வெட்டிப்பய

author
0 minutes, 0 seconds Read
This entry is part 10 of 14 in the series 5 ஏப்ரல் 2015

வைகை அனிஷ்

வெட்டிப்பய, தண்டச்சோறு, ஊர்சுற்றி என படித்தோ அல்லது படிக்காமல் வீட்டு வேலையைச்செய்யாமல் இருப்பவர்களுக்கு கொடுக்கும் பட்டதான் மேலே கூறிய வார்த்தைகள். இவ்வார்த்தைக்குப் பின்னால் தண்ணீரை உருவாக்கியவர்கள், தண்ணீரை காத்தவர்கள், தண்ணீருக்காக உழைத்தவர்கள் என அடுக்கிக்கொண்டே போகலாம். அப்படி புகழ்வாய்ந்த வார்த்தையை தற்பொழுது கால மாற்றத்தால் அடுத்தவரை வசைபாடக்கூடிய வார்த்தையாக பயன்படுத்தி வருகிறோம்.
கி.பி.10-11 ஆம் நூற்றாண்டுகளில் சோழர்கால கல்வெட்டுக்களில் வெட்டிப்பேறு அல்லது வெட்டப்பேறு என்ற சொற்றொடர் பயன்படுத்தப்பட்டுள்ளது. நாளடைவில் மாறித்தான் வெட்டிப்பய என மருவியுள்ளது.வெட்டி என்ற சொல், விஷ்டி எனப்பட்ட வடமொழிச்சொல்லின் திரிபாகும்.
வெட்டப்பேறு என்பது பாசனக் குளங்களையும், வாய்க்கால்களையும் வெட்டுவிக்கும் அதிகாரத்தையும் அந்த அதிகாரத்திற்குரிய மானியத்தையும் குறிக்ககூடும். நாகப்பட்டினம் மாவட்டத்தில் ச+ளாமணி வர்ம விகாரம் என்ற பௌத்தப் பள்ளிக்கு வழங்கப்பட்ட இறையிலி நிலங்களில் உட்படாத பிற இறையிலி நிலங்களைக் குறிப்பிடும்போது தேவதானம், பள்ளிச்சந்தம், கணி முற்றூட்டு, வெட்டப்பேறு ஆகியநிலங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இவற்றுள் வெட்டப்பேறு என்பது நாட்டுப் போக்கு தலைவாயர் வெட்டப்பேறு என்ற விளக்கமும் இச்செப்பேட்டில் குறிப்பிடப்படுகிறது. எனவே வெட்டப்பேறு பெற்றிருந்த தலைவாயர் அல்லது தலைவாயச் சான்றோர் எனப்படுவோர் மிகப் பழமையான மரபில் வந்த அதிகாரம் மிக்க பிரிவினர் என அறியமுடிகிறது.
வெட்டப்பேறு என்பது வைதிகக் கோயில்களுக்கும், பௌத்த சமணப்பள்ளிகளுக்கும் வழங்கப்பட்ட இறையிலி நிலங்கள் ஆகும்.
பிரம்ம தேயங்களின் வழியாகச் தமிழ்ச் சமூகத்திற்குள் தீட்டு, சமூக விலக்கங்கள், சாதி அடுக்குமுறை, பிராமணர்கள் மேலாதிக்கம் ஆகியன ஊடுருவி நிலைபெற்றன. தொழிலின் அடிப்படையில் முதலில் தீட்டு உருவாக்கப்பட்டு பின்னர் படிப்படியாக வளர்ந்து அது தீண்டாமை என்ற சமூகக்கேடாக உருவெடுத்தது. சமூக விலக்கம் என்பதை அரசே முனைந்து செயல்படுத்தியது பிரம்மதேயத் தானங்களுக்கான ஆவணங்களில் (செப்பேடுகள், கல்வெட்டுக்கள்) பிராமணர்களின் குடியிருப்புகளில் ஈழவர்கள் கள் இறக்குவதும், பிரம்ம தேய நிலங்களுக்கு நீர் கொண்டு செல்லும் வாய்க்கால்களில் மற்றவர்கள் தண்ணீர் இறைப்பதும் தடை செய்யப்பட்டது. இவை தவிர பிராமணர்களுக்கு மட்டுமே வீடுகளில் கிணறுகள் தோண்ட அனுமதி வழங்கப்பட்டது. இதன் மூலம் அவர்கள் தங்களை சுத்தம் செய்து கொள்ள அன்னியர் கை படாமல் தண்ணீர் பெற வழி செய்யப்பட்டது. பிற்காலங்களில் பிராமணர்கள் குடியிருப்புகள்அருகில் இருந்த குளங்களில் கிணறுகள் வெட்டப்பட்டு உறைகள் இறக்கப்பட்டன. உறை என்பது சுட்ட களிமண்ணால் ஆன, தேவையான உயரமும் விட்டமும் கொண்ட வளையம் தான் உறைக்கிணறு என்பதும் பல உறைகள் இறக்கப்பட்ட கிணறு என்பதனையும் குறிக்கும். சாயல்குடி என்ற ஊருக்கு அருகே உறை கிணறு என்ற ஊர் உள்ளது. பிராமணர்களுக்கு வீடுகளில் இருந்த கிணறுகளுக்கு நிலத்தடி நீர் ஆதாரம் கிடைக்க வழிவகை செய்யப்பட்டதுட தமிழகத்தில் இது போன்ற குளங்களின் மத்தியிலோ அல்லது உள்பகுதியிலோ பல இடங்களில் கிணறுகள் அமைக்கபட்டிருப்பதை காணலாம்.
அரசு என்ற நிறுவனம் விரிவடையும் போது காடழித்து நாடாக்கும் பணியும், புதிய நீர் ஆதாரங்கள் உருவாக்கப்படுவதும், அணைக்கட்டுகள் கட்டப்படுவதும் பாசன கால்கள் வெட்டப்படுவதும் பெருமளவில் நடைபெறுவது இயல்பு.
ஆறு, ஏரி, குளங்கள் போன்றே கிணறும் பண்டைத்தமிழகத்தின் வேளாண்மைப் பயன்பாட்டில் பரவலாக இருந்து வந்துள்ளது. இது போன்ற பொதுப்பணிகள் இரு விளைவுகளை உருவாக்கியது. வேளாண் குடிகள் விளைச்சலைப் பெருக்கினர். அரசு வருவாய் பெருகியது. இதன் பின்னனியில் உள்ள ச+ட்சுமம் என்னவெனில் புன்செய் நிலங்களை விட நன்செய் நிலங்கள் கூடுதலாக வரியினை செலுத்த வேண்டியதாயிற்று. கிணறுகள் பெரும்பாலும் வறண்ட நிலப்பகுதிகளிலேயே பாசனத்திற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன. நிலப்பரப்பு நீரின் போதாமை காரணமாகக் கிணறுகளின் மூலம் நிலத்தடி நீரைப் பயன்படுத்தும் முறை கி.பி.7-8 ஆம் நூற்றாண்டுகளிலேயே வழக்கத்திற்கு வந்துவிட்டது. கிணறு கல்வெட்டுக்களில் கிணறு, துரவு, நந்தவனம், ஊற்றுக்கேணி போன்ற சொற்களால் குறிக்கப்பட்டுள்ளது. கிணறு தொட்டல், கிணறு குழித்தல், கிணறு இழிக்கப்படுதல் போன்ற கல்வெட்டுச்சொற்கள் கிணறு தோண்டப்படுதலைக் குறிக்கின்றன.
போர்களில் சிறைப்பிடிக்கப்பட்ட அடிமைகளை இத்தகைய பணிகளுக்கு விஷ்டி அல்லது வெட்டி வேலைகளுக்குப் பயன்படுத்திக்கொள்வர். அந்நிலையில் இப்பணிகளை மேற்பார்வையிடுவதும், மதகுகள், கலிங்குகள் ஆகியவற்றைக் கண்காணிப்பதும் பாசனத்துக்குத் திறந்து விடப்படும் நீரின் அளவு முதலிய கணக்குகளை நிர்வகிப்பதும் அரசியல் அதிகார அடுக்கில் உயர் மட்டத்;தில் இருந்த ரஜ்ஜூகர் என்ற அதிகாரிகளின் பணிகளாகும். ராஜூகர் என்பது தமிழில் இராசக்கர் என அழைக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் தனித்சாதியினராகக் கருதப்பட்டனர் என்றும் இதனை அசோகன் கல்வெட்டுக்களிலும், அர்த்தசாஸ்திரம், மெகஸ்தனிஸ் எழுதிய இண்டிகா என்ற நூலில் அறியமுடிகிறது. ரஜ்ஜூ என்பது நீட்டல் அளவைக் குறிக்கும். ரஜ்ஜூகர் எனப்படுபவர் நில அளவைத்துறை, பொதுப்பணித்துறை ஆகிய துறைகளின் தலைமைப் பதவியை வகிக்கும் பொறியாளர்களுக்கு சமமானவர்கள்.
ஐயனார்
தமிழகத்தில் பல பகுதிகளில் நீர் நிலைகளில் காவல் தெய்வமாக ஐயனாரை அமைக்கும் வழக்கம் இன்று வரை தொடர்கிறது. இதற்கு ஆதாரமாக திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் வட்டத்திலுள்ள மகிழ்வண்ண நாதபுரம் என்ற ஊரில் சான்றார் குலத்தவரால் வழிபடப்படும் மேகம் சிறை கொண்ட ஐயனார் என்ற தெய்வத்திற்குக் கோயில் உள்ளது. இந்த ஐயனார் பாண்டிய குல மூதாதையே என்பதில் ஐயமில்லை. இந்த ஐயனார் மீது மேகம் சிறை கொண்ட ஐயனார் வில்லுப்பாட்டு என்ற நிகழ்த்து கலைப்பாடலும் உள்ளது. இந்த வில்லுப்பாட்டு இக்கோயில் மட்டுமின்றி அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் குதிரை மொழித்தேரி கருக்குவாள் ஐயனார் கோயில், கொற்கை கோட்டை வாழ் ஐயனார் கோயில் முதலிய ஐயனார் கோயில்கள் உள்ளது.
இவ்வாறு தண்ணீருக்காக பயன்படுத்தியவர்களை காலமாற்றத்தால் தற்பொழுது வெட்டிப்பய என்ற சொல்லை உபயோகிப்பவர்கள் நம்முன்னோர்களை நினைத்து வேற்று சொல்லை கூற முற்படுவோம்.
வைகை அனிஷ்
3.பள்ளிவாசல் தெரு
தேவதானப்பட்டி-625 602
தேனி மாவட்டம்.

Series Navigationதமிழ் ஸ்டுடியோவின் புதிய முன்னெடுப்பு – படச்சுருள் (அச்சிதழ்)நூல் மதிப்புரை – சாந்தாதத் அவர்களின் “வாழ்க்கைக் காடு”
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *