வேண்டாம் அந்த முரட்டுப் பெண்! – 8

This entry is part 2 of 11 in the series 16 ஏப்ரல் 2017

 

 

(ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம்)

 

8.

          பின்புறமாக முதுகை வளைத்து இடுப்பைப் பிடித்துக்கொண்டு பெரிதாய்ச் சிரித்து முடித்த பின் இயல்பு நிலைக்குத் திரும்பும் கிஷன் தாஸ், “உங்களைத் தூக்கிவாரிப் போட்டுவிட்டதல்லவா எனது இந்தச் சிரிப்பு? என்னைக் கிறுக்கன் என்று கூட நினைத்திருப்பீர்கள்தானே!  … இல்லை. இல்லவே இல்லை!  என் வருங்கால மருமகளுக்கு நான் வைத்த பரீட்சை அது!  மிகப் பிரமாதமாக அதில் நீ தேறிவிட்டாய் என் வருங்கால மருமகளே!” என்று கூறிப் புன்னகை புரிகிறார்.

அவரை முறைத்துப் பார்க்கும் சுமதி, “என்னது! பரீட்சையா! எனது நாணயத்தைப் பரீட்சை வைத்து யாரும் உரசிப் பார்ப்பது எனக்குச் சற்றும் பிடிக்காத விஷயம்!” என்கிறாள்.

“உனது இந்த நிலைப்பாட்டை நான் பெரிதும் போற்றுகிறேன், அருமைப் பெண்ணே! … மிஸ்டர் ஜெயராமன்! நான் இப்போது சொல்லப் போவதைத் தயவு செய்து கவனமாய்க் கேளுங்கள். இந்தியாவின் மிகப் பெரிய தொழிலதிபர்களில் நானும் ஒருவன். என் மகனை வளைத்துப் போடப் பல பெண்கள் முயன்றதுண்டு.  ஆனால், அவனுக்கு அப்போதெல்லாம் அதில் நாட்டம் இருந்ததில்லை.  மேலும், அவர்களுக் கெல்லாம் பணமும் செல்வாக்குமே குறி என்பதும் எங்களுக்கு விரைவில் விளங்கியது. நீங்கள் எங்களுக்குத் துளியும் அறிமுகம் இல்லாத அன்னியர்களாகவும் நடுத்தரக் குடும்பமாகவும் இருந்ததால் அவன் தேர்ந்தெடுத்த பெண்ணை ஏற்பதில் அதிகக் கவனமாய்ச் செயல்பட வேண்டி வந்தது. எனவே தான்….”

“ஒரு விலைமகளுக்கு வைப்பது போன்ற பரீட்சையை எனக்கும் வைத்துவிட்டு அதை நியாயப் படுத்தவும் முற்படுகிறீர்கள் போலும்!” என்று சுமதி ஆத்திரத்துடன் வினவுகிறாள்.

ஜெயராமன், “சுமதி! என்ன பேசுகிறாய் நீ? அவர் நியாயமாகத்தான் பேசுகிறார்.  தன்னலம் மிக்க ஒரு பெண் கீழான நோக்கத்துடன் தன் குடும்பத்துக்குள் நுழைந்து விடப் போகிறாளே என்னும் கவலையால் அவர் கவனமாக இருப்பதில் குறை காணக் கூடாது….. சர்!  சுமதியின் கடுமையான பேச்சுக்கு நான் மன்னிப்புப் கேட்டுக்கொள்ளுகிறேன். தயவு செய்து அவளை மன்னித்துவிடுங்கள்!” என்று இடைமறிக்கிறார்.

கிஷன் தாஸ், “தேவையில்லை, மிஸ்டர் ஜெயராமன்! உண்மையில் நான் சுமதியைப் பாராட்டுகிறேன்! அவள் புறத்தோற்றத்தில் மட்டுமல்லாமல், அகத்திலும் அழகானவள்!  என் மகனின் தேர்வு மிகவும் போற்றத் தகுந்ததே! … சுமதி! இந்தக் கிழவனை மன்னித்துவிடு!” என்று மென்மையான குரலில் கூறுகிறார்.

அவரது விளக்கத்தையும் அதன் சார்பான கோரிக்கையையும் ஏற்பதா மறுப்பதா என்பது பற்றிய உடனடியான முடிவுக்கு வர  முடியாமல் சுமதி சற்றே திகைக்கிறாள்.

“சுமதி! ஒன்றும் சொல்லாமல் ஏன் சிலை மாதிரி நின்றுகொண்டிருக்கிறாய்? மன்னிப்பதற்கு ஒன்றும் இல்லை என்றும் அவரது கவலை நியாயமானதுதான் என்றும் அதைப் பாராட்டுவதாகவும் சொல்லேன்! நீ சிந்திய கடுமையான சொற்களுக்காக மன்னிப்புக் கேட்டு அவர் காலில் விழுந்து வணங்கு, சுமதி! ….சர்! தயவு செய்து சுமதியை மன்னித்துவிடுங்கள். அவளது கடுமையான பேச்சையும் மேல்போட்டுக்கொள்ளாதீர்கள்!” என்று ஜெயராமன் கெஞ்சுதலாய்க் கிஷன் தாசிடம் கூறுகிறார்.

ஜெயராமனின் அறிவுரையை ஏற்கும் சுமதி, “என்னை மன்னித்துவிடுங்கள், மாமா!  நான் மிகவும் புண்பட்டுப் போனதால் அப்படி யெல்லாம் பேசிவிட்டேன்.  உங்கள் பணத்தின் பின்னால் அலையும் ஒரு சராசரிப் பெண்ணாக என்னை நீங்கள் மதிப்பிட்டுவிட்ட வேதனையிலும் எரிச்சலிலும் கடுமையாயப் பேசிவிட்டேன்..!” என்று தணிந்த குரலில் மன்னிப்புக் கோரியவாறு அவர் முன்னால் குனிகிறாள்.

கிஷன் தாஸ் தம் கால்களைப் பின்னுக்கு இழுத்துக்கொள்ளுகிறார்.

“வேண்டாம், வேண்டாம், என் அருமைப் பெண்ணே! எதற்கு இந்தச் சம்பிரதாயமெல்லாம்?  நான் பிரகாஷின் தந்தை என்பதன் பொருட்டு நீ என்னை வணங்குவதானால், என் ஆசிகளைப் பெறுவதற்காக, அதை உங்கள் திருமணத்தின் போது, இந்திய மருமகள்கள் செய்வது போல் நீயும் செய்யலாம். இப்போது வேண்டாமே!”

“இருக்கட்டும், சர்! அவளைத் தடுக்காதீர்கள்.  இப்போதும் நீங்கள் அவளை ஆசீர்வதிக்கலாம்.”

சுமதி தரையில் முட்டிகளும் கைகளும் பதிய அவர் முன் விழுந்து வணங்குகிறாள். கிஷன் தாஸ் தம்மிரு கைகளையும் கூப்பியபடி கண்களை மூடியவாறு வேண்டுதலோடு ஆசீர்வதிக்கிறார்.

”இப்போது காப்பி குடிக்கலாம்தானே?” என்று வணங்கி எழுந்த பின் சுமதி அவரை நோக்கிப் புன்னகையுடன் கேட்கிறாள்.

”கண்டிப்பாக! மதராஸ் காப்பி எனக்கு மிகவும்  பிடிக்கும். இந்தியாவில் வேறு எங்கும் விட இங்குதான் காப்பி அதிகச் சுவை!”

சுமதி பின் தொடர, ஜானகி அடுக்களைக்குள் நுழைகிறாள். சற்று நேரத்தில் சுமதி இரண்டு காப்பிக் கோப்பைகளுடன் கூடத்துக்குத் திரும்புகிறாள். இருவரிடமும் கோப்பைகளைத் தருகிறாள்.

காப்பியைச் சுவைத்துப் பருகியவாறே, “உனக்கு?” என்று கிஷன் தாஸ் கேட்கிறார்.

“சற்று முன்னால்தான் நான் குடித்தேன். இப்போது மறுபடியும் காப்பி குடித்தால் பசி மந்தித்துப் போகும். அதனால்தான்!”

“உங்களுக்கு அசவுகரியம் ஏதுமில்லை யென்றால், நீங்கள் இன்று மதியம் இங்கே உணவு அருந்தலாம், சர்! நான் சுமதியை இன்று சமைக்கச் சொல்லுகிறேன். அவள் நன்றாகச் சமையல் செய்வாள்!”

சிரிக்கும் கிஷன் தாஸ், “சுமதி சமையல்கட்டுக்குள் நுழைய வேண்டிய அவசியமே இருக்காது, மிஸ்டர் ஜெயராமன்! எங்கள் வீட்டில் ஒரு மிக நல்ல சமையல்காரர் இருக்கிறார். அவர்தான் உண்மையில் தாயில்லாப் பிள்ளையான பிரகாஷை அவனது சின்னஞ்சிறு வயதிலிருந்தே வளர்த்தவர்….”  என்கிறார்.

”ஆமாம். சுமதி சொல்லியிருக்கிறாள் -பிரகாஷின் சின்னஞ்சிறு வயதிலேயே தாயார் இறந்து விட்டதாயும்,  நீங்கள் அவர் பொருட்டு மறு மணம் செய்துகொள்ளவில்லை என்றும்!”

“ஆமாம். மாற்றாந்தாய் என்று ஒருத்தி வந்தால் அவனைக் கொடுமைப் படுத்தினால் என்ன செய்வது எனும் அச்சத்தால் நான் மறுமணம் செய்துகொள்ளவில்லை. எல்லா மாற்றாந்தாய்களும் அப்படி இல்லைதான். இருந்தாலும் பிரகாஷ் எனக்கு ஒரே மகன் என்பதால் நான் விஷப் பரீட்சையில் இறங்க விரும்பவில்லை!”

“உண்மையில் நீங்கள் பெருந்தியாகம் தான் செய்திருக்கிறீர்கள்!”

அப்படி யொன்றும் இல்லை எனும் பொருள் ததும்பக் கையசைக்கும் கிஷன் தாஸ், “தியாகம் எனும் பெரிய சொல்லை யெல்லாம் சொல்லாதீர்கள், மிஸ்டர் ஜெயராமன்! என் கடமையை நான் செய்தேன். அவ்வளவுதான்.  .. சுமதி! காப்பி மிக நன்றாக இருந்தது…. நான் கிளம்பட்டுமா?” என்கிறார்.

“மதிய உணவு இங்கே சாப்பிடலாம் என்றேனே!”

“மன்னிக்க வேண்டும். சோழா ஓட்டலுக்கு நான் உடனே போயாக வேண்டும். அங்கே சில தொழிலதிபர்களோடு எனது சந்திப்புக்கு நேரம் கொடுத்திருக்கிறேன்!”

“சரி… நீங்கள் இங்கே எப்படி வந்தீர்கள்? காரிலா இல்லாவிட்டால் டாக்சியிலா?”

“டாக்சி! அதை இரண்டு வீடுகளுக்கு அப்பால் நிறுத்தச் சொன்னேன். இப்போது அது உங்கள் வீட்டு வாசலுக்கு வந்திருக்கும்,” எனும் கிஷன் தாஸ், அடுக்களைப் பக்கம் பார்த்தபடி, “உங்கள் மனைவியை நீங்கள் அறிமுகம் செய்து வைக்கவில்லையே!” என்கிறார்.

“ஜானகி! ஒரு நிமிஷம் இங்கே வந்து விட்டுப் போ!”

ஜானகி சிரிப்பற்ற முகத்துடன் அங்கு வந்து நிற்கிறாள். மரியாதை நிமித்தம் கிஷன் தாசைப் பார்த்துக் கும்பிடுகிறாள்.

“என் மனைவி, ஜானகி! … இவர் மிஸ்டர் பிரகாஷின் தந்தை… நீ இந்நேரம் தெரிந்துகொண்டிருந்திருப்பாய்!…”

கிஷன் தாசும் பதிலுக்கு ஜானகியை வணங்குகிறார்.

தம் கைப்பெட்டியை மூடித் தூக்கிக்கொண்டு அவர் எழுந்துகொள்ளுகிறார்: “நான் வருகிறேன். பிரகாஷைக் கலந்து ஆலோசித்த பின் திருமணத்துக்குத் தேதி சொல்லுகிறேன். உங்கள் வசதிப்படியும் அதை நாம் பிறகு பேசித் தீர்மானிக்கலாம்.  … வருகிறேன், குழந்தாய்! நான் பேசினது எதையும் மனத்தில் வைத்துக்கொள்ளாதே, சுமதி!”

சுமதி புன்னகை புரிகிறாள். அதன் பின் அவளும் ஜெயராமனும் வாசல் வரை சென்று அவரை வழி யனுப்புகிறார்கள்.

இருவரும் உள்ளே வந்ததும் ஜானகி அவர்களோடு ஒரு சொற்போருக்குத் தயாராகிறாள்.

கணவரை முறைத்துப் பார்த்து, “உங்களின் அந்தப் பெரிய மண்டடையில் இருப்பது மூளையா, களிமண்ணா? அந்த ராஸ்கலின் முன்னால் விழுந்து வணங்கும்படி நீங்கள் சுமதிக்கு எப்படிச் சொல்லப் போயிற்று? நம் சுமதியைப் பற்றி எவ்வளவு மட்டமாக ஆந்த ஆள் எடை போட்டிருக்கிறார்!” என்கிறாள் அதட்டலாக.

புன்னகை செய்யும் ஜெயராமன், “இந்தச் சம்பந்தமே வேண்டாம் என்று முடிவு செய்கிற அளவுக்கு சுமதிக்கும் எனக்கும் அந்த மனிதர் மேல் கோபம் வரும் என்று நீ எதிர்பார்த்தாய்! அப்படி இல்லாமல் போகவே, உனக்குக் கோபம் பொத்துக்கொண்டு வருகிறதாக்கும்!” என்கிறார் நக்கலாக.

“பின்னே என்ன? அந்தக் குடும்பம் ஒரு பண்பான குடும்பம் இல்லை என்று தோன்றுகிறது.  அவர்கள் கிறிஸ்தவர்கள் என்பதால் நான் ஆட்சேபிப்பதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்! அவர் நடந்துகொண்ட விதம் எனக்குப் பிடிக்கவே இல்லை. ந7ம் பெண்ணுக்குப் பரீட்சை வைக்க இவர் யாராம்? அது சரி என்றால், நாமும் அந்தப் பையனைச் சோதிக்க வேண்டாமா?”

சிரிக்கும் ஜெயராமன், “ரொம்பவும் சரி. அதை நீயே செய்யலாம், ஜானகி! அவனை நான் இங்கே வரவழைக்கிறேன். நம்மோடு அவன் சில நாள் தங்கட்டும். நீயே அவன் எப்படி, என்ன, ஏது என்பதை யெல்லாம் கவனித்துக் கண்டுபிடி!” என்கிறார்.

பொங்கிவரும் சிரிப்பை ஜானகி பார்த்துவிடக் கூடாது என்பதற்காக  ஒரு நாளிதழை எடுத்துத் தன் முகத்துக்கு எதிரே சுமதி பிடித்துக்கொள்ளுகிறாள்.

அடக்க முடியாத ஆத்திரத்துடன், “அது மாதிரியான ஒரு முட்டாள்தனத்தைச் செய்துவிடாதீர்கள்! யாராவது கல்யாணத்துக்கு முன்னால் ஒரு பையனைத் தங்கள் பெண்ணோடு பழகவிடுவார்களா! அது நம் மரபிலேயே கிடையாது! உங்களுக்கு என்ன ஆயிற்று! எனக்குப் புரியவில்லை!” என்று கத்துகிறாள்.

“ஓ! அப்படியானால் அவனை நம் சுமதி கல்யாணம் செய்துகொள்ளுவதில் உனக்குச் சம்மதம்தான்!”

“யார் அப்படிச் சொன்னார்கள்?”

“நீதானே சொன்னாய் – ’கல்யாணத்துக்கு முன்னால்’ என்று! அப்படியானால் கல்யாணம் நடக்கப் போகிறது என்றுதானே அர்த்தம்?”

“குதர்க்கம் பேசாதீர்கள்! ஒரு பிரும்மசாரிப் பிள்ளை யெல்லாம் இந்த வீட்டில் வந்து தங்கக் கூடாது. தெரிந்ததா?”

“யாரும் அவனைக் கூப்பிடப் போவதில்லை, ஜானகி! அந்த அளவுக்கெல்லாம் நான் போவேனா? சும்மா உன்னைக் கிண்டினேன்!”

“உங்களுக்கும் அந்தக் கிறிஸ்தவக் குடும்பத்தில் சம்பந்தம் செய்துகொள்ள அடியோடு பிடிக்கவில்லை! நான் சம்மதிக்க மாட்டேன் என்பதால் உங்கள் உண்மையான கருத்தைச் சொல்லாமல் ஒதுங்கிக்கொண்டு உங்கள் பெண்ணிடம் நல்ல பெயர் வாங்கிக்கொண்டீர்கள்! சுமதியும் நானும் சண்டை போடுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்! என் விருப்பப்படியே விஷயம் முடியவேண்டும் என்பதுதான் உங்கள் உண்மையான விருப்பமும்! உங்கள் பெண்ணிடம் நல்ல பெயர் வாங்குவதற்காக என்னைப் பலிகடா வாக்கியிருக்கிறீர்கள்! தெரியாதா என்ன?”

“முதலில் நீ சொல்லுவது போல் எனக்கும் பிடிக்கத்தான் இல்லை.  ஆனால் பிறகு ஆழ்ந்து யோசித்துப் பார்த்த போது, சுமதியின் மகிழ்ச்சிக்காக அவளை ஆதரிக்கும் முடிவுக்கு வந்தேன். காலம் மாறிக்கொண்டிருக்கிறது, ஜானகி! ஒரு பசுமாடு இன்னொரு பசுமாட்டை அது ஹிந்து மாடா, முஸ்லிம் மாடா என்று கேட்பது போல் ஒரு கணம் கற்பனை பண்ணிப் பார். காக்கைகளில் யூதர் இனக் காக்கைகள், கிறிஸ்தவ இனக் காக்கைகள் என்று உண்டா! விலங்குகளிடையே நிறவெறி இருக்கிறதா? எப்போதாவது ஒரு வெள்ளை நிறத் தாய்ப் பசு தன் வெள்ளை நிறக் குட்டி கறுப்பு நிறக் காளையோடு சேரக்கூடாது என்று தடை போட்டதுண்டா?”

இவ்வாறு ஜெயராமன் கேள்விகளை எழுப்பியதும் சுமதி அடக்க மாட்டாமல் இரைந்து சிரிக்கிறாள். தான் சிரிப்பது ஜானகிக்குப் பிடிக்காது என்பது தெரிந்தும் அவளால் சிரிப்பை அடக்க முடியவில்லை. இதனால் ஜானகி எரிச்சல் அடைகிறாள்.

“உங்கள் பெண் எதற்கு இப்படி விழுந்து விழுந்து சிரிக்கிறாள்?”

அப்போதும் சுமதி சிரிப்பதை நிறுத்தாமல் இருக்கிறாள். இதனால் ஜெயராமன் அவளை ஆவலுடன் ஏறிட்டுப் பார்த்து, “எதற்கு இப்படிச் சிரிக்கிறாய், சுமதி? காரணம் சொன்னால் நானும் சிரிப்பேன்!” என்கிறார்.

தொடர்ச்சியாய்ச் சிரித்ததால் சுமதியின் கண்களில் நீர் சுரக்கிறது. கடைசியில் சிரிப்பதை நிறுத்தும் அவள். “அது ஓர் அசட்டுத்தனமான கற்பனை, அப்பா! அதனால் சிரிப்பு வந்தது!” என்கிறாள்.

“உனக்கும் அசட்டுத்தனத்துக்கும் உள்ள சம்பந்தம் தெரிந்த விஷயும்தானே?” என்று ஜானகி இடைவெட்டுகிறாள்.

“நிறுத்து, ஜானகி! அவளை மட்டந்தட்டுவதே உனக்கு வேலையாய்ப் போயிற்று!… நீ சொல்லு, சுமதி! என்ன கற்பனை செய்தாய்?”

“ஒரு பசு இன்னொரு பசுவை,”நீ ஹிந்துவா, முஸ்லிமா?” என்று கேட்பதாய் நீங்கள் சொன்னதும், ஒரு ஹிந்துவைப்போல் உடை யணிந்துள்ள பசுவையும், ஒரு முஸ்லிமைப் போல் உடையணிந்த பசுவையும் கற்பனை செய்து பார்த்தேன். என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை!”

ஜெயராமனும் பெரிதாய் வாய்விட்டுச் சிரிக்கிறார்: “சிரிப்பு மூட்டும் கற்பனைதான்! காக்கைகளிடையே நிறவெறி இருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால், எல்லாக் காக்கைகளுமே கறுப்பு!”

சுமதியும் சேர்ந்து சிரிக்கிறாள். ஜானகிக்கும் சிரிப்பு வந்தாலும், அதை மறைக்க அவள் தன் முகத்தைத் திருப்பிக்கொண்டு அங்கிருந்து நீங்குகிறாள்.

“நல்ல வேளை! பறவைகளிடையேயும், விலங்குகளிடையேயும் ஜாதி-மதப் பிரிவுகள் இல்லை!” என்று சுமதி கூறும் போது தொலைபேசியின் மணி அடிக்கிறது. ஜெயராமன் ஒலிவாங்கியை எடுத்துப் பேசுகிறார்: “ஹல்லோ, சர்! சொல்லுங்கள். இன்னொரு முக்கியமான விஷயம் சொல்ல விட்டுப் போய்விட்டதா! சரி, சர், இன்று மாலை வருகிறீர்களா!  வாருங்கள். .. இன்றிரவு நம் வீட்டில் சாப்பிடலாமே! … முடியாதா?  சாப்பிட்டால் எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும்…. நாளை அதிகாலை கிளம்புகிறீகளா? சரி, சர். என்ன முக்கியமான விஷயமோ என்னும் ஆவலுடன் நாங்கள் காத்துக்கொண்டிருப்போம்… வாருங்கள்… ” – சிந்தனைக் கோடுகள் அப்பிய நெற்றியைச் சுருக்கியபடி ஜெயராமன் ஒலிவாங்கியைக் கிடத்துகிறார்.

“யாரப்பா? மிஸ்டர் கிஷன் தாஸ்தானே?” என்று சுமதி விசாரிக்கிறாள்.

“ஆமாம், சுமதி. ஏதோ இன்னும் ஒரு முக்கியமான விஷயம் பற்றிப் பேசவேண்டுமாம். இன்று மாலை வருகிறாராம். அடுத்து என்ன வெடிகுண்டைத் தூக்கிப் போடப் போகிறாரோ தெரியவில்லை!”

“நாமும் பதிலுக்கு ஒரு வெடிகுண்டைத் திருப்பிப் போட்டால் போச்சு! அவ்வளவுதானே?” என்று கூறிவிட்டு அவள் சிரிக்கிறாள்.

எனினும் இருவரும் சிந்தனையோடு ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளுகிறார்கள்.

jothigirija@live.com

Series Navigationவெளி ரங்கராஜனின் ‘இலக்கிய வாசிப்பும் நாடக வாசிப்பும்’ நூல் அறிமுகக் கூட்டம்சினிமா விமர்சனம் – பயிற்சிப்பட்டறை
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *