வேண்டாம் அந்த முரட்டுப் பெண்! – 19

This entry is part 18 of 18 in the series 2 ஜூலை 2017

வேண்டாம் அந்த முரட்டுப் பெண்!
ஜோதிர்லதா கிரிஜா
(ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம்)
19.
girja ஜெய்ப்பூரில் மீராபாய் கண்ணாடித் தொழிற்சாலையில் இருக்கும் கிஷன் தாஸ் பிரகாஷுடன் பேசி முடித்த பின் மேலாளர் கொடுத்துச் சென்றிருந்த புகாரின் நகலை எடுத்துப் பிரித்துப் படிக்கிறார். அதைப் படித்துக்கொண்டிருக்கும் போதே அவரது முகம் வெளுத்துப் போகிறது கண்கள் பனிக்கின்றன. அவர் உடனே மேலாளர் சேகரை அவசரமாய் அழைக்கிறார்.
தம்முன் வந்து கைகட்டி நிற்கும் அவரிடம், “அந்தப் பையனை மிகவும் பலமாக அடித்துவிட்டீர்களா?” என்று கேட்கிறார்.
“ஆமாம், சர்! ஆயுசுக்கும் மறக்க முடியாத அளவுக்கு அடித்து நொறுக்கிவிட்டேன். சாப்பாடும் கொடுக்கவில்லை. நான் எப்போதுமே உங்கள் சொற்படியேதான் செய்து வருகிறேன்!”
“எங்கே அந்தப் பையன்? அவனை நான் பார்க்க வேண்டும். தனியாக!”
“தனியாகவா! சரி, சர். இதே அறையில் உங்கள் பின்புறத்தில் திரைக்குப் பின்னால்தான் உட்கார்த்தி வைத்திருக்கிறேன் அவனை!… பீமண்ணா! வா இந்தப் பக்கம். நம் எம்.டி. வந்திருக்கிறார். உன்னோடு பேச வேண்டுமாம்.”
திரைக்குப் பின்னாலிருந்து பீமண்ணா நொண்டிக்கொண்டே அங்கு வந்து நிற்கிறான். நிற்கும்போதே தடுமாறுகிறான்.
“சேகர்! நீங்கள் வெளியே போங்கள். நான் இந்தப் பையனோடு கொஞ்சம் தனியாகப் பேசவேண்டும். கதவை இறுக்கிச் சாத்திவிட்டுப் போங்கள்!”
“சரி, சர்!” – சேகர் கதவை அடித்துச் சாத்திவிட்டு நடுங்கிக்கொன்டே வெளியேறுகிறார்.
ஈனமான குரலில், “சார்! என்னை அடிக்காதீர்கள், சார். மேனேஜர் சார் என்னை நிறையவே அடித்து விட்டார்….” என்று பீமண்ணா கெஞ்சுகிறான்.
“பீமண்ணா! பயப்படாதே! இப்படி வந்து இந்த நாற்காலியில் உட்கார்.”
“இல்லை, சார். வேண்டாம். எம்.டி.க்கு முன் என்னால் எப்படி நாற்காலியில் உட்கார முடியும்?”
“பரவாயில்லை. வா. உட்கார்.”
பீமண்ணா நாற்காலியின் முன்னடியில் அமர்ந்துகொள்ளுகிறான்.
“உன் குடும்பம் பற்றிய எல்லா விஷயங்களையும் சொல்லு. உங்கள் அப்பா யார்? அம்மா யார்? இதையெல்லாம்….”
“என் அப்பாவின் பெயர் ரங்கா. ஆனால் அவர் என் அம்மாவை என் தங்கை பானுவுடனும் என்னுடனும் விட்டு விட்டு ஓடிப்போய்விட்டார். என் அம்மா ரம்யா. ஹைதராபாத் சிங்கரேணி காலியரீசில் மேலாளராக இருந்த ராமதாஸ் என்பவரின் மகள். ராமதாசின் அப்பாவின் பெயர் பீமண்ணா. ஹாரிசன் அண்ட் ப்ரதர்ஸ் எனும் கம்பெனியில் அவர் அக்கவுண்டண்ட் ஆக வேலை பார்த்தவர். இவை யெல்லாம் என் அம்மா சொல்லி எனக்குத் தெரிய வந்தவை. என் கொள்ளுத்தாத்தாவுக்கு என் அம்மா மிகவும் செல்லம். எனவேதான் அவர் பெயரை என் அம்மா எனக்கு வைத்தார்….”
கிஷன் தாஸ், ‘அட, கடவுளே! என் நண்பன் ராமதாஸ்! நாள்தோறும் எனக்குச் சாப்பாடு கொண்டுவந்து கொடுத்தவன். இந்தப் பையன் அவனுடைய பேரன். … பீமண்ணா என்னைத் தத்து எடுக்காத குறையாக என்னைப் பேணி ஆதரித்த நல்லவர்! அவர் பெயரைத்தான் இவனுக்கு இவன் அம்மா வைத்திருந்திருக்கிறாள்!…’ என்று முணுமுணுக்கிறார்.
“ஏதாவது சொன்னீர்களா, சார்? கன்னத்தில் விழுந்த அடியால் நீங்கள் சொன்னது எதுவும் என் காதில் சரியாக விழவில்லை.”
கண்கலங்கியவாறு, “பீமண்ணா! உன் உடம்பில் எங்கேனும் காயங்கள் ஏற்பட்டனவா? உன் சட்டை சிவப்பாக இருக்கிறதே?” என்று வினவுகிறார்.
“என் இரண்டு பற்கள் உடைந்துபோய் விட்டன, சார். ஆனால் ரத்தம் வருவது நின்றுவிட்டது.”
“அட, கடவுளே!” எனும் அவர் விழிகளில் நீர் நிறைகிறது. கண்ணீரை அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை. பீமண்ணா தன் கண்ணீரைப் பார்த்துவிடக்கூடாது என்றெண்ணும் அவர் சற்றே முகம் திருப்பிக்கொள்ளுகிறார். கண்களைத் துடைத்துக்கொள்ளும் அவர் அங்கே ஜாடியில் இருக்கும் தண்ணீரில் முகத்தை இலேசாய்க் கழுவிக்கொள்ளுகிறார். பிறகு கதவைத் திறந்து சற்றுத் தொலைவில் காத்திருக்கும் மேலாளரைக் கூப்பிடுகிறார்.
அவர் வந்ததும், கிஷன் தாஸ், “சேகர்! முதலில் அந்தப் பையனுக்குக் குடிப்பதற்கு ஏதாவது தாருங்கள். பிறகு ரொட்டியும் ஜாமும் தாருங்கள். மிருகத்தனமாய் அடித்திருக்கிறீர்களே! இனி இப்படிச் செய்யாதீர்கள்!” என்கிறார்.
“சர்! உங்கள் அறிவுரைப்படிதான் செய்துள்ளேன்…”
“மேற்கொண்டு பேச வேண்டாம்! தெரிந்ததா? ஓடிப்போய் முதலில் அவனுக்குக் குடிக்க ஏதேனும் எடுத்து வாருங்கள்… அப்படியே ஒரு டாக்டரையும் வரவழையுங்கள்!”
“ச….ர்! டாக்டர் வந்தால் அவனை அடித்தது தெரிய வருமே!”
“உங்களுக்கு அதனால் தொந்தரவு வராமல் நான் பார்த்துக்கொள்ளுகிறேன். காசு கொடுத்து அவர் வாயை அடைத்தால் போயிற்று… முதல் உதவி முடிந்து அவன் சாப்பிட்டும் முடித்த பிறகு அவனை நான் என்னுடன் டில்லிக்கு அழைத்துக்கொண்டு போவதாய் இருக்கிறேன்…. இன்னொரு முக்கியமான விஷயம். அந்த ஏஜண்ட் பத்ரிநாத்தோடு தொடர்பில் இருக்கிறீர்களா? அல்லது அவன் இருப்பிடமாவது தெரியுமா?”
“தற்செயலாய் நேற்று அவனைப் பார்த்தேன், சர்! அவன் தற்சமயம் இங்கே ஜெய்ப்பூரில்தான் தன் தங்கை வீட்டில் தங்கி யிருக்கிறான். இன்னும் ஒரு வாரம் வரை இங்குதான் இருப்பானாம். அந்த வீட்டில் தொலைபேசியும் இருக்கிறது, சர்!”
“அம்மாடி! கடவுளுக்கு நன்றி. முதலில் அவனோடு நான் பேச வேண்டும்… அவனைத் தொலைபேசியில் கூப்பிடுங்கள்….”
சேகர் அப்படியே செய்கிறார். “பத்ரிநாத்! நம் எம்.டி. மிஸ்டர் கிஷன் தாஸ் டில்லியிலிருந்து இங்கே வந்திருக்கிறார். அவருக்கு உன்னோடு உடனே பேச வேண்டுமாம்…..சர்! இதோ பத்ரிநாத்! பேசுங்கள்!”
ஒலிவாங்கியைக் கையில் எடுத்துக்கொள்ளும் கிஷன் தாஸ் சேகரிடம் பீமண்ணாவை அழைத்துக்கொண்டு போகச் சொன்னபின், பத்ரிநாத்துடன் பேசுகிறார்: “ஹல்லோ, பத்ரிநாத்! இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் பள்ளிக்கூடத்திலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த ஆணும் பெண்ணுமான இரட்டையர்களை ஜெய்ப்பூருக்குக் கடத்தி வந்து சேர்த்தாயே ஞாபகம் இருக்கிறதா? விற்க நினைக்கும் பெற்றோரிடமிருந்து குழந்தைகளை விலைக்கு வாங்கியும், தெருவில் அநாதைகளாய்ச் சுற்றும் குழந்தைகளைக் கொண்டுவந்தும் எங்களிடம் சேர்க்குமாறு மட்டும்தானே நான் சொல்லியிருந்தேன்? கடத்தும்படி நான் எப்போதாவது சொல்லி யிருக்கிறேனா? ஏன் அப்படிச் செய்தாய்? சரி. நடந்தது நடந்து போச்சு. அதை விடு. இப்போது நீ எனக்கு உடனே ஓர் உதவி செய்ய வேண்டும்….அந்த இரட்டையர்களில் பெண்ணை நீ என்னிடம் கூட்டிவந்து ஒப்படைக்க வேண்டும். அவளை எங்கே விற்றாய்?…. கடவுளே! கடவுளே! என்ன காரியம் செய்தாய்! சரி. நடந்ததை இனி மாற்ற முடியப் போவதில்லை. அந்தப் பெண்ணையும் எப்படியாவது திரும்பப் பெற்று பத்திரமாய்க் கொண்டுவந்து என்னிடம் ஒப்படைக்க வேண்டும். அவர்கள் எவ்வளவு பணம் கேட்டாலும் கொடுத்துவிடு. அவளுக்கு விலையாய் நீ எவ்வளவு கேட்டாலும் அதை உனக்குத் தருவேன். அந்தப் பெண்ணை மீட்க முடியும் என்று நீ நிச்சயமாய் நம்புவதற்கு உனக்கு நன்றி, பத்ரிநாத்! மிகவும் அவசரம்….இதே ஊர்தானா! உடனே அங்கே போ!” – மூச்சு விடாமல் பேசிய பின் கிஷன் தாஸ் சோர்வுடன் நாற்காலியில் சரிகிறார். அவர் கண்கள் மீண்டும் கலங்குகின்றன. ஒரு நிமிடம் கழித்து எழும் அவர் கதவைச் சாத்திவிட்டு நாற்காலியில் உட்கார்ந்து முகத்தை இரு கைகளாலும் மூடிக்கொண்டு விம்மி அழுகிறார். சில கணங்கள் வரையில் அழுத பிறகு முகத்தைக் கழுவிக்கொண்டு கதவைத் திறக்கிறார்.
சிறிது நேரம் கழித்துத் தொலைபேசி ஒலிக்கிறது. கிஷன் தாஸ் ஒலிவாங்கியை எடுத்துப் பேசுகிறார்: “ஹல்லோ! பத்ரிநாத்! அதற்குள்ளாகவா!… என்ன? அந்த முதலாளிப் பெண்மணி வருவதற்கு இரண்டு நாள்கள் ஆகுமா? சரி. ஆனால், இரண்டு நாள்கள் கழித்து நீ அந்தப் பெண்ணை டில்லிக்குக் கூட்டிக்கொண்டு வந்து என்னிடம் சேர். அவளைச் சந்தித்து நான் அவளைத் தத்து எடுத்துக்கொள்ளப் போவதாய்ச் சொல்ல வேண்டும். நான் ஒன்று செய்கிறேன். இங்கே என் மேனேஜர் சேகரிடம் சொல்லி வைக்கிறேன். கம்பெனியின் காரை அவர் உனக்குக் கொடுத்து உதவுவார். உனக்குத்தான் கார் ஓட்டத் தெரியுமே! அதில் நீயே அவளை டில்லிக்குக் கூட்டிக்கொண்டு வந்துவிடு. வேறு எங்கேயோ அவளை விற்பதற்காக நீ அழைத்துக்கொண்டு போகிறாய் என்னும் சந்தேகம் அவளுக்கு வரக்கூடாது. … அந்த இடத்திலிருந்துதான் பேசிக்கொண்டிருக்கிறாயா? அந்தப் பெண்ணோடு நான் பேச முடியுமா?….”
அப்போது சேகர் அங்கு வருகிறார். ஒலிவாங்கியைப் பொத்தியபடி, ‘என்ன?’ என்று கண்களாலேயே கிஷன் தாஸ் அவரிடம் கேட்கிறார்,
“டாக்டர் வந்திருக்கிறார். பீமண்ணாவுக்குச் சிகிச்சை செய்துகொண்டிருக்கிறார்.”
“சரி. அவர் கேட்கும் பணத்தைக் கொடுத்துவிடுங்கள். நான் பேசி முடித்துவிட்டு வந்து அவரைப் பார்க்கிறேன். அவரைக் காத்திருக்கச் சொல்லுங்கள்.”
“சரி, சர்.” – சேகர் கதவைச் சாத்திவிட்டுப் போகிறார்.
கிஷன் தாஸ், “ஹல்லோ, பத்ரிநாத்! என்னோடு பேச அந்தப் பெண் சம்மதித்தாளா? சரி. அவளிடம் கொடு…. ஹல்லோ என்னருமைப் பேத்தியே! என் பெயர் கிஷன் தாஸ். அதிருஷ்ட வசத்தால், நீ என் ஆப்த நண்பன் ராமதாசின் பேத்தி என்று தெரிய வந்துள்ளது. அதனால்தான் உன்னைப் பேத்தி என்று அழைத்தேன்… ராமதாஸ் என் வகுப்புத் தோழன். அவன் அப்பா பீமண்ணாதான் என்னைத் தம் மகனாக ஏற்று வீட்டிலேயே தங்கவைத்து என்னைப் படிக்கவும் வைத்தார். உண்மையில் அவர் எனக்குக் கடவுள் மாதிரி!….ஹோஹோஹோ…. ” – கிஷன் தாஸ் பெரிதாய்ச் சிரிக்கிறார்.
“ஆமாம், ஆமாம் என் அருமைப் பேத்தியே! டில்லிக்கு ஓடிப்போய் உன் தாத்தாவின் ஆட்சேபணையையும் மீறிக் கிறிஸ்தவனாக மதம் மாறிய அதே கிஷன் தாஸ்தான்! ஓ! என் நண்பரான உன் தாத்தா இதை எல்லாம் உனக்குச் சொன்னாரா! … என் வாழ்க்கையில் நான் செய்துள்ள சில தப்புகளுக்கு நான் இப்போது பிராயச்சித்தம் செய்ய விரும்புகிறேன். நானே அந்தக் கிஷன் தாஸ் என்பதற்கான ஆதாரத்தைக் காண நீ விரும்பினால், நான் ஒரு குடும்பப் புகைப்படம் பற்றிச் சொல்ல முடியும். ஆனால், நீ அதைப் பார்த்திருக்கிறாயோ இல்லையோ! அந்தப் புகைப்படத்தில் நாங்கள் மூன்று பேர் இருப்போம். உன் தாத்தா பீமண்ணா நடுவில் இருப்பார். உன் அப்பாவும் நானும் அவருக்கு இரு புறங்களிலும் நின்றுகொண்டிருப்போம். நான் வலப் புறத்திலும், ராமதாஸ் இடப் புறத்திலுமாக. பீமண்ணா காப்பி நிறக் கால்சராயும் வெள்ளைச் சட்டையும் அணிந்திருப்பார். ராமதாஸ் வெள்ளை அரைக் கால்சட்டையும் நீல நிறச் சட்டையும் அணிந்திருப்பான். தலைக் கிராப்புக்கு நடு வகிடு. நான் பச்சை நிற அரைக் கால்சட்டையும் வெள்ளை நிறச் சட்டையும் அணிந்திருப்பேன். கிராப்பின் இடப் புறத்தில் வகிடு. பீமண்ணா ஒரு நாற்காலியில் உட்கார்ந்திருப்பார். ராமதாஸ் பல்லைக்காட்டிச் சிரித்துக்கொண்டிருப்பான். ஆனால் நானோ சிரிக்க மாட்டேன். ஏனென்றால் எனக்குப் பியானோக் கட்டைகள் மாதிரியான நீண்ட பற்கள்! நான் வெகு நாள் கழித்து ஒரு பல் டாக்டரிடம் போய் அவற்றை முத்துப் பற்காளாக்கிக்கொண்டு விட்டேன்!…. சிரிப்பு வருகிறதா? சிரி, சிரி….ஓ! நீ அந்தப் புகைப்படத்தைப் பார்த்திருக்கிறாயா! எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது… எங்கள் குடும்பத்தில் ஒருத்தியாக நீ எங்களிடம் வந்து சேர்ந்துகொண்ட பிறகு இது போல் சிரிப்பதற்கு உனக்கு நிறையவே சந்தர்ப்பங்கள் கிடைக்கும். ஏனெனில், அதன் பிறகு வருத்தப்படுவதற்கு உனக்கு எந்தக் காரணமும் இருக்காது! … உன்னை டில்லிக்குக் காரில் அழைத்து வரும்படி பத்ரிநாத்திடம் சொல்லியிருக்கிறேன். அவனோடு நீ காரில் வந்து விடு. அவனுக்கு டில்லியில் என் இருப்பிடம் தெரியும். நீயும் என் முகவரியைக் குறித்துக்கொள்… 27, ராமகிருஷ்ணாபுரம் முதல் தெரு, புது தில்லி. குறித்துக்கொண்டாயா? சரி. டில்லியில் உனக்கு ஓர் ஆச்சரியம் காத்துக்கொண்டிருக்கிறது… நன்றி யெல்லாம் நீ எனக்குச் சொல்லக் கூடாது…சரி… தொலைபேசியைப் பத்ரிநாத்திடம் கொடு…. ஹல்லோ! பத்ரிநாத்! நீ அவளைப் பத்திரமாய் டில்லிக்குக் கூட்டிக்கொண்டு வா….”
பேசி முடித்து விட்டுத் தொடர்பைத் துண்டிக்கும் கிஷன் தாஸ் பரபரப்பே உருவாகிறார். அப்போது கதவைத் தட்டிவிட்டு, சேகர் ஒரு மருத்துவருடன் அவ்வறைக்குள் நுழைகிறார்.

jothigirija@live.com

Series Navigationவ. பரிமளாதேவியின் கவிதைத்தொகுப்பு பற்றி : ”எளிமையின் குவியல்”
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *