வேலி – ஒரு தமிழ் நாடகம்

This entry is part 1 of 23 in the series 4 அக்டோபர் 2015

DSC_0197

நாடகம் தொடங்கும்போது ஒரு பெண் மிகவும் பதட்டமாக போனில் தன் அம்மாவுடன் பேசிக் கொண்டிருக்கிறாள். அவள் பெயர் ஜெயா. தன் மகன் சிறுவன் மருத்துவமனையில் இருக்கிறான் என்பதும், அவன் நிலை அவ்வளவு சரியாக இல்லை என்பதும், அந்தப் பெண் தன மகனின் உடல்நிலை பற்றி மடுமல்லாமல், அவனைக் குறித்த வேறு கவலை கொண்டுள்ளாள் என்று அறிகிறோம். அந்தக் குழந்தை உடல் நிலை சரியாக ஆகிவிட்டாலும் மீண்டும் பெற்றோரிடம் வர வாய்ப்பில்லா சூழ் நிலை உருவாகக் கூடும் எனபது அவள் பதட்டத்திற்குக் காரணம். அந்தச் சூழ்நிலை ஏன் எப்படி வரக் கூடும் என்பது நாடகம் வளரும் போது தெரிகிறது.

நாடகம் நிகழ்வது அமெரிக்காவில் உள்ள ஒரு நகரில். இந்தியாவிலிருந்து இடம் பெயர்ந்து கணினித் துறையில் பணி புரியும் ராஜனும், அவன் மனைவியும் தான் இந்த சிக்கலில் மனம் கலங்கி இருக்கிறார்கள் என்று அறிகிறோம்.

குழந்தை குலுக்கப் பட்டு (shaken baby syndrome) அதிர்வுக்கு ஆட்பட்டு மூளைச் சிதைவு ஏற்படும் நிலை என்று தெரிய வருகிறது. குழந்தைக்கு உடல் நிலை சரியில்லை என்றால், அதனைக் காரணம் காட்டி ஏன் அரசு குடும்ப விவகாரத்தில் தலையிட வேண்டும்? அனாவசியமாக அரசாங்கம் மூக்கை நுழைக்கிறதா? ராஜன் இப்படித் தான் அமெரிக்க அரசாங்க செயல்பாட்டை விமர்சிக்கிறான்.

DSC_0220

அமெரிக்காவில் பொதுவாக குழந்தைகள் மருத்துவ மனைக்கோ அல்லது, தனி மருத்துவரிடமோ சென்றால், அந்தக் குழந்தைக்கு ஏற்பட்ட காயம் விபத்து அல்ல என்று மருத்துவர் சந்தேகம் கொண்டால் “குழந்தை பாதுகாப்புத் துறை” என்ற அரசாங்க அமைப்பிற்குத் தெரிவிக்க வேண்டும். அவர்கள் தீர விசாரணை செய்து குழந்தை பெற்றோரால் துன்புறுத்தப் படுகிறதா, அல்லது வேறு விதமாக குழந்தைகள் பற்றிய அலட்சியத்தினால் பாதிக்கப் பட்டதா என்று விசாரிப்பார்கள். குழந்தை வளர்க்க பெற்றோருக்குத் தகுதி இல்லை என்று முடிவு செய்தால் பெற்றோரிடமிருந்து குழந்தையை பிரித்து வளர்ப்புப் பெற்றோர் என்று பதிவு செய்து கொண்டுள்ளவர்களிடம் கொடுத்து விடுவார்கள். இந்த வளர்ப்புப் பேற்றோர் அரசிடம் மாத வருமானம் பெற்றுக் கொண்டு குழந்தைகளைக் கவனித்துக் கொள்ள வேண்டும்.

இந்த நிலை தம் குழந்தைக்கு வருமோ என்று கலங்கி நிற்கிறார்கள். ராஜனும் மனைவியும். ராஜன் குழந்தையை கோபத்தில் குலுக்கியது , இந்த பிரசினைக்குக் காரணம் என்று மருத்துவர்களும், குழந்தை பாதுகாப்புத் துறையும் சந்தேகிக்கின்றனர்.

DSC_0287

ராஜன்- ஜெயா தம்பதியினரின் நண்பர்கள் கோபால்-ரேகா விடம் இது குறித்துக் கேட்கின்றனர். அமெரிக்காவில் நீண்ட காலம் வசித்து வரும் கோபால்-ரேகா தம்பதியினர், ஒரு வழக்கறிஞரைக் கண்டு ஆலோசனை பெறுமாறு யோசனை சொல்ல, காந்தா லால்வாணி என்ற ஒரு வக்கீலிடம் செல்கின்றனர்.

 

ராஜன் மிகவும் கோபம் கொள்கிறான். அரசாங்கத்திற்கு இப்படி குடும்பப் பிரசினையில் குறுக்கிட உரிமை இல்லை என்று வாதிடுகிறான். ஆனால் லால்வாணி சமாதானம் செய்து, ஒரு விதமாக இந்தப் பிரசினையை எப்படி கையாள்வது என்று யோசனை தருகிறாள். இந்த வழக்கு முடிந்து பெற்றோர் பொறுப்புள்ள தம்பதியினர் தான் என்றும், பெற்றோராய் இருக்க அவர்களுக்குத் தகுதி உண்டு என்றும் நிரூபித்தால் தான் குழந்தை திரும்பவும் அவர்களுக்குக் கிடைக்கும் – அது வரையில் குழந்தை வளர்ப்புப பெற்றொரிடம் தான் இருக்கும் என்று கூறுகிறாள். இது ஜெயாவை மிகவும் துயரத்தில் ஆழ்த்துகிறது. குழந்தையைப் பிரிந்து இருப்பதை அவளால் கற்பனை கூடச் செய்து பார்க்க முடியவில்லை.

லால்வாணி இன்னொரு வழி இருக்கிறது என்று சொல்லி ராஜன்-ஜெயா தம்பதியினரின் நண்பர்கள் யாரும் ஒப்புக் கொண்டால் அவர்களிடம் குழந்தையை வழக்கு முடியும் வரையில் வளர்க்க விடலாம், அதற்கு குழந்தை பாதுகாப்புத் துறையிDSC_0231ன் அனுமதி கிடைக்க வாய்ப்பு உண்டு என்று கூறுகிறாள். இது ராஜன் தம்பதியினருக்கு ஒரு நம்பிக்கை அளிக்கிறது. குழந்தை இல்லாத கோபால் தம்பதியினர் நிச்சயம் இதற்கு ஒப்புக் கொள்வார்கள் என்று அவர்களை அணுகும் போது, ரேகா மிக மூர்க்கமாக மறுத்து விடுகிறாள். ராஜன் அடிப்படையில் முன் கோபமும், சுயநலமும் கொண்டவன் என்றும், அவன் தான் இந்த மூர்க்கச் செயலை செய்திருப்பான் என்றும் தீர்க்கமாய்க் கூறுகிறாள். அவன் தன் குற்றத்தை ஒப்புக் கொண்டு அதற்கான தண்டனையை அடைய வேண்டும் என்று வற்புறுத்துகிறாள். குழந்தையை அவள் நேசித்தாலும், ராஜனுக்கு தண்டனை தராமல், குழந்தையை வளர்க்க முடியாது என்று சொல்லிவிடுகிறாள். அவள் அப்படி கூற என்ன காரணம் , ராஜனை அவளுக்கு எப்படி இந்தக் கண்ணோட்டத்தில் தெரியும் என்பதற்கான உபகதை நாடகத்தின் ஒரு முக்கிய சரடு.

DSC_0247

ஜெயாவின் எல்லா நம்பிக்கைகளும் உதிர்ந்து போக அவள் துயரமும், கோபமும் கொண்டு ராஜனை எதிர்கொள்கிறாள். முடிவில் குழந்தை அவளுக்குக் கிடைத்ததா ராஜன் தான் தவறு செய்தானா, அப்படி செய்திருந்தால் அதை ஒப்புக் கொண்டானா என்பது உச்ச கட்டம்.

கதையை நான் விரிவாகப் பதிவு செய்ய காரணம் உண்டு. இது ஒரு யதார்த்த வாத நாடகம். பங்கு பெறுவோரின் நடிப்பு மிக அன்னியோன்னியமாக ஒருவரை ஒருவர் எதிர்கொண்டு, எதிர்வினை ஆற்றி அதன் மூலமாகத் தான் ஒவ்வொருவரின் குணாதிசியங்கள் வெளிப்பட முடியும். மிக ஈடுபாடு கொண்ட நடிப்பைக் கோரும் ஒரு நாடகம் இது. பங்கு பெற்ற அனைவருமே மிக அருமையாக தம் நடிப்பாற்றலை வெளிப்படுத்தியிருந்தார்கள்.

குறிப்பாக ஜெயாவாக நடித்த பரின் அஸ்லத்தின் துயரமும் , ஆற்றாமையும், கடைசிக் காட்சியில் வெளிப்படும் கோபமும் நடிப்பாற்றலின் எல்லைகளைத் தொட்டது. பார்வையாளர்களை முழுமையாக ஈடுபடுத்தி, தன் துயரத்தில் பங்கேற்க வைத்த நடிப்பு அது.

DSC_0282

ராஜனின் கதா பாத்திரம் சிக்கலான ஒன்று. அவனுக்கு குழந்தை மீது வெறுப்பு நிச்சயம் இல்லை, ஆனால் வேலைச்சுமை, இயல்பான முன் கோபம், சுயநலம், தன்னுடைய வறட்டு கௌரவத்தை நிலைநாட்ட மனைவி மீதும், குழந்தை மீதும் வெளிப்படுத்தும் வன்முறை- இது அடி, உதை போன்ற பௌதீக வன்முறைக்கு இட்டுச் செல்லாவிடினும், அது வன் முறைதான் – இதை வெளிப்படுத்துவதை ராஜீவ் ஆனந்த் சிறப்பாகச் செய்திருக்கிறார்.
உடல்காயத்தினை ஏற்படுத்தாத வன்முறை எப்படி காயமேற்படும் வன்முறைக்கு இட்டுச் செல்லக் கூடும் என்பதை நாடகம் குறிப்பால் உணர்த்துகிறது. இந்த பரிமாணங்களை முழுமையாக உள்வாங்கி ராஜீவ் ஆனந்த் மேடையில் வெளிப்படுத்தி இருக்கிறார்.

கோபாலாக நடித்த அமலும் , காந்தா லால்வாணியாக நடித்த விலாசினியும் மிகச் சிறப்பாக தம் பங்கை அளித்தனர்.
ரேகாவாக நடித்த டெல்பின் ராஜேந்திரன் மிக முக்கிய கதா பாத்திரம். ராஜனுக்கு எதிராக, அவன் சுயரூபத்தை வெளிப்படுத்த நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தும் கதாபாத்திரம் அவருடையது. அவருடைய மனச்சிக்கலை , முன்காலத்தில் ராஜனுடம் தனக்கு நேர்ந்த துயரத்தையும் ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தி ஆனால் அதனுடன் நிற்காமல், ராஜனுக்கு அவன் பொறுப்பை உணர்த்துவிக்கும் கதாபாத்திரம். ரேகாவிற்கு. மிக நேர்த்தியான நடிப்பு.

DSC_0301

நாடகத்தின் இயக்கம் மிக குறைந்த அளவு மேடை அலங்காரத்தில் கவனம் செலுத்தி, கவனம் முழுதும் நடிப்பிலும், கதாபாத்திரங்களின் மனப் போராட்டங்களிலும் ஈடுபட முற்பட்டு, அந்த அணுகுமுறையில் வெற்றியும் பெற்றிருக்கிறது. பிரணாப் பாசுவின் இயக்கம் மிக சரியான திசையில் நாடகத்தை நடத்திச் சென்றது.

அம்ஷன் குமாரின் மொழியாக்கம் நெருடல் இல்லாமல் இயல்பான வலுவான வசனங்களின் தீவிரத்தை முன்வைத்தது.

மிகவும் பாராட்ட வேண்டிய முயற்சி.

 

————————————————————–

இந்த நாடகம் அமெரிக்காவை நிலைக் களனாய்க் கொண்டது. இந்தியாவில் இதன் பொருத்தம் என்ன என்பது விவாதிக்க வேண்டிய விஷயம். இந்தியாவில் குழந்தை பாதுகாப்புத் துறை என்று எதுவும் இல்லை. இதுவே கூட இந்த நாடகம் விவாதிக்க வேண்டிய முக்கிய புள்ளி.

குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை , அன்பு என்று வழிகாட்டல் என்றும், அக்கறை என்றும் நாம் நியாயப் படுத்திக் கொண்டு இருக்கிறோம். சொல்லாலும், செயலாலும் குழந்தைகள் மீது செலுத்தும் வன்முறை பெற்றோரின் கடமை என்று கூடப் பேசத் தலைப் படுகிறோம். இதை  நாம் பரவலாக விவாதிக்க வேண்டும்.

இந்த நாடகம் எல்லா பள்ளிகளிலும் நடத்தப் படவேண்டும். பிள்ளைகளுக்காக அல்ல, பெற்றோர்களுக்காக. குழந்தை வளர்ப்பு பற்றியும், அறிந்தும் அறியாமலும், குழந்தைகளை புண்படுத்தும் மன நிலை பற்றி பெற்றோரிடம் ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக.

 

 

DSC_0212

வங்காள நாடகம் பலோக்

எழுதியவர் :சுதிப்தா பாமிக்

Cast :

ராஜீவ் ஆனந்த்    as  ராஜன்

பரீன் அஸ்லம்    as  ஜெயா

அமல்                          as  கோபால்

டெல்பின் ராஜேந்திரன்  as ரேகா

விலாசினி                       as  காந்தா லால்வாணி

ஆங்கில மொழிபெயர்ப்பு மற்றும் ஒளி அமைப்பு : சுனிபா பாசு.

தமிழில் : அம்ஷன்  குமார்.

மேடை நிர்வாகம் : மணிபாலன் , மனோ , பார்த்திபன்

 

Series Navigationசெம்மொழி கன்னடத்தின் ஹல்மிடி கல்வெட்டு
author

கோபால் ராஜாராம்

Similar Posts

5 Comments

  1. Avatar
    ஒரு அரிசோனன் says:

    மிகவும் பாராட்டப்படவேண்டிய முயற்சி. உலகெங்கும் தமிழ்முழக்கம் கேட்கச் செய்வீர் என்ற பாரதியின் கனவு நனவாகி வருவது மிகவும் மகிழ்ச்சியைச் தருகிறது.

  2. Avatar
    amal says:

    Hello sir, this is amal (gopal)
    Thank you very much for your critics , its really encourage us to move forward and insisting to do such attempts. Once again thank you.

  3. Avatar
    r. jayanandan says:

    வேலி நாடகத்தை, ஒவ்வொரு கல்லூரியிலும் நடத்தவேண்டும்.
    ஏனெனில் அங்குதான் இன்றைய இளைய தலைமுறையினர், படித்து முடித்துவிட்டு, திருமண வாழ்க்கையை தொடங்க உள்ளனர்.
    மேலும், வெளிநாடு செல்லவும் தயாராகின்றனர்.அவர்கள்தான் , நாளைய பெற்றோர்களாகவும் பவனி வரப்போகின்றவர்கள்.

    இன்றைக்கு, பெற்றோர்களாக உள்ளவர்கள், பெற்றோர்களிடம் பெல்டாலும்,அடிகோலாலும் அடிவாங்கியவர்களே !

    இரா. ஜெயானந்தன்.

  4. Avatar
    S.விக்டர் ஆல்பர்ட் says:

    அடேயப்பா!2015 இல் நடைபெற்ற ஒரு நாடகம். மனவியல் சம்பந்தப்பட்ட ஒரு கருவை எடுத்து வெகு நுட்பமாக கையாளப்பட்ட ஒரு நாடகம்.இந்தியாவில் இருந்தால் இது எப்படி சாத்தியம் என்று நினைக்க தோன்றுகிறது.
    கத்தி மேல் நடப்பதுபோல இருக்கிறது.பாராட்டுகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *