வேண்டாம் அந்த முரட்டுப் பெண்! – 7

This entry is part 2 of 12 in the series 9 ஏப்ரல் 2017

(ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம்)

 

அன்று ஞாயிற்றுக்கிழமை யாதலால், சுமதியும் அவள் அப்பா ஜெயராமனும் வீட்டில் இருக்கிறார்கள். வழக்கம் போல், ஜானகி அடுக்களையில் சமையல் வேலையில் முனைந்திருக்கிறாள். ஜெயராமன் குளியலறையில் குளித்துக்கொண்டிருக்கிறார். அப்போது சுவர்க் கடிகாரத்தில் எட்டு மணி யாகிறது. சுமதி ஒரு நாற்காலியில் அமர்ந்து வார இதழ் ஒன்றைப் படித்துக்கொண்டிருக்கிறாள். வாசல் புறம் காலடியோசை கேட்கிறது. தலையை உயர்த்தித் திரும்பும் சுமதி நுழைவாயிலில் ஒரு கைப்பெட்டியுடன் நிற்கும் நெடிதுயர்ந்த மனிதரைப் பார்த்ததும் எழுந்து அங்கு செல்லுகிறாள்.

“யார் நீங்கள்?” என்றவாறு அந்தப் புதிய மனிதரை அவள் பார்க்கிறாள்.

வந்தவர் அதற்குப்  பதில் சொல்லாமல், “குட் மார்னிங்!” என்கிறார்.

பதிலுக்குத் தானும் ‘குட் மார்னிங்’ சொல்லும் அவளை வாயகன்ற புன்னகையுடன் பார்த்து, ”நீ சுமதிதானே?” என்று அந்தப் பெரியவர் வினவுகிறார்.

“ஆமாம்! நீங்கள்?” என்று சுமதி வியப்புடன் அவரைப் பார்க்கிறாள்.

“நான் கிஷன் தாஸ்! தில்லி பிரகாஷின் தந்தை.”

உற்சாகமான பதற்றத்தில், “வா…வா…வாருங்கள். உள்ளே வா…வா..வாருங்கள்!” என்று அவள் தடுமாறும் குரலில் அவரை வரவேற்கிறாள்.

பின்னர், சுமதி விரைவாக உள்ளே போகிறாள்.  காலணிகளைக் கழற்றி வெளியே விட்ட பிறகு, கிஷன் தாஸ் ஆழ்ந்த பார்வையை அவள் மீது பதித்தவாறு அவளைப் பின்தொடர்ந்து உள்ளே செல்லுகிறார். சுமதி ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு அதில் அவரை உட்காரும்படி உபசரிக்கிறாள்.

புன்சிரிப்புடன் அமர்ந்துகொள்ளும் கிஷன் தாஸ், “நான் உன்னைத் தொந்தரவு செய்துவிட்டேனா – அல்லது உண்மையில் பயமுறுத்திவிட்டேனா?” என்று கேட்டுக்கொண்டே கைப்பெட்டியைக் கீழே வைத்துவிட்டுத் தம் பார்வையைச் சுழற்றி வீட்டைக் கவனிக்கிறார்.

பதிலுக்குப் புன்னகை புரியும் சுமதி, “இல்லை, மாமா! அப்படி யெல்லாம் இல்லை… ஒரு நிமிஷம்! நீங்கள் வந்திருப்பதை நான் என் அப்பாவிடம் சொல்லுகிறேன்…” என்றவாறு குளியலறை நோக்கி நகர்கிறாள்.

ஜானகி அடுக்களையிலிருந்து எட்டிப் பார்க்கிறாள். சுமதி குளியலறைக் கதவை இலேசாய்த் தட்டுவதற்கும் முன்பாகவே ஜெயராமன் ஏதோ ஒரு பழைய சினிமாப் பாட்டைச் சீழ்க்கையடித்தவாறு கதவைத் திறந்துகொண்டு வெளிப்படுகிறார்.

வாயின் குறுக்கே விரல் வைத்து எச்சரிக்கும் தொனியில், “ஷ்!… பிரகாஷின் அப்பா வந்திருக்கிறார்!” என்று அவள் தெரிவிக்கிறாள்.

“அப்படியா!” என்று வியப்புடன் வினவும் ஜெயராமன் துண்டை நன்றாக இழுத்துத் தம் மீது போர்த்திக்கொண்ட பின், சுமதி பின் தொடர, கூடத்துக்கு வருகிறார்.

இருகைகளையும் கூப்பி அவரை வணங்கிய பின், “குட்மார்னிங், சர்!” என்கிறார்.                                                                                                                                          எழுந்து நின்று பதிலுக்கு அவரை வணங்கும் கிஷன் தாசை, “உட்காருங்கள், சர்!” என்று உட்காரச் செய்த பின் ஜெயராமன் தாமும் அவரெதிரில் ஒரு நாற்காலியில் அமர்கிறார்.

“நான் பிரகாஷின் தந்தை, கிஷன் தாஸ்! தில்லியில் உள்ள ஒரு தொழிலதிபர்!”

“பிரகாஷ் சொன்னார், சர்…. இந்த ஏழையின் குடிசைக்கு நீங்க்ள் வந்துள்ளது பற்றி மிக்க மகிழ்ச்சி!”

பெரிதாய்ச் சிரிக்கும் கிஷன் தாஸ், “என்னது! குடிசையா! சரியாய்ப் போச்சு! அந்த அளவுக்கு உங்களை நீங்கள் தாழ்த்திக்கொள்ள வேண்டாம். இது பெரிய பங்களா மாதிரியோ அரண்மனை மாதிரியோ பெரியதாக இல்லைதான்.  ஆனால், இது குடிசையா என்ன! சுமதியைப் பற்றி என் மகன் சொன்னான். நான் ஒரு வேலையாக இங்கே மதராசுக்குத் திடீரென்று வந்தேன். அப்படியே, என் மகன் தேர்ந்தெடுத்திருக்கும் பெண்ணையும் அவள் பெற்றோரையும் சந்தித்துப் பேசலாமே என்று வந்தேன்,” என்கிறார்.

“மிக்க மகிழ்ச்சி, சர்! அப்படியானால் அவர்கள் திருமணத்துக்கு நீங்கள் சம்மதித்துவிட்டதாய் நான் எடுத்துக்கொள்ளலாமா?”

ஜெயராமனைக் கூர்ந்து நோக்கியவாறு, சற்றே முனைப்பான குரலில், புன்சிரிப்பு இல்லாத முகத்துடன், கிஷன் தாஸ், “அது பற்றிப் பேசத்தான் நான் வந்திருக்கிறேன்… மிஸ்டர்….உங்கள் பெயரென்னவோ?” என்று கேட்கிறார்.

“ஓ! மன்னிக்க வேண்டும். நான் என்னை முறையாக அறிமுகப்படுத்திக்கொள்ளவில்லை… என் பெயர் ஜெயராமன், நான் ஒரு தனியார் தொழிற்சாலையில் கணக்காயராக இருக்கிறேன்….”

“அப்படியா?” என்னும் கிஷன் தாஸ், பின்னர் சுமதியை நோக்கி, “ஏன் நின்றுகொண்டிருக்கிறாய், பெண்ணே! இந்த மரியாதை யெல்லாம் வேண்டாமே! உட்கார்!” என்கிறார்.

வெட்கத்துடன் புன்னகை புரிந்தவாறு சுமதியும் ஒரு நாற்காலியில் உட்காருகிறாள்.

“உங்கள் மகன் உங்களோடு வரவில்லை என்று நினைக்கிறேன்.”

“ஆமாம், மிஸ்டர் ஜெயராமன். நான் திடீரென்று கிளம்பி வந்தேன். நான் இங்கு வந்திருப்பதே அவனுக்குத் தெரியாது. திடீர்ப் பயணமாதலால், தூங்கிக்கொண்டிருந்த அவன் கட்டில் அருகில் ஒரு துண்டுச் சீட்டில் எழுதி வைத்துவிட்டு விமானத்தில் கிளம்பி வந்தேன்.  சொல்லாமல் கொள்ளாமல் நான் வந்து நின்றதில் உங்களுக்குச் சங்கடம் ஒன்றும் இல்லையே?””

“சேச்சே! அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. எங்களுக்கு மகிழ்ச்சிதான்…. சுமதி! போய்க் காப்பி எடுத்துக்கொண்டு வா!”

உணர்ச்சியற்ற குரலில், “நான் காப்பி குடிப்பதற்காக இங்கே வரவில்லை, மிஸ்டர் ஜெயராமன்!” என்று கிஷன் தாஸ் பதிலிறுப்பது இருவரையும் சற்றே அதிர்ச்சியுறச் செய்கிறது.

எனினும் தமது குரலில் எந்த உணர்ச்சியையும் வெளிப்படுத்தாமல், “முதன் முதலாக எங்கள் வீட்டுக்கு வந்திருக்கிறீர்கள். ஒரு காப்பி கூடக் குடிக்காமல் இருந்தால் எப்படி? … சுமதி… போய் எடுத்து வா, அம்மா!” என்று ஜெயராமன் மென்மையாய்க் கூறுகிறார்.

மறுதலிக்கும் தோரணையில் உடனே தம் கையை உயர்த்தும் கிஷன் தாஸ், “பேரம் பேச வந்த இடத்தில் நான் எதுவும் சாப்பிடுவதில்லை! ” என்று கண்டிப்பான குரலில் அறிவிக்கிறார்.

கணம் போல் திகைத்த பின், ஜெயராமன், “சொல்லுங்கள்!” என்கிறார்.

“தங்கள் மகள் அல்லது மகனின் காதல் திருமணத்தை எதிர்க்கும் சின்னத்தனம் நிறைந்த பெற்றோர்களின் பட்டியலில் நான் இல்லை என்பதை முதலில் சொல்லிவிடுகிறேன். … ஆனால், என் மகனைப் பொறுத்த மட்டில் அது முற்றும் மாறுபாடானது. சில மாதங்களுக்கு முன்னாலேயே பிரகாஷ் தன் விருப்பத்தைத் தெரிவித்திருந்தால் நான் மிகுந்த மகிழ்ச்சியுடன் அதை ஏற்றிருந்திருப்பேன்.  … நான் இந்தியாவின் மிகப் பெரிய தொழிலதிபர் என்பது உங்களுக்குத் தெரியுமல்லவா?”

அவரது கேள்வியின் தொனியால் சுமதி தன் புருவங்களை உயர்த்த்கிறாள்.

“தெரியும், தெரியும். …”

“தில்லியில் உள்ள ஒரு தொழிலதிபர் என்னை எப்படியாவது ஒழித்துக்கட்டி விட வேண்டும் என்கிற ஆர்வத்தில் வெகு நாளாக இருந்து வருகிறார்.  என் தொழில் நடவடிக்கைகளை முடக்கிப் போடும் முயற்சிகளில் அடிக்கடி ஈடுபட்டு அந்த ஆள் எனக்குக் கொடுத்துவரும் இடையூறுகளுக்கும் தொல்லைகளுக்கும் ஓர் அளவே இல்லை. அதற்கு முடிவு கட்ட நான் ஒரு திட்டம் வைத்திருக்கிறேன். அவருக்கு ஒரு மகள் இருக்கிறாள். அவரது விரோதத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பதற்காக அவருடைய மகளை நான் மருமகளாக ஏற்றுக்கொள்ளும் முடிவுக்கு வந்திருக்கிறேன்…”

கிஷன் தாஸ் இந்தக் கட்டத்தில் பேச்சை நிறுத்திய பின், இருவரையும் மாற்றி மாற்றிப் பார்க்கிறார். அங்கே முழு அமைதி நிலவுகிறது. சுமதி ஒரு நம்ப முடியாமையுடன் கிஷன் தாசை நோக்குகிறாள்.

“ஆனால் உங்கள் மகன் சுமதியை மணக்கச் சம்மதித்துவிட்டாரே, சர்?” என்று ஜெயராமன் கேட்கிறார்.

கட்டளையிடுவது போல் கையைத் தூக்கி யமர்த்தும் கிஷன் தாஸ், “தயவு செய்து நான் பேசுவதை முழுவதும் முதலில் கேளுங்கள் . நான் இன்னும் பேசி முடிக்கவில்லை. அவன் தற்போது சம்மதித்திருப்ப தெல்லாம் வேறு விஷயம். அவனை என் விருப்பத்தை ஏற்க வைப்பேன். எனக்குப் பிறகு என் வாரிசாக என் தொழில்கள் யாவற்றையும் ஏற்று நடத்தப் போகும் அவனுக்கு எனது இந்த முடிவு பெரிதும் உதவியாக இருக்கும்…..” இவ்வாறு சொல்லிவிட்டு நிறுத்துகிறார்.

“இந்தக் கசப்பான விஷயத்தைச் சொல்லுவதற்காகவா மெனக்கெட்டு இவ்வளவு தொலைவு வந்தீர்கள்?”

“இல்லை, இல்லை, மிஸ்டர் ஜெயராமன்! இது கசப்பான விஷயம் இல்லை. தன் வாக்குறுதிப் படி நடக்காத என் மகன் உங்கள் மகளுக்கு ஏற்படுத்தக் கூடிய ஏமாற்றத்துக்கும் வேதனைக்கும் நான் ஈடு கட்டுவேன்!”

சுமதி ஆத்திரம் முகத்தில் கொப்பளிக்க, எழுந்து நின்று விடுகிறாள்: “என்ன அர்த்தம் இந்த உங்கள் சமாதானப் பேச்சுக்கு?” என்றும் கடுஞ்சினத்துடன் குரலை உயர்த்திக் கேட்கிறாள்.

சிரிக்கும் கிஷன் தாஸ், “ஓ! நான் சொல்ல வந்தது உனக்குப் புரிந்துவிட்டது!… மிஸ்டர் ஜெயராமன்! உங்கள் மகள் மகா புத்திசாலி! … இதோ பார், பெண்ணே! நீ நாடகம் எதுவும் போட வேண்டாம்!” என்கிறார் புன்சிரிப்புடன்.  ஆனால் சுமதியின் பார்வையோ நெருப்பைக் கக்குகிறது.

“என்னது! நாடகாமா! என்ன சொல்லுகிறீர்கள், சர்? புரியும்படியாய்ப் பேசுங்கள்!” என்று ஜெயராமன் இடைமறிக்கிறார்.

அவருக்குப் பதிலேதும் சொல்லாமல், கிஷன் தாஸ் தரையில் தாம் வைத்த கைப்பெட்டியைத் தூக்கி மடியில் வைத்துக்கொண்டு அதைத் திறக்கிறார். அங்கு நிலவும் அமைதியில் அவர் பெட்டியைத் திறக்கும் சின்ன ஒலி பெரிதாய்க் கேட்கிறது. பெட்டியினுள் ஐந்நூறு ரூபாய்த் தாள்களின் கற்றைகள் ஒன்றன் மீது ஒன்றாய் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. பார்வையைச் சுழற்றும் கிஷன் தாஸ் அங்கே அருகில் இருக்கும் முக்காலியைத் தம் புறம் இழுத்து அதன் மீது திறந்திருக்கும் தம் கைப்பெட்டியை வைக்கிறார்.

பின்னர், செருக்குடன் ஜெயராமனைப் பார்த்து, “இதில் பத்து லட்சம் ரூபாய் இருக்கிறது. உங்களைப்போன்ற நடுத்தரக் குடும்பத்துக்கு இது மிகப் பெரிய தொகை! இவ்வளவு பெரிய தொகையை உங்கள் வாணாளில் இதுகாறும் நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள். வருங்காலத்திலும் பார்க்க வாய்ப்பில்லை! ,,,” என்று புன்னகை புரியும் அவரது பார்வை அடுத்தபடி தம்மை வெறுப்புடன் பார்த்துக்கொண்டிருக்கும் சுமதியின் மீது பதிகிறது.

“புத்திசாலிப் பெண்ணே! … பிரகாஷிடமிருந்து விலகச் சம்மதித்தால், இந்தப் பணம் முழுவதும் உனக்குத்தான். இது போதாது என்று நீ நினைத்தால், இதைப் போல் இரண்டு மடங்கு தரத் தயாராக இருக்கிறேன். என்ன சொல்லுகிறாய்?”

சுமதியின் உதடுகள் துடிக்கின்றன. வாசல் நோக்கித் தன் கையை நீட்டுகிற அவள், சினத்தால் நடுங்கும் குரலில், “மிஸ்டர் கிஷன் தாஸ்! என்னை என்னவென்று எண்ணினீர்கள்! பெரிய தொகையைக் கொடுத்து விலைக்கு வாங்குகிற அளவுக்கு உங்கள் மகன் மேல் நான் கொண்டுள்ள அன்பு மலிவானதன்று! வெளியே போங்கள்! நீங்கள் பிரகாஷின் தந்தை என்னும் ஒரே காரணத்துக்காக நான் இந்த அளவுக்கேனும் மரியாதை காட்டுகிறேனாக்கும்! இல்லாவிட்டால்……” என்று பாதியாக நிறுத்துகிறாள். அடக்க முடியாத ஆத்திரத்தில் அவள் உடல் முழுவதும் அதிர்கிறது.

“இல்லாவிட்டால்?” – இவ்வாறு வினவும் கிஷன் தாசின் முகத்தில் விஷமத்தனமான புன்சிரிப்பு மலர்கிறது. அவரது பார்வை சுமதியின் மீது ஆழமாய்ப் பதிந்திருக்கிறது.  அடுக்களையிலிருந்து வெளியே வந்து நின்றுகொண்டிருக்கும் ஜானகியின் முகத்திலும் அதிர்ச்சி ததும்புகிறது. அதே நேரத்தில், பிரகாஷின் தந்தையின் எதிர்ப்பால், அவனுடனான சுமதியின் திருமணம் நடக்காது எனும் நம்பிக்கையில், அவள் மனத்தில் ஒரு நிம்மதியும் பரவுகிறது.

“மிக மட்டமான சொற்களால் உங்களைத் திட்டியிருப்பேன்! பிரகாஷின் தந்தை என்பதால் என்னைக் கட்டுப்படுத்திக்கொண்டிருக்கிறேன். தெரிகிறதா?”

“சுமதி! அடக்கமாய்ப் பேசு. என்ன இருந்தாலும் பெரிய மனிதர் ஒருவரை நீ இப்படி மரியாதைக் குறைவாய் எடுத்தெறிந்து பேசக் கூடாதம்மா!” என்று ஜெயராமன் குறுக்கிடுகிறார்.

“யாரப்பா பெரிய மனிதர்? இந்த மனிதரா!  தூ! இவர் சராசரிக்கும் கீழானவர்!”

“சுமதி!  நாக்கை அடக்கிப் பேசு! … சர்! நீங்கள் என் மகளைத் தப்பாக எடை போட்டுவிட்டீர்கள்.  தன்  அன்பைப் பணத்துக்கு விலை பேசுகிற அளவுக்கு அற்பமானவளாக நாங்கள் அவளை வளர்க்கவில்லை. நாங்கள் ஏழைகளாக இருக்கலாம்.  ஆனால் கண்ணியமானவர்கள்.  என் மகள் மேலும் காரமான சொற்களால் உங்களைத் தாக்குவதற்கு முன்னால் நீங்கள் இங்கிருந்து போய்விட்டால் நன்றாக இருக்கும்!” – இவ்வாறு கூறும் ஜெயராமன் நக்கலாய் அவரைப் பார்த்துக் கை கூப்புகிறார்.

“சற்று முன் என்ன சொன்னீர்கள்? நாடகம் என்று தானே? உண்மையில் நாடகம் போடுவதெல்லாம் நீங்கள்தான்!  உங்கள் மகன் என்னை மணக்க நீங்கள் சம்மதித்துவிட்டதாய் முதலில் சொன்னீர்கள். பிறகு என்னை விலகிக்கொள்ளச் சொன்னீர்கள். என் மீது வீண் பழி சுமத்தப் பார்க்கிறீர்கள். பணத்துக்கு மசிந்துவிட்ட கெட்ட பெண் உனக்கு வேண்டாம் என்று உங்கள் மகனிடம் சொல்லி அவர் மனத்தை மாற்றி, இந்தத் திருமணத்தை நிறுத்துவதே உங்கள் திட்டம்!”

முகம் வெளிறி விட்டாலும், ஒரு புன்சிரிப்புடன் சமாளித்துக்கொள்ளும் கிஷன் தாஸ், “பெண்ணே! நான் சொல்லுவதைக் கொஞ்சம் கேள். பத்து லட்சம் என்பது எவ்வளவு பெரிய தொகை! ஏற்கெனவே சொன்னபடி, தொகையை இரட்டிப்பாக்குகிறேன். உன் வாணாள் முழுவதற்கும் அது உனக்குப் பேருதவியாக இருக்கும். முட்டாள்தனமாக அதை மறுத்து உதறாதே! என் மகனின் வருங்காலமே எனக்கு அதிக முக்கியமானது. அதனால்தான் நான் இந்த முடிவுக்கு  வந்தேன்!” என்கிறார்.

சினத்தால் மேலும் விரிந்த விழிகளுடனும், நடுங்கும் உடலுடனும் அவரை நோக்கி ஓரடி எடுத்து வைக்கும் சுமதி, மிக உயர்ந்த குரலில், “இன்னும் அதிகமான ரூபாய் நோட்டுகளைப் பெட்டியில் திணித்துக்கொண்டு மறுபடியும் இங்கு வந்து நிற்காதீர்கள், மிஸ்டர் கிஷன் தாஸ்!  உங்களது பெருந்தொகையை லஞ்சமாய்ப் பெற்றுக்கொண்டு நான் உங்கள் விருப்பப்படி நடப்பேன் என்று கனவில் கூட எதிர்பார்க்காதீர்கள். நான் மேலும் மோசமா                   க நடந்து கொள்ளுவதற்கு முன்னால் இங்கிருந்து மரியாதையாய்ப் போய்விடுங்கள்! உங்களின் இடத்தில் வேறு எவரேனும் இருந்திருந்தால்………” என்று மிரட்டும் தொனியில் கூறி நிறுத்துகிறாள்.

“என் இடத்தில் வேறு எவரேனும் இருந்திருந்தால்? அதுதான் ஏற்கெனவே சொல்லிவிட்டாயே – மிக மட்டமான சொற்களால் உங்களைத் திட்டியிருப்பேன் என்று?” என்று கேட்டுவிட்டு அவர் சிரிக்கிறார்.

பற்களைக் கடிக்கும் சுமதி, “உங்களைப் போன்ற போக்கிரிகளுக்கு அது மட்டுமே போதும் என்று நினைக்காதீர்கள்! நீங்கள் மட்டும் பிரகாஷின் தந்தையாக இருந்திராவிட்டால் நான் உங்களைத் தூக்கிக் கடாசியிருந்திருப்பேன்! எனக்குக் கராத்தே தெரியும், மிஸ்டர் கிஷன் தாஸ்!” என்று கூவுகிறாள்.

கைப்பெட்டியை மூடி வைக்கும் கிஷன் தாஸ் யாரும் சற்றும் நினைத்துப் பாராதபடி இரண்டு கைகளையும் பலமாய்த் தட்டுகிறார். அவரது திடீர்க் கோமாளித்தனத்தின் அடிப்படையைப் புரிந்துகொள்ள முடியாமல் மூவரும் திகைத்துப் போய் அவரைப் பார்க்கிறார்கள்.

jothigirija@live.com

Series Navigationகாதலிக்கச்சொல்லும் வள்ளுவர்வாங்க பேசலாம்!
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *