வெல்லோல வேங்கம்மா

author
0 minutes, 0 seconds Read
This entry is part 12 of 31 in the series 7 ஏப்ரல் 2013

குழல்வேந்தன்

அழுத கண்ணும் சிந்திய மூக்கும் தலைவிரி கோலமுமா, ஓடர பஸ்ஸ தொறத்திப் புடிக்கிறமாரி ஓடிக்கினு இருந்தா அவ. அவளோட நிழலோட்டம் கூட, மதுரை ராஜாக்கிட்ட தன்னோட புருஷனுக்கு அழுதுக்கினே பத்திரகாளி மாரி நீதி கேட்டாளாமே கண்ணகிதெய்வம்!, அவளையே தோக்கடிக்கிற மாதிரி இருந்துச்சிங்க சாமி அவளோட போக்கு. இவ கைய்யில ஒரு துணி கைப் பைய்யி. அந்தக் கைப்பைக்குள்ள ஏதோ இருக்குது மூட்டையாட்டம் துருத்திக் கினு. அது என்னான்னு அவளத் தவுர யாருக்குத் தெரியும்?

ஆளு பாக்கிற துக்கு நல்லா லட்சணமாத்தான் இருக்கிறா, ராமாயணத்துல வர்ர சீதக் கணக்கா. ஆனா, அந்த சீதைய ராவணன் சிறை எடுத்துனு போயி அசோக வனத்துல வச்சானாமே, அப்போ எப்புடி சீதை துக்கப்பட்டாளோ அந்த துக்கத்தக் காட்டிலும் இவளோட துக்கம் ஆயிரம் மடங்கு இருக்கும்னு சொன் னாக்க ’ஆ அதுமெய்யாலமா’னு யாரும் சந்தேகப்படத் தேவை இல்லைங்க. எதையோ பறிகொடுத்தவ மாரி இவளோட கண்ணுல சொல்லமுடியாத ஒரு ஏக்கம். அவளோட கண்ணு ரண்டும் என்ன காரணத்தாலையோ அழுது அழுது கோவப் பழமாட்டம் செவந்து கொய்யாப் பழமாட்டம் வீங்கினு இருக்குது.

அவ தலைய சீவி எப்புடிப் பாத்தாலும் மூணுநாலு நாளு இருக்கும் போல. எண்ண கிண்ண வைக்காம இருந்ததால பாக்கிறதுக்கு அவளோட தல மயிரு சுருள்சுருளா இருந்ததால குருவிக் கூடாட்டம் சிக்குசிக்கா பஞ்சு பஞ்சா இருக்குது.அவளோட நெஞ்சிக்குள்ள அட நல்ல தங்காமாரித் தான் நம்புளுக்கும் பிரம்மதேவன் தலைஎழுத்த எழுதிப்புட்டான் பாவினு நெனச்சிக்கினே அவ பஸ்ஸு வர்ரதுகூட தெரியாம தன்னோட காலு போற போக்குல நடந்துக்கினு, இல்ல இல்ல, ஓடிக்கினு இருந்தா, படச்சவன சபிச்சிக்கினு.

அப்போதான் நம்ம முனியன், வேலுமணி டீ கடைல டீய குடிச்சிக்கினு பேப்பர பாத்துக்குனு இருந் தவன் என்னமோ ஏதோனு காச கூட குடுக்காம கடைல இருந்து வேகமா ஓடி பைத்தியக்காரிமாதிரி ஓடிக்கினு இருந்தானு சொன்னமே,அவளுக்கு முன்னால போயி கப்புனு நின்னான். அப்புறம் “எங்கூட ஒண்ணும் யோசன கீசன பண்ணாம பொறப்பட்டு வா”, என்ற மாரி தன்னோட கண்ணுலையே வேங்கம்மாவுக்கு ஜாடை காட்டினான் முனியன். “யாரு என்னானுகூட தெரியாம வா வா னு கூப்புடறானே இவன், என்னாடி இது அநியாயமா இருக்குது” னு வேங்கம்மா முனியனப் பாத்து பல்ல நறநறன்னு கடிச்சிக்கினு கோவமா மொறச்சா.

அதுங்காட்டியும் அந்த டௌன் பஸ்ஸு வர்ர வேகத்தப் பாத்தா ரண்டு பேரை யும் பஸ்ஸு பூரிக்கித் தொட்டுக்கிற உருளக்கெழங்குமசாலாவாக்கிப்புடற மாரி இருந்துச்சி. ஒடனே பஸ் ட்ரைவர் ஏகாம்பரம் பஸ்ஸ அவுங்க மேல மோதாம ஒடிச்சி பிரேக்கடிச்சி நிறுத்திப்புட்டு“அட இது என்னாடா புருஷன் பொஞ்ஜாதி சண்டை நடுரோட்டுக்கே வந்துட்டாப்புல இருக்கு! சாவு கெராக்கிங்களா, நீங்க சண்டபோட்டுனு சாவறதுக்கு என் வண்டிதானா கெடச்சிச்சி? நாம்போ ஒழுங்கா வண்டிய ஓட்டினு போனா கூட வந்து வாய்க்கிது பாரு துரதிஸ்ட்டம். எல்லாம் என்னோட கஸ்ட்ட காலம். போறாத நேரம். அண்ணைக்கி அப்புடித்தா பென்னாகரத்துக்கு போயினே இருக்காங்காட்டியும் எதுத்தாப்புல இருந்து வந்த பஸ்ஸுல இருந்து டபக்குனு என் சீட்டுலியே ஒரு கைய்யி அடிப்பட்டு முறிஞ்சி உழுந்துடுச்சி. இந்தமாரி கண்றாவி மூஞ்சிங்களுல முழிச்சிப்புட்டு நான் வண்டிய எடுத்தாக்க அய்யோ சாமி என்னோட பொழப்பும் இந்த ஜனங் களோட பொழப்பும்?” என்று அந்த பஸ் ட்ரைவர் சலிச்சிக்க, கண்டக்டர் காசி ”உடுப்பா வண்டிய; நம்புளுக்கு எதுக் குப்பா ஊரு வம்பு. ஏம்மா உங்க சண்டைய ஊட்டுலையே வெச்சிக்கக் கூடாதா? நாலு பேரு பாக்குற மாரி நடு ரோட்டுல எதுக்கியா இந்தமாரி? ரண்டு பேரும் போங்க; போங்க போயி ஒத்து மையா பொழப்பப் பாருங்க சாமி”னு சொல்லிப்புட்டு “ரைட் ரைட்”னு பிகில வாயில வச்சி ஊதின ஒடனே காவேரியை நோக்கிப் பொறப்பட்டுச்சி பஸ்ஸு.

”எக்கா, அட இந்த கண்டக்ட்ரும் ட்ரைவரும் சொல்றதக் கேட்ட இல்ல. என்ன அநியாயமா இருக்குது? உன்னையும் என்னையும் பாத்து பொஞ்ஜாதி புருஷன்” னு சொல்றாங்களே அட முருகா!”னு சொல்லிப்புட்டு முனியன் ”ஏ எக்கா நீ ஏக்கா என்னுமோமாரி இருக்க?உன்னப் பாத்தா வவுத்துக்கு சோறு தின்னு நாலுநாளு ஆனமாரி இருக்குது. நீ எங்கூட வாக்கா. தோ வேலுமணி டீக்கட இங்க பக்கத்துலதான் இருக்குது.அங்க மொதோ போவலாம்.நீ நாக்க நனச்சிக்க அப்புறம் எதாந்தாலும் சாவகாசமா நம்மளோட ஊட்டுல போயி பேசிக் கிலாம்.”னு சொல்லி வேங்கம்மாவ வேலுமணி டீக்கடைக்கி கூட்டினு போனான்.

“எக்கா கூச்சப்படாதக்கா. உனுக்கு என்னாக்கா வேணும்? காப்பியா? டீயா? பிஸ்கோத்து கிஸ்கோத்து பன்னு கின்னு எதுனாச்சும் உனுக்கு புடிச்சத தின் னுக்கா.” னு அவன் சொன்னப்போதான் வேங்கம்மாளுக்கு சொய நெனவு திரும்புச்சிப் போல. அவ தேம்பித் தேம்பி அழ ஆரம்பிச்சிட்டா அப்புறம். “எக்கா அட அழுவாதக்கா. எத நெனச்சிக்கினு இப்புடி பச்சப்புள்ளையாட்டம் அழுவுற? என்னடா இது, ஊரு ஒறவு எதும் தெரியாத எவனோ நம்பள இங்க கூட்டி யாந்து நாலு பேரு இருக்கிற எடத்துல வச்சிக்கினு டீயக் குடிக்கிறியா? காப்பிய குடிக்கிறியா? பன்னு தின்றையா? பிஸ்கோத்து தின்றையா? னு கேட்டா அந்த கண்டக்டரமாரியும் ட்ரைவரமாரியும் பாக்கிற நாலு பேரு என்னா நெனப்பாங்க? ஏதுனு புரிஞ்சிக்குவாங்க?னுதான நீ யோசன பண்ணுற? அதும் இல்லாம ’இந்த ஆம்புள யாரோ? எப்புடிப்பட்டவனோ? மூஞ்சியக்கூட முன்னப் பின்ன பாக்காம எதோ தெரிஞ்சவன் மாரி இல்ல வந்து கூப்புடறான்? இது எப்புடிப் போயி முடியுமோனு நீ நெனைக்கிறது எனுக்கு புரியிது எக்கா. நீ என்ன யாரோ? என்னா ஜாதியோ? எந்தமாரி ஆம்புளையோ? னுகூட நெனைக் கலாம். ஆனா, எக்கா, சத்தியமா சொல்றேன். உன்னப் பாத்தா செத்துப்போன எங்கக்கா மாரியம்மாவாட்டம் அச்சி அசலு அப்புடியே நீ இருக்கிறக்கா. உன்னப் பாத்தவொடனே எனக்கு பொறந்தவளோட நெனப்பு வந்திடுச்சிக்கா” னு இவன் கண்ண கசக்க, வேங்கம்மாவுக்கும் இவன்மேல ஒருவிதமான அனுதாபமும் நம்பிக்கையும் பாசமும் வந்திடுச்சி.

’சரி நம்புளாட்டமே ஒரு பொண்ணுக்கும் சொல்லமுடியாத வேதன இருந்து அவ செத்துப்போனானு வேற இவன் சொல்றானே! இவனோட அக்காக்காரி கதையனாச்சியும் கேட்டுப்புட்டு அப்புறம் நம்ப நெனப்புப்படி செஞ்சிக்கிலாம்’னு முடிவெடுத்தா அவொ தன் மனசுக்குள்ளையே.

முனியன் ”எக்கா பஸ்ஸு உன்மேல மோதறமாரி வர்ரதுகூட தெரியாம நீ பாட்டுக்கு என்னுமோ உங்கொப்பமூட்டு ரோட்டுல ஓட்டப் பந்தையத்துல ஓடர கிண்டி ரேசு குதுரையாட்டமா நெப்பு நெதானம் தெரியாம ஓடிக்கினு இருந்த. அத என்னால தாங்கமுடியல. நீ எங்கக்காவாட்டம் வேற இருக்கி றையா! அதனாலத்தான் உன்ன இங்க கூட்டியாந்தன்.” னுசொல்லி தான் அவளை அழைத்துவந்ததுக்கான காரணத்த தப்பு பண்ணிப்புட்டு வாத்தி யாருக்கிட்ட மன்னிப்பு கேக்குற பள்ளிக்கூடத்து புள்ளமாரி வேங்கம்மாவப் பாத்து கண்கலங்கினான் முனியன். இவளுக்கும் கண்ணுல தண்ணி காவேரி கெனாத் தீர்த்தமாட்டம் ஊத்துது.

வேலுமணி முனியனப் பாத்து “எப்பா முனியா,யாரு இந்த அம்மா? என்னுமோ நீ பாட்டுக்கு டீய குடிச்சிக்கினு இருந்தவன் மடமடன்னு எழுந்து ஓடற, அப்புறம் இந்த அம்மாள கூட்டியாந்தினு இருக்கியே? என்னாப்பா உன் போக்கு விடுகதையாட்டமில்ல இருக்குது இந்த அம்மா யாரு?” னு கேக்க, “தோ இந்த அக்காளுக்கு ஒரு கெலாசு டீயும் நாலு பன்னும் குடு. என்னோட கணக்குல எழுதிவச்சிக்க. எதாந்தாலும் நாளைக்கி பேசிக்கலாம்” னு சொல்லி வேலுமணி யோட வாயிக்கு ஒரு பூட்டுப் போட்டு அவனோட வாய அடச்சான் முனியன்.

வேங்கம்மாவுக்கும் பசின்னா அப்பேற்க்கந்த பசி. இவளும் ஊட்ட உட்டு வந்து மூணு நாலு நாளாச்சி. திண்ணப்பட்டில இருக்கிற அவளோட அம்மா ஊட்டுக்குத்தான் இவ மொதல்ல போனா. அம்மாக்காரிக்கிட்ட “எம்மா, உன் மருமவன் எங்கிட்ட ஒரு லட்சமாச்சும் ரண்டு லட்சமாச்சும் வாங்கியாந்தாத்தா ஊட்டுக்கு வரணும். இல்ல்லாட்டி உங்கோயா ஊட்டுலியே இருந்துக்கோ னு சொல்லறாருமா. நாம்ப என்னாம்மா பண்ணறது?” ன்னுசொல்லி கண்ண கசக்க, ”நீ ஒண்ணும் கவலப்படாத கண்ணு. நீ உங்க ஊட்டுக்கு இப்போ போ. தோ நம்போ தோட்டத்துல இருக்குற கரும்ப வெட்டி வித்துட்டு நானே பணம் கொணாந்து தர்றேன். ஆனா, உங்கூட்டுக்காரன் இப்புடியே பண்ணினு இருக் கறது செரி இல்ல. நான் இந்த தபா காச குடுத்துட்டு உங்க மாமனாரு மாமியாக்கிட்ட நாயம் கேக்காம உடமாட்டேன். நானோ தாலி அறுத்தவ. எப்போ பாரு அம்புட்டு குடு, இம்புட்டு குடு, பவுன கொண்டா, சொத்த கொண்டா,வண்டி வாசியக் குடுன்னு கேட்டா எப்புடிம்மா”னு அம்மா சொல்ல, இவ தரைல தூக்கிவீசப்பட்ட மீனாட்டமா துடிச்சித்தான் போனா.

’அம்மாக்காரி ’நீ உங்கூட்டுக்கே போங்கிறா. புருஷங்காரனோ பணம் இல்லாம வராதேங்கிறான். என்னடா பகவானே செய்யறது? நம்போ தலையெழுத்து பொறந்த எடத்துக்கும் போகமுடியாம புருஷனோடையும் காலங்கழிக்க முடியாம நடுகாட்டுல தவிச்ச தமயந்தி கணக்கா ஆயிடுச்சே’னு நெனச்சி அவ பட்ட வேதனை அவளத் தவிர யாருக்குத் தெரியும்? போக்கெடத்துக்கோ சோறு தண்ணிக்கோ இவ தெரிஞ்ச சொந்தக்காருங்க யாரு ஊட்டுக்கும் போவ விருப்பப்படல. இந்த நாலு நாளா பவுலு நேரத்துல பேயாட்டம் அலைய வேண்டியது. ரவிக்கி ஒரு கோயில் நடையில போயி கட்டைய சாச்சிக்க வேண்டியது. தன்னோட மனசு போக்குல என்னென்னமோ யோசிச்சிக்கினு இருக்கவேண்டியது. தண்ணி தாகம் எடுத்தாக்க ஒரு தெருக்கொழாயில குடிச் சிக்கவேண்டியது. இப்புடியேத்தான் இவளோட நெனப்பும் போக்கும் இருந்துச்சி.

அப்புறந்தான் நம்ம முனியன் இவளக் கண்டுபுடிச்சிட்டானில்ல? முனியனோட விருப்பத்துக்காகவும் டீக் கடக்காரு தொணதொணனு எதுவும் கேட்டுறக்கூடா தில்லையா? அதுக்காகவும் அவளுக்கு கண்ணிருண்டு காதடச்சதாலையும் அவ அந்த நாலு பன்னையும் தின்னு டீயயும் குடிச்சா. அத பார்த்த அப்புறந்தான் முனியனுக்கும் திருப்தி வந்துச்சி.

“எக்கா தோ கொஞ்சம் நில்லு. ஸ்கூட்டர திருப்பியாரேன். நாம நம்பூட்டுக்கு போவலாம்”னு சொல்லி தன் ஸ்கூட்டரை வேங்கம்மா உக்கார்றதுக்கு வசதியா கொண்டாந்து நிறுத்தினான். அவளும் கதை கேக்குற ஆசைல வண்டில ஏறிக்கினா. அப்புறம் இவன் வண்டிய ஊட்டுலதா வந்து நிறுத்துனான். ஊட்டுக்கு வர்றவரைக்கும் முனியன் வேங்கம்மாவாண்ட ஒத்த வார்த்தக் கூட பேசல. புருஷன் வர்றத ரொம்ப ஆசையா எதிர்ப்பார்த்துனு இருந்த துளசிக்கி இவன் ஒருத்திய ஊட்டுக்கு கூட்டியாரது ஒண்ணும் அதிசயமில்ல. இவனோட குடும்பம் நடத்த ஆரம்பிச்சி ரெண்டு வருஷமாகியும் ஒரு பொம்பள ஊட்டுக்காரனோட கொணம் தெரியாமலா இருப்பா? ’ஐய்யோனு யாராச்சும் கலங்கி நிக்கிறதப் பாத்தா தன் புருஷனுக்குப் பொறுக்காது’இங்கிறதும், ’சக மனுசனுக்கு கஷ்ட்ட நேரத்துல ஒதவாட்டி பொறப்பு எதுக்கு?’ இங்கிறதும் கணவனொட புத்திப்போக்கு’இங்கிறதும், மத்த புருஷரமாரி தப்புத்தண்டா வுக்குப் போறதில்ல, தண்ணி கிண்ணி பீடி கீடினு ஒரு கெட்டப் பழக்கமும் வச்சிக்காதபோது நாம எதுக்கு அவங்க செய்யற நல்ல காரியங்களுக்கு தடுப்பா இருக்கணும்?முடியறவரைக்கும் ஊட்டுக்காருக்கு அனுசரணையா இருக்குணும்; முடியலன்னா அவுங்களுக்கு உபத்திரவம் குடுக்கக்கூடாது னு நெனைக்கிறவ தான் துளசி. அதனால முனியன் வந்ததும் முனியனுக்குக் குடுக்கிற மாரியே கைக் கால் கழுவ வேங்கம்மாவுக்கும் சொம்புல தண்ணி குடுத்து “கை காலு கழுவினு வாங்க ரெண்டு பேரும். சூடா உப்புமா பண்ணி வச்சிருக்கேன். எதாந்தாலும் தின்னுப்புட்டு மெதுவா பேசிக்கலாம்.” னு சொல்ல, “தோ துளசி இந்த அக்காவப் பாத்தா உங்க நாத்தனா செத்துப்போன மாரியம்மா மாரியே இல்ல?” என முனியன் கேக்க, “ஆமாங்க அச்சு அசல் அவங்களாட்டமே இருக்குதே! ஒரு வேள ரண்டு பேரையும் பக்கத்துல வச்சிப் பாத்தாக்க ரட்டப் பொறப்புங்கனோ,இல்லன்னா அக்காத் தங்கச்சிங்கனோதான்னு பாக்கிறவங்க சொல்லுவாங்க. செத்த மாரியம்மா அக்காதான் உசுரு பொழச்சி வந்தமாரி இல்ல இருக்கு? நெசமாவே என் கண்ணையே என்னால நம்பமுடியலிங்க!” னு துளசியும் வந்தவளப் பாத்து அதிசயப்பட்டு நின்னா.

முனியன் ”எக்கா உள்ள வாக்கா. குளிச்சி சாப்புட்டுப்புட்டு எதுவானாலும் பேசிக் கலாம். துளசி நாம மாரியம்மா அக்காவுக்கு பொங்கலுக்கு படச்சோமில்ல அந்த புதுப் பொடவை ரவிக்க துண்டு எல்லாத்தையும் இந்த அக்காவுக்குக் குடு. நானும் நம்ம செவத்தாமூட்டு கெணத்துல போயி குளிச்சிப்புட்டு வந்துட றேன். அக்காவுக்கு என்ன செய்யணுமோ எல்லாம் செஞ்சி பத்திரமா பாத்துக்கோ” னு சொல்லிப்புட்டு குளிக்க பொறப்பட்டான் இவன்.

துளசியும் “எக்கா, வாக்கா.வந்து பல்ல வெலக்கிக் குளிச்சிப்பிட்டு சாப்பிடுக்கா” னு சொல்லி குளிக்க சுடுத்தண்ணிய திட்டமா வெளவி வச்சா. வேங்கம்மா வுக்கு நடக்கிறது கனவா நெனப்புதானானு சந்தேகமா இருந்துச்சி. அதனால அவ தன்னோட கைவெரலால தன்னோட தல மயிர இழுத்துப் பாத்துக்கிட்டா.

’வாக்கப்பட்ட ஊட்டுல இதுமாரி ஒரத்தராச்சும் ஒருநாளாச்சும் வாய் நெறைய பேசினதுண்டா? அவங்க குடும்பத்துக்காக நாம மாடாட்டம் ஒழைக்கிறோமே அதுக்காச்சும் ஒரு நல்லது கெட்டதுக்கு அனுப்புறதுண்டா? ஒரு நாளாச்சும் கட்டினவனோ மாமியாக்காரியோ திண்ணையா கொண்டையானு கேட்டதுதான் உண்டா? நல்லநாளு பண்டிகைக்கி ஒரு துணிமணிதான் வாங்கித் தந்த துண்டா? இவங்க யாரோ எவுரோ, புருஷனும் பொண்டாட்டியும் சொந்தபந்தம் மாரி பாத்துப்பாத்து கெவினிச்சிக்கிறாங்களே”னு நெனச்சி நெனச்சி வேங்கம் மாளோட கண்ணுல தண்ணி முத்து முத்தா வடியிது; உடாம பெய்யிற புது மழையாட்டம் பொழியிது.

“எக்கா நானு உனுக்கு எதாச்சும் கொற வச்சிப்புட்டனா? எதுக்குக்கா இப்புடி அழுவுற? தண்ணி சூடு அதிகமா? இல்ல பத்தலையா? எதாச்சும் கொறபாடு இருந்தா சொல்லுக்கா”னு துளசி கேக்க, “தாயி, நீயும் உன் புருஷனும் நல்லா இருக்குணும். தோ நானு குளிச்சிப்பிட்டு வந்துடறேன்”னு சொல்லிக் குளிக்க ஆரம்பிச்சா வேங்கம்மா.

“எக்கா, உன் கைப்பையி இங்கதான் இருக்குது. அதுல இருந்து உனுக்கு மாத்து சீலத்துணி, பாவாட, ஜாக்கிட்டு எல்லாம் எடுத்துத்தரட்டுமா”னு துளசி கேக்க, அப்போதான் வேங்கம்மா, தன்னோட குட்டு இவங்களாண்ட வெளிப்பட்டுரு மேனு நெனச்சித் தயங்கினா.

அதுக்குள்ள துளசி “அட வெக்கப்படாதக்கா. நானும் உன்னாட்டம் பொம்புள தான். தோ, உனுக்கு தேவையானத உன் கைப்பைல இருந்து எடுத்துத் தர் றேன்”னு சொல்லி அந்தக் கைப்பைக்குள்ள கைய்ய உட்டா.

“எக்கா, இது என்னாக்கா இத எதுக்குக்கா நீ உன் பைக்குள்ள வச்சினு இருக்க? ஒட்டந்தழைய போயி யாராச்சும் இப்புடி திண்பண்டமாட்டம் ரொப்பி வச்சினு இருப்பாங்களா? எக்கா நீ செய்ய நெனச்சது பெரிய தப்புக்கா. நானு உன்னோட வயசுக்கு ரொம்ப சின்னவ. நானு உனுக்குப் புத்தி சொல்லக்கூடாதுக்கா. நீ கோவிச்சிக்காத. இதோ இப்போவே நானு இந்த தழைய எருக் குப்பைக் குழில போட்டுப்புட்டு வர்றேன்”னு சொல்லி அந்த பையிக்குள்ள இருந்த உயிர்க் கொல்லியான அந்த ஒட்டன்தழைக் குவியல குப்பக்குழில போட்டுபிட்டு வந்தா துளசி.

வந்தவ வேங்கம்மாவுக்கு கட்டிக்க மாத்து துணி குடுத்து கட்டிக்கச் சொன்னா. வேங்கம்மாவால மறுக்கமுடியல. வாங்கி துணி மாத்திக்கினா. “எக்கா, அவுரு வர்ற நேரமாவுதாட்டங்கிது. நான் உனுக்கு உப்புமா போடறேன்; நீ மொதோ தின்னுக்கா” னு இவ கேக்க, ”அவுரும் வரட்டும். அப்புறம் சாப்பிடலாம். அதுக்கு என்னா அவசரம்? னு சொல்லி வேங்கம்மா இவளத் தடுத்தா.

அப்புறம், “எக்கா நீ எந்த ஊருக்கா?உனுக்கு இந்த நெனப்பு வர என்னாக்கா ஆச்சி? ஒரு பொம்பளையோட கஷ்ட்ட நஷ்ட்டமெல்லாம் இன்னொரு பொம்ப ளைக்கித் தாங்க்கா புரியும். நீ எதுக்குக்கா இந்த மாரி முடிவுக்கு வந்த? என்ன உன் தங்கச்சியாவோ இல்லனா கூட்டாளியாவோ நெனச்சினா எங்கிட்ட சொல்லுக்கா. இல்ல, நான் கேட்டது தப்பா இருந்தா மன்னிப்பு குடுக்க்கா” னு துளசி கேக்க,

“தாயி எந்த பொம்பளைக்கும் வரக்கூடாத கஷ்ட்டம் எனுக்கு வந்திருச்சி தாயி. ஒருத்தி பொம்பளையா பொறக்கிறதே பாவம். அதுவும், தகப்பன் இல்லா புள்ளையா இருந்துப்புட்டா? நானு நல்லா படிச்சி பட்டம் வாங்கி ராணியாட்டம் ராஜாங்க உத்தியோகம் பாக்க ஆசப்பட்டேன். ஆனா, என் விஷயத்துல அதுக்கு குடுப்பன இல்ல தாயி. பகவான் என்ன வாழவும் உடமாட்டங்கிறான். தோ உன்ன ஒரு சூச்சுமக்கவுரா வச்சி, சாகவும் உடமாட்டங்கிறான். நான் என்ன பண்ணறதோ தெரியலியே? னு சொல்லி வேங்கம்மா தேம்பி தேம்பி அழ,

“எக்கா கொஞ்சம் புரியறமாரி சொல்லுக்கா”னு துளசி கேக்க,

“ஒரு பொண்ணு தன் மனசுக்கு மூடி போட்டும் வைக்கமுடியாது. தொண்டைல இருக்கிறத நாக்குக்குமேல கொணாறதும் கஷ்ட்டமாத்தான் இருக்கு. என் நெலமைய நான் சொல்லுலன்னா நீ என்னுமோ ஏதோனு நெனச்சிக்குவ. சரி, உங்கூட்டுக்காரு வரவரைக்கும் என் கதைய சொல்றேன் கேளு. என் புருஷன் ஊரு வெல்லோல. அவங்க அம்மா எனுக்கு தூரத்து அத்த மொறையாவணும். என் பேரு வேங்கம்மா. என்னோட தாயூடு தின்னப்பட்டி. நானு எங்க குடும்பத்துல ஒத்தைக்கி ஒருத்திதான். எங்கப்பங்காரன் எனுக்கு எட்டு வயிசு இருக்கிறப்போ பாம்பு கடிச்சி செத்துட்டாரு. எங்கம்மாதா என்ன கிளியாட்டம் வளத்துச்சி. எனுக்கு அப்பா இல்லாத கொற தெரியாம வேணுங்கிறதெல்லாம் வாங்கிக் குடுத்துச்சி. எங்குளுக்கு எங்கப்பாவோட பூர்வீக சொத்து, கொல்ல ரண்டு ஏக்கராவும் கழனி ஒரு மூணு ஏக்கராவும் இருக்குது. எங்கம்மா ஆளு வச்சி பண்ணையம் பாக்கும். சமயத்துல குத்தகைக்கும் நல்லவங்கள பாத்து பண்ணையத்த உட்டுப்புடும். அப்புடித்தான் வெல்லோலைல இருக்கிற எங்க மாமனாரு கொஞ்ச காலம் எங்க நெலங்களையும் பக்கத்து நெலங்களையும் குத்தகைக்கு எடுத்து கொல்லைல அவர தொவர எள்ளு கொள்ளுன்னும் கழனில நெல்லு கரும்புன்னும் போட்டு நல்லா பணம் பாத்தாரு. சும்மா சொல்லக்கூடாது. எங்களுக்கும் குத்தகத் தொகயும் ஒழுங்கா குடுத்திட்டு இருந்தாரு. நானும் எங்கம்மாவோட ஆசைக்கு ஏத்தாப்புல நல்லாதா படிச்சேன். பத்தாவுதுல க்ளாஸ்லியே ஃபஸ்ட்டு மார்க் வாங்கினேன். 450 மார்க் வாங்கினதால எங்கம்மாவும் என்ன மேல மேல படிக்க வைக்க ஆசப்பட்டுச்சி. எங்கம்மா என்ன ”நீ எம்புட்டு வேணும்னாலும் படி கண்ணு. உன் படிப்புக்கு நானு எம்புட்டு வேணும்னாலும் செலவு பண்ணுறேன். உனுக்கு வேண்டியத நானு செய்யறேன். நல்லா படிச்சி நீ கவர்மண்டு வேலைக்கி போயி கை நெறையா சம்பாதிக்கணும். நானு அத கண்ணு நெறைய பாத்துப்புட்டுதான் கண்ண மூடணும்”னு சொல்லும். நானும் ”நல்லா படிப்பேம்மா. நீ கவலப் படாத”னு சொல்லுவேன். நல்லா படிச்சதால +1ல எனுக்கு ஃபஸ்ட்டு குரூப்பே கெடச்சிச்சி. நானும் நல்லாதான் படிச்சேன். +2 பரிட்சை எழுதுனேன். பரிட்ச எழுதறத்துக்குள்ளயே என்ன எங்க மாமனாரும் எங்கூட்டுக்காரும் பொண்ணு கேட்டு வந்தாங்க. ”நானு காலேஜி படிக்கிறம்மா”னு எங்கம்மாக் கிட்ட கண்டிஷனா சொன்னேன். கால சுத்துன பாம்பு கடிக்காம உடாதுங்கிற கணக்கா எங்கூட்டுக்காரு உடந்தொடன்னு பொண்ணு கேட்டு ஆளனுப்புறதும் வந்து வந்து போறதுமா இருந்தாரு. எங்கம்மாவும் ”பரிச்ச எழுதட்டும், அப்பறம் பாக்கலாம்”னு சொல்லி அனுப்புச்சி. ”கவலப்படாதம்மா நாங்களே பொண்ண காலேஜில சேத்து படிக்க போடுறோம். அவளோட படிப்புக்கு நாங்க குறுக்க நிக்கமாட்டோம்”னு சொன்னாங்க. ”நம்ப சொந்தம் வுட்டுப் போயிடக்கூடாதில் லையா? னு என் மாமியா மாமனாரு கேக்க, ”சரி, படிக்கவைக்கிறது உங்கப் பொறுப்பு. பொண்ணு நானு சொன்னா தட்டமாட்டா. காலாகாலத்துல இவளுக்கு நடக்கவேண்டியது நடந்தா எனுக்கும் சொம கொறையும். இண்ணைக்கிதா பாக்குறோமே எத்தன பொம்பளைங்க கல்யாணத்த பண்ணிக்கினு படிக்கிறத… அதனால இவ கல்யாணத்துக்கு எனுக்கு சம்மதம்”னு எங்கம்மாவும் ஒத்துக் கிச்சி. அப்பறம் அந்த மே மாசமே கல்யாணம் நடந்துச்சி. அம்பது பவுனும் ரொக்கம் ஒரு லட்சமும் எனுக்கு, ஒத்த புள்ளங்கிறதனால எங்கம்மா அவங்க கேக்காமலே சீர் செஞ்சிச்சி. +2 ரிஸல்ட்டும் வந்துச்சி. நானு 1000 மார்க் வாங்கினு இருந்தேன். கல்யாணம்முடிஞ்ச ரெண்டு மாசத்துலையே எங்கூட்டுக் காரரோட சுயரூபமும் சுயநலமும் எனுக்கு புரிஞ்சிடுச்சி. ”என்னங்க மாமா, நான் காலேஜிங்களுக்கு அப்ளிகேஷன் போடறேன். எனுக்கு இருக்கிற மார்க் குக்கு ஏத்த குரூப்புல சேந்து படிக்கிறேன்”னு சொன்னவொடனே ”காலேஜுல படிக்கிறத அப்புறம் பாத்துக்கலாம். படிப்பு எங்க போயிடப்போவுது…நீ என்னா பெரிய படிப்ப்பு படிச்சிப்பிட்ட இப்போ. ஆமா நீ அதிகம் படிச்சிப்பிட்டன்னா என்னையும் எங்கம்மா அப்பனையும் எங்க மதிக்கப்போற? நீ பட்டப்படிப்பு படிச்சி அமுதாவாட்டமோ லில்லியாட்டமோ பெரிய கலேக்டராயிடுவியாக் கும். பொம்பளையா லட்சணமா இரு. ஊட்டு ஆளுங்க மனச புரிஞ்சினு ஒழுங்கா இரு. தல தீபாளிக்கி ஒங்க அம்மாக்கிட்ட சொல்லி நானு தொழில் பண்றதுக்கு மொதலீடு வாங்கினு வா. ஒரு ஸ்கூட்டரோ காரோ வாங்கித் தா. அப்போதானே உன்ன ராணியாட்டமா அங்க இங்க கூட்டிப் போவமுடியும்?” னு சொல்லி எங்கூட்டுக்காரு நச்சரிக்க ஆரம்பிச்சாரு. மாமியாளும் மாமனாரும் எங்கூட்டுக்காரருக்கு ஒத்து ஊதுறாப்புல நடந்துக்கிட்டாங்க. ஆச்சி. தல தீவாளீ யும் வந்துச்சி. தீவாளிக்கு எங்கு ஊட்டுக்கு போனப்போ இவுரே எங்கம்மாக் கிட்ட, “அத்த, நானு பிளாட்டு பிசுனசு பண்ணப் போறேன். எனுக்கு ஒரு பத்து லட்சம் பொரட்டித் தாங்க. லாபம் வந்துடும். நீங்க குடுத்த பணத்த திருப்பிப் புடறேன். உங்க மகள நானு இப்பமாரியே தின்னப்பட்டிக்கி வர்றப்போவெல் லாம் பஸ்ல கூட்டியாந்தா நல்லா இருக்காது இல்ல? அதனால, ஒரு காரு வாங்கித்தாங்க”,னு சொல்ல எங்கம்மா நெருப்ப மெரிச்ச கொழந்தப் புள்ளை யாட்டமா துடிச்சிப்போச்சி. “பொண்ணு கேட்டு வந்தப்போ என்னாங்க மாப்புள சொன்னிங்க? ’சொந்த பந்தம் உட்டுப்போயிறக்கூடாது. நாங்க ஒண்ணும் கேக்க மாட்டோம். உங்க மவளுக்கு உங்க திருப்திக்கு செய்யிங்க’னு சொல்லிப்புட்டு இப்போ காரக் குடு காசக் குடுனு சொல்றீங்களே, இது என்ன மாப்புள நாயம்? அதுவுமில்லாம புள்ளைய காலேஜில சேத்து படிக்கவைக்கிறது எங்களோட பொறுப்புனு சொன்னிங்க. அப்படியும் படிக்கவும் வைக்கலியே? நீங்க செய்யறதெல்லாம் உங்களுக்கே நல்லா இருக்கா?”னு கேட்க, “போயும் போயும் இந்த ஆம்புள இல்லாத பிச்சக்காரி குடும்பத்துல பொண்ணு எடுத்ததுக்கு என்னத்தா செருப்பால அடிச்சிக்கணும். எத்தன வசதியான எடத்துல இருந்து எல்லாமோ நீ நானுன்னு எனுக்கு பொண்ணு குடுக்க வந்தாங்க. நானு எங்கப்ப னோட தொல்ல தாங்காம இவள கட்டித் தொலச்சிப்புட்டு இப்ப ஏமாந்து நிக்கறேன்”னு சொல்ல, எங்கம்மா ”மாப்புள, நீங்களும் என் மகளும் நல்லா இருக்கணும். அதத் தவுர நானு வேற எதுக்கும் ஆசப்படறவ இல்ல. நம்பு. தேவைக்கும் சக்திக்கும் காரெல்லாம் எதுக்கு? நானு ஒரு லட்சம் குடுத்ததே வாகனம் வாங்கிக்கதா. ஆனா, நீங்க இப்பவும் வண்டி வேணும்னு கேக்கறிங்க. செரி, பரவால. உங்குளுக்கு புடிச்சாப்புல 70 80 ஆயிரத்துல நல்லதா ஸ்கூட் டரு வாங்கிக்கோங்க. என் மவள நானு தவப்பன் இல்லாத கொற தெரியாம வளத்தேன் கண்ணு. அவள கண்ணு கலங்காம பாத்துக்கோங்க. காசு பணத்தப் பத்தி என்னா இருக்குது? இத மொதலீடா வச்சி தொழிலு பண்ணுங்க”, னு சொல்லி அவங்க அம்மா போட்ட நகைங்கள குடுத்துச்சி. இப்படி ஒரு தடவ ரெண்டு தடவ இல்ல. அவுருக்கு எப்ப எல்லாம் காசு பணம்வேணும்கிற நெனப்பு வருமோ அப்போவெல்லாம் என்ன அனுப்பி ’உங்க அம்மா ஊட்டுல இருந்து அத்த கொணா இத்த கொணா’னு கேக்கறது. நானு ஒத்துக்கலனா என்ன மாட்ட சாத்துறமாரி கண்ணு மண்ணு தெரியாம சாத்தவேண்டியது. நானும் புருஷங்காரரோட அடி ஒதைக்கி பயந்து அம்மாக்கிட்ட போயி கண்ண கசக்கினு நிக்கவேண்டியது. இப்படியே 3 வருஷம் முடிஞ்சி போச்சிம்மா. கெடைக்கிற வரைக்கும், இல்ல இல்ல, புடுங்குற வரைக்கும் லாபம்னு அவுரும் கோழி முட்டைய முழுங்குற பாம்புமாரி நெறையா பணங்காசையும் நகநெட்டுங்களையும் பாத்திர பண்டங்களையும் வாங்கிக்கினாரு. எங்கம்மாவும் ’ஒத்தைக்கி ஒரு பொண்ணு ஆச்சே. அவுளுக்கு இல்லாதது நம்புளுக்கு எதுக்கு’னு கேட்டமாரியெல்லாம் குடுத்துச்சி. நாங்க அவரு கேக்கறப்போ ’இப்போ கைல தொக இல்லே’ன்னு சொல்லிட்டா அவருக்கு மூக்கு மேல கோவம் வந்துடும். அவரு செஞ்ச கொடுமைங்கள வார்த்தையால சொல்லமுடி யாது தாயி. என் முதுக பாரு. பெல்ட்டால அடிக்கிறதும், மறப்பான எடங்களுள சிகிரெட்ட புடிச்சி சூடு வைக்கிறதும், என்மேல ஏறி ஒக்காந்துனு உங்கொம்மா ஊட்டுல இருந்து பணங்காசு கொணாரியா இல்ல ஒரே அடியா சாவறையா?” னு கேட்டு கழுத்துல கால வச்சி மெரிக்கிறதுமா இருந்தாரு. எங்கம்மாவும் மாப்புள திருந்துவாருனு சொல்லி ஒரு தடவ காசு குடுக்காம ”பாக்குத் தட்டு செய்யர மிஷினு வாங்கிப் போட்டு தொழில் செய்யுங்க”னு சொல்லி உதவுச்சி. அந்த தொழில கொஞ்ச நாளு பேருக்கு பாத்துப்புட்டு நஷ்ட்டம்னு சொல்லி மிஷின வித்துப்புட்டாரு. அப்பறமா ஹோட்டலு வச்சிக் குடுத்துச்சி. அந்த தொழிலையும் ஒழுங்கா பாக்கல. அப்புறம் ஏரு ஓட்டற ட்ரேக்டரு வாங்கிக் குடுத்துச்சி. டீசலு போட்டு கட்டுப்படி ஆவுல னு சொல்லி அத்தைய்ம் வித்துத் தின்னுப்புட்டாரு. நானு எங்கூட்டுல இருந்து பணம் வாங்கினு வந்து குடுத்தா நல்ல முறைல தொழில் பண்ணாம வட்டிக்கி குடுக்கிறேன்னு சொல்லி முன்ன பின்ன தெரியாதவங்களுக்கு காச குடுக்கவேண்டியது. அவங்க இவருக்கு குல்லா போடவேண்டியது. அதுமட்டுமில்லாம சீட்டுக் கச்சேரி, சூதாட்டம், குடி, மோசமான கூட்டாளிங்க சகவாசம் எல்லாமே இவருக்கிட்ட இருந்துச்சி. நானு அவரப்பத்தி மாமியா மாமனாருக்கிட்ட மொறப்பாடு செஞ்சா அவங்க ’எந்த ஆம்பள இப்போவெல்லாம் ஒழுங்கா இருக்குறான். நீதா அவன சாமார்த்தியமா திருத்தனும்’னு சொல்லறதோட அப்புடி புருஷன திருத்தி வழிக்கி கொணார லனா உங்கிட்டதா ஏதோ கோளாறு’ன்னும் சொல்லுவாங்க. இதுக்கு எடைல எங்கூட்டுக்காரு நடத்தினு இருந்த சீட்டு கம்பனி வேற படுத்துடுச்சி. சீட்டு எடுத்தவங்க பலபேரும் ஒழுங்கா காசு குடுக்கல. ஒழுங்கா பணம் கட்டற வங்களுக்கு இவரால பதில் சொல்லமுடியல. பணம் போட்டவங்க நச்சரிக்க ஆரம்பிச்சாங்க. இவுரு என்னிய பணத்துக்காக நச்சரிக்க ஆரம்பிச்சாரு. நானு ’அம்மாக்கிட்ட அடிக்கடி சும்மா சும்மா பணம் கேக்கறது நல்லா இல்லைங்க’னு சொல்லி ’என்னால இனிமே காசு பணத்துக்காக அங்க போவமுடியாது’ன்னு மறுத்தேன். அதனால ஒரு நாளு “சாவுறேன், தூக்குப்போட்டுப்பேன்”னு என்னையும் எங்கு மாமியாரு மாமனாரையும் மெரட்டுனாரு. எங்கூட்டுக்காரு செய்யறது நல்லாத்தான் இல்ல. அப்பறம், கடைசியா கடந்தொல்லைய சாக்கா வச்சி தெனம் குடிக்க ஆரம்பிச்சாரு. குடிச்சிப்புட்டு என்னிய தல கால் தெரி யாம அடிப்பாரு. அப்புடித்தா ஒரு தபா ஊட்டுக்கு வெளியே இழுத்துனு வந்து போட்டு இடுப்புல இருக்குற சீலத்துணி கழண்டு உழற வரைக்கும் அடிச்சிப் புட்டாரு.. “வேங்கம்மா, நீ அத்தகிட்ட போயி நானு வேவாரம் பண்ண 5 லட் சமோ 7 லட்சமோ வாங்கினு வா.இந்தப் பொங்கலுக்குள்ள எனுக்குப் பணம் வேணும். நீ பணத்தோட வர்றதுனா வா. இல்லன்னா நீ ஊட்டு வாசப்படிய மெரிக்காத”னு சொல்லி என்ன வெரட்டிப்புட்டாரு. அம்மாக்கிட்டையோ இப்ப கைல காசு இல்ல. அதனாலதான் நானு இப்புடி ஒரு முடிவுக்கு வந்தேன்”னு வேங்கம்மா தன் கதைய துளசிக்கிட்ட சொல்லினு இருக்கப்பவே முனியனும் அந்த ஊட்டுக்குள்ள நொழஞ்சான்.

துளசி இரண்டு பேருக்கும் உப்புமாவ போட்டா. சாப்பிட்டுனு இருக்கப்பவே துளசி மெதுவா வேங்கம்மாவப் பத்தின தகவல்கள முனியன்கிட்ட சொல்ல, சாப்பிட்ட கைய்யோட முனியன் “எக்கா நான் உன் தம்பியாட்டமா சொல்லு றேன். எங்க அக்கா மாரியம்மாவையும் ஒரு குடிகார நாயிக்கித் தெரியாம கல் யாணம் கட்டிவச்சோம். அவனோட தொல்ல தாங்காம எங்கு அக்கா தூக்குப் போட்டுனு செத்துப்போனா. உன்னப் பாத்தா எங்க அக்காமாரித் தான் இருக்கிற. நீ நல்லா படிச்சவளாவும் இருக்கிற இல்லையா? நீ போஸ்ட்டல்ல உனுக்கு புடிச்ச பாடத்துல சேந்து படிக்கா. நீ அந்த நாதேரி நாயி ஊட்டுக்கெல் லாம் போவாத. உன் படிப்புசெலவுக்கும் நானு வழி பண்ணுறேன். எனுக்குத் தெரிஞ்ச நல்ல மொதலாளிங்க இருக்குறாங்க. அவுங்கள்ள ஒருத்தரு கிட்ட சொல்லி உனுக்கு வேல போட்டுத் தரச் சொல்லுறேன். நீ எங்கியும் போவாத. எங்க கூடவே இருக்கா. துளசிக்கும் ஒரு கூட்டாளி கெடச்சமாரியும் இருக்கும். நீ இப்போ ரெஸ்ட்டு எடுக்கா. நாளைக்கி காலேஜிக்கிப் போயி அப்ளிகேஷன் பாரத்த பூர்த்தி செஞ்சி போடு. தோ நானு இப்போவே போயி உனுக்கு அப்ளிக் கேஷன் பாரம் வாங்கியாறேன்”னு சொல்லி தன் ஸ்கூட்டரை காலேஜிக்கி கிளப்பினு போனான் முனியன்.
———————

Series Navigationதாகூரின் கீதப் பாமாலை – 59 காதல் தரும் நித்தியப் புத்துணர்ச்சி !கனிகரம்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *