றேன். வாருங்கள் என்று இன்னொரு கதவைத் திறந்தார். ஒரு விரிப்பும் தலையணையும் இருந்தால் உள்ளே தூங்கலாம். அத்தனை சுத்தம். ஒரு பல்துலக்கி, பற்பசை, சோப்பு என்று எதுவுமே இல்லை. எல்லாம் எங்கோ மறைத்து வைக்கப்பட்டிருந்தன. அந்தத் தாழ்வாரத்தைச் சுற்றி நித்தியகல்யாணி செடிகள். வெள்ளையும் சிவப்புமாக பூத்துக் கிடந்தன. ‘நித்தியகல்யாணியில் பட்ட காற்று உடம்பில் பட்டால் எதிர்மறை எண்ணமே வராதாம். ஹஹ்..’ அந்த மொத்த வீடுமே அவர் சிரிப்பலைகளில் ததும்பிக் கொண்டிருந்தது. சுவரோரச் செடிகள் பின்னாலும் தொடர்ந்தன. சுவற்றுப்பக்கம் ஒரு பலாமரம். வேர்ப்பகுதியில் பப்பாளிப்பழம் அளவுக்கு ஒரு காய் இருந்தது. ‘இன்னும் சில மாதத்தில் வேர்ப்பலா ருசிப்பீர்கள்.’ என்றேன். ‘ருசிப்போம் என்று சொல்லுங்கள். பழுத்தால் பாதி எனக்கு. பாதி உங்களுக்கு ஹஹ்…’ மறுமுனையில் இரண்டு பப்பாளி மரங்கள் பூ, பிஞ்சு, காய் கனிகளை அள்ளிவைத்துக் கொண்டு லேசாக அசைந்தன. அந்தத் தோட்டப்பகுதியின் நடுவில் இரண்டு சுவர்களுக்கிடையே அடைத்துக்கொண்டு  குடை ராட்டினம்போல் ஒரு விசிறிவாழை. அவ்வளவுபெரிய விசிறிவாழையை முதன்முறையாகப் பார்க்கிறேன். எல்லா இலைகளும் மேலும் கீழுமாக ஆடி வரவேற்றது.  

‘மீரெபூஸ் பிடிக்கும் என்றீர்களே. மனைவி செய்துவைத்துவிட்டுத்தான் சென்றார். வாருங்கள் சாப்பிடுவோம்.’ மீண்டும் சாப்பாட்டு மேசைக்கு வந்தோம். அதே தங்கமுலாம் தாம்பாளத்தில் ஒரு பெரிய  கோப்பை மற்றும் இரண்டு சிறிய கோப்பைகளுடன் வந்தார். இருவருமே சாப்பிட்டோம். சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போதே தேவாயலயத்தில் அடிப்பதுபோல் மணிச்சத்தம் கேட்டது. பக்கத்திலிருந்துதான் வருகிறது. அப்போதுதான் கவனித்தேன். ஒரு பிரமாண்டமான தாத்தா கடிகாரம். ஒய்யாரமாக ஊசலை ஆட்டிக்கொண்டு 11 அடித்து முடித்தது. ‘அதற்கு வயது 60’ என்றார். ‘60 வருஷமா 60 நாளா?’ என்றேன். அத்தனை வசீகரம். பளபளப்பு. ஒரு பொருட்காட்சி பார்த்த திருப்தியில் வீட்டுக்குத் திரும்பினேன்.

எருமைச்சாலை. மன்னிக்கவும் பஃபலோ சாலையில்தான் என் வீடு இருக்கிறது. தேக்கா. மின்தூக்கியில் 9ஆம் மாடியில் வெளியேறினேன். இடப்புறம் என் வீடு. கதவுக்கு இடப்புறம் இருக்கும் காலணி அலமாரியில் ஒரு கதவு கழன்று அதன்மேலேயே படுத்திருக்கிறது. ஓர் ஆசாரியை அழைத்து அதை சரிசெய்வதா அல்லது வேறு ஒரு அலமாரி வாங்குவதா என்ற பட்டிமன்றம் ஒரு வருடமாக நடந்துகொண்டிருக்கிறது. உள்ளே பலசோடி காலணிகள் மூச்சுமுட்டிக் கிடந்தன. அதற்குப் பக்கத்தில் இரண்டு தொட்டிகள். ஒன்றில் ஓமவல்லி. இன்னொன்றில் வேப்பங்கன்று. வெயில் அதிகமில்லாத இடம். இலைகளெல்லாம் பழுத்துக் கொட்டி நுனியில் மட்டும் கொஞ்சம் பச்சை இருந்தது. வாசற்படியின் இடப்பக்கம் அழைப்புமணி எப்போதோ செத்திருந்தது. அதை மூடி ‘பேண்ட்எய்ட்’ பிளாஸ்திரியை ஒட்டி அதன்மேல் சிகப்பு மையில் எக்ஸ் மார்க் போட்டிருந்தேன்.

என் வீட்டில் மனைவி.  மகள், மருமகன்,  மூன்று பேரக்குழந்தைகள் மற்றும் பல்கலையில் படிக்கும் என் மகன். எட்டு உருப்படிகள். சிறிய அளவிலான நான்கறை வீடுதான். கதவைத் திறந்ததும்  எதிரே ஒரு சிறிய தொலைக்காட்சி. அதற்கு முன்னே இருக்கும் காப்பிமேசையில் ஒரு பக்கம் ஒரு மரக்கூடை இருக்கிறது. பழம் வைப்பதற்காக வாங்கியது. அதில் எழுதுவது, எழுதாதது, உடைந்தது உடையாதது என்ற ஏகப்பட்ட பேனாக்கள், பென்சில்கள், வர்ணக்குச்சிகள் ஹைலைட்டர்கள், மார்க்கர்கள், அழிப்பான்கள், பென்சில் சீவல்கள் ததும்பி வழிந்தன. ஒரு நாள் அதை சுத்தப்படுத்தவேண்டும் என்று ஐம்பதாவது முறையாக உறுதி எடுத்தேன். அதற்குப் பக்கத்தில் உள்ள பேப்பர் அடுக்கில் சில ஆண்டுகளுக்கு முன் வாங்கிய முஸ்தபா பில்கூட கிடைக்கலாம். அதற்கு அடுத்து  மூன்று பேர் இரண்டுபேர் அமரும் இருக்கைகள். சில ஓட்டைகளை சின்ன தலையணையால் மறைத்திருந்தேன். அதில் எப்போதும் பேரப்பிள்ளைகளின் பள்ளிக்கூடப் பைகள்தான் உட்கார்ந்திருக்கும். ஒரு ஓரத்தில் கோடாரி தைலம், டைகர்பாம், விக்ஸ், காது குடையும் பஞ்சு, பல்குச்சி, தேங்காயெண்ணை, சீப்பு, சின்னக்கண்ணாடி, முதுகு சொரியும் குச்சி, ஒற்றுத்தாள் டப்பாக்கள், மருந்து டியூபுகள். குப்பிகள். தேவையானதைத்  தெளிவாக எடுத்துவிடலாம்.எழுந்து தேடவேண்டியதில்லை. அதைத் தாண்டினால் ஒரு துணி ஊஞ்சல் தொங்கும். அதில்தான் என் பேரன் உட்கார்ந்து படிப்பான், சாப்பிடுவான். தொலைக்காட்சி பார்ப்பான். அந்த ஊஞ்சலின் மேல் பகுதியில் ஒரு உருட்டுக்கட்டை இருக்கிறது. கொஞ்சம் கவனப்பிசகாக வந்தால் நெற்றிப்பொட்டில் முட்டிவிடும். அதையும் தாண்டி ஒரு பிரம்பு ஊஞ்சல். அதில் மடிக்கவேண்டிய துணிகள் மலையாகக் கிடக்கின்றன. மடிக்கவேண்டும். அதற்குப் பக்கத்தில்தான் எங்கள் சாப்பாட்டு மேசை. பாதிமேசையில் பழக்கூழ் பாட்டில்கள் நட்டலா, கார்ன்ஃபிளேக் டப்பாக்கள். ரொட்டிகட்டுகள், கரண்டிகள் தண்ணீர் பாட்டில்கள், ஒற்றுத்தாள், மாத்திரை டப்பா எல்லாம். ஏகப்பட்ட பிசின்தாள்களால் சுற்றி ரப்பர்வளையத்தோடு இருக்கிறதல்லவா, அதுதான் என் சுவர் மின்விசிறியின் தொலை இயக்கி. ஒரு பழக்கூழ் பாட்டிலின் மூடியைக் காணோம். ஒரு நெகிழித்தாளில் சுற்றி ரப்பர் வளையம் போட்டிருக்கிறேன். அதற்குப் பக்கத்தில் பாதி மேசையில் தமிழ்முரசு தாளில் அரிசி பரப்பியிருக்கிறது. சின்னச்சின்ன வண்டுப்பூச்சி வந்துவிட்டது. இப்படிப் பரப்பிவைத்தால் பூச்சிகள் பறந்துவிடும். பிறகு டப்பாவில் கொட்டிவைக்கலாம். அதற்கு அடுத்து அடுப்படி. அடுப்பு மேடையில் மசாலா சாமான்கள், பருப்புகள் நூடுல்ஸ், மீ, ஓட்ஸ், கேப்பை மாவு, ஆட்டா மாவு என்று ஏகப்பட்ட பாக்கெட்டுகள், ஓரம் வெட்டப்பட்டு ரப்பர் வளையம் போட்டிருக்கும். எதையும் நகர்த்திவிடக்கூடாது. பிறகு தேடும்படி ஆகிவிடும். அதற்குப் பக்கத்தில்தான் எங்களின் குளிர்சாதனப் பெட்டி. கவனமாகத்திறக்க வேண்டும் ஒரு தடவை முட்டை ஒன்று விழுந்து உடைந்து அதை சுத்தப்படுத்துவதற்குள் போதும்போதும் என்றாகிவிட்டது. அடுப்படி மேடையின் எதிர்புறத்தில் அந்தக்கால ஆட்டுக்கல், அம்மி, தேங்காய் திருகி, அரிவாள்மனை சில மண்சட்டி பானைகள் எல்லாம். கவனமாக நடக்கவேண்டும். ஒரு வெங்காய மூட்டையும், அரிசி 5கிலோ பையும் தரையில்தான் கிடக்கிறது. வெங்காயமூட்டையைப் பிரித்து கழன்றுபோன தோல்கள், சில வேர்ப்பகுதிகள், நீக்கவேண்டும். சில அழுகியும் இருக்கும். அகற்றவேண்டும். அரிசிப்பையைப் பிரித்துக் கொட்டவேண்டும். பூச்சி வருவதால் வசம்பு போட்டு கொட்டிவைத்தால் நல்லது. வீட்டில் இருக்கும்போது வசம்பு ஞாபகம் வருகிறது. வெளியே போனால் மறந்துவிடுகிறது. இன்றைக்கு எப்படியும் வாங்கி அந்த அரிசிக்கு விடுதலை தரவேண்டும். அடுப்பு மேடையில் ஓரமாகத்தான் சூடாக்கி (அவன்) இருக்கிறது. அதன்மேல்தான் மைலோ பாக்கெட்டுகள், சோயாபீன் பாக்கெட்டுகள், திரீ இன் ஒன் டீ, காபி, நெஸ்டம் பாக்கெட்டுகள் எல்லாம் இருக்கிறது.

என்னுடைய அலுவலக அறையில் ஒரு லாப்டாப், பிரிண்டர் இருக்கிறது. அதில் எப்போதும் என் பேரப்பிள்ளைகள் ஏதாவது நோண்டிக் கொண்டிருப்பார்கள். அதில் உட்கார்ந்து எழுதுவதென்றால் அங்கிருக்கும் பேரப்பிள்ளைகளின் சாமான்களை அகற்ற வே அரைமணிநேரம் வேண்டும். அந்த மேசைக்குக் கீழே இரண்டு பெரிய அட்டைப்பெட்டியில் தலையணைகள், விரிப்புகள் என்று ஏகப்பட்ட துணிகள். வெளியே இருந்து பார்த்தால் தெரியாது. ஹெ..ஹெ.. எதிரே இருக்கும் இஸ்திரி மேசையில்தான் நான் எழுதுவேன். அதில் ரெக்சின் கிழிந்துவிட்டதால், ஒரு எட்டுமுழவேட்டியைப் பரப்பி மறைத்திருக்கிறேன். இப்படியாக இப்படியாக என் வீடு.

என் மகளுக்கு வீடு கிடைத்துவிட்டது. அடுத்த மாதம் அவர்கள் புதுவீடு போய்விடுவார்கள். பக்கத்தில்தான் அவர்கள் வாங்கியிருக்கும் புதுவீடு. என் மகனுக்கு யுனிவர்சிடி முடிப்பதற்கு முன்பதாகவே வேலை கிடைத்துவிட்டது. நல்லவேலை. நான் ஒரு தனிநிலை ஆசிரியர். நிறைய மாணவர்கள் வீட்டுக்கே வருகிறார்கள். ஒருநாள் நானும் ஒரு பெரிய வீடு வாங்கி அலியாகலாம். ஆனால் அலியால் நானாக முடியாது. பாவம்.

அலிக்குப் பிள்ளையில்லை.  

யூசுப் ராவுத்தர் ரஜித்

Series Navigationமரணித்தும் மறையாத மகாராணிகல்யாணம் என்ற தலைப்பில் அழகியசிங்கரின் ஐந்து கவிதைகள்
author

யூசுப் ராவுத்தர் ரஜித்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *