வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு புகையிலை பிறந்தகதை(காசி இனத்து பழங்கதை)

This entry is part 7 of 23 in the series 10 ஆகஸ்ட் 2014

கேட்டு சொன்னவர்: கின்பாம் சிங்க்னாங்க்கின்ரிஹோ தமிழில்:எஸ்ஸார்சி

இது நேர்மையான நட்பின் கதை. காசி பழங்குடி இனத்துச் சனங்களின் கதை.நட்புக்கு ஒரு எடுத்துக்காட்டென விளங்கிய இரு அன்பு உள்ளங்களின் வெளிப்பாடு.ஒருவரை ஒருவர் மனம் புண்படுத்த ஒப்பாத மனிதர்களின் வாழ்க்கைக்கதை. ஏழை பணக்காரன் என மக்கள் வித்தியாசம் பாராட்டாத காலத்து விஷயம் இது.
காசி இனமக்கள் வாழ்ந்த அந்த ஒரு கிராமத்தின் பெயர் ரங்கிர்விட். அங்கே உநிக், உசிங்க் என இருவர்.உசிங்க் மிகவும் வறியவன். அந்த வறியவனின் மனைவி பெயர் கலக். கலக் என்றால் காசி மொழியிலே அய்ஸ்வரியம் என்று பொருள்.
இன்றைக்கு நடப்பில் உள்ள நட்பு என்கிற இலக்கணத்தோடு அந்த இருவரின் நட்பைப் பார்ப்பது சரியாக வராது.நிக் பெரிய வணிகன்.அவனிடம் இல்லாத பொருள் என்பதுவே இல்லை.சிங்க் கூலிக்காரன். மரம் வெட்டுவதும் கல் உடைப்பதும் அவன் தொழில்.அன்றாடம் உழைத்தால்தான் பசி இல்லாமல் வாழமுடியும்.ஆனால் இந்த இருவரும் மிக மிக நட்பாக வாழ்ந்தனர். பணமும் அந்தஸ்தும் குறுக்கே வரவில்லை.
சிங்க் தினமும் நிக் வீட்டிற்கு ப்போவான்.முக மலர்ச்சியோடு அவனை நிக் உபசரிப்பான்.வீடு திரும்பும் சமயம் ஒரு நாளும் அவன் வெறுங்கையோடு வந்ததில்லை. ஏதேனும் கொடுத்து மட்டுமே அவனை நிக் அனுப்பி வைப்பான்.சிங்க் எனக்கு எதுவும் வேண்டாம் என்பான். நிக் அவன் சொல்வதை சட்டை செய்யாமல் கொடுத்துக்கொண்டேதான் இருந்தான்.
சிங்க் கும் அவன் மனையாள் கலக்கும் நீண்ட நாள் யோசித்தனர். இப்படி ஒரு அரிய நண்பனை எப்படி வீட்டிற்கு அழைக்காமலே இருப்பது. ஒரு நாளைக்கேனும் நாமும் நிக்கை வீட்டிற்கு க் கூப்பிட்டு அன்பு பாராட்டாமலா காலம் தள்ளுவது. வசதி இருந்தால் என்ன இல்லாமல் போனால்தான் என்ன நண்பன் நிக்கைத் தம் வீட்டிற்கு அழைப்பது என கணவன் மனைவி இருவரும் முடிவு செய்தனர்.
சிங்க் ஒரு நாள் நிக்கிடம்,’ நான் எத்தனை முறை உன் வீட்டிற்கு வந்து போயிருக்கிறேன். நீ என் வீட்டிற்கு ஒரு நாள் நட்பு முறையில் வரக்கூடாதா என்ன? உன் நிழலைக் கூட இன்னும் என் வீடு பார்த்ததில்லை. நான் வறியவன் என்பதாலா இப்படி?’ கேட்டுவிட்டான்.
‘ஏன் இப்படி ச்சொல்கிறாய் சிங்க் நீ எப்படி இருக்கிறாய் உன் குடும்பம் எப்படி நடக்கிறது உன் ஓய்வு நேரம் எப்படிக்கழிகிறது என்பதெல்லாம் காண எனக்கும் ஆசைதான்.உன்னோடு மதிய உணவோ அல்லது இரவு சாப்பாடோ உண்ண எத்தனையோ நாளாக ஆசை எனக்கு’ நிக் அன்போடு பதில் சொன்னான்.
; நிக் நீ என் வீட்டிற்கு ஒரு நாள் வரவேண்டும். நான் கொடுக்கும் கஞ்சியும் உப்பும் நீ ஏற்றுக்கொள்ள வேண்டும். என்ன?’
” நிச்சயம் நண்பா, மனம்தான் பெரிது.மனம் நிறைவானால் அதுவே இனிமை அதுவே மகிழ்ச்சி’
தன் வீட்டிற்கு என்று நிக் வருவது என்பது மட்டும்முடிவாகவில்லை.ஒருக்கால் அந்த நாளும் நிச்சயம் செய்யப்பட்டு பிறகு நிக், சிங்க் வீட்டிற்கு வந்திருந்தால் இந்தக்கதைதான் எப்படி முளைத்திருக்கப்போகிறது.
ஒரு நாள் நிக் சொன்னபடியே சிங்க் வீட்டிற்கு வந்தான். சிங்கிற்கும் அவன் மனைவி கலக்கிற்கும் தலையும் புரியவில்லை.காலும் புரியவில்லை.மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தார்கள்.நிக் மெய்யாகவே பெரிய மனிதன் தான் ஐயம் இல்லை. ‘நீங்கள் இருவரும் மனம் விட்டு சந்தோஷமாக பேசிக்கொண்டிருங்கள்’ எனச்சொல்லிவிட்டு கலக் அடுப்படிக்குள் ஏதோ வேலை எனச் சென்றாள்
பேசிக்கொண்டேயிருந்தார்கள் நண்பர்கள் இருவரும்.சிங்கிற்கு பெருமை பிடிபடாமல் இருந்தது.வந்த அரிய நண்பனை கவனிக்க வேண்டுமே.அனைவரும் உட்கார்ந்து ஒன்றாக ஏதும் சாப்பிட வேண்டுமே யோசித்தான்.சிங்க் அடுப்படிக்குச்சென்று தன் மனைவி கலக்கைத்தேடினான். தன் விருப்பத்தை அவளிடம் சொன்னான். கலக் தன் கணவனிடம் சொன்னாள்’ நான் என்ன செய்வேன்,வீட்டில் ஒரு பருக்கை சோறு இல்லை.கஞ்சி வைப்பதற்குக்கூட பிடி அரிசி இல்லை நான் என்னதான் செய்வது,சொல்லுங்கள்’.
சிங்க் மனம் நொந்து போனான். என்றுமே வராத ஒரு நண்பன் அல்லவா இன்று தன் வீட்டிற்கு வந்து மகிழ்ச்சி தந்திருக்கிறான். எப்படி ஒன்றும் தராமல் இன்னும் இருப்பது. இது நியாயமே இல்லையே.என்னதான் செய்யலாம் என யோசித்தான்.
‘ கலக் என் அன்பே நீ அடுத்த வீடு பக்கத்து வீடு எங்காவது சென்று ஒரு பிடி அரிசி கடனாக க்கேள்.நமக்கு வேண்டாம். வீட்டிற்கு வந்திருக்கும் அந்த நண்பனுக்காவது ஒரு சிறிது கஞ்சி சமைத்துக் கொடுக்க வேண்டும் அல்லவா. வாங்கிய அந்தக் கடனை உடன் திரும்பவும் கொடுத்துவிடுவதாய்ச்சொல்லி க்கடன் கேட்டு வாங்கி வா என்ன’ சிங்க் சொல்லி முடித்தான்.
கலக் பக்கத்து வீடு எதிர் வீடு என எங்கெங்கோ கடன் கேட்டுப்பார்த்தாள். வாங்கும் கடன திருப்பித்தரும் யோக்கியதை இருக்கிறதா என்று பார்த்துமட்டும்தானே கடன் என்பது சித்தியாகிறது.எல்லோரும் கை விரித்தார்கள்.அழுது கூட பார்த்தாள்.கதை ஆகவில்லை.வெறுங்கையோடு வீடு திரும்பினாள்கலக். எதிர்பார்த்திருந்த சிங்க் ஏமாந்து போனான். கலக் இனி எதுவுமே செய்யமுடியாது என உள்ளதைச் சொல்லி முடித்தாள்..
சிங்கிற்கு அவமானமாக இருந்தது.துக்கம் தொண்டையை அடைத்தது.மேலே தொங்கிக்கொண்டிருந்த கத்தியை எடுத்து த்தன் மார்பில் குத்திக்கொண்டான்.. இரத்தம் பீறிட்டது. அப்படியே தரையில் சாய்ந்தான். உயிர் பிரிந்துபோயிற்று. கலக் பார்த்தாள். மிக மிக இக்கட்டான ஒரு நேரம். உதவி செய்ய அண்டை அயலார் யாரும் முன் வரவில்லை. துன்பம் வறுமை அவமானம் இன்னும் என்னதான் வேண்டும்.ஆருயிர் கணவன் தன் வாழ்க்கைத்துணைவன் உயிர் போனபின்னே இனி செய்ய என்ன இருக்கிறது. ஆக நாமும்கணவர் காட்டிய அதே வழியில் செல்வோம். சட்டென முடிவுக்கு வந்தாள்.அதே கத்தியை எடுத்து தன் மார்பில் குத்திகொண்டாள்.’ அவனோடு வாழ்ந்தேன்.அவன் போனபின்னே நான் மட்டும் இருந்தென்ன? கலக்கின் உயிர் பிரிந்தது.
இத்தனைக் கொளறுபடிகளும் அடுப்பங்கரையில் நடக்க இவை எதுவுமே தெரியாத நிக்கிற்கு இனி இன்னது செய்வது என்று தெரியவில்லை. அடுப்பங்கரை என்பது காசி இன மக்களிடையே இறைவனின் கருவறை ஒத்தது. உள்ளே சென்றுதான் பார்ப்போமா, நிக்கிற்கு நேரம் போயிக்கொண்டே இருந்தது. சிங்கை க்காணவில்லை.ஏன் இப்படி த்தன்னை தனித்து விட்டு விட்டு நண்பன் போனான். என்ன ஆயிற்று.காசி இனத்து மக்களிடையே இப்படி அதிதியை தனித்து விட்டுச்செல்லும் பழக்கம் என்றும் இருந்ததில்லை.இது எந்தவிதத்திலும் ஏற்க முடியாத விஷயம்தான். நண்பன் அப்படிச்செய்பவனுமல்லன். ஆக இனி பொறுப்பதற்கில்லை என அந்த அடுப்பங்கறை நோக்கி நடந்தான் நிக்.
அடுப்பங்கறை எங்கும் ஒரே ரத்தம். நண்பனும் அவனின் மனைவியும் பிணமாக அல்லவா அங்கே கிடந்தனர்.அவனுக்குத் தலை சுற்றியது. வாய் பேச எழவில்லை.திணறினான்.அடுப்பில் கஞ்சிக்கு இட்ட உலை இன்னும் கொதித்தபடி இருந்தது. அரிசிப்பானையில் ஒரு அரிசி மணி கூட இல்லை. ‘ ஆகா என் நண்பனே நீ எனக்கு உணவு படைக்க முனைந்தாய் முடியவில்லை. உயிரை விட்டாய். உன் மனையாளும் உயிரை விட்டுவிட்டாள். உன் அன்பிற்காக மட்டுந்தான் இங்கு வந்தேன் உன் விருந்துக்கு நான் வரவில்லையே. என்னை ப்படைத்த கடவுளே என்னைக்காப்பவரே என்ன கொடுமையப்பா இது. இனி எனக்கு என்ன செலவம் இருந்து என்ன என் நண்பனே போவிட்டான்.நானும் அதையே செய்யப் போகிறேன்’ சொல்லிய நிக் அதே கத்தியை எடுத்து குத்திக்கொண்டு மாண்டுபோனான்.
சிங்கின் வீட்டில் நிகழ்ந்துபோன இந்த மூன்று மரணங்களைக்கண்டுகொண்ட அக்கம் பக்கத்துச் சேவல் – அந்த வானத்துக் கதிரவனின் முன் அறிவிப்பாளன்- விடியற்காலை வரவிருப்பதை அறிவித்தபடி ஒரு முறை கொக்கரக்கோ எனகூவி நிறுத்தியது. அருகில் எங்கோ திருடிவிட்டுவந்த திருடன் சேவலின் குரல் கேட்டுத்திக்கித்துப்போனான்.

அதற்குளாகவா இன்று விடிந்து போகும் இது ஏது ஆபத்து என திறந்து கிடந்த சிங்கின் வீட்டிற்குள்ளாக நுழைந்து பதுங்கக்கொள்வது என முடிவுக்கு வந்தான் அரவம் இல்லாத வீடு.நல்ல பதுங்குமிடம். அவனுக்கு தூக்கம் சொக்கியது. கண்ணை மூடினால் விடிந்துதான் எழுந்திருக்கமுடியும். ஆக உள் நுழைந்து கொஞ்சம் ஆராய்ந்தான்.’ ஆகா இது என்ன கொடுமை என் தாயே நானே ஆபத்து என தஞ்சம் புக இந்த வீட்டினுள் வந்தால் இங்கு வீடெங்கும் ஒரே ரத்தம். ரத்தத்தினூடே மூன்று பிணங்கள்.கணவன் மனைவி என ஓர் அன்புச்சோடி அவர்கள் அருகே ஒரு மாசில்லா நண்பன் மூவரும் பிணங்களாய்க் கிடக்கிறார்கள். வெளியில் தான் திரிந்தால் ஆபத்து என பதுங்க இங்கு வந்தால் உள்ளேயோ பேராபத்து. ஊர் மக்களிடம் மாட்டிக்கொண்டால் ஜைலுக்குத்தான் போகவேண்டும். தலைமுடியை சிறைத்து டிரம் வாத்தியம் அடிக்க அடிக்க சுற்றி ச்சுற்றி வந்தால் அந்த தூக்குக்கயிறுதான் காத்திருக்கும். விதி நமக்கு இப்படித்தான் கணக்கு போட்டு வைத்தருக்கிறது.அந்தப்படிக்கு அசிங்கப்பட்டு ஜையிலுக்குப்போய் சாவதைவிட இதோ இங்கே செத்துப்போயிருக்கிறார்களே இவர்களோடு நாமும் சேர்ந்து செத்துப்போவது எவ்வளவோ மேல் சொன்ன திருடன் அதே கத்தியை எடுத்து நெஞ்சில் குத்திக்கொண்டு அங்கேயே மடிந்து போனான்.
மறு நாள் காலை ரங்கிர்விட் ஊர் கூடியது. நடந்துபோன இந்த அநியாயத்திக்கண்டு பதைத்துப்போனது. காசு இல்லாதவர்கட்கு இனி சாவு மட்டும்தான் கதி என்றால் எப்படி. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்பது ஊரார் முடிவாகியது. தம்மைப் படைத்த அந்தக் கடவுளிடமே அவர்கள் கேட்டார்கள்.’ கடவுளே எங்களுக்கு ஒரு வழி காட்டு.பெரிய மனிதர்கள் நண்பர்கள் வீட்டிற்கு வந்துவிட்டால் என்ன செய்ய? கஞ்சி வைக்க அரிசி கிடைக்காவிட்டல் அதற்கு என்னதான் மாற்று வழி. எப்படித்தான் தன்வீட்டிற்கு விருந்தினர்களாக வந்த பெரிய மனிதர்களை ஒரு ஏழை மனிதன் மனதார கவனிப்பது , அது எப்படித்தான் எங்களுக்குச் சாத்தியமாகும்?’.
கடவுள் ரொம்பவும் யோசித்தார். மக்கள் கோரிக்கை மிக மிக நியாயமானது.இதற்கு ஒரு வழி செய்யவேண்டும்.இந்த வீட்டில் நான்கு பிணங்கள் கிடக்கின்றன.இப்படிச்செய்தால் என்ன. ஒரு பிணம் பாக்கு மரம், அடுத்த பிணம் வெற்றிலைச்செடி, மூன்றாவது பிணம் சுண்ணாம்பு அந்தக்கடைசி பிணம் புகையிலைச்செடி இப்படி இனி மாற்றிவிட்டால் பிரச்சனை சுலபமாய்த் தீர்ந்து விடும்.
‘இனி பெரிய மனிதர்கள் அல்லது யார் வந்தாலுமே அரிசி சமைப்பதுவோ தே நீர் தயாரிப்பதுவோ வேண்டாம்.காசி இன மக்கள் இனி வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு மற்றும் புகையிலை இவைகளைத்தட்டில் வைத்து ஒருவருக்கொருவர் கொடுத்து மகிழுங்கள் அதுவே சரி’ என்று கடவுள் பணித்தார். இன்றுவரைக்கும் அங்கு அப்படித்தான் நடக்கிறது..
சிங்கும் லக்கும் கணவன் மனைவியாயிற்றே ஆக வெற்றிலையும் சுண்ணாம்புமாயினர்., துணைக்கு வந்த அந்த நண்பன் நிக், பாக்கு ஆனான். திருடன் மட்டும் புகையிலையானான். ஆகவே புகையிலையை நாக்குக்கு அடியில் ஒளித்து வைத்து மட்டுமே போட்டுக்கொளவது என்று அந்த காசி பழங்குடி இன மக்களிடையே பழக்கம் வந்தது..
Series Navigationவால்ட் விட்மன் வசனக் கவிதை – 87அணுகுண்டு வீச்சு எனும் காலத்தின் கட்டாயம்
author

எஸ்ஸார்சி

Similar Posts

Comments

  1. Avatar
    vaLava. duraiyan says:

    கதையை வரிக்கு வரி மொழிபெயர்க்காமல் படித்து உள் வாங்கி எழுதி உள்ளமைக்குப் பாராட்டுகள். நாட்டுப்புறக் கதைகள் பெரும்பாலும் அறவழிப்பட்டவை. இது வறுமையிலும் செம்மையைக்காட்டுகிறது. அந்தத் திருடனின் குணம் மிகவும் போற்றற்குரியது. எஸ்ஸார்சிக்குப் பாராட்டுகள்

Leave a Reply to vaLava. duraiyan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *