வுட்டி ஆலனின் ‘ மிட் நைட் இன் பாரீஸ்

This entry is part 22 of 45 in the series 26 பிப்ரவரி 2012

சிறகு இரவிச்சந்திரன்

ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்ட படங்களில் இதுவும் ஒன்று. இதுவும் உபயம் தமிழ்ஸ்டூடியோ தான். நேற்று ( 19.2.2012) மாலை 7 மணிக்கு சப் டைட்டிலுடன் போட்டார்கள். கதைப் போக்கு புரிய இது மிகவும் உதவியாக இருந்தது. நாமொன்றும் வெள்ளைக்கார துரைகள் இல்லையே. அதனால்தான்.
கேல் பெண்டர் ஒரு எழுத்தாளன். அவனுடைய நிச்சயிக்கப்பட்ட காதலி அவனை ஹாலிவுட் படங்களுக்குப் பணிபுரியச் சொல்கிறாள். ஆனால் அவனது கவனம் முழுவதும், அவன் எழுதும் முதல் நாவலில். காதலியின் பெற்றோர் பாரிஸில் இருக்கிறார்கள். கொஞ்சம் மேட்டுக்குடி. தன் மகள் சரியான ஆளைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறாளா என்று அவர்களுக்கு சந்தேகம் வேறு. முதல் சந்திப்பிலேயே, அமெரிக்காவின் டெமோக்கிராட், ரிபப்ளிகன் கட்சிகளைப் பற்றிய கருத்துக்களில், மாமனாருக்கும் மாப்பிள்ளைக்கு முட்டிக் கொண்டு விடுகிறது.
விருந்துக்குப் போன இடத்தில் பாலைச் சந்திக்கிறாள் கேலின் காதலி. பால் தனக்குத் தெரிந்த விசயத்தை கொஞ்சம் ஊதி பெரிதாக ஆக்கி, எல்லாம் தெரிந்ததுபோல் சொல்பவன். அவனுடனே இருக்கும் அவன் காதலி ஒரு வரலாறு எக்ஸ்பெர்ட். அவனை திருத்திக் கொண்டே இருக்கிறாள் அவன் தப்புத்தப்பாக வரலாற்று உண்மைகளைச் சொல்லும்போது.
காதலியுடன் தனியாக வந்த இடத்தில், பால் பாரிஸின் அழகிய இடங்களைப் பற்றிச் சொல்லி, கேலின் காதலியை இழுத்துக் கொண்டு சென்று விடுகிறான். அது பிடிக்காமல் கேல், தனியாக ஹோட்டல் அறை நோக்கி புறப்படுகிறான். அவனுக்கு பாரிஸின் இப்போதைய ( 2010) பிடிக்கவில்லை. அவன் படித்த எர்னஸ்ட் ஹெமிங்வே விவரித்த 1920 தான் பாரிஸின் பொற்காலம் என்று நம்புகிறான்.
நடுஇரவு, பன்னிரெண்டு மணி, வழி தவறி, ஓய்ந்து போய், ஒரு பெரிய கட்டிடத்தின் வட்ட வடிவப் படிகளில் அமர்ந்து கொண்டிருக்கிறான். அவன் மனம் பழைய பாரிஸ் நகரையே எண்ணிக் கொண்டிருக் கிறது.
1920 களில் ஓடிய பழைய காலத்துக் கார் ஒன்று அவனருகில் வருகிறது. கையில் கோப்பையுடன் ஒருவன் அதிலிருந்து இறங்கி அவனிடம் ஓடி வருகிறான். ‘ கமான் பெண்டர்.. எங்களோடு வா ‘ கேல் அவனுடன் காரில் பயணிக்கிறான். கையில் மதுக்கோப்பை திணிக்கப்படுகிறது. பெரிய விருந்துக் கூடத்துக்குப் போகிறார்கள். அங்கே ஒருவன் கேலுக்கு பிடித்த பாடலைப் பாடுகிறான். ஆனால் அது அந்தக் காலத்துப் பாடல். அப்போதுதான் அவன் அதை எழுதிப் பாடிக் கொண்டிருக்கிறான். ஆனால் அதை கேல், பழைய பிடித்த பாடல் வரிசையில், கேலிபோர்னியாவில் அடிக்கடி கேட்டுக் கொண்டிருப்பான்.
‘ என்ன செய்கிறாய் நீ ‘ என்கிறாள் விருந்திலிருக்கும் ஒரு பெண்.
‘ எழுத்தாளன் , நாவல் எழுதிக் கொண்டிருக்கிறேன் ‘ என்கிறான் கேல்.
அவனுக்கு இன்னொரு எழுத்தாளனை அறிமுகம் செய்து வைக்கிறாள் அந்தப் பெண்.
‘ நீ இந்த இடத்தில் இருக்கக்கூடாது. வா உனக்கு சரியான இடத்தைக் காட்டுகிறேன் ‘ என்று அந்த ஆள் கேலை வேறொரு இடத்துக்குக் கூட்டிப் போகிறான். தனியாக குடித்துக் கொண்டு ஒருவன் உட்கார்ந்து கொண்டிருக்கிறான். அவன் எதிரில் இவனை உட்கார வைக்கிறான் அந்த ஆள்.
‘ எர்னெஸ்ட், இவர் ஒரு எழுத்தாளராம். நாவல் எழுதிக் கொண்டிருக்கிறாராம்.. ‘
‘ இது யார்? எர்னெஸ்ட் ஹெமிங்வேயா? ‘ ஆச்சர்யப்படுகிறான் கேல் பெண்டர்.
‘ உன் கதையைப் பற்றிச் சொல்லு ‘
‘ சிலைகள் செய்யும் இடத்தில் வேலை செய்பவனைப் பற்றிய கதை. ‘
‘ அந்தச் சிலைகள் கதை சொல்லுமா? ‘ சிரிக்கிறான் எர்னெஸ்ட். ‘ ஆனாலும் புதுசாக இருக்கிறது. வா உன்னைச் சரியான இடத்துக்குக் கூட்டிப் போகிறேன். ‘
அந்த வீட்டில் ஒருவன் படம் வரைந்து கொண்டிருக்கிறான். சிகரெட் பிடித்தபடி ஒரு பெண் அவனைக் காதலுடன் பார்த்துக் கொண்டிருக்கிறாள். சோபாவில் கிராப் தலையுடன் ஒரு குண்டு பெண்மணி உட்கார்ந்து கொண்டிருக்கிறாள்.
‘ எர்னெஸ்ட்! எப்பொது உன் நாவலை முடிக்கப் போகிறாய்? அச்சுக்காரன் இரண்டு முன்று தடவை நினைவுறுத்தி விட்டான். நன்றாய் எழுதுகிறாய் என்று உன்னை ஒத்துக் கொண்டேன் பார் ‘
‘ இவன் கேல் பெண்டர். நாவல் எழுதப்போகிறானாம். நீயே கேள் ‘
சட்டென்று அந்தப் பெண்மணி எழுந்து ஓவியனைப் பார்த்து கத்துகிறாள்.
‘ பாப்லோ, என்ன ஓவியம் இது. உன் காதலியை வைத்துக் கொண்டே எல்லா ஓவியங்களையும் வரைய வேண்டும் என்றால் நீ தேறமாட்டாய். ‘
‘ பாப்லோ என்றா சொன்னாள்? அப்படியென்றால் இது பாப்லோ பிக்காஸோவா? ‘
‘ ஆம்! உன் கதை என்ன? ‘
‘ சிலைகள் செய்யும் இடத்தில் வேலை செய்பவனைப் பற்றியது ‘
‘ உம் நன்றாகத்தான் இருக்கிறது.. நாளை எனக்கு உன் கதையைக் கொண்டு வா.. படித்துவிட்டு சொல்கிறேன்.. எர்னெஸ்ட் எப்போது முடிக்கப் போகிறாய்? ‘
தினமும் இரவுகளில் கேலை கார் அழைத்துக் கொண்டு போகிறது. பகலில் காதலியுடன் ஊர் சுற்றுகிறான். ஆனால் பாலின் இடையூறுகளுடனே.
அடுத்த இரவு தன் கதையுடன் அந்த வீட்டுக்குப் போனபோது அந்தச் சிகரெட் பெண் இல்லை. எங்கே அவள் என்று கேட்கிறான்.
‘ பாப்லோவின் காதலியாக இருந்தாள். ஆனால் எர்னெஸ்டுடன் எங்கோ போய் விட்டாள். உன் கதையைக் கொடு. ‘
அடுத்த நாள் அருங்காட்சியகத்தில், இரவு கேல் பார்த்த பிக்காஸோ பெயிண்டிங்.
‘ இது பிக்காஸோ தன் காதலி ஆட்ரியானாவை வைத்துக் கொண்டு வரைந்தது. அவர்கள் கல்யாணம் வரை போய் விட்டு பிரிந்து விட்டார்கள். ‘ (பால்)
‘ தப்பாகச் சொல்கிறாய் பால். ஆரம்பத்திலேயே அவளை ஹெமிங்வே லவட்டிக் கொண்டு போய் விட்டான். ‘ ( கேல் )
‘ இது உனக்கு எப்படித் தெரியும்? ‘ ( கேலின் காதலி )
‘ நேற்று இரவு படித்தேன். ‘
இப்படித்தான் இரவு 1920 ல் கேள்விப்பட்ட விசயங்களை 2010 ல் கேல் ஆணித்தரமாக எடுத்து வைக்கிறான். பாலுடனே ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறாள் கேலின் காதலி. அதனால் ஒரு பழைய புத்தகக் கடையில், ப்ரெஞ்ச் வரலாற்றுப் புத்தகத்தை எடுக்கிறான். மொழி தெரியாததால் அதை மொழி பெயர்க்க பாலின் காதலியை நாடுகிறான். அதில் ஒரு பக்கத்தில், பிக்காஸோவின் காதலி, புதிய எழுத் தாளனைச் சந்திக்கிறாள். அவன் பெயர் கெய்ல் பெண்டர். அவன் அவளுக்கு ஒரு கம்மல் வாங்கிப் பரிசளிக்கிறான். இரவை அவளுடனே கழிக்கிறான் என்று எழுதியிருக்கிறது.
கேல் அன்றிரவு ஹோட்டல் அறையில் தன் காதலியின் கம்மலை எடுத்து ஆட்ரியானாவுக்கு பரிசளிக்க பெட்டிக்குள் வைத்து ரிப்பன் கட்டுகிறான். எதிர்பாராத விதமாக காதலி தன் அப்பாவுடன் ரூமுக்கு வந்து விடுகிறாள். கம்மல் காணாமல் போனதைக் கண்டுபிடித்து ஹோட்டல் டிடெக்டிவ்வைக் கூப்பிடுகிறாள். அதற்கு பாத்ரூம் போய் பெட்டியை அவிழ்த்து, கம்மல் அங்கு இருந்ததாகச் சொல்லி தப்பித்து விடுகிறார் கேல். இரவு வேறொரு கடையில் கம்மல் வாங்கி ஆட்ரியானாவுக்கு பரிசளிக்கிறார்.
ஆட்ரியானா தனக்கு இந்த 1920 காலமே பிடிக்கவில்லை என்று சொல்கிறாள். வாசலுக்கு வருகிறார்கள். ஒரு சாரட் வண்டி அவர்களை ஏற்றிக் கொண்டு 1890 வருடத்திற்கு போகிறது. இன்னும் பழைய காலம். ஆட்ரியானா அங்கேயே இருக்கப்போவதாகச் சொல்கிறாள். கேல் நீ இந்தக் காலத் தைச் சேர்ந்தவள் இல்லை. வரலாறு குழம்பிப்போகும் என்கிறார். அதனால் என்ன என்று ஆட்ரியானா அங்கேயே தங்கி விடுகிறாள்.
கேலை பின்பற்ற ஒரு துப்பறியும் நிபுணனை ஏற்பாடு செய்கிறார் அவரது வருங்கால மாமனார். அவனால் கேல் காரில் ஏறுவது வரைதான் பார்க்க முடிகிறது. அடுத்த நாள் அவனே கார் கொண்டு வந்து அவனை பின் தொடர்கிறான். ஆனால் அதற்குள் கேலும் ஆண்டிரியானாவும் 1890 க்கு போய்விட்டார்கள்.
‘ இரவெல்லாம் எங்கே சுற்றி கொண்டிருக்கிறாய்? நம் கல்யாணம் நடக்குமா என்று எனக்கு சந்தேகமே வந்து விட்டது ‘ என்று கத்துகிறாள் கேலின் காதலி.
‘ நிச்சயமாக நடக்காது. அதுவும் நீ பாலுடன் இரவு படுக்கையை பகிர்ந்து கொள்ளும்போது எப்படி நடக்கும்? ‘
‘ உனக்கெப்படி தெரியும் ? ‘
‘ ஹெமிங்வே சொன்னான் ‘
‘ ஆமாம் அப்படித்தான்.. ஏனென்றால் அவன் உன்னைவிட சுவாரஸ்யமானவன். ‘
சோகத்துடன் வெளியேறும் கேல் பாலத்தின் மேல் நிற்கிறான். தொலைவில் பாரிஸ் டவர். மணி பன்னிரெண்டு. அவன் இசைக் கூடத்தில் சந்தித்த ஒரு பெண் வருகிறாள்.
‘ நண்பர்களுடன் பார்ட்டி போயிருந்தேன்.. இம்மாதிரி இரவு நேர பாரிஸ் எனக்குப் பிடிக்கும். ‘
‘ எனக்கும்.. அட! மழை பெய்கிறதே! ‘
‘ மழையில் நனைவது எனக்குப் பிடிக்கும் ‘
‘ எனக்கும்.. ‘ கேலும் அவளும் கைகோர்த்து செல்கிறார்கள்.

பாலோ யுவர் டிரீம்ஸ் என்கிற வாக்கியத்திற்கு ஒரு படமே எடுத்துக் காட்டிவிட்டார் ஆலன். கதாநாயகனாக நடித்திருப்பவர் ஓவன் வில்சன். கிட்டத்தட்ட சின்ன வயது ஆலன் முகம். கொஞ்சம் குழப்படியாக இருந்தாலும் ரசிக்கும்படி இருக்கிறது படம்.

#
கொசுறு
தமிழ் ஸ்டூடியோ நடிப்புப் பயிற்சி வகுப்புகள் எடுக்கிறது. மாவட்டத்திற்கு ஒரு மாணவன் தான் தேர்ந்தெடுக்கப்படுவான். புதிய கோர்ஸ் விரைவில் ஆரம்பமாகப் போகிறது. கோர்ஸின் முதல் ஆறுமாதங் கள் வெறும் படிப்புதான். பின் மூன்று மாதம் களப்பணி. ஏதாவதொரு கிராமத்தில் தங்கி அங்கிருக்கும் மக்களோடு பழக வேண்டும். பிறகுதான் நடிப்புப் பயிற்சி எல்லாமே.
நிர்வாகத்தை அருண் கவனித்துக் கொள்கிறார். பயிற்சி கொடுப்பவர் ஜெயராவ். இவர் முத்துசாமியின் கூத்துப்பட்டறையின் பிராடெக்ட்.
#

Series Navigationபாலாஜி மோகனின் ‘காதலில் சொதப்புவது எப்படி? ‘ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்கின் ‘ வார் ஹார்ஸ் ‘
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *